4ஆம் ஆண்டில் நமது இலக்கியச்சுடர்
படைப்புகளை periyaswamydeva@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி இதழின் வளர்ச்சிக்கு உதவுங்கள்

செவ்வாய், 1 டிசம்பர், 2020

போராளியின் கனவு - முனைவர் வாசு. அறிவழகன்

 

 

போராளியின் கனவு

முனைவர் வாசு. அறிவழகன்   

 இணைப் பேராசிரியர்,                                                         தமிழாய்வுத்துறை   

முத்துரங்கம் அரசு கலைக் கல்லூரி,

வேலூர்- 632002      

Email : arivazhagandde@gmail.com ,

 Cell:9445376274

எழில் வானில் உதய சூரியன் உதயமானது. இன்னும் உறக்கமா? என்று நம்மைப் பார்த்துக் கேட்பது போல நகைத்த வண்ணம் வங்கக் கடலைச் சோலையாக்கி செவ்வானம் என்னும் சிம்மாசனத்தில் வந்து அமர்ந்தது. 

கல்லூரி மாணவன் கதிரவன் இலக்கியம் கற்ற தன் தந்தையோடு தினமும் ஏதாவது ஒரு இலக்கியப் பொருளில் வாதிடுவது வழக்கம். ஒருநாள் அவன் கல்லூரிக்குக் கிளம்புகிற நேரத்தில் இராமாயணம் குறித்த ஒரு வாதத்தைத் தன் தந்தையோடு தொடங்கினான்.

 “இராமாயணத்தில் வாலி, வாதம் செய்யப்பட்ட செயல் மிகவும் கொடுமையானது என்றும்; இராமன் தன்னுடைய சுய நலத்திற்காகக் சுக்கிரீவனுக்குத் துணை போனான் என்றும்; தன்னை ஒரு மாவீரன் என்று சொல்லிக் கொண்டு வாலியை மறைந்திருந்து கொன்றது எவ்விதத்திலும் நியாயம் ஆகாது என்றும்; இச்செயல் அரசனுக்கு அழகல்ல என்றும்; இராமனை உலகளந்த இறைவனென்று ஆழி சூழ் உலகமே ஆர்ப்பரிப்பதனால், இது தான் இறைவனுக்குரிய இலக்கணமா?”என்றும்; இராமன் தர்மத்தைக் காப்பதற்கே அவதாரம் எடுத்தார் என்று சொல்லுவது எவ்வளவு முரண்பாடான ஒன்று என்றும்; இது தமிழ்ப் பண்பாட்டைச் சிதைக்கின்ற சிற்றுளி அல்லவா? என்றும் தன்  தந்தையிடம் அவன் அடுக்கடுக்கான கேள்விகளை முன் வைத்தான்.

மகனுடையப் பேச்சைக் கேட்டதும், இராமனிடம் மிகுந்த மரியாதை கொண்ட அவனுடைய தந்தை பெரிய அளவில் மன வேதனைக்கு ஆளானார். எனினும் அவர் தன்னைச் சமாதானப் படுத்திக் கொண்டு மகனுக்குப் பதிலளிக்கத் தொடங்கினார்.

“சுக்கிரிவனைத் தன்னுடைய உடன் பிறந்த தம்பி என்றும் பாராமல் அவனை அரசவைக்குள் சேர்க்காத வாலியை வதம் செய்ய வேண்டியது தர்மத்தின் விதி. அதேபோல் ஒருவன் மாற்றான் மனைவி மேல் காதல் கொள்வது அதைவிட பெரும் பாவம். அதிலும் இராமன் மனைவியைக் கவர்ந்து சென்றான் இராவணன். அவன் வதம் செய்யப்பட வேண்டியதும் தர்மத்தின் விதி. எனவே தர்மத்  தாயின் வழிகாட்டுதலின் பேரிலேயே இராமன் இவ் வதங்களைச் செய்துள்ளாரே  தவிர,அவர் அதர்ம வழியைப்   பின்பற்றவில்லை. இதனால் எந்தவொரு பண்பாடும் சிதைந்து விடவில்லை. இதை உணரக்கூடிய நிலைமையிலும் நீ இப்போது இல்லை.” என்று வருத்தம் கலந்த கோபத்தோடு கதிரவனுக்கு அவர் பதிலளித்தார்.

