4ஆம் ஆண்டில் நமது இலக்கியச்சுடர்
படைப்புகளை periyaswamydeva@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி இதழின் வளர்ச்சிக்கு உதவுங்கள்

புதன், 1 ஜூலை, 2020

வாசிப்பின் வாசல்கள்! உங்களுக்காக!


இரா. விஜயலெட்சுமி

பட்டதாரி தமிழாசிரியை

தி.சுக்காம்பட்டி-621 310

அரசு மேல்நிலைப்பள்ளி

திருச்சி

போன் : 63829 93075

 

 

இந்தக் கொரொனாஎப்பப் போகுதோ என்னவோ? அது போகறதுக்குள்ள எம்புள்ளைக்குத் தெரிஞ்ச கொஞ்சநஞ்ச தமிழும் மறந்துடும் போல.வெள்ளப் பெருக்குனு எழுதிட்டு வாடா னு சொன்னா நீ என்னடா எழுதிருக்க? “வையும் றுவையும் மாத்திப் போட்டிருக்க? வெள்ளத்துக்கும் வெல்லத்துக்கும் வித்தியாசம் தெரியாமா என்னடா இது? பள்ளிக்கூடம் திறந்து நீ போய் பாடம் படிக்கிறதுக்குள்ள எல்லாமே மறந்துடும்போல என்பது ஒரு தாயின் ஆற்றாமை.

ஆன்லைன் கிளாசாம் எம்பொண்ணு லேப்டாப் வாங்கித் தரச்சொல்லி நச்சரிக்கிறா என்பது வேறொரு தாயின் புலம்பல். இப்படி ஒவ்வொரு பெற்றோரும் ஒவ்வொரு விதமாக அங்கலாய்ப்பதைக் கேட்கவும் பார்க்கவும் முடிகிறது.

ஓவ்வொரு சீசனுக்கும் ஒவ்வொன்னா வருகிற மாதிரி இந்தக் கொரோனா சீசனில் ஆன்லைன் கிளாசும் நடைபெற்று வருகிறது.

வாட்ஸ்அப்(புலனம்)இஸ்கைப்(காயலை)ஆகியவற்றில் நெட்வொர்க் சரியாகக் கிடைக்காது. வீடியோ காலில் பேசுவதற்குக்கூட தடை ஏற்பட்டு தொடர்பாடல் துண்டிக்கப்பட்டு புரிதல் இல்லாமல் போகிறது. அப்படி இருக்கையில் குழந்தைகளின் மனநிலை அறியாமல் நடத்தப்படும் வாட்ஸ் அப் வகுப்பறைகளும் இணையவழிக் கல்வியும் மாணவர்களைப் பாடத்துடன் இணைத்திடுமா? புரிதல் இருக்குமா? தெளிவு பிறக்குமா? மொழியாற்றல் பெருகுமா? என்பது சிந்திக்க வேண்டிய விஷயம்.

வகுப்பறையில் மாணவர் முகம் பார்த்து நேருக்கு நேர் சொல்லிக் கொடுத்து, பாடப் புத்தகங்களை வாசிக்கச் செய்து  பாடங்களை விளக்கி, கரும்பலகையில் எழுதி மாணவர் அருகில் சென்று தவறுகளைச் சுட்டிக் காட்டி, தேர்வுகள் வைத்துத் திருத்தி போதாக் குறைக்குக் குறைதீர் கற்றல் என்று மீண்டும் ஒரு முறை தொகுத்துக்கூறி மீட்டுருவாக்கம் செய்யும் கற்பித்தல் முறையிலேயே சில கற்றல் இடர்பாடுகளைச் சந்திக்க நேரிடுகிறது. அப்படி இருக்கையில் வாட்ஸ் அப் வகுப்பறைகளும் இணையவழிக் கல்வியும் ஒருமித்த முழுமையான கற்றல் திறனை புரிதலை ஏற்படுத்துமா என்பது ????மற்றும் !!!

