4ஆம் ஆண்டில் நமது இலக்கியச்சுடர்
படைப்புகளை periyaswamydeva@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி இதழின் வளர்ச்சிக்கு உதவுங்கள்

சனி, 1 ஆகஸ்ட், 2020

அறிவியல் பார்வையில் முல்லைப்பாட்டு



முனைவர் க.ஆனந்தி

தமிழ்த்துறை, உதவிப்பேராசிரியர்

பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரி

தஞ்சாவூர்.


ஆய்வுச்சுருக்கம்

தமிழனின் வாழ்வியலோடு இரண்டற கலந்ததுதான் அறிவியல். நம் முன்னோர்களின் வாழ்க்கை வெறும் சாத்திரங்களையும் சம்பிரதாயங்களையும் கொண்டு அமைந்தது அல்ல. இன்பம், துன்பம், ஏற்றம், இறக்கம், உயர்வு, தாழ்வு போன்ற நிலைகள் வரும்பொழுது வாழ்க்கையை செம்மையான நெறியில் பண்படுத்துவது எப்படி என்பதை பழக்கமாகக் கொண்டு நமக்கு வழக்கப்படுத்தியுள்ளனர். போருக்கு செல்லும் வீரன் மழைக்காலத்தின் துவக்கத்தில் வந்து விடுவதாகக் கூறுகிறான். கணவனைப் பிரிந்து ஆற்றியிருத்தல் என்பது அன்றைய சூழலில் பெண்களின் மன வலிமையையும், உற்றார், உறவினர் அவர்களைப் பேணி வழிநடத்தியப் பாங்கினையும் தான் சங்க இலக்கிய முல்லைப்பாட்டு பகிர்கிறது. இங்ஙனம் இயற்கை பற்றிய அறிவும், வார்த்தைக்குண்டான வலிமையும், பொழுதுகளையும், உளவியலையும், கணக்கிட்டு வாழும் தன்மையினையும் அறியமுடிகிறது. இத்தகைய அறிவியல் பூர்வமான வாழ்கையை நம் முன்னோர்கள் வாழ்ந்துள்ளனர்.

கலைச்சொற்கள்

                பெயல், விரிச்சி, நாழி, பாடிவீடு, காவிக்கல், பூந்தலைக்குந்தம், கிடுகு, மத்திகை, மெய்ப்பை, நாழிகைக்கணக்கர், குறுநீர்க்கன்னல், மிலேச்சர், கவைமுள்.

முன்னுரை

                காவிரிப்பூம்பட்டினத்துப் பொன்வணிகனார் மகனார் நப்பூதனார் இயற்றிய முல்லைப்பாட்டு முல்லைத்திணைக்குரிய நூலாகும். அகப்பொருள் சார்ந்து எழுதப்பட்ட இந்நூல் கவிநயத்தோடும், உளவியல் கூறுகளோடும், காணப்படுகிறது. நெஞ்சாற்றுப்படை என்று வருணிக்கப்படும் இந்நூலில் அறிவியல் செய்திகள் இரண்டற கலந்திருப்பதை ஆய்வதே இதன் நோக்கம் ஆகும். 

மழைமேகம்

        இன்று மழைமேகங்கள் எவ்வாறு தோன்றுகின்றன என்பது யாவரும் அறிந்த ஒன்று. ஆனால் முல்லைப்பாட்டு விளக்கும் மழைதரும் மேகம் எத்தகையது என்றால்,

           பாடு இமிழ் பனிக்கடல் பருகி வலன் ஏர்பு

       கோடு கொண்டு எழுந்த கொடுஞ்செலவு எழிலி    (4-5)

மேகங்கள் அலையோசை முழங்கிக் கொண்டிருக்கும் குளிர்ந்த கடலில் உள்ள நீரைப் பருகி, வலப்புறமாக உயர்ந்து மேலே சென்று மலையின் மீது தங்கி காற்றினால் விரைந்து சென்று பரவி,

                பெரும் பெயல் பொழிந்த சிறுபுன் மாலை    (6)

அம்மேகங்கள் பெரும் மழையைத் தருவிக்கும் சிறுபொழுதான மாலைப்பொழுது என்பதில், வடகிழக்குப் பருவமழை தோன்றும் தன்மையை எளிமையாக அனைவரும் புரிந்துகொள்ளும் வகையில் கூறியுள்ளது முல்லைப்பாட்டு.

