4ஆம் ஆண்டில் நமது இலக்கியச்சுடர்
படைப்புகளை periyaswamydeva@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி இதழின் வளர்ச்சிக்கு உதவுங்கள்

புதன், 1 ஜூலை, 2020

தமிழ் எழுத்துகளின் மாத்திரை – விளக்கமும் பயன்பாடும்


தி. மோகன்ராஜ்

முனைவர்ப் பட்ட ஆய்வாளர்

இலக்கியத்துறை

தமிழ்ப் பல்கலைக்கழகம்

mohr_d12@yahoo.co.in

99947 81727


ஆய்வுச் சுருக்கம்

மொழியில் உள்ள எழுத்துகள் மாத்திரை என்னும் அலகால் அளக்கப்படுகின்றன. கால் மாத்திரை தொடங்கி அளபெடையில் நான்கு மாத்திரை வரையிலான எழுத்துகளின் அளவுகள் தமிழ் இலக்கணங்களில் சுட்டப்படுகின்றன. இக்கட்டுரை, மாத்திரை என்பதன் அடிப்படை விளக்கத்தை அளிப்பதுடன் வழக்கிலும் தொல்காப்பியம் குறிப்பிடும் செய்யுள் ஆக்கத்திலும் அதன் பயன்பாடு யாது என்பது பற்றியும் ஆராய்கிறது.


முக்கியச் சொற்கள்

எழுத்து, மாத்திரை, செய்யுள் உறுப்பு, நோக்கு என்னும் உறுப்பு


பொருள் - வடிவமும் பண்பும்

பொருள்களுக்கு (Objects) வடிவமும் வேறு பிற பண்புகளும் உள. வடிவம் என்பதும் பண்பினுள் அடக்கம் எனினும் மாத்திரை பற்றிய விளக்கத்திற்கான தேவை கருதி அதனைத் தனியாகக் கொள்ளலாம். ஒரு பொருளின் வடிவம் மற்றும் அதன் பிற பண்புகளை அறிந்த நிலையிலேயே அந்தப் பொருளைப் பற்றிய அறிவு முழுமையடைகிறது. சான்றாக, ஆண் யானை என்னும் பொருளை எடுத்துக்கொள்வோம். (ஆண் யானை பற்றி இங்குத் தரப்பட்டுள்ள விளக்கங்கள் முழுமையான விளக்கங்கள் அல்ல. புரிந்துகொள்ளலுக்காக ஒருசில மட்டுமே தரப்பட்டுள்ளன).                   ஆண் யானை நான்கு கால்களையும் ஒரு துதிக்கையையும் இரண்டு தந்தங்களையும் ஒரு வாலையும் உடையது என்பது அதன் வடிவமாகும். உயிர்த்தன்மை உடையது, சைவ உணவுகளை உண்ணக்கூடியது, வலிமையுடையது, நினைவாற்றல் உடையது, வேகமாக ஓடக்கூடியது என்பன அதன் பிற பண்புகளாகும். வேறொரு சான்றினையும் காணலாம். பந்து என்பது உருண்டை வடிவம் கொண்டது. ஆனால், உருண்டை வடிவம் கொண்ட பூமி, இலட்டு போன்றவை பந்தாக முடியா. வடிவத்தில் ஒத்திருப்பினும் வேறு பிற பண்புகளில் அவை மாறுபடுகின்றன. ஆகையால், அவை வேறு பொருள்களாகின்றன. எனவே, ஒரு பொருளை மற்றொரு பொருளிலிருந்து வேறுபடுத்திக் காட்டுவதற்கு அப்பொருள்களின் வடிவம் மற்றும் பிற பண்புகள் பற்றிய அறிவு அடிப்படைத் தேவையாகும். ஐம்புலன்களின் வழியாகப் பொருள்களின் வடிவத்தையும் பண்பினையும் நாம் அறிகிறோம்.

