4ஆம் ஆண்டில் நமது இலக்கியச்சுடர்
படைப்புகளை periyaswamydeva@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி இதழின் வளர்ச்சிக்கு உதவுங்கள்

செவ்வாய், 1 செப்டம்பர், 2020

கோலத்தில் தமிழக மெய்யியலும் உலக மத நம்பிக்கைகளும்

 


முனைவர் சித்ரா

விரிவுரையாளர், SCOPE, City University of Hong Kong

ஆங்காங்

 

ஆய்வுச் சுருக்கம்

 

தமிழர்களின் பண்பாட்டுக் குறியீடான கோலம் என்பது கைகளால் மாவு கொண்டு கோடுகளாலும், புள்ளியிட்டு வளைவுகளாலும்வரையப்படும் வெண் சித்திரம். கோலம் போடுவது புனிதச் சடங்காகவும் வழக்கமாகவும் தமிழர் பண்பாட்டில் ஏற்றுக் கொள்ளப்பட்டு இருக்கிறது. அத்தகைய கோலங்களில் நம் தமிழக மெய்யியல் எவ்வாறு கலந்துள்ளது என்பதை குறிப்பாக அறுமுனை நட்சத்திரம் மற்றும் சதுரத்தின் மேல் குறுக்குச் சதுரம் மூலம் இக்கட்டுரை விளக்கும். அதன் அடிப்படையில் இந்தக் கோலக் குறியீடுகள், உலகத்தின் பல நாடுகளில் பின்பற்றப்படும் மதங்களான யூத மதத்தில் டேவிட் மற்றும் சாலமன் முத்திரையாகவும், கிருஸ்துவ மதத்தில் மெல்சிசேடேக் முத்திரையாகவும் மற்றும் இஸ்லாமிய மதத்தில் ரப் எல் கிச்ப் முத்திரையாகவும் எப்படி நம்பப்படுகிறது என்பதை இந்தக் கட்டுரை விளக்கும்.

 

முக்கிய சொற்கள் : கோலம், தமிழர்களின் பண்பாட்டுக் குறியீடு, யூத மதம், டேவிட் முத்திரை, சாலமன் முத்திரை, கிருஸ்துவ மதம், மெல்சிசேடேக் முத்திரை, இஸ்லாமிய மதம், ரப் எல் கிச்ப் முத்திரை

 

1.     அறிமுகம்

 

கோலம் என்பது கைகளால் மாவு கொண்டு கோடுகளாலும், புள்ளியிட்டு வளைவுகளாலும்வரையப்படும் வெண் சித்திரம். கோலம் என்பது தமிழர்களின் பண்பாட்டுக் குறியீடு. தினந்தோறும் வீட்டின் முற்றத்தைச் சுத்தம் செய்து, சாணம் கலந்த நீர் தெளித்து, வெண்ணிற மாவினால் விதவிதமான கோலங்களை போட்டு வீட்டினை அழகு செய்வதில் தமிழகப் பெண்கள் தங்கள் பண்பாட்டினை திறம்பட எடுத்துக் காட்டி வந்துள்ளனர். இன்றும் அந்தப் வழக்கம் பல பகுதிகளிலும் இருந்து வருகிறது. அதிலும் முக்கிய குடும்ப நிகழ்விலும், விசேட நாட்களிலும் மற்றும் கோயில் திருவிழாக்களிலும் தெருவையே அடைத்து பெரிய பெரிய கோலங்களை போட்டு அசத்துவதும் உண்டு. விருந்தினர்களும் குடும்பத்தினர்களும் அதிசயிக்கத் தக்க வகையில் ஒன்று முதல் இரண்டு மூன்று மணி நேரம் வரை கோலங்களை அயராமல் போடுவதும் உண்டு. கோலம் போடுவது புனிதச் சடங்காகவும் வழக்கமாகவும் தமிழர் பண்பாட்டில் ஏற்றுக் கொள்ளப்பட்டு இருக்கிறது. தாய் மகள் முறைமையில் பல சந்ததிகளாக ஆண்டாண்டு காலமாக தொடர்ந்து இந்த மரபு பின்பற்றப்பட்டு வந்திருக்கிறது.

 

தமிழ் மரபின் அடையாளமாக விளங்கும் கோலங்கள் வட இந்தியாவிலும் கர்நாடகத்திலும் ரங்கோலி என்றும், கேரளாவில் பூவிடல் என்றும், ஆந்திரப் பிரதேசம் மற்றும் தெலுங்கானாவில் முக்குலு என்றும் அழைக்கப்படுகிறது (பெத்தாலெட்சுமி, 2013).

 

சில கோலங்கள் பரவலாகப் போடப்படுகின்றன. அப்படிப் பெருவாரியாகப் போடப்படும் கோலங்களுக்கு ஏதேனும் பொருள் உள்ளதா? அத்தகைய கோலங்களில் நம் தமிழக மெய்யியல் எவ்வாறு கலந்துள்ளது? அத்துடன் இந்தக் கோலக் குறியீடுகள், உலகத்தில் பல நாடுகளில் மக்கள் நம்பும் மதங்களில் எப்படி நம்பப்படுகின்றன என்பதை இந்தக் கட்டுரை விளக்கவிருக்கிறது.

 

2.     கோலங்கள் - அன்றும் இன்றும்

 

கோலம் ஏன் போடப்படுகிறது? சூரியன் உதிக்கும் முன்பே எழுந்து, குனிந்து, நிமிர்ந்து, முழு கவனத்துடன் கோலம் போடுவது என்பது வீட்டிலுள்ள பெண்களுக்கு காலை பயிற்சியாக அமைந்து, அவர்களது உடல் நலத்தை காக்கிறது என்று ஒரு சாரார் கூறுகின்றனர்.

 

கோலம் போடும் மரபு பொ.ஆ.மு. 2500 என்று வரையறுக்கப்பட்ட சிந்து சமவெளி நாகரிகத்திலிருந்தே இருந்து வந்திருக்கிறது. இராமயாணத்தில் இராமன் வனவாசம் முடித்து நாடு திரும்பிய போது, தெருக்கள் எல்லாம் ரங்கோலி கோலங்கள் நிறைந்திருந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளதாக ஆய்வாளர்கள் கூறுவார்கள்.

 

தமிழ் நிகண்டுகளில் குறிப்புகள் இல்லை என்று கிஃப்ட் சிரோமெனி என்ற ஆய்வாளர் குறிப்பிடுகிறார்.ஆனால், இலக்கியங்களில் கோலம் பற்றிய குறிப்பினை காண முடிகிறது(Gift Siromeny et al. 1986).

 

ஆண்டாள் (பொ.ஆ.பி. எட்டாம் நூற்றாண்டு) அருளிய நாச்சியார் திருமொழியில்

 

வெள்ளை நுண்மணல் கொண்டு சிற்றில் விசித்திரப்பட வீதிவாய்த்

தெள்ளி நாங்கள் இழைத்த கோலம் அழித்தியாகிலும் உன்றன் மேல்” என்றும்,

 

திரிகூடராசப்பக் கவிராயர் (பொ.ஆ.பி. பதினெட்டாம் நூற்றாண்டு) பாடிய குற்றாலக் குறவஞ்சியில்

 

தலைமெழுகு கோலமிடு முறை பெறவே கணபதிவை அம்மே” என்றும்,

 

கோலங்கள் போடும் பண்பாடு பற்றி பன்னெடுங் காலமாக இருந்ததைக் காட்டுகிறது (பெத்தாலெட்சுமி, 2013).

