4ஆம் ஆண்டில் நமது இலக்கியச்சுடர்
படைப்புகளை periyaswamydeva@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி இதழின் வளர்ச்சிக்கு உதவுங்கள்

ஞாயிறு, 1 நவம்பர், 2020

யார் ஊனமுற்றவர் - முனைவர் வாசு.அறிவழகன்

 


யார் ஊனமுற்றவர்

                                                                                         முனைவர் வாசு.அறிவழகன்                                                                                                     இணைப்பேராசிரியர், தமிழாய்வுத்துறை,                                                                                                                                            முத்துரங்கம் அரசு கலைக் கல்லூரி,

வேலூர்-632002,

தமிழ்நாடு

arivazhagandde@gmail.com

செல்பேசி: 9445376274 

“ஒளிமயமான எதிர்காலம்                                                                   

என்உள்ளத்தில் தெரிகிறது.                                                                 

இந்த உலகம்பாடும் பாடலோசை                                                             

காதில் விழுகிறது.”

என்ற பாடல் அதிகாலையில் வானொலியில் ஒலித்துக் கொண்டிருந்தது.

 

சூரியன் உதயமாக உதயமாக உலகமே பரபரப்பாகிக் கொண்டிருந்த அந்த வேளையில் கரிகாலன் தன் படுக்கையில் இருந்து எழுந்திருக்க மனமில்லாமல் புரண்டபடியே படுத்திருந்தான்.

 

அவன் படுக்கையில் இருந்தாலும் அவன் மனமெல்லாம் மகிழ்ச்சிக் கடலில் திளைத்துக் கொண்டிருந்தது.

 

இரவு முழுக்க இன்பக்கனவுகள்; இனம்புரியாத ஒரு ஆனந்தம். நேற்று வந்திருந்த அரசு நிதியுதவி பெறும் கல்லூரி வேலைக்கான இன்டர்வியூ கார்டைப் பார்த்ததில் இருந்தே அவன் மனம் இலகுவாக இருந்தது.

 

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அந்தக் கல்லூரியில் தான் பணியாற்றுவது போலவே கனவு கண்டு கொண்டிருந்தான்.  

 

இதனால் அவன் தனக்கு எல்லாம் கிடைத்து விட்டதைப் போல் உணர்ந்தான். அவன் தன்னுடய கண்ணில் படும் பொருளெல்லாம் தனக்கு மகிழ்ச்சி தருவதாகவே உணர்ந்தான்.                                                         

 

மகிழ்ச்சி தரும் நிகழ்வுகள் மட்டுமே அவன் மனதிற்குள் வந்து வந்து போயின. இனம்புரியாத இந்த மகிழ்ச்சியில் அவன் படுக்கையில் படுத்துப் புரண்டு கொண்டு இருந்த போது தூரத்தில் இருந்து அவனை அழைக்கும் குரல் ஒன்று கேட்டது. “கரிகாலன்....கரிகாலன்....”

 

அப்பா தன்னை அழைக்கிறார் என்று தெரிந்தும் அவனால் எழுந்திருக்க முடியவில்லை புரண்டு படுத்துக் கொண்டிருந்தான்.  

 

“இன்னுமா அவன் எழுந்திருக்கவில்லை..! சூரியன் எழுவதற்கு முன்னால் எவனொருவன் படுக்கையை விட்டு எழுந்திருக்கிறானோ அவன்தான் வாழ்க்கையில் முன்னேறமுடியும்.

 

காலையில் எழுந்தோமா இன்டர்வியூக்குத் தயார் ஆனோமா என்றில்லாமல் இன்னும் தூங்குகிறானே..! நேரமாயிற்று அவனை எழுப்பு.... என்று தன் மனைவிக்குக் குரல் கொடுத்தவாறு கதிரவனின் தந்தை அரிமதி வீட்டிற்குள் நுழைந்தார்.                                                                      

 

 “ஏண்டா அவர் கத்துவது காதில் விழவில்லையா.. எழுந்திரு.. என்று தன் அன்றாட வேலைகளுக்கு மத்தியில் கதிரவனின் தாய் கயல்விழியும் தன் பங்கிற்குச் சத்தம் போட்டாள்.

