4ஆம் ஆண்டில் நமது இலக்கியச்சுடர்
படைப்புகளை periyaswamydeva@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி இதழின் வளர்ச்சிக்கு உதவுங்கள்

திங்கள், 1 மார்ச், 2021

சிறார் நாடகத்தில் தமிழர் மரபும் பண்பாட்டுக் கூறுகளும் - அ.இந்துமதி

 

சிறார் நாடகத்தில் தமிழர் மரபும் பண்பாட்டுக் கூறுகளும்

.இந்துமதி,

உதவிப்பேராசிரியர்,தமிழ்த்துறை,

அக்சிலியம் கல்லூரி வேலூர்,

காட்பாடி-632007.

முன்னுரை

இக்கட்டுரை சிறார் என்பவரையும் சிறார் நாடகம் என்பதையும் அத்தகைய சிறார் நாடகங்கள் வெளிப்படுத்தும் மரபு, பண்பாட்டுக் கூறுகளையும் ஆய்வதாகவே அமைகிறது. தமிழரின் மரபு பண்பாட்டுக் கூறுகள் என்பவற்றில் சிறார் நாடகத்தில் பொருந்தக்கூடிய பண்புநலன்களை மட்டுமே இக்கட்டுரையில் நாம் காண்கிறோம். இதுவே  இக்கட்டுரையி்ன் நோக்கமாகவும் அமைகிறது.

சிறார்

        சிறார் என்பவர் யார் என்று ஆய்வு செய்ய முற்படும்பொழுது ஒவ்வொரு இடத்திலும் நிலையிலும் சிறார் என்பதற்கான வயது வரம்பில் சின்ன சின்ன வித்தியாசங்கள் காணப்படுகிறது. பொதுவாக தமிழ் அகராதிகளில் சிறார் என்ற சொல் பகுப்பு அமையவில்லை. ஆனால் சிறுவன் சிறுமி என்ற தனித்த சொற்களுக்கான பொருளாக இளைஞன்,மகன் என்பதும் பருவ வயதிற்கு முற்பட்ட பருவம் என்றுமே குறிக்கப்பட்டுள்ளது. தமிழ் விக்கிப்பிடியா இணையத்தளத்திலும் சிறார் என்பதை குழந்தை பருவத்திற்கு பிற்பட்ட பருவமும், இளைஞர் பருவத்திற்கு முற்பட்ட பருவமும் சிறாருக்கான பருவம் என்றே வரையறுக்கப்பட்டுள்ளது. பொதுவாக இந்திய நாட்டின் சிறாருக்கான சட்டங்களில் நாம் வயதை பார்க்கும் பொழுது 18 வயதிற்கு உட்பட்டவரை சிறார் என்ற வரையறையில் அடக்குகிறது. உளவியல் அடிப்படையில் நாம் பார்க்கும் பொழுது உடல், மன எழுச்சிகளின் அடிப்படையில் சிறாருக்கான  வயது நிலை அமைப்பில் மாற்றம் ஏற்படுகிறது. கல்வியியல் அடிப்படையில் பார்க்கும்பொழுது  சிறாரின் அமைப்பு தொடக்கம், இடைநிலை, உயர்நிலை, மேனிலை பள்ளிகள்  என்ற அடிப்படையில் அமைகிறது. மருத்துவமனைகளில் பதிநான்கு வயதிற்கு உட்பட்டவரை சிறார் என்ற வரையறையில் அடக்குகின்றனர்.(Pedeatric department) கலை இலக்கிய வடிவங்களை பொறுத்தவரை பதிநான்கு  என்றும் பதினெட்டு என்றும் வேறுபடுவதுண்டு. இப்படி சிறார் என்பதைனை எந்த முறைகளில் அனுகினாலும் கூட தொடக்க வயதிலும் முடிகின்ற வயதிலும் வேறுபாடு அமைகிறது. இந்த வேறுபாடே சிறார் இலக்கியத்தை வகைப்படுத்துவதிலும் சிக்கலை ஏற்படுத்துகிறது. இனிவரும் சிறார் இலக்கியங்களில் எந்த வயதினருக்கானது என வகைப்படுத்தி எழுத்தாளர்கள் எழுதினால் இத்தகு சிக்கலை நாம் தவிரக்க முடியும்.

