4ஆம் ஆண்டில் நமது இலக்கியச்சுடர்
படைப்புகளை periyaswamydeva@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி இதழின் வளர்ச்சிக்கு உதவுங்கள்

வியாழன், 1 அக்டோபர், 2020

குறுந்தொகையில் குறிஞ்சித் திணையின் காட்சிப் பின்புலன்கள் - முனைவர் மு.லோகநாயகி

 


குறுந்தொகையில் குறிஞ்சித் திணையின் காட்சிப் பின்புலன்கள்

முனைவர் மு.லோகநாயகி,

உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை,

இராஜா நந்திவர்மன் கலை அறிவியல் கல்லூரி,

தெள்ளார்– 604406.

ஆய்வுச் சுருக்கம்

                இயற்கை காட்சியோடு மாந்தர்களின் வாழ்க்கையை இணைத்து கூறும் கவின்மிகு காட்சியை ஆராயப்படுகிறது. நடப்பியல் வாழ்வையும் இயற்கைக் காட்சியும் புலவர் ஆராய்ந்துள்ளதைக் காண முடிகிறது. குறிஞ்சி நிலத்தை தலைவன் தலைவியின் வாழ்க்கைக்கு எவ்வாறு பின்புலமாக அமைகிறது என்பதை ஆராய்கிறது.

முக்கியச்சொற்கள்

                கடமா, வருடை, கல்லென்னும் ஓசை, அற மலர்ந்த, ஊதை, நுளம்பு.

முன்னுரை

                மனிதன் உயிர் வாழத் தொடங்கிய காலம் முதல் இன்று வரை இயற்கையோடியைந்து வாழ்கிறான். இயற்கை ஐம்பெரும் பூதங்களாகப் பல நன்மைகளைச் செய்கிறது. கற்காலம் முதல் தற்காலம் வரை ஏன் எதிர் காலத்திலும் கூட இயற்கையோடு தான் மனிதன் வாழ்ந்தாக வேண்டும். சங்க இலக்கியம் இயற்கை வாழ்வினை படம்பிடித்துக் காட்டும் அழகிய பெட்டகமாகும். கற்பவரின் கற்பனையை அந்த இடத்திற்கே அழைத்துச் செல்லும் தன்மையுடையது. இயற்கை காட்சியோடு மாந்தர்களின் வாழ்க்கையை இணைத்து கூறும் கவின் மிகு நூல் குறுந்தொகை ஆகும். இந்த குறுந்தொகையில் குறிஞ்சி நிலத்தின் இயற்கை காட்சியை அதனோடு இயைந்த தலைவன் தலைவியின் வாழ்க்கைக்கு காட்சிகள் எவ்வாறு பின்புலமாக அமைகின்றன என்பதை இக்கட்டுரை ஆராய்கிறது.

காட்சிப் பின்புலம்

                பழந்தமிழர் இயற்கை வாழ்வு வாழ்ந்த போதிலும் இயற்கையே பாடிக்கொண்டிருக்கவில்லை. அவர்கள் இயற்கையை வருணித்த இடங்களில் மக்களின் வாழ்வே பாட்டின் உரிப்பொருளாக விளங்குகின்றன. இயற்கை இவ்வாழ்வுக்கு பின்னணியாக முதற்பொருளாகவும் கருப்பொருளாகவும் அமைந்துள்ளது.

                நடப்பியல் வாழ்வில் கண்ட இயற்கைக் காட்சிகளின் தாக்கத்தை சங்கப் புலவர்களின் படைப்புகளில் காணலாம். ஓங்கியுயர்ந்த மரங்கள், பறவைகள், பாறைகள், செடிகள், விலங்கினங்கள், பள்ளத்தாக்குகள் இன்னப்பிறவும் இயற்கையின் காட்சிகள் பின்புலமாகும், ஒவ்வொரு இலக்கியமும் இயற்கைக் காட்சித் தோன்றும் வகையில் படிப்போருக்கு இன்பம் பயக்கிறது, இன்ப உணர்ச்சியை மிகுதிப்படுத்த வேண்டித் தலைவனும் தலைவியும் ஒருவரையொருவர் காணும் நிகழ்ச்சிக்கு பின்புலகாட்சியைக் கூறும்போது,

