4ஆம் ஆண்டில் நமது இலக்கியச்சுடர்
படைப்புகளை periyaswamydeva@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி இதழின் வளர்ச்சிக்கு உதவுங்கள்

செவ்வாய், 1 டிசம்பர், 2020

மேலைநாட்டவரும் இந்துக்கலைகளும் - செல்வி. நிதுஷாளினி மனோகரன்

 

 

மேலைநாட்டவரும் இந்துக்கலைகளும்

செல்வி. நிதுஷாளினி மனோகரன் B.A(Hons)

தற்காலிக உதவி விரிவுரையாளர்

இந்துநாகரிகத்துறை,

கிழக்குப் பல்கலைக்கழகம், இலங்கை

 

இந்து மதம் மிகப்பழமையான வரலாற்றைக் கொண்டுள்ளது. அந்தவகையில் இந்திய நாட்டில் தோற்றம் பெற்ற இந்துசமயமும் அதன் பண்பாடுகளும் தான் தோன்றிய  பரதகண்டப்பகுதி மற்றும் இலங்கை முழுவதிலும் செல்வாக்குப் பெற்று தென்கிழக்காசிய நாடுகளிலும் சிறப்புற்றது. மேலும் அதற்கப்பால் மேலைநாடுகளிலும் வியாபகம் பெற்று பண்பாட்டு அம்சங்கள் அனைத்தையும் மேன்மையடையச் செய்து பரவியமைக்கான சான்றுகள் பல காணப்படுகின்றன.

இந்தியா எண்ணற்ற வளங்களின் நாடு அதன் வளங்களில் தலையாயது கலைவளமாகும். அவ்வகையில் இந்தியாவில் தோன்றிய பிரசித்தமான கலைகளாக கட்டடக்கலை, இசைக்கலை, நடனக்கலை, சிற்பக்கலை, ஓவியக்கலை போன்றவற்றைக் குறிப்பிடலாம். இக்கலைகள் எவ்வித தொழில்நுட்பவசதிகளும் இல்லாத காலகட்டத்தில் எழுச்சிபெற்று இன்று உலகமும் விஞ்ஞானிகளும் வியக்கும் வண்ணம் மிளிர்கின்றன. இத்தகைய கலைகளுக்கு எடுத்துக்காட்டாக இந்தியாவில் பலகலை நுட்பங்கள் காணப்படுகின்றன. உதாரணமாக தஞ்சைப் பெரியகோவில் கட்டடக்கலை,  மதுரை மீனாட்சியம்மன் இசைத்தூண்கள், தாராசுரம் இசைப் படிக்கட்டுக்கள், மாமல்லபுரம் சிற்பங்கள், சித்தன்னவாசல், எல்லோரா ஓவியங்கள் என இந்தியக்கலைகளை பிரதிபலிப்பனவற்றை சொல்லிக்கொண்டே செல்லலாம்.

மேலைநாட்டவர் பலர் இந்துமதம் பற்றிய ஆராய்ச்சியினை மேற்கொள்ள முன்வந்தனர். இதனால் இந்துமத மூலநூல்களைக் கற்று மொழிபெயர்த்தனர். இந்நூலறிவின் ஊடாக சமயவழிபாடு, அறிவியல், யோகா, கலைகள், சமூகவியற்சிந்தனைகள், இந்துதத்துவங்கள் எனப் பலதுறைகளை விளங்கிக் கொள்வதுடன் இவை மனிதவாழ்வை செம்மைப்படுத்துவதாக அமைகின்றது என்ற உண்மையை உணர்ந்து அதனை மக்கள் மத்தியில் பரப்பும் முயற்சிகளை  ஆரம்பித்து   வெற்றியுமடைந்தனர்.

இத்தகைய நயம்மிக்க இந்துக்கலைகள் மேலைநாட்டவர்களினால் கவரப்பட்டு அந்நாடுகளிலும் இந்துகலைகளைப் பரவலடையச் செய்துள்ளதுடன் அவற்றை தமது நாட்டுக்கலை அம்சங்களுடன் இணைத்து கலைவண்ணத்தில் பல்வேறு கலைநுட்பங்களைச் செய்துள்ளதுடன் இன்றும் தொடர்ச்சியாகப் பேணி வருகின்றமையும்  குறிப்பிடத்தக்கது.

இந்துக் கலைகள் மேலைநாடுகளில் செல்வாக்குப் பெறுவதற்கான காரணங்கள்

இந்திய நாட்டில் போற்றப்பட்ட இந்துக்கலைகள் மேலைநாடுகளிற்கு பரவியமைக்கு பலகாரணங்கள் முன்வைக்கப்படுகின்றன.  அவற்றை நோக்கினால்,

                     இந்துக்களின் மேலைத் தேசத்திற்கான வருகை : இந்து சமயத்தினைச் சார்ந்தவர்கள் மேலைத் தேசங்களிற்குச் சென்று அங்கு தமது சமயம் தொடர்பான விடயங்களை வெளிப்படுத்துதல். உதாரணமாக: சுவாமி விவேகானந்தரின் அமெரிக்க பயணமும் சிக்காக்கோ சொற்பொழிவும், இராமகிருஷ்ணமிஷன்பரவல்,  டாக்டர்.எஸ்இராதாகிருஸ்ணன் மேலைநாட்டுக் கல்விப்பணி

                     மேலைத் தேசத்தவர்களின் கீழைத்தேசம் நோக்கிய வருகை : மேலைத் தேசத்தவர்கள் இந்து சமயத்தினால் அல்லது இந்து சமயத்தவர்களால் கவரப்பட்டு இந்துப் பண்பாட்டினை உள்வாங்கி அதுதொடர்பான ஆய்வுகளை மேற்கொண்டமை. உதாரணமாக சகோதரி நிவேதிதை, அன்னிபேசன்ட் போன்றோரின் வருகை

                     புலப்பெயர்வு : உள்நாட்டு யுத்தங்களின் மூலம் பலநாடுகளிலிருந்து இந்துப் பண்பாட்டை பின்பற்றுகின்ற  மக்கள் மேலைநாடுகளில் சென்று குடியேறியமை.

       கல்வி, ஆய்வு  நடவடிக்கைகளுக்காக  மேலைநாடுகளுக்குச்  சென்று  குடியேறுதல்

       திருமணம், தொழில், வாணிபம், காலணித்துவம்

போன்ற பல்வேறு காரணங்களை உதாரணமாக குறிப்பிடலாம்.

இவ்வாறு பலகாரணங்களினால் மேலைநாடுகளில் இந்துக்கலைகள் செல்வாக்கு அடைந்துள்ளன. அவ்வகையில் மேலைநாடுகளில் செல்வாக்கு செலுத்தியுள்ள இந்துக்கலைகள் என்பதனை பின்வருமாறு நோக்குவோம்.

