4ஆம் ஆண்டில் நமது இலக்கியச்சுடர்
படைப்புகளை periyaswamydeva@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி இதழின் வளர்ச்சிக்கு உதவுங்கள்

புதன், 1 ஜூலை, 2020

திருமணப் பரிசு

 

முனைவர் வாசு.அறிவழகன்,

இணைப்பேராசிரியர், 

தமிழாய்வுத்துறை, 

முத்துரங்கம் அரசு கலைக் கல்லூரி, வேலூர்-632002,தமிழ்நாடு

arivazhagandde@gmail.comகைபேசி 9445376274

 

       சேவல் கூவிடும் முன் – செவ்வானம் தோன்றிடுமுன் – காகம் கரைந்து காரிருளை கரைத்திடும் முன் – நாதஸ்வரமும் மேளமும் நாற்புறமும் இசையால் மூழ்கடித்தன.                                                

       திருமண மண்டபத்தில் இசையைக் கேட்டதும் உறங்கியக் கூட்டம் விழித்தெழுந்தது. துயில் எழுந்தவர்கள் எல்லோரும் குளியல் அறையை நோக்கிப் புறப்பட்டனர்.                                                           

       ஒரு நடுத்தர வயது பெண்மணி மண்டபத்திற்குள் வேகமாக நுழைந்தாள் அவள் மணப்பெண் அறையைத் திறந்து பார்த்து “என்னம்மா குளித்தாயிற்றா?” என்று கேட்டாள்.

“இப்பொழுதுதான் குளித்துவிட்டு வந்தேனம்மா!” என்று தன்னுடைய மெல்லிய குரலில் சொன்னாள் மணமகள் பூங்கொடி. “அப்பாடா!, எங்கே! தூங்கிக் கொண்டு இருக்கிறாயோ என்ற அச்சத்தில் ஓடோடி வந்தேன்” என்றாள் பூங்கொடியின் தாய் மலர்க்கொடி.   

       பூங்கொடியோடு இருந்தவர்கள் அசதியாகத் தூங்கிக் கொண்டு இருந்தனர். தூங்கிக் கொண்டு இருந்த எல்லோரையும் மலர்க்கொடி தட்டி எழுப்பினாள். எழுந்த எல்லோரும் தத்தமது வேலைகளைக் கவனிக்கத் தொடங்கினர்.                                                                          

       மண்டபத்தில் மங்கள இசை முழக்கமும் மற்றவர்களின் பரபரப்பான பேச்சொலியும் ஒன்றுக்கொன்று இணையாக இருந்தன. தனியறையில் இருந்த பூங்கொடி எந்த ஒரு ஒலியையும் தன்னுடையக்  காதில் வாங்கிக் கொள்ளாமல் தன்னுடையக் கடந்த காலத்தை நினைத்தபடியே அமர்ந்திருந்தாள்.

“பஞ்சாலையில் வேலை செய்த தன் தந்தை நினைவில் மட்டுமே இருப்பதை நினைத்து நினைத்து வருந்தினாள்.  தன்னுடைய வருமானம் பற்றாக்  குறையாக இருந்தபோதும் தங்களுக்கு ஒரு குறையும் இல்லாமல் பார்த்துப் பார்த்து வளர்த்த தன்னுடைய தந்தையை அவள் நினைத்த போது அவளையும் மீறி அவள் கண்கள் குளமாவதை உணர்ந்தாள். 

ஒன்றுமறியாத தன்னுடைய தங்கையையும் இந்த உலகத்தோடு போராடிக் கொண்டிருக்கின்ற தன்னுடையத் தாயையும் எந்த ஒரு ஆதரவும் இல்லாமல் நிராதரவாகத் தனித்து விட்டுச் செல்லுகிறோமே என்று அவள் நினைத்த போதே அவள் உடல் நடுக்கமுற்றது.

தன் தந்தை இறந்த பிறகு தன்னுடைய உறவினர்களால் முற்றிலுமாகப் புறக்கணிக்கப்பட்ட தன்னுடைய குடும்பத்தைக் காப்பாற்ற தன்னுடைய தாயுடன் கூலிவேலைக்குப் போனதை நினைத்துப் பெருமூச்சு விட்டாள்.

