4ஆம் ஆண்டில் நமது இலக்கியச்சுடர்
படைப்புகளை periyaswamydeva@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி இதழின் வளர்ச்சிக்கு உதவுங்கள்

செவ்வாய், 1 செப்டம்பர், 2020

இலக்கியங்களில் மடலேறுதல் – ஓர் ஆய்வு

 


பொ.பிரபு

 முனைவர் பட்ட ஆய்வாளர் (பகுதி நேரம்),

            அறிஞர்  அண்ணா  அரசு   கலைக்கல்லூரி,

                                              நாமக்கல் - 637002

                                                           கைபேசி எண்: 956601547

                     மின்னஞ்சல் முகவரி:prabhuponn1234@gmail.com

 


ஆய்வுச் சுருக்கம்

                தலைவனை மணந்து கொள்வதற்கு ஏறுதழுவுதல் சல்லிக்கட்டு நிகழ்த்தி பின்பும், தலைவன் மீது  தடைப்பட்ட காதலை மீண்டும் தொடர்வதற்கு தலைவி மீண்டும் மடலூர்தலையும், அப்படி காதல் செய்யும்போது  சாதியோ, மதமோ  இல்லாமல்  திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வந்தனர்  என்பதை பண்டைய  இலக்கியங்களின்  மூலம்  அறிந்து   கொள்ள   முடிகின்றது.

திறவுச்சொற்கள்

1. குதிரை   ஏற்றம்

2. ஊர்வலம்   வருதல்   மடலூர்தல்

3. மடல் என்பது கடிதம்

4. தாழை மடல், வாழை மடல், செவி மடல்

5. பனங்கருக்கு

6. காம்பூ 

7. மட்டை

8. கருக்கு

7. இற்செறிப்பு

8. காமம் - அன்பு   காதல்

9. கைக்கிளை   என்பது   ஒருதலைக்காமம்

10.பெருந்திணை என்பது   பொருந்தாக்   காமம்

11.ஐந்திணை   என்பது   அன்புடைக்    காமம்

 

1. முன்னுரை

சங்க இலக்கியங்கள் என்று போற்றப்படுவது எட்டுத்தொகையும், பத்துப்பாட்டுமாகும். பழந்தமிழரின் நற்பண்புகளையும், சமூக வாழ்வியலையும்   எடுத்துக்கூறுகிறது. அது   இச்சமுகப் பெருமையை,

   கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே

                  வாளோடு முன்தோன்றிய மூத்தக்குடி  தமிழ்க்குடி

என்கிறார்   புறப்பொருள்  வெண்பாமாலை  ஆசிரியர்  ஐயனாரிதனார்.

 

2. கலாச்சாரம் என்பதன் பொருள்       

கலாச்சாரம் என்பதன் பொருள் கலை+ஆசாரம்=கலாச்சாரம் என்பதாகும். கலாச்சாரம் என்ற சொல் வடமொழிச்சொல். அதற்கு நிகரான தமிழ்ச்சொல் பண்பாடு என்பதாகும். இவ்விரண்டின்  வளர்ச்சிகளையும் முறையே பண்பாடு, நாகரிகம் என்னும் சொற்கள் குறிப்பதாகக் கொள்ளலாம். அதாவது பண்பாடு அகவளர்ச்சியையும், கலாச்சாரம்  புறவளர்ச்சியையும்   குறிக்கும்   என்பதாகும்.

2.1 கலாச்சாரம் என்ற சொல் உருவான விதம்:

கலாச்சாரம் என்பது ஆங்கிலச் சொல்லான ‘Civilization’ என்பதும் நகர்ப்பறத்துத்  திருந்திய வாழ்வையே குறிக்கிறதென்பதனை அறிஞர்   பாவணார்  அவர்கள்  விளக்கியுள்ளார்கள்.1(முனைவர் . தட்சிணாமூர்த்தி, தமிழர் நாகரிகமும் பண்பாடும், பக்கம்  எண்:3)இலத்தின் மொழியிலும் ‘Civitas’என்பது City அல்லது City Stats என்று   பொருள்படும்.Civis–Citizen:‘Civilis’ என்னும்   இலத்தின்  சொல்   ஆங்கிலத்தில்   ‘Civilize’ என்றாயிற்று. எனவே,   நகரமே   கலாச்சாரத்தின்    பிறப்பிடம்    என்று   தெரிகிறது.

