4ஆம் ஆண்டில் நமது இலக்கியச்சுடர்
படைப்புகளை periyaswamydeva@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி இதழின் வளர்ச்சிக்கு உதவுங்கள்

செவ்வாய், 1 செப்டம்பர், 2020

நேர்மை

 


.இலங்கேஸ்வரன்

முனைவர் பட்ட ஆய்வாளர்,

 சுப்பிரமணிய பாரதியார்

தமிழ்மொழி மற்றும் இலக்கியப்புலம்,

புதுவைப் பல்கலைக்கழகம்,

புதுச்சேரி. 605 014.

கைபேசி 9488521749.

 

தன் வலிமை எல்லாம் சேர்த்துத் தள்ளு வண்டியைத் தள்ளிக் கொண்டு வந்தான் பெருமாள். வயது எப்படியும் நாற்பது இருக்கும். ஆள் ஒல்லியாக இருந்தான். மாநிறம் தான். ஆனால் வெயிலின் தாக்கத்தால் கருப்பாகி இருந்தான். சுருட்டை முடி செம்பட்டை நிறத்தில் பந்தாகக் காட்சியளித்துக் கொண்டிருந்தது. மேலே துவைத்துப் போட்ட அழுக்கேறிய சட்டை. கீழே கட்டம் போட்டக் கைலியை மடித்துக் கட்டிக் கொண்டிருந்தான். அவன் தள்ளு வண்டியைத் தள்ளிக் கொண்டு வரும் வழியில் உள்ள நடுத்தெரு பிள்ளையார் கோவிலில் வண்டியை நிறுத்தினான். பிள்ளையாருக்கு நேராக நின்று தன் இரு கரங்களையும் தலைக்கு மேல் தூக்கி இறைவனை நன்றாக வேண்டிக் கொண்டான். இது நாள்வரை வந்தத் துன்பங்கள் அனைத்தையும் களைந்து நல்லதொரு வாழ்வைக் கொடுக்குமாறு வேண்டிக் கொண்டான். கடவுளுக்குக் காணிக்கையாகச் செலுத்த ஒரு ரூபாய் கூட பையில் இல்லை. எனவே தன் வியாபாரத்திற்காக எடுத்துக் கொண்டு போகும் வாழைப்பத்தில் இரண்டைப் பிய்த்து பிள்ளையாருக்கு வைத்துவிட்டு வியாபாரத்திற்குச் சென்றான்.

காய்கறிச் சந்தையில் தனது வாழைப் பழங்களைக் கொண்டு சென்று விற்க வாய்ப்பில்லை. அதற்குச் சந்தையில் உள்ள வியாபாரிகள் சங்கத்தில் உறுப்பினராக இருக்கவேண்டும், உரிமம் பெற்றிருக்க வேண்டும், சந்தா கட்ட வேண்டும் எனப் பல விதிமுறைகள் உண்டு. அவற்றில் ஒன்று கூட பெருமாளிடம் இல்லை. அது மட்டுமல்லாமல் சந்தை தற்காலிகமாக மூடப்பட்டிருந்தது. அவன் காலங்காலமாக வியாபாரம் செய்தவன் அல்ல. தற்காலிக வியாபாரியாக மாறியிருந்தான். அதற்குக் காரணம் கொரோனா. இந்த நூற்றாண்டு கண்டிறாத பேராபத்தாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்திருந்த கொரோனாவே தான்.

 பெருமாள் இதற்கு முன் மகிழுந்து ஓட்டுநராக இருந்தவன். கோரோனா பரவலின் காரணமாக அரசு ஊரடங்கு அறிவித்திருந்தது. முழு ஊரடங்கை அரசு கொஞ்சமாகத் தளர்த்தி காய்கறி, பழங்கள், மளிகை, மருந்துப் பொருட்கள் போன்ற அத்தியாவசியப் பொருட்களுக்கு மட்டும் அனுமதியளித்து அதனை வியாபாரம் செய்ய தன்னார்வர்களுக்கு அழைப்பு விடுத்திருந்தது. மாநிலங்கள், மாவட்டங்களுக்கிடையேயான போக்குவரத்து தடை செய்யப்பட்டிருந்தது. எனவே அவனால் எங்கும் யாரையும் ஏற்றிச் செல்ல முடியவில்லை. ஆகவே ஒருவேளை சோற்றுக்கே வீட்டில் பஞ்சம் ஏற்பட்டிருந்தது. அக்கம் பக்கத்து வீடுகள் ஒன்றுவிடாமல் அனைவரிடமும் கடன் வாங்கியாயிற்று. எனவே அரசு கொடுத்த நிவாரணம் கடன் கொடுத்தவர்களுக்கே சரியாக இருந்தது. மேலும் கடன் கேட்டுச் சென்றால்,

என்ன பெருமாளு! ஏற்கனவே வாங்குன ஐந்நூறு ரூபாயக் கொடுக்கல. திரும்பவும் காசு கேட்டா எப்படிப்பா?” என்றார்கள் சிலர். சிலரோ,

உனக்கு மட்டுமா ஊரடங்கு? நீ மட்டுமா வேலக்கிப்போகாம இருக்க? நானும் தான் போகல. இனி காசு கேட்டு வரமாதிரினா இங்க வராதப்பா!” என்று சிலர் கூறி வழியனுப்பி வைத்தனர்.

