4ஆம் ஆண்டில் நமது இலக்கியச்சுடர்
படைப்புகளை periyaswamydeva@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி இதழின் வளர்ச்சிக்கு உதவுங்கள்

சனி, 1 ஆகஸ்ட், 2020

தமிழரின் தொன்மையான பலகை ஆட்டம் - வல்லு


(Tamils ancient board game - Vallu)

 

முனைவர் சித்ரா,

விரிவுரையாளர், SCOPE, City University of Hong Kong

ஆங்காங்

ஆய்வுச் சுருக்கம்

கீழடி ஆய்வின் போது கிடைக்கப் பெற்ற ஐநூறுக்கும் மேற்பட்ட சில்லுகள், தமிழகத்தில் பெண்கள் ஆடும் நொண்டி ஆட்டத்தின் காய்களாக கீழடி அகழாராய்வு அறிக்கை குறிப்பிட்டுள்ளது.  இணையதள ஆய்வின் போது, அத்தகைய சில்லுகள் பலகை ஆட்ட காய்களாக இருக்கலாம் என்ற ஊகத்தின் அடிப்படையில், தமிழர்களின் ஆட்டம் பற்றிய விவரங்களைச் சேர்க்கும் போது வல்லு என்ற ஆட்டம் இருப்பது தெரிய வந்தது. அது கிரேக்கர்களின் போலிஸ் கட்ட ஆட்டமாக இருக்கலாம் என்பதை ஆய்ந்து விளக்கப்பட்டுள்ளது. அத்துடன் வல்லு ஆட்டத்தை மீண்டுருவாக்கம் செய்யப்பட்டுள்ளது.

முக்கிய சொற்கள்

வல்லு, வல்லப் பலகை, வல்ல நாய், கட்ட ஆட்டம், திருக்குறியீடுகள், கிரேக்க போலிஸ் ஆட்டம்

 

1.  அறிமுகம்

பழங்காலந் தொட்டே மனிதனுக்கு பல பொழுதுபோக்குகள் உண்டு. கற்கால மனிதன் குகைகளில் ஓவியங்களை வரைந்து பொழுதைக் கழித்தான். பின்னர் பாறைகளிலும் மண் தரைகளிலும் கட்டங்களை வரைந்து, காய்களைக் கொண்டு ஆடத் தொடங்கினான். எளிமையான 2-2 கட்டங்களில் தொடங்கி பல கட்ட ஆட்டங்களை உருவாக்கி விளையாடினான். பல்வேறு நாகரிகங்களிலும், அதேப் போன்று மனிதர்கள் பல வகையான ஆட்டங்களை உருவாக்கி பொழுதினைக் கழித்துள்ளார்கள்.  இந்த ஆய்வுக் கட்டுரை முதலில் இந்தியாவில் கட்ட ஆட்டங்களின் வரலாறு, கட்ட ஆட்டங்களின் (பலகை ஆட்டங்கள்) வகைகள் பற்றிய அறிமுகத்துடன், தமிழ் இலக்கியம் காட்டும் வல்லு என்ற பலகை ஆட்டம் பற்றி எடுத்துக் காட்டி, கட்ட ஆட்டப் பலகைகள் நம் கோயில்களில் எப்படி திருக்குறியீடுகளாக காணப்படுகின்றன என்பதையும் காட்டும். வல்லுக்கு நிகரான மற்ற உலக நாகரீக ஆட்டங்கள் பற்றி எடுத்துக் கூறி, வல்லு ஆட்டம் என்பது என்ன என்பதை விளக்கி, அந்த ஆட்டத்தை மீட்டுருவாக்கம் செய்ய முயன்று உள்ளது.

 

2.  இந்தியாவில் கட்ட ஆட்டங்களின் வரலாறு

ஓய்வு வேளையில் மனமகிழ்ச்சிகாகச் செய்யக்கூடிய எளிய அல்லது வேடிக்கையான செயல்களை விளையாட்டு எனலாம். எளிய அல்லது வேடிக்கையான செயல்களில் சில வரையறைகள் வகுக்கப்படும் பொழுது ஒழுங்குமுறை ஆட்டமாகிறது” (தமிழர் நாட்டு விளையாட்டுகள், .3) எந்த விதப் பலனையும் எதிர்பார்க்காமல் வெறும் பொழுபோக்கிற்காகத் தொடங்கிய ஆட்டங்கள், பிற்காலத்தில் போட்டிக்கான ஆட்டங்களாகவும் சூதாட்டங்களாகவும் மாறிப் போயின என்பதற்கு பல வரலாற்றுச் சான்றுகள் உள்ளன.

