4ஆம் ஆண்டில் நமது இலக்கியச்சுடர்
படைப்புகளை periyaswamydeva@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி இதழின் வளர்ச்சிக்கு உதவுங்கள்

திங்கள், 1 மார்ச், 2021

புறநானூற்றுப் பாடல்களில் பெண்கள் - சிவராசா ஓசாநிதி

 

புறநானூற்றுப் பாடல்களில் பெண்கள்




சிவராசா ஓசாநிதி,

ஆராய்ச்சி உதவியாளர்,

கிழக்குப் பல்கலைக்கழகம், இலங்கை

oshasivarasa12@gmail.com

 

அறிமுகம்

சங்ககால நூல்களில் எட்டுத்தொகையில் அடங்கும் நூல்களில் புறநானூறு முக்கியமானது. சங்ககாலத் தமிழ் மக்களின் புறவாழ்வைச் சித்திரிக்கும் 400 பாடல்கள் இதில் அடங்கியுள்ளன. பண்டைத் தமிழரின் புறவாழ்வுக் காட்சிகளைத் தருவது. இதில் போரும் போர் வீரர் தீரமும் வெளிப்படுகின்றன. நூற்றுக்கு மேற்பட்ட புலவர்களின் பாடல்கள் இதில் இடம்பெற்றுள்ளன. அவ்வாறே பாடப்பட்ட சான்றோர் எண்ணிக்கையும் நூற்றுக்கு மேற்படுகிறது. புலவரின் பெயர் தெரியாத 16 பாடல்கள் இதில் இடம்பெற்றுள்ளன. ஒளவையார், கபிலர், பரணர், கோவூர்க்கிழார், முடமோசியார் போன்றோர்கள் பத்திற்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியுள்ளார்கள். அந்தவகையில் புறநானூற்றுப் பாடல்களினூடாக பெண்கள் தொடர்பாக,

1.         பெண்களின் வீரம்.

2.         கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கியுள்ளமை.

3.         சிறந்த ஒழுக்கமுடையவர்களாகக் காணப்பட்டுள்ளமை.

4.         பெண்கள் அதிக கட்டுப்பாடுகளை எதிர்நோக்கியுள்ளமை. போன்ற விடயங்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன என்பதை பெண்ணியம் சார் நிலைநின்று வெளிப்படுத்துவதாக இக்கட்டுரை அமைகிறது.

1.         பெண்களின் வீரம்

புறநானூற்றுப் பாடல்களில் பெண்களின் வீரச்சிறப்பினை கணிசமான பாடல்கள் வெளிப்படுத்தியுள்ளன. வீரத்தில் ஆண்களுக்கு நிகராகவும், அவர்களை மிஞ்சும் அளவிற்கும் பெண்கள் சிறந்து விளங்கியுள்ளனர் என்பதை ஒளவையார், காவற்பெண்டு, பாரிமகளிர், முதலான பெண்பாற்புலவர்களின் வாயிலாக அறிய முடிகின்றது. பெண்கள் தாம் மட்டும் வீர உணர்வுடன் காணப்படாமல் தங்களுடைய தலைமுறையினர்களையும் வீர உணர்வு மிக்கவர்களாக மாற்றும் ஆற்றல் மிக்க சமுதாயத்தை உருவாக்கும் உன்னதப் பணியையையும் மேற்கொண்டுள்ளனர். அந்தவகையில் பெண்களின் வீர உணர்வு பின்வரும் சந்தர்ப்பங்களில் வெளிப்படுவதைக் காணலாம்.

தாய் தனது மகனை வீரமகனாக வளர்த்தல்.

'உன் மகன் எங்கே?' என்று கேட்ட பெண்ணிற்கு வீரத்தாய் அளிக்கும் பதில், புலியிருந்த குகை அவனைப் பெற்ற என்வயிறு. அவன் எப்போதும் புகழ் சிறக்கப் போர்க்களத்தில்தான் இருப்பான் என்கிறார். இதனை பின்வரும் புறநானூற்றுப் பாடல் வரிகள் வெளிப்படுத்தியுள்ளன.

