4ஆம் ஆண்டில் நமது இலக்கியச்சுடர்
படைப்புகளை periyaswamydeva@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி இதழின் வளர்ச்சிக்கு உதவுங்கள்

சனி, 1 ஆகஸ்ட், 2020

விவசாயியின் அழுகுரல்



இருளைப் போக்கிய சூரியன் சிரிக்கிறது;

வெறுமையைப் போக்கிய காற்று சிரிக்கிறது;

வெப்பத்தைப் போக்கிய மழை சிரிக்கிறது;

களைப்பை போக்கிய இரவு சிரிக்கிறது;

 

ஆனால்

பசியைப்போக்கிய விவசாயம் மட்டும் அழுகிறது...

கலப்பை பிடித்தகைகள் சொகுசுக் கட்டில் அறிந்ததில்லை;

கடப்பாரைப் பிடித்தகைகள் விலையுயர்ந்த காரைக் கண்டதில்லை;

களையெடுத்தக் கைகள் எங்கும் கைகட்டி நின்றதில்லை;

 

விதைகள் தூவியகைகள் விஞ்ஞானத்தைக் கண்டு மயங்கியதில்லை;

தன்னலம் அறியாமல் உழைத்த கைகளுக்கு

தண்ணீர் தரகூட இங்கு பலருக்கு மனதில்லை...

தாய்முகம் வாடியபொழுது கலங்காத கண்கள்

பயிர்கள் வாடியபொழுது கலங்கியது;

 

ஊருக்குச் சோறு போட்டவன் என்ற கர்வம்

ஒருவேளை சோற்றுக்கு வழியின்றி காணாமல்போனது;

ஏர்பிடித்தும் வலிஅறியாகைகள்

யாசகச் சோற்றை உண்ணும்பொழுது வலித்தது...

 

திருடனோ அரண்மனை வீட்டில்,

ஏமாற்றுபவனோ அடுக்கு மாடிகுடியிருப்பில்,

கூலித்தொழிலாளியோ ஓட்டு வீட்டில்,

நம்பசி தீர்த்த விவசாயியோ நடுரோட்டில்....

 

 

தேசத்தாயின்முதுகெலும்பைமுறித்து;

நாட்டின் பொருளாதாரத்தை குறைத்து;

நாட்டின் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையிட்டு;

இன்றைய விஞ்ஞானம் இதுவே !

இன்றைய வளர்ச்சி இதுவே !

என்று வண்ணசாயம்பூ சப்படுகின்றது.

 

விஞ்ஞான வளர்ச்சியோ

விவசாயமில்லா அரிசி நிச்சயம்...

மக்களின் உணர்ச்சியோ

புதுபுது நோய்கள் நிச்சயம்...

 

பிரபலங்களின் ரகசியத்தை அறியபாடுபடும் ஊடகம்

விவசாயிகளின் அவலநிலையை மட்டும் அலங்கரித்து காட்டுவது சரியா...?

நித்திரை இல்லாமல் உழைத்த உடம்புகளை

நடுரோட்டில் நிர்வாணமாக கண்டு ரசித்தது சரியா...?

 

ஊருக்கெல்லாம் விருந்திட்டு மகிழ்ந்தவனுக்கு

எலிக்கறி விருந்திட்டு மகிழ்ந்தது சரியா...?

விவசாயிகளின் கோரிக்கை எட்டாதவர்களுக்கு

மதுபிரியர்களின் கோரிக்கை மட்டும் எட்டியதுஎப்படி...? 

 

மனிதா..!

இனியும் தாமதமேன்..!

தேசத்தின் முதுகெலும்பை காப்போம்..!

தேசத்தாயின் கண்ணீரை துடைப்போம் ..!

 

.  யோகஸ்ரீ

மின்னஞ்சல் : yogasree.2001@gmail.com

கைபேசிஎண் : 9840482376