4ஆம் ஆண்டில் நமது இலக்கியச்சுடர்
படைப்புகளை periyaswamydeva@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி இதழின் வளர்ச்சிக்கு உதவுங்கள்

செவ்வாய், 1 செப்டம்பர், 2020

உணர்வால் கலந்த உறவு

 

முனைவர் கிட்டு முருகேசன்

உதவிப்பேராசிரியர்

டாக்டர் என்.ஜி.பி. கலை மற்றும் அறிவியல் கல்லூரி (தன்னாட்சி)

காளப்பட்டி சாலை, கோயம்புத்தூர் – 641 048

அலைபேசி : 9751809470, 8072794623

மின்னஞ்சல் : muruganthirukkural@gmail.com

 

ஏனோ! தெரியவில்லை. அன்று காலை கதிரவன் வெகு சீக்கிரம் வந்துவிட்டான். பூமியைக் காணவேண்டும் என்ற எண்ணம் அவனுக்கு வந்ததோ என்னவோ! யாழ் கொண்டு இசைபாடும் கானக் கருங்குயில், இளம் பரிதியை தன்வயப்படுத்தி எழ வைத்தானோ!.

வெளிச்சத்தைக் கண்டதும் துள்ளிக்குதித்தான்  பாணன். இயற்கை எழில்மிகு தோற்றத்தை நரம்பின் வழியே உட்புகுத்தி விரல்களின் மூலம் அவன் செய்யும் அற்புதம் பார்ப்பவரை மெய்ம்மயக்கம் அடையச்செய்தது.

பாணனின் இசை அருவியில் விழுந்து திளைத்தவர் பலர். அவனது இசையறிவைப் புகழ்ந்தும் உடன் இருந்து கற்கவும் செய்தவன் இளந்திரையன். பன்னிரெண்டு வயது முதலே இருவரும் தோழமை உணர்வு கொண்டனர். அன்று முதல் இருவரின் இன்ப துன்பங்களில் ஒருவரையொருவர் பங்கெடுத்து காலம் கழித்தனர்.

இளந்திரையன், தான் ஒரு அரசகுமாரன் என்பதை மறந்து பாணனுக்கு வேண்டிய உதவிகளை இடைவிடாது செய்து கொடுப்பான். நட்புச் செய்வதற்குத் தொடர்பும் பழக்கமும் தேவையில்லை. ஒத்த உணர்ச்சியே நட்பு ஏற்படுவதற்கு வேண்டிய உரிமையைக் கொடுத்துவிடும்.

ஒத்த பண்புடைய இருவரும் அவரவருக்குரிய செயல்களான இசைபாடுவதைப் பாணனும் அரசுரிமைக்கேற்ற பணிகளை இளந்திரையனும் செய்து வந்தனர்.

ஒருநாள் பாணன் இளந்திரையனைச் சந்திக்க வந்தான்.

இளந்திரையா! எனக்கும் குடும்பத்தார்க்கும் வேண்டிய அத்துனை வசதிகளையும் செய்து தருகின்றாயே! இன்று நாங்கள் வளமுடன் வாழ நீர் எனக்குச் செய்யும் பேருதவி எக்காலத்தும் தங்களுக்கு நன்றியுடையவர்களாக இருக்கக் கடன்பட்டுள்ளோம் என்பதோடு,  ஒன்றை மட்டும் சொல்லிக்கொள்ள ஆசைப்படுகிறேன். நண்பா! நீயும் தங்கள் துணைவியாரும் ஏழேழு பிறவியிலும் இப்பிறவிபோல் இணைந்தே இருக்க எம் குலதெய்வத்தை வணங்குவேன் என்று கூறி வாழ்த்தி  விடைபெற்றான்.

ஒருநாள் இளந்திரையன் தொழில் காரணமாக வெளிநாடு செல்லவேண்டி இருந்தது. இருப்பினும் இளமதியின் மேல் இருக்கும் அன்பு அவனைத் தடுக்கிறது. ஆனால் தன்னையே நம்பியிருக்கும் குடி மக்களின் வாழ்வியல் நிலையினைக் கருத்திற் கொண்டு போகவேண்டும் என்ற எண்ணம் தோன்றுகிறது. மனத்தின் வழி நடத்தல் மாண்பைத் தருமென்றெண்ணி குறித்த காலத்தில் வருகிறேன் என வாய்மொழி கூறிப் புறப்படத் தயாரானான்.

