4ஆம் ஆண்டில் நமது இலக்கியச்சுடர்
படைப்புகளை periyaswamydeva@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி இதழின் வளர்ச்சிக்கு உதவுங்கள்

வெள்ளி, 1 ஜனவரி, 2021

பகவத்கீதை கூறும் செயல் பற்றிய கருத்துக்கள் - Miss.P.Sutharshini

 

Miss.P.Sutharshini

Temporary Assistant Lecturer

Department of Hindu Civilization

Eastern University, Sri Lanka

sutharshiniperinpam@gmail.com

பகவத்கீதை கூறும் செயல் பற்றிய கருத்துக்கள்

அறிமுகம்

இதிகாசங்களில் ஒன்றாக மகாபாரதம் காணப்படுகின்றது. மகாபாரதத்தின் ஒரு பகுதியாகப் பகவத்கீதை கொள்ளப்படுகின்றது. இது பிரஸ்தான திரயங்களில் ஒன்றாகவும் காணப்படுகின்றது. உபநிடதங்கள் வேதத்தில் இருந்தும் மகாபாரதத்தில் இருந்தும் தோற்றம் பெற்றதால் உபநிடதம் எனவும் குறிப்பிடப்படுகின்றது. இதனால் உபநிடதம் பசு எனவும் கீதை அதன் பால் எனவும் போற்றப்படுகின்றது. பகவத்கீதை என்பதற்குப் பகவானின் பாடல்கள் என்று பொருள் கொள்ளப்படுகின்றது. அத்துடன் கீதையானது 700 ஸ்லோகங்களையும் 18 அத்தியாயங்களையும் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

பகவத்கீதையினை சிறப்பிற்கும் வகையில் தத்துவவாதிகளால் உரைகள் எழுதப்பட்டுள்ளன. அவ்வகையில் ராஜாஜியின் கைவிளக்கு, பால கங்காதர திலகரின் கர்மயோகம், மகாத்மா காந்தியின் அநாஸக்தி யோகம் என்பவை கொள்ளப்படுகின்றன.

பலராலும் சிறப்பிக்கப்படும் பகவத்கீதையானது மூன்று வகையான யோகங்கள் பற்றிக் குறிப்பிடுகின்றது. அவை பக்தியோகம், ஞானயோகம், கர்மயோகம் என்பனவாகும். அவைகளில் சிறப்பிடம் பெறும் யோகங்களில் கர்மயோகமும் ஒன்றாகும். இவ் யோகமானது செயல் பற்றி விரிவாக எடுத்தியம்புகின்றது எனவே செயல் பற்றி கீதை குறிப்பிடும் கருத்துக்கள் பற்றி இக்கட்டுரையில் நோக்குவோம்.

செயல் பற்றிய கருத்துக்கள்

மகாபாரத இறுதிப் போரில் அர்ச்சுனன் மனத்தளர்ச்சியுற்றுப் போர் புரிய மறுப்பதைக் கண்ணுற்ற கிருஷ்ணர் அச்செயலைச் செய்யும்படி பணிக்கின்றார். அர்ச்சுனன் கிருஷ்ணரின் போதனைகளைக் கேட்டு எவ்வித மறுப்புமின்றி போர் புரிகின்றார். இவ்வாறு கிருஷ்ணரால் போதிக்கப்பட்ட சிந்தனைகள் அனைத்தும் செயல் பற்றியதாகவே அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கதாகும். இங்குக் கர்மம் என்பதன் பொருள் செய்யப்படுவது எனும் பொருளில் வழங்கப்படுகின்றது. அவ்வகையில் what is Done என்பதில் செயல் என குறிப்பிடப்படுகின்றது. இவற்றுடன் யோகம் என்பதற்கு ஆற்றலைப் பயன்படுத்தல் அல்லது ஈடுபடுவது எனவும் பொருள் கொள்ளப்படுகின்றது. இங்குக் கர்மயோகம் என்பதற்கு முழுப்பொருள் சமூகக் கட்டுப்பாடுகளை நிறைவேற்றுவதில் ஈடுபாடு என்ற பொருளும் கொள்ளப்படுவதை அவதானிக்கலாம். அவ்வகையில் நாம் ஏதாவதொரு செயலைச் செய்தாலும் பலனை எதிர்பார்க்காமல் செய்ய வேண்டும் என்பதே இங்குக் கூறப்படுகின்றது. இதனையே பகவான் ஸ்ரீகிருஷ்ணர் அர்ச்சுனனை நோக்கி கடமையைச் செய் பலனை எதிர்பாராதேஎன உபதேசிப்பதை அறியலாம்.

