4ஆம் ஆண்டில் நமது இலக்கியச்சுடர்
படைப்புகளை periyaswamydeva@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி இதழின் வளர்ச்சிக்கு உதவுங்கள்

செவ்வாய், 1 டிசம்பர், 2020

வள்ளுவமாய் வாழும் வள்ளல்கள் - முனைவர். மா.கலாமணி

 

 

வள்ளுவமாய் வாழும் வள்ளல்கள்

முனைவர். மா.கலாமணி

ஸ்ரீ வெங்கடேஸ்வரா கலை அறிவியல் கல்லூரி(தமிழ் துறை)

ஒத்தக்குதிரை, கோபி, ஈரோடு மாவட்டம்.638476

அலைபேசி- 8973695505

முன்னுரை

சங்க காலத்தில் நாட்டை ஆண்டவர்கள் மன்னர்கள், அரசர்கள் என்ற பெயரால் அழைத்தனர். குறுகிய நிலப்பகுதியை ஆட்சி செய்தவர்களை குறுநில மன்னர்கள் என்றும், பெரிய பகுதியை ஆட்சி செய்த மன்னர்களை பேரரசர்கள் என்றும் அழைத்தனர். இப்படி நாட்டை ஆண்ட மன்னர்கள் பிறருக்குக் கொடுத்து உதவும் பண்பும், பரந்த மனப்பான்மையும் கொண்டவர்களாக விளங்கினார்கள். இல்லை என்று வந்தோர்க்கு வாரி வழங்கியவர்களை வள்ளல் என அழைத்தனர். அப்படிப்பட்ட கடையேழு வள்ளல்கள் பற்றியும், அவர்களின் ஈகை பற்றியும் இக்கட்டுரையின் வாயிலாக காண்போம்.

கடையேழு வள்ளல்கள் யார்?

 முதலில் இந்த “கடை “ ஏழு வள்ளல்கள் யார்? என்பதைப் பார்ப்போம்.“கடை “ ஏழு வள்ளல்கள் என்றால் அவர்களுக்கு முன்னர் சில வள்ளல்கள் இருந்திருக்க வேண்டும் எனத் தெரிகிறது.

முதல் ஏழு வள்ளல்கள்

சகரன், காரி, நளன் , துந்துமாரி, நிருதி, செம்பியன், விராடன் ஆகியோர் முதல் ஏழு வள்ளல்கள் ஆவர்.

இடையேழு வள்ளல்கள்

அக்குரன், அந்திமான், கர்ணன், சந்தன், சந்திமான், சிசுபாலன், வக்கிரன் ஆகியோர் இடையேழு வள்ளல்கள் ஆவர்.

கடையேழு வள்ளல்களும், கொடையும்

                     பேகன்            -               மயிலுக்கு போர்வை தந்தவன்.

                     பாரி                                -                   முல்லைக்குத் தேர் தந்தவன்.

                     காரி                                -                   குதிரையை வழங்கியவன்.

                     ஓரி                  -               இரவலருக்கு நாட்டை வழங்கியவன்.

                     ஆய்                                -               நீலமணி நாகம் தந்த கலிங்கத்தை சிவனுக்கு அளித்தவன்.

                     அதியமான்    -               ஒளவைக்கு நெல்லிக்கனி.

                     நள்ளி              -               நாடி வந்தவர்களை நகைக்கச் செய்தவன்

பிறருக்குப் பொன்னை வழங்கியவன்.

சிறுபாணாற்றுப்படை

பேகன் முதலாக உள்ள ஏழு வள்ளல்களுக்குப் பிறகு அவரது வல்லமையைத் தான் ஒருவனே சுமந்து கொண்டவன் நல்லியக்கோடன். இதனை,

                எழுவர் பூண்ட ஈகைச் செந்நுகம் (சிறுபாண் – 112-113)

நல்லியக்கோடனின் அருங்குணங்கள்

o         செய்நன்றி அறிதல்

o         சிற்றினம் இன்மை

o         இன்முகம் உடைமை

o         இனியன் ஆதல்

o         அஞ்சினோர்க்கு அளித்தல்

o         வெஞ்சினம் இன்மை

o         கருதியது முடித்தல்

o         ஓதியது உணர்தல்

o         அறிவு மடல் படுதல்            

o         வரையாது கொடுத்தல்

முதலான தலைமைக் குணங்களை நல்லியக்கோடன் கொண்டிருந்தான் என சிறுபாணாற்றுப்படை கூறுகிறது.

