4ஆம் ஆண்டில் நமது இலக்கியச்சுடர்
படைப்புகளை periyaswamydeva@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி இதழின் வளர்ச்சிக்கு உதவுங்கள்

ஞாயிறு, 1 நவம்பர், 2020

உலகின் முதல் சத்தியாக்கிரகப் போரின் நாயகி தில்லையாடி வள்ளியம்மை - முனைவர் சித்ரா

 

 

உலகின் முதல் சத்தியாக்கிரகப் போரின் நாயகி தில்லையாடி வள்ளியம்மை

முனைவர் சித்ரா

ஹாங்காங்

இந்தியாவின் புனித மகள், வள்ளியம்மை தான் எனது விடுதலை வேட்கையின் ஆதி மூலம்என்று மகாத்மா காந்தியால் தென் ஆப்பிக்காவில் போற்றப்பட்டஉலகின் முதல் சத்தியாக்கிரகப் போரின் நாயகி வள்ளியம்மை பதினைந்தே வயதான வள்ளியம்மை.

 

வாழ்க்கை

வள்ளியம்மையின் தந்தை முனுசாமி. புதுச்சேரியைச் சேர்ந்தவர்.அவரது தாய் மங்களம் தில்லையாடியைச் (தமிழகத்தின் நாகை மாவட்டம், தரங்கம்பாடி அருகே) சேர்ந்தவர். இவர்கள் பிழைப்புக்காக இந்தியாவிலிருந்து தென் ஆப்பிரிக்கா சென்று அங்கு ஒரு சிறிய கடை ஒன்றை நடத்திக் கொண்டிருந்தார்கள்.அந்தத்தம்பதியினருக்கு பிப்ரவரி 22ம் தேதி 1898ல் 'ஜோகனஸ்பர்க்' (Johannesburg) நகரில், மகளாகப் பிறந்தார் தில்லையாடி வள்ளியம்மை. நான்கு குழந்தைகளில் முத்தவள். அங்கு அவர்அரசுப் பள்ளியில் பயின்று வந்தாள்.  தன்னைச் சுற்றி நடந்து வரும் நிகழ்வுகளைக் கூர்ந்து கவனித்து வரும் தன்மை கொண்டவள்.

 

மோகன்தாஸ் கரம்சந்த காந்தியவர்கள், தான் தங்கியிருந்த முதலாம் ஆண்டில் இரயிலி நடந்த நிறவெறி சம்பவம் காரணமாக, அங்கு ஐந்து ஆண்டுகளாக பல போராட்டங்களை நடத்தி வந்தார். 1913ஆம் ஆண்டு, தென் ஆப்பிரிக்காவில் கிறிஸ்துவ முறைப்படி நடந்த திருமணங்கள் மட்டுமே செல்லுபடியாகும் என்ற சட்டம் வந்த போது, அதை எதிர்த்த ஒரு போராட்டம் தொடங்கியது.அச்சமயம், வள்ளியம்மையின் தந்தை முனுசாமி படுக்கையில் வீழ்ந்திருந்தார்.

 

அப்போது, தென்னாப்பிரிக்காவில் இந்தியர்களுக்கான உரிமையை பெறுவதற்காக ஜோகனஸ்பர்கில் இருந்து 'நியூகேசில்' நோக்கி சத்தியாக்கிரகப் போராட்டப் பேரணி நடத்தினார் காந்தி. தந்தை படுக்கையில் இருந்த போதும், காந்தியடிகளின் போராட்டத்தில் ஆர்வம்கொண்ட,பதினைந்து வயதானசிறுமி வள்ளியம்மை, இந்தியர்களின் உரிமைகளுக்காக அவரது தாயார் மங்களத்துடன் போராட்டத்தில் கலந்து கொண்டாள்.இந்த மதஅடக்குமுறை சட்டத்தை எதிர்த்து, அகிம்சைப்போராட்டதிற்கு ஆதரவாகத் தானும் தன் அன்னையுடன் சத்தியாக்கிரகப் பெண்கள் போர்ப்படையில் இணைந்து கொண்டாள்.