 

கோலம் போடுவது வீட்டிற்கு வரும் விருந்தினர்களை வரவேற்கவும், வெண்ணிற அரிசி மாவினால் கோலம் போடுவதால், சின்னஞ்சிறிய பூச்சிகளுக்கும், வீட்டருகே இருக்கும் பறவைகளுக்கும் உணவு அளிக்கும் நோக்கத்திற்காகவும், சாணம் இட்டு மெழுகுவதால் நுண்கிருமிகளிமிருந்து இல்லத்தில் வாழ்வோரை காக்கும் நோக்கத்திற்காகவும்என்ற சிலரின் வாதமும் ஏற்கத்தக்கதாகும். ஆனால், இன்றைய நவீன நகரங்களில்,  பல வீடுகளில் அரிசி மாவிற்கு பதிலாக, கோலப் பொடியையும், சுண்ணாம்புக் கட்டியையும் மற்றும் கோலம் வரையப்பட்ட ஒட்டு காகிதங்களையும் பயன்படுத்திப் போடுவதால், இந்தக் காரணம் தற்போது ஏற்றுக் கொள்ள முடியாததாகி விட்டது (இணையம் -2).

 

ஆயினும், இன்றைய காலத்தில், நகரங்களில் வீட்டின் வாயில்களில் கோலங்கள் போடப்படுகிறதோ இல்லையோ, பெண்களின் வரை கலையை ஊக்கப்படுத்தும் வகையில் நிறைய போட்டிகள் நடத்தப்படுகின்றன. கண்ணைக் கவரும் வகையில் வண்ண வண்ண மாவினால் நிறக்கோலங்கள் போடப்படுகின்றன. உலகச் சாதனை நிகழ்வுகள் கூட நடத்தப்படுகின்றன.

 

தமிழர் வாழ்வியல் இயற்கையோடு இயைந்தது மட்டுமில்லாமல் அறிவியலையும் உள்வாங்கியதாக கருதப்படுகிறது. இதன் அறிவியல் பரிமாணங்களை ஆய்வு செய்வோரும் உள்ளனர் (பெத்தாலெட்சுமி, 2013).

 

3.     தமிழக மெய்யியல்

 

கோலங்களோடு விழாக்கள் மட்டுமல்லாமல் சூழலியல் சிந்தனைகளும் சமூகக் கோட்பாடுகளும் இணைந்துள்ளன.

 

நம் வீட்டிற்கு வரும் கடவுளர்களை வரவேற்கவும் மரியாதை செய்யவும், கவனிக்கவும், நன்றியை தெரிவிக்கவும் தினம்தோறும் காலையிலும் மாலையிலும் தவறாமல் கோலம் போடுவது அவசியம் என்று நம் முன்னோர்கள் வழக்கப்படுத்தி இருப்பதாக பெண்கள் நம்புகிறார்கள். அதனால் வீட்டிலுள்ளவர்களுக்கு நலம் பயக்கும் என்ற நம்பிக்கையையும் விதைத்திருக்கிறார்கள் என்ற கூற்றும் உண்டு. இந்துக்களின் வீடுகளில் தினம் ஆயிரம் உயிர்களுக்கு உணவளிக்க வேண்டும் என்ற கடமையை நிறைவேற்றவும் கோலங்கள் போடப்படுவதாக கூறுவதும் உண்டு.

 

போடப்படும் கோலங்கள் கால்களாலும் வண்டிகளாலும் அழிக்கப்பட்டாலும், அதை மறுபடியும் போட்ட வண்ணம் இருப்பது, நம் இறுமாப்பை அழிக்கும் குறியீடாகக் கொள்ளலாம் என்ற வாதமும் உண்டு. பொறுமையின் சிகரமாக விளங்கும் பூமாதேவி, குடும்பத்திற்குத் தேவையாக சுகம், செழிப்பு மற்றும் செல்வம் கொடுக்கும் கடவுளாக விளங்கும் லட்சுமி, சுகமும் விவேகமும்தரும் சூரியக் கடவுள், தடங்கல்களை தகர்க்கும் விநாயகர் ஆகிய கடவுளர்களை வணங்க கோலங்கள் உதவுவதாக நம்புவோரும் உண்டு (இணையம் 4).