எனவே வேறு வழியில்லாமல் மீன் வியாபாரம் செய்யலாமென முடிவெடுத்தான். தன்னுடைய மோட்டார் சைக்கிளை எடுத்துக் கொண்டு மீன் பிடித் துறைமுகத்திற்குச் சென்றான். விடியற்காலையில் வீட்டிற்குள் உறங்கிக் கொண்டிருந்தவர்கள் அனைவரையும் எழுப்பிய படி மோட்டார் சைக்கிள் புகையைக் கக்கிக்கொண்டு சென்றது. நேரம் காலை 3.30 மணியிருக்கும் படகுகள் பல கரைதிரும்பிக்கொண்டிருந்தன. பலர் பெட்டிப் பெட்டியாக மீன்களை வாங்கிக் கொண்டு சென்றனர். யாரிடம் செல்வது என்ன கேட்பது என்று புரியாமல் மீனைக் கண்ட பூனையைப் போல அங்கும் இங்கும் திரிந்து, ஒருவழியாக தன்னிடமுள்ள இரண்டாயிரம் ரூபாய்க்கு மீனை வாங்கினான். தன் நண்பர்களிடம் பெற்ற உபதேசத்தின் படி வாங்கவேண்டிய மீன்கள் விலை குறைவாக இருந்தால் பலரும் வாங்குவார்கள். மாறாக அதிக விலை விற்கும் மீனை வாங்கப் பலரும் முன் வருவதில்லை என்ற வியாபார யுக்தியின் அடிப்படையிலேயே இந்த மீன்களை வாங்கினான். இனி தெருத்தெருவாகச் சென்று விற்கவேண்டும்.

