4ஆம் ஆண்டில் நமது இலக்கியச்சுடர்
படைப்புகளை periyaswamydeva@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி இதழின் வளர்ச்சிக்கு உதவுங்கள்

செவ்வாய், 1 டிசம்பர், 2020

அப்பா கற்ற பாடம் அக்ரி.கோ.ஜெயகுமார்

 

 

அப்பா கற்ற பாடம்

அக்ரி.கோ.ஜெயகுமார்,

மேனாள் வேளாண்மை இணை இயக்குநர்,

காந்திநகர், வேலூர் -6.

அலைபேசி எண் : 94869 38900

மூத்தோருக்கும் ஆசாபாசங்கள் உண்டு. அவற்றை நாம் மதிக்க கற்றுக் கொள்ள வேண்டும்.  

அம்மா! நான், உங்க மருமக மற்றும் பேத்தி மூன்று பேரும் ஷாப்பிங் மால் போகப் போகிறோம். நீங்க வீட்டை பார்த்திப்பிங்க தானே? என கேட்டேன். சரிப்பா! நான் எங்கே அங்கெல்லாம் வர முடியும். எனக்கோ வயசாயிடுச்சு தானே? கால் வலி வேற படுத்தி எடுக்குது! எனக்கும் மாலுக்கு வர்றதுக்குப் பிடிக்காது. நீங்க எல்லோரும் போயிட்டு வாங்க என்றாள் அம்மா.

ஆனால் பேத்தியோ! ஏன் பிடிக்காது? பாட்டியும் ஷாப்பிங் மாலுக்கு கண்டிப்பாக வரணும் என அடம் பிடித்தாள். பாட்டியால அங்கெல்லாம் ஏறி இறங்க முடியாதும்மா? அவங்களுக்கு எஸ்கலேட்டர்ல ஏறத்தெரியாது! அது இல்லாம அவுங்க பார்த்து சந்தோஷப்படறத்துக்கு அங்கே பெரிசா ஒண்ணுமில்ல! அவுங்களுக்கு கோயிலுக்கு போறது தான் பிடிக்கும். நாளைக்கு அவுங்கள நானே கோயிலுக்கு அழைச்சிட்டு போறேன் என்றாள் அம்மா. பாட்டியும் மருமகள் சொன்னதற்கு ஆமாம்! ஆமாம் என்று தலையாட்டி ஆமோதித்தார். உடனே பேத்தி அப்போ, பாட்டி வரலேன்னா? நானும் மாலுக்கு வரலை. நீங்க இரண்டு பேர் மட்டும் போயிட்டு வாங்கபாட்டிக்கு துணையா இங்கேயே நான் இருக்கேன் என்று அடம் பிடித்தாள்.

பத்து வயது பேத்தி! ஒரே பேத்தி! தொடர்ந்து அடம் பிடித்ததால், அவள் விருப்பத்துக்கு ஏற்ப பாட்டியும் ஷாப்பிங் மாலுக்கு வர ஒப்புக்கொள்ள, பேத்தியும் சந்தோஷ மிகுதியால் துள்ளிக்குதித்தாள். அப்பாவும் சரியென்று சொல்லி அனைவரையும் புறப்பட தயாராகச் சொன்னார். பேத்தி சீக்கிரம் உடை உடுத்திக் கொண்டு வந்தாள். பாட்டியும் தயாராக வந்தார். அப்பாவும், அம்மாவும் புறப்பட ரெடியாகும் போது, பேத்தி பாட்டியை அழைத்துக் கொண்டு முன்னறைக்கு வந்தாள். சாக் பீஸால் ஒன்னரை ஜான் அகலத்துக்கு இரண்டு கோடுகள் போட்டாள். பாட்டி, இங்க பாருங்க! இது ஒரு விளையாட்டு! இப்ப நீங்க ஒரு கொக்கு! சரியா? இந்த இரண்டு கோடுகளுக்கும் நடுவுல உங்க வலது காலை வைத்து இடது காலை லேசாக மூணு இன்ச் தூக்கினா போதும். செய்யுங்க? இது எதுக்கும்மா? என்றாள் பாட்டி. இது தான் கொக்கு விளையாட்டு பாட்டி. நானும் செய்யறேன் என்று செய்து காட்டினாள். பாட்டியும் பேத்தி சொன்ன கொக்கு விளையாட்டை விளையாடிப் பார்த்தார். கால் டாக்சி வீட்டு வாசலில் வந்து நிற்க, மகனும், மருமகளும் வர வீட்டைப் பூட்டி விட்டு ஷாப்பிங் மாலுக்கு அனைவரும் புறப்பட்டுச் சென்றார்கள். 