 

அத்துடன் தீய சக்திகளை அண்டாமல் தடுக்கவும் (வறுமை, சோம்பல், நோய், தூக்கம் மற்றும் யோகமின்மைக்கு பெயர் பெற்ற) லட்சுமியின் தமக்கை மூதேவியை விரட்டவும் கோலம் போடப்படுவதான காரணமும் உண்டு. தமிழகத்தில், கோலமின்மை அந்த வீட்டின் மங்கலமின்மையையும், இந்துக்கள் அல்லாதவரையும் குறிப்பதாகவே கொள்ளப்படுகிறது. அந்த வகையில் கோலம் என்பது காட்சி சார் குறியீடாக கொள்ளப்படுகிறது (இணையம் 8).

 

கோலங்கள் நம் தமிழர்களின் பண்பாட்டு குறியீடாகக் கொள்ளலாம். “பண்பாட்டுக் குறியீடு பண்பாட்டுவியல் கூறுகளை எடுத்துக் காட்டும் (Hodge, 1998, 132). பண்பாட்டுக் குறியீட்டுக் கோட்பாடு, ஒரு மக்கள் குழுமத்தில் நிகழும் செயல்பாடுகளின் அடிப்படையில் வெளிப்படும் அவர்களின் தனித்தன்மையை ஆய்வு செய்து, அதனை விளக்கப்படுத்தும் வகையில் அமைகிறது. இதன் அடிப்படையில் ஒரு இனத்தில் நிகழும் செயல்பாடுகள், பயன்படுத்தப்படும் பொருள்கள், குறியீடுகள் ஆகியன எவ்வாறு அந்த இனத்தின் பண்பாட்டுக் கூறுகளாக மாறுகின்றன என்பதனை அறிய குறியீட்டுக் கோட்பாடு பெரும் துணை புரிவதாக அமைகிறது. (Shore, 1998, 165).” (Rajantheran, Sillalee, 2015, 12-25).

 

போடப்படும் பல கோலங்களுக்கு பொருள் இருக்கிறது.  இவற்றில் நம் தமிழக சிந்தாந்தம் புதைந்து இருக்கிறது. பல கோலங்கள் நம் கோயில்களின் உட்கூரைகளில் வடிக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் இதை நாம் குறியீட்டு கோட்பாட்டாக கொண்டு ஆராயலாம். அதனால், அவற்றில் சிலவற்றைப் பற்றி இந்தப் பகுதியில் காணலாம்.

 

3.1    அறுமுனை நட்சத்திரம்

 

தமிழகத்தில் நாம் வழக்கமாக பரவலாக வீட்டு வாசல்களில் காணப்படும் கோலம் இது. சாதாரணமாக மிகவும் எளிய கோலம் என்றால், இந்த நட்சத்திரத்தைப் போட்டு, உள்ளே ஒரு புள்ளியோ, அல்லது அனைத்து முனைகளையும் இணைக்கும் ஒரு வட்டத்தையோ போடுவார்கள். இந்தக் குறியீடு திருவெண்காடு புதன் ஸ்தலத்தில் ஒரு தூணில் வடிக்கப்பட்டுள்ளது.

 இரண்டு எதிரெதிர் முக்கோணங்கள், சொர்க்கம்-பூமி, இறைவனின் உறைவிடம்-மனித சமூகத்தின் உறைவிடம், ஆண்-பெண், சிவ-சத்தி, பிரம்மம்-மாயையைக் குறிக்கும் குறியீடாக தமிழ் மக்கள் பொருள் கொள்கின்றனர்.

 

கடவுளும் மனித இனமும் என்ற கோட்பாட்டுக்குள்ளும் இக்குறியீடு அடங்கும். தீய சக்திகளை விரட்டும் குறியீடாகவும் இது எண்ணப்படுகிறது.

