4ஆம் ஆண்டில் நமது இலக்கியச்சுடர்
படைப்புகளை periyaswamydeva@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி இதழின் வளர்ச்சிக்கு உதவுங்கள்

செவ்வாய், 1 செப்டம்பர், 2020

கிட்டிக்கோல்

 

.சின்னச்சாமி

 

ஊரின் ஒரு பகுதியிலிருந்து மட்டும் கரும்புகை விண்ணை நோக்கி சலனமின்றி பயணித்துக் கொண்டிருந்தது.  காற்று  அதற்குள் இடையூறு செய்து சிதறடித்துக் கொண்டிருந்தது. பசுவின் வயிற்றுக்குள் இருந்த கன்று ஸ்கேன் எடுத்தாற்போல் கிடந்தது. தார்ச் வீடுகளிலிருந்தபொருட்கள் வெளிக்கொணரப்பட்டு சிதைவுக்குள்ளாக்கப்பட்டிருந்தன. சிதறிக் கிடந்த சக்கரையின் மீது எறும்புகள் மொய்த்துக் கொண்டிருந்தன. தீயணைத்த நீர்கள்கரும்புலமாகச் சாலையில் தேங்கிக் கிடந்தன.

ஊரே பள்ளிக்கூடத்திற்கு அருகிலிருந்த அரசமரத்திற்கடியில் கூடியிருந்தது.இரத்தக் காயங்களுடன் நின்றிருந்த மக்களின் முகத்தில் பீதி தலைக்கேறியிருந்தது. திடீரென்று நடத்தப்பட்ட தாக்குதல் என்பதால் ஏதொன்றும் அறியாமல் குழம்பி நின்றிருந்தனர். சிலரின் உடலின் காயங்களிலிருந்து இரத்தம் வடிந்து கொண்டிருந்ததில் அங்கு இரத்த வாடை வீசியது. இதில் மனோகரனின் தலை, கையிலிருந்தும் கண்ணத்தின் பக்கவாட்டிலும் வலது காலின் முட்டியிலிருந்தும் இரத்தம் வெளியேறி உறையும் தருவாயை அடைந்திருந்தது. பயத்திற்கு கண் காது மூக்கு வைக்கப்பட்டது போல் அவனின் உடல் காட்சியளித்தது. இரண்டு கைகளையும் கட்டிக்கொண்டு நடுக்கத்தின் அசைவின்றி கண்களில் வழியும் கண்ணீரை நிறுத்தத் திராணியற்றவனாய் வாழைத்தாரின் பளு தாங்க முடியாமல் வளைந்து நிற்கும் வாழைமரம் போலநின்றுகொண்டிருந்தான்.

எம்படவூட்டுப் பொண்ண கூட்டிட்டுப் போறளவுக்கு உங்களுக்கு அவ்வளவு தைரியம் வந்துருச்சாஎன்று மலையன் உரத்த குரலில் கத்தினான்.

அப்படியெல்லா இல்லீங்க சாமிஎன்று மிகவும் தாழ்ந்த குரலில் மனோகரன் பேசியது கூட்டத்தில் பின்னாளிருந்தவர்களின் காதை எட்டியிருக்க வாய்ப்பில்லை.

இத பாருடா உம்புள்ளையு எம்புள்ளையு ஒன்னா படிச்சவங்கதா, அதுக்காகத் தராதரம் தெரிய வேணாம்

சாமி  ......................”

உம்பைய விடியக்காலைல எம்புள்ளைய வண்டில கூட்டிட்டு போறத ராமலிங்கம் பாத்துருக்காருடா, இப்போ 9 மணிக்கு ஃப்ரூக்பீல்ட ரெண்டு பேரயு பாத்ததா சொந்தக்கார பய போன்ல சொன்னாஎன்று வாயிலிருந்து எச்சில் தெறிக்க மலையன் ஆவேசமாகபேசினான்.

