4ஆம் ஆண்டில் நமது இலக்கியச்சுடர்
படைப்புகளை periyaswamydeva@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி இதழின் வளர்ச்சிக்கு உதவுங்கள்

திங்கள், 1 மார்ச், 2021

உலகமயமாதலில் பண்பாட்டம்சங்களின் தாக்கமும் வள்ளுவரின் பண்பாட்டுக் கருத்தியலும் - செல்வி.நிதுஷாளினி மனோகரன்

 

உலகமயமாதலில் பண்பாட்டம்சங்களின் தாக்கமும் வள்ளுவரின் பண்பாட்டுக் கருத்தியலும்

செல்வி.நிதுஷாளினி மனோகரன்

உதவி விரிவுரையாளர்,

இந்துநாகரிகத்துறை,

கிழக்குப் பல்கலைக்கழகம், இலங்கை

manonithu8@gmail.com

+94770212237

 

 

ஆய்வுச் சுருக்கம்

உலக நடைமுறையில் ஒவ்வொரு தனிமனிதனும் தனது சமுதாயத்தின் பண்பாட்டைக் கட்டமைக்கும் தனியாள் என்ற ரீதியில் சிறப்பிடம் பெறுகின்றான். அதாவது ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தில் வாழ்கின்ற பெரும்பான்மையான மக்களின் ஒன்றுபட்ட நடத்தைகளையும் எண்ணங்களையும் வெளிப்படுத்தும் சாரமாக தனிமனிதன் இனங்காணப்படுகின்றான். ஒரு நாட்டின் தனித்துவமானது அந்நாடு கொண்டுள்ள அரசியல், சமூக, பொருளாதார மற்றும் கலாசாரப் பண்பாட்டு பாரம்பரியங்கள் விரிவடைந்து செல்லும் மனித ஒழுங்கமைப்புக்களின் மூலம் பேணப்படுகின்ற அம்சமாகும். அந்தவகையில் இன்றைய நவீன தொழில்நுட்ப யுகத்தின் வளர்ச்சியால் உலகமயமாதல் செயற்பாடானது பண்பாட்டில் தாக்கம் செலுத்துகின்றமை தெளிவாகின்றது.

இவ்வாய்வானது அரசியல், பொருளாதாரம், சமுதாயம் என்பவற்றின் மீதான உலகமயமாதல் செயற்பாடும் அதனால் ஏற்பட்ட பண்பாட்டுத் தாக்கங்களையும் குறிப்பிட்டு ஆராய்கின்றது. இதற்கு ஆதாரமாக திருவள்ளுவர் கூறிய குறட்பாக்கள் அக்காலந்தொட்டு இன்று வரை பொருத்தப்பாட்டுடன் விளங்குவதும் எடுத்தாளப்பட்டுள்ளது. விபரணமுறையிலான ஆய்வின் ஊடான மேற்கொள்ளப்படும் இவ்வாய்விற்கு திருக்குறள் மூல நூலாகக் கொள்ளப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

திறவுச் சொற்கள்: பண்பாடு, குறள், உலகமயமாதல், சமுதாயம், பொருளாதாரம்

திருக்குறள்

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழ்மொழியின் ஆதாரமாக நீதி, நிதி, சமுதாயம், அரசு எனப் பல்வேறு கோட்பாடுகளை விளக்கும் வகையில் தோன்றியதே திருக்குறள் எனும் நூலாகும். எக்காலத்திற்கும் பொருந்தும் கொள்கைகளையும், கருத்துக்களையும் அன்றே தொகுத்த வள்ளுவரின் அமுதசுரபி 133 அதிகாரங்களாக 1330 குறட்பாக்களாக வகுக்கப்பட்டுள்ளதைக் காணலாம். அறம், பொருள் இன்பம், வீடு எனும் பொருண்மையினை அடிப்படையாகக் கொண்டு இன, மத, மொழி வேறுபாடுகளின்றி எல்லை கடந்து மனித வாழ்க்கையை மட்டுமல்லாது உலக நடப்பு நிகழ்வுகளைப் பற்றியும் எடுத்தியம்பும் கலைக்களஞ்சியமாக திருக்குறள் தோற்றம் பெற்றிருக்கின்றதென்றால் மிகையாகாது. உலகளவில் அதிகளவில் மொழிபெயர்ப்புச் செய்யப்பட்ட நூலாகவும் திருக்குறள் அமைகின்றது.

