4ஆம் ஆண்டில் நமது இலக்கியச்சுடர்
படைப்புகளை periyaswamydeva@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி இதழின் வளர்ச்சிக்கு உதவுங்கள்

புதன், 1 ஜூலை, 2020

ஒளவையாரின் ஆளுமைத் திறன்


                     

                                           

   முனைவர் கே.பி.கனிமொழி

உதவிப்பேராசிரியர்,

தமிழ்த்துறை

அக்சிலியம் கல்லூரி,

வேலூர்.

 

ஆய்வுச் சுருக்கம்

பழந்தமிழரின் வாழ்க்கைக் கூறுகளை வழி மொழிந்த இலக்கியமாக சங்க இலக்கியம் அமைகிறது. அவ்வகையில் பொற்காலமாக போற்றப்பட்ட சங்க இலக்கியத்தில் முப்பதின் மிக்க பெண்பாற் புலவர்கள் பாடியுள்ளனர். அவர்களுள் ஆழ்ந்த புலமையும் கவிபாடும் கற்பனையும் ஒருங்கேயமைந்த பெண்மணி ஒளவையார்.  தமிழ்க் கூறும் நல்லுலகில் ஒளவை என்னும் பெயரை அறியாதவர் இல்லை. குழந்தை முதல் பெரியவர் வரை, கல்வியறிவு இல்லாத மக்கள் முதல் கற்றுத் தேர்ந்த சான்றோர்கள் வரை ஒளவை என்றால் மதிப்போடு சொல்லி அவரது அறிவுரைகளை எடுத்து மொழிவதை காணமுடிகிறது. ஓளவையார் சங்க காலத்தினைச் சார்ந்த புலவர் என வரலாறு கூறுகிறது.  இவர் சங்க இலக்கியப் பாக்கள் வாயிலாக தமது  ஆளுமைத் திறத்தை வெளிப்படுத்துகிறார்.

 

முன்னுரை

தமிழ் வளர்த்தவர்களுள் ஆண்களைப் போலவே பெண்களும் பலராவர். அவர்களுள் குறிப்பிடத்தக்க பெண்பாற்புலவர் ஒளவையார். ஒளவை ஒருவரே என்று நம்பினாலும், வரலாற்று கணிப்பின்படி பல ஒளவையார்கள் வாழ்ந்து இருக்க வேண்டும். சங்ககால ஒளவையாரின் ஆளுமைவின் விளைவே பிறகாலப் பல ஒளவையார்களின் தோற்றத்திற்கு மூலகாரணமாகும். சங்ககால ஒளவையாரின் சிறப்பும், புலமையும், புகழும் தமிழகத்தில் செல்வாக்குப் பெற்றிருந்தன. இதன் அடிப்படையிலேயே பலர் ஒளவையார் என்ற பெயர் வைத்துக் கொண்டு நூல்கள் இயற்றப்பட்டிருக்கின்றன. சங்ககால ஒளவை காதலையும், வீரத்தையும் உரக்கப் பாடியுள்ளார். இவர் பல்வேறு வகையான ஆளுமைகளில் சிறந்து விளங்குவதை பின்வரும் கட்டுரையின் வாயிலாக காணலாம்.

 

ஒளவையார் 

ஒளவை பற்றிய பல கதைகள்  நாட்டில், ஏட்டில், உலா வந்த வண்ணம் உள்ளன. ஒளவை - யார்? ஒருவரா? இருவரா? பலரா? என்பது குறித்து அறிஞரிடையே பல்வேறு கருத்துக்கள் நிலவி வருகின்றன. “ஓளவை ஒருவரே என்பது டாக்டர் .முத்து கண்ணப்பர் கருத்து.” (டாக்டர் .முத்து, ஒளவையார் வாழ்வும் வாக்கும், பக் -18)

இழையணிந்த பொலிந்த ஏந்து கோட்டல்குல் மடவரல் உன்கண் வானுதல் விறலி

(புறம் பா.எண். 89)

