4ஆம் ஆண்டில் நமது இலக்கியச்சுடர்
படைப்புகளை periyaswamydeva@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி இதழின் வளர்ச்சிக்கு உதவுங்கள்

வியாழன், 1 அக்டோபர், 2020

பொறந்த வீடு - முனைவர் கிட்டு முருகேசன்

 


பொறந்த வீடு

முனைவர் கிட்டு முருகேசன்

உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை

டாக்டர் என்.ஜி.பி. கலை அறிவியல் கல்லூரி

கோயம்புத்தூர்  – 641 048

அலைபேசி : 9751809470, 8072794623

மின்னஞ்சல் : muruganthirukkural@gmail.com

 

என்னதாண்டி பண்ணுவ! ஒரு இடத்துக்கு போகணும் சீக்கிரம் கெளம்புன்னா கேக்குறியா? என்னமோ நீ வச்சதுதான் சட்டம்னு பண்ணிக்கிட்டு இருக்கியே, அப்போ நாங்கல்லாம் ஒன்னமாதிரியா நேரத்த வீனடிச்சோம். என்னமோ கண்ணாடிய பாத்தமேனிக்கே இருக்க.

ஓம் வயசுல நானும் மினிக்கிக்கிட்டே திரிஞ்சவதான். எப்போ உன் அப்பனுக்கு வாக்கப்ட்டேனோ! அப்பவே எல்லாம் முடிஞ்சுபோச்சு. அத இப்போ நெனச்சு என்ன பிரயோசனம். சரி டி வா! உங்க அப்பன் வேற சத்தம் போட்டுக்கிட்டே இருக்கு.

வெள்ள வேட்டியும் சட்டையுமா சும்மா புது மாப்புள்ள கணக்கா வண்டியில உக்காந்து இருக்காரு கருப்பையா.  மாமனார் வீட்டுக்கு போரதுன்னாவே ஒரு கெத்துதான் போங்க;

பொறந்த வீட்டுக்குப் போரங்கிர மகிழ்ச்சியில வசந்திக்கும் தலைகாலு புரியல, அதான் மகள இந்த வேரட்டு வேறட்டுரா.

இருங்கம்மா வர்றேன். சும்மா கத்திக்கிட்டே இருக்க என்று அம்மாவின் வேகத்தைச் சற்றே அதிகார வார்த்தையில் தனித்தாள் பவித்ரா.

நீயும் வர்றேன் வர்ரேன்னு சொல்லிகிட்டுடே இருக்கே; வந்தபாடத்தான் காணும். ஒனக்குப் பின்னே பொறந்த ஒம் தம்பியைப் பாரு அப்பனுக்கு முன்னால கெளம்பி வண்டியில ஒக்காந்து இருக்கான், என்றபடியே தலையில் இருந்த சீப்பை கையில் எடுத்து வீட்டின் கூரை ஓரமாகச் சொருகி வைத்தாள் வசந்தி.

வெளியே வந்த பவித்ரா சும்மா சாமி செல கணக்கா நிக்குறாள். அவளைப் பார்த்த கருப்பையா வண்டியை ஸ்டேண்டு போட்டு நிறுத்திட்டு அருகே வந்து, என்னடி வசந்தி எங்கே இருக்கே,  இங்கே வந்து பாருடி எம் புள்ளைய. ஊரு கண்ணு பட்டாலும் படும். உங்க அம்மா வீட்டுக்குப் போனதும் சுத்திப் போடணும். சரி வாங்க போகலாம் என்று வண்டியை இயக்கத் தொடங்கினார்.

வண்டிசென்றுகொண்டிருந்தது, என்னங்க போற வழியிலதான் கடைத்தெரு இருக்கு அங்கே போனதும் வண்டியை நிறுத்துங்க எங்கப்பனுக்கு கொஞ்சம் வெத்தலப் பாக்கு வாங்கிட்டுப் போகலாம். அப்படியே அம்மாவுக்கு நைஸ் மிக்சருன்னா ரொம்பப் புடிக்கும் அதுல அரைக் கிலோ வாங்கிட்டு போகணும் என்று பேசியபடியே வந்தாள்.

ஏன் அம்மா மாமாவுக்கு எதுவும் வாங்கிட்டு போகலையா என்று பவித்ரா கேட்டவுடனே!