                      'புலி சேர்ந்து போகிய கல்லளைபோல

                   ஈன்ற வயிறோ இதுவே

                   தோன்றுவான் மாதோ போர்க்களத்தோனே'(புறம்: 86)

தாய் மகனைப் பெற்ற வயிற்றினை புலி தாங்கிய குகை என்று குறிப்பிடும்போது தன்னுடைய மகன் புலியைப்போல வீரமுடையவன் என்றும் அவனைப்பெற்ற தானும் வீரம் மிகுந்தவர் என்றும் வீரத்தைப் முன்னிலைப்படுத்திக் கூறுவதன்மூலம் தாய் தன்னுடைய மகனை வீரமகனாகவே எண்ணி வளர்த்ததையும் அறிய முடிகின்றது.

போர்க்களத்தில் தன்மகன் இறந்த செய்திகேட்டு மகிழ்ச்சியடைதல்

போர்க்களத்தில் போர்புரிந்த தன்மகன் வீர மரணம் அடைந்த செய்திகேட்ட வீரத்தாயின் மன உணர்வை 'பூங்கணுத்திரை' என்னும் புலவர் படம் பிடித்துக் காட்டுகின்றார்.           

'...............................

                   ஈன்ற ஞான்றினும் பெரிதேழு கண்ணீர்

                   நோன்கழை யலம் வரும் வெதிரத்து

                   வான்பெயத் தூங்கிய சிதரினும் பலவே'(புறம்: 277)

முதிய தாயின் கூந்தலானது கொக்கின் இறக்கையைப்போல நரைத்துக் காணப்பட்டது. அவள் தன்னுடைய மகன் போரில் யானையுடன் போர் புரிந்து அந்த யானையை வீழ்த்திக்கொன்று தானும் இறந்து விட்டான்  என்னும் செய்தியைக் கேட்டு அப்புதல்வனைப் பெற்றபொழுது அடைந்த மகிழ்ச்சியைவிட அதிகளவு மகிழ்ச்சி அடைந்தாள் என்பது இதனூடாக விளங்குகின்றது. தாய் வயது முதிர்ந்தவளாக இருந்தாள். இறுதிக் காலத்தில் தன்னை தன்மகன் காப்பாற்றாமல் இறந்து விட்டானே என்று கவலை கொள்ளாமல் மகனைப் பெற்றதே சிறந்த வீரனாக உருவாக்க வேண்டும் என்ற உள்ளார்ந்த நோக்கத்தையே கொண்டிருந்த தாயின் வீர உணர்வை அடையாளம் காண முடிகின்றது.

மகனை வீரமகனாக எண்ணுதல்

போர்க்களத்தில் தன்மகன் புறம்கொடுத்து ஓடினான், என்று பிறர் கூறக்கேட்ட தாயின் அரிய செயலைப் பின்வரும் புறநானூற்றுப் பாடல் வரிகள் ஆவணப்படுத்துகின்றன.

                               'படை அழிந்து மாறினன் என்று பலர் கூற

                             மண்டு அமர்க்கு உடைந்தனன் ஆயின்

                             உண்ட என் முலை அறுத்திடுவேன்'(புறம்:278)

முதுமையடைந்த தாயானவள் தன்மகன் போர்க்களத்தில் புறங்கொடுத்து ஓடினான் என்று பிறர் சொல்வதைக்கேட்டு போர்க்களம் செல்வதற்கு முன்பே அவ்வாறு அவன் உண்மையாகவே புறங்கொடுத்து ஓடினான் என்றால் பாலுண்டு வளர்வதற்குக் காரணமாகிய என் முலைககளை அறுத்திடுவேன் என்று கோபமாக வாளைக் கையில் எடுத்துக்கொண்டு போர்க்களத்திற்குச்  சென்றாள். அவ்வாறு சென்றவுடன் அங்கு வீழ்ந்து கிடக்கும் பிணங்களில் தன் மகனின் உடலைத் தேடிப்பார்த்தாள். போர்க்களத்தில் இருதுண்டுகளாகிக் கிடக்கும் மகனின் உடலைப் பார்த்தவுடன் அத்தாயனவள் அவனைப் பெற்றபோது அடைந்த மகிழ்ச்சியை விட மிகவும் மகிழ்ச்சியடைகிறாள்.

தனது மகனைப் போர்க்களம் செல்லப் பணித்தல்

தாய் ஒருத்தி தன் ஒரோயொரு மகனைப் போருக்கு அனுப்பும் செயலை ஒரு புறநானூற்றுப் பாடல் பதிவு செய்துள்ளது.

