4ஆம் ஆண்டில் நமது இலக்கியச்சுடர்
படைப்புகளை periyaswamydeva@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி இதழின் வளர்ச்சிக்கு உதவுங்கள்

வியாழன், 1 அக்டோபர், 2020

ஆங்காங் தமிழர்களும் பேரறிஞர் அண்ணாவின் வருகையும் - முனைவர் சித்ரா

 


ஆங்காங் தமிழர்களும் பேரறிஞர் அண்ணாவின் வருகையும்

முனைவர் சித்ரா, ஆங்காங்

தமிழ் வளர்ச்சித் துறை, உலகத் தமிழாராய்சி நிறுவனம், பேரறிஞர் அண்ணா தமிழ் மேம்பாட்டு அறக்கட்டளை, இளந்தமிழர் இலக்கியப் பேரவை இணைந்து பேரறிஞர் 112ஆவது பிறந்த நாள் விழா – 112 தமிழறிஞர்கள் பங்கேற்ற மாபெரும் இணையவழி பன்னாட்டு அரங்கில் வழங்கிய உரை

திரை கடலோடியும் திரவியம் தேடு, யாதும் ஊரே யாவரும் கேளீர் என்ற தமிழ் ஆன்றோர் மொழிகளுக்கு ஏற்ப, தமிழன் பல ஆயிரம் ஆண்டுகளாக, சொந்த மண்ணை செழிப்புடன் வைத்து, மிகுந்ததை மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து, சமூகத்திற்குத் தேவையான பொருள்களை, பிற தேசங்களில் இருந்து இறக்குமதி செய்து, உலகத்திற்கு உள்நாட்டு வாணிபத்திலும் சரி, கடல் வாணிபத்திலும் சரி, மிகச் சிறந்து விளங்கி, தங்கள் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதில் தமிழனுக்க நிகர் தமிழனே.

உலகின் முதல் நாகரிகத்திற்கு வித்திட்ட தமிழன், தன்னுடைய கடலோடும் திறத்தால், தமிழகத்தின் கிழக்கே ஆஸ்திரேலியா வரை இருக்கும் நாடுகளாயினும் சரி, தமிழகத்தின் மேற்கே அமெரிக்கா வரை இருக்கும் நாடுகளாயினும் சரி, பல நாடுகளிலும் தன்னுடைய வணிக யுத்திகளை பயன்படுத்தி வாழ்ந்தது மட்டுமல்லாமல், தங்களுடைய கலை, கலாச்சாரம் மற்றும் பண்பாட்டையும் தான் சென்ற நிலங்களிளெல்லாம் பதிவு செய்யத் தவறவில்லை என்றே சொல்ல வேண்டும். உலகிலே இருக்கும் இருநூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில், அதிக அளவில் புலம் பெயர்ந்து வாழும் குடி நம் தமிழ்க்குடியாகத் தான் இருக்கும் என்பதை, நாம் செல்லும் நாடுகளிலெல்லாம் தமிழர்களைப் பார்ப்பதிலிருந்தே அறியலாம். பல நிலங்களின் மொழிகளில் தமிழ் வார்த்தைகள் மலிந்து இருப்பதாலும் அறியலாம்.

அப்படி புலம் பெயர்ந்து தமிழர்கள் வாழும் நிலப்பரப்பில் ஒன்று தான் ஆங்காங். தமிழருக்கும் சீனாவிற்கும் பன்னெடுங்காலமாக வணிகத் தொடர்புகள் இருந்ததற்கான தரவுகள் பல உள்ளன. ஆயினும் கற்க கடினமான சீன மொழியின் காரணமாக, இந்நிலத்தில் அதிகமான தமிழர்கள் குடியேறவில்லை என்பது என் கருத்து. அமெரிக்காவில் இருக்கும் தமிழர் எண்ணிக்கையைக் காட்டிலும் சீனாவிலும் ஆங்காங்கிலும் இருப்போர் எண்ணிக்கை மிகவும் குறைவு என்றே நான் எண்ணுகிறேன்.

