4ஆம் ஆண்டில் நமது இலக்கியச்சுடர்
படைப்புகளை periyaswamydeva@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி இதழின் வளர்ச்சிக்கு உதவுங்கள்

வியாழன், 1 அக்டோபர், 2020

தாம்பூலத் தட்டுகள் - அக்ரி.கோ.ஜெயகுமார்

 


தாம்பூலத் தட்டுகள்

அக்ரி.கோ.ஜெயகுமார்,

மேனாள் வேளாண்மை இணை இயக்குநர்,

காந்திநகர், வேலூர் -6.

அலைபேசி எண்: 94869 38900.

 திருமண வாழ்க்கை என்பது அன்பு, உதவி, அரவணைப்பு, ஆறுதல், நம்பிக்கை போன்ற பல பகுதிகள் இணைந்தது ஆகும். இந்த திருமண வாழ்க்கையில் ஒன்றாக இணையப் போகும் இருவரின் திருமணத்திற்கு வருகை புரியுமாறு உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் மற்றும் சுற்றத்தில் உள்ள அனைவருக்கும் வேண்டுகோள் விடுக்கும் ஒரு அழைப்புக் கடிதம் தான் திருமண அழைப்பிதழ் ஆகும்.

சாதி, மத வேறுபாடின்றி அனைத்து சமூகத்தினராலும் கடைப் பிடிக்கக் கூடிய ஒரு திருமணச் சடங்காக திருமண அழைப்பிதழ் வழங்குவது என்பது நடைமுறையில் இருந்து வருகிறது. ஒவ்வொருவரும் தங்களுடைய வசதிக்கேற்றவாறு திருமண அழைப்பிதழை வடிவமைத்து வழங்குவார்கள். அவ்வாறு திருமண அழைப்பிதழை வடிவமைத்து, உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் மற்றும் சுற்றத்தில் உள்ள அனைவருக்கும் வழங்கும் போது வெறும் திருமண அழைப்பிதழ் மட்டுமில்லாமல், வெற்றிலை, பாக்கு, பூ, குங்குமம் உள்ளிட்டவைகளை வைத்து வழங்கும் பழக்கம் ஒரு சிலரிடம் இருக்கிறது. சிலர் திருமண அழைப்பிதழுடன் நாணயம் அல்லது ரூபாய் வைத்து வழங்குவார்கள். அவ்வாறு திருமண அழைப்பிதழ் கொடுக்கும் போது அவற்றை கைகளில் கொடுக்காமல் தாம்பூலத் தட்டுகளில் வைத்து கொடுப்பார்கள். 

தாம்பூலத்தட்டு ஏன்?

உதாரணமாக ஒரு சிலர் திருமண அழைப்பிதழ்களை மட்டுமல்ல, ஏதேனும் ஒரு பொருளைக் கடனாகக் கொடுக்கும் போதும் கூட தட்டில் வைத்துத் தான் கொடுப்பார்கள். அதைப் போல் ஒருவர் மற்றொருவருக்கு நெல், அரிசி முதலானவற்றை கொடுக்கும் போது முறத்தில் வைத்துத்தான் கொடுப்பார்கள். இவ்வாறு கொடுப்பவரும், வாங்குபவரும் பொருளாதார அளவில் உயர்ந்த நிலையில் இருந்தாலும், தாழ்ந்த நிலையில் இருந்தாலும் வேற்றுமை மனதில் இல்லை என்பதை காட்டுவதற்காகவே அவ்வாறு தட்டில் வைத்துக் கொடுத்தனர்.

மேலும் ஒரு பொருளைக் கொடுக்கும் போது வெறும் கையால் கொடுத்தால், கொடுப்பவரின் கை மேலேயும், வாங்குபவரின் கை கீழேயும் இருக்கும். இப்படிப்பட்ட ஏற்ற தாழ்வுகள் இருவருடைய மனதிற்குள்ளும் தோன்றக் கூடாது என்பதற்காகவே எந்த பொருளைக் கொடுத்தாலும், நம் முன்னோர்கள் தட்டில் வைத்துக் கொடுப்பதை பழக்கமாகக் கொண்டிருந்தனர்.

இதன் காரணமாகத்தான் திருமண அழைப்பிதழ்கள் கொடுக்கும் போது தட்டில் வைத்து கொடுக்கின்றனர். மேலும் திருமண அழைப்பிதழை தட்டில் வைத்துக் கொடுக்கும் போது அதனுடன் வெற்றிலை, பாக்கு, பூ, குங்குமம் உள்ளிட்ட மங்களகரமான பொருட்களை வைத்து வழங்குவது சிறப்பாகும்.