6 ஆம் ஆண்டில் நமது இலக்கியச்சுடர்
படைப்புகளை periyaswamydeva@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி இதழின் வளர்ச்சிக்கு உதவுங்கள்

திங்கள், 1 பிப்ரவரி, 2021

முயன்று வரும் காற்று - தா.சரவணன்

 

முயன்று வரும் காற்று

 

பரந்த வயல்வெளி

அடர்ந்த மரங்கள்

அதிகாலை பறவை ஒலிகள்

அத்தனையும்

அழித்துவிட்டு

ஆளாகி நிற்கிறது

கார்ப்பரேட்

 

போர்வை இன்றி

வெளியேற முடியாத குளிர்

ஒருவர் முகம் ஒருவர்

அறிந்திட இயலாதிருந்த

பனி மூட்டத்தை

முறியடித்து

சூழ்ந்துகொண்டது

தொழிற்சாலைப் புகை

 

உழைத்த மனிதனுக்கும் மாட்டுக்கும்

நெல்லுமில்லை புல்லுமில்லை

எல்லா இரகப் பயிர்களிலும்

இரசாயனம்

துரித உணவுகளில்

தொலைந்துகிடக்கிறது

மனிதம்

 

புல்லை உணவாக்கும் மாடும்

இலையை உணவாக்கும் ஆடும்

நகர தெருக்களில்

பேப்பருக்காகவும்

சுவர் போஸ்டருக்காகவும்

அலைந்து

அரைவயிறும் கால்வயிறுமாய்

கடும் பசியால் உயிரும் போய்

அழிந்து வரும்  கால்நடைகள்

 

வளங்களை வளர்த்த நிலம்

இன்று இடைவெளி இன்றி

அண்ணாந்தாலும்

ஆகாயம் பார்க்க முடியாத

பல அடுக்குமாடிகளை

சுமக்கிறது

 

மனிதர்களின் உறக்கத்தை

கூரையில் எட்டிப்பார்த்து

இரசிக்கும் நிலவு

இப்போதெல்லாம்

கான்கிரீட்டில் மோதி

காயத்தோடு போகிறது

 

பேருந்து பயணங்களில்

மரங்களும் மலைகளும்

ஓடுவதாய் கண்ட

இடமெல்லாம்

இன்று செல்போன்

கோபுர காட்சி மயம்

 

சாலைகள் அமைக்க

சிற்றூர் அகற்றம்

வாகனங்கள் உயரப்பறக்க

இல்லத்தை இழந்து

இருக்க இடம் தேடி

அலையுது ஒரு 

கூட்டம்

 

தலையாட்ட

மரங்களின்றி

வெப்பத்தை வாரியிறைக்கும்

வான்வெளி

 

தன்னால்

முடிந்த வரை

முயன்று

வீசித்தான் 

பார்க்கிறது

பாவப்பட்ட நகரத்து மக்களுக்காக

தூரத்து மலைகாற்று.

 

தா.சரவணன்,

தொடர்பு:9786577516,

கல்யாணமந்தை,

திருவண்ணாமலை(மாவட்டம்)635703

கருத்துகள் இல்லை: