4ஆம் ஆண்டில் நமது இலக்கியச்சுடர்
படைப்புகளை periyaswamydeva@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி இதழின் வளர்ச்சிக்கு உதவுங்கள்

சனி, 1 ஆகஸ்ட், 2020

மறக்கமுடியுமா? பெருந்தலைவரே!

   
                                                                                       
                                                                                        
     
முனைவர் மா.முரளி,

  உதவிப் பேராசிரியர்; ,

தமிழ்த்துறை,

காமராஜ் கல்லூரி,

தூத்துக்குடி.

                                                                                                                                                            

மறக்க முடியுமா? பெருந்தலைவரே!

நாடாதவர்; நாடாள ஆசைப்படாதவர்.

தேடாதவர்; பதவிசுகம் தேடாதவர்.

மாறாதவர்; கொள்கை நிறம் மாறாதவர்.

புரியாதவர்; ஊழல் புரியாதவர்.

தெரியாதவர்; மக்களை ஏமாற்றும் வித்தை தெரியாதவர்.

இத்தனை நற்பண்புகளின் உறைவிடமாய்த் திகழ்ந்தவர் யார் அவர்? என்று தானே கேட்கிறீர்கள்ஆம் பெருந்தலைவர் காமராஜர்தான் அவர்.

           காமராஜர்-பாழ்பட்டுக் கிடந்த பாரத தேசந்தன்னை வாழ்விக்க வந்ததொரு வாரிசுநாட்டு விடுதலைக்கு நாளும் உழைத்த மகன். பூட்டுச்சிறைக்குள்ளே புகுந்து இளைத்த மகன். பொன்னை நாடாது; பொருளை நாடாது எந்நாளும் மக்கள் நலந்தன்னையே நாடிய தன்னலமற்ற மாமனிதர். பதவிசுகம் தேடாத, கொள்கை நிறம் மாறாத, ஊழல் புரியாத மக்களை ஏமாற்றும் வித்தை தெரியாத உத்தம சீலர் அவர்;. கர்மவீரரே! தாய்நாட்டின் விடுதலையின் பொருட்டு, பல்லாண்டு காலம் தாங்கள் சிறை வாழ்க்கை அனுபவித்ததை எந்நாளும் மறக்க முடியுமா?.  திருமணமே செய்யாமல் நாடு நாடு என்று நாளும் ஓடிக்கொண்டு மக்களுக்காகத் தாங்கள் ஆற்றிய சேவையை மறுக்க முடியுமா?

சென்னை ஆவடியில் காங்கிரஸ் மகாநாடு நடந்த சமயம், தாங்கள்  காரில் மகாநாட்டிற்குச் சென்று கொண்டிருந்த போது, வழியில் ஒரு பாலத்தின் மேலே பாரவண்டியைத் தள்ள முடியாமல் இரண்டு பேர் சிரமப்பட்டுக் கொண்டிருந்ததைக் கண்ட உடனேயே, காரிலிருந்து கீழே இறங்கி உங்களது முழு பலத்தையும் திரட்டி, அவர்களுடன் வண்டியைத் தள்ளி, பாரவண்டி எளிதாக பாலத்தைக் கடக்க உதவிய ஏழைப்பங்காளரே! தங்களது மனிதநேயத்தை யாராலும் மறக்க முடியுமா?

