4ஆம் ஆண்டில் நமது இலக்கியச்சுடர்
படைப்புகளை periyaswamydeva@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி இதழின் வளர்ச்சிக்கு உதவுங்கள்

செவ்வாய், 1 டிசம்பர், 2020

வழக்குரை காதையில் வழக்கும் தீர்ப்பும் - முனைவர் கோ. சாந்தி, T.N. ஜெயந்தி

 

 

வழக்குரை காதையில் வழக்கும் தீர்ப்பும்



முனைவர் கோ. சாந்தி                             T.N. ஜெயந்தி

நெறியாளர்                                                                               முனைவர் பட்ட ஆய்வாளர்

உதவிப்பேராசிரியர்                                                                      உதவிப்பேராசிரியர்

.கி.மு. மகளிர் கல்லூரி                                                             விஸ்டம் கல்வியியல் கல்லூரி

வேலூர்                                                                                       சேத்துப்பட்டு ரோடு

செய்யாற்றை வென்றான்

செய்யாறு- 604401.

திருவண்ணாமலை மாவட்டம்

ஆய்வுச்சுருக்கம்

மன்னன் உறையும் அரண்மனையிலிருந்த அழகு பொருந்திய சிலம்பினை ஓசைப்படாமல் கவர்ந்த கள்வன் இவனென்று (கோவலன்) ஒலிக்கும் வீரக்கழல் அணிந்த காவலர்கள் கொலை குறித்த செய்தியை ஆயமகள் கண்ணகியிடம் கூறினாள். கண்ணகி தன்னிடம் எஞ்சியிருந்த மற்றொரு சிலம்பினைக் கையின்கண் ஏந்தி நகர மாந்தரிடம் முறையிட்டு நீதிகேட்க அரசவை வந்தாள். கண்ணகி நீதிவேண்டி அரசனை நேருக்கு நேராகச் சந்தித்து முறையிடும் வழக்கமானது பண்டு நாடு முழுவதும் இருந்த ஒரு முறையாகும். அவ்வாறு நடந்த நீதிகேட்டும் நிகழ்வையும் அதற்கு கிடைத்த தீர்ப்பும் இக்கட்டுரையில் விளக்கப்பட்டுள்ளது.  சோழர் காலத்தில் நிர்வாக அதிகாரமானது பல்வேறு அமைப்புகளுக்கும் தொழிற்குழுக்களுக்கும் அளிக்கப்பட்டிருந்தது. பிரம்மதேயத்தில் தோன்றிய வழக்குகளைப் பிராமணச் சபைகளும் வெள்ளாண் வகை ஊர்களில் தோன்றிய வழக்குகளை ஊரவைகளும் விசாரித்துத் தீர்த்தன. நகரங்களின் ஆட்சி நகரத்தார் என்ற சமூக அமைப்பிடம் இருந்தது. இங்கு தோன்றிய வழக்குகள் நகரத்தார். மணிக்கிராமத்தார், ஐநூற்றுவர் முதலான வணிகக் குழுக்களால் விசாரித்தும் தீர்க்கப்பட்டன. இவ்வாறு விசாரிக்கப்பட்ட வழக்குகள் பெரும்பாலும்  கோயில்களில் நடைபெற்றமையைப் பல கல்வெட்டுகள் புலப்படுத்துகின்றன. இதனால் சோழர் காலத்தில் மைய ஆட்சி அதிகாரம் அரசன் கையிலும் பிரதேச நிர்வாகம் சபை, ஊரவை, நகரம் முதலான உள்ளாட்சி அமைப்புகளும் இருந்துள்ளன. இவ்வமைப்புகளிடையே முரண்பாடுகள் ஏற்படுமாயின் கடைசி முடிவெடுக்கும் அதிகாரம் அரசனிடமே இருந்தது. சிலப்பதிகாரத்தில் சாட்சியாக சிலம்பு மட்டுமே ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்தது. ஆனால் பெரியபுராணத்தில் ஆட்சி ஆவணம். அயலார் காட்சி என்று சாட்சியர் சட்டத்திற்குள் வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. சிலப்பதிகாரக் காலத்தில் பருப்பொருளான சிலம்பின் உரிமையாளரைக் காணுவதில் ஏற்பட்ட சிக்கல் பெரியபுராணத்தில் ஆவணத்தின் மூலமாகத் தீர்க்கப்படுகிறது.