 

2.2 இலக்கியப்  பார்வையில்கலாச்சாரம்’:

கலாச்சாரம்என்னும்  சொல்  இலக்கியங்களில்  இடம்  பெற்றதை,

பாழி யன்ன  கடியுடை வியனகர்

முரசுகெழு செல்வன் நகர்

முக்கட்செல்வன் நகர்

அணிநகர் முன்னி னானே

நன்னகர் விழையக் கூடி

இதைப்போன்றே      திருக்குறளில்   திருவள்ளுவரும்  நாகரிகத்தினைப் பதிவிட்டுச்  சென்றுள்ளார்   என்பதை,

பெயக்கண்டும்  நஞ்சுண்  மைவர்   நயத்தக்க

   நாகரிகம் வேண்டு  பவர்  (திருவள்ளுவர்,திருக்குறள், பொருட்பால், அரசியல், குறள் எண்: 580)

என்றார். மேலும், நற்றிணைச் செய்யுள் ஓன்றும், “முந்தை  இருந்து  நட்டோர் கொடுப்பின்  நஞ்சும் உண்பர்  நனி   நாகரிகர்”3  (ஆசிரியர் பெயர் இல்லை, நற்றிணை, பா.எண்:355   வரிகள்:6-7)  என்றிதனையே  கூறியுள்ளது.

3. மடலேறுதல்                                    

                இன்று சல்லிக்கட்டு என்ற பெயரில்  நடைபெறும்  காளையடக்கும் வீரவிளையாட்டுப் போட்டி ஒரு பழமையான விளையாட்டு. வீரத்தைத் தெரிவிக்க ஏறுதழுவுதல் என்ற நிகழ்வு நடந்த அதே காலகட்டத்தில், ஒரு வித்தியாசமான, குதிரை ஏற்றம்   ஒன்றும்  நடந்து  வந்துள்ளது.

3.1 மடலேறுதல் என்பதன் விளக்கம்

                தலைவன் தடைபட்ட தன் காதலை மீண்டும் ஒழுங்குபடுத்தி தொடரச் செய்ய நடத்தும் ஒரு வகையான அச்சுறுத்தும் நிகழ்வு பனங்கருக்காலான மட்டையால் குதிரை செய்து, அதன்மீது ஏறி, தலைவி படத்துடன்  ஊர்வலம்  வருதல்  மடலூர்தல் என்று பெயரிட்டு அழைத்தனர்.

3.2 மடல் என்பதன் பொருள்

                மடல் என்பது கடிதம் என்பதைக் குறிக்கும். தாழை மடல், வாழை மடல், செவி மடல் என்றெல்லாம் வருகிறது. பொதுவாக இலை போன்ற மெல்லிய பகுதியை இது குறிக்கிறது. மடல் என்பது அக இலக்கியங்களுள் ஒன்றாகும். ஆனால் மடல்  என்பது பனங்கருக்கு என்பதனைக் குறிக்கிறது.

                பொதுவாக இலையையும், கிளையையும் சேர்த்துப் பிடித்திருக்கும் உறுப்பை காம்பூ என்கிறோம். பனை மரத்தில் ஓலையைப் பனைமரக் கொண்டையோடு  சேர்த்துப்  பிடித்திருக்கும் பகுதியை  மட்டை  என்பார்கள். இந்த மட்டை முழுக்கவும் பசிய நாறால் மூடப்பட்டிருக்கும். அந்த மட்டையின் ஓரமாய் இருபக்கமும் கூரிய இரம்பத்தின் பல் போன்று நெடிதமைந்திருக்கும், கருத்த பகுதிக்குக் கருக்கு என்று  பெயர். எனவே தான் மடலால்  செய்த  குதிரையில்  ஏறி   ஊர்ந்து   வருதலால் மடல் ஊர்தல்  என்று   பெயரிட்டுள்ளனர்.