உலகமயமாதல்

இருபதாம் நூற்றாண்டின் பின்னர் உலக ஒழுங்கில் உருவான புதிய நிகழ்வு உலகமயமாதல் எனும் பொருண்மையாகும். உலகமயமாதல் (Globalization) என்பதன் 'பொருள் தடைகளற்ற முதலீட்டுப் பாய்ச்சல்' என்பதாகும். அதாவது ஒரு நாட்டின் மூலதனம் மற்றுமொரு நாட்டில் முதலீடு செய்யப்படுவதற்கு தடைகளின்றி இருப்பதைக் குறிக்கின்றது. அரசியல், பொருளாதாரம், பண்பாடு, தொலைத்தொடர்பு, போக்குவரத்து, தகவல் தொழில்நுட்பம் ஆகிய துறைகளின் முன்னேற்றங்களினால் உந்தப்பட்டு உலக சமூகங்களிடையே அதிகரிக்கும் தொடர்பையும் அதனால் ஏற்படுத்தப்பட்டுவரும் ஒருவரில் ஒருவர் தங்கி வாழும் நிலையையும் உலகமயமாக்கல் எனலாம்.

Antony Gidans (London Economy College) குறிப்பிடும்போது 'தொலைவிலிருக்கும் இடங்களை இணைக்கின்ற பல மைல்களுக்கு அப்பால் நிகழும் நிகழ்வுகள் உருவமைக்கப்படுகின்ற உலகளவிலான சமூக உறவுகளின் தீவிரப்படுத்தலை உலகமயமாக்கல் எனலாம்' என்கிறார்.

பண்பாட்டுத் தாக்கமும் குறளும்

உலக நாடுகளின் பண்பாட்டுப் பாரம்பரியங்களை நிலைகுலையச் செய்வதில் உலகமயமாதல் கொள்கை செல்வாக்குச் செலுத்தி வருகின்றது எனலாம். அதாவது பண்பாட்டில் சிறந்து விளங்கிய நாம் இன்று மனித நேயத்தை அழித்து பண்பாடு, கலாசாரம் என்பவற்றை மறந்து பொருளீட்டுவதிலேயே அதிக ஆர்வத்துடன் செயற்பட்டு வருகின்றோம். இதற்குக் காரணம் இன்றைய தொழில்நுட்ப அறிவியல் உலகின் செயற்பாடே எனலாம். உலகமயமாதல் செயற்பாடானது உலக நாடுகளுக்கிடையிலான தொடர்பு இடைவெளியைக் குறைத்து முழு உலகத்தையும் கிராமம் என்ற நிலைக்குள் கொண்டிருக்கின்றது. பண்பாட்டு தாக்கத்தி;ற்கு சிறந்த எடுத்துக்காட்டாக ஆங்கில மொழிச் செல்வாக்கினைக் குறிப்பிடலாம். அவ்வகையில் உலகமயமாதலினால் ஏற்படும் விளைவுகள் ஊடாக வள்ளுவரின் குறள்களின் செல்வாக்கினை காண்போம்.

அரசியல்

ஒவ்வொரு நாட்டின் அடித்தளமாக அரசியல் செயற்பாடுகள் பிரதிபலிக்கின்றது. ஆரம்ப காலகட்டத்தில் மக்களின் நலனுக்காக மட்டுமே உருவாக்கப்பட்ட அரசுகள் இன்று பொருளாதாரச் சாயம் பூசப்பட்டு உலகமயமாக்கலில் மூழ்கியுள்ளது. அதாவது வல்லரசு நாடுகள் அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளை ஆதரிப்பது அவர்களின் உலகளாவிய செயற்பாட்டை பிரதிபலிப்பதற்கே ஆகும். ஆனால் நாம் அவற்றை அறியாது எமது அரசியல் கொள்கைகளை முறையாகப் பின்பற்றத் தவறுகின்றோம்.