முக்கியச்சொற்கள்

இரட்டைக்காப்பியங்கள், சிலப்பதிகாரம், வழக்குரைகாதை, குற்றம் சுமத்துபவர்/ மறுப்பவர்/ நடுவர், வழக்கின் வகைப்பாடு, வழக்கிடல், மறுப்புரை, தீர்ப்பு

முன்னுரை

மன்னன் உறையும் அரண்மனையிலிருந்த அழகு பொருந்திய சிலம்பினை ஓசைப்படாமல் கவர்ந்த கள்வன் இவனென்று (கோவலன்) ஒலிக்கும் வீரக்கழல் அணிந்த காவலர்கள் கொலை குறித்த செய்தியை ஆயமகள் கண்ணகியிடம் கூறினாள். கண்ணகி தன்னிடம் எஞ்சியிருந்த மற்றொரு சிலம்பினைக் கையின்கண் ஏந்தி நகர மாந்தரிடம் முறையிட்டு நீதிகேட்க அரசவை வந்தாள். கண்ணகி நீதிவேண்டி அரசனை நேருக்கு நேராகச் சந்தித்து முறையிடும் வழக்கமானது பண்டு நாடு முழுவதும் இருந்த ஒரு முறையாகும். அவ்வாறு நடந்த நீதிகேட்டும் நிகழ்வையும் அதற்கு கிடைத்த தீர்ப்பும் இக்கட்டுரையில் விளக்கப்பட்டுள்ளது.

குற்றம் சுமத்துபவர்/ மறுப்பவர்/ நடுவர்

வழக்குரை காதையில் குற்றம் சுமத்துபவளாகக் கண்ணகியும் குற்றத்தை மறுப்பவராகவும் நடுவராகவும் மன்னனும் இருக்கின்றனர். அரசனே எதிர்வாதியாகவும் நடுவராகவும் இருப்பது முடியாட்சிக் காலத்தில் நீதிமுறை செம்மையுறாத நிலையில் இருந்தமையேயாகும். இதனைத்தான் பாரதிதாசன் "அரசனுக்கும் எனக்குமொரு வழக்குண்டாக அவ்வழக்கைப் பொதுமக்கள் தீர்ப்பதேதான் சரியென்றேன்" (பாரதிதாசன் கவிதைகள், புரட்சிக்கவி, .33) என்று மக்களாட்சித் தத்துவத்தில் நீதித்துறையையும் சேர்க்கிறார். அரசனே எதிர்வாதியாக இருந்து வழக்காடினும் நடுவனாக அமர்ந்து தீர்ப்பு வழங்குகையில் நேர்மை தவறாமல் தீர்ப்பு வழங்கினான் என்கிறது சிலப்பதிகாரம். பாண்டியன் நெடுஞ்செழியன் தன் தவறுணர்ந்து தவறுக்கு இழப்பீடாகத் தன் உயிரையே வழங்கினான்.

வழக்கின் வகைப்பாடு

வழக்குரை காதையை அரசனால் முன்னரே வழங்கப்பட்ட தீர்ப்பினை எதிர்த்து நடக்கும் மேல்முறையீட்டு வழக்கு என்றும் மறு ஆய்வு என்றும் கட்டுகிறார் வி. ஆர். எல். சம்பத் (வி.ஆர்.எஸ். சம்பத், தமிழ்நாட்டில் நீதிமுறை ஒரு வரலாற்றுப் பார்வை, .48) கீழ்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் நிறைவு பெறாத ஒருவர் அந்த நீதிமன்றத்திற்கு மேலதிகாரம் படைத்த நிதிமன்றத்தில் தம் வழக்கைப் பதிவு செய்வதைத்தான் மேல்முறையீடு எனலாம். ஆனால் ஒரு நீதிமன்றத்தில் வழங்கிய முடிவை எதிர்த்து அந்த நீதிமன்றத்தின் முன்னர் மீண்டும் (இரண்டாவது நிலையில்) அவ்வழக்கினைத் தொடுப்பது தீர்ப்பை மறு ஆய்வு செய்வதற்குக் கோரும் வழக்காகக் கொண்டு 'மறு ஆய்வு வழக்கு' (Revision) என்கிறார் மு.முத்துவேலு" (இராம குருநாதன், . முத்துகுமாரசுவாமி, (தொ.) சிலப்பதிகாரம் ஆய்வுக்கோவை, .223) இந்நூலாசிரியர்கள் அரசன் ஊர்க்காவலனிடம் தாழ்பூங்கோதை தன்காற் சிலம்பு கன்றிய கள்வன் கையது ஆகின் கொன்று அச்சிலம்பு கொணர்க என்று ஆணையிடுவதை முதனிலை வழக்காகக் கருதுகின்றனர்

