4ஆம் ஆண்டில் நமது இலக்கியச்சுடர்
படைப்புகளை periyaswamydeva@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி இதழின் வளர்ச்சிக்கு உதவுங்கள்

புதன், 1 ஜூலை, 2020

கலங்கிய இதயம்



அந்த மரத்திற்கு

அடியில் நிற்பது

வேதனையையும்

எல்லையற்ற

சங்கடத்தையும் தந்தது

 

மேல் மூச்சு

கீழ் மூச்சு - என

பெரு மூச்சு விட்டுக்கொண்டாலும்

அவளைக் காண

காலங் காலமாகக்

காத்திருந்தத் தருணம்

அது

 

எப்படியாவது காதலித்துவிட வேண்டும்

மனைவியாக்கிக்கொள்ள வேண்டும் - என்று

தன் இறகுகளையெல்லாம்

நேர்த்தியாக

வெட்டியிருந்தேன்

 

என்

அலகினையும்

அழகாக

செதுக்கியும் இருந்தேன்

 

காலம்

எல்லாவற்றையும் மாற்றிவிடும்

என்பதை - நான்

எதிர்பார்க்க வில்லை

 

பார்வையின்

பரிபாசைகள் - என் மீது

தெளிக்கப் பட்டிருந்தது

 

       

பல நாள்

காத்திருப்புக்குப் பின்

என்னிடத்தில் பேசினாள்

அவள்

 

வாழ்க்கையின்

முதல் படி - நிறைந்து

திறந்திருந்தது

 

எங்கெங்கோ சென்றேன்

கிடைத்த

சிறு சிறுக் குச்சிகளை யெல்லாம்

அலகுகளால் கவர்ந்து

ஆர்வத்தோடு கட்டிய

முதல் கூடு

 

வெயிலின் தாக்கம்

வியர்வையால்

குளிக்க வைத்தது

மன்னிக்கவும்

அதில்

கண்ணீரும் கலந்திருந்தது

 

அவர்கள்

ஏன் இங்கு வந்தார்கள்

என்று எனக்கு தெரிய வில்லை

 

கையில்

கொண்டு வந்த கருவிகள்

கலக்கத்தினை ஏற்படுத்தியது

 

இதயத்தில்

குத்திக் கிழித்த

பெரும் வலி

 

ஒவ்வொரு கிளைகளும்

கண்முன்னே

வெட்டப்பட்டு

வீழ்ந்தது

 

சிலர்

அவற்றை

அடுக்கடுக்காக அடுக்கி

வைக்கின்றனர்

 

அவ்வடுக்கிலிருந்து

வீழ்ந்த கூடும்

கண்ணீர் துளிகளைத்

தானமாகத் தந்து

இறக்கிறது

 

வெயில் சுட்டெரித்தது

மேனியினை மட்டுமல்ல

இதயத்தையும்….

           

அவள்

இப்போது வரக்கூடும்…

 

மு.கவியரசன்,

முனைவர் பட்ட ஆய்வாளர்,

தூய சவேரியார் கல்லூரி (தன்னாட்சி)

பாளையங்கோட்டை. திருநெல்வேலி.

அழைக்க:7397164133. மின்னஞ்சல்: mkavi2491@gmail.com