நாடகம்

      தமிழ் இயல் இசை நாடகம் என முத்திறப்படும்.இயலும் இசையும் கலந்ததே நாடகம். கண்ணுக்கும்,செவிக்கும் விருந்து அளிப்பது நாடகத்தமிழ். இயல் மனத்தைப் பற்றியது. இசை வாயால் எழுப்படும் ஓசையைப் பற்றியது. நாடகம் செயலை ஒட்டியது”1 என்று குறிப்பிடுகிறார் டாக்டர் .என்.பெருமாள்.

        நாடகம் பார்வையிலே ஒரு பொழுதுபோக்கு பயனிலோ ஒரு கல்விச்சாலை, பாராளுமன்றம், நீதிமன்றம், இடித்துரைக்கும் இனிய நண்பன். இவைகளுக்கு மேலாக எளிதில் வலிய வந்து ஞானப்பால் ஊட்டும் தெய்வம்”2 என்று நாடகத்தின் மாண்பைப் புகழ்ந்துரைக்கிறார் நீதிபதி பி.ஆர் கோகுல கிருஷ்ணன்,

      நாடகம் கலைக்கரசு, நாட்டின் நாகரீகக் கண்ணாடி, பாமரர்களின் பல்கலைக்கழகம், உணர்ச்சிகளைத் தூண்டிவிட்டு உள்ளத்தில் புதைந்து கிடக்கும் அன்பையும் அறிவையும் தூய்மையையும் வெளிப்படுத்தி மக்களைப் பண்படுத்தும் மகத்தான கலை”3  என்கிறார் தி. சண்முகம் அவர்கள்.

நாடகவியல் ஆசிரியர் பரிதிமாற் கலைஞர் நாட்டிய வேதம்“4 என்கிறார் பரத முனிவர் என்று குறிப்பிடுகிறார்  .”நாடு- அகம் ----- -நாடகம் நாட்டை அகத்தில் கொண்டது நாடகம். அதாவது நாட்டின் சென்ற காலத்தையும், நிகழ்காலத்தையும், வருங்காலத்தையும் தன் அகத்தே காட்டுவதனால் நாடு-அகம் ---நாடகம் என்று பெயர் பெற்றிருக்கிறது”5 என்று தனது நாடகக்கலை என்னும் நூலில் குறிப்பிடுகிறர் தி. சண்முகம் அவர்கள்.

சிறார் நாடகத்தோற்றம்

பெரியோர்களுக்கான நாடகத்தை சிறுவர்கள் பார்ப்பது பொருத்தமற்றது என்று புரிந்துக் கொள்ளப்பட்டபோது சிறார் நாடகம் தோற்றம் பெற்றது”6 என்கிறார் குழந்தை எழுத்தாளர் சுகுமாரன் அவர்கள்

உலக நாடுகள், உலக மொழிகள், வேறு எவற்றிலும் இல்லாத அளவுக்கு நமது நாட்டிலும், நமது தமிழ் மொழியிலும் பிற மொழிகளிலும் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே குழந்தைகள் சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகளையே மையக்கருத்தாகக் கொண்டும் முற்றிலும் குழந்தைகளையே பிரதானப் பாத்திரங்களாகக் கொண்டும் நடிக்கப் பெற்ற நாடகங்கள் எத்தனையோ இங்கு பிரசித்தி பெற்றிருக்கிறது என்பதற்குத் தக்க ஆதாரங்கள் உண்டு.

        உதாரணமாகக் கிருஷ்ணனின் பால்ய லீலைகளை விளக்கும் நாடகம் ஏறத்தாழ இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கிருஷ்ண ஜனனம், கிருஷ்ணாவதாரம், கிருஷ்ணலீலா என்று பல்வேறு பெயர்களில், தமிழகத்தில் கூத்தாகவும் , நடன நாடகமாகவும், நடிக்கப் பெற்றிருக்கின்றது.