தங்களுக்குக் குறைந்த வருமானமே கிடைத்த போதும் அதில் சேமித்து அண்ணாமலைப் பல்கலைக்கழகத்  தொலைதூரக் கல்வி இயக்ககத்தின் வழியாகப் பட்டம் பெற்று ஆசிரியர் பணிக்குத் தான் தகுதி பெற்றதை எண்ணிப் பெருமை கொண்டாள்.                                

          தனக்குத் தெரிந்த பள்ளிகளுக்கெல்லாம் விண்ணப்பித்திருந்த போதும் எந்த ஒரு வாய்ப்பும் தனக்குக் கிடைக்காததை எண்ணி எண்ணி வருந்தினாள்.

தன் தெருவில் வரும் அஞ்சல்காரரிடம் தனக்கு ஏதேனும் கடிதம் இருக்கிறதா என்று இவள் கேட்டபோதெல்லாம் “இல்லையம்மா“ என்ற பதிலை மட்டுமே இவள் பெற்று வந்ததை எண்ணி வருந்தினாள். எவ்வளவு படித்தாலும் இந்த உலகத்தில் ஏழைகளுக்கெல்லாம் நிரந்தரமான வேலை என்பதும் நிலையான வாழ்க்கை என்பதும் பகற்கனவு தானோ என்று எண்ணி பெருமூச்சு விட்டாள்.

         கூலி வேலை செய்து வாழும் வாழ்க்கை தான் இந்த ஏழைகளின் கூடப் பிறந்ததோ- புகுந்த வீட்டிலும் தன்னுடைய வாழ்க்கை எப்படி அமையப் போகிறதோ- “கொடிது கொடிது இளமையில் வறுமை” என்று சொன்னார்களே அவற்றையெல்லாம் அவர்கள் அனுபவித்துத் தான் எழுதினார்களோ?என்றெல்லாம் தனக்குத்தானே யோசித்துக் கலங்கிக் கொண்டிருந்தாள்.

குழந்தை பருவத்தில் இந்தப் பணக்காரன் ஏழை என்ற பாகுபாடு தெரியாமல் தாங்கள் வளர்ந்ததையும். வகுப்பறைகளில்  நன்றாகப் படித்த தன்னை ஆசிரியர்கள் எந்தப் பாகுபாடுமில்லாமல் பாராட்டியதையும். எந்தக் குறையும் தெரியாமல் தன்னுடையத் தாய் வளர்த்ததையும் எண்ணி ஆச்சரியப்பட்டாள்.                                                              

        இந்தக் கொடிய சமூகச் சூழலை எண்ணி நாமெல்லாம் குழந்தையாகவே இருந்திருக்கக் கூடாதா என்றெண்ணி பெருமூச்சையும்  விட்டாள். 

இப்படி ஒவ்வொரு காட்சியாக தன் கண்முன்னால் வந்து; பல கேள்விகளைக் கேட்டு; இவளுடையக் கண்களைக் குளமாக்கிக் கொண்டிருந்தபோது, பூங்கொடி! என்ற அழைப்போடு இவளுடையத் தாய் அறைக்குள் வந்தாள். என்ன பூங்கொடி ஏன் அழுகிறாய்?” என்று அதிர்ச்சியோடு கேட்டுக் கொண்டே மலர்க்கொடியும் அழத் தொடங்கினாள்.

        தன் தாயைப் பார்த்துப் பூங்கொடி, “அழாதே அம்மா அழாதே, நான் அழுவது எனக்குச் சம்மதமில்லாத இந்தத்  திருமணத்தை நினைத்து அல்ல, திருமணமாகி இன்றோடு உங்களை விட்டு நான்  பிரிந்து விட்டால் உன்னையும் என் தங்கையையும் யாரம்மா காப்பாற்றுவது அதை நினைத்துத் தான் கலங்குகிறேன்” என்றாள்.

       “கலங்காதே பூங்கொடி!, மணப்பெண் இப்படி கலங்கி அழக் கூடாது; எதற்கும் ஒரு முடிவு உண்டு; தைரியமாக இரு; எதையும் எதிர்கொள்வோம்” என்று மலர்க்கொடி அவளை சமாதானப்படுத்தினாள். “இல்லை அம்மா நான் அழவில்லை”, என்றாள் பூங்கொடி.

