4ஆம் ஆண்டில் நமது இலக்கியச்சுடர்
படைப்புகளை periyaswamydeva@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி இதழின் வளர்ச்சிக்கு உதவுங்கள்

வியாழன், 1 அக்டோபர், 2020

தீயதை தீயதாய் கருது - வி. விஷ்ணு

 


தீயதை தீயதாய் கருது

வி. விஷ்ணு

'காலை நேரம்’, வழக்கம் போல அலைப்பேசியை எடுத்து புலனச் (வாட்ஸப்) செய்திகளைப் பார்க்கத் தொடங்கினான் வாசன்.

ஏதோவொரு செய்தி அவனின் இதயத்தைக் கனமாக்கி இரத்தச் சீற்றத்தை அதிகப்படுத்தியதை உணர்ந்தவனாய் இருப்பு கொள்ளாமல் முணங்கிக்கொண்டு வீட்டின் இரு மருங்கிலும் நடக்கலானான்.

சுவர் இடிந்து விபத்து. 16 பேர் பலி. மீட்பு பணி தொடர்கிறது  என்பதாக செய்தி பகிரப்பட்டிருந்தது.

                வாசனின் இதயம் வெடித்துச் சிதறுமளவிற்கு இரட்டிபாக கனத்தது.

                அவன் இரு மடங்கிலும் நடப்பதைத் தவிர்த்து வீட்டிற்கு வெளியில் வந்து சுற்றும் முற்றும் பார்த்தான். ஆகாயம் வெளிச்சத்தை அதிகப்படுத்திக் கொண்டு அதன் விரிந்த பரப்பை காட்சிப்படுத்திக் கொண்டிருந்தது. இவனுள் ஏற்பட்ட பரபரப்பு ஆகாயத்தின் இயல்புக்குள் உட்செறிக்க மறுத்துவிட்டது.

இச்சம்பவம் குறித்த செய்தி இன்னும் மக்களிடம் வந்து சேரவில்லையா? இல்லை எதையும் இயல்பாய் கடந்து விடக் கூடிய அளவிற்கு மக்களின் மனம் பக்குவப்படுத்தப்பட்டு விட்டதா? என்று சிந்தித்தவாறே திரும்புகையில், ‘அது தீண்டாமை சுவர்என்ற செய்தி அவனது உடலை இரும்புருக்கினாற்போல் உருக்கிற்று. அதன் வெப்பத்தின் தாக்கத்தில் ஏற்பட்ட மூச்சுத்திணறலை சரி செய்ய முயற்சித்திக் கொண்டு ஆசுவாசத்திற்கு அவகாசம் கொடுத்து விரைந்து அலுவலகம் கிளம்ப ஆயத்தமானான்.

                 வாசனின் படபடப்பையும், பதட்டத்தையும் பார்த்த அவனின் வாடகை வீட்டு அம்மா என்னப்பா? என்னாச்சு? என்ன? சொல்லுப்பா? என்று கேள்விகளை அடுக்கிக் கொண்டிருந்தார். இவனின் சிந்தனை முழுக்க அச்சம்பவ நிகழ்ந்த இடத்தில் நிலைகொண்டிருந்தது.

                அம்மாவின் குலுக்கலில் சுய இருப்பிற்கு வந்த வாசன் தான் அறிந்த செய்தியைச் சொன்னதும்ஐயையோ!’ என்று மட்டும் சொல்விட்டு வேலையைப் பார்க்க சென்றுவிட்டார்.

ஐயையோ!’ என்ற அனுதாபம். அவ்வளவுதானா?, இறந்த உயிர்களுக்கும் உயிர் தப்பியவர்களுக்குமான ஆறுதல் மொழியாகிவிடுமா? வாழ்க்கையின் இருப்பிற்கு இது போதுமானதா? விதிக் கொள்கைகளை இன்னுமா உயிர்ப்பித்துக் கொண்டிருக்கிறார்கள். அது இவர்களது உடலைக் கிழிக்கவில்லையா, இரத்தம் சூடேறவில்லையா என்று சிந்தித்தவாறு  தலை கால் புரியாமல் உடனே கிளம்பி அலுவலகம் நோக்கி பயணித்தான்.

                செல்லும் வழியில் எங்கு பார்த்தாலும் அச்செய்திக்கான பதற்றம் தென்படவேயில்லை. தன் அலுவல் பணிகளை முடித்து விட்டு உணவுக்காகத் தனது அலுவலகம் திரும்புகையில் கூட அதுகுறித்த எந்த சலனமுமின்றி மனிதக் கூட்டங்கள் நடமாடிக்கொண்டிருந்தன.

சுவர் இடிந்து 16 பேர் பலியான சம்பவம் குறித்த நேரலை அலுவலகத்தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்ததைப் பார்த்து  சகதோழர்களுடன் அதுகுறித்து விவாதிக்க ஆரம்பித்தான். அலுவலகத்தில் உடன் இருந்த சகதோழர்கள் அச்சம்பத்தின் வீரியம் புரியாமல்,

ச்சே...ஐயயோ...ஸ்... அய்ய... அப்பப்பா...”என்றெல்லாம் அச்சம்பவத்தைக் கொண்டு தங்களுடைய இரக்க குணத்தைச் பரிசோதித்துக் கொண்டனர். அத்துடன், அதுவொரு விபத்தைப் போல பேசத் தொடங்கினர்.

