4ஆம் ஆண்டில் நமது இலக்கியச்சுடர்
படைப்புகளை periyaswamydeva@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி இதழின் வளர்ச்சிக்கு உதவுங்கள்

செவ்வாய், 1 டிசம்பர், 2020

மகாகவி பாரதியாரும் குழந்தைகளும் - முனைவர் சித்ரா

 

 

மகாகவி பாரதியாரும் குழந்தைகளும்

(Poet Bharathiyar and Children)

முனைவர் சித்ரா

விரிவுரையாளர், SCOPE, City University of Hong Kong

ஆங்காங்

 

தமிழ்நாடு இளம் சிந்தனையாளர் மன்றத்தினர் நடத்திய பாரதி நினைவு நாள் நூற்றாண்டு விழா அன்று பேசிய உரை

வாழ்க நிரந்தரம் வாழ்க தமிழ்மொழி

வாழிய வாழியவே!

வான மளந்த தனைத்தும் அளந்திடும்

வண்மொழி வாழியவே!

இன்று வானம் அளக்கும் உலகம் முழுவதும் தமிழும் தமிழர் கலாச்சாரமும் வேறுன்றி இருப்பதை ஆய்வுகளின் மூலம் நிறுவியிருக்கும் தமிழ் மக்களாகப் பிறந்ததற்கு பெருமைப்படுவோம்.

பாரதி பிறந்தது 1882 ஆம் ஆண்டு. 1982 ஆம் வருடம் அவரது பிறந்த நாள் நூற்றாண்டு விழா நடத்தப்பட்டது. அப்போது நாள் பள்ளியில் படித்துக் கொண்டிருந்த நேரம். தமிழக அரசு நடத்திய பாரதி விழா போட்டியில் கலந்து கொண்டேன். அப்போது தான் பாரதி கவிதை மட்டுமல்லாமல் கட்டுரைகளையும் கடிதங்களையும் கதைகளையும் எழுதியதை அறிந்து கொண்டேன். எனக்கு பாரதி பற்றிய முழு அறிமுகம் கிடைத்தது.

பாரதி பாடிய பாப்பா பாட்டு மற்றும் ஆத்திச்சூடி யாவரும் அறிந்தது. ஆனால் பாரதி பாடல்களைத் தவிரவும் குழந்தைகளுக்காக பாடிய கருத்துகள் பல.

பாரதியின் பாடல்களில் விரவி இருப்பன ஆன்மீகமும், தேசியமும், தமிழியமும், பெண்ணியமும். குழந்தைகளுக்காகப் பாடியது மிகவும் குறைவு. ஆயினும், அவர் அப்படிப்பட்ட பாடல்களைப் பாடத் தூண்டியது, எது? யோசிக்காமலேயே சொல்லிவிடலாம், அவரது இரண்டு பெண் குழந்தைகளே அதற்குக் காரணமாக இருப்பார்கள் என்று. அதற்கான சூழல் ஏற்பட்ட விதத்தினை பாரதியின் வரலாற்றிலிருந்து அறியலாம்.

பாரதி வீட்டிலே அமர்ந்து பாடல் எழுதிக் கொண்டு இருந்த நேரம். குழந்தை அழும் சத்தம். சென்று பார்த்தால், அவரது மனைவி செல்லம்மாவால் தண்டிக்கப்பட்ட குழந்தை அழுத வண்ணம் நின்றிருந்தாள். மனைவியை அழைத்து, “குழந்தை என்ன தப்பு செய்தாள்.. அதை ஏன் அடித்தாய்?” என்று கேட்டார். “நீங்கள் வெளியே போய் விடுகிறீர்கள். நான் குளிக்கப் போயிருக்கும் போது, தன்னை கவனிக்க யாரும் இல்லாத காரணத்தை ஆதாயமாகக் கொண்டு, குழந்தை வீதிக்குப் போய் விடுகிறாள். எங்கேயாவது ஒரு வீட்டிற்குள் போய், புகுந்து கொண்டு, அசல் வீட்டுக் குழந்தைகளிடம் அடியுண்டு, மலங்க மலங்க அழுது கொண்டு நிற்கிறாள். நான் ஒரு பக்கம் குழந்தையைத் தேட, ரொம்ப நேரம் கழித்து, எங்கிருந்தோ அழுது கொண்டு, அவளாக, அந்தக் குழந்தை அடித்தது என்று சொல்லிக் கொண்டே வீட்டிற்கு வருவாள். தினந்தோறும் இது நடக்கிறது. தண்டிக்காவிட்டால் எப்படி புத்தி வரும்? இவளைத் தேடும் காரியமே எனக்கு பெரும்பாடு. குளியல், சமையல், வீட்டு வேலைகளை நான் எப்படிச் செய்ய முடியும்?” என்றாராம் செல்லம்மா ஆதங்கத்துடன்.