                தமிழக முதலமைச்சராக தாங்கள் இருந்த போது திரைப்படத் துறையைச் சார்ந்த பிரமுகர் ஒருவர் தங்களிடம், தமிழக அரசின் சாதனைகள் மிகவும் போற்றும்படி உள்ளது. ஆனால் மக்களிடம் அது போய்ச் சேரவில்லை. சினிமா மிகவும் சக்தி வாய்ந்த சாதனம். அதன் மூலம் திரைப்படம் எடுத்து அரசின் சாதனைகளை மக்களிடம் தெரிவிக்கலாம் என்று கூறியபோது நாம் செய்த நன்மைகளை நாமே மக்களிடம் எடுத்துரைக்க வேண்டுமா என்ன? சரி, படம் எடுக்க விளம்பரச் செலவு எவ்வளவு வரும்? எனத் தாங்கள் அவரிடம் கேட்டபோது,மூன்று இலட்சம் ரூபாய் செலவாகும் என்றார் அந்தப் பிரமுகர். மூன்று இலட்சம் ரூபாயா? அப்படியென்றால் வேண்டாம். மூன்று இலட்சம் ரூபாயில் நான் மூன்று பள்ளிக்கூடங்களைத் திறந்து விடுவேன் என்று கூறி அதன்படியே அரசின் வீண் விளம்பரச் செலவுகளைத் தவிர்த்து, மக்களின் வரிப்பணத்தைக் காத்து,ஏராளமான பள்ளிக்கூடங்களைத் திறந்து, பலருக்கும் கல்விக்கண் தந்த கர்மவீரரே! மறக்கமுடியுமா? உங்களை....

ஆடு மேய்ப்பவரும், மாடு மேய்ப்பவரும் நாலெழுத்துப் படித்து, நாளை நாடாள வேண்டும் என எண்ணிய தலைவரே! அனைவருக்கும் இலவசக்கல்வித் திட்டம் கொண்டு வந்ததோடுமட்டுமல்லாமல், குழந்தைகள் படிக்க பள்ளிக்கூடத்திற்கு வராததற்குக் காரணம் வறுமை என்பதை உணர்ந்து போடு சாப்பாடு, பின் போதி வாய்ப்பாடு எனத் தாங்கள் கொண்டுவந்த சட்டம் தானே! மதியஉணவுத்திட்டம். பள்ளியில் படிக்க வரும் மாணவர்கள் மத்தியில் ஏழை, பணக்காரன் என்ற ஏற்றத்தாழ்வு ஏற்படாமல் தடுக்க, தங்களின் சிந்தனையில் உதித்ததுதானே இலவச சீருடைத்திட்டம். 1954 முதல் 1963 வரையிலான உங்களது ஆட்சிக் காலத்தில் தானே பாபநாசம் அணை, மணிமுத்தாறு அணை,வைகை அணை, அமராவதி அணை, ஆழியாறு அணை,பரம்பிக்குளம் அணை, கீழ்பவானி அணை, கிருஷ்ணகிரி அணை, சாத்தனூர் அணை, வீடூர் அணை எனப் பல்வேறு அணைக்கட்டுகள் கட்டப்பட்டன. நாட்டின் நீர்ப்பாசன வசதிகளைப் பெருக்கி, விவசாயிகளின் வாழ்வு மலரவும்,நாட்டின் பொருளாதாரம் உயரவும், வழிவகை செய்த தொலைநோக்குச் சிந்தனையாளரே! மறக்கமுடியுமா? உங்களை...

ஏழைகளின் குறைகளைக் கேட்டறிய எப்போதும் வீட்டின் வாசலைத் திறந்தே வைத்திருந்த தலைவா! உம்மைக் காண வருவோரை உடன் இருப்பவர் தடுத்தால் அவர்களைக் கண்டித்து, இந்தா அவரை வர விடுன்னே, அவர் வரட்டுன்னே, என்று குறைகேட்க முந்தும் கருணைத் தலைவரே! மறக்க முடியுமா? உங்களை.....