3.3  தொல்காப்பியத்தில் மடலூர்தல்                                                  

                மடலேறும் பழக்கம் ஆடவர் மட்டுமே மேற்கொண்டிருந்த ஒன்று. மகளிர் மேற்கொள்ளும்  பழக்கம்  இல்லை   என்பதனை,

எத்திணை மருங்கினும் மகடூஉ  மடல்மேல்

  பொற்புடை நெறிமை இன்மையான”4

(தொல்காப்பியர், தொல்காப்பியம், அகத்திணையியல், நூற்பா : 981)

                (மடலேறுதல் என்பது மகளிர்க்கு இல்லை. ஆடவனே மடலேறுவேன் என்று அச்சுறுத்தும், மடலேறவும் முயல்வான். மகளிர்க்கு அது சிறப்புடையதொன்று அன்று என்பதால், எத்திணையிலும் அது பெருந்திணையேயாயினும் ஒரு பெண் மடலேறுதல் என்பதில்லைஎன்பார்   தமிழண்ணல்)

கடலன்ன காமம் உழந்தும் மடல்ஏறாப்

 பெண்ணின் பெரும்தக்கது இல்”5  

  (திருவள்ளுவர், திருக்குறள், பொருட்பால், அரசியல், குறள் எண்: 1137)

என்ற குறள் தொல்காப்பியரின் கருத்தை அரண் செய்கிறது. ஆயினும், பிற்காலத்தில்  பெண்களும்  இப்பழக்கத்தை   மேற்கொண்டனர்.

3.4 இலக்கணத்தில்  மடலேறுதல்:      

                பண்டைத் தமிழர் வாழ்வினை அகத்திணை, புறத்திணை   என்றும்   அந்த அகத்திணையை  ஏழு   உட்பிரிவுகளாகவும்   பிரித்திருந்தனர்.

கைக்கிளை முதலாப் பெருந்திணை இறுவாய்

  முற்படக் கிளந்த எழுதிணை என்ப”6

    (தொல்காப்பியர்,  தொல்காப்பியம் , அகத்திணையியல், நூற்பா : 947)

மேலும்,

                                  கைக்கிளை யுடையது ஒருதலைக் காமம்”7    (மேலது, நூற்பா : 1 )

என்றும், கைக்கிளை  என்பது  சிறுமையான  உறவு.

                ஒருதலைக் காமம் என்பது ஒருவர் பக்கத்தில் மட்டுமே எண்ணிக் கொளல் - காதல் என்பதுவுமாம். (காமம் - அன்பு காதல்)

பெருந்திணை என்பது பொருந்தாக் காமம்”8

                                   (தொல்காப்பியர், தொல்காப்பியம்,  அகத்திணையியல், நூற்பா : 3)

தலைவன் தன்னுடைய செல்வம், வலிமை முதலியவற்றின் துணைகொண்டு தான் விரும்பியவாறு ஒரு நங்கையை வலிந்து பெறுவதேயாகும்.

ஐந்திணை என்பது அன்புடைக்  காமம்”9   (மேலது, நூற்பா : 5 )

ஐந்திணை (குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை) என்பதன் பொருள்  அன்புடைய  காமம்  ஆகும்.