                சந்தனமும் சண்பகமும் தேமாவும் தீம்பலவும் ஆசினியும் சோகமும் கோங்கும் திலகமும் நறவும் நந்தியும் மாதவியும் மல்லிகையும் மௌவலொடு மணங்கமழ்ந்து பாதிரியும் பாறு ஞாலும் பைங்கொன்றையொடு பிணிய வீழ்ந்து பொரிப்புன்கும் புன்னாகமும் முருக்கொடு முகை சிறந்து வண்டறைந்து தேனார்ந்து விரிக்குயில்கள் இசைபாடத் தண்டென்றல் இடைவிடராய்த் தனியவரை முனிவு செய்யும் பொழிலது நடுவண் [.வே.சா. குறுந்தொகை, உரை, ,26] என்று காணும் காட்சியைப் பின்புலமாக கூறுவது இங்கு எண்ணத்தக்கது.

நாடாளும் வேந்தர் இயற்கை இன்பம் நுகர வேண்டித் துணையோடு மலைவளம் காணச் செல்லுதல் உண்டு, பொழிலினிடையில் ஆடியும் பாடியும் மகிழ்ந்திருந்தனர், கானவர் இயற்கை செல்வங்களை மனம் விரும்பி மன்னருக்கு வழங்கினர் [நா.ஜெயபிரகாசு, சிலப்பதிகாரம் காட்டும் தமிழக சமுதாய நிலை, .60]

மலையைக் காட்சிப் பின்புலமாக அமைத்தல்

                மலையின் தோற்றத்தினை உவமைகளால் புலவர்கள் புனைந்துரைத்துள்ளனர். பெருமலைகண் மட்டுமின்றி சிறு குன்றுகளும் அதில் உள்ள மலையருவிகளும் சுனைநீர்களும் காட்சிப்படுத்தியுள்ளது சிறப்புக்குரியதாகும்,

ஒலிவெள் அருவி ஓங்கு மலைநாடன்

சிறுகட் பெருங்களிறு வயப்புலிதாக்கித்

தொல்முரண் சொல்லும் துன் அருஞ்சாரல்

நடுநாள் வருதலும் வரூஉம்

வடுநாணலமேதோழி! - நாமே [குறுந், பா.88]

ஒலிக்கின்ற வெண்ணிறமான அருவிகளையுடைய உயர்ந்த மலைகள், சிறிய கண்ணையுடைய பெரிய களிறு, வலிமையையுடைய புலியைத்தாக்கித் தன்னுடைய பழைய ஆற்றலை இழந்ததற்கு இடமாக விளங்கும் என்று காட்சியைப் பின்புலமாகக் கூறுவதைக் காணலாம்.

                காட்டில் உள்ள மயிலானது பாறையில் ஈன்றமுட்டைகளைக் கருங்குரங்கின் விளையாடும் குட்டிகள், உருட்டி விளையாடுவதற்குரிய இடம் மலை என்று கூறுவதை,

                                    கான மஞ்ஞை அறைஈன்முட்டை

வெயில் ஆடு முசுவின் குருளை உருட்டும்

குன்ற நாடன் கேண்மை [குறுந், பா.38]

என்று மலையைப் பின்புலகாட்சியாக கூறுவதைக் காணலாம்,

நீடு இலை விளை தினைக் கொடுங் கால் நிமிரக்

கொழுங் குரல் கோடல் கண்ணி செழும் பல

பல்கிளைக் குறவர் அல்கு அயர் முன்றில்

குடக் காய் ஆசினிப் படப்பை நீடிய

பல் மர உயர் சினை மின்மினி விளக்கத்து

செல் மழை இயக்கம் காணும் (நற்றிணை, பா.44, வரி 6 – 7)

