4ஆம் ஆண்டில் நமது இலக்கியச்சுடர்
படைப்புகளை periyaswamydeva@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி இதழின் வளர்ச்சிக்கு உதவுங்கள்

புதன், 1 ஜூலை, 2020

நூறடிச் சாலை


முனைவர் கிட்டு முருகேசன்

உதவிப் பேராசிரியர் , தமிழ்த்துறை

டாக்டர் என்.ஜி.பி. கலை மற்றும் அறிவியல் கல்லூரி(தன்.)

காளப்பட்டி சாலை, கோயம்புத்தூர் – 641 048

அலைபேசி : 9751809470, 8072794623

மின்னஞ்சல் : muruganthirukkural@gmail.com

 

            அன்று அவன் சரியாகத் தூங்கவில்லை. மனது முழுவதும் அதே நினைப்பு. காற்றாடியாகச் சுழன்று கொண்டே இருக்கும் மனித வாழ்வில் போராட்டங்களும், அதற்கான வேதனைகளும் சற்று அதிகம்தானே!

            காலை ஐந்து மணி முதலே ரொம்பப் பிஸியாகிவிடும் அந்தச் சாலை. பின்னலாடை நிறுவனத்தில் வேலைபார்க்கும் கூலித் தொழிலாளி ரவி. கருப்பான உருவம், வழுக்கைத் தலை, மெலிந்துபோன உடல், விலா எலும்புகள், தோள்பட்டை எலும்புகள் என உடலிலுள்ள எலும்புகள் அனைத்தும் இராணுவ வீரன் போருக்காக ஆயுதம் ஏந்தி நிற்பதைப் போன்று நிமிர்ந்து நின்றன. அதன் மீது இலகுவான ஆடையைப் போர்த்தியிருப்பது போன்று தோல் ஒட்டியிருந்தது. இரவு பகலாக வேலை செய்தால் பின்பு எப்படி? உடம்பில் சதை வளரும்.

                அதிகாலை எழுந்து பழைய சோற்றைத் தூக்குப்போசியில் அள்ளிப் போட்டுக்கொண்டு, தனது சைக்கிளையும் எடுத்துக்கிட்டு வேலைக்குக் கிளம்பிடுவான் ரவி.

                சைக்கிள் கூடப் போகமுடியாதப் போக்குவரத்து நெரிசலைச் சந்திக்கும் அந்த நூறடி சாலை. காலை எட்டு மணிக்கெல்லாம், அங்கு குழந்தையைக் கையில் வைத்துக்கொண்டுப் பிச்சை எடுப்பவர்கள் வந்து நின்றுவிடுவார்கள். அவர்கள் கையில் தட்டு இருக்கும், முதுகுப்புறத்தில் சுமையாகத் தொங்கும் ஓர் குழந்தையையும் பார்க்க முடியும். சில வணிகர்கள் வியாபாரம் செய்வதையும் காணலாம். அது! சொர்க்கத்திற்குச் செல்லும் வழி என்பதால்.

                சில சமயம் காதுகளில் ஒயரை மாட்டிக்கொண்டு பைக்கின் பெட்ரோல் டேங்கிற்கு சார்ஜ் ஏற்றுகிற வேலையைச் சில இளைஞர்கள் செய்துகொண்டிருப்பதைக் காணலாம். அவர்களுக்கு ஏதோ! சொர்க்கத்தில் இருப்பது போன்ற மகிழ்ச்சி; அந்த மிகப் பெரிய போக்குவரத்து நெரிசலிலும்....

                சிலர் பைக்கை வளைத்து, வளைத்து நான்கு சக்கர வாகனங்களை முந்திச் சென்று, அங்குள்ள வெள்ளைக் கோட்டைத் தாண்டி நிற்பர். அவர்களைக் கவனிக்காமல் செல்போனை காதில் வைத்துக்கொண்டு பேசுகிற காவல் அதிகாரியையும் அந்த, தங்க நாற்கரச் சாலையில் காணமுடியும்.

                மஞ்சள் நிற விளக்கு எரியாமல், பச்சை நிற விளக்கு எரிவதையும், சில சமயம் சிவப்பு நிற விளக்கு நீண்ட நேரம் எரிந்துகொண்டே இருப்பதையும் பார்க்கலாம். அதற்கு இந்த கான்ஸ்டபிள் என்ன செய்ய முடியும்? அது, மேலதிகாரிகளின் அலட்சியப் போக்கு.

                சிக்னலின் நேரம் முடிவதற்கு ஐந்து அல்லது எட்டு வினாடிகள் இருக்கும் போதே,  இருசக்கர வாகனத்தை இயக்கும் தனியார் நிறுவன ஆபீசர்களையும் காணலாம். இப்படிச் சாலை விதிகளைச் சரியாக மதித்துப் பயணம் மேற்கொள்ளும் படித்தவர்களைத் தினமும் கண்ணுற்றுக் காணும் பிரதானச் சாலை அது!

                அந்தப் பூலோகச் சாலையில் வடநாட்டுப் பெண்ணின் ஊமை நாடகத்தையும் பார்த்து ரசிக்கலாம். அவளது கையில் சொகுசுக் கார்களை அலங்கரிக்கும் வண்ணவண்ண மென்மையான பொம்மைகள். உடலின் மேனியில் போர்த்தியிருப்பது அழுக்குப் படிந்த கந்தலான ஆடை. தலையில் ஒரு முக்காடு, கழுத்துப் பகுதிக்கு ஆபரணமில்லை. அதற்குப் பதிலாக, ஐயர்கள் போடும் பூணூல் போல துணியால் தோள்பட்டையின் குறுக்கே ஒரு ஆபரணம் தொங்கிற்று. அதில் ஒரு குழந்தை; சிறு கை நீட்டி சிக்னலில் நின்றிருந்தவர்களைப் பார்த்து கண் சிமிட்டியது. அந்தப் பார்வை, இதுதானய்யா என் தாய் எனக்கு வாங்கி வைத்துள்ள மாணிக்கத்தொட்டில் என்று கூறுவதைப் போன்று புன்முறுவல் செய்தது.

                அந்தச் சாலையின் இருமருங்கிலும் வணிக வளாகங்களும் வீடுகளும் உண்டு. ஆம்! தென்புறம் வசதி படைத்தவர்கள் நிரம்ப இருந்தார்கள். வட புறம் பாமர மக்களின் குடிசைகள் இருந்தன. இதுவும் சென்னை கூவத்தை ஒட்டிய பகுதி போன்றுதான் இருக்கிறது. இதுவும் மேற்கு மலைச் சாரல் கொண்டு வந்த வரமாகத்தான் கருதுகிறார்கள் அங்குள்ள மக்கள்.

                அங்குள்ள  பாமர ஏழைக் குழந்தைகளின் விளையாட்டால், அந்தச் சாலையும் மாலை நேரங்களில் விளையாட்டு மைதானமாகிவிடும்.

                மண்ணையள்ளி விளையாடுவதும், பந்தடித்தாடுவதும், கண்ணாமூச்சு விளையாடுவதும் என அந்தச் சாலை போக்குவரத்து நெரிசலில் மட்டுமல்ல; குழந்தைகளின் விளையாட்டாலும் நெரிசல் ஏற்படுவதும் உண்டு.  

                ஆம்! ரோட்டில் குழந்தைகள் விளையாண்டால் வண்டிகளில் அடிபடாமலா இருப்பார்கள். உடனே கூட்டம் கூடிவிடும். பிறகு என்ன? போக்குவரத்து நெரிசல்தான். இங்குதான் ரவியின் குழந்தைகளும் விளையாடுவார்கள்.

                ரவிக்கு மூன்று குழந்தைகள் மூத்தவன் ஆறாம் வகுப்பு படிக்கிறான். அடுத்து பிறந்தவள் நான்காம் வகுப்பு படிக்கிறாள். இளையவன் ஆரம்பப் பள்ளியில் அழுவதையே படிப்பாகக் கொண்டிருக்கிறான். தாயைக் காணாத ஏக்கத்தால்.

                இவர்கள் அனைவருமே பெற்றோரின் வருமானத்திற்கு ஏற்ப அரசு பள்ளிக்கூடங்களிலேயே பயில்கின்றனர். ஏன்! அங்கும்தான்  , பி, சி, டி, சொல்லிக்கொடுக்கிறார்களே!

                மூன்று பிள்ளைகளின் படிப்பு, குடும்பச் செலவு எல்லாவற்றிற்கும் ரவி மட்டும் வேலைக்குப் போனால் போதுமா?

                கெளரி, கைத்தறி நிறுவனத்தில் வேலைபார்க்கும் கூலித் தொழிலாளி. கலியாணமான நாள்முதற்கொண்டு கணவனின் இன்பதுன்பங்களில் பங்கெடுத்துக்கொண்டு இல்லறம் நடத்தும் நல்லறத்தாள்.

                ஒரு நாள் அதிகாலை நேரம், ரவி வேலைக்குக் கிளம்பிவிட்டான். இரண்டு பிள்ளைகளைப் பள்ளிக்கூடத்திற்கு அனுப்பி வைத்துவிட்டு, இளையவனை இடுப்பில் எடுத்துக்கொண்டு, ஒரு கையில் தூக்குப்போசியைப் பிடித்துக்கொண்டு ஆரம்பப்பாடசாலையை நோக்கி நடந்தாள் கெளரி . 

