4ஆம் ஆண்டில் நமது இலக்கியச்சுடர்
படைப்புகளை periyaswamydeva@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி இதழின் வளர்ச்சிக்கு உதவுங்கள்

திங்கள், 1 மார்ச், 2021

இயற்கை வழிபாடும், வழிபாட்டு முறைகளும் - ச. மலர்விழி

 

                                இயற்கை வழிபாடும், வழிபாட்டு முறைகளும்

ச. மலர்விழி

தமிழ்த்துறை

உதவிப் பேராசிரியர்

பச்சையப்பன் கல்லூரி,

சென்னை - 600 030.


முன்னுரை

சமயம் என்பது மனிதனுக்கு நல்லனவற்றை எடுத்துரைத்து நல்வழிப்படுத்தக் கூடிய ஒரு மார்க்கம் சமயமாகும். தமிழர்கள் பலச் சமயங்களைக் கண்டனர். பொங்குபலச் சமயமெனும் நதிகளெல்லாம் புகுந்து கலந்து தமிழர் பண்பாட்டினை செழுமைப்படுத்தியுள்ளனர். அலைகள் பலவாக உள்ள கடலில் நீராவது போலச் சமயங்கள் பெருகியுள்ள நாட்டில் வாழ்வதும் இன்பம் அளிக்கக் கூடியதே. மிருக நிலையில் வாழ்ந்த மக்களை மனிதர்களாக உயர்வுபடுத்துவது சமயங்களாகவே இருந்தன. இயற்கையோடு இணைந்து வாழ்ந்த மக்கள் தமக்கு பலன் கொடுத்தப் பொருட்களை எல்லாம் வணங்கத் தொடங்கினர். இயற்கை வழிபாடே ஆதி மனிதன் முதல் தற்கால மனிதன் வரை வழிபடுத் தெய்வங்களாகப் போற்றியுள்ளனர். அச்ச உணர்வும் இயற்கையை வழிபடத் துணையாக இருந்தன. தமிழரின் வழிபாட்டு முறைகளில் தலைமையிடத்தினைப் பெறுவதும் இயற்கை வழிபாடே ஆகும்.

வழிபாடு

வழிபாடு என்பது மனம், மொழி, மெய் என்ற முக்காரணங்களால் நிகழக் கூடியது. மனம் இறைவனை நினைக்கவும், மெய் இறைவனுக்காக பணி செய்யவும், மொழி இறைவனை புகழ்ந்து பாடி சிறந்த பேறு பெறவும் என்ற நிலையிலே வழிபாடு அமைகின்றது. அங்கிங்கெனாதபடி எங்கு பிரகாசமாய் நிறைந்திருக்கின்ற பரம்பொருளை வழிபட ஒரு இடம் தேவை என்ற நிலையிலேயே கோயில் அமைத்தனர். கோ - இறைவன் இல் - குடியிருக்குமிடம், இறைவனின் உறைவிடமே கோயில் எனப் பெற்றது. மண்ணால் சாணத்தால் கல்லால் ஒரு வகை உருவம் அமைத்தும் செடி, கொடி, புதரின் எதிரே வைத்து அவற்றைக் கடவுளாக எண்ணி படையல் இட்டும் வழிபட்டனர். பின்னர் நாளடைவில் அந்த இடங்களைச் சுற்றி பனை ஓலைகள், தென்னங்கீற்றுகளைக் கொண்டு கோயில் எழுப்பினர். இயற்கையின் சீற்றத்தால் சிலச் சில சேதாரங்கள் ஏற்பட சுதை மண், செங்கல் சுண்ணாம்பு இவற்றைக் கொண்டு கட்டடங்கள் எழுப்பி பெரிய கோயில்களாக மாறினர்.

தமிழரின் மரப்புப்படி இறைவனின் வழிபாட்டிற்கு நீரும், பூவும் இடம் பெற்றன. இந்த சமய நடைமுறைக்குப் பூசை (பூ + செய்) எனப் பெயர். ஆகமங்களை அடிப்படையாகக் கொண்டே பூசையின் படி நிலைகளைப் “பத்தி” என்பது மனதை இறைவனிடம் பதித்தல் என்றும், “தியானம்” என்பது இறைவனை அகவழியில் வழிபடுதல் என்றும், “ஓகம்” என்பது தன்னை வருத்திக் கொண்டு புறவழியில் வழிபடுதல் என்றும் “தவம்” என்பது முற்றும் துறந்த நிலையை அகம், புறம் என இரண்டு நிலையிலும் தன்னை வருந்தி வழிபடும் நிலை என யோகிகளும், ஞானிகளும் வழிபடும் நிலையினை வேத முறைப்படி வழிவகுத்தனர். ஆனால் இறைவனின் முதல் நிலை வழிபாடு என்பது இயற்கைப் பொருட்களை வழிபடுவதிலேயே முக்கியத்துவம் அளிக்கப்பட்டது.