'பொற்கொல்லனால் குற்றம் சுமத்தப்பட்ட கோவலனிடம் அரசியின் சிலம்பு இருந்தால் அவனைக் கொன்று சிலம்பினைக் கொண்டு வருமாறு அரசன் கூற,  காவலர்களும் விசாரணை ஏதுமின்றிக் கொன்றுவிடுகின்றனர். இதனால் இவ்விடத்தில் வழக்கு நடைபெற்றதற்கான தடயங்கள் ஏதுமின்மையால் கொலைக்களம் காதையை முதலேற்பு வழக்காகக் கொள்ளமுடியவில்லை. கோவலனைக் கள்வனென்று பழிசுமத்தி 'காவலில் கொலை போலக் கொல்லப்பட்டதால் ஏற்பட்ட வழக்காகக் கருதி வழக்குரை காதையை முதலேற்பு வழக்காகக் கொள்ள வேண்டியுள்ளது.

விளிமுறை

கோவலனைக் கள்வனென்று கூறிக் கொன்றார்களே என்று சீற்றத்தோடு வழக்குரைக்க வந்த கண்ணகி பாண்டியன் நெடுஞ்செழியனைக் கண்டதும் அவன் இழைத்த அநீதி கண்முன் தொன்ற அவன் நடுவன் என்ற எண்ணத்தைவிட அவனை குற்றவாளி என்ற உயர்வு மேலோங்க தேரா மன்னா (சிலம்பு 20:50) என்று விளிக்கிறாள். வழக்கில் சான்றினை நிறங்கக முயலும்போதும் நற்றிறம் படராக் கொற்கை வேந்தே (சிலம்பு 20:66) என்று அவன் நீதி பிழைத்ததை நினைவூட்டுகிறாள். தேரா மன்னா என்ற சொற்றொடரைக் குறித்து மு.முத்துவேலு குறிப்பிடும்போது  இன்று என் தலைவா, என் இறைவா (My lord) என்ற நீதிபதியை அழைப்பது போல் முடியாட்சி நாளிலும் மரியாதையாக அழைப்பதுதான்  மரபு, இருப்பினும் இவ்வழக்கில் கண்ணகி இவ்வாறு அழைப்பதற்குகட காரணம் நீ முன்பு ஆராயாது வழங்கிய தீர்ப்பை எதிர்த்து எழுந்து வந்துள்ளேன்' என்று குறிப்புப் பொருள்தான் என்கிறார்" (இராம குருநாதன், . முத்து குமாரசுவாமி, (தொ.) சிலப்பதிகாரம் ஆய்வுக்கோவை, .223)

வழக்கிடல்

வழக்குரை காதையில் இடம்பெறும் வழக்குரையானது நாம் இன்று நீதிமன்றத்தில் பதிவு செய்யும் ஆணையுறுதி ஆவணத்தை (Affidavit) ஒத்துள்ளது என்பார் மு. முத்துவேலு.

நாடு : சோழநாடு

ஊர்  : புகார் (பூம்புகார்)

கணவன்  : கோவலன் த/பெ மாசாத்துவான்

தொழில்  : வாணிகம்

பாண்டிநாடு வந்ததன் நோக்கம் : வாழ்தல் வேண்டி

குற்றம்    : மதுரையில் புகுந்து என் காற்சிலம்பு விற்க வந்தபோது கொலைக்களத்தில் வெட்டுண்டு மாண்ட கோவலனது கொலைக்கு நீதிவேண்டி

என்பெயர் : கண்ணகி க/பெ கோவலன்"

(இராம குருநாதன், . முத்து குமாரசுவாமி, (தொ.) சிலப்பதிகாரம் ஆய்வுக்கோவை, .224)

மறுப்புரை

நான் 'கள்வனைக் கொன்றது கொடுங்கோல் அல்ல: வெள்ளிய வேலால் இயன்ற அரசியல் நீதியேயாகும் (. சரவணன்(பதிப்பும் உரையும்), சிலப்பதிகாரம், .346) என்று மறுத்துரைக்கிறான் மன்னன்.

