6 ஆம் ஆண்டில் நமது இலக்கியச்சுடர்
படைப்புகளை periyaswamydeva@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி இதழின் வளர்ச்சிக்கு உதவுங்கள்

திங்கள், 1 பிப்ரவரி, 2021

மட்டக்களப்பு – குடும்பிமலை பிராமிச் சாசனம் - எ.சதானந்தன், எஸ்.கே.சிவகணேசன்

 

       மட்டக்களப்புகுடும்பிமலை பிராமிச் சாசனம்

.சதானந்தன்.B.A (Hons)

ஆசிரியர்

 

எஸ்.கே.சிவகணேசன்

தலைவர்

வரலாற்றுத்துறை

              கிழக்குபல்கலைக்கழகம், இலங்கை            

shivahaneshank@esn.ac.lk

+94771740685

அறிமுகம்

ஈழநாட்டின், மட்டக்களப்பு பிராந்தியத்தில் புராதனகாலம் முதல் தமிழர்கள் செறிந்து வாழ்ந்து வருகின்றனர். இப்பிராந்தியம் மத்தியகாலம் முதல் 'மட்டக்களப்புதேசம்' என்ற பெயர்கொண்டு அழைக்கப்பட்டு வருகின்றது. மட்டக்களப்பு தேசம் எனும்போது, தற்போதுள்ள மாவட்ட பிரிப்பை குறிக்கவில்லை. மாறாக அக்காலப்பகுதியில் காணப்பட்ட, மட்டக்களப்பின் வடக்கே வெருகல் முதல் தெற்கே குமணவரையான பெரும்பகுதியை உள்ளடக்கியிருந்தது. அப்பிராந்தியத்தின் கிழக்கிலே கடல், மேற்கிலே அடர்த்தியான. செழிப்பான காடுகள் காணப்படுகின்றன.

மட்டக்களப்பு தேசத்திற்கு சிறப்பு சேர்ப்பது அதன் மத்தியில் காணப்படுகின்ற 50 மைல் நீளமுடைய வாவியாகும். அவ்வாவியை எல்லையாக கொண்டு படுவான்கரை, எழுவான்கரை எனதேசம் பிரிக்கப்பட்டுள்ளது. வாவியின் மேற்கில் உள்ளபகுதி 'படுவான்கரை' என வரையறுக்கப்பட்டுள்ளது.  அங்கு முல்லை, மருதப் பண்புடைய இருநிலப்பகுதிகள் காணப்படுகின்றன. இப்பிரதேசத்தில் பல தொல்லியல் ஆதாரமையங்கள், தொல்பொருட்கள், புராதன அரசமையங்கள் காணப்படுகின்றன.

பேராசிரியர் பரணவிதான, இலங்கைச் சாசனங்கள் என்ற தொகுப்பு நூலில் – 1324 சாசனங்களை ஆவணப்படுத்தியுள்ளார். அவற்றுள் மட்டக்களப்புதிருகோணமலை மாவட்டங்களில் கண்டுபிடிக்கப்பட்ட 166 பிராமிச் சாசனங்களும் அடங்குகின்றன (பரணவிதான.எஸ்.,1970). மட்டக்களப்பு பிராந்தியத்தில் பரலாக தொல்பொருட்கள் காணப்படுகின்றன என்பது மறுக்கமுடியாத உண்மை. இதுவரை அவற்றை வெளிக்கொணர்வதற்கு முறையான திட்டங்கள் நடைமுறைபடுத்தப்படவில்லை என்பதும் சுட்டிக்காட்டத்தக்கது.

மட்டக்களப்பு மேற்கு பகுதியான படுவான்கரை பிரதேசத்தின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்களுள் குடும்பிமலை முதன்மையானது. இது செங்கலடி பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்டது. இங்குள்ள மலையின் குடும்பி போன்ற தோற்றத்தைக் கொண்டே, அவ்விடப் பெயரும் குடும்பிமலை (Baron's Cap) என அழைக்கப்படலாயிற்று. இங்குள்ள மலை ஒன்றில் பொறிக்கப்பட்டுள்ள பிராமிக் சாசனம் பெற்றுள்ள வரலாற்று முக்கியத்துவத்தை ஆராய்வதே ஆய்வின் நோக்கமாகும். இச்சாசனத்தை கிழக்குபல்கலைக்கழக வரலாறு சிறப்புக் கலைமாணவன் செல்வன் எ.சதானந்தன் கண்டுபிடித்தார். ஐந்துவரிகளைக் கொண்ட சாசனத்தின் எழுத்துக்கள் தெளிவாக பொறிக்கப்பட்டுள்ளன.