Ø     மேலைநாடுகளில் இந்துக் கட்டடக்கலை

Ø     மேலைநாடுகளில் இந்து சிற்பக்கலை

Ø     மேலைநாடுகளில் இந்து இசைக்கலை

Ø     மேலைநாடுகளில் இந்து நடனக்கலை

மேலைநாடுகளில் கட்டடக்கலை

இந்துக்கலைகளில் கட்டடக் கலை மிகப்பழங்காலந்தொட்டே நன்நிலை அடைந்து வந்துள்ளது. இக்கலை ஆலயங்களை மையமாகக் கொண்டே அமைந்தது.  அதாவது 'கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்' என்பதற்கேற்ப இந்துக்கள் தாம் வாழும் இடங்களில் எல்லாம் ஆலயங்களை அமைத்து வழிபட்டனர். அந்த வகையில் கட்டடக்கலையில் ஆலயங்கள் சிறப்பிடம் பெறுகின்றன. அத்தகைய சிறப்புவாய்ந்த கட்டக்கலை மேலைநாடுகளில் எவ்வாறான செல்வாக்கைப் பெற்றுள்ளது என்பதனை நோக்குமிடத்து மேலைநாடுகளில் அதிகளவான இந்துக்கள் குடியேறியுள்ளமையினால் அவர்கள் தமது பண்பாட்டை பிரதிபலிக்கும் வகையில் பல ஆலயங்களை அமைத்தமை தெளிவாகின்றது.

ஆரம்பகால இந்துக் கோயில் கட்டடங்கள் பெரும்பாலும் அழிந்து போகக்கூடிய கட்டடப் பொருட்களால் கட்டப்பட்டு இருந்ததாகக் கருதப்படுகின்றது. எனினும் கிடைக்கக் கூடிய சான்றுகளை வைத்து இந்துக் கோயில்களின் தோற்றம் பற்றி அறிந்து கொள்ள முடிகின்றது. இதனடிப் படையில் இந்திய கட்டடக் கலை பாணியை மூன்று வகைப்படுத்தலாம். அவை திராவிடப்பாணி, நாகரப்பாணி, வேசரப்பாணி என்பனவாகும். இவ்வாறான இந்தியக்கலைப் பாணியினை மேலைநாடுகளில் அதிகம் கண்டு கொள்ள முடிகின்றமையானது இந்துக் கலைகள் அந்நாடுகளில் பெற்றுள்ள செல்வாக்கினை வெளிப்படுத்துகின்றது. இதனடிப்படையில் மேலைநாடுகளில் இந்து சமய கட்டடக் கலையினை அங்கு அமைக்கப்பட்ட இந்து ஆலயங்களின் அமைப்பின் மூலம் அறிந்து கொள்ள முடிகின்றது.

ஹவாய் சன்மார்க்க இறைவன் கோயில்

அமெரிக்காவின் தீவுகளில் ஒன்றான ஹவாய் தீவின் குவைதீவில் வயிலுவா நதிக்கரையில் சன்மார்க்க இறைவன் கோயில் அமைந்துள்ளது. இது ஆகம முறைப்படி முற்றிலும் இந்திய ஆலயங்களைப் போல் கருங்கல்லால் அமைக்கப்பட்டுள்ளது. அத்துடன் திராவிட கலைப்பாணியைப் பின்பற்றிக் கட்டடப்பட்டு ஈராயிரம் ஆண்டுகள் நிலைபெறக் கூடியதாக கட்டப்பட்டுள்ளது. இவ்ஆலயத்திற்கான சிற்ப வேலைப்பாடுகள் இந்தியாவிலேயே இடம்பெறுகின்றன. இந்தியாவில் பெங்களூரில் 11 ஏக்கர் நிலப்பரப்பில் ஒரு கிராமம் அமைக்கப்பட்டு சிற்ப வேலைப்பாடுகள் கணபதி ஸ்தபதியின் தலைமையில் உள்ள 70 சிற்பிகள் சிற்ப வேலைகளில் ஈடுபட்டுள்ளனர். இவ்வாலய தூண்கள் யாவும் உளி கொண்டு கைகளால் செதுக்கப்பட்டமை இந்துக் கட்டடக் கலையின் சிறப்பினைக் காட்டுகின்றது.

 இத்தகைய செயற்பாடுகளின் மூலம் இந்துக் கலைகள் மீது மேலைநாட்டவர் கொண்ட ஆர்வம் வெளிப்படுகின்றது.


இலண்டன் சுவாமி நாராயணன் மந்திர்

பிரித்தானியாவில் அமைக்கப்பட்ட முதலாவது இந்துக் கோயில் எனச் சிறப்பிக்கப்படுகின்றது. இலண்டன் இஷ்லிங்டன் எனும் இடத்தில் 1970 ஆம் ஆண்டில் பிரமுக் யோகி ராஜ் மஹராஜ் என்பவரால் சிறிய அளவில் ஆரம்பிக்கப்பட்டு பின்னர் அவரின் வழிவந்த பிரமுக்ஸ்வாமி மஹாராஜ் என்பவரால் 1995 இல் இந்திய கட்டடக்கலை அம்சத்துடனான கோயிலாக கட்டப்பட்டது.

    கோயில் கட்டடத்தின் கம்பீரத் தோற்றத்தைக் காணும்போதே அங்கு இடம் பெற்ற வேலைப்பாடுகள் தெளிவாகின்றன.  இக்கோயில் இந்துக் கட்டடக்கலை வனப்புடன் அமைந்ததோடு இந்தியக் கலைஞர்களைக் கொண்டே அமைக்கப்பட்டமைச் சிறப்பிற்குரியதாகும். அதாவது இந்தியாவின் குஜராத், இராஜஸ்தான் பகுதிகளில் 1526 சிற்பிகள் இணைந்து இரவுபகலாக சிற்பங்கள் வடித்து கடல்வழியாக ஹவாய்த் தீவிற்கு கொண்டு சென்று 26,300 கற்களால் ஆலயகட்டடம் அமைக்கப்பட்டது.


இயற்கை வனப்புடன் சுற்றிலும் புல்வெளியில் குளிர்ச்சியான பிரதேசத்தில் அமைந்துள்ள இவ்வாலய கட்டடத்தினை அமைக்க 2828 டொன்பல் கோயலைம்ஸ்டோன் மற்றும் 2000 டன் இத்தாலிய மார்பிள் கற்களைக் கொண்டு சுமார் 12 பவுண்ட் பில்லியன் செலவில் இக்கட்டடம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் இங்கு கணபதி, இராமர், சீதை, உமையுடன் சிவன், அனுமன் ஆகிய கடவுளருக்கெனத் தனித்தனியான சன்னிதிகளும் உள்ளன. அத்தோடு எல்லா மூர்த்திகளுமே வடநாட்டுப் பாணியில் பளிங்குக்கற்களைக் கொண்டு அமைக்கப்பட்டமை சிறப்பானதாகும்.



