4ஆம் ஆண்டில் நமது இலக்கியச்சுடர்
படைப்புகளை periyaswamydeva@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி இதழின் வளர்ச்சிக்கு உதவுங்கள்

வியாழன், 1 அக்டோபர், 2020

காய்ந்த கிணறுகளும், காணாமல் போன கொல்லைகளும் - கீதாஸ்ரீராம்



 காய்ந்த கிணறுகளும், காணாமல் போன கொல்லைகளும்

கீதாஸ்ரீராம்

அபுதாபி

 

காய்ந்த கிணறுகளும், காணாமல் போன கொல்லைகளும்..... என்பதின் இறுதியில்..... கீழ்ப்பாக்கம் கார்டன் சென்னை சிட்டிவிட்டு.... மீனம்பாக்கம் சொந்தவீட்டிற்கு போக இருந்தோம்.. மீனம்பாக்கம் என்றால் நங்கநல்லூர் அருகில்.. நங்கநல்லூரில் புறநகர்பகுதி என்று சொல்லப்படும் இடம் எங்கள் வீடு.... பக்கத்தில் முழுக்க திரிசூலம் மலை.... மிக ரம்மியமான அமைதியான ஒரு இடம்....  நான் இரண்டாம்வகுப்பு படிக்கும் போது.... கிணறுபூஜை போட்டு கிணறு எடுத்தார்கள்.... .வட்டமாக, சுண்ணாம்பில் வரைந்து....  பூஜை எல்லாம் போட்டு.... ஓரடி தோண்டிய பின்பு..... நாளைக்கு பாத்துக்கலாம் என்று வீட்டுக்கு. வந்துவிட்டோம்.... என் நைநாவிடம்( அப்பா ) கேட்டுக்கொண்டே இருப்பேன்...  தண்ணிவந்திருச்சா கிணத்துல தண்ணிவந்திருச்சா, எப்படி வரும் என்று?..... என் ஆர்வத்தைப் பார்த்து அழைத்துச் சென்று காண்பித்தார்.. (பயணம் சும்மா இல்லை, கீழ்ப்பாக்கத்தில் இருந்து பஸ் பிடித்து, ட்ரெயின் பிடித்து பின், நடந்து எங்கள் இருப்பிடம் செல்லவேண்டும்...) பாறை ...தோண்டி, தோண்டி எடுக்க..... அவ்வப்போது சின்னச்சின்ன நாட்டுவெடிகுண்டு பாறைகளை எடுக்க..... பாவம் ஆட்கள்! உள்ளே இறங்கி, இறங்கி கல்லையும் மண்ணையும் எடுத்து எடுத்து கொட்டிக் கொண்டிருந்தார்கள்.... சற்றுபயத்தோடும் ஆர்வத்தோடும் பார்த்துக் கொண்டிருந்தேன்...  "சார் தண்ணிவந்துருச்சு" என்று ஒருகுரல் உள்ளிருந்து கேட்டது.... அப்படி மேல வந்துவிடு என்றார்..... ஒரு பத்துநிமிடத்தில் தண்ணீர் வந்துவிட்டது..... மீண்டும் அந்த ஆள் உள்ளே இறங்கி பார்த்துவிட்டு...... ஊற்று நன்றாக இருக்கிறது என்றார்....  என் இன்ஜினியர் மாமா... "பொறுங்க அவசரப்படாதீங்க."... எல்லாத்தையும் வெளியில எடுங்க என்றார்.... அவ்வளவுதான் அரைமணி நேரத்தில் அனைத்து தண்ணீரும் எடுத்து வெளியேற்றி விட்டார்கள்... . என்ன இது.. .தண்ணிதான் வந்துருச்சு.... திருப்பி எதுக்கு எடுத்து வெளியில கொட்டுகிறார்கள் என்றேன்.... பொறுபொறு என்றார்.. என்நைனா ... பின் மீண்டும் பள்ளம் தோன்டுங்க என்றார் என்மாமா..... திரும்பவும் சின்ன வெடிகுண்டு வைக்கப்பட்டது பள்ளம் தோண்டப்பட்டது.... விடுவிடுவென்று தண்ணீர் மேலே ஏறியது.... ஐந்து நிமிடத்தில் அந்த பெரியவர் கழுத்துவரைத் தண்ணீர் நிரம்பிவிட்டது... இது சரியான உற்று போதும் நிறுத்திக் கொள்ளலாம் என்றார் என் மாமா.... உள்ளே இருந்த மனிதர் தலைவரை தண்ணீர்.... சரசரவென்று மேலே ஏறி வந்துவிட்டார்..... கிணறு தயார்... பிறகு நடந்ததை நான் பார்க்கவில்லை...