வேலை விஷயமாக கோயம்புத்தூர் செல்வதாகத்தான் அம்பேத்குரு அப்பா மனோகரனிடம் சொல்லிச் சென்றான். வெண்ணிலாவும் அதே வேலைக்கு வருதாகச் சொல்லியிருந்தாலும் ஒன்றாகப்போவார்கள் என்று இவனுக்குத் தெரியாது.

அம்பேத்குருவும், வெண்ணிலாவும் பள்ளி படிப்பு தொடங்கி, ஒரே கல்லூரியில் படித்தவர்கள். பள்ளிப் பருவத்தில் சக மாணவியாக இருந்த வெண்ணிலா, கல்லூரியில்தான் சகத் தோழியாக அம்பேத்குருவுடன் பழகினாள். இருவரும் வேறு வேறு சாதியினர் என்பதை அறிந்தே வைத்திருந்தனர். அம்பேத்குருவின் அறிவுக்கு முன்னால் தலை வணங்கி நிற்பதில் வெண்ணிலா எப்பொழுதும் தயங்கியதில்லை. 'வருத்தப்படுரவனுக்குதான் வலி தெரியும், சும்மா அவனுக நமக்கு கீழானுவக என்று சொல்லிக் கொண்டே எத்தன காலத்த ஓட்டுவானுகன்னு தெரியல, கேட்டா மரபு, மயிறுனுவானுக நம்மாளுக' என்று பலமுறை தன்சாதிக்காரர்களைத் திட்டிக்கொண்டு தன்னுள்ளேயே குமுறியிறுக்கிறாள்.

அம்பேத்குரு போட்டித்தேர்வு எழுதி அரசு வேலைக்குப்  போய்விடவேண்டும் என்பதில் தீவிரமாகக்கல்லூரி காலம் தொட்டே படித்துக்கொண்டிருப்பவன்.வெண்ணிலாவுக்குப் படிப்பு முடிந்ததும் அரசு வேலைக்கு சித்தப்பா மலையன் மூலம் ஏற்பாடுகளாகியிருந்தன.கல்லூரி படிப்பை முடித்து ஆறுமாதம் கழிந்திருந்த நிலையில் இருவரும் எதேச்சையாக பேருந்து பயணத்தில் சந்திக்க நேரிட்டது.

                ஹாய் அம்பேத்

                ஹாய் வெண்ணிலாஎன்று இருவரும் சிறு புன்முறுவலைப் பரிமாறிக் கொண்டனர்.

                என்ன கௌர்மெண்ட் வேல வாங்கியாச்சா

                இல்ல, எனக்கு கெடச்சிருந்தா இன்னாரம் மனோகர பய அரசு உத்தியோகம்  வாங்கிட்டானு உங்க வளவுக்குத் தெரியாம போயிருக்குமா? ஆமா, உனக்குதா படிக்கும்போதே வேல தயாரா இருந்துச்சே, போயாச்சா

                இல்ல அம்பேத், SC கோட்டாவதா எனக்கு ஏற்பாடு பண்ணியிருந்தாங்க. எங்க கோட்டா வந்தா வந்து சேந்துக்கரேனு வேண்டானு சொல்லிட்ட, நீ இப்ப என்ன பண்ணீட்டிருக்க அம்பேத்

                வேலைக்கு டிரை பண்ணிட்டிருக்க

                அப்படியா, நானும் சும்மதா இருக்க, எதாவது வேல இருந்தா எனக்கும் சேத்து பாரு

                என்னது உனக்கு வேலயா, உனக்குக் கீழ வேல செய்ய ஆளுக கெடக்கு, விளயாடாத வெண்ணிலாஎன்று நக்கலடித்தான்.

                சொந்தமா காசு சம்பாதிக்கனுனு எனக்கு மட்டும் ஆசையிருக்காதாஎன்று பதிலளித்தாள் வெண்ணிலா.