அது விபத்தல்ல.  அங்கு 16 பேரின் உயிர் போயுள்ளளது. இப்போ காலையில் 1 உயிர் இருந்துச்சு அதுவும் போயிருச்சு. மொத்தம் 17 பேர் இறந்துட்டாங்க . நீங்க விபத்துனு சொல்றீங்கஎன்று சூடேறி சத்தமிட எத்தனித்தான்.

                சூட்டைத் தனிக்கும் விதமாக வாசனின் அலைபேசி சத்தமிட்டது.

டே எங்கிருக்க, நா கிளம்பிட்டேன்: உனக்கு புத்தகம் கொண்டுவந்துருக்க, குடுத்துட்டு போறே லேட் ஆச்சு, சீக்கரம் வா”, என்ற தேவனின் அவசர அழைப்பு அங்கிருந்து கிளம்புவதற்கு ஏதுவாயிற்று.

இதோ சீக்கிரம் வந்துடுற. பக்கத்துல பேக்கரில வெயிட் பண்ணுஎன்று சொல்லி விரைந்தான்.

                புத்தமும் அவர் தம்மமும்என்ற புத்தகத்தை வாங்கிகொண்டு பேக்கரியில் தேநீர் பருகிவிட்டு சின்ன உரையாடலுடன்சரிடா நா கிளம்புகிறேன்என்றான்.

சரி என்று திரும்புகையில்அந்த பேக்கரி அருகேயுள்ள பெட்டி கடையில் தொங்கவிடப்பட்ட மாலை நேர நாளிதழில்,

                கோவை அருகே சுவர் இடிந்து 17 பேர் பலிஎன்று அச்சிடப்பட்டிருந்ததைக் கண்ட வாசனுக்கு கடுங்குமுறல். காலை முதல் நடந்ததை நண்பனிடம் விளக்கினான்.

தேவன், இந்த ஊடகங்கள் அதிகாரவர்க்கம் சார்ந்து எவ்வாறு செயல்படுகிறது. அடித்தட்டு மக்களின் மீதான அவர்களின் பார்வை குறித்த அரசியலை மிக நீண்ட  விளக்கத்துடன் உரையாடினான். இந்த உரையாடல் வாசனின் மனநிலையை அச்சம்பவத்தின் தாக்கத்திலிருந்து கொஞ்சமாக இலகுவாக்கியது.

                லேட் ஆச்சுஎன்று அவசரப்படுத்திய தேவன், அச்சம்பவம் குறித்த உரையாடலில் நேரம் கரைந்ததை கவனிக்கவில்லை.

அருகில் சிகரெட் புகைத்துக் கொண்டிருந்த நபர்இப்படித்தான் ப்ரதர், நாடு சரியில்லனா இதுதான் நடக்கும்.’

                இந்த பேப்பர்காரன் பாருங்க எவ்வளவு கேணத்தனமா எழுதியிருக்கான். எல்லாம் முட்டாள் நாடு, முட்டாள் ஊடகம், முட்டாள் அதிகாரம் என்று அந்த அறியா நபரும் உடனிணைத்து திட்டினான்.

அச்சம்பவத்தை விட அச்சம்பவச் செய்தியை மறைக்கும் ஊடகங்களின் அரசியல் குறித்த அங்கலாய்ப்பு அவனை மேலும் எரிச்சலூட்டியது. 

                இதனூடாக வெளிமாநிலத்தில் நிகழ்ந்த பலாத்காரச் சம்பவம் குறித்த பேச்சு எழுந்தது. இடையிடையே வாசனின் நண்பனான தேவனுக்கு அழைப்பு வரவே அவன் கிளம்பிவிட்டான். மீண்டும் வாசன் அக்கொடூர சம்பவத்தின் சோக நிகழ்வினை பரிமாற திலீப்பிடம் சென்றான். அங்கு வாசனை விட வேகமான தீவரத்தில் வேலைகள் நடந்து கொண்டிருந்தன. அப்போது எல்லாம் பேசிவிட்டுகாத்திருங்க போராட்டம் இருக்கு போலாம்என்றார்.

வாசன், திலீப் இருவரும் போராட்டத்திற்குச் சென்று தங்களுக்கான அதிக பங்களிப்பைக் கொடுத்து வந்தார்கள்.அதனிலும் சில ஆறுதலான வார்த்தைகளை திலீபும் வாசனும் பரிமாறிக்  கொண்டனர்.

வாசன் தன் வீட்டிற்கு வந்து சமூகம் அறியா தன் உறவுகளுடன்  நடந்ததைக் கூறினான். அவர்களும்ஐயயோ, அப்டியாஎன்பதுடன் முடித்துக் கொண்டனர்.

மறு தினம் புலனத்தில் “Encounter Shoot”என்று இருந்தது. உள்ளே எடுத்து பார்த்தால் பெண்ணை பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தி கொலைசெய்த கைதிகள் நால்வரும் சுட்டுக் கொலை என்று பகிரப்பட்டிருந்தது.

                உடனே, “வாசனின்மனம் பண்ணை வீடுகளை வட்டமிட்டது”.  பிறகு கிளம்பி அலுவலகம் சென்று பணிகளை முடித்து, தேவனுடன் தேநீர் சாப்பிடுகையில் சர்வ சுதந்திரமாய் பலூன் விற்று கொண்டிருந்த வடமாநிலத்தவனைக் கடந்துவாழ்வதற்கான உரிமை வேண்டும்பதாகை ஏந்திய ஒருவன் தொய்ந்த நடையில் சென்று கொண்டிருந்ததை கவனித்து அவருடன் கைகோர்க்க கிளம்பினர்.