 

திருமூலர் (பொ.ஆ.மு. 200) திருமந்திரத்தில்,

 

வலையமுக் கோணம் வட்டம் அறுகோணம்

துலையிரு வட்டம் துய்ய விதழ் எட்டில்

அலையுற்ற வட்டத்தில் ஈர்எட்டு இதழாம்

மலைவற்று உதித்தனன் ஆதித்தன் ஆமே.

 

என்ற பாடலில் அறுகோணம் பற்றி குறிப்பிடுவார்.

 

3.2    சதுரத்தின் மேல் குறுக்குச் சதுரம்

 

அடுத்தது எட்டு முனைகளைக் கொண்ட கோலம். குறுங்காலீஸ்வரர் கோயிலின் உட்கூரையில் இந்த சதுரத்தின் மேல் குறுக்குச் சதுரம் குறியீடு காணப்படுகிறது. அதன் மத்தியில் பல விதமான வடிவங்கள் வடிக்கப்பட்டு இருக்கும். இங்கு காட்டப்பட்டிருக்கும் வடிவத்தில் வட்டங்களும், தாமரை மலரும் இருப்பதைக் காணலாம். மேலும், இத்தகைய குறியீடு பல கோயில்களில் பல தூண்களிலும், உட்கூரைகளில் மிகப் பெரிதாகவும், கோயிலின் கருவறைக்கு வெளியே முக்கிய இடத்திலும் இருப்பது இதன் முக்கியத்துவத்தை எடுத்துக் காட்டுகிறது. 

    


           இதையும் இரண்டு சதுரங்கள் ஒன்றின் மேல் ஒன்று இருப்பதால், அறுகோண நட்சத்திரத்தைக்  போன்றே, சொர்க்கம்-பூமி, இறைவனின் உறைவிடம்-மனித சமூகத்தின் உறைவிடம், ஆண்-பெண், சிவ-சத்தி, பிரம்மம்-மாயையைக் குறிக்கும் குறியீடாகவும் கொள்ளலாம். அத்துடன், எண்முனை நட்சத்திரமாகக் கருதி இயற்கையோடு ஒன்றிய இறைவனாகவே சித்தாந்தம் குறிக்கிறது. எட்டுத் திசைகளைக் குறிக்கும் குறியீடாக கொண்டால், எல்லா திசைகளில் இருந்தும் நல்லிணக்கம் இருக்க வேண்டும் என்ற பொருளையும் கொள்ளலாம்.

 

திருமூலர் (பொ.ஆ.மு 200) திருமந்திரத்தில்,

 

எட்டுத் திசையும் எறிகின்ற காற்றொடு

வட்டத் தரையனல் மாநிலம் ஆகாயம்

ஒட்டி உயிர்நிலை என்னும்இக் காயப்பை

கட்டி அவிழ்ப்பன் கண்ணுதல் காணுமே.”

 

என்ற பாடலில் சூரியன், சந்திரன், காற்று, நீர், நெருப்பு, நிலம், வானம் என்னும் ஐம்பெரும் பூதங்களும் ஒருங்கியைந்துப் பின்னிய ‘உயிர்க்கு இடம்’ எனச் சொல்லப்படுகின்ற (எட்டு பொருண்மைகளும்) இந்த உடம்பாகிய பைக்குள் உயிர்களை முன்பு அடைத்துக் கட்டி வைத்து பின்பு அவிழ்த்து வெளிவிடுகின்றான் சிவபெருமான் என்று கூறி எட்டு முனை கொண்ட இந்தக் குறியீட்டைப் பற்றி குறிப்பிடுவார்.

 

4.         உலக மத நம்பிக்கைகள்

 

தமிழகக் கோலக் குறியீடுகள் பல மதங்களில் புனிதக் குறியீடுகளாக இருந்துள்ளன. இவற்றில் மேலே குறிப்பிட்ட இரண்டு கோலங்கள் மற்ற மதங்களில் எப்படி மதிக்கப்படுகிறது என்பதை இந்தப் பகுதியில் காணலாம்.

