4ஆம் ஆண்டில் நமது இலக்கியச்சுடர்
படைப்புகளை periyaswamydeva@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி இதழின் வளர்ச்சிக்கு உதவுங்கள்

சனி, 1 ஆகஸ்ட், 2020

அறிவோம் ஔவையை!!!


இரா.கவிதா

உதவிப்பேராசிரியர்தமிழ்த்துறை

டாக்டர். எம்.ஜி.ஆர். கல்வி ஆராய்ச்சி் நிறுவனம்

அடையாளம்பட்டு வளாகம்

மின்னஞ்சல் முகவரி: kavitha0143@gmail.com 

 ஆய்வுச்சுருக்கம்

சங்ககாலத்தமிழ்ப் புலவர்களிலே பலர் தமிழை ஆராய்வதையே தொழிலாகக் கொண்டு வாழ்ந்தனர். தமிழ் மீது தனியாத பற்றுக் கொண்டு பல நூல்களை இயற்றினார்கள்.அவ்வாறு தமிழையே தன் மூச்சாக கொண்டு வாழ்ந்த புலமை   வாய்ந்த அவ்வைக்கும் அரசன் அதியமானுக்கும் இருந்த அன்பை பற்றியும் தமிழ்மொழி சிறக்க அவ்வைக்கு  ஈந்த     நெல்லிக்கனியின் சிறப்பை பற்றி இக் கட்டுரையில் காண்போம்.

முக்கியச் சொற்கள்

                 அவ்வை,அதியமான்,வாயிற்காவலன், மலைவாசிகள்,கருநெல்லிக்கனி

முன்னுரை

 அவ்வையாரைப்  பற்றி   வழங்கும்   கதைகளுக்கு  அளவில்லை.  தமிழ்நாட்டிலே அவ்வையாரைப்  பற்றிப்  பேசாதவர்கள்   இல்லை  பழைய  பாட்டிகள்   கூட   ஏதாவது பேசும்போது, அவ்வையார் இதைச்  சொன்னார்   என்று  ஆரம்பித்து விடுவார்கள் அவ்வளவு  புகழுண்டு  அவ்வையாருக்கு.   அவ்வையார்     பாடியதாக    வழங்கும்   பாடல்கள்     பல.    சங்க நூல்களிலே அவ்வைப்பாடல்கள்   பல  காணப்படுகின்றன.  ஆத்திச்சூடி, முதுரை, நல்வழி,   விநாயகர் அகவல்,  போன்ற   நூல்களும்   அவ்வையார்  பாடியனவென்று  கருதப்படுகின்றன.  அவ்வை பெயரில் சில தனிப்பாடல்களும் காணப்படுகின்றன. அவ்வையாரைப் பற்றி வழங்கும்  வரலாற்றிலே  மற்றொரு சிறப்பு  அமைந்து கிடக்கின்றன.  ஏறக்குறைய  ஆயிரம் ஆண்டுகள்   தொடர்ந்து  அவ்வையாரைப்பற்றிப் பேசப்படுகிறது.  ஒரே   அவ்வையார்   ஆயிரம்   ஆண்டுகள்    உயிரோடு   வாழ்ந்ததாகவும் நம்புகின்றனர். 

ஒளவையார் பற்றிய குறிப்புகள்

சங்க காலத்தில் வாழ்ந்த அவ்வையார் என்ற ஒருவர் இருந்தார். அவரைப் பற்றிய  வரலாற்றை    ஒரளவு   புறநானூற்றப்  பாடல்களைக்    கொண்டு   அறிந்துகொள்ளலாம். தொடர்ச்சியாக   அவரைப்   பற்றிய  பிறப்பு-வளர்ப்புக்  கதைகளைத்  தெரிந்து  கொள்ள முடியாவிட்டாலும்  அவருடைய   நட்பினர்கள்  யார்?  யார்? அவர் மகளுக்குச்  செய்த நன்மையென்ன?  அவர்  காலத்தில்  வாழ்ந்த  வள்ளல்கள் ,  அரசர்கள் ,  புலவர்கள்   யார்? யார்?  என்ற   வரலாறுகளை  அவ்வையாரின்   பாடல்களைக்  கொண்டு  தெரிந்து கொள்ளலாம். இவ்வாறு சங்க நூல்களைக் கொண்டு  தெரிந்து கொள்ளும் அவ்வையார். ஏறக்குறைய  இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்  இருந்தவராகக் கருதப்படுகிறார். இவ் அவ்வையார் ஒரு சிறந்த அரசியல் வாதியுமாவார். இதன் பின்னர் சுந்தரமூர்த்தி நாயனார்  காலத்தில் ஓர் அவ்வையார் இருந்ததாகக் கதை வழங்குகிறது. சுந்தரமூர்த்தி  நாயனார்  காலம்  ஆயிரத்து முந்நூறு ஆண்டுகளுக்கு முன்னதாகும்.   பின்னும்,  கம்பர்  காலத்தில்  ஓர்  அவ்வையார்  இருந்ததாகக் கதைகள் வழங்குகின்றன.  இவர்   காலம்  ஏறக்குறைய   ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னதாகும். சங்க காலத்திலிருந்து  கம்பர்  காலம் வரையிலும்  ஆயிரம்  ஆண்டுகள் ஆகின்றன.

"சங்க காலத்து  அவ்வைக்கும்,  சுந்தரமூர்த்தி  நாயனார்  காலத்து  அவ்வைக்கும் ஏறக்குறைய  எழுநூறு  ஆண்டுகள்  இடையில் உண்டு.  சுந்தரமூர்த்தி நாயனார் காலத்து அவ்வைக்கும்   கம்பர்   காலத்து   அவ்வைக்கும்   ஏறக்குறைய.  முந்நூறு   ஆண்டுகள் இடைவெளியுண்டு.  ஆகையால்  சங்ககாலத்து   அவ்வை  வேறு. சுந்தரமூர்த்தி  நாயனார் காலத்து  அவ்வை  வேறு , கம்பர் காலத்து  அவ்வை  வேறு"   என்று ஆராய்ச்சியாளார்கள் கூறுவர்.

ஒளவையார் சிறப்புகள்

           சங்க  காலத்து  அவ்வையார்  மிகவும்  பெரும்புகழ்  பெற்றவர். அரசர்களாலும், மக்களாலும்   மதித்துப்   பாராட்டப்  பெற்றவர்.  ஆதலால்,  பிற்காலத்தில்   இருந்த   சில பெண்புலவர்கள் அந்த  அவ்வையாரின்  பெயரைத்  தாங்கி்யிருக்க  வேண்டும்; அல்லது பழங்காலத்து   அவ்வையாரைப்  போன்றே   புலமை வாய்ந்த   சில   பெண்பால் புலவர்களை அவ்வையார் என்ற   பெயரிட்டு   மக்கள்   அழைத்திருக்கவேண்டும். இதுதான்  உண்மையாக  இருக்க முடியும். நாம்  இங்கே  குறிப்பிடும்  அவ்வையார்  சங்க காலத்து  அவ்வையார்; அதாவது இரண்டாயிரம்    ஆண்டுகளுக்கு முன்னிருந்தவர்; அல்லது முதல் அவ்வை இந்த அவ்வை அதியமான் நெடுமான் அஞ்சியயென்னும்    மழவர்  தலைவனிடம்  மிகுந்த அன்புடையவர். அவனும் இவரைத் தனது அன்னையாக  - நண்பராக  - அரசியல் ஆலோசனையளிக்கும்  அமைச்சராக  வைத்து  பாராட்டிவந்தான். அதியமானுடைய  வீரத்தையும்   கொடையையும்  பாராட்டி  அவ்வையார் பல பாடல்கள் பாடியிருக்கின்றார். அதியமான் இறக்கும் வரையிலும் அவனுடைய உயிர்த்     தோழராக  வாழ்ந்தார்  அவ்வையார்.  அவன்  இறந்த  பின்னும்  அவனைக் குறித்துப் பாடினார்.

அதியமான் ஒளவையார் தொடர்பு

        இந்த அவ்வையார் முதல் முதல் அதியமானை பார்ப்பதற்காகச் சென்றபோது இருவருக்கும் உடனே சந்திப்பு ஏற்படவில்லை . அதியமானைக் காண்பதற்காக அவர்  நீண்ட நேரம்  காத்திருந்தார் .இறுதியில் பொறுமையிழந்தார். உடனே  அதியமான் அரண்மனையின் வாயில் காவலனை பார்த்து, காவலனே! உன்னுடைய அரசன்  எப்பொழுதும் பரிசிலர்க்கு எளியன்! எந்த நேரத்திலும் பரிசிலர்கள் அவனைச் சந்திக்கலாம் என்று கேள்வியுற்றே நான் பரிசில் பெற வந்தேன் .ஆனால் அவனோ என்னை மதக்கவில்லை! எனக்கு இவ்வுலகில் சோறு கிடைக்காமலில்லை. எத்திசைக்கு நான் போனாலும் எனக்குச் சோறு கிடைக்கும்என்று கூறி விட்டுப் புறப்பட்டார் . இக்கருத்தை  அவள் ஒரு பாடல் மூலம் தெரிவித்தாள்.