என்ற பாடல் வரிகளில் கொல்லையில் நீண்ட இலையையுடைய முற்றிய கதிரைத் தாங்க மாட்டாமல் சாய்ந்த தினையின் வளைந்த தாள் நிமிர்ந்து நிற்குமாறு அவற்றின் கொழுவிய கதிர்களைக் கொய்து கொண்டு போவதைப் பல கூட்டமுடைய குறவர்கள் கருதுவர். குறவர்கள் குடம் போன்ற காயைக் கொண்ட ஆசினிப் பலாவையுடைய தோட்டத்தில் நீண்ட பலவாய மரங்களின் உயர்த கிளைகளில் உள்ள மின்மினியை விளக்காகக் கொண்டு வானிற் செல்லுகின்ற மழை முகிலின் இயக்கத்தைக் காணுகின்ற நல்ல மலை என மலையைப் பின்புலக்காட்சியாக தலைவனின் நாட்டைக் கூறுவது சிறப்புக்குரியதாகும்.

கருங்கால் வேங்கை வீஉகு துறுகல்

இரும்புலிக் குருளையின் தோன்றும் காட்டிடை

எல்லி வருநர் களவிற்கு

நல்லை அல்லைநெடுவெண்நிலவே  [குறுந், பா.47]

கரிய அடிப்பகுதியையுடைய வேங்கை மரத்தின் மலர்கள் உதிர்ந்து காணப்படும் பாறை, பெரிய புலியின் குட்டி போலக் காட்சியளிக்கும் என்று மலையை காட்சிப்படுத்துவதைக் காணலாம்.

கூதிர்கால காட்சியைப் பின்புலமாக கூறுதல்

                பெரும்பொழுதாகிய கூதிர்காலமும் சிறு பொழுதாகிய யாமமும் குறிஞ்சிக்குரிய பொழுதுகளாகும், இதனை,

அவற்றுள்

கூதிர் யாமம் முன்பனி என்று இவை

ஓதிய குறிஞ்சிக்கு உரிய ஆகும்  [அகப்பொருள் விளக்கம், நூ,13]

என்று அகப்பொருள் விளக்கம் கூறுகிறது, கூதிர் கால காட்சியை குறிஞ்சிப்பாட்டு விளக்கமாக கூறுவதை,

                மான் கூட்டங்கள் மரங்களில் கீழ்திரண்டு கூடும். பசுவின் திரள், தம் கன்றுகளை அழைக்கும் குரலவாய் ஊர் மன்றுகளில் நிறையப்புகும். ஊதுகின்ற கொம்பு போல, வளைந்த வாயினையுடைய அன்றில் பறவைகள் உயர்ந்த பெரிய பனையின் உன் மடலில் இருந்து தம் பேடுகளை அழைக்கும். பாம்புகள் இரைதேடிச் செல்வதற்காகத் தம்மிடம் உள்ள மாணிக்க மணிகளை உமிழும். அந்தணர்கள் அந்திக் காலத்துச் செய்யும் கடன்களை இயற்றுவர்.

மான்கணம் மரமுதல் தெவிட்ட ஆன்கணம்

கன்றுபயிர் குரல மன்றுநிறை புகுதர

ஏங்கு வயிர் இசைய கொடுவாய் அன்றில்

ஓங்கு இரும் பெண்ணை அகமடல் அகவ,

பாம்பு மணி உமிழ பல்வயின் கோவலர்

ஆம்பல் அம் தீம்குழல் தெள்விளி பயிற்ற

ஆம்பல் ஆய் இதழ் கூம்புவிட, வளமனைப்

பூங்தொடி மகளிர் சுடர்தலைக் கொளுவி

அந்திஅந்தணர் அயர கானவர் (குறிஞ்சிப்பாட்டு, வரி 217  - 225)

செல்வத்தையுடைய மனைகளில் பொலிவு பெற்ற தொடியை அணிந்த மகளிர் விளக்கினை அவ்விடத்தில் கொளுத்தி, அந்தியில் செய்யப்படும் செயல்களைப் புரிவர். மேகம் பெரிய மலையைச் சூழ்ந்து கொண்டு இடியேற்றினை முழங்கும் என கூதிர் கால காட்சியைப் பின்புலமாக கூறுவது இதற்குச் சான்றாக அமைகிறது. இந்த கூதிர் காலகாட்சியை,