 

4.1 யூத மதம் (பொ.ஆ.மு. 1800)

 

அறுமுனை நட்சத்திரம், உலகிலேயே மிகவும் பழைய மதம் என்று வரலாற்று ஆய்வாளர்கள் கூறும் யூத மதம் என்ற மதத்தின் புனிதச் சின்னமாக உள்ளது.

 

ஸ்டார் ஆப் டேவிட்

 (Star of David)

சாலமன் முத்திரை

 (Seal of Solomon)

அறுமுனை பொருள்

செக்காஸ்லாவாகியா

 

மேல் பக்கம் நோக்கி இருக்கும் முக்கோணம் சொர்க்கத்தையும், கீழ் பக்கம் நோக்கி இருக்கும் முக்கோணம் பூமியையும் குறிப்பதாக அவர்கள் நம்புகின்றனர். இரண்டும் நேர் எதிராக இணைந்து உலகில் உயிர்களுக்கு நன்மை அளிப்பதாகவும் கருதுகின்றனர். அதைச் சுற்றி புள்ளியிட்ட வட்டம் உள்ள குறியீடு சாலமன் முத்திரை (Seal of Solomon) என்று அழைக்கப்படுகிறது. அரசர் சாலமன் அதை பேய்களை அடக்குவதற்கும் விலங்குகளுடன் பேசுவதற்கும் பயன்படுத்தியதாகவும் கூறப்படுகிறது (இணையம் 9).

 

இதற்கு மற்றொரு பொருள், நீர், நெருப்பு, காற்று, பூமி என்ற இயற்கைக் கூறுகளையும், சூடான, குளிர்ந்,உலர்ந்த, வறண்ட கூறுகளையும் கொண்டதாகவும் கருதப்படுகிறது.

 

ஆறு முனைகள் கொண்ட இந்த நட்சத்திரம் பல யூதக் கோயில்களில், நினைவிடங்களில், இஸ்ரேல் நாட்டின் கொடியிலும் (இணையம்  10, 11) உள்ளன.

 

இது 13ஆம் நூற்றண்டிலிருந்து தான், குறியீடாக ஏற்றுக் கொள்ளப்பட்டது. 17ஆம் நூற்றாண்டு முதலாக அறுமுனை நட்சத்திரம் யூத சமூகத்தில் பரவலாக பயன்பட்டு வந்ததாக வரலாற்று ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். அதற்கு டேவிட்டின் நட்சத்திரம் (Star of David) என்றும் பெயரிட்டனர். டேவிட் என்ற அரசரைக் காக்கும் கடவுளாகவும் இக்குறியீடு எண்ணப்படுகிறது.

 

இந்து மதத்தில் வட்டத்திற்குள் அமைக்கப்பட்ட அறுமுனை நட்சத்திரம், இதயத்தைக் குறிப்பதாகவும், இது காற்றுடன் தொடர்பு கொண்டது என்றும், அன்பு, தயை, இணைப்புகளை உருவாக்கக் கூடியதாகவும் கூறப்படுகிறது. மேல் நோக்கிய முக்கோணம் புருச குணம் கொண்ட கடவுளையும், கீழ் நோக்கிய முக்கோணம் பெண்மை குணம் கொண்ட இயற்கையையும் குறிக்கிறது என்ற வாதமும் உண்டு (இணையம் 12) .

 

4.2 கிறுஸ்துவ மதம் (பொ.ஆ.பி. 30-33)

 

வட்டத்தைச் சுற்றி சதுரத்தின் மேல் குறுக்குச் சதுரம் உள்ளக் குறியீடு கிறுஸ்துவ மதத்தில் புனிதக் குறியீடாகக் கருத்தப்பட்டது. இது மெல்சிசேடேக் முத்திரை என்று அழைக்கப்படுகிறது.