மகாபருகம சிறிசங்கபோதி என்னும் பெயருடைய மன்னன் ஒருவன் பற்றியும், அவன் ஆட்சி, அவனின் கீழ்க்காணப்பட்ட சிற்றரசுகள், சிற்றரசுகளினுடைய பரம்பரை, கிழக்கின் ஆட்சிப்பரப்பு, அவனுக்கு சொந்தமாக இருந்த நிலப்பகுதி, தானம் வழங்கிய விகாரை, தமிழ் பௌத்தம் போன்ற தகவல்கள் காட்டப்பட்டுள்ளன. இவ்வாய்வின் மூலம் இச்சாசனம் பெறும் வரலாற்று முக்கியத்துவம், மற்றும் பிராந்தியத்தின் தொன்மை பற்றி ஒப்பியல் ஆய்வின் மூலம் உறுதிப்படுத்திக் கொள்ள முற்பட்டுள்ளேன்.

இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள பெரும்பாலன பிராமிச் சாசனங்கள் தான, தர்ம கொடுப்பனவு தொடர்பிலானவை. அத்தகைய சாசனங்கள் தானம் வழங்கியவர், தானம் பெற்றவர், கொடுக்கப்பட்ட ஆண்டு, கொடுக்கப்பட்ட தானம் முதலான விடயங்களைச் சுருக்கமாகக் கூறுகின்றன. பொதுவாக பௌத்த சங்கத்தாருக்கு உணவு, உடை, இருப்பிடம், மருந்து ஆகிய நான்கினையும் வழங்குவது புண்ணிய கருமமாகக் கொள்ளப்பட்டது. இவ்வகையான தகவல்களைத்தான் குடும்பிமலைச் சாசனமும் காட்டி நிற்கின்றது. சாசனத்தின் வாசகம் வருமாறு,

சாசனக்குறிப்பு

'மகாபருமக சிறிசங்கபோதி அபய மகாராசனின் இரண்டாம் வருடத்தில் மரயநலய(ன்) என்பவனின் மகனாகிய கணஉபலய(ன்) என்னும் சிற்றரசன் கிழக்கிலே தனக்கு ஒரு உரிமையான வயநகியிலுள்ள (வயன எனுமிடத்திலுள்ள) வவமகபதி(பதய) எனும் நிலத்திலே தனக்குரிய ஒரு பங்கினைக் கடக மகாவிஹார எனும் பௌத்த பள்ளிக்கு நன்கொடையாக வழங்கினான்'

(ஆங்கிலமொழிபெயர்ப்பு: “Rathiya Kana Upalaya who was the Son oF maranalaya donated his one Share which he was having from the Eastarn Bayanahi Bavamaha pataya to the Monastery of  kadaka maha vihara in the 2nd year of king  maha parumaka sri sangha Bodhi Abbaya”

