4ஆம் ஆண்டில் நமது இலக்கியச்சுடர்
படைப்புகளை periyaswamydeva@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி இதழின் வளர்ச்சிக்கு உதவுங்கள்

சனி, 1 ஆகஸ்ட், 2020

பெண் இயல்புக் கட்டமைப்பும் பண்பாட்டுக் காரணியாக்கலும்



ரா. அருணா& . சின்னச்சாமி,

முனைவர்பட்டஆய்வாளர்கள்

அரசுகலைக்கல்லூரி (தன்னாட்சி),

கோயம்புத்தூர் - 18.

9788330237, 7373332319

chinnatamil8833@gmail.com

ஆய்வுச்சுருக்கம்

            இலக்கியத் தளத்திற்குள் பெண்மீதான புனைவுகள் மீதூரம் நீண்டிருக்கின்றன. பெண்களை அடிமை உடல்களாக மாற்றி ஆணின் இச்சைக்கான பொருளாகக் கற்பிதம் செய்து அவர்களை விளிம்பிலும் விளிம்பாகக் கட்டமைத்து வைத்துள்ளது ஆணாதிக்கச் சமூகம். அத்துடன் அவளை பண்பாட்டுக் காவலாளியாக்கி, அதைத் தாங்கி நிற்கும் துலாக்கோலாக, கடத்தியாக இருத்தி வைத்திருக்கிறது. இலக்கிய, இலக்கணப் பிரதிகள் பெண்மீது கட்டமைக்கும் சொல்லாடல்கள் பண்பாட்டுக் கூறுகளாகி மரபாகிப் போயுள்ளதைக் காணமுடிகிறது.

கலைச்சொற்கள்

                ஆணாதிக்கம், தாய்வழிச்சமூகம், இலக்கணப்படுத்தல், கட்டமைப்பு, அந்நியப்படுத்தல், பண்பாடு.

முன்னுரை

ஆணாதிக்கச் சமூகத்தில் பெண்ணின் இருப்பு இயல்பான ஒன்றல்ல. பெண் என்ற பாலினப் புனைவு இயற்கைத் தன்மையிலிருந்து அந்நியப்படுத்தும் ஆதிக்க மேலாண்மையாகும். மொழி, கல்வி, மதம் போன்ற கருத்துருவங்களால் பெண் ஒடுக்கப்பட்டு, பண்பாட்டு காரணியாகக் கட்டமைக்கப்படுகிறாள். அவ்வகையில் பெண்ணின் இயல்புகள் எவ்வாறு இலக்கணப்படுத்தப்படுகின்றன, பெண் பண்பாட்டு காரணியாக எவ்வாறு புனைவேற்றம் செய்யப்படுகிறாள் என்பதை பழந்தமிழ் இலக்கியங்களான தொல்காப்பியம், குறுந்தொகைப் பாடல்கள்வழி இக்கட்டுரை ஆராய்கிறது.

இலக்கணப்படுத்தலில் பெண்இயல்பு

பெண்ணிற்கான நடத்தைமுறைகளை வரையறுத்து ஒழுக்க உடல்களாகச் சமூகத்தில் இயக்கவைக்கும் சட்டகத்தை ஆணாதிக்கச் சமூகம் காலந்தோறும் செய்து வந்துள்ளது. அதில் தாய்வழிச் சமூகத்தின் நினைவுகளை இழந்து ஆணின் மேலாதிக்கத்தைத் தாங்கி நிற்கும் சுமைதாங்கியாக பெண் உடல் வார்க்கப்பட்டது.   ஆணாதிக்கச் சமூகம் பெண்உடலைத் தீட்டு என்று கட்டமைக்கிறது. அதேசமயம் அவள் உடல் குறித்து வர்ணிக்கவும் செய்கிறது. தீட்டு × வர்ணிப்பு என்ற இணைமுரண்களைப் பெண்மீது கட்டமைக்க, மொழியை இலக்கணக்கட்டுக்குள் கொண்டுவந்ததுபோல பெண்ணின் இயல்புகளும் இலக்கணக்கட்டுக்குள் கொண்டுவரப்படுகிறது. ஆண்களுக்கான இயல்பு என்று இலக்கண வரையறைகள் மொழியப்பட்டாலும் அது பெண்ணை ஆணின் மோகித்தலுக்கான உடன்பாட்டுப் பொருளாக மாற்றமுயலும் வழிகாட்டுதலாகவே இருக்கின்றன. அவ்வகையில், பெண்ணை பாலியலுக்கான உடலாகவும், சந்ததி உற்பத்திக் கருவியாகவும், உடைமைப் பண்டமாகவும் கட்டமைத்து அவளது சுதந்திரவெளியைத் தான் சார்ந்திருக்கும் ஆணிடம் ஒப்புக்கொடுப்பதே சிறந்த பெண்மைக்குரிய இலக்கணமாக்கப்படுகின்றன.