ஒரு நாட்டின் அரசியல் அதிகாரம் எக்காலத்திற்கும் எந்நாட்டு அரசியல் அணுகுமுறைக்கும் எடுத்துக்காட்டாகச் செயற்பட வேண்டுமென்பதை வள்ளுவ பெருந்தகை அன்றே குறிப்பிட்டுள்ளார். அதாவது,

'குடிதழீஇக் கோலோச்சும் மாநில மன்னன்

அடிதழீஇ நிற்கும் உலகு' (குறள் : 544)

 

என்ற குறளில் நாட்டு மக்களின் நலனுக்காக வேண்டியவற்றை செய்து ஆட்சியை நடத்துகின்ற  அரசினை மக்கள் அடைக்கலமாக கருதுவர் என்றும்,

'இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்து

வகுத்ததும் வல்லது அரசு' (குறள்: 385)

 

என்ற குறளின்படி ஒரு அரசு கொள்கைகளை முறையாக இயற்றி அவற்றின் நடைமுறை வழியாக பொருள் ஈட்டக்கூடிய வல்லமை கொண்டதாக இருப்பது அரசியல் சிறப்பு உபாயமென வள்ளுவர் குறிப்பிட்டுள்ளார். இவற்றின் ஊடாக ஒரு அரசானது வெளிநாடுகளின் தலையீடு இன்றி சிறப்பான ஆட்சியை நடத்துவதன் அவசியம் உணரப்படுகின்றது.

 

பொருளாதாரம்

'பொருளிலார்க்கு இவ்வுலக மில்லை...: (குறள்: 247)என்கிறார் வள்ளுவர். 21ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்து பொருளாதார ரீதியில் ஒவ்வொரு நாட்டினதும் வணிகம், அந்நியச் செலாவணி, நாணயப்புழக்கம் என்பவற்றில் வல்லரசு நாடுகள் முன்ணனி வகிக்கின்றன. உலக சந்தையில் தம்மை நிலைபெறச் செய்வதில் போட்டியிட்ட வண்ணமே உலக நாடுகள் செயற்படுகின்றன.

வணிகப் பொருளாதார போட்டிகளுக்குத் தாக்குப் பிடித்து உலக வணிகச் சந்தையில் நின்று நிலைப்பதற்கு நிறுவனங்கள் அனைத்தும் தமது உற்பத்தியை மேம்படுத்த வேண்டியிருப்பதுடன் தொழில்நுட்ப வசதிகளையும் பெற்று பயன்படுத்த வேண்டியுள்ளது. உண்மையில் இச்செயற்பாட்டில் உலகமயமாதல் செல்வாக்கு சிறப்பிடம் பெறுகின்றது.

அபிவிருத்தி அடைந்து வருகின்ற அரசுகள் உலகமயமாதல் செயற்பாடு வறுமையிலிருந்து தம்மைப் பாதுகாத்து பொருளாதார ரீதியில் உயர்நிலைக்கு கொண்ட சென்றுள்ளது என்று குறிப்பிடுவர். இருப்பினும் இச்செயற்பாடுகள் வளர்ந்து வருகின்ற நாடுகளின் வாழ்வாதாரப் பொருளாதார முதலீடுகளை அழித்து நாட்டினை முன்னேற்றப் பாதைக்கு கொண்டு செல்கின்றன. இச்செயற்பாடு சுதேச பொருளாதாரத்தை வீழ்ச்சியடையச் செய்கின்றன.

'அறன்ஈனும் இன்பமும் ஈனும் திறனறிந்து

தீதின்றி வந்த பொருள்' (குறள் : 754)

 

'அருளிலார்க்கு அவ்வுலகமிலை பொருளிலார்க்கு

இவ்வுலகம் இல்லாகி யாங்கு' (குறள் :247)

 

ஒரு நாட்டின் பொருளாதாரமானது எத்தகைய முறையில் அமைய வேண்டும் என்றும், அதனால் பொருளாதாரத்துறையின் வளர்ச்சி எவ்வாறு அமையும் என்றும் திருக்குறள் கருத்துப் பகர்கின்றது.

