4ஆம் ஆண்டில் நமது இலக்கியச்சுடர்
படைப்புகளை periyaswamydeva@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி இதழின் வளர்ச்சிக்கு உதவுங்கள்

ஞாயிறு, 1 நவம்பர், 2020

பாரத்ததின் சாரதி ! - இரா. விஜயலெட்சுமி,

 


 

கலைமகள்,

கவிக்கென ஈன்ற

தலைமகனே !

தமிழ்த்தாய்,

புதுமைத் தமிழுக் கீந்த

தவப்புதல்வனே !

தேசப் புரட்சியின்

எழுச்சி மைந்தனே !

கவித்துவத்தால் தமிழுக்கு   

மாமகுடம் சூட்டிய

மகாகவியே!

எட்டயபுர ஏந்தலே !

பாட்டின்பத்தைப் பாமரனும்

அறியச்செய்த பாரதியே !

பாட்டெனும் சாட்டையெடுத்துச்

சாதி சைத்தானை ஓட்டிய

மந்திரச் சாரதியே !

மூடத்தமிழர் நெஞ்சத்தை

உழுது களையெடுத்த

சொல்லேர் உழவனே !

மூடப்பழக்கத்தை  முட்டறுத்த

முண்டாசுக் கவிஞனே !    

பெண்மைக்குப் பன்முகந்தந்த

பாவலனே !

புதிய பாதையிட்டுப்

புதுமைப் பெண்ணைப்

போற்றிய புரட்சிக் கவியே !!!

சந்தப் பாவும் சிந்துப்பாவும்

மங்காத தமிழிலிசைத்த

சங்கீதக் கவிக்குயிலே !!!

சுதந்திரத் தாகம் தணித்த

பாச்சுனையே !!

பரங்கியரைச் சுழற்றியடித்த

பாட்டுச் சூறாவளியே !!

அறியாமைக்குத் தாப்பாளிட்டுப்

பாப்பா பாட்டுப் பாடிய

பைந்தமிழ்ப்  பாவலனே !

ஈடில்லா இளைய பாரதத்திற்குத்

திருப் பள்ளியெழுச்சி பாடிய

உதய ஞாயிறே !!     

தணல்பறக்கும் கவியால்

தீப்பொறி தெறித்த

அக்னிக்குஞ்சே !

பராசக்தியின் பரமபக்தனே !

வசனகவிதையின்  வித்தகனே !

காந்தியே விழியுயர்த்தி

வியந்த வீரனே ! அசகாய சூரனே !

பாரதி என்றாலே

பாரதமும் விழித்திடுமே !!!

நாட்டின் வீரத்தாலாட்டும்

அவன் பாட்டே !!

பாட்டுத் திறத்தால்

பாரதத்தின் பட்டொளி

பறக்கச் செய்தானே !!!

மகாபாரதத்துச் சாரதி

கண்ணனைப் போல்

நம்பாரதத்தின் சாரதி,  

பாரதிதானே !! பாரதிதானே !!

அவன் பாட்டோ

சூறாவளிதானே !

சூறாவளிதானே !

இதில் மறுப்பும்

உண்டோ உங்களுக்கு ??!!!

                           இரா. விஜயலெட்சுமி,

பட்டதாரி தமிழாசிரியை,

தி.சுக்காம்பட்டி 621 310.

திருச்சி மாவட்டம்.

63829 93075