சரி, இன்னத்து பேப்பர்ல ஃப்ரூக்பீல்டுல சூப்பர்வைசர் வேலைக்கு ஆட்கள் தேவைனு போட்டுருக்கா,ஆண்/பெண் இருபாலரும் விண்ணப்பிக்கலானு சொல்லிருக்கா. அதுக்குடிரை பண்ணலானு இருக்க, நீயு டிரை பண்ணு

ஓகே......” சட்டென முடித்தாள்.

 சரி வெண்ணிலா

                ம்.. எப்ப இன்டர்வியு

                வர வெள்ளிக்கிழமஎன்றவன்,

                ஆமா, வெண்ணிலா, காலைல ஒன்பது மணிக்கு அங்கிருக்கணும், நம்ம ஊருக்கு பஸ்ஸே எட்டு மணிக்குதா, அது வந்து சேரதுக்குள்ள இன்டர்வியுவே முடிஞ்சுடும். நேரத்துல அஞ்சு மணிக்கு கிளம்புனாதா கரெக்டா இருக்கும்என்றான்.

                நீ எப்படி போவ அம்பேத்என்று சிறுயோசனைக்குப் பிறகு கேட்டாள்.

                நா, காலைல  பைக்ல கிளம்பிருவ

                அப்படியா நானு உங்கூடயே வந்துடுறஎன்று வெண்ணிலா சொன்னதும், அம்பேத்துக்கு பகீரென்றானது.

                நீயா, எங்கூடவா, தெரிஞ்சுதா பேசுறியா

                ...”

                உங்க சித்தப்ப மலையனுக்கு தெரிஞ்சுது அவ்வளவுதா, இதா சாக்குனு எங்கள  உண்டு இல்லைன்னு பண்ணிருவாருஎன்று அம்பேத்குரு சொன்னதும் வெண்ணிலா கோபப்பட்டவளாய்,

                ஓவரா பயப்படாத,நா எங்க அப்பா அம்மாகிட்ட சொல்லிக்கிற, அவங்க மாநாடு விசயமா வெளியூரு போயி ரெண்டு நாளாச்சு, அவரு இந்த சாதி கருமாந்தரத்தையெல்லா பாக்கமாட்டாங்கனு உனக்குத் தெரியுமல்ல, எங்க மலையன் சித்தப்பா ஏற்பாடு பண்ணியிருக்குற வேலையில கோட்டா வரட்டுணு சொன்னவரு அவருதாஎன்றாள்.

                வெண்ணிலாவின் அப்பா, அம்மா சாதிமறுப்புத் திருமணம் செய்துகொண்ட  இணையர்கள். தனது மகளைமுற்போக்குச் சிந்தனைகளோடு வளர்க்க வேண்டும் என்பதில் அக்கறையுடன் பார்த்துக்கொண்டிருப்பவர்கள். வெண்ணிலாவின் அப்பாவுடன் பிறந்த மலையன் சாதி சங்கத்தில் முக்கியப் பொருப்பில் இருப்பவன். இந்த ஊரில் தனது பலத்தை வெளிக்காட்டஏதேனும் வாய்ப்பு கிடைக்காத எனக் காத்துக் கிடப்பவன். அது வெண்ணிலாவின் அப்பா மூலம் தடைபட்டுக் கொண்டே வருவதால்அவனுக்குஅவர்கள் மீது பெரும்கோபம் தீயாக எரிந்து கொண்டேயிருந்தது. வெண்ணிலாவுக்கும் மலையனுக்கும் எப்போதும் வாக்குவாதம் நடந்து கொண்டே இருக்கும். இக்குடும்பத்தின் மானத்தை சந்தி சிரிக்க வைக்க ஏதேனும் வாய்ப்பு கிடைக்காதா என்று எதிர்பார்த்துக் கொண்டே இருப்பவன்.