ஆமாங்க என் தம்பிக்கு பால்கோவா ரொம்பப் பிடிக்கும் நாங்க சின்ன வயசில எங்க அப்பா அவனுக்கு வாங்கியந்து தருவாறு. அவன் எனக்குத் தராம அப்புடியே எடுத்துட்டு ஓடிப்போயிருவான். என்னங்க... அதுல ஒரு அரைக் கிலோ... அப்புடியே அம்மாவுக்கு ஒரு மொலம் மல்லிகைப்பூ அவ்வளவுதாங்க.

சரிம்மா... அப்புறம் வசந்தி கொஞ்சம் பேசாம வர்றியா?

ஆமா! நா பேசுனாத்தான் ஒங்களுக்குப் பொறுக்காதே, என்னதான் இருந்தாலும் நா வேற வீட்டுப் பொம்பளதானே!

ஏண்டி;  இப்ப நான் என்ன சொல்லிட்டேன்னு சத்தமா பேசுற வண்டிலே போகும் போது பின்னால வர்ற வண்டி சத்தத்த விட ஓம் சத்தந்தான் அதிகமா இருக்கு. வண்டிய ஒட்டுறதா இல்லையா...?

ஆமாய்யா .... ஆமா எங்க அம்மா வீட்டுக்குப்  போறப்பதான் ஒங்களுக்கு இப்புடியெல்லாம் சத்தம் கேக்கும். அன்னைக்கு ஒருநா ஒங்க தங்கச்சி வீட்டுக்குப் போரப்ப அதெல்லாம் தெரியாது.

ஏன் அம்மா.. இப்புடி நொய் நொய்ன்னு கத்திக்கிட்டே இருக்க. கொஞ்சம் சும்மாத்தான் இரேன் என்று பவித்ரா வசந்தியின் வாயடைத்தாள்.

இல்லை பவி நான் எங்கேயாவது இவருகூடபோறேனா? ஏதோ வருசத்துல ரெண்டு தடவ இல்ல மூனு தடவ ஓம் மாமன் வீட்டுக்கு வந்துட்டுப் போறேன். அது இந்த மனுசனுக்குப் பொறுக்கல.

அதுவும் இந்த கெழடு கட்ட கெடக்குற வரைக்கும்தான். ஓம் மாமனுக்கு ஒரு கலியாணத்த பண்ணிட்டா  அவ்வளவுதான், நாம இந்தப் பக்கமே வரமுடியாது. இன்னைக்கு இருக்குற ஒறவுமுறை யெல்லாம் அப்புடித்தான் இருக்குது.

அம்மா நான் வேணும்னா மாமாவ கல்யாணம் பண்ணிக்கட்டா? என்று பவித்ரா சொன்னதும் சட்டென வண்டியை நிறுத்தினார் கருப்பையா.

ஏண்டாம்மா! ஓம் அழகுக்கும் அவனுக்கும் ஒத்துவருமா? வாயை மூடு என்றார் கருப்பையா.

அப்புறம் கேக்கவா வேணும்!

ஒங்க சாதி சனத்தோட எங்க சாதி சனம் ஒன்னும் கொறஞ்சு போகல. அவனுக்கென்ன ராஜாமாதிரி தான் இருக்கான். எங்க அப்பன் ஆத்தாவோட என் உறவு முடிஞ்சு போயிரும்னு நெனச்சேன் எம் மவ வாயில இருந்து இப்புடி ஒரு சேதியைக் கேட்டதுக்குப் பொறவு நான் சும்மா விட்டுருவேனா.

என் தம்பி ஒண்ணும் நொண்டியோ குருடோ இல்லைங்க, அவனும் நல்லா சம்பாதிக்குறன். நம்ம புள்ளையை வைச்சுக் காப்பாதுற அளவுக்குத் தெறம இருக்கு.

எங்க அப்பன் ஆத்தா என்மேல வச்சிருந்த மரியாதையைவிட என் தம்பி எம்மேல  அம்புட்டு மரியாதை வைச்சிருக்கான். அவனுக்குப் பொண்ணு கொடுக்குறது ஒன்னும் தப்பில்ல.

எங்க சொந்தத்துல பொண்ணு கட்டிக் கொடுக்குறது, நமக்குக் கெட்டச்ச பாக்கியம்னு நெனச்சிக்கோங்க என்று பேசியபடியே வந்தாள் வசந்தி.