              இச் சமயத்தில் அதியமான் ஓடிவிந்து அவரிடம் மன்னிப்பு கேட்டுக்கொண்டான். அவ்வையாரின் சிறந்த புலமையை அறிந்து அவரைத் தன் உண்மை ஆசிரியையாக ஏற்றுக்கொண்டான். இந்த நிகழ்ச்சிதான் அவ்வையார்க்கும் ,அதியமானுக்கும் இடையே நட்பு வளர காரணமாக இருந்தது. இங்ஙனம் அவ்வையார்க்கும் அதியமானுக்கும் நட்பு  வளர்ந்து பெருகுவதற்குக் காரணமாக இருந்த இப்பாடலின் பொருள்தான் கீழ்வருவது. “வாயில் காவலோனே! வாயில் காவலோனே! பரிசிலர்க்கு அடைக்காமல் எப் பொழுதும்  திறந்திருக்கின்ற அதியமான் நெடுமான் அஞ்சியின் வாயிற்காவலனே! வள்ளல்களின் காதுகளிலே சி்றந்த மொழிகளை விதைப்பார்கள்; தாம் நினைப்பதை எவ்வகையேனும் முயன்று முடிக்கு நெஞ்சுரம் உடையவர்கள்; வள்ளல்களிடம் பரிசில் பெறுவதற்காக வருந்தித் திரிந்து பரிசில் பெறுவதையே  வாழ்க்கையாகக் கொண்டவர்கள் புலவர்கள் . இத்தகைய புலவர் மரபைச் சேர்ந்தவள் நான்.

அதியமான் வாயிற்காவலோன் உரையாடல்

உன்னுடைய அரசனோ, விரைந்து செல்லும் குதிரையை விட சிறந்தவன். நெடுமான் அஞ்சி என்னும் பெயரைக்கொண்டவன் .அவன் தரத்தை  எண்ணாமல் மறந்து விட்டானோ! அல்லது என்னையும் என்னுடைய தன்மையையும் அறியாமல் போய்விட்டானோ! இவ்வுலகில் அறிவும் புகழும் உடையவர்கள். இல்லாமற்      போய்விடவில்லை; அவர்கள் அடியோடு மாண்டு மடிந்து போய்விடவில்லை; உலகமும் பாழாகிவிடவில்லை. எமக்குப் பரிசளிக்க  இவ்வுலகில், புகழும் அறிவும் உடையோர் எவ்வளவோ பேர் இருக்கின்றனர். ஆதலால் எமது யாழை எமது தோளிலே சுமந்து கொண்டோம்; வாத்தியங்கள் வைக்கும் எமது பையை சுருக்கி கொண்டோம்.

 மரங்களை வெட்டி வேலை செய்யும் தச்சனுடைய சிறுவர்கள் - மழு அதாவது வாய்ச்சியைப் பெற்ற வல்லமையையுடையவர்கள் காட்டிலிருந்தால் அவர்கள் சும்மா இருப்பார்களா? அவர்கள்  கைக்குத் தகுந்த வேலையை அந்த காடு அவர்களுக்குக் கொடுத்துத் கொண்டிருக்குமல்லவா? அவர்கள் விரும்பியதைத் தங்கள் கையிருலிக்கும் மழுவின் மூலம் அந்த காட்டிலே பெற்றுக் கொள்ள முடியும் .அது போல் தான் எனது நிலைமையும், நான் எத்திசைக்குப் போனாலும் சென்ற திசைகளில் எல்லாம் சோறு கிடைக்கும்”.

இதுவே அவ்வையார் கூறிய பாடலில் அடங்கிய பொருள்.

வாயி லோயே! வாயி லோயே!

வள்ளியோர் செவிமுதல் வயங்குமொழி வித்தித்,தாம்

உள்ளியது முடிக்கும் உரன்உடை உள்ளத்து

வரிசைக்கு வருந்தும் இப் பரிசில்வாழ்க்கைப்

………………………………………

மழுஉடைக் காட்டகத்து அற்றே;

எத்திசைக் செலினும் அத்திசைச் சோறே.      (புறம்:206)

உனது  தலைவனாகிய அதியமான் நெடுமான் அஞ்சியின் பரிசிலால்தான் நான் வாழ வேண்டுமென்ற அவசியம் இல்லை. எனக்கு பரிசில் அளிப்போர் இந்த நாட்டின் பல பாகங்களிலும் இருக்கின்றனர்என்பதே இப்பாட்டில் அமைந்துள்ள கருத்து. இதன் மூலம் அவ்வையாரின் வீரத்  தன்மையைக் காணலாம். இதுவே அவ்வையார்க்கும் அதியமானுக்கும் முதல் முதல் நட்பினை விளைவித்த பாடல் எனக் கருதலாம்.