அண்மையில் பாடசாலை வலைதளத்தில் வாசித்த செய்தியொன்றில் இஸ்ரோ முன்னாள் தலைவர் கஸ்தூரிரங்கன் அவர்கள்,

அடிப்படையில் குழந்தைகளுடன் நேரடி மற்றும் மனரீதியான தொடர்பு என்பது மிக முக்கியமானது. விளையாட்டு, படைப்பாற்றல் மற்றும் சில முக்கியத் திறன்களை என்றுமே ஆன்லைன் கற்றல் மூலம் கடத்த முடியாது. முகத்துக்கு முன்பான தொடுதல், யோசனைகளை எண்ணங்களைப் பரிமாறிக் கொள்ளுதல் ஆகியவை மரபுவழியில் மட்டுமே சாத்தியம். உயர்கல்வியில் ஆன்லைன் வகுப்புகள் கற்பது அந்த நேரத்தின் தீர்வாக இருக்கலாம். ஆனால் குழந்தைகளின் ஆரம்பக்கல்வியில் இது சிறப்பானதாக இருக்காதுஎன்று கூறிய கருத்தும் இங்கு ஒப்பு நோக்கத்தக்கது.

 எங்காத்துக்காரரும் கச்சேரிக்குப் போகிறார்என்று சொல்வார்களே அதைப் போலத்தான் இன்றையஇணையவழி வகுப்புகள். இருக்கு ஆனா இல்லை’ ‘புரியும் ஆனா புரியலை’ ‘புரிஞ்சும் புரியாத மாதிரி இருக்குஎன்ற ரீதியில் நடைபெறும் இவ்வகுப்புகளால் மாணவர்களுக்கு மனவுளைச்சலே அன்றி மனநிறைவு ஏற்படாததுடன் மனஅழுத்தமும் அதிகரிக்கிறது. யானையைத் தடவியகுருடர் கதையாகத்தான் அமைகிறது.

படித்த பாடங்கள் வேண்டுமானால் மறக்கலாம். உயிருடன் உணர்வுடன் கலந்த தாய்மொழியும் அடிப்படையும் மறக்குமா? மறக்கிறது என்றால் பழக்கமின்மையே காரணம்.

சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம் வைத்ததொரு கல்வி மனப்பழக்கம்

என்று ஔவையார் எல்லாம் பழக்கத்தாலே கைவரும் என்கிறார். எனவே மொழிப் பரிச்சயம் பெற எழுத்து மற்றும் சொற்றொகுதிகளையறிய  பாடப்புத்தகங்களைத் தானே வாசித்தறிய வாசிப்புப் பழக்கம் அவசியம். வாசிப்புப் பழக்கம் அதிகரித்து மொழியாற்றல் மேம்படும்போது எந்தவழிக் கல்வியும் எளிதாகும். எந்த வாசலையும் எளிதாகக் கடந்துவர முடியும்.

பள்ளிகள் திறக்கப்படாத இந்தச் சூழ்நிலையில் குழந்தைகளின் கல்வி குறித்தும் படிப்புக் குறித்தும் கவலைப்படும் சூழலில் இணையவழிக் கல்வியில் இணைய இயலாதவர்கள் அதற்கான சாத்தியக் கூறுகள் இல்லாதவர்கள் குழந்தைகளின் கற்றல் திறனை மேம்படுத்தும் வகையிலும் மொழித்திறனை அதிகரிக்கும் வகையிலும் வாசிப்புத் திறனை வளர்க்கும் விதமாகவும் படிப்புடன் பாடப்புத்தகங்களுடன் மற்ற புத்தகங்களுடன் பரிச்சயம் ஏற்படுத்தும் விதமாகவும் கதைகள் வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தலாமே!

கதைகள் வாசிப்பது என்பது வாசிப்புத் திறனை வளர்ப்பதுடன் சிந்தித்தல், கற்பனை செய்தல், புரிந்துகொள்ளுதல், பகுத்தறியும் திறன்பெறுதல், உரையாடல், பேச்சாற்றல், எழுத்தாற்றல் எனப் பன்முக ஆற்றலை அதிகரிப்பதுடன் நேரத்தைப் பயனுள்ளதாகப் பயன்படுத்துவதற்கான வழியுமாகும்.