உடனே பாரதி, “செல்லம்மா! இனி நீ குழந்தையை அடிக்காதே! குழந்தை பாடு இனிமேல் என் பாடு! அதைத் தொடாதே! நான் குழந்தையை எங்கும் போகாமல் பார்த்துக் கொள்கிறேன்!” என்று சொல்லிவிட்டு, குழந்தையைப் பார்த்து, “சகுந்தலா பாப்பா! அழாதே, அம்மா இனி உன்னை அடிக்க மாட்டாள். உனக்குப் பாட்டுப் பாடுகிறேன்” என்று சொல்லிவிட்டுக் குழந்தைக்காக பாப்பாப் பாட்டு பாடினாராம். என்ன பாடல் என்பதை நீங்கள் உடனே ஊகித்து விடலாம்.

இந்த ஓடி விளையாடு பாப்பா என்ற பாப்பா பாட்டு எழுதப்பட்டது 1913 ஆம் வருடம். இப்படிப் பிறந்தது தான் பாரதியின் குழந்தைப் பாடல்கள்.

ஒரு நாட்டிற்கு முக்கிய செல்வம், இந்நாட்டில் பிறந்து வளரும் குழந்தைகளே. அவர்களுடைய மனம் சிறப்புற வளர்க்கப்பட்டால் தான் நாடு சிறக்கும். இந்நிலையில் பாரதி தன் குழந்தைக்குப் பாடிய பாடல் போன்ற, குழந்தைகள் விரும்பும் சந்த அமைப்பில் அமைக்கப்பட்ட பாடல்கள், தமிழ் சமூகத்திற்கு அவசியம் தேவையானது என்பதைச் சமூகம் ஏற்றுக்கொண்ட ஒன்று.

குழந்தைகளுக்காக, குழந்தைகள் அறிந்த மொழியில், குழந்தைகள் அறிந்தவற்றையும், அறிய வேண்டியவற்றையும் குழந்தை மனதோடு எழுதுவதே குழந்தை இலக்கியமாகும். சிறுவர் சிறுமியர் படிப்பதற்கு ஏற்ற வகையில் அமைய குழந்தைப் பாடல்கள் சில இன்றியமையாத பண்புகளைப் பெற்றிருக்க வேண்டும். அவை இனிமை, எளிமை, தூய்மை, தெளிவு என்பனவாகும். அவற்றில் இனிமை என்பது நடையின் தன்மை. எளிமை என்பது சொற்களின் தன்மை. தூய்மை என்பது சொல்லப்படும் கருத்தின் தன்மை. தெளிவு என்பது சொல்லப்படும் முறையின் தன்மை. மேற்கூறிய நான்கில் ஒன்று குறைந்தாலும் அது முழுமையான குழந்தைகள் பாடல் என்ற தகுதியை இழந்துவிடுகிறது என்று சிறுவர் இலக்கியச் சிந்தனைகள் என்ற நூலில் பூவண்ணன் அவர்கள் விளக்குகிறார்.

காலம் காலமாக தாலாட்டுப் பாடல்கள், சிறுசிறு நாட்டுப்புறப் பாடல்கள் மூலமாக தமிழ்க் குழந்தைகள் பாடல்களைக் கேட்டு வந்த போதும், குழந்தை இலக்கியத்தின் இலக்கணத்தை ஒட்டி, இனிமை, எளிமை, தூய்மை, தெளிவு என்ற நான்கு கூறுகளுடன், பாப்பாப் பாட்டு அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

குழந்தை இலக்கியம் என்பது மூன்று முதல் பதினாறு வயது வரை உள்ள பிள்ளைகள் படிப்பதற்காக எழுதப்படுவதாக மணக்கும் பூக்கள் என்ற நூலில் குறிப்பிடுகிறார் செல்வகணபதி அவர்கள். இந்தக் கட்டுரையில் வயது வரையறை கொண்டு பாரதியின் பாடல்களை வகைப்படுத்திக் கூற விரும்புகின்றேன்.

பிறந்ததிலிருந்து மூன்று வயது வரை, நான்கு முதல் ஆறு வயது வரை, ஏழு முதல் பத்து வயது வரை, பதினொன்று முதல் பதினான்கு வரை, பதினைந்து முதல் பதினாறு வரை என்று வயதினை வகைப்படுத்திக் கொள்ளலாம் என்று எண்ணுகிறேன்.

தாலாட்டு பாடல்களின் தன்மைக் கூறும் போது, குழந்தைகள் செவ்வனே பாடல்களை கேட்பார்கள் என்பதை பாரதி,

காட்டில் விலங்கறியும், கைக்குழந்தை தானறியும்

பாட்டின் சுவையதனைப் பாம்பறியும் என்றுரைப்பார்”

என்ற வரிகளில் விளக்குகிறார்.

கண்ணம்மா என் குழந்தை என்ற பாடல் தாலாட்டு பாடலாகக் கொள்ளலாம்.

சின்னஞ் சிறு கிளியே - கண்ணம்மா !

செல்வ களஞ்சியமே !

மெச்சி யுனை யூரார் - புகழ்ந்தால்

மேனி சிலர்க்குதடீ !