இக்கோயிலின் கட்டடக்கலை அமைப்பினால் இது வெறுமனே வழிபாட்டுத் தலமாக மட்டுமன்றி சுற்றுலாத் தலமாகவும் விளங்குகின்றது. இக்கோயில் கின்னஸ் புத்தகத்தில் இருமுறை இடம்பிடித்துள்ளது. மேலும் பிரிட்டன் சார்பாக 2007இல் நடத்தப்பட்ட வாக்கெடுப்பிலும் சிறந்த கோயிலாக அங்கீகாரம் பெற்றுக்கொண்டது. லண்டனின் ஏழு அதிசயங்களில் ஒன்றாகவும் Readers Dyjust என்ற இதழின் 20ஆம் நூற்றாண்டின் 70 அதிசயங்களில் ஒன்றாகவும் தேர்வுச் செய்யப்பட்டது. நவீன கட்டடங்களில் சரித்திர பின்னணிக் கட்டிடம் என்ற விருதும் இயற்கையான கற்களைக்கொண்டு கட்டப்பட்ட இடம் என்ற விருதும் கிடைத்தது. இக்கட்டடம் மேலைநாட்டில் இந்துக் கட்டடக்கலையின் சிறப்பினை வெளிப்படுத்துகின்றது.

Radha Madav Dham

இது வடஅமெரிக்காவின் டெக்ஸ்சில் எனும் இடத்தில் 200ஏக்கர் நிலத்தில் அமைந்துள்ளது. இக்கோவில் கட்டடக்கலை என்பது வடஇந்திய தென்னிந்திய மற்றும் நவீன கட்டடக்கலை மரபை பின்பற்றிக் கட்டப்பட்டது. இக்கோவிலை பிரகாஸானந் என்பவர் நிறுவினார். கோவில் மண்டபங்களில் பக்கத்தில் சமஸ்கிருதஸ் லோகங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. இது இந்தியாவைச் சேர்ந்த இரண்டு கட்டடக்கலைக் கலைஞர்களால் கட்டப்பட்டது. 90அடி உயரமான கோவில் கோபுரம் வெண்ணிறம் மற்றும் நீல கிரனைட் கற்கள் மற்றும் தங்கத்தால் அமைக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இந்தியப் பாரம்பரியக் கட்டடக் கலையுடன் பொருந்துமாறு அமைக்கப்பட்டுள்ளது.



இக்கோவில் சன்னதிக் கடவுளர்கள். தூண்கள் மற்றும் கூரை என்பன பெரும்பாலும் தென்னிந்தியக் கைவினைக் கலைஞர்களால் அமைக்கப்பட்டள்ளது. இவற்றில் மயில்கள் மற்றும் மலர் வடிவங்கள் அழகாக அமைக்கப்பட்டுள்ளன. 35000 சதுரஅடி பரப்பளவு கொண்ட இக்கோவிலின் கட்டடத்தில் 84 நெடுவரிசைகள் மற்றும் ஐந்து நிலைகள் உள்ளன. இதன் நுழைவுவாயில் கதவுகளில் உள்ள மலர் வடிவங்கள், சன்னதியின் நுழைவுவாயில் மற்றும் நெடுவரிசைகளின் பாணி என்பன பண்டைய இந்துக்களின் அரண்மனைக்குள் செல்வதைப்போல் ஆடம்பரமாக அமைக்கப்பட்டுள்ளது.



இங்கு பாரம்பரிய இந்திய கலாச்சார நிகழ்வுகள், திருமணம், சமய விசேட திருவிழாக்கள் நடத்தவென மண்டபங்களும் அமைக்கப்பட்டுள்ளன. அத்துடன் ஆசிரமம் ஒன்றும் உள்ளது. இயற்கையாக ரோஜாத் தோட்டத்தில் நீர்பாய்ச்சும் அழகிய சூழலில் இக்கோயிலை அமைத்துள்ளனர். 2014ஆம் ஆண்டில் Economic Growth Society Of India என்னும் அமைப்பினால் இக்கோவிலுக்கான நெல்சன்மண்டேலா எனும் விருதைப்பெற்றுக் கொண்டமை இந்துக் கட்டடக்கலையின் சிறப்பினை மேலைநாட்டில் தெளிவுபடுத்துகின்றது.

தெற்கு கலிபோர்னியா இந்துகோயில்

அமெரிக்காவில் தெற்கு கலிபோர்னியா மாகாணத்தில் கலாபாஸ் பகுதியில் 1977ஆம் ஆண்டு கட்டப்பட்ட ஆலயமாகும். இங்கு அமைந்துள்ள இந்துக் கோயில் சங்கம் ஒரு இலாப நோக்கமற்ற மையமாகும். லாஸ்ஏஞ்சல்ஸ் பகுதியில் வசித்த இந்திய வம்சாவழியினர் ஒன்றுகூடி 1997ஆம் ஆண்டு ஜுன் மாதம் ஆலயம் அமைக்க முடிவு செய்து 1977ஆம் ஆகஸ்ட் 18ஆம் திகதி இக்கோயில் கட்டப்பட்டது. இக்கோயிலின் முக்கிய தெய்வம் அருள்மிகு வெங்கடேஷ்வரர் ஆவார்.

ஆகம முறைப்படியும் சிற்ப சாஸ்திர முறைப்படியும் சோழர்களின் கோயில் கட்டுமானத்தை ஒத்த வகையிலும் உலகின் பலகோயில்களைக் கட்டிய இந்தியாவின் புகழ்பெற்ற இந்தியக் கட்டடக்கலை நிபுணரான முத்தையா ஸ்தபதியின் தலைமையில் இக்கோயில் கட்டப்பட்டுள்ளது. அடித்தளம் மற்றும் தோற்ற அமைப்புக்கள் ஆகியன உள்ளூர்க் கட்டடக்கலை வல்லுநர்களைக் கொண்டும், தூண் வேலைப்பாடுகள், சிற்பங்கள் ஆகியன இந்திய சிற்பிகளைக் கொண்டும் கட்டப்பட்டது.



மேற்கத்திய பகுதியில் உருவாக்கப்பட்ட மிகப்பெரிய கோயில்களில் இக்கோயிலும் ஒன்றாகும். இங்கு வள்ளி தேவசேனாவுடன் முருகனுக்காக முக்கிய சன்னிதி இருக்கிறது. விநாயகர், சிவன், மீனாட்சி, துர்கா மற்றும் பழனி ஆண்டவர் என நான்கு சன்னதிகளும் உள்ளன. இதுதவிர இக்கோயிலில் மேலும் பல சன்னதிகள் அமைக்கப்பட்டு பல்வேறு தெய்வங்களும் நிறுவப்பட்டுள்ளன.