மனிதர்கள் பேசும் மொழி ஐம்புலன்களில் செவிப்புலனோடு தொடர்புடையது. செவிக்குப் புலனாகும் மொழியில் எழுத்துகள் அடிப்படை அலகுகளாக அமைகின்றன. மொழி என்பதே அடிப்படையில் ஒலிகளின் சேர்க்கைகளின்வழிப் பொருளை(Meaning) உணர்த்துவதாகும். எனவே, ஒலிக்கப்படும் எழுத்து என்பது மொழியின் அடிப்படைக் கூறாக அமைகிறது. செவிப்புலனாகும் எழுத்திற்கும் வடிவமும் பிற பண்புகளும் உள. சான்றாக,                    ‘அ’ என்னும் எழுத்தை நாம் ஒலிக்கும்போது அந்த ஒலிதான் அதன் வடிவமாகிறது. இஃது ஒலி வடிவம் எனப்படும்.               ‘அ’ என்று எழுதினால் அது ‘அ’வின் வரிவடிவம் எனப்படும். வரிவடிவினைக் கண்ணால் காணமுடியும். ‘அ’வின் இந்த ஒலிவடிவம்தான் அதை ‘இ’, ‘உ’ என்னும் ஒலிகளிலிருந்து வேறுபடுத்துகிறது. இந்த ‘அ’ என்னும் ஒலி வடிவத்திற்கு வேறு பண்புகளும் உள. அஃது ஓர் உயிரொலி, ஒரு மாத்திரை அளவு கொண்டது என்பன இதன் பிற பண்புகளாகும். இவ்வாறு எல்லா மொழியின் ஒலிகளையும் விளக்கலாம். இனி, மாத்திரை பற்றிக் காணலாம்.

 

மாத்திரை – விளக்கம்

மனிதர்களால் எழுப்பப்படும் ஒலிகள் மனித முயற்சியால் தோன்றுகின்றமையின் அவை நிலைபேறு உடையன அல்ல. ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே ஓர் ஒலியை நம்மால் ஒலிக்கவியலும். இந்த நிலையாமை பற்றி ‘முயற்சியின் பிறத்தலான் ஒலி நிலையாது’ என்று இளம்பூரணர் வேற்றுமையியலில் மூன்றாம் வேற்றுமைக்கான நூற்பா உரையில் குறிப்பிட்டுள்ளார். எனவே, ஒலிகளுக்குக் கால அளவு உள்ளது. இந்தக் கால அளவு என்பது ஒலிகளின் ஒரு பண்பாகும். இந்தக் கால அளவு, மாத்திரை என்னும் அலகால் அளக்கப்படுகிறது. நீளத்தை அளப்பதற்கு அடி, முழம் என்னும் அலகுகள் இருக்கின்றமை போன்று ஒலிக்கப்படும் ஒலியின்/எழுத்தின் காலம், மாத்திரை என்னும் அலகால் அளக்கப்படுகிறது. மேலும், மாத்திரை என்பது கண் இமைத்தல், கைந்நொடித்தல் என்னும் வழிமுறைகளால் அளக்கப்படுகிறது. ஓர் ஒலிக்கு/எழுத்திற்கு ஒலிவடிவம் உள்ளதைப் போன்று அதை ஒலிக்கும் கால அளவான மாத்திரை என்பதும் உண்டு. இந்த மாத்திரை வேறுபாடுதான் குறில், நெடில்களின் வேறுபாட்டிற்குக் காரணமாக அமைகிறது. ‘அ’விலிருந்து ‘இ’யைப் பிரித்தறிவதற்கு அதன் வடிவம் துணைபுரிவதைப் போன்று ‘அ’விலிருந்து ‘ஆ’வைப் பிரித்தறிவதற்கு அதன் மாத்திரை துணைபுரிகிறது.

‘அ ஆ ஆயிரண்டும் அங்காந்து இயலும்’ என்று தொல்காப்பியம் குறிப்பிடுகிறது. ‘அ’வும் ‘ஆ’வும் ஆகிய இரண்டு ஒலிகளும் அங்காந்த முயற்சியில் பிறக்கும் எனில் இரண்டையும் எவ்வாறு பிரித்தறிவது? இரண்டிற்கும் உள்ள கால வேறுபாட்டின் வழியாக, அதாவது மாத்திரையின் வழியாகப் பிரித்தறியவேண்டும் என்பதுதான் அதற்கான விடையாகும். எனவே, மாத்திரை என்பது இரண்டு ஒலிகளைப் பிரித்தறிவதற்குத் துணைபுரியும் ஒலியின் அடிப்படைப் பண்பாக அமைகிறது. இது மாத்திரை என்னும் கருத்தியலின் முதன்மைப் பயன்பாடாகும். மாத்திரை பற்றிய விளக்கம் ஒலிகளின்/எழுத்துகளின் விளக்கத்திற்கு இன்றியமையாததாக இருப்பதால் இலக்கண நூல்கள் மாத்திரை பற்றிய விரிவான விளக்கத்தினை வழங்குகின்றன.