3.5 ஐந்திணை மடலேற்றம்

                களவு மேற்கொண்ட தலைவியை எத்தகைய இடர் வந்தாலும் தோழியும், பெற்றோரும் தடையாக இருந்தாலும் வரைந்து கொள்வதற்குரிய இறுதி முயற்சியாக  தலைவன்  மேற்கொள்வது   மடலேற்றமாகும். மடலேறுவேன் எனக் கூறிய அளவில் நிற்பது ஐந்திணை எனக் குறிப்பிடுகிறார் .சுப. மாணிக்கனார்.  தலைவன்   மடலேற   எண்ணுவதைத்   தோழி    கேட்குமாறு,

மடலே காமந் தந்தது அலரே

  மிடைபூ எருக்கின அலர்ந் தன்றே”10

     (தொல்காப்பியர், தொல்காப்பியம்,  அகத்திணையியல்,  நூற்பா : 4)

எனக் கூறுகின்றான். தலைவன் தன் நிலையை முழுமையாகக் கூறுவதன் வாயிலாகத் தோழியின் உதவி கிடைக்குமென எண்ணுகின்றான். இதற்கு உரையாசிரியர் பின்னத்தூர் நாராயணசாமி காமம் காழ்க் கொண்டமையால் மடலேறுதலும்  வரைபாய்தலுமின்றிப்   பிறிதொன்று செய்யக்  கிடந்தில்லையென என்பர். மடற்பரி கொண்டமையின் காமம் மடலைத் தந்ததென்றான் என உரை பலவாறாகத் தோழியிடத்து உணர்த்தியும் தோழி உதவ முன் வராதபோது மடலேறுவேன் என அச்சுறுத்துகிறான். மேலும் மடலேறுவதால்   தலைவனுக்கு   ஏற்படும்    இன்பத்தை   எண்ணிப் பார்த்துத் தோழி தன்  மீது   இரக்கங்  கொள்வாள்   என எதிர்பார்க்கிறான் தலைவன். இவ்வாறு மடலேறுதலைக் கூறி அச்சுறுத்துவது  சொற்களால்  மட்டும் கூறுவது ஐந்திணையின்   பாற்பட்டது   எனலாம்.

3.6 கைக்கிளை   சார்ந்த மடலேற்றம்

                கைக்கிளை என்பது ஒருதலைக் காமம் என்பர். தலைவன், தலைவி மீது கொண்ட காதலைப் புரிந்து கொள்ளும் வயதும் பக்குவமும் வரப்பெறாதவளாக இருக்கும்போது, அவள் தன்மீது காதல் கொண்டதாக நினைத்து தனக்குத் தானே சொல்லி   இன்பம்   அடைவது   கைக்கிளை   எனப்படும்.   இதனை,

காமஞ் சாலா விளமை யோள்வயின்

                                  ஏமஞ்சாலா இடும்பை எய்தி”11

     (ஆலம்பேரி சாத்தனார்,  நற்றிணை,  பா. : 152, வரிகள்:1-2)               

புல்லித்  தோன்றும்  கைக்கிளைக்   குறிப்பே  எனத் தொல்காப்பியம் குறிப்பிடுகிறது.   தலைவனின்   விருப்பக்   குறிப்பினை, அறியும் தன்மை வாய்க்கப் பெறாதவளை ஒருதலையாக எண்ணி வருந்துகின்றான். அவ்வேளையில் மடலேறுவேன்   எனத்   தலைவன்   கூறுவதும்   உண்டு. சான்றாக,

உளனாவென் னுயிரையுண் டுயவுநோய் கைம்மிக

                                 இளமையான் உணராதாய் நின்தவ நில்லானும்”12

  (தொல்காப்பியர், தொல்காப்பியம், அகத்திணையியல், நூற்பா:877)

எனவரும் பாடலைச் சுட்டலாம். இதற்கு உரைவகுக்கும் நச்சினார்க்கினியர், வருத்தத்தினையுடைய காமநோய்   கைம்மிகும்படியாக   யான் சிறிது உயிருடனே இருக்கும்படி என் உயிரை வாங்கிக்கொண்டு  நின் இளமைப் பருவத்தை அறியாமல் போகின்றதே எனத் தலைவன் கூறுவதாகக் குறிப்பிடுகின்றார். இதிலிருந்து தலைவி தலைவனைப் புரிந்து கொள்ளும் வயதுடையவள் அல்லள் என்பது பெறப்படும்   இப்பாடலின்   தொடர்ச்சியில்   தலைவன்,

