4ஆம் ஆண்டில் நமது இலக்கியச்சுடர்
படைப்புகளை periyaswamydeva@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி இதழின் வளர்ச்சிக்கு உதவுங்கள்

வெள்ளி, 1 ஜனவரி, 2021

மழைச் சாரலில் - முனைவர் பீ. பெரியசாமி

 


அடடா

என்ன சுகம்!

 

என் மௌன கீதங்கள்

உன் புன்னகைக்குள்

அடக்கமாகி விட்டனவே….

 

நீ புதியவன்

எனக்கு மட்டுமல்ல

என் கனவுகளுக்கும் தான்

 

பாடிய இசைகளெல்லாம்

வான் வேடிக்கைகளாக

ஆடைகள் மட்டும்

வண்ணம் தீட்டுகின்றன.

 

உன் ஆடையின் அழகில்

நான் அசந்து கிடக்க

ஆயிரம் நினைவுகள்

உன்னால் என்னிடம்….

 

உலகமும் குளிர்ந்தது

உன் அழுகையால்

நானும் மகிழ்ந்தேன்

உன் வருகையால்…………

 

நீ மட்டுமென்ன

ஒவ்வொரு கவிஞனுக்கும்

புதுமையாய் இருக்கிறாய்….

 

உன்னைக் காணும்போது மட்டும்

கனவுகளுக்கும் கால்கள் முலைத்துவிடுகின்றன.

நீ சுவாசத்தின் சுகம்….

 

உன்னிடம் கோபிக்க

ஆயிரம் இதயங்கள்….

உன்னை மட்டும் இரசிக்க

நான்……..

 

இரவானாலும் பகலானாலும்

நீ தீண்டும்போது மட்டும்

தனி சுகம்தான்

 

வரும்போதெல்லாம்

சிலிர்க்க வைக்கிறாய்

சில நேரம்

சிந்திக்கவும் வைக்கிறாய்

 

உன்னில் கரைந்திட ஆசைதான்

மனிதனாய் பிறந்துவிட்டேனே….

மறுபிறவியிலாவது உன்னில்

என்னைக் கரைத்திடச் செய்….

 

கருப்பு அழகுதான்

உன்னை அழைத்து வரும்போதும்

அனைத்து வரும்போது

 

நீ தீர்க்கதரிசி

உன் மடியினில்

உலகமே உற்சாகமாகிறது.

 

ஏனோ

சில நேரங்களில்

உயிர்களையும் கொண்டு செய்கிறாய்

உறவாக்கிக் கொள்ள

 

நீ பாடும் இசையில்தான்

பல உயிர்கள் வாழ்கின்றன..

பாடாமல் நிறுத்திவிடதே

பாழாம் போகும் பூமியும்….

 

இங்குச் சோற்றுக்கு அடித்துக்கொண்டு

கூட்டம் நிறைய……

விளைவிக்கும் குடியானவன்

ஏளனம்…..

 

இது புதிதல்ல

காலகாலமாய் விவசாயி வஞ்சிக்கப்படுத்தும்

அரசியலுக்காகக் கொண்டாடப்படுதல்

 

பாவம் அவன் பரம ஏழை

உன்னை மட்டுமே

அவன் உரிமையோடு

கேட்க முடியும்

உரிய நேரத்தில் வா என்று

 

அவனுக்கு எதுவுமே

உரிய நேரத்தில் கிடைப்பதில்லை

அவன் பழகி விட்டான்

நீ யாவது பாசத்தைக் காட்டு

 

அவன் நாட்டின் முதுகெலும்பு

அது உடைந்து பலகாலமானது

ஏனோ யாருக்கும் புரிவதில்லை

தேர்தல் காலத்தை தவிர்த்து

 

நீயாவது உடனிரு

அவன் பசியாற்ற

பக்க துணையாயிரு

 

அவன் விளைவிப்பது என்னவோ

உயர்ரக நெல்தான்

அவனுக்கென்று விதிக்கப்படுவதென்னவோ

நியாயவிலைக்கடை அரிசிதான்

 

வரிசையில் நின்றே

வாழ்க்கையைத் தொலைத்துவிட்டான்

இலவசத்துக்கும் மானியத்துக்கும்

 

அவன் வாரிசையாவது

வாழவிடு சுகமாக….

உன் அன்புச் சாரலில்

அழியட்டும் அவன் வறுமையும்….

 

கலவரங்கள் செய்யாமல்

கரையேதும் உடையாமல்

காத்துவிடு எம்மக்களையும்

என் அன்புடைய அணங்கே

முனைவர் பீ. பெரியசாமி