சிறை பனி உடைத்த சேயரி மழைக்கண்

பொறைஅருளோயொடு புலம்புஅலைக்கலங்கி

பிறரும் கேட்குநர் உளர்கொல்? உறைசிறந்து

ஊதை தூற்றும் கூதிர் யாமத்து

ஆன் நுளம்பு உலம்பு தொறுஉளம்பும்

நாநவில் கொடுமணி நல்கூர்குரலே [குறுந், பா,86]

வாடைக் காற்றின் மிகுதியால் மழைத்துளிகள் வீசித் தூவப்படுகின்ற கூதிர் காலத்தில் யாமப் பொழுதில் மாட்டு ஈ ஒலிக்குந்தோறும் அது தலையை அசைப்பதால் அதன் கழுத்தில் உள்ள வளைவினையுடைய மணியின் நாக்கு மெல்லிய ஓசையுடன் ஒலிக்கும் இமைகளில் தடுக்கப்பட்ட நீர் உடைந்து துளித்துளியாக விழுகின்ற செம்மையான கோடுகளையும் குளிர்ச்சியையும் உடைய கண்ணோடும் என்று கூதிர் கால காட்சியை பின்புலமாகக் கூறுவதைக் காணலாம்,

குறிஞ்சி நிலத்தை காட்சிப் பின்புலமாக அமைத்தல்

                மலையும் மலை சார்ந்த இடமும் குறிஞ்சியாகும். குறிஞ்சி நிலத்தில் நடக்கும் இயற்கை காட்சிகளை தலைவன் தலைவிக்கு காட்சி பின்புலமாக அமைத்து பாடியுள்ளதைக் காணலாம். சான்றாக,

கோடல் எதிர்முகைப் பசுவீ முல்லை

நாறு இதழ்க் குவளையொடு இடையிடுபு விரைஇ

ஐது தொடை மாண்ட கோதை போல

நறிய நல்லோள் மேனி

முறியினும் வாய்வது முயங்கற்கும் இனிதே  [குறுந், பா,62]

என்ற பாடலைக் கூறலாம். காந்தள் மலரையும் தோற்றிய அரும்புகளிலிருந்து உண்டாக்கிய செவ்வி மலர்களாகிய முல்லைப் பூக்களையும் மணம் கமழும் இதழ்களையுடைய குவளை மலர்களோடு இடையிடையே பொருந்துமாறு கலந்து அழகாகத் தொடுத்தலால் மாட்சிமை மலையை போல என்று தலைவன் தலைவி சந்திக்கும் இடமாகிய மலையை காட்சி பின்புலமாக வைத்து பாடுவதை அறியலாம்,

செவ் வரைச் சேக்கை வருடைமான் மறி

கரை பொழி தீம்பால் ஆரமாந்தி

பெருவரை நீழல் உகளும் நாடன்

கல்லினும் வலியன்  - தோழி!

வலியன் என்னாது மெலியும் என் நெஞ்சே  [குறுந், பா.187]

என்ற பாடலில் உயர்ந்து விளங்கும் மலைப் பக்கத்தில் தங்குதலையுடைய வருடை மானின் குட்டி, தன் தாயின் மடியில் பொழிந்த இனிய பாலை வயிறு நிறைய குடித்து பெரிய மலை பக்கத்தில் உள்ள நிழலில் துள்ளி விளையாடும் என குறிஞ்சி நிலத்தை தலைவன் வசிக்கும் நாட்டிற்கு பின்புலகாட்சியாக கூறுவதைக் காணலாம்.

கல்லென் கானத்துக் கடமாஆட்டி

எல்லும் எல்லின்று ஞமலியும் இளைத்தன

செல்லல்  - ஐஇய! உது எம் ஊரே

ஓங்குவரை அடுக்கத்துத் தீம்தேன் கிழித்த

குவையுடைப் பசுங்கழை தின்ற கயவாய்ப்

பேதை யானை சுவைத்த

கூழை மூங்கில் குவட்டிடையதுவே [குறுந், பா.179]

கல்லென்னும் ஓசையையுடைய காட்டின் கண், கடமானை வேட்டையில் அலைத்துப் பகற்பொழுது கழிந்தது. அதனை துரத்திச் சென்ற வேட்டை நாய்களும் இளைத்தன, உயர்ந்த மலைப்பக்கத்தில் இனிய தேனடைகளைக் கிழித்த தொகுதியையுடைய பசிய மூங்கில்களின் குருத்தைத் தின்ற பெரிய வாயினையுடைய அறியாமையுடைய மலைக் குவடுகளுக்கு இடையே உள்ள பள்ளத்தில் அமைந்துள்ளது எம் ஊராகும் என்று தலைவனின் ஊரைப் பற்றிக் கூறும் போது மலை காட்சிபின்புலமாக அமைத்து பாடியுள்ளது சிறப்புக்குரியதாகும்.