மறுத்த இவ்வூர் மன்றத்து மடலேறி

                                  நிறுக்குவென் போல்வல் யான் நீபடு பழியே”13

      (கபிலர், கலித்தொகை, குறிஞ்சிக்கலி, பா. எண் : 114, வரிகள் 4 – 5 )

என கூறுகின்றான்.  நான் வருந்துவதை  விட்டு  விட்டு இவ்வூரின்  கண்ணே மடலையேறி உனக்கு பழியை உண்டாக்கி விடுவேன் எனத் தலைவியை அச்சுறுத்துகின்றான் தலைவன். அன்பைப் பெறாத போதும் அதனைப் புரிந்து கொள்ளும் நிலையில் அவள் இல்லாதபோதும் மடலேற்றம் வெறும் அச்சுறுத்தலாகவே  அமையும்.

                தலைவனைப் புரிந்து கொள்ளுவதற்குரிய நிலையைத் தலைவி அடைந்தவுடன், தலைவனின் காதலை ஏற்று கைக்கிளையை, ஐந்திணைக்கு இதில் மடலேற்றம் என்பது தலைவன் தன்னை தலைவி புரிந்துகொள்ள வேண்டும் உரியதாக்கலாம். எனவே கைக்கிளை என்பது ஐந்திணைக் களவினை அடைவதின்  முதற்படியாக உள்ளது  என்பதற்கான    முயற்சியாகவே  அமைகிறது    எனலாம்.

3.7 பெருந்திணை மடலேற்றம்                  

                பல்வேறு வகையில் தலைவியைப் பெறும் முயற்சியில் ஈடுபடும் தலைவன்   இறுதியாக   மடலேறத்   துணிகின்றான்.

ஆணிப்பூனைள ஆவிரை எறுக்கோடு பிணித்தியாத்து

 மல்லலூர்  மருகின்கண்  இவட்பாடும்  இஃதொத்தான்  14

  (மேலது, பா.எண்:117 வரிகள்: 17 – 18  )

எனும்  கலித்தொகைப்   பாடலடிகள்   தலைவன் மடலேறித் தலைவியை வரைந்து   கொண்டமையைக்   குறிப்பிடுகிறது.

                தலைவன் மடலேற்றம் அறத்தன்மை உடையது என்பார் .சுப. மாணிக்கனார். பெருந்திணை என்பது பொருந்தாக் காமம் அல்லவென்று அவர் கீழ்வருமாறு விவரிக்கிறார். இற்செறிக்கப்பட்ட காதலியைத் தன் பெருமுயற்சியால் இல்லக்கிழத்தி ஆக்கினான்,  கற்பியற்படுத்தினான்.  அப்பெரு முயற்சிக்கு அவன் நாண் விட வேண்டியதாயிற்று. காதற்றொடர்பை மடலேறி ஊருக்கு  அறிவிக்க வேண்டியதாயிற்று. இவையெல்லாம்  மிகுசெயல் அல்லவா? ஆதலின்   பெருந்திணையாயிற்று   என்பார்    .சுப. மாணிக்கனார்.”15  (. சுப. மாணிக்கனார், தமிழ்க்காதல், – 257)

                தன் மகளுக்கு இன்ன தகுதியுடையோனைத் தான் மணம் முடிக்க வேண்டும் என்னும் பெற்றோரின் விருப்பத்திற்கு இங்கு இடமில்லாமல் போகிறது. தலைவனின் அன்பிற்குத் தலைவி உடன்பட்டவள்தான். அதனால் தலைவனின் மடலேற்றல் நிகழ்ச்சி சில சமயங்களில் தலைவியின் விருப்போடு நடக்கின்றது.

