4ஆம் ஆண்டில் நமது இலக்கியச்சுடர்
படைப்புகளை periyaswamydeva@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி இதழின் வளர்ச்சிக்கு உதவுங்கள்

சனி, 1 ஆகஸ்ட், 2020

இலக்கியங்கள் பாடிய கொற்றவை தெய்வம்



இரா.ஷர்மிளா

உதவிப் பேராசிரியர்

டாகடர் எம்.ஜி,ஆர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம்

அடையாளம்பட்டு, மதுரவாயல், சென்னை -95. 

ஆய்வுச்சுருக்கம்

                பழையோள் என்னும் கொற்றவை தெய்வம் இலக்கியங்களின் வழி போர் பற்றிய செய்திகளை அறியவும் அரசர்களின் வீரச் சிறப்பினையும் போர் வீரர்களின் வெற்றிக் களிப்பினையும் அவர்களின் வழிபாட்டு முறையையும் நமக்கு எடுத்துக்காட்டுகின்றது. அத்தெய்வம் சார்ந்து இலக்கியங்களில் நிறைந்துள்ள செய்திகளையே இக்கட்டுரை எடுத்துக்கூறுகின்றது. இக்கட்டுரையின் வழி  கொற்றவையின் சிறப்புகளையும் வேறு பெயர்களையும் உருவ அமைப்பினையும் அறிந்து கொள்ளலாம்.

திறவுச்சொற்கள்

கொற்றவை, கொற்றவையின் உருவ அமைப்பு, இலக்கியங்களில் கொற்றவை, கொற்றவைக்குரிய வேறு பெயர்கள், பரணி பாடும் கொற்றவை கோயில் + தலையைத் துண்டித்து வழிபாடு

முன்னுரை

மாயோன் மேய காடுறை உலகமும்

சேயோன் மேய மைவரை உலகமும்

வேந்தன் மேய தீம்புனல் உலகமும்

வருணன் மேய பெருமணல் உலகமும்

முல்லை குறிஞ்சி மருதம் நெய்தல் எனச்

சொல்லிய முறையால் சொல்லவும் படுமே (தொல்: பொருள்-951)

என்று ஐவகை நிலத்திற்கும் கடவுள்களை நிர்மானித்தவர்கள் தமிழர்கள். தெய்வம் மனிதனை உற்ற நேரத்தில் காக்கவும், தீமைகள் விளையும் போது அதனை அறுவடை செய்து அழிக்கவும் தோன்றும் என்பது மனித நம்பிக்கை. அதன் வளர்ந்த நிலை ஒவ்வொரு தொழிலுக்கும் கடவுளை நியமித்து வழிபட்டான் மனிதன். அப்பெரும் தெய்வங்களில் போர் தொழிலுக்கென்று கொற்றவையை நியமித்து வழிபட்டனர். சங்க காலத்தில் போருக்குச் செல்லும் முன் கொற்றவையை வழிபட்டு போரில் தனக்கே வெற்றி உண்டாக அத்தெய்வத்தை வழிபடுவர். அக்கொற்றவைக்கு என்று கோயில்கள் பல இருப்பினும் கலிங்கத்துப்பரணியில் முதல் குலோத்துங்கச் சோழன் காட்டும் கோயிலின் அமைப்பு படிப்பவரை கொற்றவையின் கோயில் இவ்வாறோ இருந்திருக்கும் என்று அச்சமுறச் செய்யும் அளவிற்கு கொற்றவை வழிபாடு அமைந்துள்ளது.

கொற்றவை

அன்பும் அறனும் ஒருங்கே இணைந்த பாலை நிலத் தெய்வம் கொற்றவை. எயினர்களும் வேடுவர்களும் கொற்றவையை வழிபட்டனர் என்பது சங்க இலக்கியம் காட்டும் வரலாறு. கள்வர்கள் குலதெய்வமாகவும் இத்தெய்வத்தை வணங்கினர்கொற்றவை ஆதிகால தமிழ் தெய்வமாகும். இன்று இத்தெய்வம் வழக்கிழந்து போனாலும் இதன் வழிபாடு எங்கேனும் சில இடங்களில் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கிறது.

மறம் கடைக்கூட்டிய துடிநிலை சிறந்த

கொற்றவை நிலையும் அகத்திணைப்புறனே (தொல்: பொருள்:புறம்: நூற்பா -1005)

மறத்தொழிலை முடிக்கும்போது துடிகொட்டும் நிலையும், கொற்றவைக்கு பரவிக்கடன் கொடுக்கும் நிலையும் குறிஞ்சித்திணைக்கு புறனாகும் (.வே,சுப்பிரமணியன், தொல்காப்பியம் தெளிவுரை, பக்கம் – 371) என்பது வழிபாட்டின் நிலையை உணர்த்துகின்றது.