இந்தியாவிலேயே, 5000 ஆண்டுகளுக்கு முன்பு என்று வரையறுக்கப்படும் மகாபாரதத்தின் முக்கிய அங்கமாகவே தாயம் விளையாட்டு இருந்தது நாம் யாவரும் அறிந்ததே.  சூதாட்டத்தின் உச்ச கட்டத்தை இந்த இதிகாசத்தில் காணக் கிடைக்கிறது. சிந்து சரஸ்வதி நாகரீகம் பரவியிருந்த வட இந்தியாவில், அகழ்வாய்வின் போது பல வகைப்பட்ட ஆட்டக்காய்களும் பகடைக்காய்களும் கிடைக்கப் பெற்றுள்ளன. கல்லில் செதுக்கப்பட்ட கட்டங்களும் கிடைத்துள்ளன. இந்த வகையில் இந்திய நாடு உலகிற்கு சதுரங்க ஆட்டத்தை அறிமுகப்படுத்திய பெருமையை பெற்றுக் கொண்டது.

அதற்கு நிகராக போற்றப்படும் தமிழ் நாகரீகத்தின் வழித் தோன்றலாக உள்ள தமிழ் மக்கள் மத்தியில், இன்று வரையிலும் பல ஆட்டங்கள் நின்று நிலவி வருகின்றன. பல வகையான பகடை கொண்டு ஆடும் ஆட்டங்கள், பரமபதம், ஆடு புலி ஆட்டம் போன்றவை மக்களின் பொழுதுகளை கழிக்க உதவுகின்றன. மேலும், சங்கத் தமிழ் இலக்கியம் வல்லு என்ற ஆட்டத்தை குறிப்பிடுகிறது.


3.  கட்ட ஆட்டங்களின் வகைகள்

கட்ட ஆட்டம் என்பது வெறும் தரையிலோ, பாறையிலோ, மரப் பலகையிலோ கட்டங்களை வரைந்து, இருவர் அல்லது இருவருக்கு மேற்பட்டோர் எதிர் எதிராக அமர்ந்து, காய்களைக் கொண்டு ஆடும் ஆட்டம். இந்த ஆட்டங்களில் பகடைகளை உருட்டி, கிடைக்கும் எண்களின் படி ஆட்டக்காய்களை கட்டங்களில் நகர்த்தி ஆடும் ஆட்டங்களும் உண்டு.

உலகெங்கிலும் உள்ள எளிய கட்ட ஆட்டங்கள் மூன்று வகையான கண்ணோட்டத்துடன்  ஆடப்படுகின்றன என்று லமர் என்பவர் குறிப்பிடுகிறார் (Lusoria tabula). போர், ஓட்டப் போட்டி, வேட்டையாடுதல் என்பன. இதைப் போன்ற ஆட்டங்கள் பண்டைய நாகரீகங்கள் பலவற்றிலும் காண முடியும்.

போர் தந்திரக் கண்ணோட்டத்தில் ஆடப்படும் ஆட்டம், ஆட்டப் பலகையில், ஒரே கட்டத்தில் காய்கள் கூடும் போது, எதிரியின் காய்களை வெட்டி எடுக்கும் வகையில் அமையும்.  இந்தியாவின் பல இடங்களில் ஆடப்படும் ஆட்டங்கள் சதுரங்கம் போன்றதும், குறிப்பாக தமிழகத்தில் தாய வகையைச் சேர்ந்த ஆட்டங்களும் இந்த வகையைச் சாரும்.

காய்களின் ஓட்டப் போட்டி கண்ணோட்டத்தில் ஆடப்படும் ஆட்டத்தில், தாயத்தை உருட்டி, வரும் எண்களுக்கு ஏற்ப, காய்களை கட்டங்களில் நகர்த்தி, முதலில் முடிக்க முயலும் வகையில் அமைக்கப்பட்ட ஆட்டம். ஏணியும் பாம்புகளும் நிறைந்த கட்டங்களைக் கொண்ட பரமபதத்தில் ஆட்டக் காய்கள் கட்டங்களில் நகர்ந்து, இறுதி இலக்கை அடையும் பரமபதம், இந்த ஆட்ட வகையைச் சாரும்.