அதெல்லாம் சரிதான் வசந்தி. உங்க அப்பன் வீடு வந்தாச்சு இறங்கு என்றபடியே கருப்பையா வண்டியை நிறுத்தினார்.

நான் இப்ப சொல்லிக்கிட்டு வந்தது எதுவும் காதுல விழுந்துச்சா இல்லையா? என்றவள்.

எப்படி விழுவும், அதான் மொகம் கொடுத்துப் பேசாம வர்றதப் பாத்தா தெரியல, உன் சம்மதத்த.

ஆமாடி...ஆமா! நான் உன்கிட்ட மொகம் கொடுத்துப் பேசுனா, வண்டி வயலுக்குள்ளதான் விழுந்து கெடக்கும் பரவால்லையா.

ம்ம்ம்... ! சும்மா கெடங்க என்றவாறே ஏ... அப்போ..ஏ.. அம்மோ என்று வீட்டின் உள்ளே சென்றாள் வசந்தி.

என்னம்மா நல்லா இருக்கியா? அப்பாவுக்கு ஏதாச்சும் ஒடம்புகிடம்பு சரியில்லையா, கட்டில்லயே படுத்துக் கெடக்கு.

அப்பா...! ஏன் இப்புடி மொடக்கிப் படுத்துருக்கே?

அடடே வாடா வசந்தி. நல்லா இருக்கியா?

நா! நல்லாருக்கது இருக்கட்டும். நீ எப்புடி இருக்க?

அதான் பாக்குறியே; இப்படித்தான் இருக்கேன்.

தம்பி எங்கே போயிட்டான்?.

அவன நெனச்சுதான் எனக்கு கவலையே!

என்னப்பா சொல்லுறே?

ஆமா ஆத்தா, அவன் ஏதோ இப்புடியே திரியுறானே அவனுக்கு ஒரு கல்யாணத்தப் பண்ணி பாக்கணும் அப்பதான் நிம்மதி.

ஏன் அப்பா உனக்கு அந்த கவலை. அக்காக்காரின்னு நான் ஒருத்தி இருக்கும் போது சும்மா விட்டுருவேணா!

என்ன ஆத்தா மாப்பிள்ளை வந்துருக்காறா?

ம்ம்ம்... ! வந்துருக்காரு... வந்துருக்காரு, நீ மொதல்ல அவருக்கிட்ட போயி பொண்ணு கேக்குற வழியைப் பாரு.

என்ன ஆத்தா சொல்லுற?

 ஆமாம்பா; அவளும் தம்பியைக் கட்டிக்கிறேனு சொல்லிட்டா. இவருதான் ஒன்னும் சொல்லமாட்டேங்கிறாரு.

மாப்பிள்ளைக்குப் புடிக்கலைன்னா விட்டுற வேண்டியதானே.

இல்லைப்பா... அவரு தான் எதுவும் சொல்லமாட்டேங்கிறாரே. நீ முடிவா கேட்டு வையி...

சரிம்மா... என்றவர் சுப்பையாவ அழைச்சி உக்காருங்க மாப்பிள்ளை என்றார்.

பரவால்ல மாமா இப்புடியே நிக்குறேன்.

இது உக்காந்து பேசவேண்டிய விசயம். ஏய் ஆத்தா அந்த கட்டுல இழுத்துப் போடு.

அது என்னான்னா மாப்பிள்ள, நம்ம பவிக்கும் மாமன புடிச்சிருக்கு அதான் ஒரு நல்ல நாளப் பாத்து  கல்யாணத முடிச்சிரலாம்னு நெனைக்கிறேன்.

எம் புள்ள உங்க பையன கட்டிக்கிறேன்னு சொல்லுறது வாசவம்தான்  மாமா. இருந்தாலும் அவ சின்ன புள்ள; மச்சானுக்கு முப்பது வயசுக்கு மேலாகுது அதான் கொஞ்சம் யோசிக்க வேண்டியதா இருக்கு.

அதுக்காக ஏன் உறவ என்னோட முடிச்சிக்க சொல்லுரிங்களா! என்று வசந்தி ஆதங்கத்தோடு பேசினாள்.

இல்ல... வசந்தி ஒனக்கு எப்படி புரிய வைக்குறதுன்னே தெரியல. ஸ்கூலுக்குப் போயிட்டு இருக்க நம்ம புள்ளையை, அவ ஏதோ சொன்னாங்கிரதுக்காக கல்யாணம் அப்புடி இப்புடின்னு முடிவெடுக்கக் கூடாது.  அது எனக்கு நாயமாப் படல.