பேகன்

வள்ளல்களின் வரிசையில்  முதலில் வருபவன் பேகன். பேகன் பொதினி(பழனி) மலைக்குத் தலைவர்.மலை வளம் மிக்க அம்மலையின் காட்டில் மயில்கள் திரிந்து கொண்டிருக்கும். ஒருநாள் அப்படித் திரிந்து கொண்டிருந்த ஒரு மயில் அகவியதைக் கேட்டு அது குளிரால் நடுங்கி அகவியது என்று  நினைத்தார். அவரகத்தே அருள் உணர்ச்சி பெருகவே, தமதுபோர்வையைத் போர்த்தினார்.மயில் போர்வையைப் போர்த்திக் கொள்ளுமா? கொள்ளாதா? எனச் சிறிதும் எண்ணிப் பாராமால் இத்தகைய செயல் செய்தார். இதனையே”கொடைமடம்” எனச் சான்றோர்போற்றிக் கூறினர்.

மழை எப்படி அனைத்து இடத்திலும் வேறுபாடு இன்றி பொழியுமோ அதைப்போல பேகன் வலியவர், மெலியவர், வேண்டியவர், வேண்டாதவர், முதியவர் என எவ்வித பாகுபாடும் பார்க்காமால் அனைவருக்கும் வழங்கும் கொடைச்சிறப்பு உடையவர்.

      கடாஅ யானைத் கழற் காற் பேகன்

      கொடைமடம் படுதல் அல்லது”(புறம்.பா. 142)

      புனத் தினை ஆயிலும் நாட! சினப் போர்க்

      கைவள் ஈகைக் கடுமான் பேக!” (புறம்.பா.  143)

பேகன் நாட்டின் சிறப்பையும், அவன் கொடைத் தன்மையையும் புறநானூற்றுப் பாடல்கள் சுட்டுகின்றன.

பாரி

வள்ளல்களின் வரிசையில் இரண்டாவதாக விளங்குபவர் பாரி. பாரி பரம்பு மலையை ஆண்ட குறுநில மன்னன். வேள்பாரி என்றும் அழைக்கப்பட்டவர்.வாரி வழங்குதல் என்றாலே பாரியைப்போல விளங்குதல் வேண்டும் என்ற சிறப்பைப் பெற்றவன். கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த குறுநில மன்னர்களில் ஒருவன் தான் பாரி. இவன் ஆட்சி செய்த பரம்பு மலையில் முன்னூற்றுக்கும் மேற்பட்ட சுற்றுவட்டாரப் பகுதிகள் இருந்தன. பாரி வாரிக் கொடுப்பதால் தான் மாரி பெய்கிறது எனக் கவிக் கபிலர் இவரைப் போற்றியுள்ளார். இவர் தாம் சென்ற வழியில், தம் தேரைத் தடுத்த முல்லைக்கொடி  ,தேரை விரும்பியதாகக் கருதி,  அம்முல்லைக்கொடி படருவதற்கு தன் தேரையே வழங்கியவன். இத்தகு இரக்கக் குணம் கொண்டவன் பாரி என்பதைப் பின்வரும் பாடல் வரிகள் புலப்படுத்துகின்றன.

      “............................. சுரும்பு உண

      நறுவீ உறைக்கும் நாக நெடுவழிச்

      சிறுவீ முல்லைக்குப் பெருந்தேர் நல்கிய

      மறம்பின் கோமான் பாரியும்” (சிறுபாண்.அடி.87-91)

அருவி நீரை விட இனிய மென்மையுடைய வேள்பாரியைப் பாடி நீ சென்றால், சிவந்த அணிகலன்கள் பலவற்றைப் பரிசாகப் பெறுவாய் என்பதனை,

            நீரினும் இனிய சாயற்

      பாரி வேள்பால் பாடினை செலினே

என்ற புறநானூற்றுப் பாடல் வரிகள் சுட்டுகின்றன.

 

அதியமான்

அதியமான் நெடுமான் அஞ்சி  என்ற முழுப்பெயர் கொண்ட அதியமான் முதிரைமலைக்குத் தலைவன். மழவர் கோமான். கரும்பைத் தமிழ்நாட்டிற்குக் கொணர்ந்தவர்களின் வழிவந்தவன். கடையேழு வள்ளல்களில் ஒருவன். தான் பெற்ற அரிய நெல்லிக்கனியை ஓளவையாருக்குக் கொடுத்துப் புகழ் பெற்றவன்.நெல்லிக்கனி உண்ட ஒளவையாரால்

      நீலமணி மிடற்று ஒருவன் போல

      மன்னுக பெரும நீயே

எனப் புகழப்பட்டான்.