வேட்டையாடுதல் கண்ணோட்டத்தில் ஆடப்படும் ஆட்டத்தில், காய்கள் எதிரியிடமிருந்து தப்பிக்க முயலவும், எதிரியின் காய்களை நகர விடாமல் சிக்க வைத்து விழுங்குவதும் போன்று அமைக்கப்பட்ட ஆட்டம். தமிழரின் ஆடு புலி ஆட்டம் இந்த வகையைச் சாரும்.

இவற்றில் வேட்டையாடும் கண்ணோட்டத்தில் ஆடப்படும் வல்லு ஆட்டம் பற்றிய ஆய்வினைத் இந்தக் கட்டுரை தர உள்ளது.

 

4.  இன்று வரை நிற்கும் தொன்மையான ஆட்டங்கள்

தமிழர்கள் வாழ்வில் தாய விளையாட்டு என்பது இன்று வரையிலும் ஆடப்பட்டு வருகிறது. ஆடவர்கள் மற்றும் பெண்கள், வேலை முடித்து வீட்டிற்கு வந்த பின் பொழுது போக்காகவோ, சூதாட்டமாகவோ ஆடும் ஆட்டம் ஆடு புலி ஆட்டம். வீட்டில் விசேட காலங்களில் குடும்பத்தினர் ஒன்று கூடி ஆடும் ஆட்டம் நான்கு பக்கங்களில் கட்டங்கள் கொண்ட தாய ஆட்டம். இன்னும் பல ஆட்டங்கள் நம் கிராமப் பகுதிகளில் இருக்கின்றன. இங்கு சில ஆட்டங்கள் மட்டும் குறிப்பிடப்பட்டுள்ளன. 5-5, 7-7, 8-8 கட்ட ஆட்டங்கள் இன்று வரை நடந்து வருவதையும் பார்க்க முடியும்.

 




ஆடுபுலி ஆட்டம்

ஆடுபுலி ஆட்டம்

5-5 கட்ட ஆட்டம்




கட்டத்துக்குள் கட்ட ஆட்டம்

நான்கு பக்க தாய ஆட்டம்

7-7 கட்ட ஆட்டம்




சதுரங்கம்

பரமபதம்

பல்லாங்குழி

 

இந்த ஆட்டங்கள் விளையாடும் முறை இந்தக் கட்டுரைக்கு அப்பாற்பட்டது. அதனால் ஆட்ட விதிகள் இங்கு விவாதிக்கப் படவில்லை. இந்தியா உலகிற்குக் கொடுத்த சதுரங்கம் என்பது போர் தந்திர விளையாட்டு. பரமபதம் என்பது ஓட்ட கட்ட ஆட்டம். பல்லாங்குழி என்பது பெரும்பாலும் பெண்கள் ஆடும், காய்களைக் கொண்டு குழிகளில் இட்டு ஆடும் ஆட்டம்.

இது தவிர, இலக்கியம் கூறும் வல்லு என்ற ஆட்டம் பெயரளவில் மட்டுமே உள்ளது.  அதைப் பற்றி இக்கட்டுரை இங்கே விளக்க உள்ளது.

 

5.  ஆய்வு முறை

கீழடியில் கிடைக்கப் பெற்ற பல சில்லுகள் பலகை ஆட்டத்தின் காய்கள் என்ற ஊகத்தை ஆய்வு செய்ய நுழைந்த போது, வல்லு ஆட்டம் பற்றிய அறிமுகம் இணையதளத்தில் கிடைத்தது. உலகில் உள்ள பலகை ஆட்டங்கள் பற்றிய ஆய்விற்குள் நுழைந்த போது பல்வேறு தகவல்கள் பெறப்பட்டன. அவற்றின் அடிப்படையில் மேன்மேலும் ஆய்ந்த போது, எகிப்து, ரோம, கிரேக்க ஆட்டங்கள் பற்றிய தகவல்கள் கிடைக்கப் பெற்றதுடன், பலரும் தொன்மையான ஆட்டங்களை மீட்டுருவாக்கம் செய்யப்படுவது தெரிய வந்தது. அதன் அடிப்படையில் வல்லு ஆட்டம் பற்றி விளக்கங்கள் தரப்பட்டு, இக்கட்டுரையில் மீட்டுருவாக்கம் செய்யப்பட்டுள்ளது. 

 

6.  தமிழ் இலக்கியம் காட்டும் கட்ட ஆட்டம் - வல்லு

சங்க கால இலக்கியம் கூறும் கட்ட (பலகை) ஆட்டங்களில் ஒன்று வல்லு என்பதாகும்.