 

 

மெல்சிசேடேக் முத்திரை

Melchizedek Seal

(The Mosaic of Melchizedek, Abel, and Abraham - Basilica of St. Apollinare)


புனித பார்தோலாமிய ஆலயம், இங்கிலாந்து

 

 

பொ.ஆ.பி 520யில் கட்டப்பட்ட புனித அப்லோநாரே ஆலயத்தைச் சேர்ந்த படத்தில் மேல்சிசேடேக் என்பவர் அபேல், அப்ராகாம் நடுவே, ரொட்டியையும் பழச்சாறையும் கொடுக்க நின்றிருக்கிறார். அவை வைக்கப்பட்ட மேடையின் மேல் போடப்பட்டிருக்கும் துணியில் இந்தக் குறியீடு காணப்படுகிறது (இணையம் 13). இந்தக் குறியீடு அந்த மதத்தில் பல கருதுகோளைக் கொண்டிருக்கிறது. அதில் ஒன்று இயேசுவின் மறுபிறப்பைக் காட்டும் குறியீடாகவும் கொள்ளப்படுகிறது. இங்கிலாந்தில் மெபிசயரில் இருக்கும் புனித பார்தோலாமிய ஆலயத்திலும் இக்குறியீடு உள்ளது (இணையம் 14, 15).

 

4.3 இஸ்லாமிய மதம் (பொ.ஆ.பி. 632-661)

 

 

ரப் எல் கிச்ப்;

Rub el Hizb

குமாயுன் கல்லறை

மொராக்கோ (வட ஆப்பிரிக்கா) நாட்டின் கொடி

துருக்மேனிஸ்தான் முத்திரை

 

      இதே வட்டத்தைச் சுற்றி சதுரத்தின் மேல் குறுக்குச் சதுரத்தின் தொன்மையை ஸ்பெயின் நாட்டின் அன்டலுசியா பகுதியின் டார்செசாஸ் இனத்தினரிடம் காணப்படுவதாக வரலாற்று ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். அன்டலுசியா கி.மு 11-6ஆம் நூற்றாண்டு வரை மக்கள் வாழ்ந்த இடம். இக்குறியீடு அப்போதிருந்தே பயன்பாட்டில் இருந்திருக்கிறதாம் (இணையம் 16).

 

இந்தக் குறியீட்டிற்கு இஸ்லாம் மதத்தில் ரப் எல் கிச்ப் என்று பெயர். இது ஆரம்பத்தில் இஸ்லாமியர்களின் புனித நூலான  குரானில் பயன்படுத்தப்பட்டதாகத் தெரிகிறது. இது ஒவ்வொரு அத்தியாயத்தின் முடிவிலும் அராபிய சித்திர மொழியில் எழுதப்பட்டு இருந்ததாம். அதனால் இந்தக் குறியீடு புனிதமாகக் கருதப்படுகிறது (இணையம் 17,18).

 

பெரும்பாலும் சதுரம் என்பது நான்கு முக்கிய காலங்களையும், நான்கு இயற்கை பொருண்மைகளான நிலம், நீர், காற்று, வானம் ஆகியவற்றை குறிப்பதாகக் கொள்ளப்படுகிறது. சீன மக்கள் சதுரத்தில் பூமியைக் கண்டார்கள் (இணையம் 19) . வட அமெரிக்கர்கள் பாதுகாப்பான இடத்தையும் ஸ்திரத் தன்மையையும் இதில் கண்டார்கள் (இணையம் 20).

 

இது பல நாட்டின் கொடிகளிலும் முத்திரைகளிலும் பயன்படுத்தப்படும் குறியீடாக இருக்கின்றது. இந்தியாவை ஆண்ட குமாயுன் கல்லறையிலும் இந்தக் குறியீடு பொறிக்கப்பட்டுள்ளது.