பகவத்கீதை கர்மயோகத்தில் இரண்டு வகையான கர்மங்கள் பற்றிக் குறிப்பிடுகின்றது. அவை

01.          நிஷ்காமிய கர்மம்

02.          காமிய கர்மம்

இவற்றில் பயன் கருதாது செய்யப்படும் செயல் நிஷ்காமிய கர்மம் என வழங்கப்படுகின்றது. பயன் கருதிச் செய்யப்படும் கர்மம் காமிய கர்மம் எனவும் வழங்கப்படுகின்றன.

அர்ச்சுனன் செய்ய வேண்டிய பக்தியோகத்தைப் பிரதானமாகக் கொண்டு கர்மயோகத்தைப் பகவான் கிருஷ்ணர் விளக்குவதைக் காணமுடிகின்றது. இதனைப் பின்வரும் சுலோகம் விளக்குகிறது.

லோகே(அ)ஸ்மின்த் விவிதா நிஷ்டாபுரா புரோக்தா மயானக

ஞானயோகேன ஸாங்க்யானாம் கர்ம யோகேன யோகினாம்

இச்சுலோகம் மூலம் பின்வருமாறு குறிப்பிடுகிறார்;. “பாவமற்றவனே இவ்வுலகில் என்னால் இருவகை நிஷ்டைகள் முன்பே கூறப்பட்டன. அவற்றில் சாங்கிய யோகிக்கு நிஷ்டை ஞானயோகமும் யோகிகளுக்கு நிஷ்டை கர்மயோகமாகவும் அமைகிறது”. என அர்ச்சுனனை நோக்கிக் கூறுகிறார். இங்கு ஞான நிஷ்டை என்பது ஆத்மாவுக்கும் பரமாத்மாவுக்கும் வேற்றுமை இல்லை. எனினும் தான் பிரம்மத்தைத் தவிர வேறல்ல என்று கருதுவதுடன் எந்தச் செயலிலும் சிறிதும் கூட அகந்தை, மமதை, பற்று, ஆசை கொள்ளாதிருப்பது என்பவையே ஞான நிஷ்டை எனப்படுகின்றது. அத்தோடு இந்நிலையை அடைந்த பிறகு யோகியானவர் மகிழ்ச்சி, சோகம், ஆசை இவற்றையெல்லாம் கடந்தவனாவதோடு அவனுக்கு சம நோக்கு ஏற்பட்டு விடுகின்றது. இதனால் அவன் பரமாத்மாவின் உண்மை சொரூபத்தை உள்ளவாறு அறிந்து கொள்வான். அதுவே ஞான நிஷ்டையாகும். எனவே தன்னை முற்றிலும் பகவானுடைய ஊழியனாய்க் கருதி எல்லாச் செயல்களையும் அவற்றின் பலன்களையும் அவருக்கே சமர்ப்பணம் செய்வதே கர்ம நிஷ்டை எனக் கொள்ளப்படுகின்றது.

மனிதனில் காணப்படும் குணங்களே அவனைச் செயல் செய்யத்தூண்டுகின்றன எனக் கீதை குறிப்பிடுகின்றது. இதனை மேல்வரும் சுலோகம் மூலம் அறியலாம்.

நஹி கஸ்சித் ஷ்ணமயி ஜாது திஷ்டத்ய கர்மக்குத்

கார்யதே ஹ்யவச கர்மசர்வ ப்ரக்ருதிஜைர்குணை

யாராக இருந்தாலும் எக்காலத்திலும் ஒரு வேளை கூட செயல்புரியாமல் இருப்பது இல்லை என இச்சுலோகம் குறிப்பிடுகின்றது. இவ்வாறு செயல் புரிவதற்கான காரணம் மனித சமுதாயம் அனைத்தும் பிரகிருதியில் இருந்து உண்டாகும் குணங்களால் வசப்பட்டு வழிகளின்றி செயல் செய்யத்தூண்டுகின்றது.

