4ஆம் ஆண்டில் நமது இலக்கியச்சுடர்
படைப்புகளை periyaswamydeva@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி இதழின் வளர்ச்சிக்கு உதவுங்கள்

புதன், 1 ஜூலை, 2020

இருமனம் அறிந்து திருமணம்


முனைவர் பீ. பெரியசாமி

தமிழ்த்துறைத்தலைவர்

டி.எல்.ஆர். கலை மற்றும் அறிவியல் கல்லூரி

விளாப்பாக்கம் – 632 521.

அழைக்க : 9345315385

மின்னஞ்சல் : periyaswamydeva@gmail.com

 

அவள் எழுதிக்கொண்டே இருந்தாள், இடையே அம்மா அழைக்கும் சத்தம் கேட்டு என்னம்மா! என்று குரல் கொடுத்தபடியே ஓடினால், அது ஒன்னுமில்லை உன்ன பொண்ணு பார்க்க பக்கத்து ஊர்ல இருந்து வந்து இருக்காங்க போயி மூஞ்சிய கழுவினு புதுதுணி போட்டுனு வா.

                என்னமா சொல்ற..! அதா நேத்தே உங்கப்பா சொன்னது என்னா?

நான்தான் அப்பவே சொன்னனே இன்னும் ஒருவருசம் போட்டோம் நான் அப்புறம் கல்யாணம் பண்ணிக்கிறேன்னு. இந்த வருஷம் ஒழுங்கா படிச்சிட்டனா டிகிரி வாங்கிடுவமா. நீ கொஞ்சம் அப்பாகிட்ட எடுத்து சொல்ல..

                அச்சச்சோ அதெல்லாம் உங்கப்பா கிட்ட என்னால சொல்ல முடியாதுமா உங்கப்பகிட்ட இத சொல்ல போனனா நான் அதோட எங்கப்ப ஊட்டுக்குதான் போகனும்..

அட இன்னுமா ரெடியாவுறா பொண்ணு ? மாப்ள வந்து நேரமாவுது இல்ல கூட்டினு வாய பவுனு….

இதோ வந்துட்ட…! ஏய் உங்கப்ப இன்னொரு தபா கூப்டுரத்துக்குள்ள போயிடனும் சீக்கிரம் வா..

இதாங்க என் பொண்ணு செல்வி காலேஜ்ல படிக்குது நல்லா பாத்துக்குங்க பிறகு எதுவும் கொற சொல்லக்கூடாது அது எனக்கு புடிக்காது எதுவா இருந்தாலும் இப்பவே பட்டுனு சொல்லிடனும்

மாப்ள செல்வம் பொண்ண மேலும் கீழவும் பாத்துட்டு இருக்கும் போதே கூட்டத்துல இருந்த ஒருத்தரு என்ன செல்வம் பட்டிகாட்டான் முட்டாய் கடைய மொரச்சி பாக்கர மாதிரி பாக்குற என்ன பொண்ணு புடிச்சியிருக்கான்னு கேட்க..

அவனும் ரொம்ப வெட்கப்பட்டுகினே அட போ பெரியப்பானு சொல்ல….. எல்லாருக்கும் ஒரே சிரிப்பு.

மாப்பிள்ளைய பார்க்கவே புடிக்காத செல்வி குனிஞ்ச தல நிமிராம இருந்தாஇத பார்த்த மாப்ள வீட்டு காருங்க பொண்ணு ரொம்ப அடக்க ஒடுக்கமா லட்சணமாதான் இருக்கா சட்டுபுட்டுனு ஒரு நல்ல நாளா பார்த்து கல்யாண தேதி முடிச்சிட வேண்டியதுதானு சொல்ல சோமுவுக்கு பவுனுக்கும் ஒரே சந்தோஷம்.

உடனே கூட்டத்தில இருந்த ஒருத்தர்கிட்ட தினசரி காலென்டர் கைமாற இன்னொருத்தர் நகை கணக்கு பேச ஆரம்பித்தார். ஏம்பா சோமு மாப்ள டவுன்ல பெரிய கம்பெனியில நல்ல உத்தியோகத்துல இருக்கார். மாசம் முப்பதாயிரம் சம்பாதிக்கராரு அதனால நீ கொஞ்சம் யோசிச்சு நல்லா செய்யனும்னு மாப்ள வீட்ல எதிர்பார்க்கராங்க நீ என்னப்பா சொல்ற.

அட நான் என்னத்த மாமா சொல்றது. நீங்களே சொன்னீங்கனு தான் வர சொன்ன மாப்பிள்ளைக்கும் நம்ப பொண்ண புடிச்சி போச்சி அப்புறம் அவங்க கேக்குறத செய்யறுத்தான் மொற. நீங்க என்ன வேணும்னு கேட்கராங்கனு கேட்டு சொல்லுங்க செஞ்சிபுடலாம்னு சோமு சொல்ல.

அவரும் மாப்பிள்ளையோட அப்பா அம்மாவை ஒரு மாதிரி சைகையில் பார்த்து கேட்டுவிட்டு.

