4ஆம் ஆண்டில் நமது இலக்கியச்சுடர்
படைப்புகளை periyaswamydeva@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி இதழின் வளர்ச்சிக்கு உதவுங்கள்

ஞாயிறு, 1 நவம்பர், 2020

மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி - அக்ரி.கோ.ஜெயகுமார்

 

மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி

அக்ரி.கோ.ஜெயகுமார்,

மேனாள் வேளாண்மை இணை இயக்குநர்,

காந்திநகர், வேலூர் -6.

அலைபேசி எண் : 94869 38900.

 

"மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி இவன் தந்தை

என் நோற்றான் கொல் எனும் சொல்"  - குறள்.

 

அதாவது இவனை மகனாகப் பெற அவன் தந்தை என்ன தவம் செய்தானோ என்று பிறர் புகழும் வகையில் செயல் படுவதே ஒரு மகன் தன் தந்தைக்குச் செய்யும் கைம்மாறு ஆகும் என்பது இதன் பொருள்.

 

ஆனால் பெற்றோர்களை உள்ளன்போடு பராமரிக்காமல், வயதான காலத்தில் அவர்கள் சம்பாதித்து கட்டிய வீட்டை விட்டு துரத்தப்படுவதாக அவ்வப்போது செய்திகள் நாளிதழ்களிலும், தொலைக்காட்சி மூலமாகவும் வருவதை நாம் அனைவரும் பார்த்திருக்கின்றோம். உயர் நீதிமன்றத்தில் நீதிபதியாக பணியாற்றிய ஒருவரே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ள செய்தி நெஞ்சை பத பத வைக்கிறது. அதாவது தான் நீதியரசராக பணியாற்றிய அதே நீதி மன்றத்தில், தனது மகனிடமிருந்து பாதுகாப்பு கோரி வழக்கு தாக்கல் செய்த செய்தி வருத்தமான நிகழ்வாகவே கருதப்படுகிறது.

 

உத்திரப்பிரதேச மாநிலம், அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் ஏப்ரல் திங்கள் 2001 ஆம் ஆண்டில் நீதிபதியாக பதவி உயர்வு பெற்று தொடர்ந்து பணியாற்றிய பின்னர் 2008 ஆம் ஆண்டு செப்டம்பர் திங்கள் பணி நிறைவு செய்துள்ளார். இவரும் இவரது இல்லத்தரசியும் மனுதாரர்களாக இருந்து உத்திரப்பிரதேச அரசு உள்ளிட்ட நான்கு எதிர் மனுதாரர்கள் மீது, தங்கள் மகன் எங்கள் வீட்டை விட்டு எங்களை கட்டாயமாக வெளியேற்றுவதை தடுக்கக்கோரி, பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் நலன் மற்றும் பராமரிப்புச் சட்டம் 2007ன் கீழும், மூத்த குடிமக்கள் மற்றும் பெற்றோர் பராமரிப்பு விதிகள் (உ.பி)2014ன் கீழும் பரிகாரம் கோரி நீதிப்பேராணை மனு தாக்கல் செய்திருந்தார்கள்.

 

மாண்புமிகு அலகாபாத் உயர்நீதிமன்றம் இருதரப்பு வாதங்களையும் கேட்டு, வழக்கின் குறித்து எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை. மாவட்ட நடுவர் ( District Magistrate) தான் வழக்கின் தகுதி குறித்து முடிவெடுக்க வேண்டும் என்றும், இருதரப்பிலும் சுதந்திரமாக எழுப்பும் அனைத்து பிரச்சனைகளையும் பரிசீலித்து மாவட்ட நடுவர் இரண்டு மாதங்களுக்குள் தீர்மானிக்க வேண்டும் என்று மாவட்ட நடுவரான ( District Magistrate) மாவட்ட ஆட்சியருக்கு 15-10-2020 அன்று அனுப்பி வைத்து தீர்ப்பளித்துள்ளது.

 

அந்நாளில் திண்ணைப் பள்ளியில் "அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்" - "தாயிற் சிறந்த கோவிலும் இல்லை; தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை" என்றும் சொல்லிக் கொடுத்தார்கள். அறநெறி படிப்பது மறந்து, வருமானம் ஈட்ட வழி காட்டுவதே கல்வி என்றான பிறகு வாழ்வியல் விழுமியங்கள் இல்லாமல் போகிறது. உயர் வாழ்வு வாழ்ந்த நீதியரசரை வயதான காலத்தில் வீட்டை விட்டு துரத்த நினைக்கும் மகனும் கூட படித்தவராகத்தான் இருப்பார். என்ன செய்வது? இன்றைய கல்வி என்பது தகவல்கள் திரட்டுவதாகி விட்டது. அறிவையும், ஒழுக்கத்தையும், பெற்றோர்களை மதிப்பதையும் கற்றுத் தருவதில்லை.

 

உயிருடன் இருக்கும் போது தனது பெற்றோர்களை சரியாக பராமரிக்காமல், அவர்கள் இறந்த பிறகு கல்லறையில் வழிபாடு நடத்தியும், படத்திற்கு மாலை அணிவித்தும் என்ன பயன்? இறைவணக்கப் பாடலோடு தொடங்கும் பள்ளிகளில், பெற்றோர்கள் கண் கண்ட தெய்வங்கள் என்பதனையும் சொல்லித் தர வேண்டும். மதிப்பெண்கள் பெறுவதை விட, மதிப்புகளையும், மாண்புகளையும் கல்வி நிறுவனங்கள் கற்றுக் கொடுத்தால் இது போன்ற நிகழ்வுகள் ஏற்படாமல் தடுக்கலாம். மேலும் இன்றைய இளம் தலைமுறையினரும், பிற்காலத்தில் வயதான பிறகு தங்களுக்கும் இந்த நிலை ஏற்படாது என்பது என்ன நிச்சயம்?

 

எனவே சிந்திப்போம்! செயல்படுவோம்!!. நம் பெற்றோர்களை அன்போடு அரவணைத்து பாதுகாத்திடுவோம்.