இந்த ஆட்டத்தைப் பற்றி தமிழர்கள் முதல் நூலாகக் கருதும் தொல்காப்பியமும், மற்ற சங்க நூல்களும் குறிப்பிடுவதைக் கொண்டு, இது நம் முன்னோர்களின் ஆட்டம் என்பது உறுதி.

வல் என் கிளவி தொழிற்பெயர் இயற்றே” (தொல்காப்பியம் 3-375),

என்ற வரிகள் வல் என்பது நட, செல் என்பது போன்ற தொழிற்பெயர் என்று குறிக்கிறது.

மேலும்,

நாயும் பலகையும் வரூஉம் காலை,

ஆவயின் உகரம் கெடுதலும் உரித்தே

உகரம் கெடு வழி அகரம் நிலையும்” (தொல்காப்பியம் 3-376)

என்பது வல்லு நாய், வல்லு பலகை என்ற சொற்கள் கூடும் போது, உகார எழுத்து கெட்டு அகாரம் வரும் தன்மை, வல்ல நாய் வல்ல பலகை என்று ஆகும் சொற்களை எடுத்துக்காட்டி விளக்குகிறார் தொல்காப்பியர். அதன் மூலம் வல்லப் பலகை இருந்ததையும், காய்கள் நாய் என்று பெயர் பெற்றதையும் அறிய முடிகிறது.

வல்லாட்டம் என்பது சூது விளையாட்டு என்று தொல்காப்பியத்தின் மூலத்தைக் கொண்டு விளக்குவார் கி.வா.ஜ. (பயப்படாதீர்கள், ப.117-18)

சங்க காலத்தில், அதை முதியோர் ஆடியதாகவும், வரிகள் கொண்ட பலகையை கரையான் அரித்து விட்டதாகவும் அகநானூறு குறிப்பிடுகிறது.

 

கொழுங் குடி போகிய பெரும் பாழ் மன்றத்து,

நரை மூதாளர் அதிர் தலை இறக்கி,

கவை மனத்து இருத்தும் வல்லு வனப்பு அழிய,

வரி நிறச் சிதலை அரித்தலின்” (அகநானூறு 377: 6-8)

 

கலகெழு கடவுள் கந்தம் கைவிடப்

பலிகள் மாறிய பாழ்படு பொதியில்

நரை மூதாளர் நாயிடக் குழிந்த                         

வல்லின் நல்லகம்” (புறநானூறு 52:12-15)

என்ற பாடல் வரிகள் வல்லு விளையாட்டை முதியவர்கள் விளையாடியதையும் வல்லு நாய்களின் மேல் கவனத்துடன் இருந்ததையும் குறிக்கின்றது.

 

குறிப்புக் காண் வல்லுப் பலகை எடுத்து நிறுத்தன்ன

கல்லாக் குறள!”   (கலித்தொகை 94)

என்ற பாடல் வல்லுப் பலகையைக் குறிப்பிடுகிறது.

குறிப்பு காண் வல்லுப் பலகை” என்பதில், இந்தப் பலகை குறி சொல்லப் பயன்பட்டது என்றும் கொள்ளலாம்.

குறளன் என்பவன் மூன்று அடி மனிதனை குறிக்கும். இந்தப் பாடலில் கூனி ஒருத்தியைக் குறளன் ஒருவன் தன் ஆசைக்கு இணங்கும்படி வற்புறுத்துகிறான். இணங்காத கூனி, அந்தக் குறளனை “வல்லப்பலகையை நிறுத்தி வைத்திருப்பது போல் உள்ள குறளா” என்று குறிப்பிடுகிறாள். இதன் மூலம் வல்லப்பலகை மூன்று அடி உயரம் கொண்டதாக இருக்கும் என்பதை அறியலாம்.

அடுத்ததாக பரிபாடல் 18ஆம் பாடலில்,

 

வல்லுப் போர் வல்லாய்! மலை மேல் மரம்.

வட்டுருட்டு வல்லாய்! முலைய-நெட்டுருட்டுச்

சீர் ததும்பும் அரவமுடன் சிறந்து,

போர் ததும்பும் அரவம் போல்,

கருவி ஆர்ப்ப, கருவி நின்றன குன்றம்” (பரிபாடல் 41-45)

என்று வல்லுப் போர் பற்றி குறிப்பிடுகிறது.