“TODAY READER TOMORROW LEADER”

என்றொரு ஆங்கிலப் பழமொழி உண்டு. நன்கு வாசிப்பவனால் மட்டுமே நல்ல படைப்புகளை உருவாக்க முடியும் என்பது பல படைப்பாளர்களின் எண்ணமும்கூட. புத்தக வாசிப்பால் புகழின் உச்சியில் நின்ற தலைவர்களையும் வாசிப்பால் வளர்ந்த எழுத்தாளர்களையும் வரலாற்றில் காணலாம்.

இன்றும் புகழ்மிக்க படைப்பாளர்களின் படைப்புகளுக்கும் வெற்றிகளுக்கும் அவர்களின் வாசிப்புப் பழக்கமே காரணம் என்று அவர்களே கூறியுள்ளனர். எழுத்துச் சித்தர் பாலகுமாரன் அவர்கள் வெற்றி வேண்டுமெனில் நல்ல புத்தகங்களைப் படியுங்கள்என்பார்.

 புத்தக வாசிப்பிற்கு அடித்தளமே கதைகளை வாசிப்பதுதான். கதை வாசிக்கும்; பழக்கமே கற்பனை செய்தல், கேட்டல், எழுதுதல், பேசுதல், சுருக்கிக் கூறுதல், விவரித்துரைத்தல் எனப் பல திறன்களை பெறுவதற்கும் மொழிவளத்தையும் சொற்களஞ்சியப் பெருக்கத்தையும் ஞாபக சக்தியையும் அதிகரிக்கச் செய்யும்.

தாய்வழிச் சமூகம் என்பார்களே அதைப்போலத்தான் நாம் கதைவழிச் சமூகத்தில் வந்தவர்கள். கதைகள் இல்லாத உலகமே இல்லை. அதலபாதாளம் தொட்டு மண்முதல் விண்வரை எல்லாவிடத்தும் பரம்பொருளென கதைகள் பரந்துவிரிந்து வியாபித்திருக்கின்றன.

 விலங்குகள், பறவைகள் பற்றிய கதை,  தேவதைக் கதை, பேய்கதை, தெய்வீகக் கதை, புராண இதிகாசக் கதை, தசாவதாரக் கதை, நாரதர் கதைகள், பெரியபுராணக் கதைகள்,  திருக்குறள் கதைகள், பஞ்சதந்திரக் கதைகள்,  மர்மக் கதைகள், புத்த ஜாதகக் கதைகள், ஜென்கதைகள், பரமார்த்த குரு கதைகள், விக்கிரமாதித்தன் கதைகள், அமரக் கதைகள், அக்பர் பீர்பால் கதைகள், தெனாலிராமன் கதை, முல்லா நசுருதின் கதை, நாடோடிக் கதைகள், ராயர் அப்பாஜிக் கதைகள், பக்திக்கதைகள், குரு சிஷியக் கதைகள், அறிவியல் கதைகள், கிருமிகள் பற்றிய கதைகள் என்பன போன்ற பலதரப்பட்ட கதைகள் அனுமார் வாலென வளர்ந்து கடலென பரந்து காணப்படுகின்றன. அகில உலகக் கதைகள் எல்லாம் அறுசுவை உணவுகளையும் பல்சுவை பலகாரங்களையும் போன்றவைதான். அனுபவித்து ருசிக்கத்தான் ஆளும் குறைவு. ஆயுளும் குறைவு. அதனால்தான் நாலடியார் கல்வி கரையில கற்பவர் நாள் சிலஎன்றும் ஔவையார்கற்றது கையளவு கல்லாதது உலகளவுஎன்றும் கூறினார்.