விரிச்சிக் கேட்டல்

ஒரு காரியத்தை செய்யக் கிளம்பும் முன், அதை அறியாத ஒருவர் பேசும் நற்சொல் காதில் விழுந்தால் நல்லது என்பது பழந்தமிழர் நம்பிக்கை. அவ்வாறு நற்சொல் கேட்க காத்திருத்தல் விரிச்சிக் கேட்டல் எனப்படும்.

                திருந்துஇழை மகளிர் விரிச்சி நிற்ப”                (நற்.40.4)

 

      ”விடர் முகை அடுக்கத்து விறல் கெழு சூலிக்குக்

      கடனும் பூணாம் கைந் நூல் யாவாம்

      புள்ளும் ஓராம் விரிச்சியும் நில்லாம்”                (குறுந்.218.1-3)

 

      நெல்நீர் எறித்து விரிச்சி ஓர்க்கும்

செம்முது பெண்டின் சொல்லும் நிரம்பா”             (புறம்.280.6-7)

விரிச்சி கேட்டல் என்பது மக்கள் மத்தியில் மிகப் பெரிய நம்பிக்கையாக இருந்துள்ளது. ஒருவரின் நேர்மறையான சொற்கள் இன்னொரு மனித உள்ளத்தையும், இந்த அண்டத்தின் நேர்மறை எண்ணங்களின் பதிவுகளையும் ஒன்றிணைக்கும் என்பதனை அவர்கள் அறிந்திருந்தனர்.

        அருங்கடி மூதூர் மருங்கில் போகி

        யாழ் இசை இன வண்டு ஆர்ப்ப, நெல்லோடு

        நாழி கொண்ட, நறு வீ முல்லை

        அரும்பு அவிழ் அலரி தூஉய்க் கைதொழுது

        பெருமுது பெண்டிர், விரிச்சி நிற்ப            (7-11)

இயற்கையின் முன்நின்று உள்ளம் முழுவதும் நல்ல சொல் வரவேண்டும் என்று காத்திருந்தனர். படியில் நெல்லை நிரப்பி, புதுமலரைத் தூவி, கைகள் கூப்பித்தொழுதுள்ளனர். கைகள் கூப்பித்தொழும் பொழுது பத்து விரல்களும், இணைந்து உள்ளம் என்ன நினைக்கிறதோ, அதுவே உடல்மொழியாகவும் மாறியிருக்கிறது. இங்ஙனம் தோன்றிய மனஅலைகள் நேர்மறையாக மட்டுமே எழும்பியுள்ளது அது நிறைவேறியும் உள்ளது.

பாசறை அமைப்பு

பகைவர் நிலத்திற்கு சென்றிருக்கும் பொழுது படைகள் தங்கியிருக்கும் இடம் பாசறை எனப்படும். பாசறை, வேனிற்பாசறை, கூதிர்ப்பாசறை, வாடைப்பாசறை, பாடிவீடு, படைவீடு, பாளையம், கோட்டம், கேடகம், கட்டூர், கடவை, தெவ்வர்முனைப்பதி, தானைவைப்பு என பல பெயர்களில் பாசறை அழைக்கப்படுகிறது.

முல்லை நிலம் காடும், காடுசார்ந்த பகுதியும் ஆகும். இங்கு காட்டாறு இருப்பது இயற்கை. காட்டாற்றின்  ஓட்டத்தை அறிந்து அங்குள்ள முட்செடிகளை வெட்டி சூழ மதில் போல் அமைத்து, காட்டாறு மதிலை சுற்றிவர கடல் போல் சீரமைத்து ஓடும்படி செய்துள்ளனர். இன்றைய சூழலில் இதனை செய்வது சரியா தவறா என்று ஆய்வுக்குட்படுத்தி செயல்படும் பொறியாளர்களைக் காட்டிலும் பன்மடங்கு சிறந்த சிந்தனை உள்ளவர்களாக இருந்துள்ளனர்.

              கான்யாறு தழீஇய அகல் நெடும் புறவில்

                   ............ .............