மலை மேல் மரம் என்பது, பலகையில் சில கட்டங்கள் மலைகளாகக் குறிக்கப்பட்டதை விளக்குவதாகக் கொள்ளலாம்.

இங்கு வட்டுருட்டு மற்றும் நெட்டுருட்டு என்று கூறப்பட்டுள்ளது.  அதைப் பற்றி பின்னால் கூறப்படும்.

குறிப்புகள் மூலமாக, இந்த ஆட்டம் பற்றிய விவரங்களை அறிந்து மாந்தர்கள் வெளியிட்டுள்ளனர் (இணையம்-7).

 

7.  வல்லு ஆட்டம் ஆடும் முறை

இந்த ஆட்டம் இருவர் ஆடக்கூடிய ஆட்டம். இது பல உத்திகளைக் கொண்டு ஆடும் ஆட்டம். ஊழித்திறத்தின் படி ஆடப்படும் ஆட்டம். இது பொழுதுபோக்கிற்காக ஆடப்பட்ட விளையாட்டாகக் கருதப்படுகிறது.

இதில் உருட்டப்படும் காய்க்குப் பெயர் வல்லு நாய் அல்லது வல்ல நாய் ஆகும். கட்டங்கள் 2-2, 3-3,  4-4…10-10 என்ற அடிப்படையில் அமைக்கப்பட்டிருக்கலாம். கட்டங்கள் பலகையில் வரையப்பட்டு இருப்பின், அந்தப் பலகைக்கு வல்லுப்பலகை அல்லது வல்லப்பலகை என்று பெயர்.

அதில் வல்லநாய்யை உருட்டி, ஊழ்திறம் பொறுத்து வரும் எண்களுக்கு ஏற்ப, கட்டங்களில் கட்டுக்காய்கள் நகர்த்தப்படும். ஆட்டக்காரர் காய்களை உத்தியுடன் நகர்த்துவதில் தன்னுடைய திறத்தைக் காட்ட வேண்டும். இத்தகைய ஆட்டத்தை வென்றவர்களை ‘பழம் பெற்றவர்என்று கூறுவர்”7 என்று கூறுவோரும் உண்டு.

 

8.  திருக்குறியீடுகளாக பலகை ஆட்ட கட்டங்கள்

வட்டுகளும், பகடைகளும் அகழாய்வின் போது கிடைக்கப் பெற்றாலும் வல்லப் பலகைகள் இன்னும் நம் அகழ்வாய்வுகளில் கிடைக்கவில்லை. காலப்போக்கில் கரையான்கள் அழிக்கக் கூடிய மரத்தினால் வல்லப்பலகைகள் செய்யப்பட்டிருக்கலாம். அல்லது பாறைகளில் அவை வரையப்பட்டு ஆட்டங்கள் ஆடப்பட்டு இருக்கலாம்.

நம் தமிழகம் ஆன்மிகத்தில் மிகவும் சிறப்பாக இருந்த காலத்தில் தான் நம் நாகரீகம் கடல் கடந்தும் செழிப்பாக இருந்திருக்கிறது.

பலகை ஆட்டக்கட்டங்கள் பொழுது போக்கிற்காக ஆடப்பட்ட போதும், பல கட்டங்கள் தமிழர் வணங்கும் கோயில்களில், தரைகளிலும், படிக்கட்டுகளிலும், தூண்களிலும், மதில் சுவர்களிலும் பதிக்கபட்டுள்ளன.  அதனால் அவை திருக்குறியீடுளாக(இணையம்-8) மக்கள் மத்தியில் போற்றப்பட்டு வந்துள்ளன. 

 



 

கோயில்களில் இருக்கும் இந்தக் கட்டங்கள் மக்களின் ஆன்மிக வழிப்பாட்டிற்கு உதவியாக இருந்திருக்கக் கூடும். பகடை உருட்டி, வரும் எண்களைக் கொண்டு, கட்டங்களில் காய்களை நகர்த்தி ஆருடம் சொல்லும் வழக்கம் இருந்திருக்கலாம். அல்லது கட்டங்களை தொடச் சொல்லி, தொடு குறி சொல்லியிருக்கலாம். எடுத்துக்காட்டாக, பாச்சிகை சாஸ்திரம் (இணையம்-9) என்ற நூல் தேவதா சக்கரம் ஒன்றை கட்டங்களில் ஏற்படுத்தி, தொடும் கட்டத்திற்கு ஏற்ப குறிகளைச் சொல்லும் விதமாக அமைத்துள்ளது.


