4ஆம் ஆண்டில் நமது இலக்கியச்சுடர்
படைப்புகளை periyaswamydeva@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி இதழின் வளர்ச்சிக்கு உதவுங்கள்

புதன், 3 ஜூன், 2020

அற இலக்கியங்களில் இல்லறம் (ஆய்வுக்கட்டுரை) - முனைவர் பீ. பெரியசாமி,

முனைவர் பீபெரியசாமி,

தமிழ்த்துறைத்தலைவர்,

டி.எல்.ஆர்கலை மற்றும் அறிவியல் கல்லூரி,

விளாப்பாக்கம்  632521.

Mail id: periyaswamydeva@gmail.com

Cell: 9345315385

 

அற இலக்கியங்களில் இல்லறம்

ஆய்வுச்சுருக்கம்

இல்லறம் என்பதே நல்லறம் என்பர் சான்றோர். இன்று இல்லறம் என்பது பலருக்கு நல்லறமாய் அமைவது என்பது காலக்கிடக்கை. இல்லறம் நல்லறமாய் மாற்ற நாம் நம் முன்னோர்கள் கூறியவற்றைப் பின்பற்ற வேண்டியது அவசியம். நாம் எப்படி நம் முன்னோர்களின் மருத்துவம், உணவு போன்றவற்றை விட்டுவிட்டோமோ அதேபோல்தான் அவர்கள் இல்லறம் சிறக்க நமக்குச் சொன்ன அறிவுரைகளையும் விட்டுவிட்டோம். கணவன் மனைவி சேர்ந்து வாழ்கின்ற இல்வாழ்க்கையோடு அறமும் சேர்ந்து வாழ வேண்டும் இல்லையேல் பொருளும், இன்பமும் தொலைந்து போய்விடும். இல்லற வாழ்வில் சிறப்புடையவன் மற்ற கல்வி, துறவிமனத்துறவு போன்ற அறநிலைகளிலுள்ள மூவர்க்கும் உறுதுணையாவான். ஒருவன் இல்வாழ்க்கையை அறவழியில் நடத்துவானாயின் அதைவிட அவன்வேறுவழியில் சென்று பெறும் மேலான பயன் வேறில்லை. இல்வாழ்க்கையை, அறவழியில் நடத்துபவன் மறுமை இன்பத்தை நாடி முயல்பவரை விடச் சிறந்தவன். அறனே இல்வாழ்க்கை அந்த இல்வாழ்க்கை பிறர் பழிக்கக் கூடியதாக இருத்தல் கூடாது. துறவியர், ஏழைஆதவற்றிருபவர்களுக்கு  இல்லறவாழ்வில்  இருப்பவனே துணையாவான். இவ்வுலகில் வாழவேண்டிய நெறியுடன் இல்வாழ்க்கையில் வாழ்பவன் வானுலகத்தில் வாழும் தேவர்களுக்கு ஒப்பாகக் கருதப்படுவான் என்பது இவ்வாய்வின்வழி அறியப்படுவதாகும்.

முக்கிய சொற்கள்

சங்க இலக்கியம், அறநூல்கள், வாழ்வியல், இல்லறம், கணவன் மனைவி ஒற்றுமை, பெண்களின் உயர்வு, விருந்தோம்பல்

முன்னுரை

இல்லறம் என்பதே நல்லறம் என்பர் சான்றோர். இன்று இல்லறம் என்பது பலருக்கு நல்லறமாய் அமைவது என்பது காலக்கிடக்கை. இல்லறம் நல்லறமாய் மாற்ற நாம் நம் முன்னோர்கள் கூறியவற்றைப் பின்பற்ற வேண்டியது அவசியம். நாம் எப்படி நம் முன்னோர்களின் மருத்துவம், உணவு போன்றவற்றை விட்டுவிட்டோமோ அதேபோல்தான் அவர்கள் இல்லறம் சிறக்க நமக்குச் சொன்ன அறிவுரைகளையும் விட்டுவிட்டோம். அவ்வாறு இருக்கும் சூழலில் அற இலக்கியங்களில் நம் முன்னோர்கள் நம் இல்லறம் சிறக்க எவ்வாறான கருத்துக்களை கூறியுள்ளனர் என்பதை எடுத்துக்காட்டுவதே இவ்வாய்வுக்கட்டுரையின் நோக்கமாகும்.

இல்லற வாழ்வும் அறமும்

இல்லறத்தின் கடமைகளைத் தொல்காப்பியர்,

விருந்து புறந்தருதலும் சுற்றம் ஓம்பலும்

பிறவும் அன்ன கிழவோள் மாண்புகள்(தொல். கற்.11)

எனும் நூற்பாவில்,சுற்றத்தைப் பேணுதல், விருந்து உபசரித்தல் போன்ற செயல்களே இல்லறத்தாருக்குரிய கடமைகளாகக் கூறுகின்றார். மேலும், இல்லற வாழ்விலுள்ள ஆடவன் தன் பெற்றோர், மனைவி, பிள்ளை ஆகிய மூவருக்கும் சிறந்த துணையாகக் கருதப்படக் கூடியவனாக இருத்தல் வேண்டும் என்பதை,

இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும்

நல் லாற்றின் நின்றதுணை. (குறள்.41)

என்ற குறளில் இல்லறத்திலுள்ள ஆடவனுக்குரிய குணத்தை எடுத்துரைப்பதை அறியமுடிகின்றது.