அழகிய மலையையும், கூர்மையான வேலினையும், வில்வமாலையையும், வளைந்த பூணினையும் உடைய அழகு மிகுந்தவன் அதியமான் என்பதனை,

            ஊராது ஏந்திய குதிரை கூர்வேல்

      கூவிளங் கண்ணி, கொடும் பூண் எழினியும்”(புறம். பா. 158)

என்ற புறநானூறு பாடல் நூலின் வாயிலாக சுட்டுகிறது.

காரி

மலையமான் திருமுடிக்காரி என அழைக்கப்பட்டவன்.அருள்மொழி மிக்கவன். ஒளி மிக்க அச்சம் தரும் நீண்ட வேலினை உடையவன்.பெரிய கையை உடையவன் காரி. ஒலிக்கும் மணிகளையும், உலகமே வியக்கும் வகையில் போரில் தன் புகழ் மிக்க தன் குதிரைகளையும், தன் நாட்டின் நல்ல மொழிகளையும் இரவலர்களுக்கு உலகம் வியக்கும் படி கொடுத்தவன் காரி  என்னும் மன்னன் என்பதை,

            “..................... கறங்கு மணி

      வால் உளைப் புரவியொடு வையகம் மருள்

      ஈர நல் மொழி, இரவலர்க்கு ஈந்த

      அடில் நிகழ்ந்து இமைக்கும் அஞ்சு வருநெடுவேல்

      சூழல் தொடித் தடக்கை காரியும்” (சிறுபாணா. .(91-95)

என்னும் பாடல் வரிகள் சுட்டுகின்றன.

காரி என்னும் குதிரையைச் செலுத்தி பெரும் போரை வென்றவன்.மழைபோல கொடைத்தன்மைக்கொண்டவன். மறப்போரினைஉடையவன் காரி என்று அவனுடைய கொடைச் சிறப்பு என்பதனை,

      காரி ஊர்ந்து பேர் அமரக் கடந்த

      மாரி ஈகை, மறப்போர் மலையனும்” (புறம். பா. 158)

புறநானூறு பாடல் வழியாக அறியலாம்.

வலிமை பொருந்திய தேரினை உடையவன் காரி என்பதனை,

நெடுந் தேர்க் காரி காடுங்கால் முன்துறை” (அகம் .பா. 35)

பாடல் வரிகள் மூலம் காட்டுகின்றன.

ஓரி

சிறிய மலைகளை உடைய கொல்லி மலைக்குத் தலைவன் ஓரி. இவன் ஓரி என்னும் புகழ் மிக்க குதிரையை உடையவன்.காரி என்னும் புகழ் மிக்க குதிரையை உடைய காரியுடன் போரிட்டு பலமுறை வென்றான்.இறுதியில் சேரனின்துணைபெற்று போரிட்ட காரி இவனைக் கொன்றான்.

அழகிய கொடிகளில் மணம் கமழும் பூக்கள் நிறைந்த புன்னை மரங்களையும், அழகிய மலைகளை உடைய நல்ல நாட்டை கூத்தாடுவார்க்குக் கொடுத்தவன் ஓரி என்பதனை,

      “........................... நளி சினை

      நறும் போது கஞவிய நாகு முதிர் நாகத்து

      காரிக் குதிரைக் காரியொடு மலைந்த

      ஓரிக் குதிரை ஓரியும்” (சிறுபாண்.  107-111)

இம்மன்னனின் வள்ளல் தன்மையைச் சிறுபாணாற்றுப்படை சுட்டுகிறது.

உயர்ந்த அழகுமிகுந்த கொல்லி மலையை அட்சி புரிந்தவன் ஓரி என்பதனை,

            கொல்லி ஆண்ட வல்வில் ஓரியும்” (புறம்.158)

புறநானூறு எடுத்துரைக்கிறது.

அவனுடைய ஊரைப்போலவும் , மழைபோன்ற கொடைத்தன்மையும், கள்ளுவையும் கொண்ட கொல்லி மலை ஓரியின் மலை ஆகும் என்பதனை,

      மாரி வண் மகிழ் ஓரி கொல்லிக்

      கலி மயில் கலாவத்து அன்ன” (நற்றி. 265)

நற்றிணை விளக்குகிறது.

ஓரியைப்பற்றி வன்பரணரும் பாடியுள்ளார்.