வழக்கெழு வினா

வழக்கில் விடைகாண வேண்டிய முக்கிய வினாவே தீர்ப்பிற்கு அடிப்படை இவ்வழக்கில் வழக்கெழு வினாவாக எழுந்தது கோவலன் கள்வனா? கொலை செய்யப்பட்ட கோவலன் கையில் இருந்தது அரசியின் சிலம்பா? இல்லையெனில் அச்சிலம்பு யாருடையது? கோவலனைக் கொன்றது கொலைக்குற்றமா?

குற்றம் சுமத்துபவர் சான்று

என் கணவன் கள்வன் அல்லன் எனது காற்சிலம்பை விலைகொடுத்து வாங்க முடியாது கள்வன் என்று பழி சுமத்திக் கொன்றுவிட்டனரே இஃது ஓர் அநியாயம் நெடுஞ்செழியன்மீது நகர மாந்தரிடம் குற்றம் சுமத்துகின்றாள். (. சரவணன்(பதிப்பும் உரையும்), சிலப்பதிகாரம், .335) அதற்குச் சான்று காட்ட இணை அரி சிலம்பொன்றைத் தன் கையில் அரசவைக்கு எடுத்து வந்தாள்.

சான்று காட்டல்

குற்றம் சுமத்துபவரே சான்றினை நிரூபிக்க வேண்டும் என்ற கொள்கைப்படி 'என்னால் அணியப் பெற்றதும் உன்னால் கைப்பற்றப்பட்டதுமாகிய சிலம்பு மாணிக்கப் பரல்களைக் கொண்டது. (. சரவணன்(பதிப்பும் உரையும்), சிலப்பதிகாரம், .348) என்றாள் கண்ணகி,

குற்றம் மறுப்பவர் சான்று

கள்வன் என்பதால்தான் கோவலனைக் கொன்றேன். 'கோவலன் திருடியது பாண்டிமாதேவியின் சிலம்பு. அச்சிலம்பு முத்துப் பரல்களைக் கொண்டதாகும் என்றுகூறி, தன் ஏவலரை நோக்கி கோவலனிடமிருந்து கைப்பற்றிய சிலம்பினைக் கொணர்க என்று வாங்கிக் கண்ணகியின்முன் வைத்தான்'. (. சரவணன்(பதிப்பும் உரையும்), சிலப்பதிகாரம், .349) வழக்கின்போது பாண்டிமாதேவியும் உடனிருந்தாள். பாண்டிமாதேவிதான் அவளுடைய சிலம்பை நன்கு அறிந்தவள் என்றும் அரசன் தப்பிவிடுவான் என்றும் எண்ணி இளங்கோ நுணுக்கமாகக் காட்டுகிறார்.

சான்று நிரூபணம் (மெய்யுறுத்தம் Proof)

பாண்டியன்மீது குற்றம் சுமத்திய கண்ணகி அவனால் 'கைப்பற்றப்பட்ட சிலம்பினை எடுத்து மன்னன் முன்னிலையில் உடைத்தாள். அச்சிலம்பினுள் இருந்த முத்துப் பரல்களுள் ஒன்று அரசனுடைய வாயிதழில் பட்டுத் தெறித்தது'' (. சரவணன்(பதிப்பும் உரையும்), சிலப்பதிகாரம், .349)

முன் தீர்ப்பு நெறி

கள்வன் என்று குற்றம் சாட்டிக் கோவலனைக் கொன்ற பாண்டியனுக்கு மரண தண்டனைதான் சரியானது. கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல், உயிருக்கு உயிர் என்று முறை வேண்டினாள் கண்ணகி. இதற்கெனச் சில முன் தீர்ப்புகளையும் எடுத்துரைத்து வழக்குரைக்கும் போதே இதனை மேற்கோள் வழக்கைத் தொடங்குகிறாள். இதனைச் சோழநாட்டின் புகழை விதந்துரைக்கும்போது குறிப்பாகப் புலப்படுத்திவிடுகிறார்