             படுநீர்ப் புணரியின் பரந்த பாடி              (24 - 28)

ன்ற அடிகள் புலப்படுத்துகிறது. நெடுநல்வாடைத் தலைவன் போருக்குச் சென்று வாடைப்பாசறையில் தங்கியிருந்தான் என்பது நினைவில் கொள்ளத்தக்கது.

கூடாரத்தின் அமைப்பு

                ஆங்காங்கு கூடாரம் அமைத்து அரசன் தங்கியிருக்கும் இடத்தை காவல் செய்கின்றனர் வீரர்கள். அத்தகு கூடாரத்தை,

           கல்தோய்த்து உடுத்த படிவப் பார்ப்பான்

             முக்கோல் அசை நிலை கடுப்ப,        (37-38)

 அதாவது முறையாக இறைவனுக்கு விரதம் மேற்கொள்ளும் அந்தணர் காவிக்கல்என்னும் சலவைக்கல்லைக் கொண்டு தனது ஆடையை துவைத்து, தாம் பயன்படுத்தும் முக்கோலில் (மூன்று கோல்களை ஒன்றாக இணைத்துக் கட்டிய திரிதண்டி) ஆடையை காய வைப்பதற்காக தொங்கவிடுவது போல, என்று கூறியுள்ளனர்.

இங்ஙனம் காவிக்கல்என்பது நமது வழக்கத்தில் இல்லையாயினும் ஆடையை தூய்மைபடுத்த சலவை செய்யும் பொருளாகப் பயன்படுத்தியுள்ளனர். இது கிருமிநாசினியாகவும் இருந்துள்ளது.

                     ....... ............... ........ நற்போர்

           ஓடா வல்வில் தூணி நாற்றிக்

           கூடம் குத்திக் கயிறு வாங்கு இருக்கைப்

           பூந்தலைக் குந்தம் குத்தி கிடுகு நிரைத்து

           வாங்கு வில் அரணம் அரணமாக            (37-42)

வலிமையான வில்லினைக் குத்தி, அவற்றின் மேல் அம்பறாத் தூணிகளைத் தொங்க விட்டு, கூடமாய் கால்களை நட்டுக் கயிற்றால் இழுத்துக் கட்டிய இடத்தில் பூ வேலைப்பாடு உடைய  கைவேல்களை ஊன்றி, வில்லாகிய அரணே காவலாக படைஞரின் குடியிருப்புகள் இருந்தன என்று கூறியுள்ளனர். கையில் இருக்கும் போர்க்கருவிகளைக் கொண்டே கூடாரம் அமைத்துள்ளனர் என்பது எத்தகைய சிறப்பிற்குரியது என்பது தெரிய வருகிறது.

பாவை விளக்குகள்

பெண்கள் அந்தபுரத்தில் யவனர்களால் செய்யப்பட்ட அழகுபொருந்திய பாவை விளக்குகளில் நெய்வார்த்து திரியிட்டனர் என்றும், ஒளி மங்கும் பொழுது திரியைத் தூண்டிவிட்டனர் என்றும் நெடுநல்வாடையில் கூறியுள்ளனர். போர்க்களத்திற்கு பெண்கள் செல்ல அனுமதியில்லை. இருப்பினும் பெண்களுக்கான வேலைகள் என்று பார்க்கும்பொழுது மன்னனின் இருப்பிடத்தில் உள்ள பாவை விளக்குகள் எறிந்த வண்ணம் இருக்க வேண்டும் என்பதனால், பெண்கள் அங்கு சென்றுள்ளனர்.

                 இரவு பகல் செய்யும் திண் பிடி ஒள்வாள்

        விரவு வரிக்கச்சின் பூண்ட மங்கையர்

        நெய் உமிழ் சுரையர், நெடுந்திரிக்  கொளீஇக்

        கை அமை விளக்கம் நந்துதொறும் மாட்ட        (46-49)

 என்று பெணகள் தன் கச்சையில் ஒளி பொருந்திய, பிடியுடன் கூடிய குறு வாளினை வைத்திருந்தனர் என்கிறது. பாதுகாப்பிற்காகவும், அதே கணம் வீரம் நிறைந்த பெண்கள் பாசறையில் இருந்துள்ளனர் என்பதுவும் தெரிய வருகிறது. இத்தகைய பெண்கள் இரவு நேரத்தில் துஞ்சாது பெரிய அகல் விளக்கினை ஏந்திய பாவை அமைப்பில் உள்ள காண்டா விளக்கின் திரி அணையும் போதெல்லாம் அதனைத் தூண்டி விட்டு, எண்ணெய் வார்த்துக் கொண்டும்  இருந்துள்ளனர். பாசறையில் ஒளி மங்காது இருக்க பெண்கள் பணிபுரிந்துள்ளனர்.