ஓம்பா ஈகை விறல்வெய்யோனே” (புறம் 152)

 

அளவில்லாத யானையை பரிசாக கொடுத்ததை

 

மழையணி குன்றத்துக் கிழவன் நாளும்

இழையணி யானை இரப்போர்க்கு  ஈயும்” (புறம் 153 )

 

என்றும் ஓரியின் கொடைச் சிறப்பைக் கூறுகிறார்.

ஆய் 

இவன் பொதிய மலையினடத்து உள்ள ஆய் குடியைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்தவன். அதனால் ஆய் என்னும் பெயர் ஏற்பட்டதாகச் சிலர் கூறுவர். இவன் வலிமையான தோள்களை உடையவன். இனிய மொழிகளைப் பிறரிடத்தில் பேசி மகிழ்பவன். அரிய சிறந்த மணிகளையும், ஆடைகளையும் இவன் பெற்றிருந்தான். இறைவன் மீது கொண்ட பேரன்பால் இறைவனுக்குக் கொடுத்தான் என்பதனை,

      “.................................. நிழல் திகழ்

      ஆல் அமர் செல்வதற்கு அமர்ந்தனன் கொடுத்த

      சாவம் தாங்கிய சாந்து புலவர் திணி தோள்

      ஆர்வ நன் மொழி ஆயும்” (சிறுபாண் . அடி. (95-99)

 

என்ற வரிகள் மூலம் சிறுபாணாற்றுப்படை சுட்டுகிறது.

கழலுமாறு அணிந்துள்ள தோள் வளையினை உடையவன் ஆய் என்ற வள்ளல் ஆவான். அவனுடைய மழை மேகங்கள் தவழும் பொதியில் மலையாகும் என்பதை,

      கழல்தொடி ஆஅய் மழை தவழ் பொதியில்” (குறுந். பா. 84)

எனக் குறுந்தொகை காட்டுகிறது.

நள்ளி

வளம் செறிந்த கண்டீர நாட்டைச் சேர்ந்தவன் நள்ளி. உள்ளொன்று வைத்துப் புறம் ஒன்று பேசுவது உள்ளத்தில் கருணை இல்லாமல் பிறர்க்கு ஈதலும் பயன் தராது என்ற கொள்கை உடையவன். தன்னிடம் வந்த இரவலர்கள் மனம் மகிழ்கின்ற வகையில் பரிசுப் பொருள்களை அள்ளிக் கொடுப்பவன். தன்னிடம் வந்தவர்கள் மீண்டும் வறுமையில் வாடாதவாறும் வேறொருவரிடம் சென்று இரவாதவாறும் நிரம்பக் கொடுக்கும் இயல்பு உள்ளவன் நள்ளி என்பதனை,

            “..............................கரவாது 

      நட்டோர் உவப்ப , நடைப் பரிகாரம்

      முட்டாது கொடுத்த முனை விளங்குதடக்கை

      துளி மழை பொழியும் வளி துஞ்சு நெடுங்கோட்டு

      நளி மலை நாடன் நள்ளியும்” (சிறுபாண். 103-107)

 

என்ற சிறுபாணாற்றுப்படை அடிகள் சுட்டுகின்றன.

வலிமையுடைய தேரினை உடையவன் நள்ளி என்னும் வள்ளல் என்று,

            திண்தேர் நள்ளி கானத்து அண்டர்” (குறுந். பா. 210)

எனக் குறுந்தொகை விளக்குகிறது.

தன்னிடம்  இல்லை என்று வருவரின் வறுமையைக் கருதி அவர்களுக்கு வாரி வழங்கும் கொடைத் தன்மையும் பகைவரைத் துரத்திய வெற்றியை உடையவன் நள்ளி  என்னும்  வள்ளல் என்பதை,

      தள்ளாது ஈயும் தகைசால் வண்மை

      கொள்ளார் ஓட்டிய , நள்ளியும்” (புறம்.பா.158)

 

என்று புறநானுறு எடுத்துரைக்கிறது.               

முடிவுரை   

கடையேழு வள்ளல்கள் பெருந்தன்மை கொண்டவர்களாக இருந்துள்ளனர். தன்னை தேடி வருவோர்க்கு இல்லை என்று கூறாமல் வாரி வழங்கும் ஈகைத் திறன் கொண்டவர்களாக விளங்கினர். கடையேழு வள்ளல்களுக்கு நிகரான சிறுபாணாற்றுப்படை பாட்டுடைத்தலைவன் ஓய்மாநாட்டு நல்லியக்கோடன் என்பதையும் இக்கட்டுரை காட்டுகிறது.