புளோரிடா இந்துக்கோயில்

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள தம்பா பகுதியில் அமைந்துள்ள மிகபிரம்மாண்ட ஆலயம் புளோரிடா இந்துக் கோயிலாகும். 1980ஆம் ஆண்டு தம்பாவில் இந்துக் கோயில் ஒன்று அமைக்க அப்பகுதி இந்து சமூகத் தலைவர்களால் முடிவு செய்யப்பட்டது. 1983ஆம் ஆண்டு கோயில் அமைக்கும் எண்ணம் முழுவடிவம் பெற்றது. ஆகம விதிப்படி திராவிட முறையில் சுவர்கள் மற்றும் தூண்கள் ஆகியவற்றின் மூலம் கோயிலின் மெருகூட்டும் பணிகள் நடத்தப்பட்டது. இந்திய கட்டிடக்கலை நிபுணரான முத்தையாஸ்தபதி தலைமையில் தென்னிந்திய சிற்பக்கலைஞர்களால் இக்கோயிலின் கட்டடப் பணிகள் வேகமாக நடைபெற்றன. அழகிய வேலைப்பாடுகளுடனான அலங்கரிக்கப்பட்ட தெய்வங்களின் விமானங்கள் உருவாக்கப்பட்டன. அத்துடன் இக்கோயிலின் இராஜகோபுரம் மிகப்பெரிய அளவில் பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டமை இந்தியக் கலையம்சமாகும்.

கனடா பாப்ஸ் ஸ்ரீசுவாமி நாராயணன் மந்திர்

கனடாவின் டொரோண்டோ மாநிலத்தில் ஒண்டோரியாவில் உள்ள இந்து மக்களின் வழிபாட்டுத் தலமாகும். பாப்ஸ் சுவாமி நாராயணன் சான்ஸ்தா அமைப்பு இக்கோயிலைக் கட்டியது. மஹந்த் சுவாமி மகாராஜ் எனும் சர்வதேச அமைப்பின் கிளை நிறுவனமாக இது செயல்பட்டு வருகின்றது. இக்கோயிலைக் கட்ட 18 மாதங்கள் ஆனது. மேலும் 24,000 கராரா மார்பிள் கல்லினால் பளிங்குபோல் இக்கோயில் உருவானது. ஒவ்வொரு கல்லிலும் கைவேலைப்பாடுகள் நிறைந்த கலைச் சிற்பங்கள் பொருந்தியுள்ளமைக் கோயில் கட்டடத்தின் கூடுதல் சிறப்பு. கனடாவில் உருவாக்கப்பட்டுள்ள மிகப்பெரிய இந்துக்கோயில் என்ற சிறப்பு அந்தஸ்தைப் பெற்றுள்ளது ஸ்ரீசுவாமி நாராயணன் மந்திர். துருக்கி நாட்டிலிருந்து கொண்டு வந்த சுண்ணாம்புக் கற்களாலும், இந்தியாவிலிருந்து கொண்டுவரப்பட்ட இளஞ்சிவப்புக் கற்களினாலும் இக்கோயில் கட்டப்பட்டுள்ளது.

சில்ப சாஸ்திர விதிகளின்படி கட்டப்பட்டுள்ள இந்தக் கோயிலில் இராதாகிருஷ்ணன், சிவன், பார்வதி, சீதாராமர், அனுமார், கணபதி உள்ளிட்ட தெய்வங்களின் சிலைகள் வைக்கப்பட்டு வழிபாடாற்றப்படுகின்றது. மேலும் இக்கோயிலின் ஒரு அங்கமாகப் பாரம்பரிய அருங்காட்சியகம் ஒன்றுள்ளது. அங்கு இந்துமத தர்மத்தின் முக்கிய குறிக்கோள்கள், அதன் பிரசித்தி பெற்ற ஸ்லோகங்கள் எனப் பலவிடயங்கள் பக்தர்களுக்குக் காட்சிப்பொருளாக வைக்கப்பட்டுள்ளன. ஆண்டுதோறும் மருத்துவ முகாம்களும், விழிப்புணர்வுப் பேரணிகளும் கோயில் நிர்வாகம் சார்பில் நடத்தப்பட்டு வருகின்றன.

ஸ்ரீகாமாட்சி அம்பாள் கோவில்

ஜெர்மன் நாட்டில் மேற்கு மாநிலமான நோட்டைன் வெஸ்ட்பேலியா மாநிலத்தில் உள்ள ஹம் நகரின் எல்லைக்குள் சுமார் 10கிலோ மீற்றர் தொலைவில் அமைந்திருக்கும் ஸ்ரீகாமாட்சி அம்பாள் கோவில் சுமார் 26 ஆண்டுகள் பழைமை வாய்ந்ததாகும். இக்கோயிலானது ஐரோப்பாவில் உள்ள மிகப்பெரிய இந்து ஆலயமாக கருதப்படுகின்றது. இக்கோவில் தமிழ்நாட்டுக் கோவில்களைப் போலவே அமைந்திருப்பது மற்றொரு சிறப்பாகும்.

அத்துடன் இக்கோயிலினைக் காஞ்சிபுரத்திலுள்ள காமாட்சி அம்மன் கோவிலைப் போன்று உருவாக்கியுள்ளனர். திருவிழாக் காலங்களில் 3000 இற்கும் அதிகமான பக்தர்கள் இக்கோவிலுக்கு வருவர். இனம், மொழி போன்ற பிரிவினைகளைக் கடந்து எல்லா மக்களும் காமாட்சி அம்பாளின் திருவருளைப்பெற பக்தியோடு அம்பாளை வணங்கி வருகின்றனர். ஜெர்மனியில் 50இற்கும் அதிகமான இந்துக் கோவில்கள் அமைந்துள்ளன. இக்கோயில் கட்டடமானது இந்தியக் கட்டடக்கலை அம்சத்தை வெளிப்படுத்தி நிற்கின்றது.

மேலைநாடுகளில் இந்து நடனக்கலை

இந்திய அரசின் கீழ் இயங்கிவரும் சங்கீத நாடக அகாடமியானது இந்திய நடனத்தை எண்வகைப் பிரிவாக அறிவித்துள்ளது. அவை இந்திய சாஸ்திரிய நாட்டிய வகைகள் எனப்படுகின்றன. இந்திய பாரம்பரிய நடனங்கள் பரத நாட்டியம், கதகளி, குச்சிப்புடி, மோகினி ஆட்டம், ஒடிசி, மணிப்புரி, கதக், சத்ரியா என்பவையாகும்.

இந்து மதத்தில் நடனக்கலை என்பது இறைவனோடு இணைந்த வகையிலே காணப்பட்டுள்ளது. நடனத்தைத் தோற்றுவித்தவர் சிவன் எனப்படுகின்றது. பரதநாட்டியம் தென்னிந்தியாவிற்குரியது. சிறப்பாகத் தமிழ்நாட்டுக்குரிய நடனமாகும். இது மிகத்தொன்மை வாய்ந்ததும் இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் பிரபலமானதுமாகும். புராணவியல் ரீதியாக பரதமுனிவரால் உண்டாக்கப்பட்டதாகவும் அதனாலேயே பரதம் என்ற பெயர் வந்ததாகவும் கூறுவர். பரதமுனிவர் எழுதியதாகக் கருதப்படும் நாட்டிய சாஸ்திரம் பரதநாட்டியம் என்னும் நடனக்கலையைத் தோற்றுவித்தது எனவும் கூறப்படுகிறது.