                இருவரின் சிறு மௌனத்திற்குப் பிறகு, “நீ தயாங்காத, நா ஊரவுட்டுகொஞ்சம் தூரம் தள்ளி வந்து ஏறிக்கிற சரியாஎன்று வெண்ணிலா சொன்ன யோசனையை மறுக்க முடியாமல் அவளின் நட்புக்காக சிறு தயக்கத்துடன் ஒப்புக்கொண்டான்.

                சரி விடியக்காலை நேரத்துல அஞ்சர வாக்குல வந்துரு. சட்டிபிகேட் எல்லாத்தையும் எடுத்துட்டு வந்துருஎன்றவன் தான் இறங்கும் பஸ்டாப் வந்ததும்போட்டோ ரெண்டுஎன்று கூறிவிட்டு இறங்கிச் சென்றான்.

                வெள்ளிக்கிழமை விடியற்காலை 5 மணிக்கு வெண்ணிலா ஊரைவிட்டு கொஞ்ச தூரம் தள்ளி அம்பேத்தின் வருகைக்காகக் காத்திருந்தாள். அவனும் 5.30 மணிவாக்கில் வந்து சேர்ந்து அவளை அழைத்துச் சென்றான். இதை நடைபயிற்சிக்கு அந்த வழியாக வந்த ராமலிங்கம் எதேச்சையாகப்பார்த்துவிட, மணி 6ஆவதற்குள் மலையன் காதுக்குப் போய்ச் சேர்ந்தது. மணி 8 ஆவதற்குள் சக்கிலியத் தெருக்கள் சிதைவுக்குள்ளாக்கப்பட்டன. 9 மணிக்கு ஃப்ரூக்ஃபீல்டில் இருவரையும் பார்த்ததாகத் தகவல் வந்ததையடுத்து ஊர்க்கூட்டம் கூடியது.

இத பாருங்க, அம்பேத்து வேல விசயமாத்த போயிருக்கா, எங்கிட்ட நேத்தே சொல்லிட்டாங்கஎன்றபடி வீரபாண்டி முன்வந்து நின்றார்.

ஏன்டா சக்கிலி நாயி, நீ என்னடா எம் முன்னாடி வந்து பேசறஎன்று மலையன் நெஞ்சுக் கூடை நிமித்திக் கத்தினான்.

வீரபாண்டி கூட்டத்தில் வெண்ணிலாவின் அப்பாவைத் தேடினார். அவர் இல்லாததைப் பயன்படுத்திக் கொண்டுதான் மலையன் இவ்வேலையைச் செய்துள்ளான் என்பதைப் புரிந்து கொண்டு,“வெண்ணிலாவோட அப்பா வரட்டும் அவருகிட்ட பேசிக்குறங்கஎன்றார்.

இதைக் கேட்ட மலையனின் சாதி சங்க உறவுகள் கொந்தளித்ததை மலையன் கட்டுப்படுத்தினான். வெண்ணிலாவின் அப்பா அவர்கள் காதலித்து போயிருந்தாலும் பெண்ணின் விருப்பம்தான் என் விருப்பம்என்று கூறுவார் என மலையனுக்கு நன்றாகத் தெரியும். இருப்பினும் தனது பலத்தை நிரூபிக்கக் கிடைத்தவாய்ப்பைச்சரியாகப் பயன்படுத்திக் கொண்ட பூரிப்பில் தனது உறவுகளை அமைதிப்படுத்தினான்.

                வெண்ணிலாவின் அப்பாவும் வீரபாண்டியும் சகத் தோழர்கள். நிறைய முற்போக்குக் கூட்டங்களுக்கு ஒன்றாகப் பயணித்தவர்கள். இவ்விருவர்தான் மனோகரன் மகனுக்கு அம்பேத்குரு என்று பெயர் சூட்டியவர்கள்.