 

“இதோ எழுந்திருக்கிறேன் அம்மா..”என்று சொல்லி எழுந்தவன், தன்னுடைய சான்றிதழ்களைச் சரிபார்த்து வைத்தான்.

 

இன்டர்வியூவுக்குத் தேவையான பொருட்களையும் ஆடைகளையும் மேசையின் மேல் எடுத்து வைத்தான்.

 

ஒன்றுக்கு இருமுறை எடுத்து வைத்தப் பொருட்களைச் சரிபார்த்த பின் குளியலறைக்குள் நுழைந்தான்.

 

இன்டர்வியூக்கு இரண்டு மணி நேரத்திற்கு முன்பே வீட்டில் இருந்து புறப்பட்டுப் பழவந்தாங்கல் இரயில் நிலையத்திற்கு வந்து சேர்ந்தான்.

 

டிக்கட்டை வாங்கிக் கொண்டு பிளாட்பாரத்தில் நின்று கொண்டிருந்த கரிகாலன், இரயில் வருவதையே பார்த்துக் கொண்டிருந்தான்.

 

இன்டர்வியூவுக்கு இரண்டு மணி நேரம் இடைவெளி இருந்தாலும் இரயிலை எதிர்பார்த்து அவன் மனம் பதற்றத்தோடே இருந்தது.

 

அழுக்கு ஆடைகளோடு காலும் கைகளும் ஊனமான தோற்றத்தில் இரண்டு பிச்சைக்காரர்கள் பசிக்கொடுமையால் இவனிடம் அடிக்கடி வந்து யாசகம் கேட்டுக் கொண்டிருந்தார்கள்.                                                                    

 

இரயிலை எதிர்பார்த்தும் இன்டர்வியூக்குச் செல்லும் பதற்றத்தோடும்  இருந்த கதிரவனுக்கு இந்தப் பிச்சைக்காரர்களின் வருகை எரிச்சலைத் தந்தது.                                                                                                      

 

அந்தப் பிச்சைக்காரர்களை அவன் கோபத்தோடு விரட்டவும் செய்தான். அந்தப் பிச்சைக்காரர்களும் சுற்றிச்சுற்றி வந்து இவனிடமே யாசகம் கேட்டுக் கொண்டு இருந்தார்கள். 

 

அந்தப் பிச்சைக்காரர்களை அவன் எரிச்சலோடு விரட்டிக் கொண்டு இருந்த போது இரயிலும் பிளாட்பாரத்திற்கு வந்து சேர்ந்தது.

 

நிம்மதிப் பெருமூச்சு விட்டு கரிகாலன் இரயிலில் ஏறினான். வண்டியில் ஏறியதும் காலியாக இருந்த இருக்கையில் அமர்ந்தான்.

 

அவனுடைய மனம் அமைதியாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தது. இன்டர்வியூ எப்படி துவங்கும்; எப்படி நாம் உள்ளே அழைக்கப்படுவோம்; எப்படி நாம் அமரவேண்டும்; எந்தெந்த முறைகளில் நாம் பதில் சொல்ல வேண்டும்; இப்படி பல்வேறு கேள்விகளைத் தன்னைத் தானே கேட்டுக் கொண்டும்  அவற்றிற்குரிய பதில்களையும் தனக்குத்தானே தயாரித்துக் கொண்டும் ஒரு நேர்முகத்தேர்வைத் தன் மனதிற்குள்ளேயே நடத்திக் கொண்டிருந்தான்.

 

ஆங்கிலமும் தமிழும் நன்குப் பேசும் இவன் எந்தவொரு சூழலையும் சாதாரணமாகவே கையாளும் திறமையைப் பெற்றிருந்தான்.

 

ஓய்வு நேரங்களில் மற்றவர்களைப் போல் இல்லாமல் புதினம் சிறுகதை கட்டுரை கவிதை நாடகம் போன்றவற்றைப் படிக்கும் பழக்கத்தையும் பெற்றிருந்தான்.                                                     

 

பல இசை மேதைகளின் இசைத் திறமைகளை அறிந்துகொள்ளும் ஆற்றலையும் இவன் பெற்றிருந்தான்.                                                   

 

ஓவியத்தின் நுணுக்கத்தை அறிந்து கொள்ளும் ஆற்றலும் இவனுக்கு இருந்தது.