வாதுரை

அடைக்கலம் புகுந்த புறாவிற்காக உயிரை வழங்கியவன் சோழன், பாண்டிய நாட்டில் அடைக்கலம் தேடி வந்தவரைக் கொன்றது. முறையாகுமா? பிறநாட்டுக் குடிமக்களையும் தன்மக்களாகக் கருத வேண்டும். பாதுகாக்க வேண்டும். அறியாமல் செய்த தவறுக்காகத் தன் மகனையே கொன்று விலங்கினத்திற்கு நீதி வழங்கியவர்கள் சோழநாட்டார். மனிதனை ஆராயாது கொன்றதற்கு அரசனானாலும் மரண தண்டனையே ஏற்கத்தக்கது என்று வாதாடினாள் கண்ணகி.

மரண தண்டனை நிறைவேற்றம்

மாணிக்கப் பரல் சிதறியதைக் கண்ட பாண்டியன், "என் வெண்கொற்றக் குடை தாழ்ந்துவிட்டதே! என் செங்கோல் நீதி தவறிவிட்டதே பொற்கொல்லன் கூறிய சொல்லை ஆராயாது அதனை உண்மையென்று நம்பிய யானோ அரசன்? இல்லை யானே கள்வன் மக்களைப் பாதுகாக்கின்ற இத்தென்தமிழ்நாட்டுக் காவல் என்னை முதலாகக் கொண்டு தவறிவிட்டது. ஆதலால் எனது ஆயுள் இப்பொழுதே முடிவதாகுக" (. சரவணன்(பதிப்பும் உரையும்), சிலப்பதிகாரம், .350) என்று கூறி மயங்கி வீழ்ந்தான் உயிர் துறந்தான். கண்ணகி வழக்குரைத்த சொற்கள் தன் செவியில் புகுந்தபோதே உயிரை நீத்து தண்டனையை நிறைவேற்றி வைத்தான். 'பட்டாங்கு யானும் ஓர் பத்தினியே ஆமாகில் ஓட்டேன் அரசோடு ஒழிப்பேன் மதுரையும் (சிலம்பு 21:36-37) என்று சூளுரைத்து வெற்றி பெற்றாள்.

நெடுஞ்செழியன் வழங்கிய தீர்ப்பு திருவள்ளுவர் வரையறை செய்யும் நீதி பற்றிய கொள்கையைத் தழுவி இருந்தது. வழக்குரை காதையில் தன் கணவனைக் கள்வனென்று கொன்றதற்காகப் பாண்டியன்மீது கொலைக்குற்றம் சாட்டுகிறாள் கண்ணகி. பாண்டியன் கோவலனைக் கள்வன் என்று வாதிடுகிறான். இவ்வழக்கில் பாண்டியன் வழக்கின் கூறுகளை ஆராய்கிறான். கோவலனிடமிருந்து கைப்பற்றப்பட்ட சிலம்பினை ஆராய்கிறான். சிலம்பு மாணிக்கப் பரல்களைக் கொண்டதா? முத்துப் பரல்களைக் கொண்டதா? என்ற விவாதம் நடக்கிறது. கண்ணகி சிலம்பை உடைத்து மாணிக்கப் பரல்களை எடைய சிலம்புதான் காவலனால் கைப்பற்றப்பட்ட சிலம்பு என்று நிரூபிக்கும்போது அரசன் வழக்கினை ஓர்கிறான். இவ்வழக்கில் கண்ணன் கன்நாட்டுக் குடிமகளா? சோழநாட்டுக் குடிமகளா? என்ற வேறுபாடு காட்டாது காட்சிக்கு எளியனாய் இருந்து வழக்கினை விசாரிக்கிறான். இது முறை செய்வோருக்குக் கண்ணோட்டம் கூடாது என்ற கூறினை ஒத்திருக்கிறது. வழக்கில் சம்பந்தப்பட்டவர் அரசனாயினும் குடிமக்களாயினும் நடுவுநிலையோடு விசாரித்தல் வேண்டும். அரசனுக்கு ஒரு நீதி பிறநாட்டிலிருந்து அடைக்கலமாகப் பிழைக்க வந்தவருக்கு ஒரு நீதி என்று இல்லாமல் நடுவுநிலையோடு வழக்குரை காதையில் வழக்கு விசாரிக்கப்பட்டுள்ளது. நீதிநூலில் கூறப்பட்ட தண்டனை எது என்று அறிந்து உயிருக்கு உயிர் என்ற முறைப்படி அரசன் நீதி வழங்கினான். கொடியாருக்குக் கொலைத்தண்டனை விதிக்க வேண்டும் என்ற குறளின்படி வழக்கு அமையாமல், கள்வனென்று கூறிச் சிலம்பினைக் கவர்ந்துகொண்டான் என்று கண்ணகி அரசன்மீது கூறிய குற்றச்சாட்டு பொருந்துமாறு வழக்கு செல்நெறி அமைந்துவிட்டதால் கொலையுடன் களவு புரிந்தவனுக்கு வழங்கும் உச்சபட்ச தண்டனையைத் தேர்ந்து அரசன் தான் ஏற்றுக்கொண்டான். இவ்வழக்குரை காதையில் அரசன்விதித்த தீர்ப்பானது 'ஓர்ந்து  கண்ணோடாது இறைபுரிந்து யார்மாட்டும் தேர்ந்து செய்வஃதே முறை (குறள்.541) என்ற குறளின் கருத்திற்குப் பொருந்த அமைந்துள்ளது.