அச்சமும்நாணுமும்மடனும்முந்துறுதல்

நித்தமும்பெண்பாற்குரியஎன்ப’’ (தொல். பொருள். 96)

என்பது பெண்ணின் இயல்பாக வரையறுக்கப்படுகிறது. அச்சம், நாணம், மடம், பயிர்ப்பு என்பவை பெண்ணுக்கு உயிர் போன்று அவளுடன் எப்பொழுதும் இருக்கவேண்டியது அவசியம் என்று இலக்கணப்படுத்தும் சிந்தனையை ஆணாதிக்கச் சமூகம் கட்டமைப்பதை அவதானிக்க முடிகிறது. இது,

ஒருவர்பெண்ணாகப்பிறப்பதுஇல்லைபெண்ணாகஆக்கப்படுகிறார்’’ (2011, . 227)

என்ற சீமோன் திபூவவின் கருத்தினடிப்படையில் பெண்ணிற்கான இயல்புகள் கட்டமைக்கப்பட்டவையே என்பதை மெய்ப்பிக்கிறது.

புணர்ச்சி என்பது இயற்கையான உணர்வாகும். மனிதப் பாலினக் கருத்துருவத்தால் உருவாக்கப்பட்ட ஆண் × பெண் முரணில் ஆண்புணர்ச்சிக்குரிய சுதந்திரம் கொண்டவனாகவும் பெண், விருப்பம் இருப்பினும் நேரடியாக வெளியில் சொல்லகூடாதவளாகவும் கணவனுடன் மட்டும் புணர்ச்சிகொள்பவளாகவும் கட்டமைத்து அவளை புணர்ச்சி சுதந்திரத்திலிருந்து அந்நியப்படுத்தி, புணர்ச்சியைச் செயற்கைத் தன்மையானதாக மாற்றிவிட்டிருக்கிறது ஆணாதிக்கச் சமூகம். இவ்வாறு கட்டமைக்கப்பட்ட இயல்புகள் கொண்ட பெண்ணை ஆண் புணர்ச்சிக்குத் தயார்படுத்த வேண்டிய நெறிமுறைகளை,

முன்னிலையாக்கல் சொல்வழிப்படுத்தல்

        நன்னயம் உரைத்தல் நகைகனிஉறாஅ.......’’ (தொல். பொருள். 98)

இவ்வாறு வழிப்படுத்தப்படுகிறது. இதில் ஆணின் இயல்புகள் நேரடியாகச் சொல்லப்படும் வேளையில் பெண், தனது பாலியல் விருப்பத்தை எக்காரணம் கொண்டு நேரடியாக மொழிந்து விடக்கூடாது என்பதில் தீர்க்கமாகச் செயல்பட்டுள்ளதைக் காணமுடிகிறது. இது பெண்கள் எப்பொழுதும் பாலியல் துய்ப்புடன் மட்டுமே வாழக்கூடியவர்கள்என்ற சிந்தனையிலிருந்து உதித்ததாகும். தனியுடைமைச் சமூகத்தில் குடும்பம், கணவனின் உடைமையாகிப் போன பெண்பாலியல் விருப்பத்திலிருந்து அப்புறப்படுத்தப்பட்டு அது ஆணின் விருப்பத்திற்கானதாக மாறுகிறது. இது தாய்வழிச் சமூகத்திலிருந்து மாறுபட்ட தன்மையாகும். இது போன்ற பெண்ணை அடிமை கொள்ளும் சிந்தனைகள் மதச்சட்டக நூல்களின் வழி மரபாக மடைமாற்றப்படுவதை மனுதர்மசாஸ்த்திரம் போன்ற நூல்களின் வழி காணமுடிகிறது. இவ்வகையான இலக்கணப்படுத்தல்கள் ஆணாதிக்கச் சமூகப் பண்பாட்டுத் தளத்திலிருந்து மொழியப்படுகிறது.