 

இவனோடு பழகிய நண்பர்கள் இவனைக் கண்டு வியக்கும் அளவிற்கு இவனுடைய நடவடிக்கையும் செயல்பாடும் இருந்தன.                         

 

எங்கு சென்றாலும் வெற்றி இவனுக்குத்தான் என்று மற்றவர்கள் நினைக்கும் அளவிற்கு இவன் தன்னுடைய திறமையை வெளிப்படுத்திக் கொண்டிருந்தான்.

 

பள்ளியில் படிக்கும் காலத்தில் இருந்தே தான் முதல் மாணவனாகத் தேறி வந்ததால் இவனுக்கு எப்பொழுதுமே பாராட்டுக்கள்  குவிந்த வண்ணமே இருந்தன.                                                     

 

உழைப்பின் மீதுள்ள நம்பிக்கையும் இவனது உள்ளத்தை உறுதியாக்கியது என்றே சொல்லவேண்டும். இந்தக் கல்லூரிப் பணி கூட     இவனுக்குத் தான் கிடைக்கும் என்று இவனுடைய நண்பர்கள் பேசிக்கொண்டதாக இவன் அறிந்திருந்தான்.                                                                      

 

இப்படி ஒவ்வொரு நினைவாக அவன் மனதைச் சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருந்தன. இந்த நினைவலைகளால் அவன் மனம் சொல்லொண்ணா மகிழ்ச்சியில் இருந்தது என்றே சொல்லவேண்டும். 

 

இவனுக்குப் பின்னால் இரண்டு இருக்கைகள் தள்ளி இருவர் இன்றைய அரசியலுக்கு நடிகர்கள் வருவதைப் பற்றி விவாதித்துக் கொண்டு இருந்தனர்.

 

அந்த விவாதம் தனக்குப் பயன்படுமா என்று அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்தான்.

 

அது யாருக்குமே பயன்படாது என்று தெரிந்த பின், தன் கவனத்தைத் இன்டர்வியூவை நோக்கித்திருப்பிக் கொண்டான்.

 

இதற்கிடையில் இரயில் மாம்பலம் நிலையத்திற்கு வந்து சேர்ந்தது.

 

ஜன்னல் ஓரமாக இருந்த இருக்கையில் அவன் நகர்ந்து அமர்ந்து கொண்டான். ஜன்னல் வெளிச்சத்தில் தன்னுடைய குறிப்புகளை அவன்  புரட்டத் தொடங்கினான்.

 

இரயில் கிளம்பிய சில நொடிகளில் புல்லாங்குழல் ஓசைக் கேட்கத் தொடங்கியது.                                                                  

 

அழுக்கேறிய கிழிந்த ஆடையோடு கண்ணில் கருப்புக் கண்ணாடியோடும் கையில் ஒரு குச்சியோடும் கண் ஊனமான ஒரு இளைஞன் ஓட்டைப் புல்லாங்குழலை வாசித்துக் கொண்டு வந்தான்.

 

அந்த புல்லாங்குழல் தான் ஓட்டையாக இருந்ததே யொழிய, அதில் இருந்து வெளிவந்த இசை அத்தனை பேருடைய இதயத்தையும் ஊடுருவி அந்த இரயில் பெட்டியையே அமைதியாக்கியது.

 

ஆனால் கதிரவனோ இசைஞானம் பெற்றவனாக இருந்தாலும் அந்த புல்லங்குழலின் ஓசைதன்னுடைய அமைதியை அது கெடுப்பதாக உணர்ந்தான்.

 

தன்னுடைய குறிப்புகளை வாசிக்கமுடியாமல் அவனுடைய மனம் தடுமாறியதால், “இந்த பிச்சைக்காரர்களின் தொல்லை இரயிலுக்குள்ளேயும் விடாது போலிருக்கிறதே”, என்று கோபத்தோடு மனதிற்குள்ளேயே கடிந்து  கொண்டான்.

 

கண்ணில்லாத அந்த இசைஞானியோ யாரிடமும் வாய்திறந்து பிச்சைக் கேட்கவில்லை. அந்த இசையில் மயங்கியோர் மட்டுமே அவனுக்கு உதவி செய்து கொண்டிருந்தனர்.                                                              

 

அந்த இசைஞானி விற்பனைக்கு வைத்திருந்த தின்பண்டங்களை வேண்டுவோர் மட்டுமே வாங்கிக் கொண்டிருந்தனர்.