இல்லற இயல்பு

இல்லறமென்பது இயற்கையோடு இயைந்தது. இருவேறுவகையில் வகையில் விளங்கும் ஆண்மக்களின் பண்பும், பெண் மக்களின் பண்பும் ஒன்று சேர்ந்து உயர்ந்த ஒழுக்கத்தினை உலகில் விளங்குதலின் இல்லறமே நல்லறமாயிற்று. இதனை,

இயல்பினான் இல்வாழ்க்கை வாழ்பவன் என்பான்

முயல்வாருள் எல்லாம் தலை. (குறள்.47)

என்கிறார் வள்ளுவர். மேலும், இல்லை என்று வருபவர்களுக்கும் துறவிகளுக்கும் உணவளித்து எந்த நாளிலும் மாற்றான் மனைவி மீது ஆசை வைக்காது, பொய்பேசாது, எல்லாக்காலத்திலும் எப்போதும் பிற உயிர்களைக் கொல்வதைத் தவிர்த்து விருந்தினருக்குக் கொடுத்துத் தாமும் உண்டு வாழ்வதே நல்ல இல்லற வாழ்வு என்பதன் சிறப்பியல்பை,

பிச்சையும் ஐயமும் இட்டுப் பிறன் தாரம்

நிச்சலும் நோக்காது பொய்ஒரீஇ நிச்சலும்

கொல்லாமை காத்துக் கொடுத்து உண்டு வாழ்வதே

இல்வாழ்க்கை என்னும் இயல்பு (அறநெறி.164)

எனும் பாடலின் வழி இல்லறத்தின் இயல்பை உணரலாம். மேலும், இல்வாழ்வில் அறத்தை வழுவாமல் கடைப்பிடித்தால் அதனைவிட சிறந்தபயன் எதுவுமிருக்க முடியாது. தன் வாழ்க்கையில் எவ்வித குற்றமுமில்லாமல் நற்செயல்களைப் பின்பற்றி நடக்கும் பொழுது ஒருவன் தெய்வத்துக்கு நிகராக போற்றக்கூடிய தகுதியை உடையவனாகின்றான். என்பதனை,

வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்

தெய்வத்துள் வைக்கப் படும். (குறள்.50)

என்று வள்ளுவர் சிறப்பித்திருக்கின்றார்.

இல்லறத்தில் பெண்கள்

இல்லறமேற்று வாழும் பெண்களின் பெருமைகளைச் சிறப்பித்துப் பேசும் வள்ளுவர். இல்லற வாழ்வென்பது அன்பையும் அறனையும் உடையது. இல்வாழ்வை அறநெறியில் நடத்துவதே சிறப்பு. இத்தகைய அறவாழ்வு நடத்தும் பெண்ணின் இயப்பினை,

கொண்டான் வழியொழுகல் பெண்மகன் தந்தைக்குத்

தண்டான் வழியொழுகல் தன்கிளையஃது அண்டாதே

வேல்வழி வெம்முனை வீடாது மன்னாடு

கோல் வழி வாழ்தல் குணம். (சிறு.பஞ்.15)

எனும் பாடல் ஆணாதிக்க சமூக இயல்பை எடுத்துரைப்பதாக உள்ளது. மேலும்,

வருவாய்க்கு தக்க வழக்கு அறிந்து சுற்றம்

வெருவாமை வீழ்ந்து, விருந்து ஒப்பித் திருஆக்கம்

தெய்வத்தையும் எஞ்ஞான்றும் தேற்ற வழிபாடு

செய்வதே, பெண்டின் சிறப்பு (சிறு.பஞ்.43)

திருமணமான பெண் தன் கணவன் விருப்பத்தினுக்குத் தகுந்தாற்போல் செயல்பட வேண்டும். கணவன் வருவாய்க்குத் தக்க செலவு செய்ய வேண்டும். சுற்றம் தழுவுதல், விருந்தோம்பல், தெய்வத்தை வழிபடுதல் போன்றவற்றில் சிறந்து விளங்கினாள் என்கிறது.

இல்லக்கிழத்தியானவள் கணவனின் வருவாய்க்குத் தகுந்தவாறு செலவு செய்ய வேண்டும் மற்றும் தன் உறவினர்களை நேசித்தல், செல்வம் தருகின்ற தெய்வத்தை வழிபாடு செய்தல் போன்ற பண்புகளை உடையவளாய் இருத்தல் வேண்டுமென்பதை,

மனத்தக்க மாண்புடையாள் ஆக்கிதற் கொண்டான்

வளத்தக்காள் வாழ்க்கைத் துணை. (குறள்.51)

என்பதினோடு ஈண்டு ஒப்புநோக்கத்தக்கது.

