4ஆம் ஆண்டில் நமது இலக்கியச்சுடர்
படைப்புகளை periyaswamydeva@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி இதழின் வளர்ச்சிக்கு உதவுங்கள்

செவ்வாய், 1 டிசம்பர், 2020

களிமண் காவியம் - இரா. விஜயலெட்சுமி, கு. யுவராஜ்

 


களிமண் காவியம்



நவீன நாகரிகத்தில்

நகர்ந்து கரைந்துகொண்டிருக்கும்

தொல்லியல் நாகரிகம் !

எத்தனை நாகரிகம்

நடைபயின்றாலும்                     

தொன்மை தொலையா

ஓவியம்  !!                                             

ராமன் கால்வண்ணத்தால்         

கருங்கல் கன்னிகையாய்

உருக்கொண்டது                                    

ராம காவியம் !!                          

குயவனின் கைவண்ணத்தால்

கலைவண்ணமிக    

மட்பாண்டமாய்

உருக் கொண்டது

களிமண் காவியம் !!        

வெண்களிமண் சேங்களிமண்

பந்துகளிமண் தீக்களிமண்          

மாக்கற்பாண்டக் களிமண்ணென    

வண்ணவண்ண மண்ணெடுத்து   

வண்ணப்பொடிக் குழைத்து,

கருப்பட்டி உப்பு கடுக்காய்          

சேர்த்துக் குழைத்துச்

சேற்றில்பூக்கும்                                

செந்தாமரையை 

நுண்கலையாய்

வார்த்தெடுக்கும்                                   

வட்டச் சக்கரம்!!                                 

வட்டச் சக்கரம் சுற்றியே          

வாழ்க்கைச் சக்கரத்தை

மண்மணம் மாறாமல்                   

மணக்கச் செய்யும் 

மண்பாண்டம்!!! 

தொழிலே கலையாய்

கலையே தொழிலாய்                

எண்ணமே வண்ணமாய்

வடிவங் கொள்ளும்

வண்ண ஜாலம்!!           

மழைத்துளிபட்டுக் கிளம்பும்

மண்வாசம் போல் மணக்கும்

மண்சட்டிச் சோறும்          

மாரிச் சாரலில் குளிரும்

மண்போல் மனங்குளிரும்                          

மண்பானை குளிர்நீரும்

ஆதிகால ஆரோக்கியத்தின் ஆனந்தம் !!!                                

கார்த்திகையில் கண்சிமிட்டும்

அகல்விளக்காய் !!           

உயர்திணையை உயர்வாய்

அஃறிணையை அனாயாசமாய்

அலங்கரிக்கும் நவராத்திரி

கொலு பொம்மையாய் !!

தைப்பொங்கலில் பொங்கும்             

புதுப் பானையாய் !! - நீர்ச்

சுத்திகரிப்புச் சாதனமாய் !! 

பஞ்சபூதத் தத்துவத்தைப்

பக்குவமாய்த்  தன்னுட் தேக்கித்

தாளலயம் தப்பாதிசைக்கும்

கடமாய்க் கவின்பெறும் 

கலைநயம் !                    

வெயிலின் வெக்கை

வெளியே வாட்டினும்

தண்ணென் குளிர்ச்சியைத்

தன்னுட் கொண்டு

தாகம் தீர்க்கும்

தண்ணீர்ப் பானை!!

நம்பிக்கைத் தாகத்தை

உறுதித் தாகத்தை

உள்ளத்தே வற்றாதிருக்கச்

செய்யும் நீரூற்று !!

அடிசில் பானை முதல்

அஃகப் பானை வரை

பற்பல வடிவங்களில்

நவீனத்தின் நுட்பம்

குறையாத புதுமை !!

உயிரற்ற மண்ணுக்கு

உயிரோட் டமளித்து

உருவம் தந்த உன்னதம் !!

மண்ணில் தோன்றி

மண்ணில் மடியும் மனிதன்

மண்ணைக் கொண்டு

செய்யும் மாயவித்தை !!!

எத்தனைப் பாண்டங்கள்

ஏற்றம் பெறினும்

என்றென்றும்

மங்காது தங்கும்

மண்ணில் மட்பாண்டம்

அருங்காட்சிப் பொருளாய் !!!!!

 

கவியாக்கம்           இரா. விஜயலெட்சுமிபட்டதாரி தமிழாசிரியை,  தி.சுக்காம்பட்டி  - 621 310.

           

ஓவிய ஆக்கம்       :  கு. யுவராஜ்ஒன்பதாம் வகுப்பு மாணவன்