 

ஆனால் கதிரவனுக்கோ இங்கு வரும் ஊனமுற்றவர்கள் செய்கிற செயல்களெல்லாம் அவனுடைய மன அமைதியைக் கெடுப்பதோடு கோபத்தை ஏற்படுத்துவனவாகவே இருந்தன.

 

இதற்கிடையில் இரயில் கோடம்பாக்கம் நிலையத்திற்கு வந்து சேர்ந்தது.அந்தக் கண்ணில்லா இசைஞானி வண்டியை விட்டு இறங்கியதும் கதிரவன் பெருமூச்சு விட்டான்.                                                                 

 

இரயில் கிளம்பிய சில நிமிடத்தில், “பாக்கட் டைரி, பாக்கட் டைரி, இந்த ஆண்டுக்கான பாக்கட் டைரி”, என்று ஒரு குரல் ஒலித்தது.                               

 

தனக்குப் பின்னால் இருந்து வந்த அந்தக் குரலை கேட்டுக் கதிரவன் திரும்பிப் பார்த்தான்.

இரண்டு கால்களும் இல்லாமல் தரையோடு ஒட்டிய நான்கு சக்கரங்கள் கொண்ட ஒரு சின்ன வண்டியில் அமர்ந்து கொண்டும்  ஒரு கையால் வண்டியைத் தள்ளிக் கொண்டும்  இன்னொரு கையில் டைரியைத் தூக்கிப் பிடித்து அதனை விற்றுக் கொண்டும் வந்த, அந்த ஊனமுற்றவனைக் கண்டதும் கதிரவன் கோபத்தின் உச்சத்திற்கே போனான்.                       

 

 “ஏன் இந்த ஊனமுற்றவர்கள் பயணிகளுக்கு இப்படித்தொல்லை கொடுக்கிறார்கள். இவர்களுடையக் கூச்சலால் நிம்மதியாகப் பயணம் செய்ய முடியவில்லையே”, என்று  தன்னுடைய இன்டர்வியூ சூழலையும் மறந்து புலம்பினான்.

 

அதற்குள் இரயில் நுங்கம்பாக்கம் நிலையத்திற்கு வந்து சேர்ந்தது. கதிரவன் இரயிலை விட்டு இறங்கியதும் பிளாட்பாரத்தில் இருந்த அவனுடைய நண்பர்கள் அவனைச் சூழ்ந்து கொண்டனர்.

 

எல்லோருமாகப் புறப்பட்டு கல்லூரிக்குச் சென்றனர். இன்டர்வியூ தொடங்குவதற்கு முன்னால் சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டு வரிசையாக அமர்த்தப்பட்டனர்.

 

கதிரவனும் நேர்முகத் தேர்வுக்குத் தன்னைத் தயார் படுத்திக்  கொண்டு இருந்தான்.

 

ஆண்களும் பெண்களுமாக நேர்முகத்தேர்வுக்கு வரிசையாக அமர்த்தப் பட்டிருந்தாலும் அந்த இடமே அமைதியாக இருந்தது.

 

நேர்முகத் தேர்வுத் தொடங்கியது. அங்கிருந்தவர்களில் சிலர் இந்தப் பணி கதிரவனுக்குத்தான் கிடைக்கும் என்று பேசிக் கொண்டனர்.                     

 

அந்தப் பேச்சைக் காதில் வாங்கியக் கதிரவன் நேர்முகத் தேர்வைப் பற்றியும் அங்கு வந்திருப்பவர்களைப் பற்றியுமே யோசித்துக் கொண்டிருந்தான்.

 

 நேர்முகத் தேர்வை முடித்து வந்த ஒவ்வொருவரும் கல்லூரியின் முகப்பில் உட்கார வைக்கப்பட்டனர்.

 

கதிரவன் நேர்முகத் தேர்வு அறைக்குள் அழைக்கப்பட்டதும் அனைவருக்கும் வணக்கம் செலுத்திவிட்டு அவனுக்கு ஒதுக்கப்பட்ட நாற்காலியில் அமர்ந்து கொண்டான்.