இந்தியாவின் இதயம் கிராமங்களில் இருக்கிறது என்ற காந்தியின் வழியில் கிராம மக்களின் வாழ்வில் மேலும் ஒளியேற்றியவரே! மின்சாரம் தடையின்றி கிடைப்பதுதான் வளர்ச்சிக்கான அஸ்திவாரம் என்பதை உணர்ந்து எல்லாருக்கும் மின்சாரம் தடையின்றி கிடைக்க வழிவகைசெய்தவரே! கூட்டுறவே நாட்டுயர்வு என்பதற்கேற்ப மாநிலத்தில் பல கூட்டுறவுச் சங்கங்களை உருவாக்கியவரே!. ஆவடி கனரகத்தொழிற்சாலை, நெய்வேலி பழுப்பு நிலக்கரிச் சுரங்கம் எனப்பல்வேறு தொழிற்சாலைகளை அமைத்து நாட்டின் தொழில் வளர்ச்சிக்கு வித்திட்ட ஆசியாவின் குலவிளக்கே! மக்களிடத்தே பூரண மதுவிலக்கு கொண்டு வந்த மகானே! ஏழை எளியோர்களின் நலங்கருதி தாங்கள் கொண்டு வந்த மக்கள்நலத்திட்டங்களையெல்லாம் மறக்கமுடியுமா?

தாங்கள் முதலமைச்சராக இருந்த சமயம், தங்களது அன்னை சிவகாமி அம்மையாரை, விருதுநகரிலிருந்து சென்னைக்கு அழைத்துவரட்டுமா? எனத் தங்களது உதவியாளர் வைரவன் தயங்கித் தயங்கி ஒரு நாள் கேட்டபோது, ”வேண்டாம்! அம்மா ஊரிலேயே இருக்கட்டும்; அம்மா இங்கிருந்தால் அவரைப் பார்க்க உறவினர்கள் என்று பலர் வருவார்கள்; வருபவர்கள் அம்மாவைப் பார்த்துவிட்டு அதோடு நின்றுவிடமாட்டார்கள்; நான் முதலமைச்சர் வீட்டிலிருந்து பேசுகிறேன் என்று அதிகாரிகளிடம் அதிகாரமாக அவர்கள் பேசத் தொடங்குவார்கள். நிர்வாகத்திற்குக் கெட்டபேர் வந்துவிடும். அதனால் அம்மா ஊருலேயே இருக்கட்டும்என்றாயே மறக்கமுடியுமா? அதனைதன் சுய பந்த பாசங்களை நாட்டிற்காகத் துறந்த கோமானே! சென்ற இடமெல்லாம் தாயின் புகைப்படத்தைப் பெட்டியில் மட்டுமல்ல, நெஞ்சிலும் சுமந்து சென்ற பாரதப் பெருந்தலைவா!

ரேசன் கடையில் கேப்பையும் கம்பும் தான் போடுறாங்க, இதை எப்படி சாப்பிடறது? நெல்லு வாங்கித் தரப்படாதான்னு தங்களது தாயார் உங்களிடம் கேட்டதற்கு, “நெல்லுப் பேச்சுப் பேசாதே. ஊருக்கு ஒண்ணு உனக்கொண்ணானுகேட்டாயே! சமத்துவத் தலைவா! மறக்க முடியுமா? தங்களை...

கவுன்சிலர் பதவி கிடைக்கும் என்று தெரிந்தாலே அதற்காக எதையும் செய்யத் தயாராகும் மனிதர்கள் பலர் உண்டுஇந்தியாவையே ஆளக்கூடிய பிரதமர் பதவி உங்களைத் தேடி இரண்டு தடவை வந்த போதும், பதவிக்கு ஆசைப்படாமல் இரு பிரதமர்களை அடையாளம் காட்டினீரே! கிங்மேக்கரே!.  உங்களது ஆட்சிக்காலத்தில்தானே,

லஞ்சமில்லை, வஞ்சமில்லை; கெஞ்சி நின்றார் யாரும் இல்லை.

பஞ்சம் இல்லை, பசியும் இல்லை; பட்டினியால் சாவும் இல்லை.

சாதி, மத, பேதமில்லை; மக்களிடத்தே சண்டையேதும் வந்ததில்லை.

          முதல்வராகப் பதவி வகித்த போதும், மக்கள் சேவையில் உங்களை ஒரு தொண்டனாக ஈடுபடுத்திக் கொண்டு மக்களுக்காகத் தாங்கள் ஆற்றிய சேவையை யாராலும் மறக்க முடியாது.