                இத பாருங்கடா, எம்புள்ளைய உம்பயதா கூட்டிட்டு போயிருக்கானு உறுதியாச்சு இங்க இருக்குற சக்கிலிச்சிக அத்தன பேரயு சும்மா விடமாட்டேஎன்று மலையன்வசந்தாவை திண்பதுபோல் பார்வையைக் கூர்மையாக்கிக் கத்தினான்.

                பாருடி, தோட்டந்தொரவுக்குப் போயிட்டு வர நம்ம பொம்பளைகள கையப்புடுச்சு இழுத்து மசிய வைக்கப் பாத்து ஒன்னு நடக்கலைனு, இதுதா சாக்குனு வர்றாம்பாரு

                ஆமாக்கா, 40 வயசாயு அவசாதி பொண்ணுதா வேணும்னு கெடக்கரான். படுக்குறதுக்கு மட்டும் சக்கிலிச்சிக வேணுமாமா

                அதா பாருடி, ரெண்டு நாளுக்கு முன்னாடி என்ன இழுத்தப்ப இடுப்போட சேத்து ஒரு மிதி வுட்டம்பாரு, அதுமாதிரி எல்லா பொம்பளைகளு சேந்து வுட்டா எல்லா அடங்கிரும்என்று மணியம்மையும் வசந்தாவும் கிசுகிசுத்துக் கொண்டனர்.

                வசந்தா பன்னிரெண்டாவது வரை படித்துவிட்டு, கல்லூரிப் படிப்பைத் தொடர முடியாமல் நின்றுவிட்டாள். அவளுக்குக் காட்டுவேலையெல்லாம் அத்துப்புடி. அவள் அம்மா அவளை சிறுவயது முதலே காட்டு வேலைக்கு அழைத்துச் சென்று பழக்கிவிட்டிருந்தாள். கம்பீரமான தோற்றத்தைக் கொண்டிருக்கும் இவளின் மீது மலையனுக்கு எப்போதும் ஒரு கண் இருந்து கொண்டே இருந்தது. இன்றைய தாக்குதலின் போதுகூட அவளின் மீது பாய்ந்துவிட வேண்டுமென்று வீட்டுக்குள் நுழையும் போது இவன் சாதிக்காரன் தீப்பந்தத்தை வீட்டுக் கூரையின் மீது வீசியதால் அவளும் அவளின் குடும்பமும் அலறியடித்து வெளியே வந்துவிட்டனர். நல்ல வாய்ப்பைக் கெடுத்தத் தன் சாதிக்காரனை மனதிற்குள்ளேயே கண்டபடி திட்டி தீர்த்தான். அந்த கோபந்தான் மனோகரனின் மண்டையை உடைக்கச் செய்தது.

                மலையன் ஆவேசம் வந்தவனாய், வசந்தாவை அடைய கிடைத்த வாய்ப்பைத் தவற விட்ட கோபத்தில்சாயந்தரத்துக்குள்ள எம்புள்ள இங்க வர்ல எவனு உயிரோட இருக்க மாட்டீங்கஎன்று ஆத்திரக் குரலில், வசந்தாவை ஒரு கண்ணிட்டு பார்த்து விட்டு இரத்தம் உறைந்து கிடக்கும்கூட்டத்தை எச்சரிக்கும் தொனியில் முறைத்துக் கொண்டே தனது சாதிக்காரங்களை அழைத்துக் கொண்டுச் சென்றான்.

                மாலை நான்கு மணி பேருந்துக்கு வெண்ணிலா வந்திரங்கிய செய்தி மலையனுக்குப் போய்ச்சேர்ந்தது. வெண்ணிலாவைப் பார்த்த அவள் சாதிக்கார பையன்களுக்கு பெருத்த ஏமாற்றம். மலையன் வீட்டுக்கு வந்து பார்க்கும் போது வெண்ணிலா ஹாயாக டிவி பார்த்துக்கொண்டிருந்தாள்.