வாழ்க்கைங்கிறது வயசுக்கு வந்த பொண்ண கல்யாணம் பண்றதோட முடிஞ்சு போரதில்ல, படிப்புன்னு ஒண்ணு இருக்கு. அத இந்த சமுதாயத்துல பயன்படுத்துற விதம், அதனால அவ நமக்குத் தேடித்தர்ர பேருன்னு எவ்வளவோ இருக்கு.

என்னதான் உறவு விட்டுப் போயிரக்கூடாதுன்னு நீ நெனைக்கிரியோ அதுபோல பள்ளிக்கூடத்துல படிக்கிற போது ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரு வைராக்கியம் இருக்கும். அது ஒண்ணுமில்ல, நான் வக்கீலாவேன், கலெக்டர் ஆவேன், டீச்சர் ஆவேன், விஞ்ஞாணியாவேன்னு எவ்வளவோ கனவுகள் இருக்கும் அதெல்லாம் உறவு விட்டுப் போயிருங்கிறதுக்காக சின்னதுலேயே புடிச்சிக் கல்யாணம் முடிச்சா வாழ்க்கை நிம்மதியா இருக்குமா. வாழனுங்கிறது தானே மனித வாழ்க்கை அதை ஏன் திட்டமிட்டு வாழக்கூடாது.

அப்போ இனிமே நான் பொறந்த வீடு, எனக்கு உறவுன்னு சொல்லிக்கிற அப்பன் ஆதாவுக்கு அப்புறம் யாரும் இல்லை.

அப்படியெல்லாம் ஒன்னும் இல்லை வசந்தி. உன் தம்பிங்கிற உறவு இருக்குற வரைக்கும் நாம இங்கே வந்து போயிக்கிட்டு இருப்போம்.

நீங்க சொல்லுற வார்த்தையெல்லாம் நம்ம மவ இங்கே வாழ்ந்தாத்தான் இருக்கும். அதைவிட்டுட்டு வேற யாரையோ என் தம்பி கல்யாணம் முடிச்சா வர்ரவ  என்னை  நெனப்பாங்கிறது என்ன நிச்சயம். சரி உங்கபாட்டுக்கு ஏதோ செய்யுங்க என் உறவு அவ்வளவுதான்னு நெனச்சுக்கிறேன்.

நான் பொறந்து விளையாண்டு, வளர்ந்த இடம் இனிமே மறுபடியும் வந்து பாக்க முடியாமப் போகப் போகுது. இந்த கெழடு கேட்ட உசுரு போச்சின்னா நான் இங்கே வந்து என்ன சொகத்த அடைய முடியும். கால் வைக்கிறதே கஷ்டம் தான். புலம்பியபடியே புகுந்த வீடு வந்து சேர்ந்தாள்.

பவித்ராவுக்கு அம்மாவின் புலம்பாலும் அப்பாவின் வார்த்தைகளும் புதிதாய்த் தோன்றின.

மறுநாள் புத்தகப்பையைத் தேடினாள் பவித்ரா. வீட்டின் உள்ளே ஓரமாகத் தொங்கியத் துணிப்பையை எடுத்து வந்து கொடுத்தார் கருப்பையா.

அதை வாங்கி பையினுள்ளே இருந்த ஜாமன்றி பாக்ஸை பல்லால் கடித்து உள்ளே யாவும் இருக்கிறதா எனப் பார்த்தாள். பின்னர் அம்மா அந்த பத்தாம் வகுப்பு அறிவியல் புத்தகத்தை எங்கேயாவது பாத்தியா? இதுக்குள்ளேதான் வைச்சிருந்தேன் காணும்.

ராக்கெட்டு படம் போட்டு இருக்குமே அதனா டி ?

ஆமம்மா அதுதான்.

சரிம்மா  நான் ஸ்கூலுக்குப் போயிட்டு வாறேன்னு எந்த மனச் சலனமும் இன்றி மிதிவண்டியை எடுத்துக்கொண்டு புறப்பட்டாள், வாழ்வின் வசந்தம் நோக்கி. அங்கு பள்ளிக் கூடத்தின் வாசலில் ஒளிபடைத்தக் கண்ணினாய் வா! வா! வா! என்று எழுதப்பட்டிருந்தது.