சொல்லும் மழலையிலே - கண்ணம்மா

துன்பங்கள் திர்த்திடு வாய்

முல்லைச் சிரிப்பாலே - எனது

மூர்க்கந் தவிர்த்திடு வாய் ,

அன்பு தருவதிலே - உனைநேர்

ஆகுமோர் தெய்வ முண்டோ?”

மேலும், பல காலமாகக் பெண்கள் தங்கள் குழந்தைகளுக்கு நிலா நிலா ஓடி வா பாடலையும், கை விசம்மா கை வீசு என்ற பாடலையும் அந்த பச்சிளங்குழந்தைகளுக்கு பாடி சொல்லித் தந்து வருகிறார்கள். அதன் சாயலிலே தான் பாரதி,

ஒளி படைத்த கண்ணினாய் வா வா வா!

உறுதி கொண்ட நெஞ்சினாய் வா வா வா!”

என்று பாடியிருப்பார் என்று அறிய முடிகிறது.

குழந்தை இலக்கியத்தில் மற்றொரு தன்மை, குழந்தை மனம் தீயதை விரும்புகின்ற வகையிலும், தீயதை வியக்கின்ற வகையிலும், தீயதை நினைக்கின்ற வகையிலும் எழுதக் கூடாது என்றுகுறிப்பிடுகிறார் செல்வகணபதி அவர்கள். அப்படிப் பார்க்கும் போது, பாரதி இந்தப் பாடலில் குழந்தை எப்படி ஒளிப்படைத்த கண்ணுமாய், உறுதி கொண்ட நெஞ்சுடன், தெளிவு பெற்ற மதியுடன், சிறுமை கண்டு பொங்குவதாய், எளிமை கண்டு இரங்கி, ஏறு போல் நடை கொண்டு இருக்க வேண்டும் என்று சொல்வது, எதிர்காலச் சந்ததி திறன் வாய்ந்த சந்ததியாக உருவாகும் ஆசையை வெளிக்காட்டுகிறது.

இன்றைய குழந்தைகள் தாம் நாட்டின் எதிர்காலத் தலைவர்கள். மனித வாழ்விலே குழந்தைப் பருவமே மிக முக்கியமானது. இவ்வுண்மையை உணர்ந்து, குழந்தைகளை முறையாக வளர்க்க முற்பட்டால் நாட்டிற்கு நன்மை பயக்கும்.

நான்கு வயது முதல் ஆறு வயது குழந்தைகளின் உள்ளம், எதையும் ஏற்றுக் கொள்ளும் நிலையில் உள்ளதாகும். பெற்றோரும், மற்றவரும் கூறும் நல்ல கருத்துகள் அவர்கள் உள்ளத்தில் ஆழமாகப் பதியும் பருவம். குழந்தையை அச்சுறுத்தியோ, கட்டுப்படுத்தியோ ஒன்றைக் கூறினால் அவர்கள் ஏற்றுக் கொள்ளாத வயது. குழந்தைகளின் மனம் ஏற்றுக் கொள்ளும் வகையில், அவர்களது மனவியல் அறிந்து பாடிய பாடலே பாரதி தன் மகள் சகுந்தலாவிற்குப் பாடிய 16 கண்ணிகள் கொண்ட ஓடி விளையாடு பாப்பா பாட்டு.

பொய் சொல்லக் கூடாது பாப்பா - என்றும்
புறஞ்சொல்ல லாகாது பாப்பா,

பாதகஞ் செய்பவரைக் கண்டால் - நாம்
பயங்கொள்ள லாகாது பாப்பா,

துன்பம் நெருங்கிவந்த போதும் - நாம்
சோர்ந்துவிட லாகாது பாப்பா,

சோம்பல் மிகக்கெடுதி பாப்பா, - தாய்
சொன்ன சொல்லைத் தட்டாதே பாப்பா,

சாதிகள் இல்லையடி பாப்பா; - குலத்
தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்!”

என்று அடுக்கிக் கொண்டே செல்வார் பாரதி. பாப்பா பாப்பா என்று குழந்தையிடம் நைச்சியமாக எடுத்துச் சொல்லி, குழந்தையின் மனத்தை திடப்படுத்துவது குறிப்பிடத்தக்கது.

ஏழு முதல் பத்து வரை உள்ள குழந்தைகள், விரும்பியதைச் செய்யத் துவங்கும் வயது. அந்த வயதினருக்கு பாரதியின் ஆத்திச்சூடி மிகவும் ஏற்றது என்பது என் கருத்து. சுருக்கமாக, ஆனால் ஆணித்தரமாக சொல்லப்பட்டது ஆத்திச்சூடி. பயம் கொள்ளலாகாது என்று பாப்பாப் பாட்டில் சொன்னது இங்கே அச்சம் தவிர் என்றானது. பொய் சொல்லக் கூடாது என்பது பொய்மையை இகழ் என்றும், சோம்பல் மிகக் கெடுதி என்பது, ஓய்தல் ஒழி, காலம் அழியேல் என்றானது. சோர்ந்து விடலாகாது என்பது உடலினை உறுதி செய், துன்பம் மறந்திடு என்றானது. கல்வியதை விடேல், நீதி நூல் பயில் என்று அக்குழந்தைகளுக்கு அறிவுரைகள் பலவற்றை ஆத்திச்சூடி வழியாக பாரதி கூறுகிறார். இன்றைய கால கட்டத்தில், பல குழந்தைகளும் இளைஞர்களும் சோர்ந்ததன் காரணமாகத் தான் தற்கொலைகள் அதிகரித்துக் வருகின்றன. பாரதியின் இந்தப் பாப்பா பாடல் வரிகளும் ஆத்திச்சூடியும் அவர்கள் மனதில் தெளிவாக பதியச் செய்வதால், இந்த தீச்செயல்கள் நடக்காமல் தடுக்க உதவும் என்று நான் எண்ணுகிறேன்.