ஏம்பா சோமு இருபத்தஞ்சி சவரன் பொண்ணுக்கு பத்து சவரன் மாப்பிளைக்கு மீதி எல்லாம் உனக்கு தெரியாததா ஒரு பெரிய வண்டி, சாமான் செட்டு கல்யாணத்த நீயே பண்ணிடனும்னு சொல்லாங்கப்பா நீ என்ன சொல்ற..

அட நான் என்ன சொல்றது இருக்கற இருப்பு உங்களுக்கு தெரியாததா மொத்தமா இருபத்தஞ்சி சவரன் போடுறேன் வண்டி சாமான் செட்டு எல்லாம் எடுத்து கொடுக்குறேன். ஆனா கல்யாணம் எல்லாம் இப்போ இருக்கற நிலையில என்னால பண்ண முடியாது. அதெல்லாம் அவங்களேதான் பார்த்துக்கனும்.

இப்படியே ஒருத்தொருத்தர் மாத்தி பேசிக்கிட்டு இருந்தாங்க. இத பாத்துட்டு இருந்த செல்விக்கு நமக்கு புடிச்சிருக்கா இல்லையானு யாராவது கேட்பாங்களாநமக்கு என்ன வேணும்னு யாராவது கேட்பாங்களானு இருந்தது.  அங்கு இருந்தவங்க முகத்தையெல்லாம் திரும்பி திரும்பி பார்த்தா ஆனா யாரும் அவள ஒரு மனுஷியா கூட மதிக்கல.

அவ மனசுக்குள்ள ஒரு பெரிய ஆதங்கம் ஓடிக்கொண்டே இருந்தது.

எல்லாம் பேசி முடிச்சி இருபத்தி சவரன் நகை, பெரிய வண்டி, சாமான் செட்டோட பாதி கல்யாண செலவை சோமு ஏத்துக்கராதா முடிவாயிடிச்சு. தை மாதம் பத்தாம் நாள் கல்யாணம் தேதியும் குறிச்சாச்சு.

அன்று இரவு ஒரு எட்டு மணி இருக்கும் செல்வி மெல்ல அவ அம்மாவ கூப்புட்டு கேட்டா..

ஏம்மா.. கல்யாணம் எனக்கா வேற யாருக்காவதா?

ஏண்டி.. அப்டி கேக்குற..

இல்ல மாப்ளகிட்ட என்ன புடிச்சிருக்கானு கேட்டிங்க மாப்ளகிட்டயும் அவங்க அம்மா அப்பா கிட்டயும் என்ன வேணும்னு கேட்டிங்கஆனா யாருமே எங்கிட்ட மாப்ளயை புடிச்சிருக்கானு கேட்கவே இல்லையே மா.

அடிபோடி பைத்தியகாரி நீ ஒலகம் தெரியாத பொண்ணா கீர, இந்த ஒலகத்துல எந்த மனுஷனும் பொண்ணுங்கல சக மனுஷியாவே பார்க்குறது கிடையாதுடி. நீ யாவது பராவாயில்லை உன்ன கட்டிக்க போரவன நேர்லயாவது பார்த்த ஆனா நான் உங்கப்பன மணமேடையில தான் பார்த்த.

அட என்னமா சொல்ற ரெண்டு பேரும் பார்க்கமலேயே கட்டிகிணீங்க.

நான் தான் பார்க்கல ஆனா உங்கப்பா என்ன எங்கவூரு சந்தைக்கு மாடு வாங்க வந்தப்போ பார்த்துகீது. அப்போ அங்க இருந்தவங்க விசாரிச்சிபுட்டு அவுங்க அப்பன ஆத்தால கூட்டினு எங்க வூட்டுக்கு பொண்ணு கேட்டுவர எங்கப்பனும் சரினு எல்லாத்தையும் பேசி முடிச்சிபுட்டு கல்யாணத்துக்கு ஒரு வாரம் முன்னாடி எங்கத்தைங்க எல்லாம் எங்கவூட்டு வந்தாங்க அப்போ நீ கேக்கர மாதிரிதான் நானும் எங்க ஆத்தாகிட்ட என்ன ஆத்தா அத்தைங்க எல்லாம் ஒட்டு மொத்தமா வந்திருகாங்கனு கேட்கபோயி அப்பதான் எங்காத்தா எனக்கு கல்யாணம் அப்படின்னு சொன்னா….

அப்புறம் என்னாச்சுமா!

அப்புறம் என்னாபன்றது ஏ ஆத்தா அவன் கருப்பா செவப்பான்னு கூட பார்க்கல அவன எப்படி நான் கட்டிக்கறதுனு கேட்க. அவன் கருப்பா இருந்தாலும், செவப்பா இருந்தாலும் ஆம்பளடி மூடினு போய் பெரியவங்க சொல்றத செய்யுடினு எங்க ஆத்தா சொல்லிட்டா..

எங்கத்தைங்களுக்கு சொல்ல அவளுக்கு அதுக்குமேல என்னாடி சொல்ற இந்த காலத்து பொண்ணு வெல போவுரதே பெரிய மலையா கீது நீ என்ன கண்ணாலம் இப்ப வேணாம் மாப்ள நான் பார்கனும்னு பண்ணிகிட்டு திரியுற போயி நல்ல திண்ணுப்புட்டு இருக்கற வேலயபாருனு சொல்லிபுட்டாங்க.