                ஒத்த அன்புடையார் வரைவு செய்து கொள்வதையே சங்க இலக்கியம் காட்டும் சமூகம் வரவேற்றது. மடலேறியதன் விளைவாகத் தலைவன் மீது கொண்ட அன்பு ஊருக்கும் புலப்படும் இத்தகைய அன்புடையேனுக்கு வரைந்து கொடுப்பதில் தவறில்லை என்பது சமூகத்தின் தீர்ப்பாக அமையும். எனவே பெற்றோருக்குப்   பிடிக்கவில்லை   என்றாலும்   அவனுக்குத் தன் மகளை வரைந்து கொடுத்தாக வேண்டும் என்னும் கட்டாயத்திற்கு  அவர்கள் உட்படுத்தப்படுகின்றனர்.  இவ்வாறு பெற்றோரை வருத்தி மடலேறித் தலைவியை எய்துவது பெருந்திணையின் பாற்பட்டது என்னும் .சுப. மாணிக்கனாரின்   கருத்து   ஏற்புடையதாக   உள்ளது.

                மடலேறி வரைந்து கொள்வது தலைவியின் மீது கொண்ட மிகுதியான அன்பினைப் புலப்படுத்துகிறது. எனவே மடலேறி வரைவது பெருந்திணையின் பாற்பட்டது. ஆனால்  தலைவன்   கொண்ட   அன்பு  பொருந்தாக்  காமம்  அல்ல  என்ற   முடிவிற்கு   வரலாம்.

4. முடிவுரை

                தலைவனின்   மடலேற்றச்   செயற்பாடுகளையும், கருத்தையும் வைத்துத் திணைச் சார்புடையதாக்கலாம். தலைவன்    தோழியிடத்து    மடலேறுவேன் எனக் கூறுவது ஐந்திணையோடு தொடர்புடையது. தலைவி மீது தலைவன் கொண்ட கைக்கிளை  தலைவி புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக  மடலேறுவேன்  எனக் கூறித் தன் களவு மிகுதியை வெளிப்படுத்துவதைச் சங்க இலக்கியம் காட்டுகிறது. எனவே தலைவன் இவ்வாறு தலைவியை அச்சுறுத்துவது  கைக்கிளை மடலேற்றம் எனலாம்.  தலைவன் மடலேறி வரைவது பெருந்திணை மடலேற்றம் எனப்படும். தலைவன் தலைவியரின் களவு வாழ்க்கையாக மாற்றுவதற்குச் சமூகம் துணை நிற்கிறது என்பதை தலைவியின் மடலேற்றம் நிரூபிக்கிறது. சங்க இலக்கிய  நூல்களில் மடலேறுதல்  தலைவன்     கையாளும்   மிகச் சிறந்த உத்திமுறையாகத்  திகழ்கிறது   என்பது   மறுக்க   முடியாது.  

துணைநூற்பட்டியல்                 

1. முனைவர் தட்சிணாமூர்த்தி. , தமிழர் நாகரிகமும் பண்பாடும் , யாழ் வெளியீடு, சென்னை. பதிப்பு – 2005

2. குறிஞ்சுச் செல்வர். டாக்டர் ,  கொ.மா. கோதண்டம்.,  திருவள்ளுவர் (இளைஞர்களுக்கான  எளிய உரை,  நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்,  சென்னை, ஆகஸ்ட் 2011.

3. .சுப.மாணிக்கம்.,     தமிழ்க் காதல், இயல்  சென்னை.

4. .புலியூர் கேசிகன்.,      நற்றிணை , முத்தமிழ் பதிப்பகம், சென்னை,  பதிப்பு – 2013.

5. புலியூர் கேசிகன்.,      கலித்தொகை, முத்தமிழ் பதிப்பகம், சென்னை , முதற்பதிப்பு – 2013

6. சண்முகம் பிள்ளை .மு., தொல்காப்பியம் பொருளதிகாரம்,  முதல் தொகுதி,  முல்லை நிலையம்,                                                                                       சென்னை. மறுபதிப்பு: 2004