 

கேட்கப்பட்ட வினாக்களுக்குச் சரியாகவும் பண்பாகவும் பதில் சொன்னான்.

 

நேர்முகத் தேர்வு முடிந்ததும் அங்குள்ள அனைவருக்கும் நன்றி சொல்லி விட்டு அவன்  நம்பிக்கையோடுவெளியில் வந்தான்.          

 

வெளியில் வந்ததும் கதிரவன் நண்பர்களோடு மகிழ்ச்சியாகப் பேசிக் கொண்டிருந்தான்.

 

நேர்முகத் தேர்வு அறைக்குள் இருந்து வந்த அதிகாரி ஒருவர் தேர்வு முடிவு மாலை ஐந்து மணிக்கு அறிவிக்கப்படும் என்று தெரிவித்தார்.

 

கடிகார முள் மணி ஐந்தை நெருங்கிக் கொண்டு இருந்த போது எல்லோருடைய கண்களும் தேர்வுமுடிவை நோக்கியே இருந்தன.

 

கதிரவனுக்குத்தான் இந்தப் பணி என்று பலரும் முணுமுணுத்துக் கொண்டும் இருந்தனர்.                                                                         

 

நேர்முகத் தேர்வு அறைக்குள் இருந்து வெளியில் வந்த உதவியாளர் ஒருவர் ,”பூங்குழலி பூங்குழலி..”என்று குரல் கொடுத்துக் கொண்டு வந்தார்.   

 

வெகுதூரத்தில்இருந்து பூங்குழலி இன்டர்வியூக்கு  வந்திருந்ததனாலும் நேரமானால் ஊருக்குச் செல்ல தனக்கு வண்டி கிடைக்காது என்பதானாலும்

நேர்முகத் தேர்வுக்கு வந்திருந்தவர்கள் எல்லோரும் தன்னை விடத் திறமையானவர்கள் என்று அவள் நினைத்திருந்ததனாலும் தேர்வு முடிவு வருவதற்கு  முன்னாலே அங்கிருந்து அவள் புறப்பட்டுவிட்டாள்.

 

கூட்டத்தில் இருந்த எல்லோரும், “ஏன் பூங்குழலியை அழைக்கிறார்கள்”, என்று பேசிக் கொண்டிருந்தபோது தேர்வு முடிவு கல்லூரியின் முகப்பில் ஒட்டப்பட்டது.                                       

 

அதில் “பூங்குழலி” தேர்வு செய்யப்பட்டதாகத் தட்டச்சு செய்யப் பட்டிருந்தது.                                                                                 

 

இதைப் பார்த்ததும் கதிரவனுக்கு மட்டுமல்ல அங்கிருந்த அத்தனை பேருக்கும் அதிர்ச்சியாக இருந்தது.

 

அந்த முடிவைக் கண்டதும் கதிரவன் தன் பலம் இழந்தவனாக உணர்ந்தான்.                                                                                          

 

கதிரவன் அங்கிருந்து புறப்பட்டு நுங்கம்பாக்கம் இரயில்நிலையம் வந்து சேர்ந்தான்.

 

இரயிலில் ஏறி அவன் உட்கார்ந்ததும் அந்த ஓட்டைப் புல்லங்குழலின் ஓசைக் கேட்டது.                                                              

 

“ஒளி மயமான எதிர்காலம் என் உள்ளத்தில் தெரிகிறது. இந்த உலகம் பாடும் பாடலோசை காதில் விழுகிறது”.என்ற பாடலை அந்தப்  புல்லாங்குழலில் வாசித்துக் கொண்டு வந்தான் அந்த கண்ணில்லாத இசைஞானி.

 

சோர்வாக இருந்த கதிரவனின் மனதிற்கு அந்தப் புல்லாங்குழலோசை சுகமாக இருந்தது.

 

வாழமுடியாத நிலையிலும் எவரொருவர் உதவியுமின்றி உழைத்து வாழ வேண்டு என்று நினைக்கிற இவர்களா ஊனமுற்றவர்கள்? - இவர்களா அருவருக்கத் தக்கவர்கள்?  என்று தனக்குத்தானே கேட்டுக் கொண்டு  சிரித்துக் கொண்டான்.