 இந்தக் கதைகள் எல்லாம் கற்பனையாக மட்டும் இல்லாமல் வாழ்க்கையின் விளக்கமாகவும் வழிகாட்டியாகவும் விளங்குகின்றன. படிப்பதற்கேற்ற மொழிநடையையும் கொண்டிருக்கின்றன. இந்தக் கதைகளைப் படிக்கத் தொடங்குவதன் மூலம் வாசிப்பின் அடுத்த கட்டத்தில் அடியெடுத்து வைக்கவும் பெரிய பெரிய நாவல் சிறுகதைகள் வாழ்க்கை வரலாறுகள் கட்டுரைகள் எனப் பலதும் படிக்கத் தூண்டுகோலாகவும் அமையும்.

கதை என்பது வெறும் கற்பனையில்லை  அது ஞாபகங்களின் சேமிப்புக் கூடம்; பண்பாட்டு மரபின் தொடர்ச்சி! கதைகள் நம் சமூகத்தின் மனசாட்சி. கதைகள் கேட்பவரைக் களிப்பூட்டுவதுடன் படிப்பினை ஒன்றையும் கற்றுத் தருகின்றன.என்பார் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன்.

கதை சொல்வது ஒரு கலை, எழுதுவது ஒரு தவம், கதை கேட்பது சுகம், கதை படிப்பதும் படித்த கதையைப் பிறர்க்குப் பகிர்வதும்  பரமசுகம்.

பாட்டி ஒரு கதை சொல்லேன் ‘‘அம்மா ஒரு கதை சொல்லுமாஎனக் கதை கேட்டு வளரும் சூழல் இன்றைய கணினி யுகத்தில் காணாமல் போய்விட்டது. நவீன வாழ்க்கையில் கூட்டுக் குடும்பம் சிதைந்த நிலையில் ஒரு ஊர்ல ஒரு ராஜாவாம் எனத் தாத்தாவும் பாட்டியும் அம்மாவும் அப்பாவும் உறவுகளும் போட்டி போட்டுக் கொண்டு கதை சொல்லி வளர்க்கும் சூழலும் அரிதாகிவிட்டது.

போம்மா புக்ஸ் கதையெல்லாம் ஃபோர்

கேம்சும் டிக்டாக்குந்தான் ஜோர்

என்று சொல்லும் நாகரிகமும் இன்று குழந்தைகளிடம் அதிகரித்துள்ளது.

சென்ற தலைமுறை குழந்தைகளை அம்புலிமாமா, பாலமித்ரா, பாலரத்னா, போன்ற சிறுவர் புத்தக இதழ்கள் மாய உலகிற்குக் கூட்டிச் சென்றன. அவர்களுக்கென்று வண்ண வண்ண ஓவியத்தில் ஒரு தனி ராஜ்ஜியத்தையே கட்டி வைத்தன. வாசிப்பின் வாசனையை வீசிக்கொண்டிருந்தன.

இணையவாசல் திறந்தது, புத்தகவாசல் புதைந்தது. கதைப் புத்தக வாசல் இன்றைய இளம் தலைமுறையினரால் மூடப்பட்டுவிடுமோ என ஐயுறத் தோன்றுகிறது. குப்புற படுத்துக்கொண்டு தனக்கென தனியுலகை அமைத்துக்கொண்டு கதை படிக்கும் சுகத்தை இந்தத் தலைமுறையினர் அனுபவித்து அறிந்ததே இல்லை. முகநூலில் மூழ்கிவிட்ட பெரியவர்களும் புத்தகங்கள் படிப்பது பற்றியோ குழந்தைகளுக்குக் கதை கூறுவது பற்றியோ கதைகள் குறித்துக் கலந்துரையாடுவது பற்றியோ சிந்திப்பது அருகிவிட்டது. அனைத்து வாசலையும் திறன்பேசிகள் அடைத்துக்கொண்டு விட்டன. போதாக் குறைக்குப் பள்ளிவிட்டு வந்ததும் விளையாடக்கூட நேரம் கொடுக்காமல் அவசரஅவசரமாக மாலைநேர வகுப்புகளுக்குத் தள்ளும் சூழல் பெருகிவிட்டது. நேரம் ஒதுக்கிப் பேசவேண்டிய பெற்றோரே திறன்பேசிகளிலும் தொலைக்காட்சி தொடர்களிகளிலும் தங்களைத் தொலைத்துவிட்டனர். குடும்பமாகக் கூடி கதைபேசும் மகிழ்ச்சி மறந்தேவிட்டது.