இயற்கை வழிபாடு

இயற்கை வழிபாட்டில் சூரிய வழிபாடு மிகவும் தொன்மையானதாகும். பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சூரிய வழிபாடு இருந்து வந்தது. ஆதி மனிதர்கள் இருளைத் தாயாகவும் ஒளியை மங்களமாகவும் கருதினார்கள். சூரியன் உலகிற்கு ஒளியை தந்து, பயிர்களைப் பசுமையாக வளர்த்து இயற்கையை வணங்கும் நிலைக்குத் தள்ளப்பட்ட நன்றிக்கு விளைந்த நெல்லினைக் கொண்டு இறைவனுக்கும் படையலிட்டு சூரிய வழிபாடு நடத்துவது இன்று வரை தமிழர் கலாச்சாரத்தில் முக்கிய வழிபாடாக பொங்கல் விழா அமைகின்றது. சந்திர வழிபாடு கிரகங்களில் சூரியனுக்கு அடுத்தபடியாக வருவது சந்திரன். பண்டைக் காலத்தில் நிலவினை இரவுக்குத் துணையாக வழிபடலாயினர். நிலவைப் பெண் தெய்வமாகவே வணங்கி வந்தனர். மூன்றாம் பிறையைப் பார்ப்பது சிறப்புடையதாகக் கருதப்பட்டது. “ஆயிரம் பிறைக் கண்டவர்” புண்ணியம் செய்தவராகக் கருதினர். வானமே காலண்டர்களாகவும், பிறையே கிழமைகளை உணர்த்தக் கூடியதாகவும் கருதினர். முழு நிலவிலே இறைவழிபாடு அதிகமாக வணங்கப்பட்டது.

மக்கள் தமக்குப் பல நன்மைகளைத் தரும் மலைகளில் தெய்வத் தன்மையைக் கண்டனர். மலையின் மீதும் மலையின் அடிவாரத்திலும் கோயில்கள் அமைத்து வழிபட்டனர். மலையைச் சுற்றி மலைவலம் வந்தனர். மலைகளில் வாழ்ந்த மக்களுக்கு அவர்களுக்கு மலையில் விளைந்தப் பொருட்களே அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்ததால் மலையே வேண்டியதை அருளும் இறைவனாக வழிபட்டனர். மலைக்கச் செய்யும் மலைக் கோயில்களின் மதிப்பு மலை போலவே உயர்ந்திருந்தன.

இயற்கை வழிபாடின் அடுத்த வரப்பிரசாதம் நீர் வழிபாடு. தமக்கும் வயலுக்கும் ஆறுதலாக பயன்தரும் நதிகளை தெய்வத் தன்மையுடையனவாகக் கருதி கங்கையம்மன், காவிரித்தாய் எனப்பெண்களின் பெயரிட்டு ஆறுகளில் நீராடுவதை புனிதமாகக் கருதினர். ஆறுகளின் பெருமை கருதி ஆற்றங்கரைகளில் கோயில்கள் கட்டினர்.

அந்த நீரைக் கொண்டு இறைவனுக்கு அபிஷேகம் செய்தும் தானும் அந்நீரில் நீராடிய பிறகே கோயிலுக்குள் செல்ல வேண்டும் என்ற பண்போடு வாழ்ந்தனர். தாயைப் போலவே, தண்ணீரையும் போற்றி பாதுகாத்துப் பயன்படுத்தினர்.

கல்தோன்றி மண் தோன்றா காலத்திலிருந்தே மனிதனிடம் கடவுள் நம்பிக்கை இருந்துள்ளது. ஆலமரத்தில் பழத்தின் உள்ளே சிறு சிறு விதைகள் இருக்கும். ஆனால் அதனுள் ஒன்றுமே இருக்காது. ஆனால் விதையே பல விழுதுகளைக் கொண்ட ஆலமரமாக செழித்து வளரும். நம் கண்களுக்கு புலப்படாத சக்தி ஒன்றே இவ்வுலகையே ஆட்டி வைக்கின்றது. அதுவே கடவுள் என்ற ஆலமரம். அந்த ஆலமரத்தின் செழிப்பான வளர்ச்சியின் ஆரம்பமே இயற்கை வழிபாடு.