துருவச் சரித்திரம், பிரஹலாதன் சரித்திரம், லவ-குசா நாடகம், சிறுத்தொண்டன் சீராளன் கதைசிரவணன் கதை, மார்க்கண்டேயன் சரித்திரம், பாலராமாயணம், சீதா கல்யாணம் வரை, இப்படிப் பல குழந்தைகள் நாடகம் பிரபலமாக நடிக்கப் பெற்றிருக்கிறது.”7

சிறுவர்களுக்கு அழகான காட்சி அமைப்பும் ஆடை அணிகலன்களும் படிக்காத பாமரமக்களுக்கு கதையும்…”8 எனத் தொடர்கிறார் மீனாட்சி சுந்தரம். இவற்றை இன்றைய சிறார் எழுத்தாளர்கள் சிறாருக்குரிய நாடகங்கள் என சிலர் ஏற்கவும் மறுக்கின்றனர்.

சிறார் நாடகத்தில் தமிழர் மரபும் பண்பாட்டு கூறுகளும்

      நம் முன்னோர்கள் வழிவழியாக பின்பற்றி வந்த செயல்முறைகளை நாமும் தொடர்ந்து பின்பற்றுவதற்கு மரபு என்று பெயர். இந்த மரபானது பண்பட்டு பல  பண்பாட்டு கூறுகளை உள்ளடக்கி அமைகிறது. சிறார் நாடகங்கள் பொதுவாக 1. படிப்பதற்கான நாடகங்கள் 2. நடிப்பதற்கான நாடகங்கள்.  என வகைப்படுத்தப்படுகிறது .இவற்றில் இதுவரை நான் கண்ட  இயங்கலை மற்றும் பள்ளிகளில் கண்ட நாடகங்களின் வழி வெளிப்படும் மரபு பண்பாட்டு கூறுகளை மட்டுமே  ஆய்விற்கு எடுத்துக் கொண்டாலே ஆய்வின் பரப்பு அதிகரிக்கும் என்பதால் சிறுவர் மலர் சிறுவர் நாடகங்கள் என்னும் வி.என்.எஸ் சந்திரன் அவர்களின் புத்தகத்தில் உள்ள எட்டு நாடகங்களை மட்டுமே ஆய்வுக்கு எடுத்துக் கொண்டுள்ளேன்.அந்நாடக தலைப்புகள் 1.புதுவாழ்வு 2.கறுப்பு வெள்ளை 3.மனமாற்றம் 4.சுத்தம் சுகம் தரும் 5.நல்ல மனம் 6.அவன்தான் மனிதன் 7.மனிதநேயம் 8.பிறந்தநாள் என்பவையாகும்.

முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார்

        ஓவ்வொரு சிறுவர் நாடகமும் நமது மரபையும் பண்பாட்டையும் பாறைச்சாற்றக் கூடியவையாக அமைந்துள்ளன. இதில் முதல் நாடகமான புதுவாழ்வு என்னும் நாடகமானது தந்தையை இழந்து அப்பம் சுட்டு தன் பிள்ளையை வளர்க்கும் தாயின் முயற்சியையும் அதே போல் தாயின் நிலை உணர்ந்து நன்கு படித்து தன் குடும்ப நிலையை உயர்த்தும் மகனின் நிலையையும் இந்நாடகம் உணர்த்துகிறது.

உருவு கண்டு எள்ளாமை

        கறுப்பு வெள்ளைஎன்னும் சிறுவர் நாடகமானது ஒருவரது உருவத்தைக் கொண்டு அவரை மதிப்பிடாமல் அவரது உள்ளத்தையும் செயலையும் கொண்டு மதிப்பிட வேண்டும் என்னும் நம் முத்தோரின் பண்பாட்டை அப்படியே பிரிதிபலிக்கிறது.

உருவுக் கண்டு எள்ளாமை வேண்டும் உருள்பெருந்தேர்க்கு

                     அச்சாணி அன்னார் உடைத்து”9 (குறள் 667)

என்ற அய்யன் வள்ளுவனை இச்சிறுவர் நாடகம் நம் நினைவில் நிறுத்துகிறது. கறுத்த சிறுவனை கண்டு கறுப்பன் ! கறுப்பன் ! என்று கேலிச்செய்யும் ஒரு சிறுவன் அவனது முகத்தில் தேமல் போன்ற வடு ஏற்படும்பொழுது தன் தவறை உணர்ந்து திருந்துகிறான்.

அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்

ஏதிலார் குற்றம்போல் தம்குற்றம் காண்கிற்பின்

                           தீதுஉண்டோ மன்னும் உயிர்க்கு” 10(குறள் 190)

 

         என்னும் குறள்வழியாய் மனமாற்றம்என்னும் சிறுவர் நாடகமானது தனது குற்றத்தை உணர்ந்து தனது குறையை திருத்தி கொண்டு வாழ வேண்டும் என்பதை உணர்த்துகிறது. “அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் என்னும் பண்பையும்  தந்தை தாய் சொல்லை தட்டாதே என்பதையும் உணர்த்துகிறது.

சுத்தம் சுகம் தரும்

கந்தையானாலும் கசக்கிக் கட்டு

                                  கூழானாலும் குளித்துக் குடி

என்னும் மூத்தோர் பொன்மொழியை இந்நாடகம் உணர்த்துகிறது சுத்தம் இல்லாத தண்ணீரை தனது சோம்பலினால் குடிக்கும் சிறுமி இறுதியில் தாள முடியா வயிற்றுவலியால் மருத்துவமணைியில் அனுமதிக்கப்பட்டு அதன்பின்னர் அவள் திருந்துகிறாள். இந்நாடகத்தின் வழி சிறுவர் சுத்தத்தை எப்படி பேண வேண்டும் என்பதை உணர்வர்.

நல்ல மனம்

        நல்ல மனம்என்னும் நாடகமானது பெயரை அப்படியே பிரிதிபலிக்கிறது. பாலன் மிகச்சிறந்த ஒட்டப்பந்தய வீரன். குகனும் நன்கு ஒடக்கூடியவன்தான் ஆனாலும் எப்பொழுதும் பாலனே வெற்றிப்பெறுகிறான். ஒரு நாள் இருநூறு மீட்டர் ஒட்டப்பந்தய போட்டி பள்ளியில் நடைப்பெறுகிறது.அன்று குகனின் தம்பி எதிர்பாரதவிதமாக  பள்ளியின் படியில் விழுந்து அடிபட அவசரமாக மருத்துவமனையில் கொண்டு சேர்க்கிறான் பாலன் அதோடு குகனின் பெற்றோருக்கும் தகவல் அளிக்கிறான். ஆனால் இது எதுவுமே தெரியாத குகன் ஓட்டப்பந்தயத்தில் கலந்து பரிசுப் பெறுகிறான். அன்றைய போட்டியை தவற விட்டதற்காக மனம் வருந்தாது அந்நேரம் பிறருக்கு உதவியதை எண்ணிப் பெருமைப்படுகிறான் பாலன். பாலனின் நல்ல மனதை எண்ணி தானும் மகிழ்கிறான் குகன்  என்னும் இந்நாடகம் சிறாரின் பண்பு நலனை சிறப்புற மேம்படுத்துவது திண்ணமே.

கல்வி

ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு

                             ஏழுமையும் ஏமாப்பு உடைத்து”11 (குறள் 398)

           என்னும் கல்வியின் சிறப்பை உணர்த்தும்  அவன்தான் மனிதன் என்னும் இந்நாடகத்தில் சமவயதுடைய சிறுவர்கள் இருவர் அவர்களில் தினேஷ் வசதி மிக்கவன். அவனது வீட்டில் வீட்டு வேலை செய்பவன் ராமு. தினேஷின் அம்மா ராமுவை வேலைக்காரனாக மட்டுமே நடத்துகிறார் . ஆனால் தினேஷ் ராமுவுக்கு தினமும் பாடம் சொல்லித் தருகிறான். இதை ஒருநாள் பார்த்த தினேஷின் தாய் அவனை மிகவும் கடுமையாக எச்சரிக்கிறார். அதையும் மீறி தினேஷ் சொல்லித்தர தண்டனையாக ராமுவுக்கு உணவை போட மறுக்கிறாள். இறுதியில் திருந்தி ராமுவையும் தன் மகனாக ஏற்கிறாள். இந்நாடகம் சிறார்களுக்கு கல்வியானது எந்த அளவுக்கு முக்கியம் என்பதை உணர்த்துகிறது.