அடுத்த வயது வரம்பு பத்து முதல் பதினான்கு வரை. தனக்கு விரும்பிதை சற்று தெளிவாக உணரும் வயது. கேள்விகள் பல கேட்கும் வயது. அறிவினை செறிவாக்கத் துணியும் வயது. அவர்களுக்கும் ஆத்திச்சூடியிலே பல ஆலோசனைகளை வழங்குகிறார் பாரதி.

வான நூற் பயிற்சி கொள்

உலோக நூல் கற்றுணர்

ரசத்திலே தேர்ச்சி கொள்

சரித்திரத் தேர்ச்சி கொள்

கைத் தொழில் போற்று”

என்ற இந்தக் கூற்றுகள் அவர்களின் வாழ்க்கைக்கு அடித்தளத்தை அமைக்கும் ஆலோசனைகள். இந்த வயதினர் தங்கள் நாட்டின் மீது பற்று கொள்ள வேண்டும் என்பதை

“பாரத மணிக்கொடி பாரீர்…

அதை தாழ்ந்து பணிந்து புகழ்ந்திட வாரீர்”

என்ற பாடலைக் கொண்டு தெளிவிக்கிறார் பாரதி. மேலும் பாரதி, ‘புதியன விரும்பு’ என்று கூறுவது, அவருடைய அவாவினையும் வெளிப்படுத்தும் கூற்று. அவர் புதுமையின் மேல் கொண்ட நாட்டத்தை பரலி சு. நெல்லையப்பருக்கு எழுதிய கடிதத்தின் மூலமாக வெளிக்காட்டவும் செய்கிறார்.

புதிய புதிய செய்தி, புதிய யோசனை

புதிய புதிய உண்மை, புதிய புதிய இன்பம்

தமிழில் ஏறிக் கொண்டே போக வேண்டும்”

என்று எழுதி வெளிப்படுத்துகிறார்.

புதியனவற்றை எளிய முறையில் எப்படிச் சொல்ல வேண்டும் என்பதை தன்னுடைய அனைத்துப் பாடல்களிலும் காட்டியுள்ளார். அதிலும் பாப்பா பாடல்களில் அதைத் திறம்படக் கையாண்டுள்ளார் என்றே சொல்ல வேண்டும்.

எளிய பதங்கள், எளிய நடை, எளிதில் அறிந்து கொள்ளக்

கூடிய சந்தம் பொது ஜனங்கள் விரும்பும் மெட்டு”

என்று பாஞ்சாலி சபதத்தின் முன்னுரையில் பாரதி கூறியதை குழந்தைகள் மனதில் பதியும்படியான பாடல்களில் எளிமையாகச் சொல்லிச் சென்றுள்ளதைக் காண முடிகிறது.

இன்றைய இந்தியா கண்டுபிடிப்புகளை நோக்கி சுய வேலை வாய்ப்பை நோக்கிச் செல்ல திட்டமிட்டுச் செயல்பட்டு வருகிறது. அதற்கு அடித்தளம் இடும் வயது, புதுமையை விரும்பும் வயது,அறிவை வளர்த்துக் கொள்ள தகுந்த வயது பத்து முதல் பதினான்கு என்பது என் கருத்து.

இப்போது சற்றே பாடல்களிலிருந்து விலகி பாரதியின் வாழ்வியலைப் பற்றி பார்ப்போம். பாரதியின் மகள்களின் அன்புத் தோழி மண்டயம் ஸ்ரீனிவாசாரியரின் மகள் யதுகிரி. பாரதியின் வீட்டில் அவரும், செல்லக் குழந்தை. அவரது பதினான்கு பதினைந்து வயதிலே யதுகிரி, பாரதியின் பாடும் திறத்தைக் கண்டு, அவரது பாடல்களைத் தன்னுடைய ஏட்டிலே பதிவிட்டு, மனனம் செய்ததை நினைவு கூர்ந்ததை, நண்பர்களுக்கு சுட்டிக் காட்ட விரும்புகின்றேன். இந்த யதுகிரி அம்மாள் எழுதிய ‘பாரதி நினைவுகள்’ என்ற நூலில், இந்தச் சிறு பெண்ணின் கண்ணில் பாரதி எப்படித் தென்பட்டாரோ, அது அப்படியே பதியப்பட்டுள்ளது.