மகாபருமகஸ்ரீசங்கபோதி

இச்சாசனத்தில் மகாபருமக சிறிசங்கபோதி அபயமகாராசன் அவனது ஆட்சியின் இரண்டாம் ஆண்டில் கடகமகாவிஹார எனும் பௌத்த பள்ளிக்கு வழங்கிய நிலத்தானம் பற்றிய செய்தி கூறப்பட்டுள்ளது. இச்சாசனத்தினுடைய காலம் கி.பி 4ஆம் நூற்றாண்டு எனலாம். எனவே இக்காலப்பகுதியில் 'சிறிசங்கபோதி' எனும் பெயரில் ஆட்சியமைத்திருந்த மன்னன் யார் என்பது நோக்கப்பட வேண்டும். இதில் மகாபருமக எனும் சொல் உள்ளது. 'பருமக' என்பது சமூக வகுப்பின் தலைவனைக் குறிக்கும் சொல்லாகும். ‘பருமகஎன்ற பிராகிருத சொல்லை, தமிழில் 'பெருமகன்' எனக் கொள்ள முடியும். பெருமகன் என்ற சொல் தலைவன், உயர்ந்தவன், அரசன், பெருமகன், மூத்தமகன், அண்ணன் என்ற கருத்தைக் கொண்டுள்ளது. (புஸ்பரெட்ணம்..,2003,19). இங்கு மகாபெருமகன் என்பது உயர்தலைவனைக் குறித்து நிற்கின்றது.  குடும்பிமலைச் சாசனம் மகாபருமக ஸ்ரீசங்கபோதி அபயமகாராஜனின் இரண்டாவது ஆட்சியாண்டில் எழுதப்பட்டதாக குறிப்பிடப்படுகின்றது. இதில் மகாபருமக என்பது பதவிநிலைப் பெயரைக் குறிப்பதாகும். ஸ்ரீசங்கபோதி என்ற பதங்கள் பட்டப்பெயரா அல்லது தனிநபரின் பெயரா எனக் கண்டறிதல் வேண்டும். அனுராதபுரக்கால மன்னர்கள் 'சங்கபோதி' எனும் விருது பெயரைத் தமது பெயருடன் இணைத்து குறிக்கும் வழக்கம் இருந்து வந்துள்ளது. இவ்வாறு அமையப் பெறின் ஆட்சி செய்த மன்னனின் பட்டப்பெயராக அது அமையும்.

மகாவம்சம் காட்டும் ஸ்ரீசங்கபோதி

அதேவேளை மகாவம்சம் சங்கபோதி எனும் பெயருடன் ஆட்சியிலிருந்த அனுராதபுர மன்னன் பற்றிய செய்திகளைத் தருகின்றது. மகாவம்சம் இலம்பகர்ணவம் சத்தினைச் சேர்ந்த ஒரு மன்னனைச் சங்கபோதி என அடையாளப்படுத்துகின்றது. 'ஸ்ரீசங்கபோதி என்னும் பெயருடன் இவன் அனுராதபுரத்தில் பஞ்சசீலங்களைக் கடைப்பிடித்து இரண்டு வருடகாலம் ஆட்சிசெய்தான்.' (குணராசாவின்..,2003,132), (கொட்டின்றன். W.,1965,24-25) கொட்டிறின்றன் சங்கபோதியினுடைய ஆட்சிக்காலத்தை கி.பி 252 ஆம் ஆண்டு எனக் குறிப்பிட்டுள்ளார். இதன் பின்பு கோதகாயபனினுடைய ஆட்சி கி.பி 254 இல் ஆரம்பிப்பதாகவும் குறிப்பிடுகின்றார். மகாவம்சம் குறிப்பிடுகின்ற காலம் இதன்படி சரியானதாகும். இதன்படி சங்கபோதி கி.பி 252-254 வரையான இரண்டு வருடகாலம் ஆட்சி நடத்தியிருக்கின்றான் எனக் கொள்ள முடிகின்றது. எனவே சாசனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ஸ்ரீசங்கபோதி என்ற பதம் பட்டத்தையன்றி மன்னனின் பெயரைக் குறித்து நிற்கின்றது.

கிழக்குபிராந்தியம் - வயநதி, வவமகபதி

இச்சாசனம் கிழக்குப்பகுதியில் வயநகி எனும் இடத்தில் தனக்குச் சொந்தமான வவமகபதி என்ற நிலத்தின் ஒருபகுதியினைத் தானமாக வழங்கி செய்தி காட்டப்பட்டுள்ளது. வயநகி என்ற இடம் மற்றும் வவமகபதி என்ற நிலத்தின் பெயர் என்பனவற்றை அடையாளப்படுத்திக் கொள்ளமுடியவில்லை. இவ்விடங்கள் கிழக்கிலேயுள்ளதாக குறிக்கப்பட்டுள்ளது. ஆனால் இத்தமிழ் சிற்றரசு அனுராதபுர காலத்தில் கிழக்கில் செயற்பட்டது என்பது தெளிவானது. பேராசிரியர் புஸ்பரெட்ணம் கூறுவதுபோல அது சுதந்திர சிற்றரசாக செயற்பட்டது எனலாம்.