                ஏண்டி எங்கடி போனஎன்று ஆணவக் குரலில் வெண்ணிலாவைப் பார்த்துக் கத்தினான்.

                இத பாரு சித்தப்பா, வாடி போடின்னு கூப்ட்டா எனக்குப் புடிக்காதுனு உனக்குத் தெரியும், அப்புற எதாவது சொலிலீற போறஎன்று அவேசப்பட்டாள் வெண்ணிலா.

                அவனெங்க

                யாரு

                அதா உன் இழுத்துட்டுப் போனவஎன்றதும்

                அம்பேத்தைதான் சொல்கிறான் என்பதைச் சுதாரித்துக் கொண்டு

                அம்பேத்தாஎன்று உறுதிபடுத்திக் கொள்ள கோட்டாள்

                ஹிம், அந்த சக்கிலியப் பயதா

                சித்தப்பா, அவ என்ன இழுத்துட்டுப் போகல, நாந்தா அவன இழுத்துட்டுப் போனஎன்று கிண்டலடித்ததைக் கேட்டு மலையனுக்கு கோபம் பீறிட்டு வந்தது.

                உங்கப்ப ஆத்தாளு ஏதும் பேச மாட்டாங்கன்றதைரியத்துல உனக்குத் திமிரேறிப் போச்சு, மொதல்ல அவங்கள சொல்லனும்

                ம்ம்ம்.... வந்தா சொல்லுஎன்று மீண்டும் கிண்டலடித்தாள்.

மலையன் பெருத்த ஏமாற்றத்துடன் இவளுடன் பேச முடியாதுஎன்ற முகபாவனையுடன் கிளம்பினான்.

                அம்பேத்குருவும் மாலைவீடு வந்து சேர்ந்தான். குடிசைகள் எரிந்துகிடப்பதைக் கண்டு, அங்கு என்ன நடந்திருக்குமென உணர்ந்து கொண்டான்.

••••••••••••••••••••••••

சூரியன் இயல்பாகத் தோன்றி மறைவது போல அடுத்தநாளும் இயல்பாகப் புலர்ந்தது. நேற்று மீதி விட்டிருந்த சோளக்கதிர்களை அறுத்து முடிப்பதற்குள் மதியம்  3மணி ஆகிவிட்டது. வேலையை முடித்துவிட்டு அனைவரும் வீடு திரும்பத் தயாராகிக் கொண்டிருந்தனர். அதற்குள் வசந்தா விறகு ஒடித்து சேர்ப்பதில் விரைந்து செயலாற்றிக் கொண்டிருந்தாள். மழைக்கான அறிகுறிகள் தென்பட அனைவரும் சீக்கிரம் வீட்டுக்குக் கிளம்ப முடிவெடுத்ததை அறிந்த வசந்தா, ‘இருங்க நானாவது ஒரு செம கட்டிக்கிறேன், மழ வந்தா எரிக்க சுத்தமா வெறகு இல்லஎன்றாள்.

                இல்லடி நீ பொறுக்கீட்டு வா, நாங்க முன்னாடி மெல்லமா நடந்து போயிட்டிருக்கோம், சீக்கிரமா வந்துருஎன்றபடி கிளம்பினார்கள். வசந்தா நல்ல தைரியசாலியானவள் என்பது அவர்களுக்கு நன்றாகத் தெரியும்.

                சரி போங்க வரஎன்று விறகைச் சேகரிப்பதில் விரைந்து செயல்பட்டுக் கொண்டிருந்தாள். அரை மணி நேரத்திற்குள் ஒரு செமை சேர்ந்துவிட்டது. மழை வருவதற்குள் வேகமாக வீடு சேர்ந்து விடவேண்டுமென்று நடக்க ஆரம்பித்தாள். கம்மாயி தாண்டி அணைக்கட்டு பக்கம் வந்ததும் மலையன் வழிமறித்தான்.