 

இப்படியாக, அறுகோணமும் மற்றும் சதுரத்தின் மேல் குறுக்குச் சதுரமும் உலக மதங்களுடன் தொடர்பு கொண்ட குறியீடு என்பதைத் தெளியலாம். இன்னும் பல கோலங்கள், நித்திய முடிச்சு (Endless knot), சாசுவத முடிச்சு (Knot of  Eternity), சங்கு, எண்கோண நட்சத்திரம் ஆகியவையும் மற்ற மத நம்பிக்கைளில் இருக்கின்றன. 

 

5.     முடிவுரை

 

கோலங்கள் வெறும் வீட்டு வாசல்களில் இருக்கும் வெண் சித்திரங்கள் அல்ல. தீய சக்திகளை விரட்டும் குறியீடாகவும் உள்ளது. வளத்தையும் செழிப்பையும் யோகத்தையும் தரும் குறியீடும் கூட. மேலும், தமிழகக் கோயில்களில் பொறிக்கப்பட்ட பண்பாட்டு குறியீடு மட்டுமல்லாமல், அதில் வரையப்பட்டிருக்கும் வடிவங்கள் தமிழகச் சிந்தாந்தத்தின் கோட்பாட்டுக் குறியீடாகவும் மற்றும் உலக மதங்களில் பயன்படுத்தப்படும் குறியீடாகவும் இருப்பதை இந்தக் கட்டுரை விளக்கியுள்ளது.

 

உசாத்துணை

 

1.     பெத்தாலெட்சுமி, அ.இராஜ இராஜேஸ்வரி, இரா. (2013).  தமிழ் மரபின் அடையாளம் கோலங்களின்கணிதவியல் இயல்புகள் – ஒரு மீள் பதிவு

2.     Gift Siromeny, Chandrasekaran, R. 1986. On understanding certain kolamdesigns, Second International Conference on Advances in Pattern Recognition and Digital Technique, January 6-9, Indian Statistical Institute, Calcutta.

3.இணையம் - https://www.sahapedia.org/significance-of-kolam-tamil-culture

4.     இணையம் - http://www.manyzone.com/festivals/pongal-kolams

 

5.     Hodge, Robert. (1998). Communication. In Paul Bouissac (Ed), Encyclopedia of Semiotics (pp. 132-135). New York: Oxford University Press.

6.     Shore, Bradd. (1998). ‘Culture of Semiotics’. In Paul Bouissac (Ed), Encyclopedia of Semiotics (pp. 132-135). New York: Oxford University Press.

7.     Rajentheran, M., Silllalee, K. (2015). Semiotic Theory in studies of Classical Tamil Literature. Tamil Peraivu.

8.     இணையம் - https://www.indianfolk.com/rangoli-india-riya/93/

9.     இணையம் -https://www.smithsonianmag.com/smart-news/how-did-the-six-pointed-star-become-associated-with-judaism-1809596

10.   இணையம் - https://nationalsymbolss.com/2020/01/06/israel-2/

11.   இணையம் - https://www.britannica.com/topic/flag-of-Israel

12.   இணையம் - https://narayanaoracle.com/?p=505

13.   இணையம் - https://rsc.byu.edu/vol-11-no-3-2010/seal-melchizedek

14.   இணையம் - http://www.abovetopsecret.com/forum/thread986785/pg1

15.   இணையம் - https://www.learnreligions.com/geometric-shapes-4086370

16.   இணையம் - https://en.wikipedia.org/wiki/Rub_el_Hizb

17.   இணையம் - www.learnreligions.com/octagrams-eight-pointed-stars-96015

18.   இணையம் - https://www.ancient-symbols.com/symbols-directory/rub_el_hizb.html

19.   இணையம் - https://www.luminous-spaces.com/the-circle-and-square-meaning-in-feng-shui/

20.   இணையம் - https://www.sunsigns.org/square-symbol-meaning/