பாரதி இறந்து 18 வருடங்களுக்குப் பிறகு, 1939 ஆம் ஆண்டு, 1912 முதல் 1919 வரை பாரதி பற்றி அவர் மனதில், நினைவில் பதிந்தவற்றை எழுதியுள்ளது நமக்கு அவர் பாடல் எழுதும் தன்மையை, அவரது பழக்க வழக்கங்களை எடுத்துக் காட்டும் விதமாக உள்ளது.

கடற்கரையில் மீனவர் பாடும் பாட்டில் லயித்த பாரதி, அதை மறுபடியும் பாடும்படிக் கேட்டு, எழுதி வைத்துக் கொண்டு வீடு திரும்புவாராம்.  தன் மனைவி குழந்தைகளிடம், பாடிக் காட்டி,

பாருங்கள்… இது ஒன்றும் நீங்கள் நினைப்பது போல அலட்சியப்படுத்துகிற விஷயம் இல்லை.  மனிதன் பரிணாமம் பெற்ற வரலாற்றையே சுருக்கமாகச் சொல்கிறது இந்தப் பாட்டு. வார்த்தைகள் தான் கொச்சையாக இருக்கின்றன”

என்று கூறி அப்போதே அந்த மீனவர் பாடிய மெட்டில் தானே ஒரு பாட்டு எழுதி பின் பாடவும் செய்தாராம்.  அவரோடு குழந்தைகளும் சேர்ந்து பாடுவார்களாம்.  யதுகிரி தன் ஏட்டில் அந்தப் பாட்டை எழுதி வைத்துக் கொள்வாராம். அவருக்கு அப்போது பாரதி, பிற்காலத்தில் மகாகவியாக போற்றப்படுவார் என்று தெரியாது.

இன்னொரு சமயம், வீட்டில் வேலைக்காரிகள் எல்லாம் ஒன்று சேர்ந்து பாடிக் கொண்டே நெல் குத்திக் கொண்டிருக்கிறார்கள். பாரதி அதைச் சிறிது நேரம் கேட்கிறார். பின் அவர் அந்த மெட்டில் தானும் ஒரு பாட்டு இயற்றி பாடத் தொடங்குகிறார். குழந்தைகளும் ஆரவாரத்தோடு சூழ்ந்து கொள்கின்றனர். பாரதி பாடுவதைக் கேட்டு, தங்கள் பாடலை அவர் கேலி செய்வதாக எண்ணி, அவருடன் சண்டை பிடிக்க முற்படுகின்றனர்.  தான் அவர்களை கேலி செய்யவில்லை என்றும், அவர்களிடமிருந்து அந்த மெட்டைக் கற்று, தானும் பாடுவதாக அவர்களுக்கு எவ்வளவு சமாதானம் கூறியும், அவர்கள் அதை நம்ப மறுக்கிறார்கள். கடைசியில், அவரது மனைவி செல்லம்மாள் வந்து, அவர்களுக்கு எடுத்துச் சொல்லி சமாதானம் படுத்த முயன்ற போது, ஏற்றார்களாம். இந்த தினம் யதுகிரியின் நினைவலைகளில் பதிந்த ஒன்று, நூலிலும் பதியப்பட்ட ஒன்று. அன்று அவர் பாடிய பாடலும் அவரது ஏட்டிலே பதியப்பட்டதாம்.

அது என்ன பாடல்?

நெல் குத்தும் பெண் கடைசியில், ஹம் ஹம் என்பது ‘வேண்டும் வேண்டும்’ என்று கேட்கும்படி அவரைத் தூண்டினார் போலிருந்தது. ஒரு காகிதத்தை எடுத்தார். அதில், ‘மனதில் உறுதி வேண்டும்’ என்ற பாடலை எழுதினார்” என்று அதற்குப் பின் நடந்ததைப் பதிவு செய்திருக்கிறார் யதுகிரி அம்மாள்.

மனதில் உறுதி வேண்டும்

வாக்கினிலே இனிமை வேண்டும்

நினைவு நல்லது வேண்டும்”

என்ற பாடல் வரிகள் பதின்ம வயதினருக்கு உகந்த பாடல். மனதில் உறுதி கொண்டால், காரியத்தில் உறுதி கொண்டால், நெருங்கின பொருள் கைப்படும், கனவு மெய்ப்படும், தரணியில் பெருமை கிட்டும், வானகமிங்கு தென்படும். அதை நம் இளையோர் உணர்ந்து செயல்பட வேண்டும்.

மற்றொரு நிகழ்வைக் குறிக்கும் போது, பாரதியும் அவரும் பேசியதை எழுதுகிறார் யதுகிரிஅம்மாள்.

பாரதி : உனக்குத் தெரியாது. பழைய சாத்திரங்கள் உதவா. நம் தேசத்தை விட எல்லா தேசங்களும் முன் சென்று விட்டன. பெண்அடிமைப்பட்டு, நம் தேசம் பின் தங்கியிருக்கிறது.

நான்: நீர் என்ன சொன்னாலும் பெண்களால் தான் இந்த தேசம் நிலை நின்றிருக்கிறது என்பேன். வழக்கங்கள், பண்டிகைகள், இதிகாசங்கள், புராணங்கள், நீதி நூல்கள் எல்லாம் எங்களால் தான் காப்பாற்றப்பட்டு இருக்கின்றன.