         நாகர்கோவில் தொகுதியில் எம்.பி.யாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு டெல்லியில் தாங்கள் தங்கியிருந்தபோது, இந்தியா வந்திருந்த அமெரிக்க அதிபர் நிக்சன் தங்களைப் பற்றிக் கேள்விப்பட்டு உங்களைச் சந்திக்க விரும்பியும், அவரைப் பார்க்க   நேரம் ஒதுக்க மறுத்துவிட்டீரே! அதற்கானக் காரணத்தை உங்களது உதவியாளரிடம், “அவர் பெரிய ஆளா இருக்கலாம்ன்னேன்.... யார் இல்லேன்னதுநம்ம ஊர் அண்ணாத்துரை அமெரிக்கா போனாரு... இதே நிக்சனை பார்க்க விருப்பப்பட்டாரு... இந்த நிக்சன் பார்க்க முடியாதுன்னு சொல்லிட்டாருன்னேன்நம்ம ஊர்க்காரரைப் பார்க்க விருப்பமில்லாதவரை நாம ஏன் பார்க்கனும்னேன்என்றீரே! நீரன்றோ! பச்சைத்தமிழன்; தன்மானத்தலைவர். எதிர்கட்சியினரை எதிரிக்கட்சியினராக நினைக்கின்ற தேசத்திலே அவர்களையும் நேசித்த மாண்பாளர்.


          ஒருவரே தொடர்ந்து முதல்வர் பதவியில் இருப்பது சரியல்ல என்ற நல்லெண்ணத்தில் தாங்கள் கொண்டு வந்த கே-பிளான் திட்டத்திற்கு முன் உதாரணமாகத் தானே முன்வந்து தமிழக முதல்வர் பதவியை விட்டுக் கொடுத்த முதல் அரசியல்தலைவரே! முதலமைச்சர் பதவியில் இருந்த போதும் கடைசி வரை வாடகை வீட்டிலேயே வாழ்ந்த சொக்கத்தங்கமே! தாங்கள் மறைந்த போது விட்டுப்போன மொத்த சொத்தே சில நூறு ரூபாய் நோட்டும், கதர் வேட்டியும், கதர் சட்டையும், சமையலுக்குத் தேவையான சில பாத்திரங்கள் மட்டும் தானே! நாடும் நாட்டு மக்களுமே என் சொத்து என்று வாழ்ந்த எளிமைத் தலைவரே! நேர்மைத்தலைவரே! எந்நாளும் மறக்கவே முடியாது உம்மை.... உங்களது அரிய வாழ்க்கை இன்றைய அரசியல்வாதிகள் எல்லாரும் படிக்க வேண்டிய பாடமாகும். ஒவ்வொரு மனிதரும் எப்படி வாழ வேண்டும்? எப்படி நாட்டை ஆள வேண்டும்? என்பதற்கு உதாரணமாய் வாழ்ந்த பாரதரத்னாவே! பலரையும் படிக்க வைத்த மாமேதையே! உங்களது ஆட்சிக்காலத்திலே, மக்களுக்காக நீங்கள் செய்துள்ள மகத்தானத் திட்டங்களை, தாங்கள் படைத்துள்ள சாதனைகளை, தங்களது தியாகங்களை யாராலும் மறுக்கவோ, மறைக்கவோ முடியாது. எளிமையின் திருவுருவாய் கறைபடியாத கரத்திற்குச் சொந்தக்காரராய் நேர்மையின் சிகரமாகத்திகழ்ந்த நம் பெருந்தலைவரின் இவ்அரிய வாழ்க்கை அரசியல்வாதிகள் எல்லாரும் படிக்க வேண்டிய பாடமாகும். மண், விண் இருக்கும் வரை மக்கள் மனதில் என்றென்றும் உங்களின் புகழ் நிலைத்தே இருக்கும்.