நன்றி வழிபாடு

நமக்கு உதவி செய்தவர்களை நாம் வணங்கி மதித்து வாழ்த்தும் உயரிய பண்பு மிக்கவர் மனிதர்கள். தொடக்கக் கால மக்கள் தமக்கு இயற்கையின் வரப்பிரசாதமாக கிடைத்த இலை, கீரை, கனி, கிழங்கு, நிழல் முதலியவற்றையும் மரம், செடி, கொடி, புதர்களை மதித்து நன்றி செலுத்தும் வகையில் வணங்கி வாழ்த்தினர். இந்நிலையிலே நாளடைவில் கடவுள் வழிபாடாக மாறியது. விலங்குகளைப் போல் காட்டுமிராண்டியாக வாழ்ந்து வந்த தொடக்க கால மக்கள் வாழ்க்கையில் பல தொல்லைகளை எதிர்நோக்கினர். அத்தொல்லைகளை வெல்ல முடியாதவராய் அச்சவுணர்வு மேலோங்கிய நிலையில் தம்மையும் மீறி ஏதோ ஓர் ஆற்றல் இருப்பதை உணர்ந்தனர். உணர்வு நம்பிக்கையாக மலர்ந்தது. அத்தகு உணர்வுக்கு நன்றி தெரிவிக்கவே வழிபாடுகள் நடத்தப்பட்டன. அரசு, வேம்பு, மரங்களைச் சுற்றி படையல் போட்டு வழிபடும் வழக்கம் தொடங்கியது. நமது அகத்தூய்மையினை தெளிவுப்படுத்தி நல்வழிபடுத்தும் இறைவனுக்கு நன்றி கூறி வழிபாடு நடத்துவதே பழங்காலம் முதல் தொன்று தொட்டு வரும் செயலாகும்.

நானில வழிபாட்டு முறை

பல்வேறு கடவுளர்களின் பெயர்களையும், வழிபாட்டு முறைகளையும் பாட்டும் தொகையும் காட்டும்போது தொல்காப்பியர் நானிலக் கடவுளர்களை நிலத்துக்கென முறைப்படுத்திக் காட்டுகின்றனர். தொல்காப்பியர் தமது இலக்கணத்தில் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் ஆகிய நான்கு நிலத்துக்கென பெயர் சூட்டிய கடவுளர்கள் முறையே சேயோன், மாயோன், வேந்தன், வருணன் ஆகும். அவை,

“மாயோன் மேய காடுரை உலகமும்

சேயோன் மேய மைவரை உலகமும்

வேந்தன் மேய தீம்புலை உலகமும்

வருணன் மேயே பெருமணல் உலகமும்

முல்லை குறிஞ்சி மருதம் நெய்தல் எனச்

சொல்லிய முறையாற் சொல்லவும் படுமே.’

என்பது தொல்காப்பியரின் நானிலச் சமய விளக்கமாகும்.

தொல்காப்பியரும் நான்கு நிலங்களுக்கு உரிய கடவுளர்களை அந்தந்த நிலத்திற்குரிய இயற்கையோடு இணைந்த அந்த நிலத்திற்கு பயன்தரு தெய்வங்களையே வழிபட்டு தெய்வங்களாகக் கொண்டனர்.