ஒருபதினைந்து இருபது நாட்கள் கழித்து அடுத்த விடுமுறையில் எங்கள் அம்மா, நைனா என்னை அழைத்துச்சென்றார்கள்..... அழகான கிணறு உருவாகியிருந்தது...  உள்ளே வட்டவட்டமாய் சிமெண்ட் வடிவங்கள்....  மண்ணெல்லாம் தெரியவில்லை.... சிமெண்டு பூசப்பட்டு வட்டமான... என் கழுத்து வரை சுவர் எழுப்பப்பட்டிருந்தது..... இரண்டு பக்கமும் அழகிய தூண்கள்..... அதில் பக்கவாட்டு நடுதூணில் ஒரு கருப்பான ராட்டினம் தொங்கவிடப்பட்டு, தடித்த கயிறும் காணப்பட்டது...... எட்டி பாக்கட்டுமா என்றேன்.... பார் என்றார்..... கீழ்ப்பாக்கத்தில் நாங்கள் இருந்தது... கோட்ரஸ் வீட்டில் (அம்மாஇஎஸ்ஐ... ஸ்டாஃப் என்பதால்) இருந்தவர்கள் நாங்கள்..... எங்கள் குடியிருப்பு பகுதியில் பெரிய கிணறு இருக்கும்.... ஆனால் அதில் கம்பிபோட்ட மூடி போட்டு பூட்டு எல்லாம் போட்டு வைத்திருப்பார்கள்.... அருகில் போனால் பேய் பிடிக்கும் என்று அச்சப்படுத்தி வைத்திருந்தார்கள்.... எப்போதாவது பெரியஅண்ணன்கள் போய்நிற்கும்போது சற்று பயத்தோடு எட்டிபார்த்து வந்த ஞாபகம் உண்டு..... எங்கள் கிணற்றின் சுவற்றில் கையை வைத்தபடி..... உள்ளே மெதுவாக எட்டிப்பார்க்கஉள்ளே தெளிந்தநீர் ... பாறைகளுக்கிடையே அழகாக தெரிந்தது..... எப்படி வெளியே தண்ணீரை எடுப்பது எனக் கேட்டேன்.... தோபக்கெட்டுகயிறு. என் நைனா கயிறை பெருமையாக உள்ளே விட்டு ஒருபக்கெட்டில் தண்ணீரை எடுத்துவைத்தார்..... நான் இழுத்தால் வருமா? என்றேன்... ஆம் என்றார்... பின் மெல்லகயிறுகளைப் பற்றி விறுவிறு என்று இழுத்தேன்.... சிரித்தபடி ஒருகையைப் பிடித்து கெட்டியாகப் பிடித்துக்கொண்டு அடுத்தகையின் மேல் கயிற்றைப் பற்றி இப்பொழுது இழு என்றார்..... வாளி தண்ணிக்குள்... கையை விட்டுவிட்டு தண்ணீரில் நன்கு அழுத்து என்றார்.. விட்டுவிட்டு எடு என்றார்... முதலில் தெரியவில்லை பின்புரிந்து கொண்டேன்.... வாளி உள்ளே சென்றுவிட்டது.... என்றேன்.... பரவாயில்லை இப்போது மெதுவாக இழு என்றார்...... கணமே இல்லையே ...என்று இழுத்தபடி சொன்னேன்...... பொறுபொறு என்றார்.... இப்பொழுது என்னால் முடியவில்லை.... பக்கெட் தண்ணீருக்கு மேல் வந்துவிட்டது.....நைனா என்னால முடியலை என்று கத்தினேன்.... டக்கென்று பற்றி வேகவேகமாக இழுத்து எடுத்துவிட்டார்....  அடுத்த முயற்சி.... என் நைனாவே உள்ளே விட்டு... இப்பொழுது கால் பக்கெட் மட்டும் தண்ணீர்.... இப்போ இழு என்றார்.... சற்று கடினமாக இருந்தாலும் என்னால் முடிந்தது.... மேலே வர பக்கெட் மேலே வந்து தனியாக தொங்கி கொண்டிருந்தது.... கயிற்றை ஒருகையால் கெட்டியாக பிடித்துக் கொண்டு பக்கெட்டை லாவகமாக எடுத்து கிணற்றின் மேல்வை..... மனதில் அவர் சொன்னதை அப்படியே பதிய அவ்வாறே..... ஆஹா நான் கிணற்றிலிருந்து தண்ணீர் இறைத்துவிட்டேன்.....என் முகத்தில் பெருமையும் மகிழ்ச்சியும்.... தாண்டவம் ஆடியது.....