கொரோனாவிற்கு முன்பெல்லாம் மீன் விற்கும் பெண்கள் தங்கள் கூடைகளில் மீன்களை வைத்துக் கொண்டு தெருத்தெருவாக விற்று வருவதுண்டு. அவர்கள் புது மீன்களை விற்றாலும் சரி ஓரிரு நாள் மீன்களை குளிர்பதனப் பெட்டியில் வைத்திருந்து விற்றாலும் அதைச் சரியான விலையில் விற்று விடுவதுண்டு. ஆனால் இப்போது கொரோனா காலமாகையால் மீனவர்கள் கடலுக்குச் செல்வது குறைந்து போனது. ஊரடங்கால் தங்களது அன்றாட வாழ்க்கைப் பொருளாதாரம் சரிந்து போனதாலும் ஆங்காங்கே காவல்துறை அனுமதிக்காததாலும் அவர்கள் மீன் வியாபாம் செய்ய ஊருக்குள் வருவதில்லை. மீன் சந்தையிலும் மீன் விற்பதற்குத் தடை விதிக்கப்பட்டிருந்தது. எனவே மீன் வியாபாரத்தைப் பற்றி எதுவும் தெரியாதவர்கள் கூட அதனை விற்கத் தொடங்கினர். அப்படித்தான் பெருமாளும் விற்கத்தொடங்கினான். தான் நுழைந்த தெருவுக்குள் அமைதியாகச் சென்று கொண்டிருந்தான். கூவி விற்றால்தான் வியாபாரம் ஆகும் என்று அவனுக்குத் தெரிந்திருப்பினும் கவுரவம் தடுத்தது.  அவன் பின்னே இன்னொரு மீன் வியாபாரி தனது அடித்தொண்டையில்மீன் மீனே! கவல மீனு, கார மீனு, கானங் கெளுத்தி மீனேய்!” எனத் தாள நயத்தோடு கூவிக் கொண்டே வந்தான். வந்தவனை வழி மடக்கிப் பலர் மீன் வாங்கத் தொடங்கினார். இதைப் பார்த்த பெருமாளுக்கு உசுப்பேறிவிட்டதன் காரணமாகக் கவுரவம் காற்றில் பறந்தது. எடுத்தான் நாபிக் கமலத்திலிருந்து தனது சக்தியை. அது அடுத்த தெருவின் சுவற்றில் பட்டு எதிரொலித்ததைக் கண்டு அவனுக்கே வியப்பாயிருந்தது. தம்மிடமிருந்து வந்த அந்த ஒலி அவனின் இருவார வயிற்றுப் பசியை வெளிக்காட்டியது. பிறகென்ன தடபுடல் வியாபாரம் தான். ஊரடங்கில் தங்கள் நாக்கையும் அடக்கி வைத்திருந்த பொதுமக்கள் ஏறி விழுந்து கொண்டு வாங்கத்தொடங்கியதால் முதல் நாளே வியாபாரம் அமோகம். வெளியில் செல்ல முடியாத மக்களெல்லாம் தெருவில் கூவிக் கூவி விற்பனை செய்து வந்த மீனை வாங்கிக் கொண்டனர். எப்படியும் ஆயிரத்து ஐநூறு ரூபாய் வரை வியாபாரமானது. நேரமாக நேரமாக மீன் கெட்டுப் போய்க் கொண்டிருந்தது. எனவே எப்பாடியாவது விற்று விடவேண்டும் என்ற எண்ணத்தில் இரண்டு மணியானைதைக் கவனிக்காமல் முதன்மைச் சாலைப் பக்கமாக மீன் விற்கச் சென்றான். தூரத்தில் காவல் துறையினர் வாகனங்களை நிறுத்திச் சோதனை செய்து கொண்டிருந்தனர். பெருமாளை வழிமறித்து நிறுத்தினர். முகமூடி அணியாமல் இருந்தான் பெருமாள். வேறெந்தக் காரணமும் தேவையில்லாமல்போனது காவல்துறையினருக்கு. அபராதம் செலுத்தச் சொன்னார் உயர் அதிகாரி. எவ்வளவோ கெஞ்சிப்பார்த்த  பெருமாள் ஒரு சிறு தவறு செய்துவிட்டான். வேறு வழியில்லாமல் அபராதம் செலுத்துவதற்குத் தன் சட்டைப் பையில் கையை விட்டுப் பணத்தை எடுக்கமுயன்ற போது கத்தையாகக் கையில் வந்தது. கொத்தாகப் பணத்தைப் பாரத்ததும் உயர் அதிகாரிக்குப் பேராசை உயர் ரத்த அழுத்தம்போல தலைக் கேறியது. வாகன உரிமம் உட்பட அனைத்தையும் கேட்கத் துவங்கினார். அவர் கேட்ட எதுவும் தற்போது பெருமாளிடம் இல்லை. வண்டியைக் கழுவுவதற்காக வீட்டில் வைத்தவன் மறந்து அங்கேயே வைத்துவிட்டான். அபராதம் போட்டிருந்தாலே ஆயிரத்தைத் தாண்டியிருக்காது. தன்னிடம் ஏதும் இல்லாததாலும் எதிர்த்துப் பேசினால் என்னாகுமோ என்ற பயத்தாலும் வேறு வழியில்லாமல் அழுது கொண்டே தன் சட்டைப் பையில் இருந்து பணத்தை எடுத்துக் கொடுக்க மனமில்லாமல் கொடுத்துவிட்டு நொந்து போன மீதி மீன்களுடன் மனம் நொந்து தன் வீடு திரும்பினான். தன் மகள்,

அப்பா மாஸ்க் போடுங்க ! கொரோனா வரும்என்று கூறியபோது,

அதெல்லாம் எனக்கு வராது மாஎன்று பெருமையாகக் கூறியது இப்போது தனக்கு வெறுப்பாக இருந்தது. தன் மீது தனக்கே கோபம் வந்தது.