இதனடிப்படையில் இந்திய நடனக்கலையானது இந்தியாவில் மாத்திரமன்றி மேலைத்தேயநாடுகளிலும் பரவி காணப்படுகின்றது. இந்திய நடனக்கலையினால் ஈர்க்கப்பட்ட மேலைத்தேச மக்கள் அக்கலையைக் கற்று மனமகிழ்ச்சிக்காகவும், உடல் ஆரோக்கியத்திற்காகவும் இன்றும் பின்பற்றி வருகின்றனர். இந்தியாவைச் சேர்ந்த இந்திராணி ரகுமான் நியுயோர்க்கில் பரதநாட்டியம், குச்சுபிடி, கதகளி, ஒடிசி போன்ற நடனக்கலைகளை மேலைநாட்டவர்க்குப் போதிக்கின்றார்.



அமெரிக்காவில் பொங்கல் விழாவின்போது இந்திய கிராமிய நடனங்களான கும்மி, கோலாட்டம், நாடகம் என்பன இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது. அத்துடன் தஞ்சை பெரியகோவிலில் கனடா நாட்டு கலைஞர்களால் பரதநாட்டிய விழா நடைபெற்றுள்ளது. இதில் அந்நாட்டு கலைஞர்கள் பலரால் பரதநாட்டியம் சிறந்தமுறையில் அரங்கேற்றப்பட்டமையானது அந்நாட்டில் பரதக்கலை பெறும் செல்வாக்கினைப் புலப்படுத்துகின்றது.

டில்லியில் 2004இல் சர்வதேச நடனத் திருவிழாவில் இந்திய பாரம்பரிய நடனங்கள் சார்பில் மேலைநாடுகள் பலவற்றைச் சேர்ந்த கலைஞர்கள் பலர் கலந்து கொண்டு நடன நிகழ்வுகளைஅரங்கேற்றியுள்ளனர். இதனடிப்படையில் ஜேர்மனைச் சேர்ந்த கலைஞர்கள் மோகினியாட்டம், தென்னாபிரிக்க நாட்டைச் சேர்ந்தக் கலைஞர்கள் பரதநாட்டியம் போன்ற இந்தியக் கலைகளை அரங்கேற்றியமையானது மேலைநாடுகளில் இந்துக்கலைகள் பெறும் முக்கியத்துவத்தினை அறிந்துகொள்ள உதவுகின்றது.

மேலைத்தேய மக்கள் பலர் இந்திய பாரம்பரிய கலைகளால் ஈர்க்கப்பட்டு அதனை முறையாக கற்று தமது நாடுகள் பலவற்றில் அரங்கேற்றி வருவதுடன் அங்கு நடனப் பள்ளிகளை அமைத்து மக்கள் மத்தியில் கற்பித்து வருகின்றனர். இதனடிப்படையில் பல்கேரியாப் பெண்ணான காத்யாதோஷ்வா இந்திய நடனக் கலையினை முறையாகக் கற்று பல மேற்கத்தேய நாடுகளிலும் ஏனைய நாடுகளிலும் விசேட நிகழ்வுகளின்போது அரங்கேற்றுவதுடன் நடனப் பள்ளி ஒன்றினை அமைத்து அதில் நடனப் பயிற்சியினைப் பயிற்று வித்து வருகின்றார்.

பிரிட்டனிலும் நடனக்கலை முக்கியத்துவம் பெறுகின்றது. பிரிட்டனில் மேற்கொண்ட ஆய்வில் 'தினமும் நீச்சல் பயிற்சி மேற்கொள்பவர்களை விட நடன, நாட்டிய பயிற்சி செய்பவர்களே தேக ஆரோக்கியத்துடன் இருப்பதாக குறிப்பிடுகின்றது.' அதனைப் போல் சுவிஸ் நாட்டில் தமிழ் இளையோர் அமைப்பு நடனக்கலையை அங்கீகரிக்கும் முகமாக ஆண்டுதோறும் 'அக்கினித் தாண்டவம்' என்ற மாபெரும் நடனப்போட்டியை நடத்துகின்றது. இதற்கு நடுவர்களாக இந்திய கலைஞர்களே அழைக்கப்படுவார்கள்.

கனடாவில் பரதநாட்டியத்தை வளர்க்கும் முகமாக ஆண்டுதோறும் 'இருதயா நாட்டிய நிகழ்ச்சி' என்ற நிகழ்வு இடம்பெற்று வருகின்றது. இதில் டொராண்டோவில் வளர்ந்து வரும் பரதநாட்டிய கலைஞர்கள் பங்கேற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது. கனடாவில் காணப்படும் பாரதி  இந்திய சாஸ்திரிய நடனக் கல்லூரி ஆண்டுதோறும் நடன நிகழ்வுகளை நடாத்தி வருகின்றது. அவ்வகையில் தனது 14ஆவது ஆண்டில் கால்பதிக்கும் இந்நிறுவனம் 'நாட்டியத்தின் மூலம் ஓர் பார்வை' என்ற தொனிப் பொருளில் 'திருஷ்ய பரதம்' என்ற கருப்பொருளில் 10 தொடக்கம் 13 வயது வரையான இளம் நடனக்கலைஞர்களைக் கொண்டு நாட்டிய நிகழ்வை 2018இல் நிகழ்த்தியுள்ளது. இதன் போது பக்க வாத்தியங்களும் இசைக்கப்பட்டன. இதில் வாய்ப்பாட்டு மிருதங்கம், வயலின், நட்டுவாங்கம் போன்ற இசைக்கருவிகள் இசைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு மேலைநாடுகளில் பலர் பரதநாட்டியத்தைக் கற்று அரங்கேற்றமும் செய்து வருகின்றனர். இது பரதநாட்டியம் மேலைநாட்டவர்களினால் பெரிதும் விரும்பி கற்பதை பறைசாற்றுவதுடன் உடல், உள ஆரோக்கியத்திற்கும் பெரும் பயன் அளிப்பதாக காணப்படுவதனால் பலரும் இதில் ஆர்வம் காட்டிவருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

மேலைநாடுகளில் வாழும் இந்துக்கள் மட்டுமன்றி அனைவரும் தமது குழந்தைகளுக்கு இந்து நடனக்கலை கற்பதற்கான ஏற்பாடுகளைச் செய்துள்ளனர். அத்தோடு அங்கு கட்டப்பட்டுள்ள கோயில்களிலும் இந்து நடனக்கலைகளினைக் பிரதிபலிக்கும் வகையிலான சிற்பங்கள், ஓவியங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவை தவிர அங்குள்ள தமிழ் பாடசாலைகளிலும், பல்கலைக்கழகங்களிலும் இந்து நடனக்கலைகள் போதிக்கப்படுகின்றன.