மாத்திரை – பயன்பாடு

வடமொழி இலக்கணங்கள் வேதங்களைப் பிழையின்றி உச்சரிக்கவேண்டும் என்னும் முதன்மை நோக்கத்தைக் கொண்டிருக்கின்றமையால் உச்சரிப்பிற்குத் துணைபுரியும் நிலையில் மாத்திரையைப் பற்றி அஷ்டத்தியாயி போன்ற இலக்கண நூல்கள் விளக்குகின்றன. எனில், தமிழ்மொழி இலக்கணமான தொல்காப்பியம், மாத்திரை பற்றி விளக்குவதற்கான காரணம் யாது எனும் கேள்வி எழுகிறது. தமிழ்மொழியின் ஒலிகளின்/எழுத்துகளின் அமைப்பினை விளக்குவதற்கு மட்டுமன்றித் தொல்காப்பியம் வேறொரு பயன்பாட்டிற்காகவும் மாத்திரையைப் பற்றி விளக்கியுள்ளது.

தொல்காப்பியம் எழுதப்பட்டதன் முதன்மையான நோக்கங்களுள் அக்காலச் செய்யுள்களை இயற்றுவதற்கான இலக்கணத்தை வரையறுப்பது என்பதும் ஒரு நோக்கமாகக் கொள்ளப்படுகிறது. இதன் அடிப்படையில் பொருளதிகாரச் செய்யுளியலில் செய்யுளுக்கான  34 உறுப்புகள் பட்டியலிடப்படுகின்றன. அவற்றுள் ஒன்றாக இருப்பது மட்டுமன்றி முதலாவதாக இருப்பதும் மாத்திரை என்னும் எழுத்துகளின் கால அளவே ஆகும். எனவே, செய்யுளின் முதன்மை உறுப்பாக மாத்திரை என்பது கொள்ளப்பட்டுள்ளது. மேலும், தொல்காப்பியம் மாத்திரைக்கு வேறொரு முக்கியத்துவத்தையும் செய்யுளியலில் கொடுத்திருக்கிறது. அதாவது, நோக்கு என்னும் செய்யுள் உறுப்பிற்கான விளக்கத்தில் மாத்திரை பற்றிய குறிப்பும் இடம்பெற்றுள்ளது.

                         ‘மாத்திரை முதலா அடிநிலை காறும்

            நோக்குதற் காரணம் நோக்கெனப் படுமே’    (செய்யுளியல்:100)

என்பது நோக்கு உறுப்பின் விளக்கமாகும். இதன்வழியாக, செய்யுளின் நோக்கு என்னும் உறுப்பினை அறிவதற்கு மாத்திரையும் பயன்படுகிறது என்கிறது தொல்காப்பியம். இக்கட்டுரையாளர், பேரா.கு.வெ.பா’வுடன் மேற்கொண்ட உரையாடலின்வழி (17.06.2020) அறிந்துகொண்ட கீழ்க்காணும் சான்று, நோக்கு உறுப்பில் மாத்திரையின் பயன்பாட்டை வலியுறுத்துவதாக உள்ளது.

‘அளிதோ தானே பாரியது பறம்பே’ என்னும் கபிலர் பாரியைப் பற்றிப் பாடிய புறப்பாடலின் ஓர் அடி கீழ்வருமாறு அமைந்துள்ளது.