சாட்சியச் சட்ட வளர்ச்சி

சிலப்பதிகாரத்தில் வழக்குரை காதை நீதிநிர்வாகம் சாந்த வழக்கு நடைமுறைச் சட்ட மொழிநடையை விளக்குவது போலப் பெரியபுராணத்தில் நீர் சார்ந்த ஆவண மொழிநடையோடு சிறப்பு அமைத்துள்ளது எனலாம்

"அருமறை நாவல் ஆதி சைவன் ஆரூரன் செய்கை

பெருமுனி வெண்ணெய் நல்லூர்ப் பித்தனுக் கியானும் என்பால்

வருமுறை மரபுகளோடும் வழித்தொண்டு செய்தற் கோலை

இருமையால் எழுதி நேர்ந்தேன் இதற்கிவை என் எழுத்து

(பெரியபுராணம், தடுத்தாட்கொண்ட புராணம், 205)

என்பது அவண மொழிநடையில் அமைந்துள்ளது. இதன்பொருள் "திருநாவலூரில் இருக்கின்ற ஆதி சைவனாகிய ஆரூரன் என்கிற நான் திருவெண்ணெய்நல்லூரில் இருக்கின்ற பித்தனுக்கு நானும் என் சந்ததியரும் வழித்தொண்டு செய்வதற்கு உள்ளும் புறமும் ஒப்ப உடன்பட்டு எழுதிக் கொடுத்தேன். இப்படிக்கு ஆரூரன் (செ.. கணபதி, பண்டைத் தமிழகத்தில் சட்டமும் நீதியும், .115) என்று உரைநடைப்படுத்தி எழுதியிருப்பதால் ஆவண மொழிநடை அக்காலத்திலேயே சிறப்புற்று விளங்கியிருந்தமையை அறியலாம்.

சிலப்பதிகாரத்தில் கண்ணகி அரசனிடம் முறையிட சுந்தரர் வழக்கில் அந்தணர் அவையிடம் வழக்கிடக்கூடிய வேறுபாடு காணப்படுகிறது என்கிறார் பொ. வேல்சாமி. இதற்குக் காரணமாக நாம் கீழ்க்கண்டவற்றைக் குறிப்பிடலாம். சிலப்பதிகாரத்தில் வழக்கானது அரசனுக்குச் சம்பந்தப்பட்ட சிலம்பின் காரணமாக இருப்பதும் நாட்டின் மைய அதிகாரம் அரசனிடம் குவிந்திருப்பதுமே ஆகும். சிலப்பதிகாரத்தின் பிற்பகுதி மையப்படுத்தப்பட்ட அதிகாரம் பல்வேறு அமைப்புகளுக்கும் தொழில் குழுக்களுக்கும் பகிர்ந்தளிக்க வேண்டிய நிலையில் இருந்தமையைச் சிலப்பதிகாரம் புலப்படுத்துகிறது. இக்காலகட்டத்தில் வணிக மன்றங்கள் விசாரித்துத் தீர்ப்பு வழங்கியதை நாம் சிலப்பதிகாரத்தில் காண்கிறோம். பண்டசாலையில் திருடியவனையே அப்பண்டத்தைத் தலையில் சுமந்து வீதியைச் சுற்றிவரச் செய்து  தண்டிப்பதை மன்றம் வழக்கமாகக் கொண்டிருந்ததைச் சிலப்பதிகாரத்தில் இடம்பெறும் ஐவகை மன்றமும் நிர்வாகப் பிரிவு தோன்றியதற்கான சுவட்டினை நமக்குத் தருவதாகக் கருதலாம். மையப்படுத்தப்பட்ட ஆட்சியின் சிதையில் தோன்றிய நூலாக சிலப்பதிகாரத்தைக் கருதலாம்.