 

அக்டோபர் 29ம் தேதி பேரணி தொடங்கியது. டிசம்பர் 22ல்  டிரான்ஸ்வாலிலிருந்து நடால் நகர் நோக்கி, இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோர், அணிவகுப்பைத் தொடங்கினர். அந்தப் பேரணியில் மொத்தம் பதினாறு பெண்கள் கலந்து கொண்டனர். அதில் 10 பேர் தமிழ்ப் பெண்கள். கர்ப்பிணிப் பெண், கைக்குழந்தையுடன் ஒரு பெண் உட்பட அனைவரும் போராட்டத்தில் கலந்து கொண்டனர். அந்தப் பேரணியிலிருந்த அனைவருக்கும் உதவி செய்தவாறே தனது 15வது வயதில் இந்தியர்களின் உரிமைக்கான போராட்டத்தில் வள்ளியம்மையும் கலந்து கொண்டாள்.

 

 அப்போது குறிப்பிட்ட நகரத்திற்குள் நுழைந்த போராளிகள் அனைவரும் கைது செய்யப்பட்டனர். வள்ளியம்மையும் கைது செய்யப்பட்டு 3 மாதக் கடுங்காவல் தண்டனையில் மரீட்ஸ்பர்க் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டாள். 

 

இதையடுத்து சிறையில் கடுமையாக வேலை வாங்கியதன் காரணமாக வள்ளியம்மையின் உடல்நலம் குன்றியது. அங்கு விஷக்காய்ச்சல் ஏற்பட்டு, சரியான சிகிச்சையும், நிம்மதியான தூக்கமும் இல்லாமல் அவதிப்பட்டாள்.நாளடைவில் படுத்த படுக்கையானாள் வள்ளியம்மை. சிறையிலேயே அவள் இறந்தால் பிரச்சனை பெரிதாகிவிடும் என்ற நிலையில் தென் ஆப்பிரிக்க அரசு அவரை விடுவிக்க முடிவெடுத்தது. 

 

‘‘உரிய அபராதத் தொகை கட்டிவிட்டுச் சிறையிலிருந்து விடுதலை பெற்றுச் செல்’’ என்கிறார் சிறை அதிகாரி. அதற்கு வள்ளியம்மை, ‘‘அது சத்தியாக்கிரகப் போராளிக்கு இழுக்கு. செத்தாலும் சிறையிலேயேதான் சாவேன். அரசு விதித்த அபராதத் தொகையைக் கட்டமாட்டேன்’’ என்றாளாம். 

 

கொண்ட கொள்கையில் உறுதியாக இருந்த வள்ளியம்மை, கோரிக்கைகளை நிறைவேற்றிய பின்பே சிறையிலிருந்து வெளிவந்தாள். வீட்டிற்கு வந்த பின்பு அவரது உடல்நலம் மேலும் குன்றியது. இந்தியர்களின் உரிமைக்கான போராட்டத்தில் வெற்றி பெற்ற வள்ளியம்மையால் நோயுடன் போராடி வெற்றிபெற முடியவில்லை. விடுதலையான 10 நாட்களில் அவர் பிறந்த பிப்ரவரி 22ம் தேதி அன்றே 1914ம் ஆண்டில் அவரது 16வது வயதில் உயிர் நீத்தாள் வள்ளியம்மை. 

 

குறிப்பிடத்தக்க சம்பவங்கள்

‘‘பாவம்.... இந்தக் குழந்தை! இது, எதற்காகச் சிறைக்கு வரவேண்டும்’’ என்று சிறை அதிகாரி ஒருவர் சொன்னபோது... அதற்கு அந்தப் பெண், ‘‘நான் குழந்தையும் அல்ல... பாவமும் அல்ல’’ என்று சீறினாளாம்வள்ளியம்மை. 