விருந்தோம்பல்

விருந்தினர்களை புன்னகையோடு வரவேற்று இனிய சொற்களைப் பேசுதல்,  கால்களைத் தூய்மை செய்ய நீர் கொடுத்தல், அமர்வதற்கு இடம் கொடுத்தல், நல்ல உணவு வழங்குதல்படுத்துக்கொள்வதற்குப் பாய் வழங்குதல், தங்க இடங்கொடுத்தல் ஆகியன விருந்தினர்க்குச் செய்யும் கடமைகள் என்பதை,

முறுவ லினிதுரை கானீர் மனைபாய்

கிடைக்கையோ டிவ்வைந்து மன்ப தலைச்சென்றார்க்

கூணொடு செய்யுஞ் சிறப்பு (ஆசா.53)

எனும் பாடல்வழி ஆசாரக்கோவை எடுத்துரைக்கிறது. மன்னர்கள் தன்னை நாடி வந்தவர்களை உபசரித்து ஆடைகளைத் தருவது மட்டுமன்றி, வந்த களைப்பை நீக்கத் தண்ணீர் கொடுப்பதோடு மட்டும் நில்லாமல், அவர்களின் மனமும் வயிறும் நிரம்பும்படியாக, பலவகையான உணவுகளையும் அளிப்பது சிறந்த குணமாக இருந்தது. இதனை,

பாம்பு வெகுண் டன்ன தேறல்நல்கி (சிறுபாண்.234)

விளங்குபொன் கலத்தில் விரும்பு வன பேணி

ஆனா விருப்பின் தான் நின்று ஊட்டித் (சிறுபாண்.244-345)

எனும் பாடலடிகளில், பாம்பு சினந்து எழுந்தது போன்ற எழுச்சியைத் தரும் கள்ளையும், ஒளிபொருந்திய வானத்தில் கோள்மீன்கள் சூழ்ந்த உதயசூரியனை இகழும் தோற்றத்தையுடைய பொன்கலத்திலும் அவர்கள் விரும்பும் உணவை குறையாத விருப்புடன் நல்லியக்கோடன் வழங்கியதை சிறுபாணாற்றுப்பாடல் உணர்த்துகிறது. உணவளித்தலின் உயர்வினை,

உண்டி கொடுத்தோ ருயிர்கொடுத்தோரே

உண்டி முதற்றே யுணவின் பிண்டம்

உணவெனப் படுவது நிலத்தொடு நீரே(புறம்.18)

என்கிறது புறநானூறு.

முடிவுரை

கணவன் மனைவி சேர்ந்து வாழ்கின்ற இல்வாழ்க்கையோடு அறமும் சேர்ந்து வாழ வேண்டும் இல்லையேல் பொருளும், இன்பமும் தொலைந்து போய்விடும். இல்லற வாழ்வில் சிறப்புடையவன் மற்ற கல்வி, துறவிமனத்துறவு போன்ற அறநிலைகளிலுள்ள மூவர்க்கும் உறுதுணையாவான். ஒருவன் இல்வாழ்க்கையை அறவழியில் நடத்துவானாயின் அதைவிட அவன்வேறுவழியில் சென்று பெறும் மேலான பயன் வேறில்லை. இல்வாழ்க்கையை, அறவழியில் நடத்துபவன் மறுமை இன்பத்தை நாடி முயல்பவரை விடச் சிறந்தவன். அறனே இல்வாழ்க்கை அந்த இல்வாழ்க்கை பிறர் பழிக்கக் கூடியதாக இருத்தல் கூடாது. துறவியர், ஏழைஆதவற்றிருபவர்களுக்கு இல்லறவாழ்வில் இருப்பவனே துணையாவான். இவ்வுலகில் வாழவேண்டிய நெறியுடன் இல்வாழ்க்கையில் வாழ்பவன் வானுலகத்தில் வாழும் தேவர்களுக்கு ஒப்பாகக் கருதப்படுவான்.

துணைநின்ற நூல்கள்

1.     சிறுபஞ்சமூலம், கழக வெளியீடு, திருநெல்வேலி, 1936.

2.     சுப்புரெட்டியார், ந.திருக்குறள் தெளிவு, சுரா புக்ஸ் (பிரைnவேட் லிமிடெட்), 2001.

3.     இளம்பூரணர்(உரை), தொல்காப்பியம் (பொருளதிகாரம்), கழக வெளியீடு, சென்னை.பதி.1967.

4.     குருநாதன் (.), புறநானூறு, வடிவேல் பதிப்பகம், தஞ்சாவூர்-4. பதி.2003.

5.     கதிர் முருகு (உரை), அறநெறிச்சாரம், சாரதா பதிப்பகம், பதி.2013.

6.     தமிழ்ப்பிரியன்(உரை), ஆசாரக்கோவை, நான்மணிக்கடிகை, கற்பகம் புத்தகாலயம், சென்னை, பதி.2007.

7.     புஷ்பராஜ். பொன் (உரை), சிறுபாணாற்றுப்படை, சாரதா பதிப்பகம், சென்னை, பதி.2018.