இதைக் போன்றே பல கோயில் திருக்குறியீடுகளும் பயன்பாட்டில் இருந்திருக்கலாம்.

ஆயினும், பல நாடுகளில், அன்றைய காலங்களில், இந்த ஆட்டக்கட்டங்கள் மக்களால் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளன. ஆட்டத்தின் விதிகள் அனைத்தும் மறைந்த போதும், ஆட்டங்களை விரும்பி ஆடுபவர்கள், ஆட்ட விதிகளை புதிதாக ஏற்படுத்தி, அத்தகைய ஆட்டத்தை மீட்டுருவாக்கம் செய்து பிரபலப்படுத்தி வருகிறார்கள்.

 

9.  வல்லுக்கு நிகரான உலக நாகரிக ஆட்டங்கள்

உலகெங்கிலும், குறிப்பாக எகிப்து, கிரேக்க மற்றும் ரோம நாடுகளில், கட்டங்களில் காய்களைக் கொண்டு ஆடும் ஆட்டங்கள் பல இருந்திருக்கின்றன.  ஆட்டப் பலகைகள் (எகிப்தின் செனட் மற்றும் மகென் போன்றவை) அந்த நாடுகளில் புதை மண்டபங்களிலிருந்து கண்டுபிடிக்கப்பட்டன.  அன்றைய காலகட்டத்தில், அரசர்கள் இறக்கும் போது, இத்தகைய ஆட்டப் பலகைகள் காய்களுடன் புதைக்கப்பட்டிருப்பது, மறுபிறப்புச் சார்ந்த கருதுகோளின் படி செய்யப்பட்டிருக்கலாம் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர் (Steiner, pg.162).

கி.மு. இரண்டாம் நூற்றாண்டில், ஜூலியஸ் போலக்ஸ் என்ற கிரேக்க அறிஞர் போலிஸ் ஆட்டத்தைப் பற்றிய ஒரு கருத்தை அவரது ஒனொமாஸ்டிகன் (Onomasticon) என்ற நூலில் “இந்த ஆட்டம் பலகையில் கோடுகளுக்கு இடையில் இருக்கும் வெளியில் காய்களை வைத்து ஆடுவது. பலகைக்குப் ‘போலிஸ்’ என்று பெயர்.  காய்களுக்கு ‘நாய்’ என்று பெயர். காய்கள் இரண்டு நிறங்களில் இருக்கும். ஒரு நிறக்காய் மற்ற நிறக் காயை, இரு பக்கங்களில் நிறுத்தி, பூட்டி ஆடுவதே இந்த ஆட்டம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

 

“The game played through many pieces is a board that has spaces disposed between lines; and the board is called ‘polis’ and each of the pieces a ‘dog’. The pieces are divided intwo by color and the art of the game is to capture the other-colored piece by surrounding it with two of the same color.” (Steiner, 162)

கி.மு. நான்காம் நூற்றாண்டில் வாழ்ந்த சாக்ரடீஸ் என்ற கிரேக்க தத்துவ ஞானி, இந்த விளையாட்டைப் பற்றி நகரப் (போலிஸ்) படையைப் பற்றி குறிக்கும் போது “கடுமையான வலுவான நாய்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.


“describes the army of his ideal polis as ‘tough, wiry dogs’”(Steiner, 162)

கி.பி. பன்னிரண்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த தெசலோனிகாவின் யூஸ்தாதியஸ் என்ற கிரேக்க அறிஞர், இந்த ஆட்டத்தை, “இருவர் சதுரங்களாக பிரிக்கப்பட்டப் பலகையில் ஆடும் ஆட்டம். இரு வேறு நிறக் காய்களைக் கொண்டு ஆடுவது. ஆடுபவர்கள் 30-30 காய்களைக் வைத்திருப்பர். எதிராளியின் காய்களைத் தனிமைப்படுத்தி, தன்னுடைய காய்களைக் கொண்டு பூட்டி, ஒன்றொன்றாக எடுக்க வேண்டும். பகடை உருட்டப்பட்டு நகர்வுகள் செய்யப்படும்” என்று குறிப்பிடுகிறார்.