நாழிகைக் கணக்கர்

            பொழுது என்பது பெரும் பொழுது, சிறுபொழுது, நாள், நாழிகை ஆகிய காலக்கூறுபாடுகள் கொண்டது. இரவிலும் நன்கு அளந்து பொய்க்காமல் கூறுபவரை நாழிகைக் கணக்கர் என்பர். நாழிகைக் கணக்கர் இரவில் தூங்காமல் நாழிகையைக் கணக்கிட்டு அதை மணியோசையால் ஊரில் உள்ளவர்களுக்கு அறிவிப்பர். (குறுந்.261)

               பொழுது அளந்து அறியும் பொய்யா மக்கள்      (50)

எறிநீர் வையகம் வெலீஇய செல்வோய்! நின்

குறுநீர்க் கன்னல் இனைத்துஎன்று இசைப்ப”     (57-58)

கன்னல் என்பது நாழிகை வட்டில், அதாவது குறுகிய பாத்திரம் அதிலிருந்து ஒழுகும் நீரைக் கொண்டு நாழிகையைக் கணக்கிடுவர். இரவு, பகல் ஓயாது நாழிகையை கணக்கிட நீரின் சொட்டுக்கள் எண்ணிக் கொண்டே இருப்பர். போர்க்களத்தில் நாழிகைக் கணக்கரின் வேலை என்பது, கடல் சூழ்ந்த உலகத்தில் பகைவரை வெல்லச் செல்பவனே! உன் நாழிகை வட்டிலில், சென்ற நாழிகை இத்துணை என்று அறிவிப்பதாகும். நேரத்தை சரியான முறையில் கணித்து தரும் பணியினை செய்துள்ளனர்.

அயலோர் காவல்

                வேறுபுலம் சென்றிருக்கும் தமிழ் மன்னர்களின் காவலுக்கு தமிழர் மட்டுமன்றி வேற்று நாட்டவரும் இருந்துள்ளனர். வேற்று நாட்டிலிருந்து தமிழகத்திற்கு வந்த மக்கள் இங்கு தமிழைப் பயின்றதோடு மட்டுமல்லாமல் தமிழர்களின் போர்க்கலையையும் கற்று தமிழர்களுக்கு சிறந்த போர் வீரர்களாகத் திகழ்ந்துள்ளனர். அவர்கள் உடையிலும், தோற்றத்திலும் தமிழர்களைக் காட்டிலும் முற்றிலும்  மாறுபட்டவர்களாகத்  திகழ்ந்தனர்.

                 மத்திகை வளைஇய மறிந்து வீங்கு செறிவுஉடை

        மெயப்பை புக்க வெருவரும் தோற்றத்து

        வலிபுணர் யாக்கை வன்கண் யவனர்”        (59-61)

யவனர்கள் மன்னரின் இருப்பிடத்தில் இருந்துள்ளனர். குதிரை சவுக்கை வளைத்து, மடங்கிப் புடைத்து நெருக்கமாகக் கட்டின சட்டையையும், அச்சம் தோன்றுவதற்கு காரணமான தோற்றத்தையும், வலிமையான உடலையும் உடைய கொடூரமான கிரேக்கர்கள் மன்னனின் அருகில் இருந்துள்ளனர்.

                எழினி வாங்கிய ஈரறைப் பள்ளியுள்,

        உடம்பின் உரைக்கும் உரையா நாவின்

        படம் புகு மிலேச்சர் உழையர் ஆக           (64-66)

திரைச்சீலையை வளைத்து, இரண்டாக்கிய அறையினுள்ளும் என்கிற போது, மன்னருக்கென்று திரைச்சீலையில் பாசறை அமைப்பு வேறுபட்டுள்ளது. அவற்றில் உள்அறை பள்ளி கொள்ளும் அறையாகவும், அவ்விடத்தை பாதுகாக்க சட்டை அணிந்த ஊமை மிலேச்சர்கள் காவலாக அருகில் இருந்தனர் என்று கூறப்படுகிறது.