பின் பலர் மீன் விற்கத் தொடங்கியதால் போட்டி அதிகமானது. அதிகமாக நொந்து போனதால் யாரும் வாங்கத் தயாரில்லாத காரணத்தாலும் தனக்கு நட்டம் ஏற்படுவதை உணர்ந்ததாலும் பெருமாள் அந்த வியாபாரத்தைக் கைவிட்டான். தன்னிடம் இப்போது ஏதும் இல்லை. தன்னுடைய வாகன உரிமத்தை எடுத்துக்கொண்டு சரக்குந்து வேலைக்குச் செல்ல முயற்சி செய்தான். பலரிடம் வேலையும் கேட்டான். இறுதியில் தனக்கு முதன்முதலில் சரக்குந்து ஓட்டும் வேலை தந்த முதலாளியிடமே போய் நின்றான். காய்கறி சரக்குந்து ஓட்டும்வேலை ஒருவழியாகக் கிடைத்துவிட்டது. கொரானா தொற்று காய்கறி சந்தையிலிருந்துதான் அதிகம் பரவுகிறது என்பதை முந்தய நாள் இரவு தான் செய்தியில் பார்த்தான். இருந்தும் பரவாயில்லை. “பசியால் சாவதைவிட கொரோனா வந்து சாவது எவ்வளவோ மேல்”  என்ற எண்ணத்தால் வேறுவழியில்லாமல் அந்த வேலைக்குச் சென்றான். வண்டியில் ஏறி உட்கார்ந்து ஸ்டியரிங்கைப் பிடித்துக் கொண்டவன் தன் தாய் மடியில் படுத்தவனைப்போல பெருமகிழ்ச்சி கொண்டான். அதற்குச் சான்றாகக் கண்ணின் ஓரமாக நீர் அரும்பியது. கடவுளை வேண்டிக் கொண்டு காய்கறிச் சந்தைக்குப் புறப்பட்டான். செல்லும் வழியில் இந்த வார இறுதியில் கிடைக்கும் சம்பளப் பணத்தில் என்னவெல்லாம் வீட்டுக்கு வாங்கிச் செல்லவேண்டும் என்ற பட்டியலையும் மனதில் தயாரித்துக் கொண்டான். தன் செல்ல மகளுக்குப் பிடிக்கும் தின் பண்டங்களையும் வாங்கித் தருவதென்ற தீர்மானத்திற்கு வந்தான். காய்கறிச் சந்தையை அடைய இன்னும் ஐந்து நிமிடங்கள் தான் இருந்தன. சந்தைக்கு முன்னர் உள்ள தெருவிலேயே தடுப்பு அமைக்கப்பட்டு காவல்துறையினர் நின்று கொண்டிருந்தனர். தன்னுடைய கைப்பையில் இருந்த நூறு ரூபாயைப் பத்திரப்படுத்தும் நோக்கோடு தனது உடன் வந்த தம்பியை அனுப்பி விசாரித்து வரச் சொன்னான். இறங்கிச் சென்று விசாரித்து வந்தவன் தலையைத் தொங்கப் போட்டுக்கொண்டு வந்தான்.

என்னடா எதாவது காசு கேட்டாங்களா?”

அதெல்லாம் ஒன்னும் இல்லன்னே. அந்த மார்க்கெட்ல வியாபாரம் பண்ற இருவது பேருக்குக் கொரோனாவாம். அதனால மார்க்கெட்ட மூடிட்டாங்களாம்.”

அப்போ வேற எந்த எடத்த ஏற்பாடு பண்ணியிருக்காங்களாம்?”

எப்படியும் ரெண்டுநாள் கழிச்சிதான் முடிவெடுப்பாங்களாம்”.

தலையில் இடிவிழுந்தவனைப்போல் வண்டியைத் திருப்பிக் கொண்டு முதலாளி வீட்டுக்குச் சென்று நிறுத்திவிட்டுச் செய்தியை அவரிடம் சொன்னான் பெருமாள்.

அடப்போப்பா நீ! வேல எதுவும் இல்ல. புள்ள பொண்டாட்டி பசியில இருக்குன்னு சொன்ன. அதான் இந்த வேல கொடுத்தேன். உன் நேரம் மார்க்கெட்டே மூடிட்டாங்க. உனக்கு நேரம்  சரியில்லன்னு நெனக்கிறேன். சரி வேற வழியில்ல. நீ ஒருவாரம் கழிச்சு வா பாத்துக்குவோம். இந்தா  வெறுங்கையோட போவாத”. எனக் கூறி பெருமாளின் சட்டைப் பையில் நூறு ரூபாயைத் திணித்தார்  முதலாளி. தான் போட்ட மளிகை சாமான் பட்டியல் கிழிந்து போனது. எனினும் இதை வைத்து மூன்று நாட்கள் ஓட்டிவிடலாம் என்ற நம்பிக்கையே சற்று ஆறுதலாக இருந்தது. இந்தக் காலத்தில் பத்து ரூபாய் கூட கொடுக்க யோசிப்பவர்களின் மத்தியில் நூறு ரூபாய் கொடுத்த முதலாளிக்கு ஒரு பெரிய கும்புடு போட்டுவிட்டு வீட்டுக்குத் திரும்பினான். பெருமாள் நாலடி எடுத்து வைத்த போது அவன் முதலாளி,

பெருமாளு எல்லாருக்கும் தான் ஊரடங்கு இருக்குது. அவன் அவன் கெடச்ச வேலக்கிப்போறான். ஆனா உன் நெலம எல்லாரையும் விட மோசமா இருக்குது. எந்த வேல செஞ்சாலும் நட்டமாகுதுன்னு சொல்ற. எதுக்கும் ஒருநல்ல ஜோசியராப் பாத்துக்கோ. இனி எது செய்யிறதுனாலும் அதக் கேட்டு செய்யி. எதாவது நடக்குதா பாப்போம்.” என்றார்.