பாரதி: பலே! ஐயர் சொன்ன பிரசங்கத்தை அப்படியே விழுங்கியிருக்கிறாயே! பரவாயில்லை… குழந்தைகளிடம் தோற்றாலும் சந்தோஷமே. குரு சிஷ்யனிடம் தோற்பது ஒரு பெருமை. அதை நம் தேசத்தில் பலர் எடுத்துக்காட்டியிருக்கிறார்கள்.

நான்: அது போகட்டும்… நாங்கள் சோபனம் அடிப்பதற்குப் புதிய மெட்டில் எங்களுக்கு ஒரு பாட்டு பண்ணிக் கொடும்.

பாரதி: இன்று தங்கம்மா கும்மியடிப்பதற்கு ஒரு பாட்டு சொல்லும்படிக் கேட்டாள். அதையே கேட்டாய். நாளைக்கு வரும் போது சொல்கிறேன்.

மறுநாள் பாரதியார், பெண்கள் விடுதலை பெற மகிழ்ச்சிகள் என்று துவங்கும் கும்மிப்பாட்டை எழுதி வந்தார், அத்துடன் அதைப் பாடியும் காட்டினார்.

இது, கும்மிப்பாட்டு, பெண் குழந்தைக்கான பாடல் என்று தெரிகிறது. அத்துடன், புதுச்சேரியில் வாழ்ந்த யதுகிரி அம்மாள் பாரதியாரின் பாட்டெழுதும் திறத்தை அழகாக 1954ஆம் ஆண்டு வெளியான நூலின் முன்னுரையில் கூறுகிறார்.

பாரதியின் சிச்யையாகவும் அபிமான புத்திரியாகவும் இருக்கும் பாக்கியம் எனக்கு இருந்தது. பாரதியார் அடிக்கடி எங்கள் வீட்டுக்கு வந்துவிடுவார். எந்தக் கவிதையானாலும் பாட்டானாலும் தாம் கவனம் செய்தவுடன் பாடிக் காட்டி ஆனந்தப்படுவார்.

வேளை சமயம் ஒன்றும் கிடையாது. பாரதியார் இட்டமான வேளையில் எங்கள் வீட்டுக்கு வந்துவிடுவார். பல சமயங்களில் அவர் வரும்போது உபாதியாயர் சொல்லிக் கொடுத்த பாடங்களை படித்துக் கொண்டோ என் தாய் சொல்லிக் கொடுத்த பிரபந்தங்களைப் பாடிக் கொண்டோ இருப்பேன். ஆனால், பாரதியார் வந்தவுடன், என் கவனமெல்லாம் மாடியிலேயே இருக்கும். மாடியில் அவர் என் தந்தையிடம் பாடிக் காட்டும் பாட்டின் முதல் அடியை நானும் அவரைப் போலவே பாட முயற்சிப்பேன். பாரதியார் இதைக் கவனித்து விட்டால், என்னை மேலே அழைத்துத் தாம் எழுதி வந்த காகிதத்தைக் கொடுத்து விடுவார்.

வாயில் பாடுவதைப் போலவே நடத்தையிலும் காட்டுவார். மனத்தில் நினைத்தால் போதும், செயலிலும் காட்டிவிடுவார். எவ்வளவு கஷ்டமானாலும் சளைக்க மாட்டார். யார் என்ன சொன்னாலும் பொருட்படுத்த மாட்டார். பாரதியார் எந்தப் பாடலையும் மிகவும் கம்பீரமாவும் உணர்ச்சித் ததும்பும்படியும் பாடுவார்.

பாரதியாருக்கு சங்கீதக் கச்சேரிகளைக் காட்டிலும் பாம்பாட்டி, வண்ணான், நெல் குத்தும் பெண்கள், செம்படவர்கள், உழவர், இவர்களுடைய நாடோடிப் பாட்டுகள் மிகவும் இஷ்டம்”

என்று எழுதியிருப்பது, பாரதியை பதின்ம வயதில் யதுகிரி அம்மாள் கண்ட பாரதியைப் பற்றி நாம் அறிந்து கொள்ளலாம்.

பாரதி பாடிய பாடல்கள் எளிமையாக இருந்த காரணத்தால், யதுகிரி அத்தனைப் பாடல்களையும் மனப்பாடம் செய்து, குடும்பத்தினர் எல்லோரும் ஒன்றாக சேர்ந்திருக்கும் போதும், வீட்டில் நடக்கும் சுப விழாக்களின் போதும், யதுகிரியும், அவளது தோழிகளும் பாடுவார்களாம். யதுகிரி எழுதி வைத்த ஏடு, ஒரு சமயம் வந்த வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட போதும், அவரது மனதில் பதிந்த பாடல்கள் அழியாமல் இருந்து, அதை அவர் நமக்கு கொடுத்தது குறிப்பிடத்தக்கது.

பதினைந்து முதல் பதினாறு வயது குழந்தைகளுக்கு ஏற்ற பாடல்கள் பலப்பல. யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல், செந்தமிழ் நாடெனும் போதினிலே என்று பல பாடல்களை அடுக்கலாம். அச்சமில்லை அச்சமில்லை என்ற பாடல் இந்த வயதினரை வீறு கொண்டு எழச் செய்ய வல்லது என்பது என் கருத்து.

இந்திய நாட்டின் சுதந்திரப் போராட்டம் எப்படி நடந்தது என்பதை நான் ஏட்டிலே படித்தது மட்டுமே. மக்கள் எப்படி கொதித்து எழுந்திருப்பார்கள் என்பதை நூல்களின் வாயிலாகவே சென்ற ஆண்டு வரை அறிந்திருந்தேன்.

ஆங்காங் நகரம் வெள்ளையர்களின் அதிகாரத்தில் கீழ் 1997 வரை இருந்தது. நான் அங்கு சென்றது 1996இல். எல்லாம் சாதாரணமாவே தெரிந்தது. ஒரே நாடு, இரண்டு அரசுகள் என்பது 2050 வரை கடைபிடிக்கப்பட வேண்டும் என்ற உடன்படிக்கையோடு, சீனாவிற்கு, 1997ஆம் ஆண்டு, ஆங்காங் திருப்பித் தரப்பட்டது. அந்தச் சமயத்தில் சீன அரசின் அதிகாரத்தை விரும்பாத பலரும், தங்கள் வேலைகளை விட்டு, குழந்தைகளுடன், பல நாடுகளுக்கு சென்று குடியேறினார்கள். சீனக் கொள்கைகள் தங்கள் மேல் திணிக்கப்படக் கூடாது என்ற எண்ணம் கொண்ட பலரும் இப்படிச் சென்றார்கள். சீன அரசு தேர்வு செய்த மனிதர் தலைமைப் பதவியில் அமர்த்தப்பட்டனர். பல கட்டமைப்புத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன.  சீன நகரங்களுக்கு செல்ல விரைவு இரயில் பாதை மற்றும் மகாவ்-ஜூஹாய் நீண்ட பாலத்திட்டம் தொடங்கப்பட்டன.

2010ஆம் ஆண்டு வரையிலும், சாதாரண மக்களுக்கு எந்தவொரு மாற்றமும் தெரியாமல், நாங்கள் வாழ்ந்து வந்தோம். சீன அரசின் நோக்கங்களை அறிந்த சிலர், கால மாற்றங்களின் உந்துதலால், தங்கள் தலைவரை 2020ல் தாங்களே தேர்வு செய்ய அனுமதிக்க வேண்டும் என்று கேட்டனர். அதைச் சீன அரசு ஏற்க வேண்டும் என்று 2014இல், மிகவும் அமைதியாக மஞ்சள் குடை போராட்டத்தை நடத்தினர். பல்கலைக்கழக மாணவர்கள் தலைமையில், பள்ளி மாணவர்களும், பொது மக்களும் கலந்து கொண்ட போராட்டம் இது. சீன அரசு அதைச் சில மாதங்களில் அடக்கியது.

ஆனால் 2019ஆம் ஆண்டு, அந்தப் போராட்டம் வலுப்பெற்றது. முகமூடிகள் அணிந்து பள்ளிக் குழந்தைகள் முதற்கொண்டு, இளைஞர்களும் அனைத்துத் தரப்பினரும் இதில் கலந்து கொண்டனர். பொறுமையும், நல்லொழுக்கமும் கொண்ட இளைஞர்கள், சீன அரசை தங்கள் விருப்பத்திற்கு அடிபணிய வைக்க, இந்தியாவில் நடப்பதைப் போன்று, பல்வேறு ஊர்வலங்களை நடத்தியதோடு அல்லாமல், சீனாவைச் சார்ந்த நிறுவனங்கள், கடைகள் என்று பலவற்றை அடித்து நொறுக்குவது, தீயிட்டுக் கொளுத்துவது என்று வன் செயல்களில் ஈடுபட்டனர். வணிக வளாகங்களையும் விட்டு வைக்கவில்லை. சில பல்கலைக்கழக வளாகங்களை தங்கள் போராட்டக் கூடங்களாக அமைத்துக் கொண்டனர். அங்குள்ள ஆய்வுக் கூடங்களையும் கணிப்பொறிக் கூடங்களையும் உடைத்துத் தள்ளினர். பல்கலைக்கழகங்களும் பள்ளிகளும் காலவரையின்றி மூடப்பட்டன.

ஒரு நாள், நான் எங்கள் பகுதியில், பல நாட்கள் கழித்து,போராட்டம் பிற பகுதிகளில்நடந்து கொண்டிருந்த சமயத்தில், நடந்து சென்ற போது, பள்ளி மாணவன் ஒருவனும் கல்லூரி மாணவன் ஒருவனும் கண்களிலே கோபம் கொப்பளிக்க, எதை உடைக்கலாம் என்று கையில் பெரிய இரும்புக் கழியுடன் சுற்றும் முற்றும் பார்ப்பதைக் கண்டது, என் மனதில் இன்றும் அழியாமல் நிற்கிறது. அவர்கள் நின்றிருந்த பகுதியில் ஒரு புறம் ஏற்கனவே உடைக்கப்பட்டிருந்த ஒரு புத்தகக் கடை இருந்தது. அது அவர்கள் கண்களில் பட்டது. அங்கு சென்று தங்கள் கோபத்தைக் காட்டியது என்னை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. பாரதியின் வார்த்தைகள், அச்சமில்லை அச்சமில்லை, அப்போது என் மனதில் தோன்றி மறைந்தது என்பதைக் கூற விரும்புகின்றேன். நாட்டிற்காக போராடத் துடிக்கும் அந்த உள்ளங்களை புரிந்து கொள்ளவும் முடிந்தது. ஏன் என்றால், அவர்கள் தான் நாளைய குடிமக்கள். அதனால் அவர்கள் முயற்சி எடுக்காமல் அவர்கள் வருங்காலத்தை யாரால் உருவாக்க முடியும்.

அதனால், அச்சமின்றி நினைத்ததைச் சாதிக்கும் பதின்ம வயதினர் பாரதியின் வார்த்தைகளை தீய வழியில் செலுத்தாமல், நன் வழியில் செலுத்தி, தற்கொலை எண்ணங்களைத் தவிர்த்து, சாதிக்க துடிக்க வேண்டும் என்பது என் அவா.

தேமதுரத் தமிழோசை உலகமெல்லாம்

பரவும் வகை செய்தல் வேண்டும்

திறமான புலமையெனில் வெளிநாட்டோர்

அதை வணக்கஞ் செய்தல் வேண்டும்”

என்பதை மனதிற் கொண்டு இன்றைய குழந்தைகள் செயல்பட வேண்டும்.

பாரதி பாடிய குழந்தைப் பாடல்கள் அனைத்தும் ஊக்கப்படுத்தும் பாடல்கள், வாழ்க்கையை செம்மைப் படுத்தும் பாடல்கள். அத்தகைய பாடல்களை குழந்தைகளின் மனதில் பதித்து, வருங்கால சந்ததியினரை திறன் மிக்கவர்களாகச் செய்வது நம் கைகளிலே தான் உள்ளது.

மனிதன் வாழத் துவங்கிய காலம் தொட்டே போட்டிகள் இருந்திருக்க வேண்டும். அந்தப் போட்டியின் காரணமாகத் தான் வலியவர் எளியவரை வருத்தி வருவது. இன்றைய கால கட்டத்தில், மக்கள் கூட்டம் அதிகமான காரணத்தால், போட்டிகளும் அதிகரித்து விட்டன. அதன் காரணமாக செய்ய வேண்டியதை செய்யத் தகுந்த முறையில், பலரும் செய்த போதும், செய்யக் கூடாததை, செய்யத் தகாத முறையில் செய்வோரும் இருக்கின்றனர். இதன் காரணமாக பலரும், எந்த வயதினரானாலும் சரி, மனம் சோர்ந்து, அச்சப்பட்டு, வாழ்க்கையை, இனிமையாக வாழ முடியாமல், வருந்தி, துன்பத்தின் எல்லையை தொடுகின்றனர். வாழ்க்கை என்பது மகிழ்வுடன் வாழ வேண்டிய ஒன்று. அதை பிறந்தது முதலே குழந்தைகளுக்கு எடுத்துச் செல்ல வேண்டும். போட்டி என்றால் வெற்றி தோல்வி நிச்சயம் உண்டு. அதை எதிர்நீச்சல் போட்டு கடக்க, அவர்களுக்கு பயிற்சி கொடுக்க வேண்டும். வாழ்வில் எதையும் எதிர்கொள்ளும் சக்தியைத் தர வேண்டும்.

அதற்கான வித்தாக நிச்சயம் பாரதி பாடிய பாப்பா பாடலும் சரி, ஆத்திச்சூடியும் சரி, பல எளிய பாடல்களும் அமையும் என்பதை கூறவும் வேண்டுமோ! விளையாட்டாக குழந்தைப் பருவத்தில் கற்பது, அவர்கள் மனதில் பதித்து விட்டால், அவை நிச்சயம் அவர்கள் எதிர்கொள்ளும் வாழ்க்கை போராட்டங்களிலும், பங்கு பெறும் வாழ்க்கைப் போட்டிகளிலும், திறம்படச் செயல்படச் செய்து, வெற்றி பெறாவிட்டாலும், வாழ்க்கையை அதன் போக்கிலே ஏற்றுக் கொள்ளும் துணிவைப் பெறுவார்கள் என்பது என் கருத்து.

அப்படி குழந்தைகள் உருவாக்கப் பட்டால், பாரதி போற்றிக் கூறும்,

வாழிய செந்தமிழ்! வாழ்க செந்தமிழர்!

வாழிய பாரத மணித்திருநாடு!

என்பதற்கிணங்க நம் தமிழகம் முன்னேற்றப் பாதையில் செல்லும் என்பது உறுதி.