அறிவிலியான ஒருவன் புலன்கள் அனைத்தையும் தனது சக்தியால் வெளித்தோற்றத்தில் அடக்கி விட்டு மனதினால் அந்தப் புலன் நுகர்பொருட்களை நினைத்துக் கொண்டிருக்கின்றானோ அவன் பொய் நடத்தை உள்ளவன். அவனை ஆஷ்டபூதி எனக் குறிப்பிடப்படுகின்றான். அதாவது கீதையின் கூற்றுப்படி மனிதனை செயல் புரிய வைப்பது குணம் தான் என்பதை அறியலாம். இக்கருத்தினைப் பகவான் கிருஷ்ணர் அர்ச்சுனனை நோக்கி மேல்வருமாறு  கூறுகின்றார்.

ஆனால் அர்ச்சுனா எவனொருவன் மனதினால் புலன்களை வசப்படுத்தி பற்றில்லாதவனாய் எல்லாப் புலன்களாலும் கர்மயோகத்தைக் கடைப்பிடிக்கிறானோ அவனே சிறந்தவன்

இவற்றோடு கர்மயோகத்தை ஆற்றுவதற்குச் சாஸ்திரங்களில் விதிக்கப்பட்ட விதிகளுக்கேற்றாற் போல் செயல்களை ஆற்றவேண்டும் எனவும் குறிப்பிடப்படுகின்றது. இதனைப் பகவான் கூற்றின் மூலம் அறியக்கூடியதாக உள்ளது.

நீ சாஸ்திரங்களால் விதிக்கப்பட்ட கர்மங்களை ஆற்றுவாயாக. ஏனெனில் கர்மங்களைச் செய்யாதிருப்பதைக் காட்டிலும் செய்வது சிறந்தது. மேலும் கர்மம் செய்யாமல் இருப்பதால் உனக்கு உடலைக் காப்பாற்றுவதும் முடியாத காரியமாகிவிடும்

கர்மங்கள் செய்யாமல் இருப்பதை விடச் செய்வது தான் சிறந்தது. குறிப்பாகக் கர்மங்கள் செய்யாமல் இருப்பதால் உடலைக் காப்பாற்றவும் முடியாது எனக் குறிப்பிடுகின்றார் கிருஷ்ணர்.

பகவத்கீதை கர்மத்தில் வேள்வியாகம் ஆற்றுவது பற்றியும் குறிப்பிடுகின்றது. செயல்களில் வேள்வி இயற்றப்படுவதும் செயல்களின் செயற்பாடே எனக் குறிப்பிடுகின்றது. வேள்வி கர்மம் பற்றி அர்ச்சுனனை நோக்கி மேல்வருமாறு குறிப்பிடுகிறார்.

யாகத்தின் பொருட்டு செய்யப்படுகின்ற கர்மம் தவிர வேறு செயல்களில் ஈடுபடுவதனாலேயே இம்மனித சமுதாயம் கர்மங்களால் பந்தப்படுகிறது. ஆகவே அர்ச்சுனா, அந்த யாகத்தின் பொருட்டே பற்றுதலின்றிக் கடையை நன்கு ஆற்றுவாயாக.

படைப்பின் ஆரம்பத்தில் பிரம்ம தேவன் யாகங்களுடன் மக்களைப் படைத்துவிட்டு நீங்கள் இந்த வேள்வியின் மூலம் பல்கிப் பெறுங்கள். இந்த வேள்வி உங்களுக்கு நீங்கள் விரும்பிய போகத்தைத் தருவதாகட்டும்

மனிதனானவன் பற்றுக்களை நீக்கி தனக்குரிய கடமைகளைச் சுயநலம் மற்றும் பொது நல நோக்குகளைக் கைவிட்டு இதனால் ஏற்படும் நன்மையைக் கவனத்தில் கொள்ளாமல் யாகம் எனும் கடமையை நீக்குவானால் அவனே சிறந்தவன் எனக் கூறப்படுகின்றது. இவற்றோடு உலகைப்படைத்த பிரம்மதேவன் யாகவேள்விகளின் போது நினைத்த காரியங்களை நிறைவேற்றிக் கொள்ளமுடியும். எனப் பகவான் கடமையைச் செய்யுமாறு வலியுறுத்துகின்றார்.