அவ்வையும் அதியமானும்         

அவ்வையும் அதியமானும் ஒரு காலத்தவர். ஏறக்குறைய இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னே வாழ்ந்தவர்கள். அதியமான் தகடூரை ஆண்டவன்.சேரர் மரபைச் சேர்ந்து ஒரு சிற்றரசன். வீரத்திலும், கொடையிலும் பேரரசன். அவ்வையார் ஒரு நாடோடிப் புலவர். அவரிடம் அதியமானுக்கு அளவு கடந்த அன்பு. அவ்வையார் வெறும் தமிழ்ப்புலவராக மட்டும் இல்லை. அதியமானுக்கு அரசியல் ஆலோசகராகக்கூட இருந்திருக்கிறார். தொண்டைமானுக்கும் அதியமானுக்கும் ஒரு சமயம் போர் நடக்க இருந்தது. அப்பொழுது அவ்வையார் அதியமானுடைய தூதராகத் தொண்டைமானிடம் சென்றார். அதியமானுடைய வீரத்தை விளக்கிக்கூறித் தொண்டைமானைப் போரில் புகாதபடி தடுத்தார்.

புறநானூற்றில் உள்ள அவ்வையார் பாடல்களிலே 20-க்கும் மேற்பட்ட பாடல்கள் அதியமானைப் பற்றிப் பாடியவை. அதிலிருந்தே அவ்வையார்க்கும், அதியமானுக்கும் எத்தகைய அன்பும் நட்பும் வளர்ந்திருந்ததென்பதைக் காணலாம். இருவரும் தங்கள் வாழ்நாள் முழுவதும் இணைபிரியா நட்பினராயினர்.

         ஒரு நாட் செல்லலம்;இருநாட் செல்லலம்;

       பலநாள் பயின்று பலரொடு செல்லினும்

       தலைநாட் போன்ற விருப்பினன் மாதோ “ (புறநா.101)

இது அதியமானைக் குறித்து அவ்வையார் கூறியதுஒருநாள் அல்ல; இருநாள் அல்ல; நாம் அவனிடம் சென்ற நாட்கள் பல.பல நாட்கள் அவனோடு பழகினாலும், பலரோடு அவனிடம் சென்றாலும் அவன் முகம் சுளிப்பதில்லை. முதல் நாள்-அவனைச் சந்தித்த அந்த முதல் நாளில்.அவன் எவ்வாறு வரவேற்று விருந்தளித்தானோ, அவ்வாறே எந்நாளும் வரவேற்றான்; விருந்தளித்தான்; பரிசில் தந்தான்இது மேலே காட்டிய பாடலின் பொருள். விருந்தும் மருந்தும் மூன்று நாள் என்பது ஒரு தமிழ்ப்பழமொழி. இதற்கு விதிவிலக்கானவன் அதியமான்.

அதியனும் நெல்லிக்கனியும்

குதிரை மலை என்பது அதியமான் ஆட்சியிலிருக்கும் வளம் பொருந்திய மலை. அதியமான் ஒய்வு காலத்தில் உல்லாசமாக பொழுதை போக்கும் மலை. அதியன்  மலையை சுற்றிப் பார்த்து கொண்டு இருக்கும் பொழுது ஒரு நீர் அருவியையும் அதனை அடுத்து ஒரு உயர்ந்த பாறையின் பிளப்பிலே ஒரு நெல்லி மரமும் இருப்பதைக் கண்டான். மலைவாசிகள் அந்த கருநெல்லிக்கனியைப் பறிக்க எவ்வளவோ முயன்றனர். அவர்களால் ஆகவில்லை. இறுதியில் அதியமானோ தன் உயிரைச் சிறிதும் பொருட்படுத்தாமல் அந்தப் பாறை வெடிப்புக்குள் இறங்கினான். அந்தக் கனியைப் பறித்துக்கொண்டு வந்தான். அதைக்கண்ட மலைவாசிகள் அரசனை வாழ்த்தினர். அக் கனியை அருந்தும் படி வலியுறுத்தினர். ”அவன் நான் அரண்மனைக்கு சென்றபின் அருந்துகிறேன்என்று சொல்லிவிட்டு, அக்கனியை மிகவும் பாதுகாப்புடன் அரண்மனைக் கொண்டு வந்தான்.

இக்கனியை உண்டவர்கள் இவ்வுலகில் நெடுங்காலம் உயிர்வாழலாம். இறப்பென்பது அவர்களை நெருங்காது.என்று மலைவாசிகள் கூறிய சொல்லைக் கேட்டவுடன் அதியமானுக்கு அவ்வையாரின் நினைப்பு வந்துவிட்டது .அந்தக்கனியைத் தானுண்டு நீண்டநாள் வாழவேண்டுமென்ற எண்ணம் அவனுக்கு எழவில்லை. ‘எப்படியேனும் அந்தக் கனியை அவ்வையார்க்கு அளிக்கவேண்டும்.   அவரை அருந்தும்படி செய்ய வேண்டும்  அவர் நீண்ட நாள் இவ்வுலகில் வாழ்ந்து தமிழ்த்தொண்டு செய்ய வேண்டும்’. என்ற எண்ணமே அவன் உள்ளத்தில் உதித்தது. ஆதலால் அவன் அந்தக் கனியை மிகவும் அருமையாகப் போற்றிப் பாதுகாத்து வைத்திருந்தான் அவ்வையார் வந்ததும் அந்நெல்லிக் கனியைக் கொடுத்தான். அவ்வையும் அதனை வாங்கி அருந்தி விட்டு இந்நெல்லிக் கனி மிகவும் சுவையாக இருக்கிறதே. இதற்கு முன் இக்கனியை நான் கண்டதுமில்லை உண்டதுமில்லையே என்றார் ஒவ்வையார். அதன் பிறகுதான் அதியமான் அந்தக் கனியின் பெருமையைக் கூறினான்.  நான் இந்தக் கனியையருந்தி நீண்ட நாள் வாழ்வதால் உலகிற்கு என்ன பயன்? நீங்கள் அருந்தி நீண்ட நாள் வாழவேண்டும். உங்களால் தமிழன்னை வளம் பெற வேண்டும். அதற்காகவே இக்கனியை தங்களிடம் தந்தேன் என்று மகிழ்ச்சியோடு சொன்னான்.

அதியமானுடைய அன்பைக் கண்டு அவ்வையாருக்கு ஆனந்தக் கண்ணீர் வந்துவிட்டது. அதியமானுடைய தியாகத்தைப் பாராட்டி அவனை வாழ்த்தினார். மாற்றாரைப் போரிலே புறமுதுகிடச் செய்யும் வீரத் செல்வத்தையுடையவனே! அழகிய மாலையை அணிந்த அஞ்சியே! நீ, பால் போன்ற பிறைச்சந்திரனை ஒத்த நெற்றியையும் பிரகாசிக்கும் தலையையும், நீலநிறமுள்ள அழகிய கழுத்தையும் உடைய சிவபெருமானைப் போல நீடுழி வாழ்வாயாக என்று வாழ்த்தினார்.                                

                                வலம்படு வாய்வாள் ஏந்தி, ஒன்னார்

களம்படக் கடந்த கழல் தொடித் தடக்கை

……………………………

சிறியிலை நெல்லித் தீங்கனி குறியாது

              ஆதல் நின்  அகத்து அடக்கிச்

              சாதல் நீங்க எமக்கு ஈத்தனையே(புறம்-91)

தொகுப்புரை                  

நெல்லிக்கனியின் பெருமையைச் சொல்லிவிட்டால் அவ்வையார் அதனை உண்ணமாட்டார்; அதியமானையே உண்ணும்படி வலியுறுத்துவார். ஆதலால் அதன் சிறப்பை அதியமான் சொல்லாமல் அவ்வையாரிடம்  அளித்தான். இவ்வாறு சங்ககாலத்தில் ஒரு புலவனுக்கும் அரசனுக்கும் இருந்த ஆழமான தமிழ்ப்பற்றையும் அறியமுடிகிறது.

துணைநூற்பட்டியல்

1. சிதம்பரனார்.சாமி புறநானூறு-தமிழர் நாகரிகம், கெளரா ஏஜென்ஸிஸ், சென்னை,2011

2. ஞானசம்பந்தன்..ச மகளிர் வளர்த்த தமிழ் பாரிநிலையம்,சென்னை,2008