மனிதநேயம்

            மனிதநேயம் சிறார்களிடத்தில் வளர்க்கப்பட வேண்டும் என்பதையே மனிதநேயம் மற்றும் பிறந்தநாள் பரிசு என்னும் இரண்டு நாடகங்களும் வலியுறுத்துகிறது. தாய் தந்தை உறவுகள் இழந்து முகாமில் வாழும் சிறுவனை ஒதுக்கும் ஒரு சிறுவன் இறுதியில் எவ்வாறு அந்த சிறுவனை ஏற்றுக்கொள்கிறான். அவனது மனிதம் எவ்வாறு புனிதப்படுகிறது என்பதை சொல்வதே இந்நாடகம். பிறந்த நாள் பரிசு என்னும் நாடகமானது ஆடம்பர கொண்டாட்டத்தை தவிர்த்து பிறந்த நாளை அனாதை இல்லம் போன்ற அமைப்பில் உதவி கொண்டாடும் மாண்பை சிறார்களிடம் வளர்ப்பதாக அமைகிறது.

முடிவுரை

             மேற்க்கண்ட ஆய்வின்படி பார்க்கும் பொழுது சிறார் நாடகம் என்பது எப்பொழுதும் அறத்தையும் நீதியையும் நிலைநாட்டுவதாகவே அமைவதை காணமுடிகிறது. இந்நாடகங்கள் அனைத்தும் சிறார்களிடையே விழுமபண்புகளை வளர்ப்பதோடு தமிழ் மரபு பண்பாட்டு கூறுகளை செவ்வனே வளர்க்கும் என்பதிலும் ஐயமில்லை. சிறாரின் பண்புநலன்களில் காணப்படும் பண்புகளை மேம்படுத்தும் வீதமாகவே அனைத்து நாடகங்களும் அமைந்துள்ளது என்பது எதிர்கால சிறார்களுக்கு நல்லனவற்றை அளிக்க வேண்டும் என்ற அவாவின் வெளிப்பாடாக அமைவதை உணர முடிகிறது.

                               தமிழரின் மரபும் பண்பாடும்

                                    தரணியில் உயர்ந்திட

தனித்தன்மையோடு நாளும்

                                    வாழ்ந்திடு

பயன்படுத்திய நூல்கள்

1.   .என்.பெருமாள் தமிழ் நாடகத்தின் தோற்றமும் வளர்ச்சியும் முன்னுரை பக்10

2.   பம்மல் சம்பந்த முதலியார் நூற்றாண்டு விழா நினைவு மலர் பக் .11

3.   (தி. சண்முகம்,  நாடகக் கலை அவ்வை பதிப்பகம் சென்னை -600086 1981)

4.   பரிதிமாற் கலைஞர், நாடகவியல்,, முகவுரை பக்கம் 9

5.   தி. சண்முகம்,  நாடகக் கலை அவ்வை பதிப்பகம் சென்னை -600086 1981

6.    சுகுமாரன் தமிழ்க் குழந்தை இலக்கியம் தாமரை பப்ளிகேஷன்ஸ் சென்னை-98 முதல் பதிப்பு ஜீலை -2015

7.   கு.சா.கிருஷ்ணமூர்த்தி, தமிழ் நாடக வரலாறு, முத்தமிழ் பண்ணை சென்னை-4 நான்காம் பதிப்பு 1981

8.   Meenakshi sundaram T.P. The Pageant of Tamil Literature. P.85

9.   திருக்குறள்

10.  திருக்குறள்

11.  திருக்குறள்