பகவத்கீதை வேள்விச் செயல் பற்றிக்கூறும் போது இறைவழிபாடு, தெய்வ நெறி நூல்களை ஆராய்வது முன்னோர்கள் நல்ல எண்ணத்துடன் எண்ணுதல், பெற்றோருக்குப் பணிவிடை செய்தல், மக்கள் பசிப்பிணி நீக்குதல், கல்வியைப் பெருக்குதல், விலங்கினங்களைக் காப்பாற்றுதல் எனும் பொதுவாழ்க்கையை வேள்விக் கர்மமாகச் செய்து வரல் வேண்டும். இவ்வாறு செய்து வருவதற்குக் காரணம் உயிரினங்களனைத்தும் உணவில் இருந்து உண்டாகின்றன. உணவின் உற்பத்தி மழையிலிருந்து உற்பத்தியாகின்றது. அத்தோடு வேள்வியானது விதிக்கப்பட்ட கர்மங்களிலிருந்து தோன்றுவதால் கர்மங்களின் தொகுப்பானது வேதத்தில் உண்டாகின்றது. ஆகவே வேதம் அழிவற்ற இறைவனிடமிருந்து தோன்றியதால் அழிவற்ற பரமாத்மா வேள்வியில் நிலைபெற்றிருக்கிறார் எனக் கீதை குறிப்பிடுகின்றது.

செயல்கள் செய்வதனூடாக பாவங்கள் சேர்வதற்குக் காரணம் ஆசைகள் என ஸ்ரீகிருஷ்ணர் குறிப்பிடுகின்றார். இதனை அர்ச்சுனனின் கேள்விக்குப் பதிலளிப்பதாக அமைகின்றது. குறிப்பாக அர்ச்சுனன் கிருஷ்ணரிடம் பின்வருமாறு வினவுகிறான். அவ்வகையில் கிருஷ்ணா இந்த மனிதன் தான் விரும்பாவிட்டாலும் பலவந்தமாய் தூண்டப்பட்டவன் போல எதனால் ஏவப்பட்டுப் பாவத்தைச் செய்கிறான்என அர்ச்சுனன் வினவுகின்றான். அவ் வினாவிற்கு பகவான் மனிதனில் இருந்து உண்டாகின்ற ராட்ஷச குணத்தால் ஏற்படும் காமம் தான் கோபமாய் வெளிப்பட்டு பாவம் செய்ய வைக்கின்றது”. என்கிறார். இச்செய்தியை விளக்குவதாக மேல்வரும் சுலோகம் அமைகின்றது.

   காம ஏஷ க்ரோதஏஷ ரஜோகுண ஸமுத்பவ

      மஹசனோ மஹாபாப்மா வித்தயேன மிஹ வைரிணம்”.

ராஜோ குணத்தில் இருந்து உண்டாகிய இந்தக் காமம் தான் கோபமாகும். இது பெருந்தீணிக்காரன் பெரும்பாவமுடையது. இதையே இந்த விஷயத்தில் பகைவனாய் அறிந்து கொள். எனக் கிருஷ்ண பகவான் அறிவுறுத்துகின்றார். இங்குச் சுகபோகங்களை அனுபவிக்க அனுபவிக்கக் காமம் அதிகரிக்கிறதேயன்றி அடங்குவதில்லை. இதனால் தான் காமத்தைப் பெரும்பாவம் என்கின்றார். காமம் தான் எல்லாத் தீமைகளுக்கும் காரணம் என்பதுடன் மனிதனுக்குப் பலவித நுகர்ச்சிகளில் பற்றுதலை உண்டாக்கி அவனைப் பலவந்தமாய்ப் பாவங்களில் ஈடுபடச் செய்கிறது. இதன் காரணமாக மகாபாவி என மனிதன் அழைக்கப்படுகின்றான்.

அர்ச்சுனன் கிருஷ்ணரை நோக்கி ஒரு மனிதனுக்குத் துயரம், அழிவு என்பவற்றை ஏற்படுத்துவது எது என்று வினவுகிறான். அதற்கு மேல்வரும் சுலோகம் மூலம் விளக்கமளிக்கின்றார்.