 

மதஅடக்குமுறை சட்டத்தை எதிர்த்து, இந்தியர்களுக்கு ஆதரவாய்க் குரல்கொடுத்துக் களத்தில் இறங்குகினார் காந்தி. அகிம்சைப்போராட்டதில்அவருக்குப் பின்னால், பெண்கள், குழந்தைகள் உள்பட இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டோர் களத்தில் நிற்கின்றனர். தனக்கு முன் கூடியிருந்த அந்த மக்களிடம் ஓர் உறுதிமொழித் தாளை எடுத்தார், காந்தி. அதை, தான் படிப்பதற்கு முன்பு... அந்தக் கூட்டத்தினரைப் பார்த்து, ‘‘இந்த உறுதிமொழித் தாளை யார் படிக்கிறீர்கள்’’ என்று கேட்டார். ‘‘நான் படிக்கிறேன்’’ என்று ஓடி வந்தாளாம் சிறுமியான வள்ளியம்மை. அப்போது அவருக்கு வயது 15.  ‘‘வெள்ளை ஏகாதிபத்தியத்தின் விலங்கொடிப்போம் வாருங்கள்’’ என்ற வள்ளியம்மையின் முழக்கத்துடன் அந்தப் பயணம் புறப்படுகிறது. பயணத்தின்போது காந்தியைச் சுட்டுத்தள்ளத் திட்டமிட்ட தென்னாப்பிரிக்கப் போலீஸ், அதற்காகக் காத்திருக்கிறது. அதைக் கவனித்துவிட்ட வள்ளியம்மை, திடீரென காந்திக்கு முன் வந்து... ‘‘இப்போது அவரைச் சுடு பார்க்கலாம்’’ என்று சொல்லி அவரைக் காத்தாளாம். அத்துடன், அங்கிருந்த மக்களையும் கவனித்துக்கொள்கிறார். ‘‘வள்ளியம்மையின் நெஞ்சுரம் கண்டு என்னைச் சுடவந்த வெள்ளையனே திகைத்து, திரும்பிச் சென்றான்’’ என்று காந்தியே குறிப்பிடுகிறார்.

 

நடைப்பயணத்தின் முடிவில் அனைவரும் கைது செய்யப்படுகிறார்கள். அதற்காக, அவர்கள்மீது வழக்குப் பதிவு செய்யப்படுகிறது. வள்ளியம்மையும் கைதுசெய்யப்பட்டு அவர்மீதும் வழக்குப் பதிவுசெய்யப்படுகிறது. கைதான அனைவரும் ‘இந்தியர்கள்’ என்று பதிவு செய்வதைப் பார்த்த சிறை அதிகாரிஒருவர், ‘‘ஆப்பிரிக்கர்கள் என்று பதிவுசெய்ய வேண்டியதுதானே’’ என்று நக்கலாய்க் கேள்வி கேட்டாராம். வள்ளியம்மையிடம் ஓர் அதிகாரி, ‘‘இந்தியா என்ற ஒரு நாடே இல்லையே, உங்களுக்கு ஒரு கொடியும் கிடையாதே’’ என்று கேட்டாராம். உடனே வள்ளியம்மை, தான் அப்போது உடுத்தியிருந்த துணியின் ஓரத்தைக் கிழித்து, ‘‘இதுதான் இந்தியாவின் கொடி. இனி இதற்கு ஒரு நாடும் உண்டுதானே’’ என்று பயம் சிறிதுமின்றி பதிலளித்தாளாம். 

 

வள்ளியம்மை குறித்து இன்னும் விரிவாக மகாத்மா காந்தி அவருடைய சுயசரிதையில் குறிப்பிட்டுள்ளார். ஒரு போர்வை சுற்றப்பட்ட உடம்புடன் வீட்டுக்கு வந்தும் எழமுடியாமல் படுக்கையிலேயே இருக்கிறாள். அவளை நேரில் பார்த்து விசாரிக்கிறார் காந்தி. ‘‘சிறைதானே உன் உடம்பை இப்படியாக்கிவிட்டது. சிறை சென்றதற்காக நீ வருத்தப்படுகிறாயா?’’ என்று கேட்டார். அதற்கு வள்ளியம்மை, ‘‘எனக்கு வருத்தமா... நிச்சயமாக இல்லை. இப்போது இன்னொரு தடவை கைதுசெய்யப்பட்டால்கூடச் சிறைக்குச் செல்ல நான் தயார்’’ என்றாளாம், அந்த நிலையிலும் துணிச்சலாக. காந்தி மீண்டும் விடாமல், ‘‘சிறை சென்று நீ இறந்துபோவதாக இருந்தால் என்ன செய்வாய்’’ என்று கேட்கிறார். அதற்கும் அவள் சற்றும் தளைக்காமல், ‘‘அதைப்பற்றி நான் கவலைப்பட மாட்டேன். தாய்நாட்டுக்காக உயிரைக் கொடுக்க விரும்பாதவர்கள் யார் இருப்பார்கள்’’ என்றாளாம். 