எதிரெதி ரோங்கிய மால்வரை யடுக்கத்

ததிரிசை யருவிதன் அஞ்சினை மிசைவீழ

முதிரிணர் ஊர் கொண்ட முழவுத்தாள் எரிவேங்கை

வரிநுதல் எழில்வேழம் பூநீர்மேல் சொரிதரப்

புரிநெகிழ் தாமரை மலரும் கண் வீறெய்தித்

திருநயத் திருந்தன்ன தேங்கமழ் விறல்வெற்ப (கலித், பா.44, வரி 2 - 7)

இருபுறங்களில் மலையிலிருந்து வீழ்கின்ற அருவிநீர் கிளைகளின் மீது பட்டு வேங்கை மலர்கள் உதிர்ந்தன. இதில் இருபக்க மலர்கள் இரு யானைகளையும், இரு மலைகளிலிருந்து விழும் அருவிகள் அந்த யானைகள் சொரிகின்ற பூ நீராகவும் மலையிடை நின்ற வேங்கை மரம் திருமகளாகவும் காட்சிப்படுத்தியிருப்பதைக் காணலாம்.

அருவிப் பரப்பின் ஐவனம் வித்திப்

பருஇலைக் குளவியொடு பசுமரல் கட்டும்

காந்தள்அம் சிலம்பில் சிறுகுடி பசித்தென

கடுங்கண் வேழத்துக் கோடு நொடுத்துஉண்ணும்

வல்வில் ஓரி கொல்லிக் குடவரைப்

பாவையின் மடவந்தனளே [குறுந், பா,100]

காந்தளை இயற்கை வேலியாக உடைய இச்சிறு குடியில் வாழ்பவர். அருவியை உடைய பரந்த நிலத்தில் மலை நெல்லை விதைப்பர். அவற்றிடையே களையாக வளர்ந்துள்ள பருத்த இலையையுடைய காட்டு மல்லிகையையும் பசிய மலரையும் பறித்து எறிவர். தாங்கள் உணவின்றிப் பசிப்பாராயின் வன்கண்மையையுடைய யானையின் கொம்பை விற்று அதன் விலையால் பெறப்படும் உணவை உண்டு வாழ்பவர் என குறிஞ்சி மக்களுக்கு குறிஞ்சி நிலத்தை பின்புல காட்சியாக அமைத்து பாடியுள்ளதைக் காணலாம்,

வயங்குவென் அருவிகுன்றத்துக் கவாஅன்

கயந்தலை மடப்பிடி இனன் ஏமார்ப்ப,

புலிப்பகை வென்ற புண்கூர் யானை

கல்லகச் சிலம்பில் கைஎடுத்து உயிர்ப்பின்

நல்கிணர் வேங்கை நறுவீ கொல்லன்

குறுகுஊது மிதிஉலைப் பிதிர்வின் பொங்கி

சிறுபல் மின்மினி போல பலஉடன்

மணிநிற இரும்புதல் தாவும் நாப (அகநானூறு, பா.202, வரி 1 - 8)