பெருமாளுக்கு முதலாளியின் சொல் என்னவோ போல் இருந்தது. ஆனாலும் ஜோசியம் பார்த்தால் மட்டும் தன் வாழ்வு மாறிவிடுமா என நினைத்துக் கொண்டு சாலையைப் பார்த்து நடந்தான்.

கொரோனாவின் பிடியில் சிக்கிக் கிடந்த நம் நாட்டில் எந்தத் தொழிலும் நடக்கவில்லை. கட்டுமானம், தொழிற்சாலை, சிறு குறு வேலைகள், எடுபிடி வேலை, மளிகைக்கடைக் கூலியாள் என எந்த வேலையும் செய்யமுடியாது.   இருந்தும் எத்தனையோ வேலைகள் செய்தாயிற்று. வேறு வழியில்லாமல் வீட்டில் படுத்துக் கிடந்தான். சந்தையில் தானே எதுவும் விற்க முடியாது. சாலையோரம் விற்கலாமே என ஒரு எண்ணம் திடீரெனத் தன் மூளையில் சுத்தியால் அடித்தது போல உதித்தது. என்ன விற்பது என்று யோசித்தவனுக்குப் பழவியாபாரமே மனதில் வந்து நின்றது. தனது மனைவியை அழைத்தான்.

மேகலா! ஒருயோசனபழவியாபாரம் பண்ணலாம்னு இருக்கேன்

தே! சும்மா கெட. ஏற்கனவே போனதெல்லாம் பத்தாதா? நமக்கு இந்த வியாபாரமெல்லாம்  சரிவராது. ஒரு வாரம் பொறுத்துக்க

ஏன் டி? யார்கிட்டயாவது வட்டிக்கி வாங்கப்போறியா”?

உக்கும்அதுதான் இப்ப கொற. நம்மள நம்பி யாரு கடன் தருவா?”

அப்றோம் என்ன பண்ணலாம்னு இருக்க?”

அடுத்த வாரம் அந்தக் கடைசி தெரு அப்பாரட்மெண்ட்ல வயசான புருசன் பொண்டாட்டி இருக்காங்களாம். மொறவாசல் செய்ய ஆள் வேணுமாம். இந்த ஊரடங்கு முடியிறவரைக்கும் அந்த வேலதான் செய்யலாம்னு இருக்கேன். சாக்கு போக்கு சொல்லாத முடிவு பண்ணிட்டேன்”.

அதுவரைக்கும் என்னடி பண்றது?”

வீட்டுவேல எல்லாத்தையும் பாரு

ஏய் ஒரு ஐந்நூறு ரூபா இருந்தா போதும்டி

என்னாது! எங்க இருக்கு ஐந்நூறு ஓவா? பாத்ரம், பண்டம், கையில மூக்குல காதுல இருந்தது எல்லாம் அடவுக்குப் போயிடுச்சி. கடேசியாக் கூட தாலிய வச்சித்தான மீன் வியாபாரம் பண்ணப் போன? இப்போ ஏதும் இல்ல. இந்த மாசம் முடியட்டும் சம்பளம் வாங்கிக் கொடுக்றேன்என்றாள் மேகலா.

ஐந்நூறு ரூபாய்க்குக் கூட தான் கையாளாகதவன் என்று தன்னைத் தானே நொந்து கொண்டான். மீண்டும் போய் கிழிந்த பாயில் படுத்துக் கொண்டு மேற்கூரையைப் பார்த்தான். தன் மகள் அருகில் வந்து,

அப்பா உனக்குக் காசு வேணுமா?”

ஏம்மா நீ தரப்போறியா?” என்று விரக்தியில் கேட்டான். ஏற்கனவே அப்பாவுக்குப் பலமுறை காசு கொடுத்திருக்கிறாள் மகள். எல்லாம் குழந்தைகள் வைத்து விளையாடும் தாள்கள். அந்த விரக்தியே இப்போது இவனிடம் வெளிப்பட்டது. தந்தையிடம் கேட்டுவிட்டு அவரது பதிலை எதிர்பாராத மகள் நேரே உள் அறைக்குள் சென்று ஒரு உண்டியலைக் கொண்டு வந்தாள். அது இரண்டு வருடத்திற்கு முன்பு தன் கிராமத்தில் நடைபெற்றத் திருவிழாவிற்குச் சென்ற போது அவள் அடம்பிடித்து வாங்கிக் கொண்டு வந்ததுஅந்த உண்டியலைத் தன் அப்பாவிடம் கொடுத்தாள். சிரித்துக்கொண்டே வாங்கினான். கணத்த உண்டியலைக் குலுக்கிப் பார்த்தான் சத்தம் ஏதும் கேட்கவில்லை. தன் மகளைப்பார்த்தான். வச்சிக்க அப்பா என்றாள் மகள். எவ்வளவு தான் இருக்கிறது என உண்டியலை உடைத்தான். பத்து, இருபது மற்றும் பல சில்லரைகள் இருந்தன.