இலங்கையின் கிழக்கில் தனக்கு உரிமையான வயநகியிலுள்ள (வயனத்திலுள்ள) 'வவமகபதி' என்னும் இடம் குறிப்பிடப்பட்டுள்ளது. இது கிழக்கு மாகாணத்தினுடைய ஒரு பகுதி எனக் குறிப்பிடப்படுகின்றது. இப்பிரதேசம் குடும்பிமலைப் பகுதியில் இருந்திருக்கலாம். 'பதி' என்பது தமிழில் வீடு, இடம் என்னும் பொருள் கொண்டது. இங்கு குறிப்பிடப்படும் வவமகபதி (பதிய) என்பது ஓர் பட்டிணமாக அமைந்திருக்க வேண்டும். வர்த்தக நடவடிக்கைகள் நடைபெற்ற இடமாதல்கூடும், இலங்கையில் பிராமிச் சாசனங்களில் பட, படன என்ற சொற்கள் இடப்பெயராக வருகின்றன. இவை சமகால பாளி இலக்கியங்கள் கூறும் பட்டின(ம்) எனக் கொள்ள முடியும். இங்கு குறிப்பிடப்படும் பதி என்பது ஒரு வர்த்தக சந்தையாக இருந்திருக்க முடியும்.

இப்பெயர்கள் பூர்வீகத் தமிழர்களினுடைய ஆட்சிப் பிரதேசம் என்பதனைச் சுட்டி நிற்கின்றன. அனுராதபுர காலத்தில் வசபனின் ஆட்சியின்போது அவனது எல்லையினுள் மட்டக்களப்பும் அமைந்திருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. இதே போன்று மட்டக்களப்பு பிராந்திய வரலாற்றைக் கூறும் மட்டக்களப்பு பூர்வ சரித்திரம் என்ற நூலில் கி.பி.4 ஆம் நூற்றாண்டு காலப்பகுதியில் சுன்னரசுகிரி, மட்டக்களப்பு, மண்முணை ஆகிய தலைநகரங்ளைக் கொண்ட சிற்றரசுகள் இருந்ததாக செய்திகள் காட்டப்பட்டுள்ளன (கமலநாதன்.சா.,2005,29,30) அதனைப் போலவே இச்சாசனத்தில் குறிப்பிடப்படும் மன்னனின்கீழ் மட்டக்களப்புத் தமிழ்ச் சிற்றரசுகள் செயற்பட்டு வந்திருக்கலாம் எனக் கொள்ள முடிகின்றது.

பரம்பரைக் குறிப்புகள்

இவ்வகையில் மரயநலமகன் கணஉபலய வழங்கிய நிலத்தானம் பற்றிய செய்திகள் பொறிக்கப்பட்டுள்ளன. இங்கு அரசபரம்பரையின் இரண்டு தலைமுறைகள் குறிக்கப்பட்டுள்ளது. இவர்களிருவரும் கிழக்கு பிராந்தியத்தியத்தில் அதிகாரத்தில் இருந்த சிற்றரசர்களாக இருந்திருக்கலாம். அனுராதபுர இராசதானி நிலைத்திருந்த காலத்தில் மத்திய மயமான ஆட்சியிருந்ததாக மகாவம்சம் போன்ற பாளி இலக்கியங்கள் காட்டியிருந்தாலும் அவ்விலக்கியங்களும் தொல்பொருள் சான்றுகளும் அக்காலத்தில் காணப்பட்ட சிற்றரசுகள் பற்றிய தகவல்களையும் காட்டிநிற்கின்றன.