கல்யாண நாளும் வந்துச்சு உங்கப்பன அந்த மணமேடயிலதான் பார்த்த எட்டி எங்கம்மா பொடவய புடிச்சி எம்மா இந்த மாப்ளைய எனக்கு புடிக்கலனு சொன்ன அதுக்கு எங்கம்மா சூமாப்ள காதுல விழ போவுது எல்லாம் போகபோக புடிக்குமுனு சொல்லிபுட்டாங்க.

அப்புறம் தாலிகட்டியாச்சி நானும் உங்க மூனுபேர பெத்திக்கிட்டு பொம்பள பூமியபோல எல்லாத்தையும் பொறுத்துட்டு தாண்டி போவனும் வேர வழியில்ல..

அப்படியே கண்கொட்டாமல் அம்மாவை பார்த்துக் கொண்டிருந்தா செல்வி...

ஏம்மா சரி நீங்க சொல்ற மாதிரி அந்த மாப்ளையே நான் கட்டிகிறேன் ஆனா தை மாசத்துக்கு பதிலா ஆவணி மாசம் கல்யாணம் வச்சிக்க சொல்லி யாவது அப்பாகிட்ட பேசுமா.

ம்ம்.. நான் காலைல உங்கப்ப எழுந்த ஒடனே பேசிடுறேன் இப்ப வேணாம்.

சரிம்மா எப்படியாவது இதமட்டும் ஒகே பண்ணிட்ட நானும் காலேஜ் முடிச்சிடுவேன்.

சரிசரி வா சாப்புட்டு படுக்கலாம்னு சொல்லி பவுனு கூட்டினு போய் எல்லாருக்கும் சாப்பாடு போட்டுட்டு சாப்பிட்டு தூக்கினாள்.

செல்விக்கோ தூக்கமே வரல. எப்படியாவது இந்த கல்யாணத்த ஒரு ஆறு மாதம் தள்ளி போட்டுன்னு அப்பதான் நம்ப நெனச்சபடி டிகிரி முடிக்க முடியும்னு யோசிக்கிட்டே இருந்தா..

மறுநாள் பொழுது விடிந்தது.

பவுனு சோமுவைப் பார்த்து என்னங்க..!

என்ன சொல்லு.

இல்ல நம்ம பொண்ணு…..!

பொண்ணு என்ன

அதுக்கு ஒண்னுமில்லை

அப்புறம்….

அதான்…!

அட என்னென்னுதான் சொல்லி தொலையேன்.

அதாங்க அவ படிப்பு முடிச்சிட்டு கண்ணாலம் பண்ணிக்கறனு உங்ககிட்ட என்ன சொல்ல சொன்னா

அதெல்லாம் ஆவாது அவன மாதிரி ஒரு நால்ல மாப்ள கிடைக்கறது எல்லாம் ரொம்ப கஷ்டம்னு முருகேச மாமா அன்னிக்கே சொன்னாரே, கேட்ட இல்ல அப்புறம் என்ன.

அது இல்ல நீங்க மாப்ள ஊட்ல பேசிபாக்கலாம் இல்ல

அதெல்லாம் பேச முடியாது மாப்ளைக்கு தை மாசம் உட்டா அடுத்த மூனு வருசத்துக்கு கல்யாணமே ஆவாதுனு ஜோசியக்காரன் சொல்லிடானாம் அதான் அவுங்க உடனே கல்யாணம் வைக்க சொல்றாங்க.

பவுன மௌனமாக செல்வியைப் பார்த்து உதட்டை பிதுக்கி விட்டு சென்றாள்.

செல்விக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. தலையில் இடி விழுந்ததைப்போல் உணர்ந்தால் அடுப்படியில் உட்கார்ந்து கொண்டு ஓவென அழுதாள். இனி நாமும் நம்ம அம்மாவ போல அடுப்படியிலதான் கிடக்கனுமோனு அவ நெஞ்சு படபடத்தது. அப்போ இத்தன நாளா நாம கண்ட கனவெல்லாம் அவ்ளோதானா என்று நினைக்கும் போதே நெஞ்சே வெடித்து விடுவதுபோல இருந்தது.

தான் எப்படியாவது படித்து டிகிரி வாங்கி கலெக்டராவனும்னு தானே இப்படி ரா பகலா படிச்சோம். இப்படி எவனுக்கோ கழுத்த நீட்ட எல்லாத்தையும் தொலைச்சிட்டு நிக்குரோமேனு நினைக்கும் போது நாம இருக்கறத விட சாகரதே மேலுனு மனசுக்குள் தோன்றியது என்னென்மோ சாக்கு போக்கு சொல்லி பாத்தா ஆனா அவ மனசு தான் கடைசியில் வென்றது.

ஒர மூட்ட பக்கத்துல பூச்செடிக்கு அடிக்க வச்சிருந்த மருந்துல தன் ஆசைகளோட அவளும் அடக்கமாகிட்டா