4ஆம் ஆண்டில் நமது இலக்கியச்சுடர்
படைப்புகளை periyaswamydeva@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி இதழின் வளர்ச்சிக்கு உதவுங்கள்

ஞாயிறு, 1 நவம்பர், 2020

எட்டாத அதிசயம் - தா.சரவணன்

 


 சுனைத் தண்ணியில்

 துணிக்கு

 மரப்பிலன்

 பூவங்காய் போட்டுத்

 துவைக்கும் பாட்டிக்குச்

 சோப்பு அதிசயம்

 

 வயிற்று வலிக்குக்

 கிராம்பு,ஜாதிக்காய்,

 சீரகம் கலந்த கசாயம்

 

தலை வலிக்கு

நொச்சி, நுணா

தைலம் இலைகளைப் போட்டு

ஆவி பிடிப்பதும்

 

காய்ச்சலுக்கு

மண் எண்ணெய் பத்தும்

சூரணமும் கொடுக்கும்

தாத்தாவுக்கு

மருத்துவர்

மருந்து மாத்திரை

ஊசி எல்லாம்

அதிசயம்.

 

காட்டுக்கு ஆடுவோட்டி

மேய்த்தலில்

விறகு பொறுக்கி வந்து

சோறு பொங்கும்

அம்மாவுக்குக்

கேஸ் அடுப்பு

ஸ்டவ், இன்டாக்ஸ்

எல்லாம் அதிசயம்.

 

காரைமுள்ளில்

மூக்கு, காது குத்தி,

துடப்பம் குச்சியில்

துளைகாத்து வரும்

அக்காவுக்குப்

பித்தளை

மூக்குத்தி, கம்மல்

அதிசயம்.

 

ஏழு மைல்

தொலைவு போய்

எட்டாம் வகுப்பு

படித்து வந்த

அண்ணனுக்குச்

சர்க்கார் உத்தியோகம்

வருமென

கனவிலிருந்த அப்பாவுக்கு

மேற்படிப்பு படித்தால்தான்

அரசாங்க வேலை என

உணர்த்தியதும்

என்னைப் பட்டணம் போய்,

கல்லூரி படிக்கச் சொன்னது

அதிசயம்.

 

எப்பவாவது

ஊரில் ஊர்ந்து வரும்

மினி பஸ்

அதிசயமாய்ச்

சிட்டுக்குருவிபோல் தெரியும்

விமானம்

கண்டு வியந்த

நாட்கள் போய்

 

 

இன்று

பட்டணத்தில்

வண்ண வண்ணமாக

வாகனங்கள்

கண்ணுக்கு அருகாமையில்

விமானங்கள்

இதுவரை காணாத

விரைந்து போகும்

தொடர் வண்டிகள்

இது எல்லாம்

எனக்கு அதிசயம்.

 

எழுதப் படிக்கத் தெரியாத

என் ஊர் மக்களுக்கு

நானே ஒரு அதிசயம்

 

          தா.சரவணன்

          கல்யாணமந்தை

          திருவண்ணாமலை(மாவட்டம்)

          தொடர்புஎண் :9786577516