அடம்பிடித்து அழும் குழந்தைகளை அள்ளியணைத்து கதைகள் சொல்லி சமாதானம் செய்வதை விடுத்து திறன்பேசிகளைக் கையில்கொடுத்து அடக்கிவிட்டோம். அத்தோடு இல்லாமல் எம்புள்ள என்னமா ஃபோன்குள்ள போய்வரான் தெரியுமா? எனக்குக்கூட தெரியலப்பா!என்று சந்தோஷப்பட்டுக் கொண்டிருக்கிறோம். பிள்ளைகளின் வளர்ச்சி சந்தோஷப்பட வேண்டியதுதான். ஆனால் அந்தந்த வயதுக்குரிய சந்தோஷங்களை இந்தக்காலக் குழந்தைகளிடமிருந்து பறித்துக் கொண்டு விட்டதில் பெற்றோருக்கும் பங்கிருக்கத்தான் செய்கின்றன.

பெற்றோர்கள்தானே முதல்குரு. அவர்கள் தானே குழந்தைகளிடம் நல்ல விஷயங்களை நல்ல புத்தங்களை நற்கதைகளை கலாச்சாரங்களைக் கடத்துவதில் முக்கியப் பங்கு வகிக்கின்றனர். குற்றம் கண்டுபிடிப்பதோ பெற்றோரையோ மற்றோரையோ குறை கூறுவதோ என் வேலையில்லை. கண்முன்  காணும் இன்றைய சூழலைச் சுட்டிக் காட்டி தட்டியெழுப்ப மனக்கதவைத் திறக்க காலிங்பெல்லென கீச்சிடுகிறேன் அவ்வளவுதான்.

கோடை விடுமுறையா கொரோனா ஊரடங்கு விடுமுறையா பள்ளி திறக்குமா? எப்போது ? எனக் குழம்பித் தவிக்கும் குழந்தைகளிடம் இப்ப போய் ஆன்லைன் கிளாஸ் பாடம் படி என்றால் வேப்பங்காயாகத்தான் கசக்கும். கசப்பை இனிப்பாக மாற்றும் கருவிதான் கதைகள்.

ஒருமண்டலம் பழகினாலே எல்லாம் எளிதாகும் என்பர். அப்படியிருக்க இரண்டுமண்டலங்கள் கடந்த ஊரடங்கின் இந்தக் காலம் வாசிப்பை வளப்படுத்த வாய்த்த அற்புதமான காலமல்லவா? தனித்திருக்க விழிப்புடன் விலகி வீட்டிலிருக்க புத்தக வாசிப்பை கதை வாசிப்பைப் பழக்கலாம்தானே!

மேற்சொன்ன கதைகளையெல்லாம் குழந்தைகளுக்கு வாசிக்கத் தந்து பெற்றோர்களும் அவர்களுடன் சேர்ந்து வாசித்துக் காட்டிக் கலந்துரையாடும் கலகலப்பை எத்தனை பெற்றோர் அனுபவித்திருக்கின்றனர்? யோசித்துப் பாருங்கள். மேலும் இன்று சிறார் எழுத்தாளர்கள் பலர் சிறார்களுக்கென்று எளியமுறையில் தனித்துவமிக்க பலசிறுகதைகள் நாவல்களை எழுதிவருகின்றனர். இவற்றையெல்லாம் படிக்கப் பழக்குவதன் மூலம் அவர்களின் வாசிப்பும் மொழியும் வளம்பெறும்.