உங்கிட்ட வாங்குனதுதான் அப்பா. சேத்து வச்சேன். இப்போ நீயே எடுத்துக்கோ”.  என்று கூறிய தன் மகளுக்கு முத்தம் கொடுத்தான். தன் வளர்ப்பை எண்ணி பிரம்மித்துக் கொண்டான். அப்படி ஐந்நூறு ரூபாயில் பழக்கடையெல்லாம் போட முடியாது. எனவே வாழைப்பழ வியாபாரம் செய்யலாம் என்ற தன் முதலாளியின் திட்டத்தை ஏற்றுக் கொண்டான். தள்ளுவண்டியை குறைந்த வாடகைக்கு வாங்கிக் கொடுத்தார். செவ்வாழை, பச்சை வாழை, பூவன் பழம், பேயம் பழம், ஏலக்கி, கற்பூர வள்ளி, ரஸ்தாளி போன்ற பழங்களை வாங்கி வந்து முந்திய நாளே வைத்துக் கொண்டான்முதலாளி சொன்னபடி ஒரு நல்ல ஜோசியரைப் பார்த்தபோது அவர் தான் சொன்னார்நடுத்தெரு பிள்ளையாரை வணங்கிடுவிட்டு வியாபாரத்தைத் தொடங்கு அமோகமா போகும்என்ற அவர் சொன்னது போலச் செய்தாயிற்று.

இப்போது நல்ல இடமாகப் பார்த்து வண்டியை நிறுத்திவிட்டு வாழைப்பழத்தின் பெயர்களைக் கூறி விற்கலானான். அவன் நின்றிருந்த தெரு கொரோனாவிற்கு முன் கடைத்தெருவாக இருந்தது. துணிக்கடைகள், வீட்டு உபயோகப் பொருட்கள் விற்கும் கடைகள், மின் சாதனப் பொருட்கள், வண்ணக் கலவை கடைகள் எல்லாம் அமைக்கப்பட்டிருந்தன. அதன் வாசற்படியில் சிறு குறு வியாபாரிகள் தங்களின் முதலுக்குத் தகுந்தவாறு பழங்கள், காய்கறிகள், கீரைவகைகள் போன்றவற்றை வியாபாரம் செய்து கொண்டிருந்தனர். துணியால் தைக்கப்பட்ட முகக் கவசம் விற்பவரிடமிருந்து கொஞ்சதூரம் தள்ளியே அவன் கடை வைத்திருந்தான்.

மளிகைக் கடைகள் இரண்டு இருந்தன. தெரு முனையில் பழமுதிர்ச்சோலை இருந்தது. அதில் மக்கள் பெருமளவு இல்லையென்றாலும் சிலரே இருந்தனர். சமூக விலகலைப் பின்பற்ற வேண்டிக் கட்டாயப்படுத்தப்பட்டிருந்தனர் அவர்கள். தெருமுனையில் இருந்து கொரோனா விழிப்புணர்வு வாகனம் வந்து கொண்டிருந்தது. அதில் குரல் பதிவு செய்யப்பட்ட வாசகம்நாம் போராட வேண்டியது கொரோனாவுடன் தானே தவிர, கொரோனா நோயாளிகளுடன் அல்ல…” என்று ஒலிபரப்பிக் கொண்டிருந்தது. முகக்கவசம் விற்றுக் கொண்டிருந்தவர்ஏது நமக்குப் பசி கூடப் போராடவே நேரம் சரியா இருக்குதுஎன நக்கலடித்துச் சிரித்தார். பெருமாளுக்குச் சிரிப்பு வரவில்லை. மாறாக வயிறு பசித்தது. எனினும் ஒரு நூறு ரூபாய்க்காவது வியாபாரம் ஆனால்தான் சாப்பிடுவது என்ற முடிவுக்கு வந்தான். பதினொரு மணிக்கெல்லாம் அவன் நினைத்த பணம் வியாபாரம் ஆனது. எனவே பக்கத்துக் கடையில் டீயும் பண்ணும் வாங்கித் தின்றான். மயக்கம் தெளிவதற்குள் நான்கைந்து காவல்துறையினர் தெருமுனையில் வந்து கொண்டிருந்தனர். டீக் கடைக்காரர்,

என்ன தம்பி! இதுக்கு முன்னாடி இங்க உன்ன நான் பாத்தது இல்லயே! எந்த ஊரு?” என்றார். தன் ஊரின் பெயரைக் கூறித் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டான்.