இது தொடர்பாக பேராசிரியர் புஸ்பரட்ணம் பின்வரும் கருத்தினைப் பதிவு செய்தார். 'அனுராதபுரஇராசதானி காணப்பட்ட வேளையில் இலங்கையில் 200 க்கு மேற்பட்ட சிற்றரசுகள் காணப்பட்டன. அவை எல்லாம் அனுராதபுர ஆட்சியாளர்களின் கட்டுப்பாட்டின்கீழ் இருந்தன என்று குறிப்பிட முடியாது. பல சிற்றரசுகள் தன்னிச்சையாகச் செயற்பட்டன.' எனக்குறிப்பிட்டுள்ளார். இங்கு அனுராதபுர மன்னன் ஸ்ரீசங்கபோதி பற்றிய செய்தியுண்டு ஆனால் அச்சாசனம் அவனது ஏற்பாட்டிற்கிணங்கவோ, அவன் கட்டுப்பாட்டிலிருந்த சிற்றரசு எனும் செய்திகளோ இல்லை. எனவே பேராசிரியர் புஸ்பரட்ணம் குறிப்பிடுவதைப் போன்று இச்சிற்றரசு அனுராதபுர இராசதானியின் மேலாண்மையின்கீழ் அல்லாமல் சுதந்திரமாக செயற்பட்டிருக்கலாம்.

இலங்கை மற்றும் தமிழ்நாடு போன்ற இடங்களில் கண்டு பிடிக்கப்பட்ட சாசனங்கள் மற்றும் இலக்கியங்களில் அரசவம்சங்களின் பல தலைமுறைகள் சுட்டி, தானத்தை குறிக்கும் வழக்கம் இருந்து வந்துள்ளது. இச்சாசனத்தில் மரயநலய(ன்) என்பவனுடைய மகன் கணஉபலய(ன்) என இரண்டு தலைமுறைகள் தொடர்பில் கூறப்பட்டுள்ளது. இலங்கைச் சாசனங்களில் மன்னனுடைய பெயரையும் பின்பு அவனது மகன் பெயரையும் தானமாக கொடுக்கப்பட்ட விடயத்தையும் கூறும் முறை இருந்து வருகின்றது. குசலான மலையில் உள்ள சாசனமொன்று உபராஜனான அபயனின் மகனான காமினிதிஸ எனும் சுதர்சன என்பவரால் சங்கத்திற்காக குகைதானம் வழங்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது (பத்மநாதன்.சி.,2016). தென்னிந்தியாவைப் பொறுத்தவரையில் மூன்று தலைமுறைகளிளைப் பற்றிச் சொல்கின்ற சாசனக் குறிப்புகளும் உண்டு. புகழூர்கல்வெட்டு இத்தகையது. கி.பி 2ஆம் நூற்றாண்டிற்குரித்தான இச்சாசனத்தில் செல்லிரும் பொறை, பெரும் கடும்கோ, இளங்கடுங்கோ எனும் மூன்று தலைமுறைகள் சொல்லப்படுகின்றன (பத்மநாதன்.சி.,2007,45)

பிராகிருத மொழிக் கலப்பு

இச்சாசனத்தில் இடம்பெறும் சொற்களில் கணஉபலய(ன்), மரயநலன(ன்) எனும் பெயர்கள் பிராகிருத மொழியில் பொறிக்கப்பட்டுள்ளன. இலங்கையில் கண்டு பிடிக்கப்பட்ட பெரும்பாலான பிராமி சாசனங்கள் பிராகிருத மொழிக் கலப்புடையன. எனவே அத்தகைய சாசங்கள் தமிழ்மொழிக்கே சிறப்பான (ன்) என்னும் எழுத்தினை எடுத்தியம்புவதில்லை. எனவே இப்பெயர்களுடன் 'ன்' விகுதி இணையும் போது மரய நலய என்பது 'மரய நலயன்' அல்லது '(h)ரயநலயன்' எனவும் கொள்வது பொருத்தமானதாகும். இதனைப்போலவே கண உபலய என்பது 'கண உபலயன்' என்றே அமைதல் வேண்டும்.

