4ஆம் ஆண்டில் நமது இலக்கியச்சுடர்
படைப்புகளை periyaswamydeva@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி இதழின் வளர்ச்சிக்கு உதவுங்கள்

புதன், 1 ஜூலை, 2020

இன்பமும் - துன்பமும்



அக்ரி.கோ.ஜெயகுமார்,

மேனாள் வேளாண்மை இணை இயக்குநர்,

காந்திநகர், வேலூர் -632006.

அலைபேசி எண்: 94869 38900.

 

இரும்பு என்றாலே துருப்பிடிக்கத்தானே செய்யும். மரம் என்றாலே கரையான் அரிக்கத்தானே செய்யும். அது போல வாழ்க்கை என்றாலே இன்பமும், துன்பமும் இரண்டறக் கலந்து தானே இருக்கும். சக்கரம் போல சுழன்று மாறி மாறி வருவது தான் வாழ்க்கை என்ற சூட்சமம் தெரிந்துக் கொண்டால் துன்பங்கள் நம்மைத் துரத்தாது.

 

ஞானி ஒருவரிடம் குடும்ப வாழ்க்கையை மேற்கொண்டிருக்கும் ஒருவர் வந்தார். ஞானியிடம் தான் ஞானம் பெற விரும்புவதாகவும், தாங்களே குருவாக இருந்து ஞானத்தில் சிறந்த ஞானம் எதுவோ அதை கற்பிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார். அறிவுரைகள் மூலம் ஞானத்தை புரிய வைக்க முடியாது என அறிந்த ஞானி அவரிடம் ஞானத்தை அறிந்து கொள்ள ஒரு வழியைக் கூறினார். 

 

 தினமும் உன் வீட்டின் முன் உள்ள திண்ணையில் காலை முதல் மாலை வரை அமர்ந்துக் கொண்டு அந்த வழியாக கழுதையின் மீது சலவைத் தொழிலாளி பொதிகளை ஏற்றி வருவார் என்றும், காலையில் ஏற்றிக் கொண்டு செல்லும் போதும், மாலையில் திரும்ப பொதிகளை ஏற்றிக் கொண்டு வீடு திரும்பும் போதும் அதனை கவனித்து வரும் படி கூறினார்.

 

மறுநாள் பொழுது புலர்ந்தவுடன் அந்த குடும்பஸ்தர் தன் வீட்டு திண்ணையில் வந்தமர்ந்தார். சலவைத் தொழிலாளி அழுக்கு பொதிகளை கழுதை மேல் ஏற்றிக் கொண்டு சென்றார். மீண்டும் மாலையில் சலவை செய்த துணிகளை ஏற்றிக் கொண்டு வீட்டிற்கு சென்றதையும் கவனித்தார். அவருக்கு ஒன்றும் விளங்கவில்லை.

 

அடுத்த நாள் காலையில் ஞானியிடம் சென்றார். நீங்கள் சொன்னது போல காலையிலும், மாலையிலும், கழுதைகள் சென்றதையும், திரும்பியதையும் கவனித்தேன். ஆனால் அதில் ஞானம் தொடர்பான எந்த செய்தியும் இருப்பது போல் எனக்குத் தெரியவில்லையே என்று கூறினார்.

 

உடனே ஞானி கூறினார், அன்பரே! காலையில் கழுதைகள் அழுக்கு துணிகளை சுமந்துகொண்டு சென்றன. அப்போது அது அழுக்கு துணிகளை சுமந்துகொண்டு செல்கின்றோம் என்ற துன்பமோ, வருத்தமோ அடையவில்லை. அதேபோல் மாலையில் சலவை செய்த சுத்தமான துணிகளை சுமந்து வருகின்றோம் என்ற இன்பமோ, மகிழ்ச்சியோ அடையவில்லை. இரண்டையும் ஒன்றாக நினைத்து தான் அந்த கழுதைகள் பொதிகளை சுமந்துகொண்டு செல்கின்றன.

 

எனவே துன்பம் வரும் போது அதிக துக்கமடைந்து, சோர்வடையாமலும், இன்பம் வரும் போது அதிகமாக துள்ளிக் குதித்து மகிழ்ச்சி அடையாமலும் இன்பம், துன்பம் இரண்டையும் நடுநிலையான மனதுடன் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற செய்தி அந்த கழுதைகள் மூலம் நமக்கு தரும் ஞானம் என்ற செய்தி என கூறினார் அந்த ஞானி.

 

ஆம்! இன்பமும், துன்பமும் நம்மிடையே நிரந்தரமாக தங்கி விடுவதில்லை. இன்பம் வரும் போது மனது மகிழ்ச்சி அடைகிறது. ஆனால் துன்பம் வரும் போது நம் இதயம் அதை ஏற்க மறுக்கிறது. இன்பம் வரும் வேளையில் நாம் அதை வரவேற்பதைப் போல, துன்பத்தை நாம் வரவேற்காவிட்டாலும் அவற்றை ஏற்றுக் கொள்ளும் மனப் பக்குவம் கொள்ள வேண்டும். அப்போது தான் நம் இதயம் இரண்டையும் சரி சமமாக பாவித்து நிம்மதியான வாழ்க்கைக்கு வழி வகுக்கும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.

 

வாழ்க்கையில் தேவைப்படும் போது அறிவையும், தேவையற்ற போது மௌனத்தையும் சமநிலையில் பயன்படுத்தி வாழத் தெரிந்தால் எதையும் தேட வேண்டிய அவசியம் இருக்காது. இது தான் வாழ்வின் மிகப் பெரிய இரகசியமும், வெற்றியும் ஆகும்.