மேலைநாடுகளில் இந்து சிற்பக்கலை

ஒரு இனத்தின் பண்பாடு, நம்பிக்கைகள், பழக்கவழக்கங்கள் என்பனவற்றை படம் பிடித்துக் காட்டுபவை சிற்பக்கலை. இவ்வகையில் சிற்பக்கலையானது சுண்ணாம்பு, கல், மண் போன்றவற்றில் உருவங்களை செதுக்குவதைக் குறிப்பிடுகின்றது. பண்டைய காலந்தொட்டே இந்து மரபில் சிற்பக்கலை வளர்ச்சி பெற்றமையினை அறிய நடுகல் சிறந்த எடுத்துக்காட்டாகிறது. அதாவது போரிலே விழுப்புண்பட்டு இறந்த வீரனை நினைவு கூறும் முகமாக அமைக்கப்பட்ட நடுகல்லில் ஆரம்பிக்கப்பட்ட சிற்பக்கலை வளர்ச்சி பின்னர் இறை உருவங்கள், கட்டட அமைப்புக்களின் அழகிய வேலைப்பாடுகள் என்பவற்றை அமைக்கும் வகையில் வளர்ச்சி பெற்றதெனலாம். இக்கலைக்கென சிற்பசாஸ்திர முறையும் உள்ளது. இக்கலையானது இந்தியாவில் மட்டுமன்றி மேலைத்தேய நாடுகள் பலவற்றில் மக்களால் பின்பற்றப்பட்டு வருகின்றது. இதனடிப்பபடையிலே இந்துமதமானது மேலைநாடுகளில் பெரிதும் முக்கியமடைந்து காணப்படுவதனை அங்குள்ள சிற்பங்கள் வெளிப்படுத்துகின்றன.

மேலைநாடுகளில் சிற்பக்கலையானது இந்து கோயில்களை அடிப்படையாகக் கொண்டு வளர்ச்சியடைந்து காணப்படுகின்றது. அத்துடன் பொது இடங்களில் அமைக்கப்பட்ட சிற்பங்கள், அருங்காட்சியங்களில் காணப்படும் சிற்பங்கள் என பல வகைகளிலும் வளர்ச்சியற்றுக் காணப்படுவதுடன் மேலைநாடுகளில் காணப்படும் பல்கலைக்கழகங்களிலும் சிற்பக்கலை தொடர்பான கற்பித்தல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமையானது மேலைநாடுகளில் சிற்பக்கலையின் வளர்ச்சியினை அறிந்துகொள்ள உதவுகின்றது.

அவுஸ்ரேலியாவில் அமைந்துள்ள ஆலயங்களில் மிகவும் பிரபல்யமான ஆலயமாக காணப்படுவது அவுஸ்ரேலியாவின் நியூ சவுத்வேல்ஸ் மாநிலத்தின் தலைநகரான சிட்னி நகரிலிருந்து 25கிலோ மீற்றர் மேற்காக உள்ள மேய்சு ஹில் என்ற புறநகர்ப் பகுதியில் அமைந்துள்ள சிட்னி முருகன் ஆலயமாகும். இவ்வாலயத்தின் மூலஸ்தானத்தில் காணப்படும் முருகன் சிற்பம் இந்தியாவின் சிற்பக்கூடம் என வர்ணிக்கப்படும் மாமல்லபுரம் சிற்பியினால் இந்து ஆகமமுறைப்படி நுட்பமாக வடிக்கப்பட்ட சிலையாகும்.

அதனைப் போல் இவ்வாலயத்தின் அலங்காரத்தூண்களில் இந்தியக் கோயில்களில் காணப்படும் சிற்பவேலைப்பாடுகளைப் போல் இங்கும் காணப்படுகின்றன. இங்கு காணப்படுகின்ற தூண்களில் இந்தியாவில் அமைந்துள்ள முருகனின் ஆறுபடைவீடுகள், கதிர்காமம், வெருகல், செல்வச்சந்நிதி மற்றும் நல்லூர் போன்ற ஆலயங்களில் காணப்படும் முருகனின் திருவுருவங்களை கற்பனை செய்து கற்பனைத் திருவுருங்களாக செதுக்கியுள்ளமை பார்ப்பதற்கு கண்களிற்கு இனிமையூட்டுகின்றன.

இவ்வாறே ஹவாய்த்தீவில் அமைந்துள்ள சன்மார்க்க இறைவன் கோயிலில் தமிழ்நாட்டில் அமைந்துள்ள ஆலயங்களில் காணப்படுகின்ற சிற்பங்களின் தன்மையை காணலாம். அவ்வகையில் இவ்வாலயத்திற்கான சிற்ப வேலைப்பாடுகள் பெங்களூரில்  11 ஏக்கர் நிலம் வாங்கப்பட்டு அதில்  70 சிற்பிகளைக் கொண்டு சிற்ப வேலைப்பாடுகள் இடம்பெற்று கப்பல் மூலம் கொண்டு செல்லப்பட்டு மேலைநாட்டு கலைஞர்களால் அமைக்கப்பட்டது.

அதனைப்போல் இங்கு தூண்களில் யாழி உருவங்கள் காணப்படுகின்றன. இவற்றின் வாய்களில் சிறு உருளைகள்போல் காணப்படுகின்றன. இவற்றை உருட்டிமட்டுமே பார்க்கமுடியும் வெளியில் எடுக்கமுடியாது. இவ்வாறான தூண்கள் தஞ்சைப்பெரியகோவில் போன்ற இடங்களிலும் இருப்பதைக் கொண்டு இவற்றின் செல்வாக்கினை மேலைநாட்டிலும் காணக்கூடியதாக உள்ளது.



அமெரிக்காவில் அமைந்துள்ள இந்து ஆலயங்களில் மிகவும் பிரபல்யமான ஆலயமாக சங்கரநாராயணர் கோயில் காணப்படுகின்றது. இக் கோயில் கண்ணைக் கவரும் வகையில் அமைக்கப்பட்டுள்ளதுடன் இங்கு சிற்பங்கள் மிகவும் நேர்த்தியாக காணப்படுகின்றன. இங்கு இராமர், சீதை, கணபதி, முருகன், சிவன், பார்வதி, அனுமார், சரஸ்வதி, கிருஷ்ணர் போன்ற இறைஉருவங்களுடன் மயில், யானை, மலர்கள் போன்ற பல உருவங்கள் தூண்களிலும் விதானங்களிலும் செதுக்கப்பட்டு பார்ப்பவர்களின் கண்ணைக் கவரும் வகையில் காணப்படுகின்றது.