தூமேனாவரியதே வஹ்னிர்  யதாதாசோ மலேன ச…”

இச்சுலோகமானது பின்வருமாறு விளக்கமளிக்கின்றது. அவ்வகையில் எவ்விதம் புகையால் நெருப்பும், அழுக்கினால் கண்ணாடியும் கருப்பையினால் சிசுவும் மூடப்பட்டிருக்கிறதோ அவ்விதமே ஆசையினால் ஞானம் மூடப்பட்டிருக்கின்றது. மேகம் சூரியனை மறைப்பது போல் மாயையும் ஈஸ்வரனை மறைக்கிறது. மேகம் விலகியதும் சூரியன் தென்படுகின்றது. அதுபோல் மாயை அகன்றதும் ஈஸ்வரன் கண்ணுக்குத் தென்படுவார் என்கிறார். ஆசை எனும் ஞானமானது ஒவ்வொரு மனிதருக்குள்ளும் மறைந்து காணப்படுகின்றது. இதனால் காமம் காமம் அதிகமாகி பாவச்செயல்களை மனிதன் செய்கிறான் என்று குறிப்பிடுகின்றார்.

காமம் நெருப்பைப் போன்றது என நெருப்புக்குக் காமம் உவமை சொல்வதைக் காணலாம். அவ்வகையில் எத்தனை நெய்யும் விறகும் இடப்பட்டாலும் நெருப்பு போதுமென்று தணிவதில்லை. அத்தோடு மனிதன் தான் தொட்ட செயல் எதையும் விட்டுவைப்பதுமில்லை. அவ்வாறு தான் காமமும் மனிதனுடைய விவேகம், வைராக்கியம், பற்றற்ற தன்மை இவற்றை நிலைக்க விடுவதில்லை. எனவே காமம் தான் மனிதனுடைய பாவச் செயலுக்குக் காரணம் எனக் கூறுகிறார்.

இந்திரியங்கள் எல்லாம் காமத்தின் இருப்பிடமாகக் காணப்படுவதால் இந்திரியங்களால் ஞானத்தை மறைத்து மனிதனைப் பாவச்செயல் செய்யத்தூண்டுகின்றது எனப் பகவான் குறிப்பிடுகின்றார். இதனைப் பின்வரும் சுலோகம் குறிப்பிடுகின்றது.

இந்த்ரியாணி மனோ புத்திரஸ்யாதிஷ்டான முச்யதே…”

இச்சுலோகத்தில் குறிப்பிடுவதாவது புலன்களால் மனம், புத்தி ஆகிய புலன்கள் மனிதனின் கட்டுப்பாட்டில் இல்லாத நிலையில் காமம் அவற்றைக் கைப்பற்றி அதிகாரம் செலுத்துகின்றது. எனினும் மனிதன் இந்தக் காமத்தை விரட்டியதால் தான் மேல் நிலையை அடைய முடியும். அவற்றோடு விலை மதிப்புள்ள வாழ்க்கையைப் பாழடிப்பது காமம் என்றும் கீதை செயல் பற்றிக் குறிப்பிடுகின்றது. அத்தோடு புலன்களை வசப்படுத்தினால் இந்தக் கொடிய காமத்தை ஒழித்துவிடலாம் எனப் பகவான் கிருஷ்ணர் அர்ச்சுனனை நோக்கிக் கூறுவதிலிருந்து அறிந்து கொள்ளமுடியும்.

அர்ச்சுனா! நீ முதலில் புலன்களை வசப்படுத்தி ஞானத்தையும், விஞ்ஞானத்தையும் அழிக்கின்ற இந்தப் பெரும் பாவியான காமத்தை அறவே ஒழித்து விடு

எனவே புத்தியின் மூலமாக மனத்தை வசப்படுத்தும் போது கொஞ்சம்கொஞ்சமாக விருப்பு வெறுப்புக்கள் குறைவடைந்து விடும். இதன் காரணமாகக் காமம் அற்ற மனிதனாக இறைவனை அடைய முடியும் என்று பகவத்கீதை குறிப்பிடுகின்றது.

நாம் செய்யும் செயலில் நம் நலத்தை விடச் சமுதாய நலத்தைக் கருதியே ஒவ்வொரு செயலையும் செய்ய வேண்டும் எனக் கீதை மேல்வருமாறு குறிப்பிடுகின்றது.

சுயநலக் கருத்தும் சுயநலப்பற்றும் அறவே துறந்து கடமைகளைச் செய்து கொண்டு போவது அவசியம். அறிஞன் சமுதாய நன்மைக்காகப் பற்றையொழித்து எல்லாக் காரியங்களையும் செய்து கொண்டு போவோரின்”.

நம் நலத்தைக் கருத்திற்கொள்ளாது நம் கடமையை நாம் சரிவரச் செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்துவதைக் காணலாம். நமது செயல் ஒவ்வொன்றும் பலனை எதிர்பாராமல் சமுதாயத்தின் நன்மை கருதிச் செயலாற்ற வேண்டும் என்பதைக் கீதை உணர்த்துகின்றது.