எல்லாப் புத்தகமும் எல்லோரிடமும் இருப்பதில்லை, உலகம் செல்ல ஏற்ற சூழல் இல்லை, புத்தகம் வாங்க இயலா சூழல் எனப் பலகாரணங்கள் இருக்கலாம். ஆனால் ஸ்மார்ட் ஃபோன் இல்லாதவர்களே இன்றில்லை. இன்றைய குழந்தைகளும் ஸ்மார்ட்டான குழந்தைகள். நவீனதொழில்நுட்பத்தில் வளரும் குழந்தைகள். அவர்களுக்கு அவர்கள் வழியிலேயே சென்று புத்தக வாசிப்புக்கென்று இருக்கக்கூடிய செயலிகள் மின்னூலாக்கப்பட்ட கதைப் புத்தகங்கள் சிறுவர் இதழ்கள் இவற்றைத் தரவிறக்கம் செய்து அந்தவகையிலாவது கதைகள் வாசிக்கும் பழக்கத்தை உருவாக்கலாமே! உட்கார்ந்த இடத்திலிருந்தே உலகக் கதைகளையெல்லாம் வாசிக்க வாசிப்பின் வாசல்கள் திறந்திருக்கின்றன.

புத்தகமாகவோ மின்னூலாகவோ எப்படியாவது குழந்தைகளின் வாசிப்பை உயிர்ப்புடன் வைத்திருப்பதும் கதைகள் படிப்பதில் ஆர்வத்தை ஏற்படுத்தித் தருவதும் அவசியம். குழந்தைகளின் மொழியார்வத்தையும் கற்றல் திறனையும் கனவுகளையும் கலைத்திடாமல் வைத்திருக்க பயனுள்ள நற்கதைகளைப் படிக்கச் செய்யுங்கள். கதைக் களத்துக்குள் ஒருமுறை சென்று வந்தவர் மீண்டும் மீண்டும் சென்றுவர விரும்பாமல் இரார்.

எழுத்துச் சித்தர் பாலகுமாரன் அவர்கள் புத்தகம் என்பது பொழுது போக்கு மட்டுமல்ல. புத்தகம் நல்ல நண்பன். உயர்வான குரு. சிலநேரம் கடவுளாகக்கூட காட்சியளிக்கும். மனிதனின் நாகரிகம் மொழி, மொழியின் நாகரிகம் கவிதை. கவிதை வளமிக்க தமிழ்மொழியைப் புத்தகப் படிப்பு இல்லாததால் மெல்ல சிதைத்து வருகிறோம். காலம் காலமாக வளர்ந்து வந்த ஒரு நாகரிகத்தைக் கண்மூடித்தனமாய்ச் சிதைத்து வருகிறோம்என்பர்.

ஒரு புத்தகத்தால் நம் அறிவின் பரப்பு 1சதுர செ.மீட்டர் ஆவது அதிகரிக்கும்என்பர் ஆன்றோர்கள். ஆகையால் குழந்தைகளுக்குச் சிறுசிறு கதைகளைக் கொடுத்து வாசிக்கச் செய்யுங்கள். மொழி உணர்வை ஊட்டுங்கள். ஜும் ஐடி அந்த ஐடி இந்த ஐடி என்று  உங்கள் குழந்தைகளின் ஐடியைத் தொலைத்துவிடாதீர்கள்! ஐடியாவை அழித்துவிடாதீர்கள்.

வாசிப்பின் வாசல்களைத் திறவுங்கள்!

அறிவின் வாசல்கள் அகலத் திறக்கட்டும்!

அறியாமையின் கதவுகள் தகர்க்கப்படட்டும்!

மறதி மறக்கடிக்கப்படட்டும் !

மனம் மலரட்டும்!

விசாலப் பார்வை உருவாகட்டும் !

கற்பனை சிறகு விரியட்டும் !

எண்ணக் கனவுகள்

வண்ணக் கனவுகள்

வெளிவரட்டும் !

வாருங்கள்!

வாசிப்பின் வாசலுக்கு !

கதை படிப்போம் வாருங்கள்!

கதை கேட்போம் வாருங்கள்!

கதை சொல்வோம் வாருங்கள் !