நுகர்வுக் கலாசாரம்

ஒரு நாட்டின் பொருளாதாரச் செயற்பாட்டின் அடிப்படைக் காரணி மக்களின் நுகர்வுக் கலாசாரம் ஆகும். உலகமயமாதல் செயற்பாட்டினால் மக்கள் உள்நாட்டு உற்பத்திப் பொருட்களைப் புறக்கணிக்கின்றனர். உடல் ஆரோக்கியத்தை ஏற்படுத்தும் நமது பண்டைய உணவுக் கலாசாரம் புறக்கணிக்கப்பட்டு Pizza, Burger, Chips, KFC என்று மேலைநாட்டு மோகத்தில் திளைத்துள்ளோம். இதனால் தான் இன்று நம் வீடுகளிலும் மருத்துவச் செலவுகள் அதிகரித்து வருகின்றன.

'மாறுபாடு இல்லாத உண்டி மறுத்துண்ணிண்

ஊறுபாடு இல்லை உயிர்க்கு' (குறள் : 945)

 

மாறுபாடான உணவை உண்பதால் நோய் ஏற்படும். இதனை உணராது நாம் இன்னும் பூரிதம் கொள்கின்றோம்.

'பல்குழுவும் பாழ்செய்யும் உட்பகையும் வேந்தவைக்கும்

கோல்குறும்பும் இல்லது நாடு' (குறள் : 735)

 

அதாவது பல்வகையில் மாறுபாடு கொண்டிருப்போரை நாட்டில் அனுமதிக்க கூடாது என்பதன் ஊடாக சொந்த நாட்டு நுகர்வுப் பொருட்கள் பற்றிய எண்ணக்கரு விரிவடையும். மேலும் உலகமயமாதலில் உள்ளூர் நுகர்வு சிறப்படைய வேண்டுமாயின் அது மக்களின் கடமையாகும். அதாவது நம் நாட்டு அரசிற்குரிய வரியை ஒழுங்காகச் செலுத்தி பொருளாதாரத்தை மேம்படுத்தினாலே உள்ளூர் பொருளாதார நுகர்ச்சி விகிதம் அதிகரிக்கும் என்பதை,

'பொறை ஒருங்கு மேல்வருங்கால் தாங்கி இறைவற்கு

இறையொருங்கு நேர்வது நாடு' (733)

 

என்ற குறட்பா விளக்குகின்றது. இதன் ஊடாக உள்ளூர்ப் பொருட்களின் நுகர்வு விகிதம் உலகமயமாதலில் இருந்து பாதுகாக்கப்படுகின்றது.

மனித உழைப்பு

இன்றைய தொழில்நுட்ப அறிவியல் யுகத்தில் அனைத்து செயற்பாடுகளுமே இயந்திரமயமாகியுள்ளது. இதனால் இருந்த இடத்திலேயே ஒவ்வொரு வேலையையும் செய்து முடிக்கக் கூடிய வகையில் தொழில்நுட்ப கருவிகளின் பிரயோகம் வளர்ச்சி பெற்றுள்ளது.

இச்செயன்முறையானது நாட்டின் வளர்ச்சியை துரிதப்படுத்தினாலும் மனித உழைப்பு என்பது இயந்திரமயமாகி வருகின்றது. இன்று ஒவ்வொரு இளைஞர்களும் அத்தகையதொரு தொழில் வாய்ப்பினைப் பெறவே முயற்சிக்கின்றனர். ஆனால் இது எத்தகைய விளைவுகளையும் ஏற்படுத்தும் என்பதை யாவரும் அறிவதில்லை.

மனித உழைப்பு என்பது எவ்வாறு இருக்க வேண்டும் என்பதனை திருவள்ளுவர் அழகாக எடுத்தரைக்கின்றார்.

'தாளாற்றித் தந்த பொருளெல்லாம் தக்கார்க்கு

வேளாண்மை செய்தற் பொருட்டு' (குறள் : 212)

 

இதன்படி ஒரு மனிதன் தன்னால் இயன்றவரை கஷ்டப்பட்டு உழைத்து பெற்றுக் கொண்ட பொருளினால் அவன் தன் சந்ததியில் அனைவராலும் சிறப்பிக்கப்படுவான். இக்குறளும் உலகமயமாதலில் முன்னேற்றம் பெற நாமே காரணமாக இருக்க வேண்டும் என்ற உணர்வைத் தூண்டுகின்றது.