பகவத்கீதையானது கர்மயோகத்தின் மூலம் எவ்வாறு விடுதலை பெறமுடியும் என்று வினவப்படும் வினாவிற்கும் பதில்கள் அளிப்பதைக் காணமுடிகின்றது. குறிப்பாகச் செயல்கள் ஆற்றுவதன் மூலம் இறைவனை அடைவது எப்படி என்ற வினாவே வினவப்படுகின்றது. அதற்கான பதில்கள் மேல்வருமாறு அமைகின்றன. அவ்வகையில் முழு அறிவில் செயலாற்றல் வேண்டும் எனக் கூறப்படுகின்றது. இவ்வாறு ஆற்றும் செயலானது ஞானத்தில் இருந்து வேறுபடாததாகக் காணப்படும். அவற்றோடு கிருஷ்ண உணர்வு நேரடியான பக்தியோகமாகக் காணப்படுவதுடன் ஞானயோகம் இப்பக்தி யோகத்தில் முடிவு பெறும். ஆகவே இங்கு ஒருவன் முழு ஞானத்துடன் செயலாற்றுதலையே கிருஷ்ண உணர்வு எனக் கூறப்படுகின்றது.

தூய ஆத்மாவானது கடவுளை அங்க உறுப்பாகக் கருதுகின்றது. இவ் தூய ஆத்மா கடவுளின் நித்தியத் தொண்டனாகக் காணப்படுகின்றது. இங்கு ஆத்மாவானது மாயையின் காரணமாக ஆசை ஏற்பட்டு செயல்கள் புரிகின்றன. இதுவே ஆத்மாவிற்கு ஏற்படும் துயரத்திற்குக் காரணமாக அமைகின்றது. மனிதனானவன் ஜட உலகத்துடன் தொடர்பைக் கொண்டு பௌதீகத் தேவைகளுக்காகச் செயலாற்றுகின்றான். ஆகவே இவ்வுலகில் கிருஷ்ண உணர்வு மனிதனால் உணரப்படுவதால் ஆன்மீக இருப்பை எழுச்சி பெறச்செய்து சட உலக ஆட்சிக்குள்ளேயே ஆன்மீக விடுதலையை அடைந்து நல்வாழ்வை ஏற்படுத்தக்கூடிய செயல்களிலிருந்து விடுபட்டு சட உலகின் தளைகளில் இருந்து விடுதலையடைகின்றான்.

மனிதனானவன் கோபம், ஆசை, இவைகளைத் துறந்து புலன்களை அடக்கும் முயற்சியில் ஈடுபட்டுத் தனது கடமைகளைச் செய்வதைப் பொறுத்தே அவனுடைய கர்ம பலன்கள் அமைகின்றன. மேற்கூறிய கோபம், ஆசை ஆகிய புலன்களை அடக்கும் முயற்சியில் ஈடுபட்டு கிருஷ்ண உணர்வை அடைபவன் பிரம்ம நிர்வாணம் எனும் நிலையை அடைந்து விடுகின்றான். ஒருவனின் இறுதி நோக்கம் அடையப்பட்டு விடுவதால் அஷ்டாங்க யோக முறை கிருஷ்ண உணர்விலே உள்ளடங்கியிருக்கின்றன. இதனால் இயமம், நியமம், ஆசனம், பிராணாயாமம், பிரத்தியாகாரம், தாரணை, தியானம், சமாதி எனும் அஷ்டாங்கப் பாதையில் படிப்படியாக முன்னேற்றம் ஏற்படுத்த முடியும் எனக் கூறப்படுகின்றது. எனவே பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் கருத்துப்படி பக்தி மயமான தொண்டே மனிதன் ஒருவனுக்குப் பூரண அமைதியை அடைய உதவுகிறது. அத்துடன் நற்செயற் பலன்களை எதிர்பார்க்காமல் செய்யமுடியும் என்கிறார் கிருஷ்ணர். ஆகவே பக்தியோகமே கர்மயோக வாழ்வின் உயர்ந்த பக்குவமும், பூரண நிலையையும் அடைவதற்கு உறுதுணையாக நிற்கின்றது என்பதை அறியமுடிகின்றது. இக்கருத்தினை மேல்வரும் சுலோகம் விளக்கி நிற்கின்றது.