மகாபாரத காவியத்தின் படி, பண்டய பரத கண்டத்தின் மேற்கு, வடமேற்கு பகுதி நாடுகளான பாரசீகம், காம்போஜம், பாக்திரியா, சிந்துநாடு, மத்திரநாடு, கேகயநாடு ஆகிய நாடுகளில் தங்கியிருந்த கிரேக்கப் போர்ப்படையினரின் வழித்தோன்றல்களே யவனர்கள் ஆவார். யவனர்கள், சகர்கள், பகலவர்கள் காலப் போக்கில் பாரத நாட்டின் மக்களுடன் திருமண உறவுகளின் மூலம் ஒன்றாக கலந்துவிட்டனர். கி.பி 7ஆம் நூற்றாண்டு முதல் அரேபியர்களையும், பாரசீகர்களையும் குறிப்பதற்கு யவனர் என்ற சொல் பயன்படுத்தப்பட்டது என்று வீக்கிபீடியா தெரிவிக்கிறது.

பண்டைத் தமிழரின் கருவிகள்

ஆயர்கள், ஆநிரைகளை மேய்ப்பதற்கு, வளைந்த கோலினைப் (கொடுங்கோல்(15))பயன்படுத்தியுள்ளனர். யானைப்பாகர், யானையை அடக்குவதற்குக் கவை முள் கருவியை உபயோகித்துள்ளனர்.

கவை முட் கருவியின் வடமொழி பயிற்றிக்”         (35)

      ”மத்திகை வளைஇய மறிந்து வீங்கு செறிவு உடை”   (59)    

குதிரையை ஓட்டுவதற்கு, மத்திகை எனும் கருவியைப் பயன்படுத்தியுள்ளனர். வில், பூந்தலைக் குந்தம், கிடுகு (கேடயம்), வாள் எடுத்து எறி எஃகம் (வேல்) பகழி  போன்ற போர்க் கருவிகளும் தமிழரின் பயன்பாட்டில் இருந்துள்ளமை முல்லைப்பாட்டால் அறிய முடிகிறது.

முடிவுரை

       மக்கள் இயற்கையோடு இயைந்த வாழ்க்கை வாழ்ந்துள்ளனர். வாழ்கை நெறி, மக்களின் பழக்க வழக்கங்கள், பயன்படுத்தியப் பொருட்கள் ஆகியவை பிறநாட்டு மக்களையும் கவர்ந்ததனால் தான் நம் மன்னர்களுக்கு பணிவிடை செய்துள்ளனர். இன்று வாழ்க்கை வேறு அறிவியல் வேறு என்று நம் நம்பிக்கைகளையும், சம்பிரதாயங்களையும் களைந்து வாழ்க்கையைத் தொலைத்து விட்டுத் தேடிக் கொண்டிருக்கிறோம். நம் பழமையை மீண்டும் கையிலெடுத்தால் நம் வாழ்க்கை செம்மைப்படுவதோடு மட்டுமல்லாமல் நம் வருங்கால தலைமுறையினரும் முன்னோர்களின் அறிவியல் சிந்தனையைக் கண்டு வியந்து போவார்கள். நம் இலக்கியங்கள் ஒவ்வொன்றும் தமிழை மட்டுமல்ல அறிவியலையும் கற்றுத்தருகிறது என்பது திண்ணம். 

 துணைநூற்பட்டியல்

1. பிரேமா.இரா.(உரை), குறுந்தொகை, வர்த்தமானன் பதிப்பகம், சென்னை,2004.

2. இராமையாபிள்ளை.நா.(உரை), நற்றிணை, வர்த்தமானன் பதிப்பகம், சென்னை,2004.

3. மாணிக்கம்..(உரை), புறநானூறு, வர்த்தமானன் பதிப்பகம், சென்னை,2004.

              4. மாணிக்கம்..(உரை), நெடுநல்வாடை, வர்த்தமானன் பதிப்பகம், சென்னை,2004.