“ஆமாம் நீ தான் அழக்கூடாது, நீ அழுதால்தான் தப்பா நினைப்பார்கள் உன் தங்கையை நான் வீட்டு வேலை செய்தாவது வளர்த்துக் கொள்கிறேன். நீ படித்த படிப்புக்கு உனக்கு கண்டிப்பாக நல்ல வேலை கிடைக்கும். அப்பொழுது வந்து எங்களைப் பார்த்துக்கொள்! அதுபோதும். நீ இப்பொழுது அழாதே தைரியமாகயிரு” என்று சொல்லிவிட்டு கண்களைத் துடைத்துக் கொண்டு வெளியில் வந்தாள்.

குளிக்கச் சென்றவர்கள் அதுவரை திரும்பி வராததால் தனியாக இருந்த பூங்கொடி மீண்டும் யோசிக்கலானாள், “தான் படித்த காலத்திலும் வேலை செய்கிற இடத்திலும் தான் நெறியோடு வாழ்ந்ததை நினைத்துப் பார்த்தாள். இதற்கெல்லாம் காரணம் தன் தாயின் வளர்ப்புதான் என்று எண்ணி பெருமை கொண்டாள்.

தான் பயிற்சி பெற்றிருக்கிற ஆசிரியர் பணியை மிக உயர்வாகக் கருதியதோடு அல்லாமல் அப்பணியை அவள் தன்னுடையக் கனவாகவும்  நினைத்துக் கொண்டு இருந்தாள்.

          மணமகனுக்கும் நிரந்தரமானதொரு வேலை இல்லை எனத் தெரிந்த போதும் அவனை இவள் முழுமையாக ஏற்றுக் கொண்டாள். இப்படி மகிழ்ச்சியும் கவலையும் இவளை மாற்றி மாற்றிப் புரட்டிக்  கொண்டிருந்த போது வெளியே சென்றவர்கள் அறைக்குள் வந்தனர்.

           வந்தவர்கள் அனைவரும் ஆளுக்கொரு வேலை செய்து கொண்டிருந்தார்களே தவிர இவளைக் கூர்ந்து கவனித்தவர்கள் யாருமில்லை.                                                                                                    

           மற்ற சொந்தங்கள் அனைவரும் மண்டபத்து இருக்கையில் வந்து அமர்ந்தனர். நல்ல தமிழ் பேச்சாளர் இனமுரசு முத்து குணசேகரன் அவர்கள் மகிழுந்தில் வந்திறங்கி மண்டபத்திற்குள் நுழைந்தார். மண்டபத்தில் உள்ளோர் அனைவரும் எழுந்து நின்று அவரை வரவேற்றனர்.                                                             

           மங்கள இசை முழங்க மணவிழா தொடங்கியது. முதலில் ஐந்து திரி விளக்கை விழா தலைவர் ஏற்றினார். அவருக்குப் பின் மணமக்களின் பெற்றோரும் மணமக்களும் அவ்விளக்கை  ஏற்றி வைத்தனர்.                                                         

            திருக்குறளின் மீது ஆணையிட்டு மணமக்கள் இருவரும் ஒப்பந்தம் செய்து கொண்ட பின், விழாத்  தலைவர் மங்கள  நாணை எடுத்து மணமகனிடம்கொடுத்தார். சான்றோரும் சுற்றமும் சூழ்ந்து நின்று வாழ்த்த மணமகன் மங்கள நாணை மணமகளுக்கு அணிவித்தான்.  

             இனிதே திருமணம் முடிந்ததும் உறவினர்களும் நண்பர்களும் மணமக்களுக்குச் சீர் கொடுக்க வரிசையில் நின்றனர். அந்த வரிசையில் காக்கிச் சட்டை அணிந்த அஞ்சல்காரரும் (POST MAN) நின்று கொண்டு இருந்தார். அவர் கொடுத்த காக்கி நிறத்திலான உறையைப் பெற்றுக் கொண்ட பூங்கொடி, “ ஐயா என்ன இது என்று கேட்டாள்.”  “அம்மா இவ்வளவு நாள் நீ எதிர்பார்த்து என்னிடம் கேட்டுக் கொண்டிருந்த ஆசிரியர் பணிக்கான அரசாங்கத்தின் ஆணை.” என்று அஞ்சல்காரர் சொல்லி முடித்ததும், பூங்கொடி புதிதாய் பிறந்தவள் போல் உணர்ந்தாள்.