போக்தாரம் யக்ஞதபஸாம் ஸர்வ லோக மஹேஸ்வரம்..

யதா ப்ரகாசயத்யேக: க்ருத்ஸ்னம் லோகமிமம் ரவி…” எனும் சுலோகத்தினூடாக அர்ச்சுனனை நோக்கி பகவான் கிருஷ்ணர் பின்வருமாறு கூறுகின்றார்.அவ்வகையில் அர்ச்சுனா, எப்படி சூரியன் இந்த உலகனைத்தையும் பிரகாசிக்கச் செய்கிறதோ அப்படியே ஆத்மா ஒன்றே சேத்ரம் முழுவதையும் பிரகாசிக்கச் செய்கின்றது. பகவான் இந்தப் பிரபஞ்சத்திலிருக்கும் அனைத்திற்கும் இருப்பையும் செயலூக்கத்தையும் கொடுக்கிறான். அதனால் ஒருவன்நல்ல விடயங்களைப் படிக்க முடிவதுடன் அடுத்தவரைக் கொடுமைப்படுத்தி பொய்யாக நடிக்கவும் செய்யமுடியும். ஆகவே நல்ல செயல் மற்றும் கெட்ட செயல் செய்வதற்கான அறிவைத் தருவது பிரம்மம் ஆகும். இவற்றோடு எவன் ஒருவன் உலகம், சடம் என்ற வேறுபாட்டையும் மற்றும் பிரகிருதி பற்றியும் பிரகிருதியின் செயல்கள், அவற்றிலிருந்து எவ்வாறு விடுபடுதல் என்பவை தொடர்பாகவும் தன் அறிவால் அறிகின்றானோ அவனே பரமாத்மாவை அடைகின்றான்.

பகவத்கீதையின் கூற்றுக்களை ஒட்டுமொத்தமாக நோக்குகின்ற போது முழுக்க முழுக்க செயல் பற்றியே அறிவுரைகள் மூலமாக விளக்கியுள்ளது. குறிப்பாக நாம் எவ்வாறான செயல்கள் செய்ய வேண்டும் எனவும் நாம் செய்யும் நற்செயல்கள் தீய செயல்கள் என்பவை தொடர்பாகவும் கீதையானது குறிப்பிட்டு நிற்கின்றது. இவ்வாறு நாம் செய்கின்ற செயல்கள் ஒவ்வொன்றுக்கும் பலன்கள் உண்டு. அத்தோடு நாம் செய்கின்ற செயல்கள் அனைத்தும் காமம், கோபம், முதலான புலன்களை அடக்கி பக்தி, துறவு என்னும் நிலையில் செயல்களை ஆற்ற வேண்டும் எனப் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் வலியுறுத்துகின்றார். பக்தி மற்றும் துறவுகளால் ஆற்றப்படும் செயல்களினூடாக முத்தி பெற்று விடுதலை பெற முடியும் எனப் பகவத்கீதை இறைவனை அடைவதற்கான வழிகளில் ஒன்றான செயல்கள் பற்றி விளக்கி நிற்பதை அவதானிக்க முடிகின்றது. இறுதியான பகவத்கீதையின் முடிவானது கடமையைச் செய் பலனை எதிர்பாராதே என்பதாகும்.

உசாத்துணைகள்

01.     பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதா.அ.ச, (1981),“பகவத்கீதை உண்மையுருவில்”, அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கம்.

02.     லக்ஷ்மணன்.க, (1950),“இந்திய தத்துவஞானம்”, ஏஷpயன் அச்சகம், சென்னை.

03.     எத்திராஜீலு.ஏ.ஜி, (1985),“இந்திய தத்துவ இயல்”, ரெயின்போ அச்சகம், சென்னை.

04.     கிரிதாரி பிரசாத்.நா, (1997),“கீதைப் பேருரை”, வர்த்தமானன் பதிப்பகம், சென்னை.

05.     பெரியதம்பிப்பிள்ளை, (1974),“பகவத்கீதை வெண்பா 2ம் பாகம் பக்தியோகம்”, ஸ்ரீ ஆத்ம ஜோதி அச்சகம்.

06.     ஹிரியண்ணா.எம், (2008),“இந்திய மெய்யியல்குமரன் புத்தக இல்லம், இலங்கை சென்னை.