ஜார்ஜ் மைக்கோல் என்ற ஆங்கிலேயரால் 1977ஆம் ஆண்டு 1500 ஆண்டுகளுக்கு மேலாக உலகில் உள்ள பழமையான இந்துக் கோயில் சிற்பங்கள் தொடர்பான “The Hindu Temple” எனும்  நூல் வெளியிடப்பட்டுள்ளது. அதனைப் போன்று 2018ஆம் ஆண்டு ஜான்கை என்பவர் “Indian Temple Sculpture”என்ற நூலில் லண்டனில் உள்ள விக்டோரியா, ஆல்பர்ட் அருங்காட்சியங்களில் உள்ள இந்து, சமண, பௌத்த கோயில்களில் உள்ள சிற்பங்கள் தொடர்பான நூல் ஒன்றினை வெளியிட்டுள்ளார்.“Hindu Art” என்றநூல்1992ஆம் ஆண்டு பிளர்டன் டி.ரிச்சர்ட் என்பவரால் இயற்றப்பட்டது. இதில் இரண்டாயிரம் ஆண்டுகளிற்கு மேலாக இந்தியத் துணைக்கண்டத்தில் உள்ள இந்து கட்டடக்கலை, சிற்பம், ஓவியம் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலைநாடுகளில் உள்ள பல்கலைக்கழகங்களில் இந்துக்கற்கைகளின் ஊடாக சிற்பக்கலை கற்பிக்கப்படுகின்றது. ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் இந்துக்கற்கைகளுக்கான பீடத்தில் சிற்பக்கலை ஓர் கற்கைநெறியாக மாணவர்களிற்கு கற்பிக்கப்படுகின்றது. அமெரிக்காவில் உள்ள இந்துப்பல்கலைக்கழகம், தென்னாபிரிக்காவில் உள்ள இராமகிருஸ்ணன் கற்கைநிலையம், கனடா கொங்கோர்டியா பல்கலைக்கழகம் போன்ற பல பல்கலைக்கழகங்களில் இந்துக்கற்கைகளின் ஊடாக சிற்பக்கலை தொடர்பான கற்கை நெறிகள் போதிக்கப்பட்டு வருகின்றன.

இவைதவிர மேலைநாடுகளில் இந்து தெய்வங்களுக்கென தனியான சிற்பங்கள் பொதுஇடங்களில் அமைக்கப்பட்டுள்ளன. அந்த வகையிலே ஜெனிவாவில் துகள் இயற்பியலுக்கான ஐரோப்பிய ஆராய்ச்சி மையத்தில் இந்துக் கடவுளான நடராஜரின் 2மீற்றர் உயரமான சிலை வைக்கப்பட்டுள்ளமை இந்துச் சிற்பக்கலையின் சிறப்பினை உலகறியச்செய்கின்றது.



கனடா ஒண்டாரியோவில் உலகிலே மிகப்பெரிய ஆஞ்சநேயர்சிலை கட்டப்பட்டு முடிவடையும் தருவாயிலுள்ளது.

மேலைநாடுகளில் இசைக்கலை

இசைக்கலையை வளர்க்கும் ஊடகமாக ஆலயங்களே திகழ்கின்றன. அதேபோன்று மேலைநாடுகளில் ஆலயங்கள் அதிகளவில் காணப்படுகின்றன. இங்கு இந்து ஆகமமுறைப்படி பூஜைகள் இடம்பெறுவதுடன் பஞ்ச புராணம் பாடுதல், பஜனைகள் போன்ற பல இசைநிகழ்வுகள் இடம்பெறுகின்றன. இதனைவிட கனடாவில் இயங்குகின்ற விபுலானந்தர் கலைமன்றம் ஆண்டுதோறும் சுவாமியினுடைய நினைவு விழாக்களை நடத்தி வருகின்றது. இவ்வேளையில் இசை நிகழ்வுகளான பண்ணிசை, வில்லுப்பாட்டு போன்ற பல நிகழ்வுகளை நடத்துகின்றது. இதில் பல மாணவர்களை இணைத்து அவர்களிற்கு போட்டிகளை வைத்து பரிசில்களை வழங்கி அவர்களை ஊக்குவித்து வருகின்றது. இதன்மூலம் மேலைநாட்டவர் இசையின்மீது கொண்ட ஆர்வம் வெளிப்படுகின்றது. கடவுளரின் கைகளில் அதாவது கிருஷ்ணர் புல்லாங்குழல், சிவன் உடுக்கை, சரஸ்வதி வீணை, நாரதர் தம்புரா என்பவற்றை வைத்திருப்பதும் இங்கு இசைக்கலை வளர்ச்சியை காட்டுகின்றது.

மேலைநாடுகளான கனடா, லண்டன், அமெரிக்கா போன்ற பலநாடுகளில் ஆலயங்களில் வழிபாட்டின்போது இசைக் கருவிகளான மிருதங்கம், தவில், நாதஸ்வரம், தாளம் போன்ற கருவிகள் கீழைத்தேய நாடுகளைவிட மிகவும் நேர்த்தியாக இசைத்து வழிபடுகின்றனர். இதன்மூலம் அவர்கள் இசையின் தெய்வீகத் தன்மையை உணர்ந்து அதன் சிறப்பினை இன்றும் நிலைநிறுத்தி வருகின்றமை இந்து இசைக்கலையின் சிறப்பிற்குரியது. இதனை நாம் இன்று ஊடகங்கள், காணொளிகள் வாயிலாக அறிந்து கொள்ளலாம். பெல்ஜியம்கம் என்ற நகரில் அமைந்துள்ள காமாட்சியம்மன் கோயிலில் தினமும் திருமுறைகள் இசைக்கப்படுவதுடன் திருவிழாக் காலங்களில் பக்தி பாமாலைகள் இசைக்கப்படுகின்றமைடயைக் காணலாம். 

அவற்றைவிட சிறப்பான விடயம்பதிகங்களில் ஒன்றான 'பித்தாப்பிறைசூடி...'  என்ற பதிகத்தினை லண்டன் அருங்காட்சியகத்தில் தமிழ்மொழியிலும் மற்றும் அதன் மொழிபெயர்ப்பு ஆங்கில மொழியிலும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளமை மேலைநாடுகளில் திருமுறைகளிற்கும் இசைக்கலைக்கும் வழங்கும் முக்கியத்துவம் வெளிப்படுகின்றது.

அவுஸ்ரேலியாவின் மெல்போர்ன் என்ற நகரில் 'ஸ்வரலயா' என்ற பெயரில் ஓர் இசைக்கல்லூரி இயங்குகின்றது. இதன் ஆசிரியரான 'ஸ்ரீமதிசஸ்யாந்தி சங்கர்' என்பவர் பன்மொழி சமூகங்களைக் சார்ந்த மாணவ, மாணவிகளைப் பயிற்றுவித்து வருவதுடன் இம்மாணவர்கள் மிகவும் ஆர்வத்துடனும் அக்கறையுடனும் இசையைக் கற்று வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது. மேலும் இசைக்கலை தொடர்பான பல மாநாடுகள் மேலைநாடுகளில் இடம்பெறுகின்றன. குறிப்பாக 1994இல் கனடாவில் திருமுறைகளுக்கான மாநாடு இடம் பெற்றது. அத்துடன் தென்னாபிரிக்கா, சுவிஸ்லாந்து, மலேசியா போன்ற நாடுகளிலும் இத்தகைய மாநாடுகள் இடம்பெற்றாலும் அங்கு ஆரம்ப நிகழ்வாக திருமுறைகள் ஓதப்படுகின்ற வழக்கம் காணப்படுகின்றது.