கொற்றவையின் உருவ அமைப்பு

மனிதன்ஒவ்வொரு தெய்வத்திற்கும் உருவ வழிபாட்டை மேற்கொள்கின்றான். காரணம் அவ்வழிபாடு அவனை நெறிபடுத்துவதாகவும் அமையும் என்று நம்பப்படுகிறது. தான் பிறருக்கு தீங்குசெய்யும் நேரங்களில் தெய்வமானது நம்மை ஒழுங்கு செய்ய பல அவதாரங்களை எடுக்கும் என்றும் அதே தெய்வம் நாம் செய்யும் நன்மைக்காக நம்மை காக்கும் என்பதை தெரிவிப்பதற்காகவே உருவ அமைப்பில் பல மாறுதல்களை ஏற்படுத்தினான். அதுவே வழிபாட்டில் தொய்வு ஏற்பட காரணமாக அமைந்தது எனலாம். கொற்றவையின் உருவ அமைப்பு இதற்கு ஒரு சிறந்த  எடுத்துக்காட்டாகும். வெண்பிறைத் திங்களை தலையில் சூடி, புலிப்பல் தாலி அணிந்தவள். பாம்பினை உடலில் தாங்கியவள் என்று அவளின் உருவ அமைப்பே அவளை புறந்தள்ளியது எனில் அது மிகையல்ல.

இலக்கியங்களில் கொற்றவை

கொற்றவை தமிழினத் தெய்வம் என்பதற்கு இலக்கியங்களில் புலவர் பெருமக்கள் பல இடங்களில் பாடியுள்ளது சிறந்த சான்றாக அமைகின்றது. ஓங்கு புகழ் கானமர்” (அகநானூறு), “விறல் கெழு சூலி” (குறுந்தொகை),  “உருகெழு மரபின் அயிரை”(பதிற்றுப்பத்து), “பெருங்காட்டுக் கொற்றிற்குப் பேய்” (கலித்தொகை),  வெற்றி வேல்போர்க் கொற்றவை” (திருமுருகாற்றுப்படை), “கலை அமர் செல்வி” (சிலப்பதிகாரம்) என்று இலக்கியங்கள் தனக்குரிய தனிச் சுவையில் கொற்றவையை அறிமுகம் செய்துள்ளன. இருப்பினும் இதில் தமிழின் முதல் காப்பியமான சிலப்பதிகாரமே இத்தெய்வத்தை சிறப்பிக்கின்றது.

சிலப்பதிகாரத்தில் கொற்றவை

கூற்று உறழ் முன்போடு கொடுவில் ஏந்தி

வேற்றுப் புலம் போகி, நல்வெற்றம் கொடுத்துக்

கழிபேர் ஆண்மைக் கடன் பார்த்து இருக்கும்

விழி நுதல் குமரி, விண்ணோர் பாவை

மைஅறு சிறப்பின் வான நாடி

சிலம்பு: காடு கான் காதை (வரி 211 -215)

கண்ணகியும் கோவலனும் மதுரை மண்ணில் அடியெடுத்து வைத்ததும் வணங்கிய முதல் தெய்வம் கொற்றவை என்று கூறுகின்றார் இளங்கோவடிகள்.மேலும் கொற்றவையின் உருவத்தினையும்இந்நூல் வரையறுக்கின்றன

முளை வெண் திங்கள் என்னச் சாத்திட

மறம் கொள் வயப்புலி வாய் பிளந்து பெற்ற

மாலை வெண்பல் தாலிநிரை பூட்டி; (சிலம்பு: வேட்டுவ வரி: (வரி 26 – 28))

என்று  பாடுகின்றது.

கொற்றவைக்குரிய வேறு பெயர்கள்

சிலப்பதிகாரம் கொற்றவைக்குரிய வேறு பெயர்களையும் வேட்டுவ வரி காதையில் பகருகின்றது.

தலைமிசை நின்ற தையல்; பலர்தொழும்

அமரி, குமரி, கவுரி, சமரி,

சூலி, நீலி, மால் அவற்கு இளம்கிளை;

ஐயை, செய்யவள், வெய்யவள், தடக்கைப்

பாய்கலைப் பாவை, பைந்தொடிப் பாவை

ஆய்கலைப் பாவை; அருங்கலப் பாவை (சிலம்பு: வேட்டுவ வரி (வரி 66 – 71))

கொற்றவையின் வேறு பெயர்களாக சிலம்பு இவற்றைக் காட்டினாலும் இப்பெயர்கள் கொற்றவையின் உருவ அமைப்பையே எடுத்துகாட்டுகின்றன. 

திருமுருகாற்றுப்படையில் கொற்றவை

வெற்றி வேல் போர்க் கொற்றவை சிறுவ

இழையணி சிறப்பிற் பழையோள் குழவி (திருமுருகு: பழமுதிர்: (வரி 258-259))

எனக் கொற்றவையை முருகனின் தாயாக அழகுபடுத்திக்காட்டுகிறார் நக்கீரர்.