நல்லது! ஊருக்குள்ளேயே வித்தா எல்லாம் நாளைக்குத் தரேன்னு சொல்லிடுவான்னு வெளியூருக்கு வந்து வியாபாரம் பண்றியா? அப்படி தான் நாங்க எல்லோரும் இங்க வந்து வியாபாரம் பண்றோம். இருந்தாலும் சனி புடிக்கணும்னு நெனச்சா புடிக்காம விடாது. அதோ பார் வரானுங்க. எங்க எவன்கிட்டக் காசு பாக்லாம்னு. இங்க ரவுடிங்க அடாவடியெல்லாம் இல்ல. ஆனா இவனுங்க தான் தொல்லையே. நீ வேற புதுசா வந்திருக்க. ஒரு நூறு ரூபாய எடுத்து வையி!”

ஐய்யய்யோ! இப்பதானுங்களே டீ பண்ணு சாப்டேன்”.

அப்படியா! சரி போ உன் விதிய யாரால மாத்த முடியும். கடவுள் தான் உன்னக் காப்பாத்தணும்என்று சலித்துக் கொண்டார் டீக் கடைக்காரர். காவலர்கள் பெருமாளிடம் வந்தனர்.

என்னடா ஏரியாவுக்குப் பதுசா? சரி இருந்துட்டுப்போ. இருநூறு ரூபா எடுத்து வையி

கேட்டவரின் தோரனையையும் உடுப்பையும் பார்க்கும் போது அந்தக் குழுவிற்குத் தலைவராகத் தான் இருக்கவேண்டும் என்று தோன்றியது பெருமாளுக்கு.

ஐயா! உங்க கிட்ட பொய் சொல்லக் கூடாது. எண்பது ரூபா தன் போணியாச்சிங்க. இத வச்சிக்கங்க

ஏன் டா நங்க என்ன உன்னாண்ட பிச்ச எடுக்கவா வந்தோம். ஒருங்கா மரியாதயா எடுத்து வையிஎனக் கடுங்கோபத்தோடு மிரட்டினான் மற்றொருவன்.

 “சூ! இந்த செவ்வாழ ரெண்டு சீப்பக் கொடு!” என்று வாழைப்பழம் கேட்டார் தலைமைக் காவலர். பெருமாள் நன்கு பழுத்த பழத்தை எடுத்துக் கொடுத்தான். வாங்கி அனைவருக்கும் கொடுத்தார். அனைவரும் வாங்கி உண்டனர்.

சித்திர மாச வெயிலு கொளுத்துதல? ஸ்டேசன்லயே நிம்மதியா இருந்தோம். இந்தக் கொரானா வந்து நம்ம தாலிய அருக்குது. டேய்! நீ இன்னக்கி தான் வந்தன்னு வாழப்பழத்தோட விடுறேன். தெனமும் எனக்கு எரநூறு ரூபா வரணும் தெரியிதா? நாளைக்கும் இதயே சொல்லாத”. எனக் கூறிவிட்டு அடுத்தக் கடைக்குச் சென்றார்கள். அனைத்துக் கடைக்காரர்களும் கொடுத்தாயிற்று. டீக் கடைக்காரர்தம்பி உனக்கு இன்னைக்கி நல்ல நேரம் தான். கடவுள் புண்ணியத்துல தப்பிச்சிட்ட. நாளைக்கி கடன் வாங்கியாவது வந்து கொடுத்துடு இல்ல. வண்டிய சீஸ் பண்ணிட்டுப் போயிடுவானுங்கஎன்றார். கடவுள் என்றவுடன் நடுத்தெரு பிள்ளையாரைக் கை கூப்பி வேண்டிக் கொண்டான். இன்றைக்கு வரும் இலாபத்தை வைத்து நாளைய வியாபாரத்திற்குப் பழங்களை வாங்கிக் கொண்டு தன் மகளிடம் வாங்கிய கடனை அடைத்து விட வேண்டும் என எண்ணினான். அது தானே முதற் கடன். தன் வாழ்வில் கடன் கேட்காமலே கொடுத்த ஒரே ஜீவன் தன் மகள் தான். நேரம் உச்சியைத்  தொட்டது. சூரியன் சுள்ளென சுட்டுக் கொண்டிருந்தான். கானல் நீர் தென்பட்டது. மீண்டும் தெருமுனையில் பலர் கும்பலாக வந்து கொண்டிருந்தனர். இம்முறை டீக் கடைக்காரரைப் பார்த்தான் பெருமாள். தன்னைப் பொருமாள் பார்ப்பதைப் பார்த்த டீக் கடைக்காரர்,