பின் ஐந்தாம்வகுப்பு நேரத்தில் நாங்கள் அங்கு வந்து குடியேறினோம்...... மோட்டார் எல்லாம் வாங்கும்நிலை என்தந்தைக்கு இல்லை அப்போது.... கையில்தான் இறைக்க வேண்டும்.... எங்கள் வீட்டில் அதில் நான்ஜாம்பவான்..... பெரியபெரிய அண்டாக்கள் இருக்கும்... மூடியும் இருக்கும்.... அத்தனையிலும் நிரப்பிவிடுவேன்..... வெயில்காலத்தில் ஒருபெரும். பிரச்சனை...  தேனீக்கள் சுற்றிக்கொண்டே இருக்கும்.... அது சட்டென்று கைவிரல்மேல் வந்துஅமரும்.... நாம் அப்போதுதான் வேகமாக இருப்போம்....  சிலசமயம் கொட்டிவிடுவதும் உண்டு... இருப்பினும் எனக்கு தண்ணீர் இழுப்பது பிடித்தமான ஒருவிஷயம்... என்சகோதரிகள் இதை அதிகமாக பயன்படுத்திக் கொள்வார்கள்..... விருந்தாளிகள் வந்தாலும் அவர்களுக்கு பக்கெட்டில் தண்ணீரை நிரப்பி கொடுத்து நல்லபெயர் வாங்கிக்கொள்வேன்...... மோட்டார் வந்தது.... டேங்க்... எல்லாம் கட்டமுடியவில்லை.... மோட்டரை போட்டு தண்ணீர் பிடித்து ரொப்பி வைத்து விடவேண்டும்......  கிணற்றில் மீன்போடலாமா.... கூடாது என்றார் என்நைனா.... மோட்டார் பைபிள் மாட்டிக் கொண்டுவிடும்..  தண்ணீர் மேலேஏறாது, நிறையவேலை வைக்கும் என்பார்..என் அவ்வா(பாட்டி) மட்டும்... நெல்லிக்காய் கட்டைகளைப் போட்டு வைப்பார் கிணற்றில்....  தண்ணீர் சுவைமாறும் என்று. தண்ணீரில் லேசாக கொஞ்சம் சவுர் இருக்கும்.... எனக்கு தெரியாது... என்றும் எனக்கு சுவையானது... பாட்டி கருத்து.... நல்ல கோடைகாலங்களில்....  நீர் கீழே போய்விடும்.....சுரண்டி சுரண்டிதான் எடுக்க வேண்டியிருக்கும் பக்கெட்டை வைத்து.... அப்போது வாளி சிறியதாக மாற்றிவிடுவார்.... பிறகு வேறுவழியின்றி இன்னும் கிணற்றை ஆழம் ஆக்கினார்கள்.. நாட்டுவெடிகுண்டு வைத்து பாறைகளைத் தகர்த்து...... சேறு எல்லாம் வாரி விட்டாள்... வேறு ஊற்று... நீர்சுரக்கும்பக்கத்து வீட்டு சித்ரா அக்கா அப்பா பார்த்து..... நீங்க கிணற்றை ஆழம் பண்ணதால... எங்க தண்ணி எல்லாம் ஆழத்தில் போச்சு என்று புலம்பியபடி அவரும் கொஞ்சம் ஆழமாக.... இப்படியே கொஞ்சம் வருடங்கள் கிணறு கொஞ்சம்கொஞ்சமாக ஆழமாகப் போய்க்கொண்டிருந்தது....