                               'ஒரு மகன் அல்லது இல்லேன்

                             செருமுகம் நோக்கிச் செல்க என விடுமே'(புறம்: 279)

பெண்ணின் தந்தை போர்புரிந்து போர்க்களத்தில் இறந்தான். பின்பு அவளுடைய கணவனும் வீரமரணம் அடைந்தான். அவர்கள் இருவரையும் இழந்த பெண் தன்னுடைய ஒரு மகனையும் போர்க்களத்திற்குச் செல்லும்படி அனுப்புகின்றாள். தன்மகனுக்கு ஆடையிட்டு அவனுடைய தலைமுடிக்கு எண்ணெய் தேய்த்து கையில் வேலைக்கொடுத்து போர்க்களம் நோக்கிப்போ என்று அனுப்பிவைத்தாள். தன் சொந்தங்களை இழந்த தாயானவள் அதற்காக வருத்தப்படாமல் தன் ஒரே மகனும் போர்க்களத்திற்கு செல்வதும் அவனை அனுப்புவதும் கடமையென்று கருதி போர்க்களத்திற்கு அனுப்பி வைக்கும் தாயின் வீர உணர்வையும்  போருக்கு முக்கியத்துவம் கொடுக்கும் உன்னத குணப்பண்புகளையும் அறிந்து கொள்ள முடிகின்றது.

போரில் புறங்கொடுத்த வீரனைத் தாய் வெறுத்தல்

போரில் வீரன் ஒருவன் போர் புரியாமல் புறங்கொடுத்து ஓடியதைக் கண்ட தாய் தன் மகனை வெறுத்ததையும் மிகத் தாழ்வாக எண்ணியதையும் ஒரு புறநானூற்றுப் பாடலில் காணலாம். தாய் போர்க்களத்திற்குச் சென்று புறங்கொடுத்து வந்த தன் மகனைப் பார்த்து போர்க்களத்தில் இறங்காமல் நீ யானையுடன் போரிட்டு உன்னுடைய ஆயுதமாகிய வேலை மட்டும் இழந்து விட்டு உயிருடன் மீண்டுவந்து பெரும்பழியை ஏற்படுத்தினாய். நம் முன்னோர்கள் யாரும் செய்யாத இழிசெயலைச் செய்தாய் அதனால் உன்னைப் பெற்ற என்வயிற்றை அறுப்பேன் என்றுகூறி உளம்குமறி வருந்துகின்றாள்.

தாய் தன்மகன் எந்தக் குற்றங்கள் செய்தாலும் பொறுத்துக் கொள்ளும் இயல்புடையவள். ஆனால் அந்தத் தாயே மகன் போரில் புறங்கொடுப்பவன் என்று அறிந்து அதை ஏற்றுக் கொள்ளாமல் அவனைக் கடிந்து கொள்வதுடன் தன்னையே வருத்திக் கொள்ளும் இயல்புடன் விளங்குவதனூடாக தாயானவள் தன்மகன் ஒரு வீரனாக விளங்க வேண்டும் என்ற உயரிய கொள்ளையுடன் சித்திரிக்கப்பட்டுள்ளதைக் காணலாம். இதனை

                      'பலர் மீது நீட்டிய மண்டை என் சிறுவனைக்

                   கால்கழி கட்டிலின் கிடப்பித்

                   தூவெள் அறுவை போர்ப்பித்திலவே'(புறம்: 286)

எனும் ஒளவையாரின் பாடலினூடாக அறியலாம்.

போர்க்களத்தில் வீரமரணம் அடைந்த மகனைப் பார்த்து தாய் வீரம் அடைதல்

ஒளவையார் பாடிய மற்றொரு பாடலில் போரில் விழுப்புண்பட்டு இறந்த தன் மகனைக் கண்ட முதுமகள் ஒருத்தியின் வற்றிய முலையில் பால் சுரந்தது. அவள் வீரமே பாலாகச் சுரந்தது என்கிறார். இதனை பின்வரும் புறநானூற்றுப் பாடல் வரிகள் வெளிப்படுத்தியுள்ளன.

                      'இடைப்படை அழுவத்துச் சிதைந்து வேறாகிய

                   சிறப்புடையாளன் மாண்புகண்டருவி

                   வாடுமுலை ஊறிச் சுரந்தன'(புறம்: 295)

வீரமரணம் அடைந்த கணவனை நினைத்து மகிழ்தல்.