 என்ற இந்த பாடலின் மூலம் ஒளவையார் பாணர் குடியில் பிறந்தவர் என அறியமுடிகிறது.  சங்க ஒளவையும், நீதிநூல் ஒளவையும் என இருவரே வாழ்ந்ததாகவும் ஏனைய பாடல்கள் அனைத்தையும் பாடிய ஒளவையார்கள் இவர்கள் .புகழ் ஒளியில் பூத்த நறுமலர்களாகவே எண்ண வேண்டும் என்கிறார் முனைவர் தமிழண்ணல்” (முனைவர் தமிழண்ணல், ஒளவையார், பக் -5)

1.      அதியமான் காலத்தில் வாழ்ந்த ஒளவையார்

2.      சுந்தரர் காலத்தில் வாழ்ந்த ஒளவையார்

3.      கம்பர் காலத்தில் வாழ்ந்த ஒளவையார்

என .சஞ்சீவி அவர்கள் ஒளவையார் மூவர் என்கிறார்.

 

 

மு.அருணாச்சலம் என்பார் ஒளவையாரின் காலத்தை பின்வரும் ஆறுவகைகளாகக் குறிப்பிடுகிறார்.

·         சங்ககால ஒளவையார்        (கி.மு. 2-ம் நூறறாண்டு)

·         இடைக்கால ஒளவையார் (கி.மு. 10-ம் நூறறாண்டு)

·         சோழர்கால ஒளவையார் (கி.மு. 12-ம் நூறறாண்டு)

·         சமயப்புலவர் ஒளவையார் (கி.மு. 14-ம் நூறறாண்டு)

·         பிற்கால ஒளவையார் (கி.மு. 16-ம் நூறறாண்டு)

·         பிற்கால ஒளவையார் (கி.மு. 17,18-ம் நூறறாண்டு)

அறிஞர்களின் கருத்துக்களை ஆராயுமிடத்து ஒன்றை உறுதியாகச் சொல்லலாம். காலத்துக்கேற்ப பல ஒளவைகள் இருந்திருக்க வேண்டும். இருந்திருப்பார் ஏன்? இன்று கூட ஒளவை தோன்றலாம் வேறு பெயரில் என எண்ண இடம் உள்ளது.

 

ஆளுமைத்திறன்

சங்கப் புலவர்களில் தலைச்சிறந்த பெண்பாற் புலவரான ஒளவை ஆளுமைத்திறன் மிக்கவர். இவர் பாடிய இருபத்தாறு அகப்பாடல்களும் மூப்பத்தாறு புறப்பாடல்களும் இவரது ஆளுமைப் பண்புகளை அறிய முடிகின்றது. ஓளவையிடம் தூய நெஞ்சம், உண்மை, அஞ்சாமை, நன்றி மறவாமை, நற்செயல்களில் ஆர்வம், புலவர் சமூகத்தை மதித்தல், வரலாற்றுணர்வு ஆகிய கொள்கைகளைக் காண முடிகின்றது. அதியன் நாட்டுப் பொருளாதாரம், பணப்பயிரான கரும்பைக் குறிப்பிடுதல் ஆகியவற்றால் ஒளவையின் பொருளாதார ஆளுமை புலனாகிறது. விலங்குகள், பறவைகள், பூக்கள், இயற்கை சக்திகள், பொழுதுகள் ஆகியவற்றை விளக்குவதன் வாயிலாக ஒளவை தன் அழகுணர்ச்சி ஆளுமையை வெளிப்படுத்துகிறார். தொழிலாளர்கள் பற்றிய குறிப்புகளில் ஒளவையின் சமுதாய ஆளுமையை விளக்குகின்றன. தூது சென்று தூதில் வெற்றி பெற்றது ஒளவையின் அரசியல் ஆளுமையைக் காணமுடிகின்றது. நல்லோர் வாழும் நாடே நல்ல நாடு என்று கூறுவதிலிருந்து ஒளவையின்  ஒருமைப்பாடுடைய  ஆளுமைப் பண்பை அறியலாம்.