கிணற்றடியில்தான் எத்தனை விஷயங்கள் நடந்தேறின.... தோழிகள் வீட்டுக்கு வந்தால் கிணற்றடியில் மட்டும்தான் பேச்சு..... இருப்பா தண்ணி இறைச்சு கொண்டே பேசலாம் என்று..... இனிமையான நாட்கள்.....பாத்திரம் கழுவும் தண்ணீர்.....தென்னைக்கு பாயும்.... சின்னச்சின்ன ஓடைகள் நாங்களே கையால் வெட்டிவிட்டு இருப்போம்.....ஆங்காங் கேடிசம்பர்பூக்களும்.... மஞ்சள்கனகாம்பரம்.. அது என்னவோ சாதாரண கனகாம்பரம் எங்கள் வீட்டில் வைத்தால் வராது... பாத்ரூம் கட்டவேண்டும் என்று கட்டிய அஸ்திவாரத்தில்...  வெண்டைக்காய், பசலைக்கீரை, தண்டுக்கீரை எல்லாம்.... அமோகமாய்விளையும்...... மழைக்காலங்களில் கிணற்றில் தண்ணீர் மேலே வந்து இருக்கும்..... பார்க்க சற்று பயமாக இருந்தாலும் கையாலே நீரை மொண்டு கொள்வோம்.. விநாயகர்சதுர்த்தி முடிந்தபின் பிள்ளையார் எங்கள்வீட்டு கிணற்றுக்குள்ளேதான் போவார்.... தீபாவளி நேரத்தில் கிணற்றிலிருந்து நீர்எடுத்து கங்காஸ்நானம் செய்துகொள்வோம்... கார்த்திகை தீபத்தில் கிணற்றுக்கு என்று ஒருநாள் தீபம் ஏற்றுவோம்... கங்காகார்த்தி.. கொல்லையில் வந்து நின்றாலே போதும்.... மனம் குதூகலிக்கும்..... எங்கள் வீட்டில் பெரியகாக்காய்பூமரம்... சிவப்புபூக்கள்... பார்ப்பதற்கு ரம்மியமாக இருக்கும்... தேங்காய் நாங்கள் காசு கொடுத்து வாங்கியது இல்லை.... நான் குமரங்கள்... நாங்கள், நான்குபெண்கள்... எங்கள் கையால் வைத்த மரங்கள்... எத்தனை குடம் தண்ணீர் ஊற்ற வேண்டும் என்ன மரம் வைத்தபோது என் நைனாவை கேட்க ... உன்னால் எத்தனை முடியுமோ அத்தனை ஊற்று.... அத்தனையும் இளநீர் ஆகவரும் என்றார் ... என்அப்பா.... வெறிபிடித்ததுபோல் தண்ணீர் ஊற்றிகொண்டே இருப்பேன்.... உண்மைதான்.... நிறைய இளநீர்களைச் சாப்பிட்டோம்... சாப்பிட்டோம்..... முதல் அக்காவை பெண்பார்க்க வந்தபோது... கொல்லையில் நின்றபடி குதுகளித்தது... மாமாவீட்டிற்கு வந்தால்.. கொல்லைப் புறத்தில்தான் அடுப்பில் சமைப்பார் என் அவ்வா.... பின்வீட்டு விசேஷங்கள் என்றால் பிரியாணி எல்லாம் பின்பக்கம் தான்..... உட்கார்ந்து புறம்பேசுவதும் கொல்லையில்தான் நடக்கும்.... துக்கம் வந்தாலும் கொல்லைமரத்தடியில் உட்கார்ந்து அழுதாள்... அத்தனை துக்கமும் கரைந்து போய்விடும். பின் நாங்கள் வேலைக்குபோகும்போது என்தந்தை எங்களுக்கு வெண்ணீர் வைத்து கொடுப்பார் கொல்லையில்...  என்னதான் கேஸ் ஹீட்டரிலும் தண்ணீர் வைத்தாலும்.... இந்த வாசனை கலந்த விறகு அடுப்பு சுடுதண்ணீர் ஒரு இன்பத்தை எங்களுக்கு கொடுக்கும்....

இன்றைய கிணற்றின்நிலை.... கிணறு என்பங்கில் வந்தது.... நீர் இருக்கிறது இறைக்கத்தான் யாரும்இல்லை..... போர்தான் எங்கு பார்த்தாலும்.... எனக்கு ஒருபோர்... என் அக்காவிற்கு ஒரு போர்.....கிணற்றை மூடமனமில்லை...... அம்மாவே சொல்லிப் பார்த்தார், என்தந்தையின் மறைவுக்குப்பின்... மூடிவிட்டு ஒரு ரூம்போட்டுக் கொள்ளலாம் என்று.... எனக்கு மனமில்லை..... கொல்லை காணாமல்போய்.... என் அக்காவின் பங்கில் வீடு ஆயிற்று.... அங்கே அக்காவின் கணவர் பல ஆபீஸ் அறைகளை உண்டாக்கி.... அமோகமாக வியாபாரம் செய்து கொண்டிருக்கிறார்... நான் வைத்த தென்னைமரம் என்பக்கம் வந்தது... இன்று இல்லை.... அங்கே என்பங்கு பாத்ரூம்.. அக்காக்கள் வைத்த மரங்கள் எங்கே ... ஒன்றின் மேல் கிச்சன் இன்னொன்றின் மேல் படுக்கையறை அக்காவின் பங்கு.... எங்கள் வீட்டில் மட்டுமல்ல.... எல்லாவீட்டிலும் இந்தநிலைதான் இன்று..... அன்று பெரிதாக தெரிந்த கொல்லை... இன்று சுருங்கிப்போய்.... கட்டிடங்களாக மாறிவிட்டது. கொல்லைகளைப் பறிகொடுத்த கீதாஸ்ரீராம். .