1896ஆம் ஆண்டு, ஆங்கிலேயர்கள் சீனாவிடம் ஆங்காங்கை, 99 ஆண்டுகள் குத்தகைக்கு எடுத்தது. தனக்குப் பிடித்த வகையில் ஆங்காங்கை மாற்றி, அதை ஒரு சர்வதேச நகரமாக உருவெடுக்கும்படி செதுக்கினார்கள் என்றே சொல்ல வேண்டும். இந்தியாவின் சுதந்திரத்தின் போது, துண்டாடப்பட்ட இந்தியாவிலிருந்து, வடக்கிலிருந்து பலரும் ஆங்காங்கில் குடியேறினார்கள். பின்னர் சர்வதேச வங்கிகள் தொடங்கப்பட்டன. அதன் அலுவலர்கள் அங்கு பணி நிமித்தமாக தங்க ஆரம்பித்தார்கள். அப்போது தான் பல வங்கி அலுவலர்கள், தமிழ் பேசுபவர்கள் ஆங்காங் மண்ணிற்கு வந்திறங்கினார்கள். பர்மாவில் நடந்த புரட்சியின் போது, பல தமிழர்கள் புலம் பெயர்ந்து ஆங்காங் மண்ணில் கால் பதித்தனர். வணிக நோக்கில் தமிழர்கள் பலரும் வந்து சேர்ந்தனர். தங்கள் குடும்பங்களுடன் வசிக்க ஆரம்பித்ததும், தங்கள் மண்ணின் நினைவுகளை நெஞ்சில் தாங்கிக் கொண்டு, சீனர்களும், மொழி காரணமாக அதிகம் கலக்க முடியாமல், தன் தோழமை உறவுகளை தேடிச் சென்று, கூடி மகிழ்ந்தனர்.  விடுமுறை நாட்களில் பொழுதைக் கழிக்க சுற்றுலா சென்றனர். கூட்டங்களைக் கூட்டி, கலந்துரையாடினர். தமிழ்த் திரைப்படங்களைக் காண முடியாமல் தவித்த, திரைப்பட விரும்பிகள், தமிழகத்திலிருந்து படங்களை வரவழைத்து திரையிட முயன்றனர். அப்போது உருவாகியதே தமிழ்ப் பண்பாட்டுக் கழகம். அரசின் அனுமதியுடன் கழகம் 1967ல் பதியப்பட்டது. அதன் முதல் தலைவராக காலஞ்சென்ற திரு புகாரி ஐயா அவர்கள், தேர்வு செய்யப்பட்டார். அப்போது தான் தமிழ்நாட்டில் பேரறிஞர் அண்ணாவும் முதல் அமைச்சராகப் பொறுப்பேற்றார்.

தமிழுக்கு பெருமை சேர்க்கும் மைந்தனாக திகழ்ந்த அண்ணா அவர்களைப் பற்றி, ஆங்காங்கில் வாழ்ந்த தமிழர்கள் அனைவரும் அறிந்திருந்தனர். அவரது பற்றாளர்கள் பலரும் அங்கு இருந்தனர்.

அந்தச் சமயத்தில் தான், அண்ணா அவர்கள் அமெரிக்காவின் யேல் பல்கலைக்கழகத்தில் சுப் பெலோசிப் (Chubb Fellowship), சுப் கூட்டிணக்க உறுப்பினராக, அமெரிக்கர் அல்லாத முதல் வெளிநாட்டவர் என்ற சிறப்புடன் தெரிவு செய்யப்பட்டு, அந்த விருதினைப் பெற அமெரிக்காவிற்கு அழைக்கப்பட்டார். அதைப் பெற்று அமெரிக்காவிலிருந்து திரும்பும் போது, ஆங்காங்கின் வழியாக, ஒரு நாள் தங்கி, அவர் செல்வதை, நம் ஆங்காங் தமிழ் பற்றாளர்கள் அறிந்தார்கள். விடுவார்களா வாய்ப்பை? அவரை வரவேற்று உபசரிக்க, வேண்டிய ஏற்பாடுகளைச் செய்தனர். தமிழ்ப் பண்பாட்டுக் கழகத்தின் முதல் தமிழக விருந்தினராக தமிழக முதலமைச்சர், பேரறிஞர் அண்ணா அவர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டது, கழகத்தின் ஒரு மைல்கல் நிகழ்வாக அமைந்தது. கழக உறுப்பினர்களைச் சந்தித்தார். வெளி நாட்டு வாழ் மக்கள், தமிழர்களின் வாழ்க்கை முறைகள் எடுத்துச் சொல்லப்பட்டது. வெளி நாடுகளில் தமிழர்கள் சேமிக்கும் பணத்தை, இந்தியாவிற்கு எளிதில் எடுத்துச் செல்வதற்கும், முதலீடு செய்வதற்கும் வழிவகை செய்து தர வேண்டும் என்ற கோரிக்கையை வைத்தனர். அதைக் கேட்டு, அண்ணா அவர்கள், உடனடியாக அதற்கு தீர்வு காண இயலாது என்றும், அப்போது நிதி அமைச்சராக இருந்த மொரார்ஜி தேசாய் அவர்களிடம் அதைப் பற்றி கலந்து பேசி முயற்சிகள் எடுக்க முயல்வதாகவும் கூறினாராம்.

இந்த நிகழ்வினை எங்களிடம், தமிழ்ப் பண்பாட்டுக் கழகத்தின் அப்போதைய செயலாளராக இருந்த காலஞ்சென்ற திரு. முகமது யூனுஸ் ஐயா சொல்லக் கேட்டதை, இன்று எனக்கு பேசும் வாய்ப்பு கிட்டியது. முதலமைச்சர் அண்ணா அவர்கள் ஆங்காங் வந்து, தமிழர்களைச் சந்தித்த நிகழ்வு தமிழகத்தின் தலைமகன் தமிழ்ப் பண்பாட்டுக் கழகத்தின் முதல் விருந்தினராக இருந்ததைப் பதிவு செய்துள்ளனர் ஆங்காங் தமிழர்கள்.

மெட்ராஸ் என்றிருந்த நிலத்திற்கு, தமிழ் நாடு என்ற பெயரைப் பெற்றுத் தந்து, தமிழ் தாய்க்கு தன் எழுத்துக்களால் அணி சேர்த்து, தமிழ் மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தும் பொருட்டு தலைமை ஏற்று, பல திட்டங்களை வகுத்து, தமிழ்த் தாயின் மகனாக விளங்கியவர் பேரறிஞர் அண்ணா.