இதற்கு மேலும் இந்த வாதத்தைத் தொடர்ந்தால் பழமையோடு புதுமை மோதி பின் பழமை சோர்வு பட்டு விடுமோ என்றெண்ணி இந்த வாதத்தை இத்துடன் முடித்துக் கொண்டு கதிரவன் சிரித்தபடியே கல்லூரிக்குப் புறப்பட்டான்.

கல்லூரியில் ஆண்டு  தோறும் நடைபெறக்கூடிய இலக்கிய விழா இந்த ஆண்டும் ஏற்பாடானது. இவ்விழாவில் கதிரவனுக்கு “இக்காலத் தமிழகம்” எனும் தலைப்பில் பேசும் வாய்ப்புக் கிடைத்தது.

பேராசிரியர் டாக்டர் முகுணன் அவர்களுடையப் பேச்சை பலமுறைக் கேட்டுக் கேட்டுக் கதிரவன் தன்னுடைய மேடைப் பேச்சை வளர்த்துக் கொண்டிருந்தான். இந்த இலக்கிய விழாவிற்கு டாக்டர் முகுணன் அவர்கள் தலைமை தாங்குவதை அறிந்து கதிரவன் பெரு மகிழ்ச்சி அடைந்தான். இந்த வாய்பைத் தனக்குக் கிடைத்தப் பெரும்    பேறாகக் கருதினான்.

இந்த விழாவில் அவன், “முதலில் நான் தாய் மொழியால் தமிழன்; இந்த நாட்டினால் நான் இந்தியன்” என்று தன்னுடைய உரத்தக் குரலில் பேசத் தொடங்கினான். மாநிலங்கள் என்ற தனித்  தனிக் குடும்பங்களே இந்தியா  எனும் கூட்டுக் குடும்பமாக அமைந்திருக்கின்றது.

இங்கு ஒற்றுமை இருக்க வேண்டும்; அமைதி நிலவ வேண்டும்; ஆரோக்கியமான வாழ்க்கைக்கு இந்தக் கூட்டுக் குடும்பம் அடித்தள மிடவேண்டும். ஆனால் சமீப காலமாக இந்தியாவில் இதற்கு எதிரான ஒரு சூழல் வளர்ந்து வருவதையே காணமுடிகிறது.

அயல் நாடுகளில் மட்டுமல்ல அண்டைமாநிலங்களில் கூட தமிழர்கள் நித்தம் நித்தம் கொல்லப்படுவதை நாளிதழ்கள் சுட்டிக் காட்டுகின்றன. இது குறித்து அவர்களிடம் காரணம் கேட்டால்,   நாங்கள்  அவர்களை எலிகள் என்றும் புலிகள் என்றும் நினைத்துவிட்டோம் எங்களை மன்னித்து விடுங்கள் என்று மழுப்பலான பதிலையே நமக்கு  சொல்லி வருகின்றனர்.

இந்நிகழ்வுகளைத் தமிழர்கள் அல்லாதோர் நமக்கென்ன என்று வேடிக்கைப் பார்க்கின்றனர். தமிழகத்தில் உள்ள பெரும்பாலானத் தமிழர்கள் நாட்டில் என்ன நடக்கிறது என்பதையே அறியாமல் உறக்கத்திலேயே இருக்கின்றனர். இனியாவது தமிழன் விழித்தெழ வேண்டும்,

                 “எலியென உன்னை இகழ்ந்தவர் நடுங்க

                  புலியென செயல் செய்யப் புறப்படு வெளியில்”

எனும் பாவேந்தன் வரிகளுக்கு ஏற்ப இளைஞர் பட்டாளம் வீறுகொண்டு எழவேண்டும்.

                 “எங்கள் பகைவர் எங்கோ மறைந்தனர்

                  இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே”

 

என்பதை நாம் மற்றவர்களுக்கு உணர்த்தவேண்டும்என்று உணர்ச்சி பொங்க தன்னுடைய உரையைப் பலத்தக் கரவொலிகளுக்கு மத்தியில் கதிரவன் நிறைவு செய்தான்.

இந்த விழாவிற்குத் தலைமை தாங்கிப் பேசிய டாக்டர் முகுணன் அவர்கள் தன்னுடைய பேச்சில் பல இடங்களில் கதிரவனின் பேச்சை மேற்கோள் காட்டிப் பேசினார். அவருடைய பேச்சில் வெளிவந்த சொற்கள் ஒவ்வொன்றும் கதிரவனுக்கு இனம் புரியாத மகிழ்ச்சியைத் தந்தது.

பேராசிரியரின் பேச்சைக் கேட்கும் போது கதிரவனுக்கு, துரோணாச்சாரியார் ஏகலைவனிடம் அவனுடையக் கட்டை விரலைக் காணிக்கையாகக் கேட்டதற்குப் பதிலாக அவனுக்கு ஒரு வில்லை அவர் பரிசாகக் கொடுத்திருந்தால் அவன் எவ்வளவு சந்தோஷப் பட்டிருப்பானோ, அவனைப் போன்று பல மடங்கு சந்தோஷத்தை அப்போது கதிரவன் பெற்றிருந்தான்.

வீட்டுக்குப் போனதும் இந்த மகிழ்ச்சியை அவன் தன் தந்தையிடம் பகிர்ந்து கொண்டான். மகன் மேடைப் பேச்சுக்குத் தயாராகி வருகிறான் என்ற சந்தோஷம் அவருக்கு ஒரு புறம் இருந்தாலும், அவனுடய சிந்தனையை அவரால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

இதனால் கதிரவனைப் பார்த்து அவர், “படித்தோமா வேலைக்குப் போனோமா என்பதுதான் நம்மை போன்ற நடுத்தரக் குடும்பத்திற்கு அழகு, அதை விடுத்து இது போன்ற வெட்டி வேலைகளைப் பார்ப்பது நல்லதல்ல.”என்று அவனுக்கு அவர் அறிவுறுத்தினார்.

போர்க்குணமும் இனவுணர்வும் கொண்ட கதிரவனுக்குத் தந்தையின் அறிவுரை அவ்வளவாகப் புரியவில்லை. அவனுடைய சிந்தனை முழுவதும் பேராசிரியரைப் பின் தொடர்ந்தே இருந்தது. இதனால் வீட்டில் அவன் ஏராளமான பிரச்சனைகளைச் சந்ததிக்க வேண்டியிருந்தது. 

கதிரவனின் தங்கைக் குழலிக்குப் பெங்களூரில் உள்ள பொறியியல் கல்லூரியில் படிக்க இடம் கிடைத்தது. பெண்ணையாவது நன்றாகப் படிக்க வைக்க வேண்டும் என்று நினைத்த அவனுடைய தந்தை, குழலியைப் பெங்களூரில் உள்ள கல்லூரியில் சேர்த்தார்.

ஒரு நாள் பெங்களூர் தொலைக் காட்சி நிலையம் தமிழ் நிகழ்ச்சி ஒன்றை ஒளிபரப்பியது. அப்போது கன்னட நிகழ்ச்சி ஒன்றை நேரமாற்றம் செய்ய வேண்டியதாயிற்று. இதனைக் கேள்வியுற்ற கன்னட மொழி எழுத்தாளர்கள் கொதித்தெழுந்தனர்.

தொலைக் காட்சி நிலையத்திற்கு அருகில் இருந்த தமிழ்ப் பெயர்ப் பலகைகளை அவர்கள் அடித்து நொறுக்கினர். பல விளம்பரப் பலகைகளைத் தார் வைத்துப் பூசினர். தொலைக் காட்சி நிலையத்திற்கு எதிராகக்  கோஷமிட்டனர்.   போராட்டம்,மறியல் என்று பெரிய அளவிற்குக் கலவரம் செய்யத் தொடங்கினர். 

தொலைக் காட்சி நிலையத்தில் பணி புரிந்தவர்கள் அத்தனை பேரும் கன்னடர்கள் என்பதனால் அவர்களை இந்தப் போராட்டக் காரர்கள் ஒன்றும் செய்யவில்லை. மாறாக அங்கிருந்த தமிழ்ப் பெண்கள் பலரைத் தொந்தரவு செய்தனர்.

இந்தக் கலவரத்தில் கதிரவனின் தங்கையும் தப்பிக்கவில்லை. அவள் தன் மானத்தோடு உயிரையும் விட்டாள். கதிரவன் தன் தங்கையின் இறுதி ஊர்வலத்தைப் பேராசிரியரின் தலைமையில் இரங்கல் கூட்டத்தோடு நடத்தினான்.

பெருந்திரளான அந்த  இரங்கல் கூட்டத்தில் பேராசிரியர் பேசும் போது,

“ பெங்களூர் தொலைக் காட்சி நிலையம் கன்னட       நிகழ்ச்சியை நேரமாற்றி ஒளிபரப்பியது யாருடைய குற்றம்; அது தமிழர்களுடைய குற்றமா?  கதிரவனின் தங்கை இந்தியாவில் பிறந்தது யாருடைய குற்றம் ; அது இந்த நாட்டினுடைய குற்றமா?அவளைத் தமிழ்த் தாய் ஈன்றெடுத்தது யாருடையக் குற்றம் ; அது இந்த மண்ணின் குற்றமா?

அண்டை மாநிலத்திலும் அயல்நாடுகளிலும் தமிழர்கள் புறக்கணிக்கப் படுகிறார்கள். தமிழகத்தில் மாத்திரம் மாற்று மொழிக் காரர்களும் பிற நாட்டவர்களும் மரியாதையாக நடத்தப் படுகிறார்களே  ஏன் ? இதற்கு என்ன பொருள்? இது வந்தவர்களை வாழ வைக்கும் தமிழகம் என்று பொருளா? அல்லது தமிழை;தமிழினத்தை ; ஏன் நம்மை நாம் காப்பாற்றிக் கொள்ளும்  வக்கற்றவர்கள் என்று பொருளா?

பெண்களிடம் பெரு வீரத்தைக் காட்டிய அந்தக் கன்னடக் கூட்டத்தை நாம் என்ன செய்ய வேண்டும்! அந்தச் சிறுமதி படைத்தக் கூட்டத்தை அழித்தொழிக்க நாம் எத்தனிக்க வேண்டாமா? உறங்கிக் கொண்டிருக்கும் இந்தத் தமிழ்ச் சமூகம் இனியாவது உறக்கம் களைய வேண்டாமா?” என்று அடுக்கடுக்கான வினாக்களை முன்வைத்து , தழுதழுத்தக் குரலிலே தன்னுடைய உரையைப் பேராசிரியர் முடித்துக் கொண்டார்.

பேராசிரியர் பேசி முடித்ததும் அந்தக் கூட்டத்தின் இடையே,“ஆம் வேண்டும். தமிழகத்தின் அறியாமைச் சிறையில் பூட்டப் பட்டிருக்கும் இளைஞர்கள் அந்தச் சிறைக் கதவை உடைத்துக் கொண்டு வெளியே வரவேண்டும். அந்நிய மோகம் ஒழிந்து தமிழகம் எங்கும் புரட்சி கீதம் இசைக்க வேண்டும்”,என்று எதிர் திசையில் இருந்து ஒரு குரல் வந்தது. குரல் வந்த திசையை நோக்கி எல்லோரும் திரும்பி பார்த்தனர். அங்குக் கதிரவனின் தந்தை கோபத்தோடு நின்று கொண்டிருந்தார்.