ஷாப்பிங் மாலுக்கு சென்றார்கள். அங்கே நகரும் படிக்கட்டுகள் அதாவது எஸ்கலேட்டர்கள் நகர்ந்துக் கொண்டேயிருந்தன. இதில் எப்படி அம்மா ஏறுவார் என மகனும், மனைவியும் யோசித்துக் கொண்டிருக்கும்போதே, பேத்தி மட்டும் பாட்டியை எஸ்கலேட்டர் அருகே மெதுவாக அழைத்துச் சென்றாள். பாட்டி! இதுல பயப்பட ஏதுமில்லை! வீட்டில விளையாடின கொக்கு விளையாட்டை இப்ப நீங்க விளையாடுங்க என்றாள். பாட்டி கைப்பிடியை பிடித்துக்கொண்டு வலது காலை நகரும் படிக்கட்டில் வைத்து இடது காலை மூன்று இன்ச் மேலே தூக்கினார். மேலே நகர்ந்தார். இடது காலையும் வைத்து இரண்டு காலால் நின்றார். எஸ்கலேட்டரில் அம்மா பூப்போல நகர்வதைப் பார்த்து மகனும் மனைவியும் பார்த்து வியந்து பூரித்துப் போனார்கள்.

பாட்டி உற்சாகமாகி விட்டார். அடுத்தடுத்த எஸ்கலேட்டரில் மகிழ்ச்சியாக குதித்துக் கொண்டே சிறு பெண் போல ஏறினார். அதைப் பழகிக்கொள்ள பாட்டியும் பேத்தியும் கீழே இறங்கி மேலே ஏறினார்கள். பின்னர் சினிமா பார்க்க சென்றார்கள். ஏ.சி அரங்கினுள் குளிர் அதிகமாக இருந்ததினால் பாட்டி நடுங்கினாள். உடனே பேத்தி தன் பையில் வைத்திருந்த சால்வையை எடுத்து பாட்டிக்கு போர்த்தினாள். இதை எப்போ கொண்டு வந்தே! என பாட்டி கேட்டதற்கு All details I know பாட்டி என்றாள் கண் சிமிட்டிய படியே! படம் பார்த்து முடிந்த பிறகு உணவகம் சென்றார்கள். அம்மா உங்களுக்கு என்ன ஆர்டர் பண்ணட்டும் என்று மெனு கார்டைப் பார்த்தபடியே மகன் கேட்டார். உடனே பேத்தி மெனுகார்டைப் பிடுங்கி பாட்டியிடம் கொடுத்தாள். ஏன்? பாட்டிக்கு இங்கிலிஷ் படிக்கத் தெரியாதா? அவுங்களுக்கு பிடிச்சதை அவுங்க ஆர்டர் பண்ணட்டும் என்றாள்.

பாட்டி மெனு கார்டைப் பார்த்து விரும்பிய உணவை ஆர்டர் செய்ய பேத்தியுடன் சேர்ந்து ஆர்வமாக சாப்பிட்டார். பின் மாலில் வீடியோ கேம்ஸ்ஸை பாட்டியும் பேத்தியும் சேர்ந்து குதூகலமாக  விளையாடினார்கள். வீட்டிற்கு கிளம்பும் நேரத்தில் பாட்டி டாய்லெட் சென்றார். அப்போது தன் பத்து வயது மகளைப் பார்த்து என் அம்மாவைப் பத்தி என்ன விட உனக்கு நிறைய தெரிஞ்சிருக்கே செல்லம் என்று சொல்லி சிரித்தார். அப்பா! அங்கே பாருங்க! அந்த குட்டிப்பாப்பாவை அந்த ஆண்ட்டி கூட்டிட்டு வரும் போது எவ்வளவு முன்னேற்பாடுகள் செய்துட்டு வர்றாங்க? பால் பாட்டில், துடைக்க துண்டு, டயபர்ஸ், மாற்று சட்டை இப்படி எவ்ளோ ஏற்பாடுகள். நீங்க குழந்தையா இருந்தப்போ, பாட்டியும் இப்படித்தானே செய்திருப்பார்கள். அது மாதிரி தான். பாட்டியை வெளியே கூட்டிட்டு போகும் போது பாட்டியை கவனிக்க நீங்க அக்கறை எடுங்க? அதை ஏன் செய்யறதில்லை என்றாள். 

எல்லோருக்கும் ஷாப்பிங் மால் பார்க்க ஆசையாகத்தான் இருக்கும். நீங்களாகவே, வயசானவங்க கோயிலுக்குத்தான் போவாங்க, ஜாலியா இருக்க மாட்டாங்கன்னு நினைச்சிக்காதீங்க? அவுங்க வரலேன்னு சொன்னாலும் மனசுக்குள்ளே ஆசை இருக்கத்தானே செய்யும். நீங்க தான் வற்புறுத்தி அழைத்து வரணும் அப்பா என்றாள். 

தன் பத்து வயது மகளிடம் புதிதாக பாடம் கற்றுக் கொண்ட மகிழ்ச்சியில் நெகிழ்ந்திருந்தார் அப்பா.