 

“Game of dice is polis, in which there was an alternate removal of pieces, of which a large number were placed on a board in squares separated by lines.” (Steiner, 162)

“The game is played by two persons on a board subdivided into squares.  It is played with pieces of two different colours and each player seems to have had thirty pieces.  The object of the game is to isolate and surround the opponent’s pieces with one’s own pieces and thereby to take them, one by one.  The moves are made in connection with a throw of dice.” (Steiner, 162)

அங்கு நிலவிய கட்ட ஆட்டங்களைப் பற்றிய ஆய்வின் போது, கிரேக்கர்களின் ‘போலிஸ்’ என்ற ஆட்டத்தில் காய்கள் ‘நாய்கள்’ என்று பெயரிடப்பட்டு அழைக்கப்பட்டு இருக்கின்றன. தமிழரின் வல்லு ஆட்டத்திலும் காய்கள் நாய்கள் என்று அழைக்கப்பட்டதால், போலிஸ் ஆட்டம் பற்றி மேலும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. போலிஸ் ஆட்டத்தின் ஆடு பலகை கிடைக்கப் பெறாவிட்டாலும், நம் சங்க இலக்கியங்களில் உவமைகளைக் கொண்டு வல்லு

ஆட்டம் பற்றி அறிந்து கொள்வது போல், அன்றைய காலகட்டத்தில் இருந்தவர்கள் அவர்களின் எழுத்துகளில் குறிப்பிடப்பட்டிருப்பதை ஆயந்து, போலிஸ் ஆட்டம் பற்றிய குறிப்புகளை எடுத்துள்ளனர்.

கிடைத்த தகவல்களைக் கொண்டு, சியன் ஸ்டிவர்ட் பிரைஸ், இந்த ஆட்டத்தை மீட்டுருவாக்கம் செய்துள்ளார் (Sean, pg. 32-24).  ஆட்டம் 8-8 கட்டங்களில் ஆடப்படும். ஆளுக்கு 8 நாய் காய்கள் வீதம் 16 நாய் காய்களைக் கொண்டு ஆடப்படுவது.

 

1.     நாய் காய்களை ஆட்டப் பலகையின் இரு புறத்திலும் வைக்க வேண்டும்.

2.     ஆடுபவர், தன் நாய் காய்களை நேராக எத்தனை கட்டங்கள் (குறுக்கைத் தவிர) என்றாலும் நகர்த்தலாம். ஆடுபவர் நாய்களைத் தாண்டி செல்ல இயலாது.

3.     அடுத்தவர் நாய்களை இரண்டு பக்கத்திலும் இருந்து பூட்டலாம். நாய்களை வெட்டி வெளியேற்றலாம்.

4.     ஒன்றுக்கும் மேற்பட்ட நாய் காய்களும் இரண்டு காய்களுக்கு இடையே வந்தால் வெட்டி எடுக்கலாம்.

5.     எதிரியின் நாய் காய்களை முழுவதுமாக வெட்டுபவரோ, நாய் காய்கள் அனைத்தையும் பூட்டுபவரோ வெற்றி பெற்றவராவார்.

 




               

10. வல்லு ஆட்ட விதிகள்

செய்த ஆய்வின் மூலமாக, இந்த ஆட்டத்தின் விதிகளை மீட்டுருவாக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

 

வல்லுப் போர் வல்லாய்! மலை மேல் மரம்.

வட்டுருட்டு வல்லாய்! முலைய-நெட்டுருட்டுச்

சீர் ததும்பும்”

 

என்ற பரிபாடல் வரிகளின் மூலமாக வட்டுருட்டு மற்றும் நெட்டுருட்டு கலன்கள் பயன்படுத்தப்பட்டு இருக்கலாம். அல்லது பகடையே வட்டமாகவோ நெடியதாகவோ இருக்கலாம்.

 

ஆட்ட தேவைகள்

1.     10-10 கட்டம் கொண்ட வல்லுப் பலகை

2.     30 தட்டையான நாய்க்காய்கள் ஒரு நிறத்தில், 30 தட்டையான கட்டுக்காய்கள் மற்றொரு நிறத்தில்

3.     பகடைக் காய்

4.     பகடையை உருட்டும் கலம்

5.     பலகையில் மலைகள் குறிக்கப்பட்டு இருக்கும்.

 





வல்லுப்பலகை

கீழடியில் கிடைத்த காய்

கீழடியில் கிடைத்த பகடை

ஹரப்பாவில் கிடைத்த பகடை உருட்டு கலன்

 

 

விதிகள்

1.     இரண்டு பேர் எதிர் எதிராக அமர்ந்து ஆடும் ஆட்டம்.