முடிவுரை

சோழர் காலத்தில் நிர்வாக அதிகாரமானது பல்வேறு அமைப்புகளுக்கும் தொழிற்குழுக்களுக்கும் அளிக்கப்பட்டிருந்தது. பிரம்மதேயத்தில் தோன்றிய வழக்குகளை பிராமணச் சபைகளும் வெள்ளாண் வகை ஊர்களில் தோன்றிய வழக்குகளை ஊரவைகளும் விசாரித்துத் தீர்த்தன. நகரங்களின் ஆட்சி நகரத்தார் என்ற சமூக அமைப்பிடம் இருந்தது இங்கு தோன்றிய வழக்குகள் நகரத்தார். மணிக்கிராமத்தார், ஐநூற்றுவர் முதலான வணிகக் குழுக்களால் விசாரித்தும் தீர்க்கப்பட்டன. இவ்வாறு விசாரிக்கப்பட்ட வழக்குகள் பெரும்பாலும்  கோயில்களில் நடைபெற்றமையைப் பல கல்வெட்டுகள் புலப்படுத்துகின்றன. இதனால் சோழர் காலத்தில் மைய ஆட்சி அதிகாரம் அரசன் கையிலும் பிரதேச நிர்வாகம் சபை, ஊரவை, நகரம் முதலான உள்ளாட்சி அமைப்புகளும் இருந்துள்ளன. இவ்வமைப்புகளிடையே முரண்பாடுகள் ஏற்படுமாயின் கடைசி முடிவெடுக்கும் அதிகாரம் அரசனிடமே இருந்தது. சிலப்பதிகாரத்தில் சாட்சியாக சிலம்பு மட்டுமே ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்தது. ஆனால் பெரியபுராணத்தில் ஆட்சி ஆவணம். அயலார் காட்சி என்று சாட்சியர் சட்டத்திற்குள் வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. சிலப்பதிகாரக் காலத்தில் பருப்பொருளான சிலம்பின் உரிமையாளரைக் காணுவதில் ஏற்பட்ட சிக்கல் பெரியபுராணத்தில் ஆவணத்தின் மூலமாகத் தீர்க்கப்படுகிறது.

துணைநின்ற நூல்கள்

1.      சரவணன், ., (பதிப்பும் உரையும், சிலப்பதிகாரம், சந்தியா பதிப்பகம், சென்னை, பதி.2008.

2.      பரிமேலழகர், (.)., திருக்குறள், கழக வெளியீடு, சென்னை, பதி.1956.

3.      கணபதி, செ.மா, பண்டைத் தமிழகத்தில் சட்டமும் நீதியும், கழுகுமலை, தூத்துக்குடி, சங்கத்தமிழ்ப் பதிப்பகம், பதி.2005.

4.      குருநாதன், இராம. முத்துக்குமாரசாமி, ., (தொ.), சிலப்பதிகார ஆய்வுக்கோவை, பழநியப்பா பிரதர்ஸ், சென்னை, பதி.2004.

5.      சம்பத், வி.ஆர்.எஸ்., தமிழ்நாட்டில் நீதிமுறை ஒரு வரலாற்றுப் பார்வை, சட்டக்கதிர் வெளியீடு, சென்னை, பதி.2004.

6.      பாரதிதாசன், பாரதிதாசன் கவிதைகள், மணிவாசகர் பதிப்பகம், சென்னை, பதி.2002.