                அந்தப் பையனை பாடசாலையில் விட்டுவிட்டு வேலைக்கு நேரமானதால் கிளம்பினாள். தன்னுடைய அம்மா போவதையே, திரும்பத் திரும்பப் பார்த்த அவன், உடனே அங்கிருந்து ஓடிவர ஆரம்பித்தான்.  அந்த நூறடி ரோட்டைக் கடந்து தாயைப் பார்த்து, அம்மா!....அம்மா!  என்று கத்தியபடி ஓடிவந்தான்.....

                காலை நேரம் என்றாலே பிஸியாக இருக்கும் சாலை அது!. கண்டைனர் லாரி, வால்பிடித்தார் போன்று சென்றுகொண்டேயிருக்கும். அவை அனைத்தும் தனியார் பைக் கடைகளுக்கு, இருசக்கர வாகனங்களை ஏற்றிக்கொண்டு வருபவைதான்.

                அங்கு! சாலையோரத்தில் மிதமான வேகம் என்றுதான் எழுதியிருந்தது. லாரிக்குள் இருக்கும் பதினெட்டு வயது வாலிபனுக்கு வேகத்தைத் தவிர மற்றது தெரியுமா?

                சத்தம் கேட்டுத்  திரும்பிப்பார்த்த கெளரி. அய்யய்யோ! என்று கத்தியபடி தூக்குப்போசியை கீழே எறிந்துவிட்டு ஓடிவந்தாள். ரோட்டைத் தேய்த்துக்கொண்டு, அந்தக் கண்டைனர் லாரி குழந்தையின் அருகில் வந்து நின்றது. அப்பாடா! என்று பெருமூச்சு விட்டாள் அவள். குழந்தையும் தெய்வமும் ஒன்றல்லவா?’ அதான் ஒன்றும் ஆகவில்லை..... !

                கெளரி, தான் நடு ரோட்டில் நின்று கொண்டிருப்பதையே மறந்துவிட்டாள். அந்தச் சாலையில் அதிவேகமாக வண்டி ஓட்டிச் சாகசம் செய்யும், ஒரு இளைஞனின் பைக், அவளின் மீது மோதியது. தூக்கி வீசப்பட்டாள். உயிருக்கு ஆபத்தான நிலையில் ரோட்டின் ஓரமாக விழுந்துகிடந்தாள். மகன் எழுந்திரிம்மா...... அம்மா.....அம்மா... எழுந்திரி...... ம்ம்ம்ம்.....ம் என்று கண்ணில் நீர் அருவியாய்க் கொட்டியது. சுற்றிலும் கூட்டம் கூடிவிட்டது.

                ஆம்! மீண்டும் அந்தச் சாலை போக்குவரத்து நெரிசலில் சிக்கிக்கொண்டது. இருபக்கமும் சாலை நிரம்ப வாகனங்கள். நடுவில் ஒரு ஜீவன் பூமிக்கும் வானுக்கும் அளவெடுத்துக்கொண்டிருந்தது.

                தண்ணீர் வேண்டுமாம்; வாய் அசைவில் கேட்டாள். சுற்றி நின்ற யாருக்கும் புரிந்துகொள்ள முடியவில்லை. அந்தக் குழந்தையைத் தவிர. புரிந்துகொண்டால் மட்டும் தண்ணீர் கொடுத்துவிடவாப் போகிறார்கள்.....!

                ஆம்! அந்த இளையவனின் கண்ணீர் அவளின் வாயில் விழுந்தது. நாக்கைச் சுழற்றிச் சுழற்றிச் சுவைத்தாள். பிள்ளையிட்ட அந்தக் கண்ணீர் வெதுவெதுப்பாய் இருந்தது. அது தொண்டைக்குழிக்குள் போய்விழுந்திருக்கும், பெரும் மூச்சு விட்டாள், உயிர் மூச்சுப் போனது.

          சாலையின் இருமருங்கிலும் வாகனங்கள் இடைமறித்ததால், எங்கோ! தூரத்திலிருந்து ஆம்புலன்ஸ் சத்தம் கேட்டுக்கொண்டே இருந்தது.

      இந்தச் சத்தம் தினமும் நூறடிச் சாலையில் கேட்டுக்கொண்டுதான் இருக்கிறது. மூன்று பிள்ளைகளையும் மடியில் போட்டுக்கொண்டு செவிமடுத்துக் கேட்டுக்கொண்டிருக்கிறான் ரவி.

ஆம்! கெளரியின் நினைவோடு.

                சாலையை விரிவுபடுத்திவிட்டோம்! விரிவுபடுத்திவிட்டோம்! என்று பெருமைப்பட்டுக்கொள்ளும் நெடுஞ்சாலைத்துத்துறையே! இதுதாணுங்க நூறடிச் சாலை.