2.     ஒவ்வொருவருக்கும் 30 நாய்காய்கள் வெவ்வேறு நிறங்களில் தரப்படும்.

3.     எதிர் எதிர் பக்கங்களில் உள்ள 3 வரி கட்டங்களில் 10-10 காய்கள் வைக்கப்பட்டிருக்கும்.

4.     ஆட்டம் துவங்க வல்லு நாய் என்ற பகடை உருட்டப் பட வேண்டும்.

5.     யாருக்கு அதிகமான எண் வருகிறதோ, அவர் ஆட்ட முறையைப் பெறுவார்.

6.     கட்டங்களில் காய்களை நேராக (குறுக்கு பாதை தவிர) எந்தப் பக்கமாக வேண்டுமானலும், எத்தனை கட்டங்கள் வேண்டுமானாலும் நகர்த்தலாம். 

7.             எதிராளியின் ஒரு காய்க்கு இரண்டு பக்கமும் காய்களைக் கொண்டு சென்று, பூட்டி விட்டால், அந்தக் காய் வெட்டப்பட்டு வெளியே வந்து விடும்.

8.                 ஒரு நாய்காய், ஒரே நகர்வை மறுமுறை மீண்டும் செய்தல் கூடாது.

9.         சில கட்டங்கள் மலைகளாக குறிப்பிடப்படும். அந்த மலை கட்டங்களில் நாய்காய்கள் வந்தால், வெட்டுவதிலிருந்து காக்க உதவும்.

10.               மலை மேல் ஒரே ஆட்டக்காரரின் நாய்காய் இரண்டிற்கு மேல் இருத்தல் கூடாது.

11.       ஆட்டத்தின் இறுதியில், பலகையில் அதிக காய்கள் உள்ளவரோ அல்லது எதிராளியின் எல்லா காய்களையும் நகர்த்த முடியாமல் பூட்டி விட்டாலோ, வெற்றி பெற்றவராவார்.

 

11.   தொகுப்புரை

            தமிழகத்தில் கட்ட ஆட்டங்கள் நெடுங்காலந்தொட்டே ஆடப்பட்டு வருகிறது. அவற்றில், ஆய்வுகளுக்குப் பின் வல்லு என்ற தமிழக கட்ட ஆட்டம், கிரேக்கர்களின் போலிஸ் என்ற ஆட்டத்ததை ஒத்தது என்பது தெரிய வந்தது. கிடைத்த தரவுகளிலிருந்து நம் சங்க இலக்கியங்களில் குறிப்பிட்ட வல்லு ஆட்டம் பற்றிய வர்ணனைகள், கிரேக்க ஆட்டத்தை ஒத்து இருந்தது என்றே சொல்ல வேண்டும். குறிப்பாக, ஆட்டக் காய்களை அவர்கள் நம்மைப் போன்றே ‘நாய்’ என்று அழைத்தனர். இரண்டுமே பெரிய பலகையில் ஆடப்படும் ஆட்டம்.  அதனால், தமிழர்களின் அதீத திறனை இந்த ஆட்டத்தின் மூலம் வெளிக்கொணரும் வகையில், போலிஸ் ஆட்டத்தின் தரவுகளின் அடிப்படையில், வல்லு ஆட்டம் மீட்டுருவாக்கம் செய்யப்பட்டுள்ளது. 

 

உசாத்துணைநூல்கள்

1.        பாலசுப்ரமணியம்.இரா, தமிழர் நாட்டு விளையாட்டுகள், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்ன பதி.1981.

2.        Lamer, H. 1927. Lusoria tabula. Metzler Publication,  RE 13.2:1900-2029.

3.        தொல்காப்பியம் பாடல்-3-376

4.        அகநானூறு    பாடல்-377

5.        கலித்தொகை  பாடல்-94

6.        பரிபாடல்     பாடல்-18

7.        இணையம் : https://ta.wikipedia.org/wiki/வல்லு

8.        இணையம் : http://www.karikkuruvi.com/2014/08/blog-post_18.html

9.        இணையம் : http://www.tamilheritage.org/uk/bl_thf/psastram.pdf

     10.     Steiner. Franz, Even More Studies in the Ancient Greek Polis. Franz Steiner Verlag.
      11.     Sean. Stewart Price, 2000. Ancient Greece, Scholastic publication.

12.     கி.வா.ஜா. பயப்படாதீர்கள், அமுத நிலையம் லிமிடெட், சென்னை. பதி.1946.