மையெழில் கொண்ட கண்கள் குளமாயின; இருப்பினும் பிரியா விடை பெற்று, நீவிர்! சென்ற செயலகள் அனைத்தும் வெற்றியடைய வேண்டுமென வாழ்த்தி அனுப்பினாள். அன்று முதல் இளமதியின் மனநிலையும் சற்றே வாடித்தான் போயிற்று.

நாட்கள் பல கடந்தன; நண்பனைக் காணாது, கண்கள் மருண்ட பாணன். இத்துனை நாளாகியும் வரவில்லையே என்ற வேட்கையில் தலைவியின் நிலையறிய ஆவல் கொண்டான். உடனே அரண்மனை நோக்கி நடந்தான். அங்கிருந்த இளமதியின் தோழி! சற்றே நில்! என்று வாய்மொழிந்து நிறுத்தினாள்.

தாயே! வணக்கம். யான் இளந்திரையனின் தோழன் பாணன். அவனது செலவு எனக்குத் தெரியும். இளமதியின் நிலை என்னவென்று தெரிந்து கொள்ளவே வந்திருக்கிறேன். நீங்கள் சென்று சொன்னால் புரியும் என்றுரைத்து வாயிலில் நின்றான்.

சரி! தோழரே! இங்கேயே இருங்கள் தலைவியைக் கேட்டறிந்து வருகிறேன் என்று இளமதியின் அறைக்குள் சென்றாள் தோழி!.

அதுகேட்ட இளமதி, அப்படியா உடனே வரச்சொல் என்று ஆவல் கொண்டாவளாக இருந்தாள்.

உள்ளே வந்த பாணன். அங்கு பொலிவிழந்து நின்ற இளமதியைப் பார்த்தான். ஆவனால் தாங்கிக்கொள்ளமுடியாத வேதனையாக இருந்தது. இளந்திரையனும் இளமதியும் மகிழ்ந்திருந்த நாட்கள் அவன் மனக் கண்ணெதிரே வந்துபோனது. யாதும் கூறாதவனாய் அப்படியே நின்றான்.

பாணனே! இங்கு வா! என அழைத்தாள் இளமதி.

சொல்லுங்கள் தலைவியே! என்றபடி அருகே சென்றான் பாணன்.

அதோ! பார்த்தாயா; கார்காலத்தின் தோற்றப் பொலிவை. நல்ல வளத்தினைத் தரக்கூடிய சீர்படுத்தப்பட்ட செம்மண் நிலத்தில் காயா மரத்தின் பூக்கள் பரவிக்கிடக்கின்றன. இந்தக் கார்காலத்தின் வரவை தெரிந்து கொண்ட தம்பலப் பூச்சிகள் தன் குடும்பத்தோடு வரிசையாக ஊர்ந்து செல்கின்றன. இந்தக் காட்சியானாது, பவளத்தோடு நீல மணி நெருங்கி இருப்பதைப் போன்றுள்ளது.

சற்றே தள்ளிப் பார்! குன்றுகள் நிறைந்துள்ள மலையடிவாராம் தெரிகிறது. அந்தக் காட்டினுள் மடமையுடைய பெண்மானைத் திரித்துவிட்டது போன்ற கொம்புகளையுடைய ஆண்மானானது, தழுவுதலைச் செய்கின்றன. அது மட்டுமா! ஆயர் இனத்தைச் சார்ந்த மக்கள் தங்களுடைய ஆடு, மாடுகளை மேயவிட்டுவிட்டு குன்றுகளுக்கிடையே மலர்ந்துள்ள, பூக்களை மாலையாகக் கட்டி மகிழ்ந்திருக்கின்றனர்.

அவங்களோட பசுக் கூட்டங்கள் அருகம் புற்களை மட்டுமே மேய்ந்ததனால் பருத்த மடியில் இருந்து சுவையான பாலானது சுரந்து கொண்டிருக்க, இந்த மாலை நேரத்தில் தன் கன்றுக்குட்டிகளை அழைக்கும் ஓசையானது குன்றுகள்தோறும் எதிரொலிக்கின்றது.