                சற்றே அதிர்விற்குள்ளானவள் ஒரு நிமிட சுதாரிப்பில்  இந்தாங்க வழிய விடுங்கஎன்று சற்று கனத்தகுரலில் சொன்னாள்.

                மலையன் எதுவும் பேசாமல் வசந்தாவின் தலையில் இருந்த விறகுச் சுமையைத் தள்ளிவிட்டான். விறகு சும்மாடுடன் நாளைந்து முடிகளையும் இழுத்துக்கொண்டு விழுந்ததில் அவளுக்கு சுர்ரென்று வலித்து கோபத்தை உண்டாக்கியது.

                இதபாரு இந்த வேலையெல்லா உஞ்சாதிகாரிககிட்ட வச்சுக்க, எங்கிட்ட வச்சுகிட்ட அவ்ளோதாஎன்று எச்சரித்தாள்.

                மூடிட்டு படுடி,நேத்தைக்கு ஊட்டக் கொழுத்தும் போதே வீடு பூந்துருப்ப, எஞ்சாதி பேரு கெட்டுரும்னு விட்டுட்ட, இப்ப நீ வசமா மாட்டிக்கிட்டஎன்றான்.

                வசந்தா அவனை நெட்டித் தள்ளி விலக்கி விட்டு சும்மாடை எடுக்க முயற்சித்த வேலையில் மலையன் பின்னாளிலிருந்து தள்ளி விட்டதில் நிலைதடுமாறி குப்புறமாக விழுந்தாள்.

                அவள் விழுந்துவிட்டதைச் சுதாரிப்பதற்குள், அவன் வேகமாக அவள் மீது பாய்ந்து, மல்லாக்காகப் படுக்கவைக்கப் போராடி வெற்றிகண்டான்.

                அவள் கத்தும் சத்தம் ஊரை எட்டவில்லை. சுற்றியும் ஆள் நடமாட்டம் கூட இல்லை. வசமாக மாட்டிவிட்டோம் என்று உணர்ந்தவள் என்ன செய்வதென்று அறியாமல் அவனை விலக்க முயற்சித்தாள். அவன் இரண்டு அறை விட்டதில் வசந்தாவுக்கு கோபம் சுர்ரென்று வந்தது.

                அவன் கைகளில் ஒன்று அவளது மார்பைத் தொட போராடிக்கொண்டிருந்தது. நிலைமையைச் சுதாரித்து ஒரு நிமிடம் அமைதியாக இருந்தவள் இடுப்பில் சொருகியிருந்த கருக்கருவாலைத் தடவிப் பார்த்துக் கொண்டாள்.மலையனுக்கு மசிந்துவிட்டாள்என்று உள்ளாரத் தோன்றியதை அவனின் புன்னகை வெளிப்படுத்தியது.

                வசந்தா எதையும் யோசிக்காது அவனது குறியைக் கையால் பிடித்தாள். அவன்ஏதோ மாயப்பிரதேசத்தை அடையப் போவதைப் போல் பரவசமாயினான்’.கருமேகம் துயில் முறித்துநீர்த் திவளைகளை கீழே அனுப்பியது.மண்ணைத் தொட்ட மழைநீர் தன்போக்கில் ஓட ஆரம்பித்தது.

                வசந்தா விறகு செமையைத் தூக்கித் தலையில் வைத்துக் கொண்டு வீட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தாள். இடுப்பில் சொருகியிருந்த கருக்கருவாலின் முனையிலிருந்து மழை நீர் இரத்தச் சிவப்பு நிறத்தில் சொட்டிக்கொண்டிருந்தது. மலையன் வேட்டியை அவிழ்த்து முன்பக்கத்தில் வைத்துக் கொண்டு அலறியபடி ஓடினான். சிவப்பு நிறமாக மாறிக் கொண்டிருந்த வெள்ளை வேட்டியில் உடனுறைந்தமழை நீர் செம்பெயல் நீராக வழிந்தோடியது.