வழிபாட்டு முறை

பழங்கால மக்கள் கடவுளர் பெயரால் என்ன படையல் போட்டார்களோ, எவ்வாறு படையல் போட்டார்களோ அம்முறையினை வாழையடி வாழையாக இக்காலத்திலும் பின்பற்றிய வண்ணமே உள்ளனர். வழிபாட்டின் போது விளக்கேற்றி வழிபடுவதனை மரபாகக் கொண்டனர். தேனும், தினையும் கலந்து தினைமாவால் மாவிளக்கு போட்டு வழிபட்டனர். அந்நிலையே கார்த்திகைத் திங்களில் கார்த்திகை தீப வழிபாடாக அமைந்தன. தைத் திங்களில் முதல் நாள் மற்றும் இரண்டாம் நாளான மாட்டுப் பொங்கலில் முருங்கைக் கீரை துவட்டல், வாழைக்காய் பொரித்தல், பறங்கிக்காய் பொரியல், கொழுக்கட்டை செய்தல் என மரக்கறி உணவை சமைத்து வைத்து இயற்கை வழிபாடு நடத்தினர். மேலும் கருவாடு குழம்பும், ஆட்டுக்கறி குழம்பிட்டும் அதனோடு மதுவகை வாங்கி வைத்தும் மரக்கரி உணவிற்கு அப்பால் மற்றொரு இடத்தில் வைத்து வழிபட்டனர். இதுவே ஆக்கி அரித்துப் படைத்தல் என்ற ஒரு மரபுப் பெயராலும் அழைக்கப்பட்டது. ஆக்கி அரித்தல் என்றால் பச்சை உணவுப் பொருட்களை தீ மூட்டி அடுப்பில் ஏற்றிப் பதம் செய்துபடைத்தல் என்பதாகும். பச்சை நெல்லை வைத்துப் படைத்தலும் பண்டைக்கால வழிபாட்டு பழக்க முறைகளில் ஒன்றாகும். இதுபோன்றே கூழ் வார்த்தல் பொங்கிப் படைத்தல் என இயற்கையை ஒட்டியே கடவுள்களைப் படைத்தும் கடவுள்கட்கும் படையல் இட்டும் வழிபட்டனர்.

வழிபடும் முறைகளுக்கும் சிலநெறிமுறைகளை வகுத்தனர். இறைவனைக் காலையில் வணங்கினார் அவரவர்க்குள்ள துன்பங்கள் நீங்கும். உச்சி வேளையில் வணங்கினால் கொடுமை துன்பங்கள் அகலும். மாலை வேளையில் இறைவனை வணங்கினால் ஏழு பிறப்புகளில் செய்த தீமைகள் எல்லாம் நீங்கிவிடும் என்ற நிலையினை நாயன்மார்களின் பதிகங்களில் இருந்து நாம் அறிவதனாலும் இறைவனை வழிபட கால நேரம் உண்டு என்பதை அறிகிறோம். வழிபடாவிடில் நேரும் துன்பமும் சொல்லப்பட்டது. வழிபாடுகள் கோயில்களில் நடைபெறாவிடில் தீராத நோய்க்கு ஆளாகக் கூடும். நாட்டில் மழையின்றிக் காணப்படும். மன்னர்களுக்கு வெற்றி வாய்க்காது. போரில் வலிமைக் குன்றிக் காணப்படுவர். அதனால்தான் இன்றளவும் மழை வேண்டி கோயில்களில் கூட்டு வழிபாடு நடைபெறுகின்றன.

முடிவுரை

வழிபாடு என்ற சொல் வழிபடு என்ற அடிச்சொல்லிலிருந்து பிறந்து வழியில் செல்லுதல், பின்பற்றுகை, வணக்கம், பூசனை என்ற பொருளைத் தருவதாகக் கொள்ளலாம். வழிபாடு நம் மனத்தை இறையுணர்வில் வழிபடுத்துதல் பல்வேறு தேவையற்ற எண்ணங்களில் உழன்றுள்ள மனதை பண்படுத்தி ஒரு நிலைப்படுத்தி இப்பிறப்பில் சுகமும், மறுபிறப்பில் முக்தி நலமும் வாய்க்கவே அதனோடு இயற்கையாக நமக்கு இறைவனால் படைக்கப்பட்ட பொருளைக் கொண்டு வழிபாடு நடத்துவது இயற்கை வழிபாடாகப் போற்றப்படுகின்றன. முழுநிலா (பௌர்ணமி) அமாவாசை, மாதப்பிறப்பு, சிவராத்திரி, வைகுண்ட ஏகாதசி இன்னும் பல புண்ணியக் காலங்களில் வழிபட்டால் நிறைவான வாழ்வு, அறிவறிந்த மக்கட்பேறு, அழியாச் செல்வம், நீண்ட ஆயுள், நோயற்ற வாழ்வு, வீடு பேறு, வறுமை, நோய், பயம், வேதனை ஆகிய துன்பங்கள் நீங்கி வாழ்வில் வளம் பெறலாம். தனி வழிபாட்டினை விட கூட்டு வழிபாடு மக்களிடையே சமய ஒருமைப்பாட்டை நிலைநிறுத்தி மக்கள் அனைவரும் இயற்கையாக கிடைக்கும். நன்மைகளை பெற்று இன்புற வேண்டும் என்ற நிலையிலேயே வழிபாடு நடத்துகின்றன.