பாணனே! இந்தச் சூழல்களைக் கண்கொண்டு பார்க்கும்  நான், எந்த நிலையை அடைவேன் என்றவாறு கண்ணீர் சிந்தினாள். இளமதி கூறிய ஒவ்வொரு வார்த்தைகளும் பாணனின் மனதை நிலைகுலையச் செய்தது.

ஒன்றும் பேசாதவனாக அப்படியே நின்றுவிட்டு, தன் இடுப்பில் சுற்றி இருந்த துண்டை அவிழ்த்து முகத்தைத் துடைத்துக் கொண்டவாறே தன் இல்லம் நோக்கிப் புறப்பட்டான்.

இளமதியைச் சந்தித்த செய்தியையும் அவளது வருத்தத்தைப் போக்கவேண்டும் என்ற தன் ஆசையையும் குடும்பத்தாரிடம் சொன்னான். இறைவனை வாழ்த்தித் தன் கையில் இருந்த யாழில் ஒரு செவ்வழிப் பாடலை மென்மையாக இசைத்தான். இளமதியின் துயரத்தைத் தன் துயராகக் கொண்டான்.

இளந்திரையனைச் சந்திக்க எனக்கு நேரம் கிடைக்குமானால், தூண்டிவிட்டால் எவ்வளவு வேகமாகக் குதிரையானது செல்லுமோ, அந்த வேகத்திற்கு இணையாகவும் கற்களில் ஆரங்கற்களையுடைய உருளை மோதினால் ஏற்படும் ஒலியினைப் போலவும், கார்காலத்தில் மழை பொழியும் போது எழுகின்ற இடி முழக்கத்தைப் போலவும், பகைவர்களை வென்று முடிசூடும் ஆற்றல் படைத்த நம் இளந்திரையன் தனது நீண்ட தேரினைச் செலுத்தி வரவேண்டும். அப்படிச் செய்தால்தான் நம் இளமதியின் உயிரைக் காக்க  முடியும் என்று சொல்லுவிடுவேன் எனக் குடும்பத்தாரிடம் பாணன் சூழுரைத்தான்.

அவனது எண்ணங்களுக்குக் குடும்பத்தாரும் ஒத்துழைப்புத் தந்தனர்.

கணவனின் வரவை எதிர்பார்த்த இளமதிக்கு பாணனின் குடும்பத்தாரிடம் இருந்து ஆறுதல் சொல்லப்பட்டதோடு, திரையனின் வருகையும் கூறப்பட்டது. அதற்கு நாங்கள் எடுக்கும் முயற்சி முதன்மையானது என்று சொல்லித் தலைவனை வரவேற்க ஆயத்தமாக இருங்கள் என்று குறிப்பிட்டனர்.

கார்காலப் பனிமூட்டத்தின் நடுவே வெண்ணிறக் குதிரை சற்றென வந்தது. தேர்ச்சக்கரம் மண் மீது தடம் பதிய மலை போன்ற தோள்களை உடைய இளந்திரையனும் வந்தான். இளமதியைப் பார்த்ததும் மறுபிறவி பெற்றவன் போலப் பெருமூச்சுவிட்டான். பாணருக்கும் பாணர் குடும்பத்திற்கும் இன்னும் எவ்வளவு வளம் வேண்டுமோ எடுத்துக் கொள்ளுங்கள் என்றான்.

திரையா! நான் சொல்வதைச் சற்றேனும் யூகித்துப்பார்; எனக்கு இளவல் இல்லையென்ற கவலை இருந்ததில்லை. அதற்கு நீ என்னுடன் இருக்கும் நினைப்பு தான் காரணம். அது போல் நீ கொடுத்த பொருள்கள் இன்னும் இருக்க மேலும் பொருள் கொடுக்கச் சொல்லும் உன் வளமை என்றும் நிலைக்கட்டும். அதுமட்டுமில்லை நீர் செய்கின்ற அறம் உன்னை எனக்கு உறவாய்த் தந்தது. ஆகவே, அந்த உறவே பெரிய பொருள். வேறொன்றும்  தேவையில்லை எனக்கு என்று பாணன் குறிப்பிட்டான்.

பாணா சற்று நில்!

எழுமை எழுபிறப்பும் உள்ளுவர் தங்கன், விழுமம் துடைத்தவர் நட்புஎன்ற வான்புகழ் கொண்டவனின் வாக்கிற்குப் பாத்திரமானாய் வாழ்க பல்லாண்டு என விடை கொடுத்தான்.