என்ற பாடல் விளக்குகிறது. விளங்கும் பெண்ணிற அருவியினையுடைய மலைப்பக்கத்திலே மென்மையான தலையையுடைய இளைய பெண் யானை தன் இனத்துடன் இன்புறுமாறு, களிறானது தன் பகையாகிய புலியைப் போரிட்டு வென்றது. புலியால் பொறப்பட்ட புண் மிகுந்த யானை, கற்களைத் தன்னகத்தே கொணட மலையில் கிடந்து தன் கையை உயர்த்திப் பெருமூச்சுவிட்டது. அம்மூச்சு காரணமாக வேங்கை மரத்தின் பூக்கள் சிதறி விழுந்தன. விழுந்த பூக்கள், கொல்லன் துருத்தியை மிதித்து ஊதும் உலைக் களத்தினின்றும் தெறித்து எழும் தீப்பொறி போல எழுந்து, பலவாகிய சின்னஞ்சிறு மின்மினிப் பூச்சிகளைப் போல, நீல மணி போன்ற நிறத்தினைக் கொண்ட பெரிய புதரில் ஒரு சேரப் பரவி விழும். அத்தகைய தன்மையினைக் கொண்ட நாட்டையுடைய தலைவன் என தலைவனின் நாட்டை குறிஞ்சி நிலக் காட்சியைப் பின்புலமாக அமைத்திருப்பது சிறப்புக்குரியதாகும்.

அரும்பு அறமலர்ந்த கருங்கால் வேங்கை

மேக்கு எழு பெருஞ்சினை இருந்த தோகை

பூக்கொய் மகளிரின் தோன்றும் நாடன் [குறுந், பா.26]

அரும்புகள் ஏதுமின்றி மலர்ந்த கரிய அடிப்பகுதியை உடைய வேங்கை மரத்தின் மேற்பகுதியில் வளர்ந்துள்ள பெரிய கிளைகளில் தங்கியுள்ள மயிலானது மலர்களைக் கொய்யும் இளமகளிரைப் போல காட்சியளிக்கும் என தலைவியின் அழகைக் கூற மயிலை பின்புல காட்சியாக அமைத்து பாடியுள்ளதை அறியமுடிகிறது.

முடிவுரை

                சங்க அக இலக்கியங்கள் இயற்கை காட்சிகளை அடிப்படையாக கொண்டது. இன்ப உணர்ச்சியை மிகுதிப்படுத்த வேண்டித் தலைவனும் தலைவியும் ஒருவரையொருவர் காணும் நிகழ்ச்சிக்கு பின்புல காட்சியை எடுத்துக் கூறும் முறையை சங்கப் புலவர்கள் கையாண்டுள்ளதை அறியமுடிகிறது. காதலுக்கு பின்னணியாகவும் துணையாகவும் இயற்கை காட்சியே பின்புலமாக அமைந்துள்ளது குறுந்தொகை மூலம் தெரியவருகிறது. நிலத்திற்குரிய கருப்பொருளே காட்சிப்பின்புலமாக அமைந்துள்ளது சிறப்புக்குரியதாகும்.

 துணைநூற்பட்டியல்

1.     .வே.சா, குறுந்தொகை மூலமும் உரையும்,அண்ணாமலைப் பலைக்கழக வெளியீடு, மு..1983

2.     செயபால்.இரா (.), அகநாறூறு, மூலமும் உரையும், நியூசெஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட், 41,பி சிட்கொ இண்டஸ்டிரியல் எஸ்டேட், அம்பத்தூர், சென்னை-98.

3.     நாகராசன்.வி (.), குறுந்தொகை (மூலமும் உரையும்) நியூசெஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட், 41-பி, கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட், அம்பத்தூர், சென்னை-98.

4.     நாகராசர்.வி, பத்துப்பாட்டு (மூலமும் உரையும்) இரண்டாம் தொகுதி, நியூசெஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட், 41,பி சிட்கொ இண்டஸ்டிரியல் எஸ்டேட், அம்பத்தூர், சென்னை-98.

5.     நாற்கவிராசர் நம்பி, அகப்பொருள் விளக்கம், திருஞானசம்பந்தம்., கதிர் பதிப்பகம், திருவையாறு-613204.

6.     பாலசுப்பிரமணியன்., கலித்தொகை (மூலமும் உரையும்), நியூசெஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட், 41,பி சிட்கொ இண்டஸ்டிரியல் எஸ்டேட், அம்பத்தூர், சென்னை-98.

7.     விசுவநாதன்.(.), அகநானூறு (மூலமும் உரையும்), நியூசெஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட், 41,பி சிட்கொ இண்டஸ்டிரியல் எஸ்டேட், அம்பத்தூர், சென்னை-98.