பரணி பாடும் கொற்றவை கோயில்

பரணி நட்சத்திரம் வீரத்தின் குறியீடு. பரணியில் பிறந்த வீரனுக்கு வெற்றியை அருளும் வெற்றித் தேவதையான கொற்றவையைச் சிறப்பிப்பது பரணி எனப் பரணி இலக்கியம் பற்றிப் பல்வேறு கருத்துக்கள் உள்ளன (பாக்யமேரி, வகைமை நோக்கில் தமிழ் இலக்கிய வரலாறு, பக்கம் – 379) என்றும்போர்களத் தெய்வமான கொற்றவையை பாடும் நூல்3 என்றும் கலிங்கத்துப்பரணியை நூல்கள் பல வரையறுக்கின்றன. கொற்றவை கோயிலின் அமைப்பும் கலிங்கத்துப்பரணியில்பின்வருமாறு  எடுத்துக்காட்டப்படுகின்றன.

துவர் நிறக் களிற்று உதியர் ஏவலின்

சுரிகை போர்முகத்து உருவி, நேரெதிர்த்து

அவர் நிணத்தொடு அக் குருதிநீர் குழைத்து

அவர் கருந்தலைச் சுவர் அடுக்கியே (கலிங்கம்:கோயில்: பாடல் – 99)

கொற்றவையின் கோயில் அமையப்பட்டதாய் பாடுகின்றது இந்நூல்.

கொள்ளி வாய்ப் பேய் காக்கும்

கோபுரமும் நெடுமதிலும்

வெள்ளியால் சமைத்ததென,

வெள்ளெலும்பி னால் சமைத்தே (கலிங்கம்:கோயில்: பாடல் – 103)

என்று கோயிலின் முழுத் தோற்றமும் அமையப்பெற்ற பாங்கினை எடுத்தியம்புகிறது கலிங்கத்துப்பரணி. அப்பெரும் கோயிலில் காளியை வழிபடும் வீர மறவர் கூட்டம் யாவும் போரில் வெற்றி பெற்றால் தன்னுடைய தலையைத் துண்டித்து வழிபாடு செய்வதாக வேண்டிக் கொண்டனர். அதேபோல் வெற்றியின் களிப்பில் உடலில் இருந்து வழியும் இரத்தத்தைநெய்யாக ஊற்றி அம்மறவர் கூட்டம் கூட்டமாக அத்தெய்வத்தை வழிபட்டு மகிழ்ந்தனர்.

தலையைத் துண்டித்து வழிபாடு

அடிக் கழுத்தி னுடன் சிரத்தை அரிவராலோ;

அரிந்த சிரம அணங்கின் கைக் கொடுப்பராலோ;

கொடுத்த சிரம் கொற்றவையைப் பரவுமாலோ;

குறையுடலம் கும்பிட்டு நிற்கு மாலோ. (கலிங்கம்:கோயில்: பாடல் – 111)

தன் தலையைத் தானே அறிந்து தான் பட்ட கடனை எல்லாம் தீர்த்துக் கொண்டனர். மறவர்கள் தன் அரசனின் வெற்றியைத் தன் வெற்றியாக கருதினர். அவர்களைப் போன்றே கொற்றவையின் சிறப்பினை கூறுவதற்காகவும்

உறு பெரும் பசி உடன்றில், உடன் திரியுமே (கலிங்கம்:கோயில்:பாடல்–11 3(வரி 4)

அவ்வெட்டுண்ட தலைகளுக்காகவும் பேய்களும் கொற்றவையுடன் இருந்ததாகவும் பரணி கூறுகின்றது. இவ்வாறு கலிங்கத்துப்பரணியில் கோயில் பாடியது பகுதியில் வரும்பல பகுதிகள் பழைய நம்பிக்கைகளின் அடிப்படையில் எழுந்த கற்பனைகள் என்றே கொள்ளலாம் (தேவிரா, தமிழ் இலக்கிய தகவல் களஞ்சியம், பக்கம் -290) என்பார் தெளிவுரையாளர்

முடிவாக

பழையோள் என்று இலக்கியங்கள் பாடும் கொற்றவை போரின் வெற்றிக்காக வழிபடும் தெய்வமே ஆயினும் மறவர்கள் மட்டுமன்று பெண்டிரும் வழிபட்டு மகிழ்ந்தனர் என்றும் இலக்கியங்களின் வழி நாம் அறிந்து கொள்ளலாம்

நூல்கோவை

    1.        புலியூர்க்கேசிகன், கலிங்கத்துப் பரணி(தெளிவுரை), 2ஆம் பதிப்பு 2008, பாரி நிலையம், சென்னை – 108
2.    முனைவர் .வே,சுப்பிரமணியன், தொல்காப்பியம் தெளிவுரை, எட்டாம் பதிப்பு ஜூலை 2006, மணிவாசகர் நூலகம், தி.நகர், சென்னை - 18.
3.    முனைவர்பாக்யமேரி,வகைமை நோக்கில் தமிழ் இலக்கிய வரலாறு, நானகாம் பதிப்பு 2019, பூவேந்தன் பதிப்பகம், சென்னை – 04 
4.  முனைவர் தேவிரா, தமிழ் இலக்கிய தகவல் களஞ்சியம், புதுக்கிய பதிப்பு ஜனவரி 2018, ஸ்ரீநந்தினி பதிப்பகம்,அண்ணா நகர் விரிவு, சென்னை – 101.