சமுதாய ஒடுக்குமுறை

உலகமயமாதல் செயற்பாடு பல்வேறு முரண்பாடுகளையும் ஏற்படுத்தக் கூடியது. ஒருவகையில் சாதிக் கட்டமைப்புக்களால் பிணைக்கப்பட்ட ஒரு பிரிவினரை விடுவிக்கக் கூடிய கல்வி, பொருளாதாரம், போக்குவரத்து வசதிகளைக் கொடுத்து முன்னேற்றப் பாதைக்கு வழிவகுக்கின்றது. அதேவேளை முதலாளித்துவ சுரண்டல்களுக்கும் வழிகோருகின்றது. வறுமையிலிருப்போரை  அடிமைப்படுத்தி முதலாளித்துவ கட்டமைப்பை உருவாக்குவதிலும் உலகமயமாதல் காரணிகள் செல்வாக்குச் செலுத்துகின்றன.

'இல்லாரை எல்லோரும் எள்ளுவவர் செல்வரை

எல்லாரும் செய்வர் சிறப்பு' (குறள் : 752)

 

'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா

செய்தொழில் வேற்றுமை யான்' (குறள்: 972)

 

உயிரினங்களில் எந்த ஏற்றத் தாழ்வும் கிடையாது என்கிறார் வள்ளுவர். அதாவது சாதி, மதம், இனம், பொருளாதாரம் எனும் பாகுபாடுகளற்ற மனித சமுதாயமே மகத்தானது என்பதை வள்ளுவர் அன்றே குறிப்பிட்டுள்ளார். இக்கருத்தியலும் உலகமயமாதலில் பண்பாட்டு தாக்கத்தை குறைக்கவல்லது.

முடிவுரை

உலகமயமாதல் செல்வாக்கினால் அனைத்து நாடுகளும் பல்வேறு துறைகளிலும் வளர்ச்சியை கண்டுள்ளது. இருபத்தோராம் நூற்றாண்டில் மனிதன் இன்று செவ்வாய் கிரகத்தில் கால்தடம் பதிக்கும் அளவிற்கு அறிவியல் ரீதியாக முன்னேற்றம் கண்டுள்ளான். உலகமயமாதல் என்பது பொதுவான நோக்கில் பல்வேறு நன்மையான கொள்கைகளை வெளிப்படுத்துவதாகவே தோன்றும். ஆனால் உற்றுநோக்கும் போதுதான் நாம் எத்தகைய பண்பாடுகளை இழந்து நம் பாரம்பரியங்களை மறந்து வருகின்றோம் என்பது புரியும். இன்றைய தகவல் தொழில்நுட்ப அறிவியல் உலகிற்கு உலகமயமாதல் செயற்பாடுகள் அவசியம் என்றாலும் நம்முடைய பண்பாட்டுப் பாரம்பரியங்கள் அழிந்து போகாது பேணப்பாதுகாக்க வேண்டும் என்பதற்கு உலகப் பொதுமறையான திருக்குறள் மிகச்சிறந்த ஆதாரமாக அமைகின்றது.

 

உசாத்துணைகள்

1.    திருக்குறள் பரிமேலழகர் உரை (கருத்துரையுடன்) கலைமகள் நிலையம் 2016

2.    வையாபுரிப்பிள்ளை.எஸ், 1966, தமிழர் பண்பாடு, தமிழர் வெளியீட்டகம், தமிழ்நாடு

3.    முருகரத்தினம்.தி, 1974, குறள் கூறும் இறைமாட்சி, மதுரைப் பல்கலைக்கழகம் வெளியீடு

4.    சுப்பராமன்.தி.சே., சேயோன்., 2004, இக்கால உலகிற்குத் திருக்குறள் தொகுதி -2 , உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்

5.    திருநாவுக்கரசு..., 1977, திருக்குறள் நீதி இலக்கியம், சென்னைப் பல்கலைக்கழகம்