பண்டைய இலங்கையில் தமிழும் தமிழரும் எனும் நூலில் பேராசிரியர் புஸ்பரட்ணம் தமிழ் பெயர்களை வகைப்படுத்தி உள்ளார். இதில்வேள், பெருமகன்குடி, மருமகன், மருமான், பூதன், மல்லன், திசென்,சுமன், உதியன், உதிரன், அபயன், குடும்பிகன், ஹஹபதியன் முதலான பல தமிழ் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. 'பிராகிருதம் பௌத்த மதத்தின் மூலமொழியாதளினால், தமிழர்கள் தமது பெயர்களை பிராகிருதமயப்படுத்தி எழுதநேரிட்டது. தமிழகத்தில் 25 வீதமான சொற்கள் பிராகிருத மொழிக்குரியது. காரணம் பௌத்த சமயமொழியாக பிராகிருதம் இருந்தமையாகும் என்பது பேராசிரியர் புஸ்பரட்ணத்தின் கருத்தாகும். பேராசிரியர்களான புஸ்பரெட்ணம், பத்மநாதன் போன்றவர்கள் தமிழ்மொழிக்கே உரித்தான பிராகிருத மொழியில் உருமாற்றப்பட்ட தமிழ்ச்சொற்கள் தொடர்பில் ஆராய்ந்து விளக்கியுள்ளனர் (புஸ்பரட்டிணம்..,2004, தமிழ் எழுத்தின் தோற்றம்) (பத்மசாதன்.சி., இலங்கைத் தமிழ் சாசனங்கள் II)

தானம் மற்றும் தமிழ் பௌத்தம் பற்றிய செய்திகள்

பெரும்பாலான இலங்கைப் பிராமிச்சாசனங்கள் தானச் செய்திகளைக் காட்டுகின்றன. அவ்வகையில் கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் கிழக்கில் காணப்பட்ட சிற்றரசன் கணஉபலய (ன்) என்பவன் கடக மகாவிகாரை என்ற பௌத்த பள்ளிக்கு வழங்கிய நிலத்தானம் பற்றிய செய்தி வருகின்றது. இங்கு குறிப்பிடப்படும் இப்பள்ளி பற்றி ஆராய்தல் வேண்டும். இதேபோன்று மட்டக்களப்பு தேசத்தின் மண்டூர், உகந்தை, கோணேச்சரம் ஆகிய கோவில்களுக்கு வழங்கப்பட்ட தானங்கள், கடமைகள் பற்றிய செய்திகள் மட்டக் களப்புபூர்வ சரித்திர நூலில் காட்டப்பட்டுள்ளன. (கமலநாதன்.சா.,2005,40,41). இம்மன்னர்கள் பெயர்கள் காட்டப்பட்டிருக்கவில்லை. இங்கு குறிப்பிடப்படும் க(h)டகம காவிகாரை என்பதன் பொருளை காட்டிலுள்ள விகாரை எனக்கொள்ள முடியும். எனவே பௌத்ததுறவிகள் வனத்தில் குழுமம் குழுமமாக இருந்திருக்கின்றார்கள்.

       காட்டில் வசிக்கும் பிக்குகளைஆரண்யவாதிகள் என அழைப்பர். எனவே பௌத்ததுறவிகள் காடுகளில் ஓரிடத்தில் தங்கியிருந்திருக்க வேண்டும். அவர்களுக்கு இப்பிரதேசத்தின் ஒரு பகுதி நிலத்தானமாக அவர்களுக்கு கொடுக்கப்பட்டிருத்தல் வேண்டும்.  அனுராதபுர இராசதானி காலமாகையால் பௌத்த மன்னனின் கீழ் இப்பிரதேச தமிழ் சிற்றரசர்கள் ஆட்சி புரிந்திருக்கலாம். அம்மன்னர்கள் பௌத்தத்தின் மீது கொண்ட அபிமானம் காரணமாக நிலத்தினைத் தானமாக வழங்கியிருக்க வேண்டும். இங்கு குறிப்பிடப்படும் பள்ளி இப்பிரதேசத்திற்குரியதா அல்லது வேறு பிரதேசத்திற்கு உரியதா என்பதை கண்டு கொள்ளவேண்டும். குடும்பி மலையிலுள்ள சாசனமானது தமிழ் சிற்றரசர்களைப் பற்றியது. அவர்களால் பௌத்த சமயத்திற்கு வழங்கப்பட்ட நிலதானத்தினை பற்றிக் கூறுகின்றது. இதன் மூலம் இப்பிரதேசத்தில் தமிழ்ப் பௌத்தம் நிலை பெற்றிருந்தமை உறுதியாகின்றது.