இலக்கியம் கட்டமைக்கும் பெண்

                தாய்வழிச் சமூகத்தின் உரிமைகள் அழித்தொழிக்கப்பட்டு பெண் ஆணைச்சார்ந்து வாழும் உயிரியாக, குடும்பநிறுவனத்தின் பணி இயந்திரமாக மாற்றப்பட்டாள். சொத்துக்கான சந்ததிகளை ஈன்று கொடுக்கும் தாய்க்குச் சொத்துரிமை மறுதலிக்கப்பட்டது. பெண்ணின் தன்னிலைகள் சிதைக்கப்பட்டு ஆணாதிக்கப் பண்பாட்டு வெளிக்குள் சிறைபடுத்தி பண்பாட்டைக் கடத்தும் வேராக்கப்பட்டாள். தந்தைமை அதிகார குடும்ப நிறுவனத்திற்குள் பெண் குடும்பத்திற்கானவளாக, கணவனுக்கானவளாக நிலைநிறுத்தப்படுவதை,

வினையேஆடவர்க்குஉயிரே

        மனையுறைமகளிர்க்குஆடவர்உயிர்” (குறுந். 135)

போன்ற ஆண்பாற்புலவர்களின் பாடல்கள் தெளிவுறுத்துகின்றன. ஆண் உடலுக்கு இயக்கம் தருவது வினை (உயிர்). மனையுறை மகளிரின் உடல்இயக்கத்திற்குக் காரணம் கணவன் (உயிர்). இந்தஉடல், உயிர் எடுத்துரைப்பு ஆணின் இயக்கதிற்குட்பட்ட கருவியாகப் பெண்ணைக் கட்டமைக்கும் செயல்தந்திரமாகும். வினைசெய்து வாழ்தல் ஆடவர்க்கு உயிராக உள்ளது போல பெண்களுக்கு இல்லை. வினையிலிருந்து பெண் அந்நியப்படுத்தப்படுகிறாள். இதற்குக் காரணமாக,

பெண்ணைச் சமூக உழைப்பில் இருந்து புறக்கணிக்கப்பட்ட போக்கு (பெண்ணின் உழைப்பு மூலதனத்துக்கே உரிய உபரி பெறுமானத்தை இழந்தது) என்பது, பெண்ணைச் சமூகவாழ்க்கையிலிருந்து படிப்படியாக அகற்றியதில் வெற்றி கண்டது, பெண்ணைச் சமூக உழைப்பில் இருந்து அகற்றிய சமூகம் பெண்ணைப் பிள்ளைபெறும் கூலிஇயந்திரமாக, ஆணின் பாலியல் தேவையைப் பூர்த்திசெய்யும் இயந்திரப் பொம்மையாக, ஆணுக்குச் சேவை செய்யும் அடிமையாகக் கேவலப்படுத்தியது என்பது, பெண்ணின் வரலாற்றுத் தோல்வியுடன் கூடிய அடிமைத்தனமாகும்.” (2001, . 17)

என்ற  எங்கெல்ஸ் கருத்தை விளக்கும் பி. இரயாகரன் முன்வைக்கிறார். பெண் பொருளாதார உற்பத்தியிலிருந்து அந்நியப்படுத்தப்பட்டு சந்ததி உற்பத்திக்கானவளாக மாற்றப்படுகிறாள். இதுவே சிறந்த அறமாக உயர்மதிப்பீடு பெறுகிறது.            பரத்தையர் சந்ததி உற்பத்தியிலிருந்து விலகி பொருளாதார உற்பத்தியில் ஈடுபட்டதை அறஇலக்கியங்கள் இழிவாகச் சித்திரிப்பது இதன்பாற்பட்டதேயாகும் (காண்க: சின்னச்சாமி, ., பாலின அறநெறிப்படுத்தலில் பீடித்திருக்கும் ஆணதிகாரம்  - நாலடியாரை முன்வைத்து,  பெயல்அரையாண்டுஆய்விதழ், அக்டோபர் 2018 - மார்ச் 2019, பக். 35-38).

                பெண் எந்நிலையிலும் தனது கணவனை விட்டுக் கொடுக்கும் தன்மையற்றவளாக இருக்க வேண்டியது ஆணாதிக்கப் பண்பாட்டுக் கட்டமைப்புக்கு அவசியமானதாகும். அவனின் வினையில் மாற்றம் உண்டாயினும் அவனது சால்புடைமையைப் பெண் மதித்தொழுகுதல் இன்றியமையாததாகிறது. அவ்வகையில், தலைவனின் செயலில் மாற்றத்தைக் கண்ட தோழி, தலைவியிடம் கூறும்போது தலைவி மறுமொழியாக,

நோம்என்நெஞ்சேநோம்என்நெஞ்சே

இமைதீய்ப்பன்னகண்ணீர்தாங்கி

அமைதற்கமைந்தநங்காதலர்

அமைவிலர்ஆகுதல்நோம்என்நெஞ்சே” (குறுந். 4)

என்று மறுதலித்து தன் மனதை ஆற்றிக் கொண்டு அவனது சால்பு தன்மையை நிறுவுவதாக காமஞ்சேர் குளத்தார் புனைந்துள்ளார். ‘கணவனுக்கு வரும் துன்பங்களை தடுத்து நிறுத்தும் வல்லமை கற்புடைய பெண்களுக்கு உண்டுஎன்ற ஆணாதிக்கச் சிந்தனை இதனுள் இழையோடுவதைக் காணமுடிகிறது. தலைவன் எந்நிலையிலும் ஏமாற்றமாட்டார் என்று பெண் நம்பவைக்கப்படுகிறாள். இது தலைவனைப் புனித பிம்பமாகக் கட்டமைக்கிறது. அப்புனித பிம்பத்தின் மீது மாசுவிழாது காப்பது பெண்ணிற்குக் கடமையாகிறது. இப்பாடல் பெண் மொழிப்புனைவாயினும் மேற்கூறிய இலக்கணவயப்பட்ட ஆணாதிக்கச் சிந்தனை மொழியாகவே வெளிப்பட்டுள்ளது.  இதற்கு

ஆண்-பெண் என்ற குறியீடே உயிரியல் (Biological) அடிப்படையில் வந்து அமைந்ததல்ல பெண் என்ற குறிப்பானுக்கும் (சொல்லுக்கும்) அது குறிக்கும் பெண்ணாகிய குறிப்பீட்டிற்கும் (பொருளுக்கும்) எந்தவிதமான காரணகாரியத் தொடர்பும் கிடையாது. ஆனால், மொழியில் வந்து சேரும் பண்பாட்டுக் கூறுகளால் மனிதர்களின் மனஅமைப்பிலும் ஆண்பெண் குறித்த கருத்தாக்கங்கள் தானாக வந்து படிந்து விடுகின்றன.” (2011, . 232)

என்று க. பஞ்சாங்கம் சுட்டிக் காட்டும் ழாக்லக்கானின் சிந்தனை பொருந்திப் போவதாக உள்ளது.

காத்திருத்தலின் பண்பாட்டுத்தளம்

காத்திருத்தல் என்பது பெண்ணுக்கானதாக சங்கஇலக்கியம் பேசுகிறது. ஆணுக்குப் பேசும்போது அதுபிரிவாக முன்வைக்கப்படுகிறது. பெண்ணுக்குக் காத்திருப்பு, ஆணுக்குப்பிரிவு என்ற மொழிக்கட்டமைப்பில் ஆண்காத்திருத்தல் குறித்தும் பெண்பிரிவு குறித்தும் சங்கஇலக்கியங்கள் பேசத்துணியவில்லை. ஏனென்றால் ஆண்பிரிந்து சென்றவுடன் அவனது வினை அத்துடன் முடிந்துவிடுகிறது. பெண்தான் பண்பாட்டுக் காரணியாக இருக்கிறாள். பண்பாட்டைக் காப்பாற்றுவது அவளது கடமை. அது அவள் வழியாகத்தான் கடத்தப்படுகிறது.

இங்கு காத்திருத்தல் பண்பாட்டுச் சொல்லாடலாக மெருகேற்றப்படுகிறது. தலைவனின் வருகைக்காகக் காத்திருத்தல் பெண்ணின் தலையாயப் பிரச்சனையாக்கப்படுகிறது. அவளது சிந்தனை முழுவதும் அவனது வருகையை நோக்கியே குவியப்படுத்தப்படுகிறது. வரைந்து கொள்வதாகக் கூறிச்சென்ற தலைவனை எதிர்நோக்கி காத்திருக்கும் தலைவியின் நிலையை,

புள்ளும்மாவும்புலம்பொடுவதிய

நள்ளெனவந்தநார்இல்மாலைப்

பலர்புகுவாயில்அடைப்பக்கடவுநர்

வாரார்தோழி! நம்காதலரே!” (குறுந். 118)

இவ்வாறு நன்னாகையார் பதிவு செய்கிறார். பறவைகளும் விலங்குகளும் தங்களது இணையுடன் மாலைப்பொழுதில் இருப்பிடத்திற்குச் சென்றுவிட்டதை உணர்த்தும் விதமாக அது எழுப்பும் ஓசையைக் குறிப்பிடும் தலைவி தலைவனின் வருகையை எதிர்ப்பார்த்து ஏமாற்றங் கொள்பவளாகக் கட்டமைக்கிறார். பறவை, விலங்கு என்பதில் விலங்கு வீட்டில் பழக்கப்படுத்தியதாக நோக்கமுடிகிறது. ஒப்பீடும்கூட அவளது வீட்டிற்குட்பட்ட வெளியைக் குறிப்பதாகவே இருக்கிறது. தலைவனின் வரைவிற்கான வரவு ஏமாற்றமளிப்பதாக இருப்பினும் அவள் பறவைகளுடனும் விலங்குகளுடனும் ஒப்பிட்டுக்கொண்டு அவனுக்காகக் காத்திருப்பவளாக இலட்சியப்படுத்தப்பட்டுப் பண்பாட்டு மயமாக்கப்படுகிறாள்.

முடிவுரை

    மேற்கண்ட கருத்துகளினடிப்படையில் பெண்ணின் இயல்புகள் இலக்கணப்படுத்தப்பட்டு அவளுக்கான ஒழுக்கவரையறைகள் இலக்கியங்களின் வழி பரவலாக்கம் செய்யப்பட்டுள்ளதை அறியமுடிகிறது. பெண்ணை ஒழுக்கவிதிகளுக்குட்பட்டவளாக மாற்றமுயற்சிக்கும் பணியும் அதைப்பெண் மீறும்போது பண்பாட்டு மீறாலாக, பண்பாட்டுச் சிதைவாக ஆணாதிக்கச் சமூகம் வரையறுக்கிறது என்பது அறியலாகிறது. தலைவனை நினைத்துக் கொண்டே அவனது வருகைக்காகக் காத்திருந்து தனது வாழ்நாளைக் கழிக்கும் பெண்கற்புடையவளாகப் பண்பாட்டுத் தளத்தில் உயர்மதிப்பீட்டுத் தகுதியைப் பெறுகிறாள்

துணைநூற்பட்டியல்

1.     இரயாகரன், பி., ஆணாதிக்கமும் பெண்ணியமும், சென்னை: கீழைக்காற்று வெளியீட்டகம். 2001.

2.     இராகவையங்கார், இரா., குறுந்தொகை விளக்கம், சென்னை: சாரதா பதிப்பகம். 2016.

3.     இளம்பூரணர் (உரை), தொல்காப்பியம், சென்னை: சாரதாபதிப்பகம். 2011.

4.     சின்னச்சாமி, ., பாலின அறநெறிப்படுத்தலில் பீடித்திருக்கும் ஆணதிகாரம்  - நாலடியாரை முன்வைத்து, பெயல் அரையாண்டு ஆய்விதழ், அக்டோபர் 2018 - மார்ச் 2019.

5.     சோமசுந்தரனார், பொ.வே., குறுந்தொகை, திருநெல்வேலி: திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம். 1955.

6.     பஞ்சாங்கம், ., இலக்கியமும் திறனாய்வுக் கோட்பாடுகளும், தஞ்சாவூர்: அன்னம்வெளியீடு. 2011.