4ஆம் ஆண்டில் நமது இலக்கியச்சுடர்
படைப்புகளை periyaswamydeva@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி இதழின் வளர்ச்சிக்கு உதவுங்கள்

புதன், 1 ஜூலை, 2020

வைரஸ் கற்றுத் தந்த வாழ்வியல்



விழித்திரு வீட்டில் இரு விலகி இரு என்ற விதி முறையால்

விலகிய சொந்தங்களை ஒட்ட வைத்தது வைரஸ்

 

உருண்டோடும் நம் வாழ்க்கைச் சக்கரத்தை ஓரங்கட்டி

ஓய்வெடுக்கச் செய்தது வைரஸ்

 

பல்லாங்குழி விளையாட்டோடு பண்பாட்டையும் நமக்கு

பக்குவமாய் கற்றுத்தந்தது வைரஸ்

 

அடுப்படியில் பெண்கள் என நிலை மாறி இப்பொழுது

அடுப்படியில் ஆண்கள் என மாற்றியது வைரஸ்

 

என் கடன் பணி செய்வதே என்ற அப்பர்களை

 என்கடன் அன்பு செய்வதே என மாற்றியது வைரஸ்

 

ஓய்வு அறியாதவன் நான் என வசனம் பேசியவர்களை

 ஓய்வு அறியச் செய்தது வைரஸ்

 

 சல சல எனச் சாலையில் ஓடிய வாகனங்களைச் சற்று

சலிப்படைய செய்து காற்றைத் தூய்மைப்படுத்தியது வைரஸ்

 

தீண்டாமை பெருங்குற்றம் என்ற வாசகத்தைப் படித்தவர்களுக்கு

இப்பொழுது புரியவைத்தது தீண்டாமை ஒரு பாவச் செயல் என்று

 

மஞ்சளும் சாணமும் தெளித்து வேப்பிலையை வீட்டின் முகப்பில்

சொருகும் முன்னோர் மரபை முறையாய் சொன்னது வைரஸ்

 

கைகொடுத்துப் பேசும் மரபை மாற்றி

கையெடுத்து வணங்கும் தமிழ்ப் பண்பாட்டை உலகறியச் செய்தது வைரஸ்

 

விபத்தைக் குறைத்தும் கொஞ்சம் மதுவை மூடியும்

 மாசற்ற மனிதர்களாக்கியது வைரஸ்

 

ஊரடங்கால் வீதி சண்டை,சமூகச் சண்டை நாட்டுச் சண்டை

இல்லாது சமூகத்தை நலம் பெற வைத்தது வைரஸ்

 

மதங்களை மறந்து மருத்துவர்களைக் கடவுளாய்

போற்றச் செய்தது வைரஸ்

 

உடல் பிணியை விட பசிப்பிணி பெரிதென

 உரக்கச் சொன்னது வைரஸ்

 

இத்தகைய கட்டுப்பாடும் விதிமுறைகளும்- மனிதனே

 உனக்கு மட்டும் தான் விலங்கினத்திற்கு அல்ல பறவைஇனத்திற்கு அல்ல -ஏன்

பஞ்சபூதத்திற்கும் அல்ல ஏனென்றால் அவை இயற்கையோடு இணைந்து வாழ்கிறது

 நீ மட்டும் தான் செயற்கையோடு செத்துச் செத்து வாழ்கிறாய்!!!

இப்பொழுது புரிந்துகொள் இயற்கையை வெல்ல முடியாது என்று

 

           

முனைவர் த .ராஜீவ்காந்தி

உதவிப்பேராசிரியர் தமிழ்த்துறை சுழற்சி 2)

அகர்சந்த் மான்முல் ஜெயின் கல்லூரி

மீனம்பாக்கம் சென்னை 114

Rajiviphd@gmail.com   9787065515