‘சிறியிலை வெதிரின் நெல்விளை யும்மே’ (புறம்.109-4)

என்னும் அடியில் சிறிய இலை என்னும் குறிப்புப் பெயரெச்சத் தொடர் தொகுத்தல் விகாரத்தால் சிறியிலை என்றும் விளையுமே என்னும் வினைமுற்று விரித்தல் விகாரத்தால் விளையும்மே என்றும் வந்துள்ளன. இவ்வாறு தொகுத்தல் விகாரமும் விரித்தல் விகாரமும் பாடலில் இடம்பெற்றமைக்கான காரணத்தை நோக்கு என்னும் உறுப்பின்வழி ஆராயலாம். பறம்புமலையில் உள்ள வெதிரின்(மூங்கிலின்) சிறிய இலை எவ்வளவு சிறிதாக உள்ளது என்பது சிறிய இலை என்னும் தொடர் சிறியிலை என்று தொகுத்தல் விகாரத்தால் சுருக்கிச் சுட்டப்படுவதன்வழி உணர்த்தப்படுகிறது. தொடரின் குறுக்கப்பட்ட வடிவம் இங்கு இலையின் குறுகிய வடிவத்தைச் சுட்டுவதாக உள்ளது. ஒரு மாத்திரை குறைந்த நிலையில் இலையின் சிறிய வடிவம் உணர்த்தப்படுகிறது. அதற்கு, நேர்மாறாக, விளையுமே என்னும் வினைமுற்று, பாரியின் பறம்புமலையில் நெல் மிகுதியாக விளையும் என்பதை உணர்த்துவதற்கு விளையும்மே என்று விரித்தல் விகாரத்தால் சுட்டப்பட்டுள்ளது. இங்கு அரை மாத்திரை அளவு சொல்லின் நீட்சி, அதாவது ‘ம்’ என்னும் மெய் விரிந்து நின்ற நிலை, நெல்லின் விளைவு மிகுதியினை உணர்த்துகிறது. எனவே, அரை மாத்திரை நீட்சியின்வழிப் பறம்புமலையின் வளத்தினை உணரமுடிகிறது. இவ்வாறு, தமிழில் மாத்திரையின் பயன்பாடு ஒலிகளின் வேறுபாடுகளைக் கண்டறிவது மட்டுமன்றிச் செய்யுள் பொருட்சிறப்பிற்கும் உதவுகின்றது.


முடிவுரை

    மாத்திரை பற்றி இக்கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகளைக் கீழ்க்காணுமாறு தொகுத்துரைக்கலாம்.

            1கால அளவு என்பது மொழியில் உள்ள ஒலிகளுக்கு/எழுத்துகளுக்கு இருக்கும் அடிப்படைப் பண்பாகும்.
2.     ஒலியின்/எழுத்தின் கால அளவு மாத்திரை என்னும் அலகால் அளக்கப்படுகிறது.
3.     மாத்திரையின்வழி ஒலிகளின் வேறுபாடுகளை அறியலாம்.
4.  ஒலி வேறுபாடுகளை அறிவது மட்டுமன்றிச் செய்யுளின் பொருட்சிறப்பிற்கும் மாத்திரை இன்றியமையாத துணையாக விளங்குகிறது.
5.   தொல்காப்பியம் மாத்திரையை ஒரு செய்யுள் உறுப்பாக ஏற்றுள்ளதும் நோக்கு என்னும் செய்யுள் உறுப்பினை அறிவதற்கு மாத்திரை துணைபுரியும் என்று விளக்குவதும் மாத்திரையின் சிறப்பினை வலியுறுத்துவனவாக உள்ளன.


துணையன்கள்

           1.  அனைவர்க்கும் தமிழிலக்கணம், கு.வெ.பாலசுப்பிரமணியன், உமா நூல் வெளியீட்டகம், தஞ்சாவூர், 2019
2.     தொல்காப்பியம் – எழுத்ததிகாரம், பாவலர் பாலசுந்தரம் உரை, பெரியார் பல்கலைக்கழகம், சேலம், 2004
3.     தொல்காப்பியம் செய்யுளியல்- இளம்பூரணர் உரை, அடிகளாசிரியர்(பதி.), தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர், 1985.
4.     தொல்காப்பியம், சொல்லதிகாரம், இளம்பூரணர் உரை, அடிகளாசிரியர்(பதி.), தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர், 1988.
5.     தொல்காப்பிய உருவாக்கம், ச. அகத்தியலிங்கம், மணிவாசகர் பதிப்பகம், சிதம்பரம்.
6.     புறநானூறு, ஔவை துரைசாமிப் பிள்ளை உரை, சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை, 1947
7.     தொடரியல்: மாற்றிலக்கண அணுகுமுறை, கி. அரங்கன், தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர், 2014