4ஆம் ஆண்டில் நமது இலக்கியச்சுடர்
படைப்புகளை periyaswamydeva@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி இதழின் வளர்ச்சிக்கு உதவுங்கள்

புதன், 1 ஜூலை, 2020

விழுப்புரம் மாவட்டத்தில் காணலாகும் பூங்கரக வழிபாட்டு முறைகளும் நம்பிக்கைகளும்




                                                                                    முனைவர் ஏ.யோகசித்ரா

                                                                                    உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை,

                                                அறிஞர் அண்ணா அரசு மகளிர் கலைக்கல்லூரி, வாலாஜாபேட்டை-632513

       9487106429

                                         eyogapr2015@gmail.com

 


முன்னுரை

                ‘ஆலயம் தொழுவது சாலவும் நன்று’ என்று அறியப்படும் கூற்று நிதர்சனமான ஒன்றாகும். இசையாலும்,நேர்த்திக்கடன்களாலும், சங்கமமாக சொந்த ஊருக்கு வந்து கிராமியத் திருவிழாவினைக் கண்டுகளித்து வழிபடு தெய்வத்தின் அருளைப் பெறுபவர்கள் இன்பத்தில் திளைப்பது உண்மையாகும். இத்தகு அனுபவ உணர்த்தல்களை நமக்கு வழங்கும் பேற்றைப் பெறுவதற்கு உதவியாக இருப்பது சிறுதெய்வ வழிபாடே எனலாம். இதனை கிராமிய வழிபடு நிகழ்த்துக் கலைகளாக வழிவழியாக வழங்கி வருவது உளங்கொளத்தக்கதாகும். இதனை மேல்மலையனூர் தாலுக்காவைச் சார்ந்த கூடுவாம்பூண்டி கிராமத்தில் ஆடிமாதத் திருவிழா வெகுவிமரிசையாகக் கொண்டாடி வருகின்ற நிகழ்வு சிறப்பானதாகும். குறிப்பாக பூங்கரக சிரசு வழிபாட்டினை நிகழ்த்தும் விதத்திகை ஆய்ந்து நோக்கும் பக்திப்பெருக்கால் இனங்கண்டு களஆய்வில் நோக்கியதை விதந்து காண்பதே இவ்வாய்வுக் கட்டுரையின் நோக்கமாகும்.

 

வழிபடு தெய்வமும் நேர்த்திக்கடனும்

            சேத்பட்டிலிருந்து செஞ்சி செல்லும் சாலையில் அமைந்துள்ள கிராமம் கூடுவாம்பூண்டி. இங்கு சத்திரக்குளம் அமையப்பெற்று இருவழிச்சாலையின் மருங்கே இயற்கை எழில் சூழ்ந்த சோலைவாழி அம்மன் ஆலயம் அமைந்துள்ள ஊர்தான் கூடுவாம்பூண்டி என்ற கிராமம். பாறையின் பக்க அமைவில் குதிரை வாகன சுதை சிற்பத்துடன் நேர்த்திக்கு செலுத்தப்பட்ட இரதங்களோடு நவகிரகம், பிள்ளையார் கோயில், நாககன்னி கோயில், உணவுக்கான சத்திர அரங்கம், புற்றுக்கள் அமைந்த பரிவாரத் தெய்வங்களோடு சிரசு வழிபாட்டிற்கு உரிய அம்மன் தெய்வமாக விளங்கிவரும் அம்மன் சோலைவாழியம்மன்.

                திருவிழா தவிர எல்லா நாட்களிலும் இவ்வம்மனைத் தரிசிக்க பலர் வருகைபுரிந்து நேர்த்திக்கடன்களை செலுத்துகின்றனர். குழந்தை வரம் வேண்டி மண் பிடித்து வைத்து விரதம் இருந்து நேர்த்திக்கடனைச் செலுத்தி பொங்கல் வைத்து பலியிடும் வழக்கத்தினைக் கொண்டுள்ளனர். அம்மனின் மேல் உள்ள கலசம் மற்றும் எலுமிச்சை மாலைகளுக்கு ஆடிமாதத்தில் மிகவும் வரவேற்பும், அதனை வாங்கும் அருள் கிடைக்காதா என ஏங்கும் தன்மையில் பக்தர்கள் உள்ளனர். எடைக்கு எடை என குழந்தைகளுக்கு நேர்த்திக்கடன் செலுத்தும் மக்களும் வருகின்றனர். சிலம்பம், உடுக்கை, பம்பை, மேளதாளம் என இசைகள் முழுங்கப்பட்டு, வன்னித்து(வர்ணித்து) சாமியாடியப்பின் பூங்கரகம் ஐவர் தலைகளில் ஏற்றப்பட்டு கூட்ரோடு பகுதியிலிருந்து விடியற்காலை 3.30 மணிக்குச் சென்று ஒவ்வொரு வீதிகளிலும் இல்லம், இல்லமாகச் சென்று மீண்டும் ஊரைச்சுற்றிய பின் தலையில் ஐவரும் பூங்கரகத்தோடு பிள்ளையார் கோயிலை அடைந்து விரதத்தினை முடித்துவிடும்  பக்திப்பெருக்கைக் காண இயலுகிறது.

 

பூங்கரக வழிபாடு

                பெரிய பூங்கரகம், சோலைவாழி அம்மனுக்கும் மற்றுமுள்ள 4 கலச பூங்கரகங்கள் முறையே பிள்ளையார், மாரியம்மன், பொன்னியம்மன், கங்கையம்மன் என ஐந்து கலச பூங்கரகங்கள் ஐவரால் சுமக்கப்படுவது கண்கொள்ளாக் காட்சியாகும்.

 

பூங்கரகம் உருவாக்கப்படுதல்

            ஐந்து கலசங்கள் புனித நீராட்டுக்குப் பிறகு சோலைவாழியம்மன் ஆலயத்தின் முன்புறத்தில் அமர்ந்து, வழிவழியாக கரகத்தைச் சுமப்பவர்கள் விரதத்தோடு முறையாக பூங்கரகம் செய்யும் பணியில் ஈடுபடுவதைக் காணும் கண்கள் பக்திவெள்ளத்தில் திளைத்துவிடும் என்பது நிதர்சனமாகும்.  வேப்பிலைகளை முழுமையாகக் கொணர்ந்து வருகின்றனர்.  கலசத்தின் மையப்பகுதியில் வேப்பங்குச்சியை வைத்து, அதனைச்சுற்றி வேப்பிலை மாலைகளைச் சுற்றிக்கொண்டே, கூம்பு வடிவத்தில் செம்மையாகக் கோபுரமாக அமைத்து விடுகின்றனர். அடியில் கலசம் மட்டும் உள்ளது. கலசத்தின் மேற்புலம் வேப்பிலை மாலைகள் முறையாகச் சுற்றப்பட்டு கோபுர வடிவில் அமைய, நூலால் இறுக்கிக் கட்டி முடித்து விடுகின்றனர். இதனை அடுத்து நன்கு தொடுக்கப்பட்ட மல்லி (அ) முல்லை மாலைகளைச் சுற்றிக்கொண்டே வருகின்றனர். அம்மனுக்கு அலங்காரம் எப்படி செய்கின்றோமோ அத்தகைய பூ அலங்காரத்தோடு அடியில் பூமாலைச் சுற்றி தொங்கவிட்டும், மேற்பகுதியில் இறுகச்சுற்றப்பட்டு கோபுரக் கலசம்போல கண்ணுக்கு பக்தி விருந்தாக அமைந்து சிறக்கின்றன.