மார்பில் புண்பட்டு இறந்து கிடக்கும் கணவனைக் கண்டு முகம் மலர்ந்து அவனைத் தழுவிக் கொண்டாள் மனைவி என்று கூறும் புறநானூற்று 288வது பாடல் மனைவியின் வீரத்திற்குச் சான்றாக அமைகிறது.

                      'ஈன்று புறந்தருத லென்றலைக் கடனே

                   சான்றோ னாக்குத றந்தைந்தைக்குக் கடனே

                      வேல் வடித்துக் கொடுத்தல் கொல்லற்குக் கடனே

                      ஒளிறுவானஞ்சம் முருகிக்

                       களிறெறிந்து பெயர்தல் காளைக்குக் கடனே'(புறம்: 288)

இங்கு இடம்பெறும் பொன்முடியார் பாடலில் ஒவ்வொருவரின் கடமைகள் பேசப்பட்டதைப்போன்று தோன்றினாலும் தாயின் உணர்வு மாறுபட்டது. பிறந்தது ஆண் பிள்ளையென்றால் அது சமுதாயத்திற்கு, நாட்டைக் காப்பதற்கு, போரிலே ஈடுபடுவதற்கு என்றாகி விட்டது. இதில் தாயின் இழப்பு அதாவது தாய்க்கும் மகனுக்கும் இடைவெளிகள் தோன்றினாலும் தாய் வீர உணர்வு கொண்டவளாகவே காணப்படுகிறாள். இவ்வாறு சங்ககாலச் சமுதாயத்தில் ஆண்கள் வீரத்துடன் விளங்கியதைப்போலவே பெண்களும் வீரத்துடன் விளங்கியதை புறநானூற்றுப் பாடல்களினூடாக அறியலாம்.

2.        கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கியுள்ளமை

புறநானூற்றுப் பாடல்களில் பெண்கள் பெருமைக்குரியவர்களாகவே கருதப்பட்டுள்ளதைக் காணமுடிகின்றது. ஓர் ஆடவனை அறிமுகம் செய்யும்போது அவனது மனைவியின் சிறப்பைச்சொல்லி அவனை அறிமுகம் செய்யும் வகையில் பெண் குடும்ப வாழ்க்கையில் சிறந்து விளங்கியுள்ளார். இதற்கு இப்புறநானூற்றுப் பாடல் வரியை உதாரணம் கூறலாம்.

                      'மனைக்கு விளக்கிய நாணுதல் கணவன்'(புறம்:314)

இதனூடாக பெண்கள் குடும்பத்தைச் சீர்செய்வதோடு, குழந்தைகளைப்பேணும் பொறுப்பு வாய்ந்தவர்களாகக் காட்டப்பட்டுள்ளனர்.

3.       சிறந்த ஒழுக்கமுடையவர்களாகக் காணப்பட்டுள்ளமை

சங்க இலக்கியங்களில் பெண்களின் ஒழுக்கம்(கற்பு) வலியுறுத்தப்பட்டுள்ளது. கணவனை இழந்த பெண்களின் மறுமணத்திற்கு அக்காலத்தில் வரவேற்பு இருக்க வில்லை. அத்துடன் கணவன் இறந்தவுடனேயே பெண் இறந்து விடுதலே சிறந்த ஒழுக்கமாகக் கருதப்பட்டது. கணவன் இறந்ததன்பின் பெண்கள் கடைப்பிடிக்கும் விடயங்களினூடாக அவர்களது ஒழுக்கம்(கற்பு) வெளிப்படுத்தப்பட்டுள்ளது. மன்னன் பூதபாண்டியன் இறந்தவுடன் அவனது மனைவி பெருங்கோப்பெண்டு கணவனின் ஈமத்தீயில் குதித்து உயிர் நீத்தாள். இதனை பின்வரும் புறநானூற்றுப் பாடலின் வாயிலாக அறியலாம்.

                      'பெருந்தோட் கணவன் மாய்ந்தென வரும்பற

                   வள்ளித ழவிழ்ந்த தாமரை

                   நள்ளிக்கும் பொய்கையும் தீயுமோரற்றே'(புறம்:246)

கணவனை இழந்த பெண்கள் கூந்தலை நீக்கிக் கொண்டார்கள் என்பதையும் அணிகலன்கள் அணியாதிருந்தனர் என்பதையும் இப்புறநானூற்றுப் பாடல் வரிகள் வெளிப்படுத்துகின்றன.

                      'கூந்தல் கொய்து குறுந்தொடி நீக்கி

                   அல்லி உணவின் மனையோடு'(புறம்: 312)

அதேபோன்று கணவனை இழந்த பெண்கள் நீர்ச்சோற்றை உண்ண வேண்டும், பாய் இன்றித் தரையில் உறங்க வேண்டும் என்பதையும் இப்புறநானூற்றுப் பாடல் வரிகள் வெளிப்படுத்துகின்றன.

                        'காழ்போனல்விளர் நறுநெய் தீண்டா

                   தடையிடைக் கிடந்த கைமிழி பிண்டம்

                   வெள்னெட் சாந்தொடு புளிப்மெய் தட்ட

                   வேளை வெந்தை வல்சி யாகப்'(புறம்:246)

இவ்வாறு கணவனை இழந்த பெண்கள்  கைம்மை நோன்பு நோற்று துன்பத்தை அனுபவித்திருந்தாலும் ஒழுக்கம்(கற்பு) என்பது எல்லா நிலையிலும் பெண்களுக்கு மட்டுமே வலியுறுத்தப்பட்டுள்ளது. ஆணும் பெண்ணும் சமுதாயச் சட்டத்திற்குமுன் சமமாகக் கருதப்படவில்லை என்பது பெறப்படுகின்றது.

4.       பெண்கள் அதிக கட்டுப்பாடுகளை எதிர்நோக்கியுள்ளமை

ஆண்களைவிட பெண்களுக்கே அதிக கட்டுப்பாடுகள் இருந்தன. தலைவன்மீதுகொண்ட காதலைச் சொல்வதற்கும் தலைவனைத் தலைவி சந்திப்பதற்கும் பல்வேறு கட்டுப்பாடுகள் இருந்துள்ளன. கோப்பெருநற்கிள்ளியின்மீது தக்கண்ணையார் காதல்கொண்டு அவருடன் சேரமுடியாது இருந்ததிலிருந்து அக்காலக் கட்டுப்பாடுகள் தெரிய வருகின்றன. நற்கிள்ளியின் பருத்ததோளைத் தழுவத் துடிக்கிறேன் ஆனால் எங்களிடையே சான்றோர் அவை இருப்பதை எண்ணியும், என் தாயை எண்ணியும் அஞ்சுகிறேன் என்று பாடுகிறார். இதனை பின்வரும் புறநானூற்றுப் பாடல் வரிகள் வெளிப்படுத்தியுள்ளன.

                      'தொடிகழி திடுதல் யான்யாய் அஞ்சுவலே

                   அடுகிறேன் முயலங்க அவை நாணுவலே'(புறம்:83)

முடிவுரை

 

புறநானூற்றுப் பாடல்களில் பெண்கள் பெண்களின் வீரம், கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கியுள்ளமை, சிறந்த ஒழுக்கமுடையவர்களாகக் காணப்பட்டுள்ளமை, பெண்கள் அதிக கட்டுப்பாடுகளை எதிர்நோக்கியுள்ளமை போன்ற விடயங்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. எனினும் கைம்மை நோன்பு நோற்று துன்பங்களை அனுபவித்தாலும் அதிக கட்டுப்பாடுகளுக்கு முகம்கொடுத்தாலும்  கற்பில் சிறந்து விளங்கியுள்ளதோடு வீரத்தில் ஆண்களுக்கு இணையாக இவர்கள் விளங்கியுள்ளார்கள் என்பது புறநானூற்றுப் பாடல்களினூடாக வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

உசாத்துணை நூல்கள்

1. அம்மன்கிளி முருகதாஸ், 2006, சங்கக் கவிதையாக்கமும் மரபும் மாற்றமும்,   குமரன் புத்தக இல்லம், கொழும்பு.

2. சங்க இலக்கியமும் சமூகமும், 2007, இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களம்.

3. சண்முகதாஸ்,அ.,(தொகு), 2002, சங்க இலக்கிய ஆய்வுகள், தேசிய கலை இலக்கியப்பேரவை, கொழும்பு.

4. சாமிநாதையர்,உ,வே., 1985, புறநானூறு மூலமும் உரையும், தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர்.

5. விசயரத்தினம்,கா., 2016, சங்ககாலத் தமிழர் வாழ்வியல், மணிமேகலைப் பிரசுரம், சென்னை.