இலங்கையில் பல இடங்களில் தமிழ்ப் பௌத்தம் நிலவியமைக்கான சான்றுகள் கண்டு படிக்கப்பட்டுள்ளன. வெல்லா வெளியில் கண்டு பிடிக்கப்பட்டுள்ள வெல்லா வெளிபாறை பிராமிச் சாசனத்தில் தமிழும் பிராகிருதமும் கலந்து பொறிக்கப்பட்டுள்ளது. அப்பிராந்தியத்தில் வாழ்ந்த தமிழர்கள் மத்தியில் பௌத்தம் பரவியபோது பௌத்தத்தின் மூல மொழியான பிராகிருதமும் சேர்ந்து கொண்டது (பத்மநாதன்.சி., இலங்கைத் தமிழ் சாசனங்கள்,30) அனுராதபுரத்தில் சேனன், குத்திகன், கல்லாடநாகன், குஞ்சநாகன், சிரிநாகன் முதலான தமிழ் மன்னர்கள் பௌத்தரகளாக இருந்துள்ளனர் என்பதற்குச் சான்றாகும் (பத்மநாதன்.சி.,2006,30,31). ஈழத்தமிழரில் ஒரு பிரிவினர் பௌத்தர்களாக இருந்ததை எடுத்து கூறும் வரலாற்று மூலாதாரங்களில் பிரா மிக்கல் வெட்டுக்கள் சிறப்பிடம் வகிக்கின்றன. இவற்றில் வரும் அபயன், பூதன், சுமனன், சுமன், பருமகன், பருமகள், குடும்பிகன், ஆய், வேள், மல்லன், பருமக, மாற, சோட, நாக, பரத போன்ற தமிழ் பெயர்கள் தமிழர்களும் பௌத்தர்களாக இருந்தனர் என்பதற்குச் சான்றாகும் (புஸ்பரட்ணம் ..,2007,157).

       எனவே குடும்பி மலைச்சாசனமானது கி.பி 4 ஆம் நூற்றாண்டு காலப் பகுதிக்குரியதெனக் கொள்ளமுடியும். அனுராதபுர ஆட்சியாளன் ஸ்ரீ சங்க போதி மகாராசனாக இருந்த காலப் பகுதியில் கிழக்கில் பல தமிழ் சிற்றரசுகள் காணப்பட்டன. அச்சிற்றரசுகள் ஒன்றின் மன்னன் பௌத்த பள்ளிக் குதானம் வழங்கியுள்ளான். இசசாசனச் செய்தியின் மூலம் அனுராதபுர காலத்தில் கிழக்கில் (மட்டக்களப்பு தேசத்தில்) சுதந்திரமான தமிழ் சிற்றரசுகளும் அங்கு தமிழ் பௌத்தர்களும் வாழ்ந்துள்ளனர் என்பது வெளிப்படுத்தப்படுகின்றது.

உசாத்துணை

§  Paranavithana.S., (Ed.), 1970, Archaeoloical Survey of Ceylon,Vol. Colombo.

§  புஸ்பரட்ணம்..,2003, பண்டைய இலங்கையில் தமிழும் தமிழரும், கொழும்புத் தமிழ்ச் சங்கம்.

§  புஸ்பரட்ணம்..,2007, தொல்லியல் நோக்கில் ஈழத்தமிழரின் பண்டைய கால மதமும் கலையும், குமரன் புத்தக இல்லம்.

§  குணராசா.., 2003, மகாவம்சம் தரும் இலங்கைச் சரித்திரம், யாழ்ப்பாணம்.

§  கொட்றிங்ரன்.று.,1960, இலங்கையின் சுருக்கவரலாறு, கொழும்பு.

§  பத்மநாதன்.சி.,2016, இலங்கைத் தமிழர் வரலாறும், கிழக்கிலங்கையில் நாகரும் தமிழரும், கொழும்பு.

§  பத்மநாதன்.சி, 2007,'தமிழ்பிரா மிச்சாசனங்கள்', சங்க இலக்கியமும் சமுகமும், இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம்.

§  கமலநாதன்.சா..,2005, மட்டக்களப்புபூர்வ சரித்திரம், கொழும்பு - சென்னை.

கருத்துகள் இல்லை: