4ஆம் ஆண்டில் நமது இலக்கியச்சுடர்
படைப்புகளை periyaswamydeva@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி இதழின் வளர்ச்சிக்கு உதவுங்கள்

வெள்ளி, 1 ஜனவரி, 2021

உலகின் உன்னதம் நீர்!! - பா.மகேஸ்வரி

 


பூமிக்குள் சுரந்த

 முதல் அமிர்தம் நீர்!

உயிரின் வடிவம் நீர்!

மண்ணின் படிமம் நீர்!

அத்தியாவசியமான உன்னை

உலகம் அந்நியமாக்கிவிட்டது!

விலைப் பொருள் அல்ல நீர்

உணவை விளைவிக்கும்

பொருள் நீர்!

மரங்களை வெட்டி மண்ணை

மட்டுமல்ல ,மண்ணுக்குள் இருக்கும்

உன்னையும் மலடியாக்கிவிட்டது

இம்மானுடம்!

உனைக் கொண்டு உணவை

விளைவித்தோம்,

இனி எதைக்கொண்டு உன்னை

விளைவிப்போம்?

ஏர் பூட்டி உழவு செய்ய

நீர் தானே ஆதாரம்!

உன்னையும்

 இறக்குமதி

செய்ய வைத்து விடுமோ?

மனித அவதாரம்.

மண்ணில் உள்ள நீரை

உறிஞ்சிய விஞ்ஞானம்,

 விண்ணில் நீரைத் தேடுவது

வெற்று பொய்ஞானம்!

பாட்டில் நீரைக் குடிப்பது தான்

இன்றைய  பண்பாடு,

நாளை நீர் கிடைப்பது

என்பதே பெரும் பாடு!

நீரன்றோ நம் தீராத் தொன்மம்

இதை என்றறியும்,

இம்மானுட ஜென்மம்?

ருசி தீர்க்க உணவின்றி போனாலும்

பசி தீர்க்கும் தாயல்லவோ நீர்!

தங்கத்தின் விலையை விட

தண்ணீர் விலை

 அதிகமாகி விடுமோ?

தீராத் தொன்மமே ஏனோ?

உன் மீது மனிதனுக்கு

இத்தனை வன்மம் .

புவிக்குள் இருந்த வரை

பொக்கிசமாய் இருந்தாய்!

புவி மேல் வந்தாய்,

புட்டிக்குள் அல்லவா அடைந்து

விட்டாய் .

நிறம்சுவையற்ற உன்னை

செயற்கை சுவையூட்டி

சாகடித்து விட்டனர்!

நீர் இன்றி போனால்

மனிதனின் நா மட்டுமல்ல

மண்ணின் நாவும் வறண்டு

தான் போய் விடும் ....