 

அறிவுறுத்தும் ஆளுமைத்திறன்

தொண்டைமானுக்கும் அதியமானுக்கும் நடக்கவிருந்த மிகப் பெரிய போரைத் தடுத்தாண்டார். தன் புலமையால் போரை நிறுத்தி நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் அழிவு ஏற்படாவண்ணம் காத்தார். புகழ்வது போல இகழ்ந்து இடித்துரைத்த பாடல்.

                இல்வே பீலியணிந்து மாலைசூட்டி

      கண்திரள் நோன்காழ் திருத்தி, நெய்யணிந்து

      கடியுடைவியன் நகரவ்வே அவ்வே

      பகைவர்க்குத்தி, கோடுநுதி சிதைந்து

      கொல்துறைக் குற்றிலமாதோ என்னும்

      உண்டாயின் பதம் கொடுத்து

இல்லாயின் உடன் உண்ணும்

இல்லோர் ஒக்கல் தலைவன்

     அண்ணல் எம்கோன் வைந்நுதி வேலே” (புறம். 95)

என்று தூதாகச் சென்று பாடிப் போரினை நடக்காமல் தடுத்து நிறுத்தினார்.

 

 

 

 

துணிந்து செயல்படும் ஆளுமை

அரசனின் வீரம், வெற்றி, கொடை போன்றவற்றைப் புகழ்ந்து பாடுவது போன்று அரசன் மீது சினம் கொண்டு பாடுகின்ற துணிவும் அவர்களிடத்தில் இருந்ததை புறநானூற்றுப் பாடல்கள் வெளிப்படுத்துகின்றன. அதியமான் நெடுமான் அஞ்சி பரிசில் தர நீட்டித்தவுடன் சினந்து வாயிற் காவலனிடம் ஒளவையார் பாடிய பாடல்.

                வாயிலோயே! வாயிலோயே!

      வள்ளியோர் செவி முதல் வயங்கு மொழி வித்திதாம்

      உள்ளியது முடிக்கும் உரனுடை உள்ளத்து

வரிசைக்கு வருந்தும் இப்பரிசில் வாழ்க்கைப்

     பரிசிலர்க்கு அடையா வாயிலோயே..” (புறம். 206)

இவ்வாறு புலவர் வாழ்வின் வறுமையைக் கூறிகாவினெம் கலனே சுருக்கினெம் கலப்பேஎன விரைவுபட மொழிந்து இசைக்கருவிகளை மூட்டை கட்டிக் கொண்டு, எத்திசைச் செல்லினும் அத்திசைச் சோறே என முழங்கிப் புறம் போகும் புலமையை ஒளவையார் அறிவுடையோர் எத்திசைச் சென்றாலும் அங்கே புகழ்ப்படுவர் என்று சினந்து வாயிற் காவலினிடம் பாடிச் சென்றார்.

 

கொள்கை ஆளுமை

ஒளவை சிறந்த பல கொள்கைகளையுடையவர். உண்மையைத் தேடி அறிவதில் இவ்வகை ஆளுமை உடையோர் மிகுந்த ஆர்வம் காட்டுகின்றனர். ஒளவை குழந்தையின் மழலை மொழி போன்றது தன் வாய்ச் சொற்கள் என்பதை,

                யாழொடுங் கொள்ளா பொழுதொடும் புணரா

பொருளறி வாரா வாயினும் தந்தையர்க்

கருள்வந் தனவாற் புதல்வர்தம் மழலை

என்வாய்ச் சொல்லு மன்ன” (புறம். 92)

என்கிறார். குழந்தையின் களங்கமற்ற தூய தன்மையுடைய நெஞ்சுடையவராய் வாழ்வதே சிறந்தது என்ற கொள்கையுடையவர் ஒளவை என்பதை இப்பாடலடிகளால் அறியலாம்.