புகழாரங்கள்

அவருடைய கல்லறைக்குச் சென்று இறுதியஞ்சலி செலுத்திய காந்தி, ‘‘இவர்தான் இந்தியாவின் மேன்மையான பெண் குழந்தை. ஒவ்வொரு பெண்ணுக்கும் இருக்க வேண்டிய சுயநம்பிக்கை, சுயமரியாதை, நல்லொழுக்கம் ஆகிய உயர்ந்த அடையாளங்களைக் கொண்டவர் வள்ளியம்மை’’ என்றாராம் பெருமைபொங்க.  மேலும், ‘‘இந்தியா உள்ளவரையில் தென்னாப்பிரிக்க சத்தியாக்கிரக சரித்திரத்தில் வள்ளியம்மையின் பெயரும் நீங்கா இடம்பெற்றிருக்கும்’’ என்றாராம். 

 

பின்னாளில் தமிழகத்திற்கு வந்த பொழுது தில்லையாடி சென்று வள்ளியம்மையின் தியாகத்தை நினைத்து அங்கிருந்த மண்ணை எடுத்து கண்ணில் ஒற்றிக் கொண்டாராம் மகாத்மா காந்தி. அதுமட்டுமின்றி எவ்வித பலனையும் எதிர்பார்க்காமல் இந்தியர்களுக்காக உயிர் தியாகம் செய்த வள்ளியம்மை தான் எனது விடுதலை வேட்கையின் ஆதி மூலம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

 

நினைவுச் சின்னங்கள்

தனது 16வது வயதில் இந்தியர்களுக்காக போராடி அனைவரது மனதிலும் விடுதலை தீயை எரியவைத்து உயிர்நீத்த வள்ளியம்மையின் தியாகத்தினை போற்றும் வகையில் தில்லையாடியில் 1915 அவருக்கு தூண் ஒன்றும், நினைவு மண்டபம் ஒன்றும் எழுப்பப்பட்டுள்ளது. அவரது மார்பளவு சிலையும் அமைக்கப்பட்டது.அவரது நினைவாக பொதுநூலகம்கட்டப்பட்டுள்ளது.அது இன்று வரை செயல்பட்டுவருவது குறிப்பிடத்தக்கது.

 

இந்தியாவில், அவரை நினைவு கூறும் வகையில், 2008ஆம் ஆண்டு அவரது உருவம் கொண்ட தபால் தலை, இந்தியா அரசால் வெளியிடப்பட்டது.  மேலும், தமிழகத்தின் கைத்தறி பட்டு நிறுவனமான கோ-ஆப்டெக்ஸ், சென்னை எக்மோரில் உள்ளதன்னுடைய கைத்தறி பட்டு விற்பனைக் கூடத்திற்கு, தில்லையாடி வள்ளியம்மை பட்டு மாளிகை என்று பெயரிட்டு, அவரை நினைவு கூர்கிறது.

 

தென் ஆப்பிரிக்காவில், அவரது பிறந்த நாள் நூற்றாண்டு விழாவின் போது, அப்போது குடியரசுத் தலைவராக இருந்த நெல்சன் மண்டேலா அவர்களின் உதவியுடன், துர்ந்து போயிருந்த அவரது கல்லறை புதுப்பிக்கபட்டது.

 

இந்த அனைத்து புகழாராத்திற்கும் முத்தாய்ப்பாக 2018ஆம் ஆண்டு, சுசேன் பிராக்கோ என்பவர் வள்ளியம்மையின் வாழ்க்கை வரலாற்று நூலை வெளியிட்டார்.  428 பக்கங்கள் கொண்டஅதன் பெயர்Soul Force book:Valliamma found herself no longer a child, not yet a woman, but an activist’.

 

இத்தகைய தொண்டுள்ளம் கொண்ட வீராங்கனையை நாம் நினைவு கூர்வது அவசியம்.

 

 

 

  

Braamfontein cemetery, S.Africa