ஐரோப்பாவில் வசிக்கின்ற கலைமாமணி வித்தியா சுப்பிரமணியம் என்பவர் இணையத்தின் மூலமாக இருவருடன் இசைவகுப்பினை ஆரம்பித்து தற்போது 700இற்கும் அதிகமான மாணவர்கள் பயில்வதோடு 40 குருமார்களை வைத்து சங்கீத அக்கடமியை நடத்தி வருகின்றார். இதனைவிட இவர் கலிபோர்னியாவில் உள்ள இசை நிறுவனத்திலும் பணிபுரிந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. அத்துடன் 2004ஆம் ஆண்டு Skype Video Call மூலம் அமெரிக்காவில் இசையினைக் கற்றுக்கொடுத்துள்ளார். கனடாவில் சங்ககிளையின் 5ஆவது ஆண்டு நினைவாக 2018ஆம் ஆண்டு கந்தசுவாமி கோயிலில் 'இசைக்கருவி' என்ற பெயரில் ஓர் இசை நிகழ்வு நடைபெற்றது.

ஆலயங்களில் சிற்பக்கலை, கட்டடக்கலையுடன் இணைந்த வகையில் இசைக்கலை சிறப்புற்றுக் காணப்படுகின்றது. அவ்வகையில் ஹவாய்தீவில் அமைந்துள்ள சன்மார்க்க இறைவன் கோயிலில் இசைத்தூண்கள் இந்திய ஆலயங்களில் காணப்படுவதைப் போல அமைக்கப்பட்டுள்ளன. இவை இந்திய ஸ்தபதிகளைக் கொண்டு உளிகளைக் கொண்டு வெறும்கைகளால் செதுக்கப்பட்ட இசைத்தூண்களாகக் காணப்படுகின்றன. இவை மதுரை மீனாட்சியம்மன், திருவானைக்கா, திருநெல்வேலி போன்ற ஆலயங்களில் காணப்படும் இசைத் தூண்களை ஒத்தவையாகக் காணப்படுகின்றமை இந்து இசைக்கலை மேலைநாட்டில் பெற்றுள்ள செல்வாக்கினைப் புலப்படுத்துகின்றது.

அமெரிக்காவின் மத்திய டெக்காஸ் மாநிலத்தில் அமைந்துள்ள கோயிலில் கிருஷ்ணர் புல்லாங்குழலுடன் காணப்படுகின்றார். இதனையொத்த சிலையைச் சங்கர நாராயணர் கோயிலிலும் காணப்படுகின்றது. அதனைப்போல் ஜப்பானில் பொங்கல்விழாவின்போது அதற்கென்று அரங்கம் அமைத்து இந்தியாவில் பாடப்படும் இசைப் பாடல்கள் போன்று பாடப்படுகின்றது. தென்னாபிரிக்காவில் பல இடங்களில் மீன்யாழ் இசைக்கப்படுகின்றது. இதனைவிட மேலைநாடுகள் பலவற்றில் தேவார இசையைப் பாடுவதைத் தொழிலாக கொண்ட ஓதுவார்களிற்கு மதிப்பும் மரியாதையும் கொண்டு போற்றப்படுகின்றார்கள். கனடா, சிங்கப்பூர், மொரிசியஸ் போன்ற நாடுகளில் வேலைவாய்ப்புக்களிற்காக செல்பவர்களில் இசைக் கலையைப் பயின்றவர்களிற்கு முக்கியத்துவம் வழங்கப்படுகின்றமை இசைக்கலை மேலைநாட்டவரிடையே பெற்ற செல்வாக்கினைத் தெளிவுபடுத்துகின்றது.

துவிசங்கர் என்பவரே இந்திய இசைக்கலையை மேலைநாடுகளிற்கு அறிமுகம் செய்தவராக விளங்குவதுடன் ஆபிரகாம் பண்டிதருடைய இசையும் மேலைநாடுகளில் அதிகளவில் இசைக்கப்படுகின்றது. லண்டன் அருங்காட்சியகத்தில் தவில், யாழ் போன்ற இசைக்கருவிகள் பார்வையிடுவதற்காக வைக்கப்பட்டுள்ளது.   

அருங்காட்சியகங்களில் இந்துக் கலைகள் சார்ந்த பொருட்கள்

மேலைநாடுகளில் காணப்படும் அருங்காட்சியங்களில் இந்துமதச் சிற்பங்கள் பல காணப்படுகின்றது. இதனடிப்படையில் மனித வரலாறு, பண்பாடு என்பன தொடர்பான விடயங்களை வெளிப்படுத்தும் வகையில் இலண்டனில் அமைந்திருப்பதே பிரித்தானிய அருங்காட்சியகம் ஆகும். ஏழு மில்லியன்களுக்கு மேற்பட்ட காட்சிப்பொருட்களைக் கொண்டுள்ள இந்த அருங்காட்சியகம் உலகின் மிகவும் பெரியதும், முழுமையானதும் ஆகும். இங்குள்ள பொருட்களைக் கொண்டும் மேலைநாட்டில் இந்துக் கலைகள்பெறும் சிறப்பிடம் அறியப்படுகின்றது.

இங்கு நடராஜர், சிவன், பார்வதி, நந்தி, பிள்ளையார் போன்ற தெய்வங்களின் சிற்பங்கள், உலோகப்பொருள் மற்றும் சிலைகள் எனப்பல அரியபொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டள்ளன. அவையாவும் இந்தியாவில் இருந்து கொண்டு செல்லப்பட்டு பாதுகாக்கப்படும் தன்மையைக் கொண்டு மேலைநாடுகளில் இந்தக் கலைகளுக்கான முக்கியத்தவம் அறியப்படுகின்றது.

இந்துக்கலைகள் தொடர்பான மேலைநாட்டவரின் நூல்கள்

இவற்றுடன் மேலைநாடுகளில் நிறுவப்பட்ட ஆச்சிரமங்கள், நிறுவனங்கள் என்பனவற்றில் தியானம், யோகா போன்ற கலைகள் கற்பிக்கப்பட்டு வருகின்றது. இதில் மேலை நாட்டைச் சேர்ந்தவர்கள் ஆர்வத்துடன் கற்று தமது வாழ்க்கையில் கடைபிடித்து வருகின்றனர். இவற்றுள் சுவாமி கீதானந்த ஆச்சிரமம், பக்தி வேதாந்த ஆச்சிரமம் போன்றன இவற்றுள் சிறப்பானதாக அமைகின்றது.

இவ்வாறாக இந்துக் கலைகள் அனைத்தும் மேலைநாடுகளில் பரவலடைந்து வளர்ச்சி பெற்றுள்ளது. அத்துடன் இந்துக்கலைகளை நவீனமயப்படுத்தி உலகளவில் சிறப்பிக்க மேலைநாட்டவரின் கலைப்படைப்புக்கள் உதவுகின்றன எனலாம். இந்துக்கலைகளின் மேலைநாட்டுப் பரம்பலானது இந்துமத உலகமயமாதலினை வெளிப்படுத்துகின்றது.