 

பொருளாதார ஆளுமை

நம் நாட்டின் பொருளாதாரத்தைப் பெருக்க சங்க கால மன்னர்கள் பெரிதும் முயன்றனர். அதியன் மூதாதையர் பெருமுயற்சியால் கரும்பு பயிரிடுவதைத் தம் நாட்டில் அறிமுகப்படுத்தினர். இச்செய்தியினை ஒளவை இரு பாடல்களில் சுட்டிக் காட்டுகிறார். பெறுதற்கரிய அமுதம் போன்ற கரும்பை இந்நாட்டுக்குக் கொண்டு வந்தவனுடைய பெரிய வழித்தோன்றலே என்ற பொருளமைய,

                “ ….…………..யந்தரத்

தரும்பெற லமிழ்த மன்ன

கரும்பிவட் டந்தோன் பெரும்பிறங் கடையே” (புறம். 99)

என்கிறார்.

 

நன்றி பாராட்டும் ஆளுமைப்பண்பாடு

பிற உயிர்களிடமிருந்து மனிதனை வேறுபடுத்திக் காட்டும் அடையாளங்களில் ஒன்று நன்றி பாராட்டும் பண்பாடு. வீரன் ஒருவனின் குடிப்பண்பையும் அவனுக்கு வேந்தன் செய்த நன்றிக்கடனையும் குறித்து பாடிய பாடல்.

                பொய்கை நாரை போர்வில் சேக்கும்

      நெய்தல்அம் கழனி நெல்அரி தொழுவர்

      கூம்புவிடு மெய்பிணி அவிழ்ந்த ஆம்பல்

      அகல் அடை அரியல் மாந்தி தெண்கடல்

படுதிரை இன்சீர்ப் பாணி தூங்கும்

     மென்புல வைப்பின் நன்னாட்டுப் பொருந..!” (புறம். 209)

நீ கொடுக்காவிட்டால் கெஞ்சுவேன் என்று எண்ணாதே, நீ நோயின்றி வாழ்வாயாக என்று ஒளவையார் அறிவுறுத்தி  நன்றி பாராட்டும் உள்ளதையும் காணமுடிகிறது.

 

உலகளாவிய நோக்கு

உலகளாவிய நோக்கு ஒருமைப்பாடுடைய ஆளுமையுடையோரின் சிறந்த பண்பாகும். ஒளவையிடம் இவ்வியல்பு இயல்பாகவே அமைந்துள்ளது. “உலகை, நீரக விருக்ககை என்றும் உலகம் என்றும் கூறுவதாலும் உலகை உய்விக்கும் ஒற்றுமையின் சிறப்பையும் நல்லவரின் சிறப்பையும் குறிப்பிடுவதாலும்” (புறம்.367) ஒளவையின் உலகளாவிய நோக்கை அறியலாம்.

 

சமூக ஆளுமை

ஒளவை சங்க காலச் சமுதாயத்தில் மிகுந்த ஈடுபாடுடையவர். ஏழையின் மீது இரக்கம் கொண்டு அவர்களைப் பாதுகாப்பவன் என்ற பொருளில் இல்லோரொக்கல் தலைவன் (புறம். 95) என்று அதியனை ஒளவை குறிப்பிடுகிறார். அதியனின் இரக்க உணர்வை விளக்குவதன் வாயிலாக ஒளவை தன் இரக்க உணர்வைப் புலப்படுத்துகிறார்.

 

தொகுப்புரை

சங்க இலக்கியத்தின் ஒண்புகழ்ச் சிகரங்களான கபிலர், பரணர், நக்கீரரோடு ஒளவையாரும் சேர்ந்து எண்ணத்தக்கவர். காதல், வீரம் என்ற இரு துறைகளில் கருத்துக்களை உணர்த்துவதிலும் உணர்ச்சிக் கூறுகளின் நுண்மையைப் புலப்படுத்துவதிலும் ஒளவையாரின் ஆளுமை திறன் அளவிடக்கரியது.

 

துணைநூற்பட்டியல்

1.      முத்து த., ஒளவையார் வாழ்வும் வாக்கும், மணிவாசகர் பதிப்பகம், சென்னை, 2005.

2.      தமிழண்ணல், ஒளவையார், சாகித்ய அகாதமி வெளியீடு, சென்னை, 1997.

3.     புறநானூறு, கழக வெளியீடு, சென்னை, 1999.