இவ்வாறே மற்றுமுள்ள நான்கு கலசங்களில் சிறிய அளவிலான பூங்கரகம் சுற்றுதல் பணி நிறைவடைகிறது. மிகப்பெரிய அளவிலான பூங்கரகம் – சோலைவாழி அம்மனுக்கு உரியதாக விளங்கிச் சிறக்கின்றது. பூங்கரகத்தில் கோர்க்கப்பட்ட மாலைகள் சுற்றி முடித்தப்பின்பு அதன் இருபக்கத்திலும் ஒரு பெரிய வண்ண மாலையை தொங்கவிடுகின்றனர். உச்சியில் எலுமிச்சைப்பழம் வைத்து அம்மன் தெய்வத்தின் உருவமாக மஞ்சள், குங்குமம் பொட்டிட்டு முறையாக கற்பூர ஆராதனைக்குப் பிறகு பம்பை, உடுக்கை, சிலம்பம், மேளதாளம் என உணர்ச்சிப் பெருக்கால் ஒலிகளை எழுப்பி, எல்லைக்கு அப்பால் (எல்லைப்பாறை) ஒரு பாறைக்கு கொண்டு சென்று வர்ணித்து சாமியாடி மீண்டும் கோயிலுக்கு நள்ளிரவில் வந்து இரவுப்பொழுது முழுவதும் அங்கேயே கரகாட்டம், சிலம்பம், பம்பை, உடுக்கை என இசை ஒலிகளை எழுப்பிக்கொண்டு இருக்கின்றனர். இதற்கு இடையில் கோயில் அருகில் பாட்டுக்கச்சேரி (அ) சொற்பொழிவுகளை நிகழ்த்தும் வைபவம் வெகுவாகக் கவர்கிறது. இடையறாத திருவிழா காலையில் தொடங்கியது முதல் பக்தர்களுக்கு இலவசமாக உணவு வழங்கி, வயிற்றுப்பசியும் நீங்கச்செய்யும் அன்னபூரணியாக, மனக்கவலை மாற்றும் அன்னையாக, அருளை வாரி வழங்கும் தன்மையில் சோலைவாழி அம்மனின் பக்திப்பரவலைக் கண்டு இன்புறும் பேறு அனைவர்க்கும் வாய்க்கும் தன்மைத்தாக உள்ளது.

 

கூடுவாம்பூண்டி கிராமத்தின் ஆடித்திருவிழா சிறப்பம்சங்கள்

நல்ல திதி பார்த்து ஆடிமாதம் செவ்வாய், புதன், வியாழன் என மூன்று நாட்களும் நடைபெறும். ஒவ்வொரு நிகழ்வின் ஆரம்பத்திலும் பறை முழங்கி ஊர்மக்களிடம் செய்தியை அறிவிக்கும் வழக்கம் சமுதாய வழக்கமாக இன்றளவும் உள்ளமை போற்றத்தக்கது. சோலைவாழியம்மனுக்கு பொங்கல் வைத்து வழிபாடும், பால்குடம் எடுத்தலும், பூங்கரகங்கள் சுமப்பதும், குழந்தைப்பேறு கிட்டியவுடன் எடைக்கு எடை செலுத்தும் வழக்கமும், மண்பிடித்து வைத்து வணங்கும் வழக்கமும் உள்ளது. எல்லா நாட்களிலும் பக்தர்கள் விருப்பத்திற்கு இணங்க வேண்டுதல் நிறைவேறியவர்கள் அன்னதானம் செய்யும்பொருட்டு, காணிக்கை செலுத்தும் தொகையிலிருந்து அன்னதான சத்திரம் கட்டப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. முழுநேரம் தண்ணீர் வசதியுடன் பஞ்சாயத்து சார்பில் நீர்வரத்தினைப் பெற்றுள்ளதால், இங்கு குறைந்த பொருட்செலவில் திருமண வைபவமும் இந்த ஆண்டு(2019) முதல் நடைபெற்று வருவது மக்களின் இன்றியமையாத செலவுக்கும் நன்மை செய்யும் தன்மையாக இலவச திருமணக்கூடம் இங்கு உள்ளது சிறப்பாகும்.

                ஊர்ப்பகுதியின் மையத்தில் மாரியம்மனுக்கும், கங்கையம்மனுக்கும் கூழ்வார்க்கப்படுகிறது. சுமார் 1 மணி அளவில் நல்லநேரம் பார்த்து பறை, பம்பை, மேள தாளம் முழங்க பக்திப்பரவசத்தில் திளைக்கும் தன்மையைக் காணலாம். சோலைவாழியம்மனுக்கு ஊரின் எல்லைப்பாறைக்குச் சென்று தெய்வம் வரச்செய்து, பொங்கல் இட்டு, மாவிளக்கு வழிபாடு செய்து மழை வேண்டியும், வேண்டுவோர் குறைநீங்கினால் அங்கப்பிரதட்சணம் செய்தும், சிறார்களுக்கு சிகை நீக்குதல் போன்றவையும் குறிப்பிடத்தக்கன. கிராமமக்களின் சுகமான வாழ்வுக்கு தெய்வத்தின் சாமியாடி சொல் பிறப்பை எதிர்நோக்குதல் உணர்ச்சி வசப்படும் வகையில் அமைந்துள்ளது. மூன்றாம் நாள், பூங்கரகங்கள் உடல் களைக்கப்படும். பூங்கரகங்களில் உள்ள எலுமிச்சைப் பழங்கள் ஏலம் விடப்பட்டு, அதனைப் பெறுவோர்க்கு பிள்ளைப்பேறு வாய்க்கும் என்பதும் உறுதியான நம்பிக்கையாகும். பூங்கரக பூக்களையும், மாலைகளையும் பக்தியுடன் கொண்டு சென்று பூசை அறையில் வைத்து வணங்குதல், வியாழன் இரவு நாடகமன்றத்தினர்(கூத்து) மூலம் தாயைக்காத்த தனயன், கைகொடுப்பாள் கற்பகாம்பாள், படவேட்டு ரேணுகாம்பாள் போன்ற கூத்தினை நிகழ்த்தி கிராமிய பண்பாட்டுக்கு வித்தினை விதைக்கும் பாங்கை இதன்மூலம் உய்த்துணரலாம்.

 

மேல்மலையனூர் – மாசித்திருவிழா

            விழுப்புரம் மாவட்டத்தில் மேல்மலையனூர் தாலுக்காவில் அங்காளபரமேஸ்வரி அம்மன் ஆலயம் அமைந்துள்ளது. பன்னிரெண்டு மாத அமாவாசைகளிலும், சிறப்பு வழிபாடு நிகழ்த்தப்படுகிறது. இவற்றுள் சுடலை ஆடல் எனும் மாசி மாதத்தில் பதினொரு நாட்கள் வெகுசிறப்பாக கொண்டாடப்பட்டு வரும் பெருமை உடையது. அங்காள பரமேஸ்வரியின் கோபம் தணியும் பொருட்டு சிவபெருமான் குழந்தையாக அருள்பாலித்து இருப்பதையும், மூலரூபமாக புற்றுவழிபாடு சிறப்புற இலங்குகிறது. பதினொரு தலைமுறையினர் மீனவ இன மக்கள் இவ்வம்மனுக்கு முறைமுறையாக வழிபாட்டை மேற்கொண்டு வருகின்றனர். இவ்வாலயத்திற்கு வரும் பக்தர்களுக்கு அருளை வழங்கும் அம்மனாக காட்சி தரும் தன்மைத்தாக வழிபாடு இலங்குகிறது. கோபம் உருக்கொண்ட வக்கிர அம்மனின் அருளைப்பெறவும், சிறுவர்கள் முதல் பெரியோர் வரை நேர்த்திக்கடனாக எலுமிச்சைப் பழத்தைப் பலியாக அளித்து வருகின்றனர்.

 

வடவெட்டி

            எலுமிச்சைப் பழத்தில் சிறப்பான வழிபாடு நிகழும் இவ்வாலயத்தில் அமைந்துள்ள அம்மனின் அருள்திறமும் அளவிடற்கரியது. இருவழிச் சாலையின் மருங்கே அமைந்துள்ள இவ்வாலயமும் நாள்தோறும் வழிபாட்டுக்கு உரிய ஆலயமாக இலங்குகிறது. இவ்வாலயத்தில் கண்ணேறு கழித்து எலுமிச்சைப் பழத்தினை நான்கு துண்டுகளாக எறிந்து வீசும் வழக்கம் இன்றளவும் சிறப்புப் பெற்றுள்ளது.

 

கூடுவாம்பூண்டி ஊஞ்சல் தாலாட்டு ( பூங்கரகங்கள்)

                ஆடிமாதத் திருவிழாவின் சிறப்பு அம்சமாக ஊஞ்சல் தாலாட்டு நிகழ்வு நடைபெற்று வருகிறது. எல்லைப் பாறையிலிருந்து வர்ணித்துக் கொண்டு வரப்பெறும் ஐந்து பூங்கரகங்களும் கோயிலுக்கு வந்து சேருகின்ற நிலை சிறப்புக்குரியது. வர்ணித்தல் நிகழ்வானது சிலம்பம், உடுக்கை, பம்பை மற்றும் மேளதாளங்களோடு நடைபெறுகையில் அவ்வாண்டிற்கான பொதுநலத்தினை கேட்டு அறியும் நிகழ்வு முக்கியமானதாகக் கருதப்படுகிறது. மழைவருதல் மற்றும் இயற்கை நலத்தில் சிறப்பு என்பது பற்றிய சாமியாட்டத்தின் குறிகளாக அறியப்பட உள்ள செய்தி ஒவ்வொரு ஆண்டும் எதிர்பார்ப்பிற்கு உரிய ஒன்றாகும்.

                ஆடிமாத செவ்வாய் அன்று விடியற்காலை பூங்கரகம் ஐவரால் தூக்கப்பட்டு ஊர்ப்பகுதியை அடைந்து காலைப்பொழுதிற்குள் மீண்டும் பிள்ளையார் கோயிலை அடைந்துவிடுகிறது. அடுத்தநாள் மாலைப்பொழுதில் ஊர்ப்பகுதியில் அமைந்திருக்கும் பிள்ளையார் கோயிலில் ஐந்து பூங்கரகங்களும் ஊஞ்சல் தாலாட்டுக்கு உரிய வகையில் பாடல்கள் பாடப்படுகின்றன. சோலைவாழியம்மன், பிள்ளையார், மாரியம்மன், கெங்கையம்மன், பொன்னியம்மன் என ஐவருக்கும் ஊஞ்சல் தாலாட்டு நிகழ்கிறது. ஊர் எல்லையிலிருந்து அம்மனை வர்ணித்து அழைத்து ஊஞ்சல் ஆட்டில் ஈடுபடுத்தி தாலாட்டுப் பாடல் பாடி மகிழ்வித்து மகிழும்நிலை போற்றுதற்குரியது. மக்களின் மனக்குறையைப் போக்கும் இத்திருவிழாக்கள் மனதிற்கு மகிழ்வைத்தருவதோடு, சந்ததியர்க்கு பக்தி அருளைத் தந்துகொண்டிருக்கும் நிகழ்வு எக்காலத்துக்கும் உரிய ஒன்றாக அமைந்துள்ளமை மகிழ்வுக்குரியது.

 

கூழ்வார்த்தலும் பொங்கல் வைத்தலும்

            மாரியம்மன், கெங்கையம்மன் இருவருக்கும் விரதம் இருந்து சிரசுவழிபாடாக கூழ்வார்த்தல் நிகழ்வும், ஆடிமாத செவ்வாயன்று நண்பகலுக்குள் நடந்தேறிவிடுகிறது. மீண்டும் மாலைப்பொழுதில் சோலைவாழியம்மன் ஆலயத்தின் மருங்கே பக்தர்கள் தாங்கள் கொண்டுவந்த உழுதுவித்த முதல் காணிக்கையாக விதைஅரிசிக்கு உரியதை அம்மனுக்காக அடுப்பு எரியவைத்து பொங்கல் பொங்கி ஒவ்வொரு வீட்டினரும் இரவு நேரம் வரை காத்திருந்து சாமியாடியப்பின் வர்ணித்து வந்தபின் நள்ளிரவில் தலையில் பொதிசுமந்து பொங்கலை வழிபட்டு ஊர்ப்பகுதியில் உள்ள இல்லத்திற்கு திரும்பிவிடுகின்றனர்.

                அடுத்தநாள் அன்று விடியற்காலையில் வரும் பூங்கரகங்களின் வருகையை ஆவலுடன் எதிர்நோக்கிக் காத்திருக்கின்றனர். தேங்காய்ப்பழம், பூ, கற்பூர தீபாராதனைத் தட்டோடு இல்லத்தில் காத்திருந்து, ஐவரின்(பூங்கரகத்தினை சுமந்து வருபவர்கள்) கால் பாதங்களைக் கழுவி மஞ்சள் குங்குமப் பொட்டிட்டு சுற்றி வலம் வந்து பூங்கரகம் சுமப்பவரின் முன்பாக இடைவெளிவிட்டு ஒருவர்பின் ஒருவராக இல்லத்தில் உள்ள அனைவரும் விழுந்து வணங்குகின்றனர். அந்த ஐவரும் தலையில் பூங்கரகத்துடன் படுத்து இருப்பவரின் உடலைத்தாண்டி வருகின்றனர். இவ்வாறே அனைத்து இல்லங்களிலும் இந்நிகழ்வு தொடர்ச்சியான பக்திப்பெருக்காக உள்ளமை அறியத்தக்கது.

 

தொகுப்புரை

 

            பூங்கரகத்தினை அம்மனாக பாவித்தலும், அதனைத் தூக்கி வருபவரையும் தெய்வ அருள் பெற்றவராகவே கருதும் நிலை உயர்நலம் கொண்ட ஆன்மீக நிலை எனலாம். அடுத்த நாளில் மாலைப்பொழுதில் ஊஞ்சல் ஆட்டு(பூங்கரகத்திற்கு) நடைபெற்று தாலாட்டு நிகழ்ந்தேறும். பூங்கரகங்களைத் தாலாட்டி பாடும்போது பக்தியின் விதந்த நிலைகளைச் சொற்களால் வெளிப்படுத்த இயலாத நிலையில் அனுபவத்தின் உள்ளீடு பெற்று அகமகிழ்வு எய்துதல் பெறும் பேறாகும்.

 

                குழந்தைத் தாலாட்டு மனமகிழ்வின் உச்சம் எனலாம். தெய்வ வழிபாட்டின் ஊஞ்சல் தாலாட்டு மெய்மயக்கும் பக்திஅனுபவத்தின் அதீத இன்பப்பெருக்கின் உச்சம் என்பதே மெய்ப்படும்.  ஒவ்வொரு ஊர்களிலும் அம்மனின் பெயர் மாறினாலும், ஆன்மிக உணர்வினைத் தந்தருளும் ஆற்றலை அனுபவத்தின் வாயிலாகவே பெற இயலும்.

 

               வழிபடு தெய்வம் நிற்புறம் காப்பப்

       பழிதீர் செல்வமொடு வழிவழி சிறந்து

       பொலிமின்”                   - தொல்காப்பியம் புறநிலை வாழ்த்து

 

      ‘கொற்றவை நிலை, வேலன் வெறியாட்டு, பூவைநிலை,

காட்சி கால்கோள் நீர்ப்படை நடுகல் சீர்த்தகு

சிறப்பில் பெரும்படை வாழ்த்தல்’                                      

என வரும் வெட்சிப் பகுதிகள் பழந்தமிழர் வழிபாட்டியலைக் காட்டுவன என்பதும் கருதத்தக்கது. வழிபடு தெய்வத்திற்கு நேர்த்திக்கடன் செய்து முறையாக வணங்கியதோடு, முழு அருளையும் பெற்று சமுதாயத்தில் ஒருங்கிணைந்து செய்யும் பக்தி உணர்வு மேலோங்குகிறது. எந்நாளும் கிராமியக் கலைகளின் கலைஞர்களாலும், கிராமிய மக்களாலும் நிலைபேறு கொண்ட தன்மையை உணர்த்துவதாகவே அமைகிறது. சேற்றில் கைவைத்து உழைப்பை நல்கிய கிராமிய மக்களின் வியர்வைத்துளிகளை இத்தகு திருவிழாக்கள் நடைபெற்று இன்பத்தினை ஏற்படுத்தித் தருகின்றன என்பது சாலத்தகும்.