பயப்படாத! சும்மா ரெய்டு தான். மாஸ்க் போடணும், சானிடைசர் வச்சிருக்கணும்னு சொல்லுவாங்க. வர்ரவரு கமிசனரு தான் நேர்மையானவரு. எல்லாம் சரியா இருந்தா விட்ருவாரு. நீ எல்லாம் வச்சி இருக்கியா?” என்று கேட்டார். “வச்சியில்லனா மொத்தமாப் புடுங்கிட்டுப்போயிடுவானுவலேஎன நினைத்துக் கொண்டு தலையாட்டினான் பெருமாள். தெருமுனையில் உள்ள பழமுதிர்ச்சோலை தொடங்கி ஒவ்வொரு கடையாக உள்ளே சென்று வந்தார் நகராட்சி ஆணையர். சில கடைகளில் எந்த ஆர்ப்பாட்டமும் இல்லை. சில கடைகளை இழுத்துப் பூட்டிக் கொண்டிருந்தார். சமூக இடைவெளி பின்பற்றாதவர்கள், கிருமி நாசினி வைத்திருக்காதவர்கள், முகக் கவசம் இல்லாதவர்கள் போன்றவர்களின் கடைகள் அவரது நேர்மைக்குத் தலைவணங்கின. தான் எல்லாம் சரியாக வைத்திருந்ததை உறுதிப்படுத்திக் கொண்டான் பெருமாள்.

பெருமாளிடம் வந்தவர் பெருமாளை மேலும் கீழும் பார்த்தார். ”என்ன இது பழத்துல ஈ முய்க்குது? இதனாலேயே கொரோனா பரவும்எனக் கூறியவர் திடீரென வண்டியைக் கவிழ்த்துவிட்டார். அவ்வளவு தான் எல்லாம் முடிந்தது. பழத்தை பொறுக்குவதற்குள் நகராட்சி ஊழியர்கள் அதன் மீது நடந்து பழத்தைப் பஞ்சாமிருதம் ஆக்கிவிட்டனர். ஏமாற்றத்தோடு நின்ற பெருமாள் எவ்வளவோ இழப்பைச் சந்தித்தவனவன் எனவே அழவில்லை. டீக் கடைக்கார்ரைப் பார்த்தான். அவர் தன்னைப் பரிதாபமாகப் பார்ப்பது அவனுக்குப் பிடிக்கவில்லை. எனவே அங்கிருந்த ஒன்றிரண்டு பழங்களை எடுத்துக் கொண்டான். இந்தப் பழம் பசியாற்றவில்லையென்றாலும் தன் மகளுக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கும் என நினைத்துக் கொண்டான். தெருமுனையை அடைந்தான். அங்கே பெரிய பழக்கடையான பழமுதிர்ச்சோலைக்குள்ளிருந்து ஒரு பொட்டலத்தை எடுத்துக் கொண்டு வெளியே வந்தார் ஒருவர். வாங்கி வந்தவர் ஒரு மகிழுந்தில் ஏறினார். அவருடன் நகராட்சி ஆணையரும் இருந்தார். அவரும் அவரது குழுவும் மகிழுந்தில் அமர்ந்து கொண்டு பொட்டலத்தைப் பிரித்து பணத்தை எண்ணினார்கள். “சேட்டு வேலய முடிச்சிக் கொடுத்ததும் கையில பணத்த திணிச்சிட்டான்யா! நேர்மையக் காப்பாத்திட்டான்.” என்றார் ஆணையர். அதற்கு மற்றொருவர்,

நம்ம நேர்மய நாம காட்னோம். அவன் நேர்மய அவன் காட்னான்”. எனக் கூறினான். அனைத்தையும் கேட்டுக் கொண்டிருந்த பெருமாள், “டீக் கடைக்காரன் சொன்ன நேர்ம இதுதானா?” எனத் தனக்குள் நினைத்துக் கொண்டான். என்ன செய்வது ஏழைகள் என்றாலே கையாள் ஆகாதவர்கள் தானே என எண்ணியபடி வீட்டுக்கு நடந்து சென்றாள். சூரியன் மேற்கு நோக்கி நகர்ந்து கொண்டிருந்தான். “குழந்தை கேட்டால் என்ன சொல்வது? படித்த ஆபிசரின் நேர்மைக்கு அப்பா கொடுத்த பரிசு எனச் சொல்வதாஎன நினைத்துக் கொண்டான். உண்டியலை உடைத்துக் கொடுத்த மகளின் சேமிப்பு மண்ணாகிப் போனதை நினைத்து வருந்தினான். அந்த வருத்தம் வியர்வையாய் வழிந்து கொண்டிருந்தது.